சோல்பரி அரசியல் அமைப்புக்கேற்ப நாடாளுமன்ற நடைமுறையினை ஏற்படுத்துவதற்காக 1947 ஆம் ஆண்டு டி. எஸ். சேனநாயக்கா முதலாளித்துவ அடிப்படைவாதக் கருத்துக்களையும் இனவாதக் கருத்துக்களையும் கொண்ட ‘தேசிய காங்கிரஸ்’, ‘சிங்கள மகாசபை’, ‘முஸ்லிம் லீக்’ ஆகிய மூன்று கட்சிகளை தமது தலைமையில் ஒன்றிணைத்து ‘ஐக்கிய தேசியக் கட்சி’ என்ற புதிய கட்சியினை ஆரம்பித்தார்.
இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 1947 ஆம் ஆண்டே இடம்பெற்றது. நாடாளுமன்றத்தக்கான 100 ஆசனங்களில் டி. எஸ். சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களை வென்றது. டி. எஸ். சேனநாயக்காவின் சமயோசித நடவடிக்கையினால் சுயேச்சை வேட்பாளர்களை தம்பக்கம் இழுத்து அரசாங்கத்தினை அமைத்துக்கொண்ட போதும், ஒரு நிச்சயமற்ற அரசாங்கமாகவே டி.எஸ்.சேனநாயக்காவின் அரசாங்கம் காணப்பட்டது.
டி.எஸ்.சேனநாயக்காவுடன் கூட்டுச் சேர்ந்த கட்சிகள் சராசரியாக 15 ஆசனங்களை மட்டும் பெற்றிருந்தன எனக் கூறமுடியும். ஆனால் இவர்களை விட தனியாகப் போட்டியிட்ட லங்கா சமசமாசக் கட்சி 10 ஆசனங்களையும், போல்செவிக் லெனினிசக் கட்சி 05 ஆசனங்களையும், கம்யூனிஸ்ட் கட்சி 05 ஆசனங்களையும் பெற்றன. இம் மூன்று கட்சிகளும் தமக்கிடையிலான கொள்கைகளை மறந்து தொழிலாளர் நலனை மட்டும் முன்னிறுத்தி கூட்டுச் சேர்ந்திருக்குமாயின் இடது சாரிகள் என்ற அடிப்படையில் இன்னும் 20 ஆசனங்களைப் பெற்றிருக்கலாம்.
இடதுசாரிக் கட்சிகள் எனச் சொல்லப்படுகின்ற இக் கட்சிகள் தங்களுக்கிடையில் எவ்வாறுதான் பிரிந்து நின்று முட்டி மோதினாலும் முதலாளித்துவவாதிகள் இவர்களை தமக்கு எதிரான ஓரணியினராகவே நோக்குகின்றனர். இந்த அடிப்படையில் எந்த முதலாளித்துவ அல்லது இனவாதக் கட்சிகளும் பெற்றிராத பெரும்பான்மையினை இவ்வருடத்தில் இடதுசாரிகள் பெற்றனர் என்பது முக்கியமான விடயம் ஆகும்.
இது போன்று சிறுபான்மையினர் என்று நோக்கும் போது ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் 07 ஆசனங்களையும், இலங்கை இந்திய காங்கிரஸ் 07 ஆசனங்களையும், மன்னாரிலும் வவுனியாவிலும் சுயேச்சை வேட்பாளர்களாக இரு தமிழர்களும், நியமன உறுப்பினர்கள் 4 பேருமாக மொத்தம் 20 பேர் இடம் பெற்றிருந்தனர்.
டி.எஸ்.சேனநாயக்கா பிரதமரான பின்பு அவருடைய அரசாங்கத்தை தோற்கடித்து இடதுசாரிகளும் சிறுபான்மையினரும் சேர்ந்த அரசாங்கமொன்றை அமைக்கும் பொருட்டு ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் கூடிய இடதுசாரிக் கட்சிகளும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் சிலரும் பொதுக் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தை அமைப்பது என்று முடிவு எடுத்திருந்த போதிலும், பொதுக் கொள்கைக்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் எழுந்த முரண்பாடுகளை அடுத்து இம்முயற்சி பலனற்றுப் போய்விட்டது.
சிறுபான்மையினரின் நலனுக்காக 50:50 கோரிக்கையில் விடாப்பிடியாக நின்ற ஜி.ஜி.பொன்னம்பலம் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இடது சாரிகளுடன் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தினை தவறவிட்டமை அவருடைய முதலாளித்துவ வர்க்க நலனின் வெளிப்பாடே எனலாம்.
திரு.அ.மகாதேவா, ஜி.ஜி.யின் 50:50 கொள்கையுடன் முரண்பட்டு டி.எஸ்.சேனநாயக்காவுடன் சேர்ந்து உள்விவகார அமைச்சராக பதவி வகித்திருந்தார். மேற்படி 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் டி.எஸ். சேனநாயக்காவின் சகபாடியாக யாழ்ப்பாணத்தில் மகாதேவா போட்டியிட்டபோது, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜி.ஜி. பின்வருமாறு உரையாற்றியிருந்தார். “மகாதேவா தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்து விட்டார். சோல்பரி அரசியல் திட்டம் தமிழ் மக்களுக்கு தீமையையே விளைவிக்கும். அத்தகைய அரசியல் அமைப்பை ஆதரித்து மகாதேவா வாக்களித்தார். அவரின் முடிவை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் என்பதை பிரிட்டிஷ் அரசுக்கும் உலகுக்கும் காட்ட வேண்டும். எனவே நீங்கள் திரண்டு வந்து எனக்கு வாக்களித்து மகாதேவாவின் துரோகத்தை அம்பலப்படுத்த வேண்டும்.” (மேற்கோள், த.சபாரெத்தினம்) அத்துடன் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் சகபாடிகள் ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ எனும் இன உணர்ச்சியூட்டும் சுலோக அட்டைகளையும் விநியோகித்ததாக திரு.த.சபாரெத்தினம் குறிப்பிடுகின்றார்.
தேர்தலில் தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் ஜி.ஜி. பொன்னம்பலம் குடியேற்ற நாட்டு அமைச்சருக்கு பின்வரும் வாசகம் அடங்கிய தந்தியினை அனுப்பிவைத்தார். “சென்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தமிழ் அபேட்சகருள் ஒருவராவது தெரிவு செய்யப்படாததிலிருந்தும், 1945 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையை ஆதரித்த பழைய அரசாங்க சபை அங்கத்தவருள் ஒருவர் தவிர ஏனையோர் தோற்கடிக்கப்பட்டதிலிருந்தும், இலங்கைத் தமிழ் மக்கள் சோல்பரி அரசியல் திட்டத்தை நிராகரித்து விட்டார்கள் என்பது தெளிவு. இலங்கையிலுள்ள சமூகங்கள் எல்லாவற்றுக்கும் சம உரிமை அளிக்கும் சுதந்திர அரசியல் திட்டமொன்றை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கோருகிறது. இலங்கை மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் திட்டத்தை வகுப்பதற்கு அரசியல் நிர்ணய சபை ஒன்று வேண்டும். இப்பொழுது இருப்பதைப் போன்ற சட்டசபை, மந்திரி சபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசாங்கத்தைத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தகுந்த மாற்றுமுறை இல்லாதபடியால், நாங்கள் தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை கோருகின்றோம்.” (மேற்கோள்.த.சபாரெத்தினம்)
இந்தத் தந்தியினால் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை. ஆனால் ஜி.ஜி.பொன்னம்பலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அன்று அவரால் ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசுக்கும் உலகுக்கும் காட்டுகின்ற செய்தி எனும் ஏமாற்று அரசியலுக்கு தமிழ் உணர்வை பயன்படுத்துகின்ற போக்கு இற்றைவரை எவ்வித வேறுபாடுமின்றி தொடர்வதுதான் தமிழினம் பெற்ற ஜி.ஜி.யின் அருட்கொடையாக இருக்கின்றது.
இந்தத் தந்தியினால் கோபமுற்ற டி.எஸ். சேனநாயக்கா, 1947ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவினை அடிப்படையாகக் கொண்டு சிங்கள மக்களின் எதிர்கால அரசியல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மிக நிதானமாகத் திட்டமிட்டார். இலங்கை இந்திய காங்கிரசும், இடது சாரிக்கட்சிகளும் பெற்ற வாக்குகள் இந்தியத் தொழிலாளர்களுடைய வாக்குகளே என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். இவர்களுடன் தமிழ் காங்கிரசும் சேர்வது பேரினவாத முதலாளித்துவத்துக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்த அவர் , அன்று மேற்குலகில் வளர்ந்து வந்துகொண்டிருந்த கம்யூனிச எதிர்ப்பை தமக்குச் சார்பானதாக பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக இலங்கையை கம்யூனிசத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம் குறித்து பேசலானார். இது பிரிட்டிஷாருடைய முதலாளித்துவ நலன்களைப் பாதுகாப்பதற்கு அவசியமானதாக இருந்தது. இதனால் டி.எஸ். சேனநாயக்கா, பிரிட்டிஷாரின் நம்பிக்கைக்குரியவரானார். அத்தோடு சிறுபான்மையினர் விடயத்தில் தாம் மிகத் தாராளமாகச் செயற்படுவதாக பிரிட்டிஷ் அரசுக்கு அவர் காட்டினார். இதற்காக அவர் முதலில் கையாண்ட தந்திரம், தனது அமைச்சரவையில் வவுனியாவில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.சுந்தரலிங்கம் அவர்களை வர்த்தக அமைச்சராக நியமித்தார். மன்னாரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.சிற்றம்பலம் அவர்களை தபால், தந்தி தொடர்புகள் அமைச்சராக நியமித்தார். இது போன்றே மலே சமூகத்தைச் சேர்ந்த டி.பி. ஜாயாவை தொழில் சமூக சேவைகள் அமைச்சராக நியமித்தார். இது சிறுபான்மையினர் விடயத்தில் நேர்மையாக நடந்து கொள்பவர் என்கின்ற பிரதிமையை பிரிட்டிஷாருக்கு ஏற்படுத்திற்று.
அடுத்ததாக அவருடைய நோக்கமாக இருந்தது, இந்தியத் தமிழருடைய பிரஜாவுரிமையினைப் பறித்து தமிழர்களின் விகிதாசாரத்தை குறைப்பதாகும். ஆரம்பத்திலிருந்தே டி.எஸ்.சேனநாயக்கா இந்தியப் பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்குவதை எதிர்த்து வந்தவர், இந்தியப் பிரஜைகள் அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்கினால் கண்டிய சிங்களவரின் உரிமை பறிக்கப்பட்டு விடும் என்ற கருத்தை முன்வைத்து இயங்கியவர். 1947 ஆம் தேர்தலில் 14 தொகுதிகளில் இந்தியத் தொழிலாளர்களின் வாக்குகளினால் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். இது டி.எஸ்.சேனநாயக்காவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இந்தியத் தமிழர்களின் பிரஜாவுரிமையினைப் பறிப்பதற்கு அவர் கையாண்ட தந்திரம், கம்யூனிசத்திலிருந்து இலங்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோசமாகும். இதனால் பிரிட்டிஷ் அரசு டி.எஸ். சேனநாயக்காவின் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை. தமது நலன் பாதுகாக்கப்படுவதையே பிரிட்டிஷ் அரசு விரும்பியது. அதை டி.எஸ். மிகச் சரியாக முன்னெடுத்தார். டி.எஸ்.ஸைப் பொறுத்தவரையில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய், அதாவது பிரிட்டிஷாருக்கு நம்பிக்கைக்குரியவராக இருப்பதோடு தமிழர்களின் விகிதாசாரத்தையும் குறைப்பதாகும்.
1948 ஆம் ஆண்டு இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்து இந்தியத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமையினைப் பறிப்பதற்கான முயற்சியினை டி.எஸ் மேற்கொண்டார். இதனை தமிழ் காங்கிரசின் அனைத்து உறுப்பினர்களும் இடதுசாரிகளும் எதிர்த்தனர். “இதனை எதிர்த்துப் பேசிய ஜி.ஜி, டி.எஸ்.ஸை ஒரு வகுப்புவாத வெறியர் என்றும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட தினத்தை இலங்கையின் கறுப்பு நாள் என்றும் வர்ணித்தார்.”(த.சபாரெத்தினம்) இந்தியாவும் இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தை எதிர்த்து கண்டன அறிக்கையினை வெளியிட்டது. இந்திய எதிர்ப்பை சமாளிப்பதற்கு தமிழ் காங்கிரசை தனது பக்கம் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற முடிவினை டி.எஸ். எடுத்தார். இதற்காக இரு அமைச்சுப் பதவிகளை காங்கிரசுக்கு வழங்குவதாக ஜி.ஜி.யுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். தனக்கு கைத்தொழில், கைத்தொழில் அபிவிருத்தி, கடற்றொழில் அமைச்சை ஜி.ஜி. பொன்னம்பலம் கோரிப் பெற்றார். வட்டுக்கோட்டை தொகுதி உறுப்பினர்.க.கனகரெத்தினம், உதவி மந்திரியாக நியமிக்கப்பட்டார். பருத்தித்துறைத் தொகுதி உறுப்பினர். தா.இராமலிங்கம், கோப்பாய் தொகுதி உறுப்பினர் வ.குமாரசாமி, ஊர்காவற்துறை தொகுதி உறுப்பினர் அ.லி.தம்பிஐயா, பட்டிருப்புத் தொகுதி உறுப்பினர். எதிர்மன்னசிங்கம் ஆகியோர் ஜி.ஜி.யுடன் அரசாங்கத்தில் இணைந்து அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினை நிறைவேற்றினர்.
சிறுபான்மையினரின் உரிமைக்காக 50:50 கேட்டு போராடியவரும், டி.எஸ். ஸின் வேட்பாளரான அ.மகாதேவாவை துரோகி என்று வசைபாடி, ’ என்னை வெற்றிபெறவைத்து தமிழர்களின் தீர்ப்பை உலகுக்கு காட்டுங்கள் ’என கோசமெழுப்பியவரும், டி.எஸ்.ஸை ஒரு வகுப்புவாத வெறியர் என்றும் முழங்கிய ஜி.ஜி. பொன்னம்பலம், அதே டி.எஸ். சேனநாயக்கா வழங்கிய அமைச்சுப் பதவிக்கு அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு சரணாகதி அடைந்தமை அவருடைய வர்க்ககுணாம்சத்தினாலாகும்.
ஜி.ஜி.பொன்னம்பலமும் பிரஜாவுரிமைச் சட்டமும்
ஜி.ஜி.பொன்னம்பலம் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை விடயத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தமை யாழ். வேளாள மேலாதிக்க உணர்வின் வெளிப்பாடு எனவும் கொள்ளலாம். ஏனெனில் யாழ். வேளாள மேலாதிக்கம் தம்மை விட மற்றவர்களையெல்லாம் கீழானவர்களாகவே நோக்கியது. அநாகரிக தர்மபாலா போன்ற சிங்கள இனவாதத் தலைவர்கள், பிரித்தானியர் தென்னிந்தியாவிருந்து கீழ்ச்சாதியினரை கொண்டு வந்து எமது தீவில் குடியேற்றுகின்றனர் என்றும் அவர்களை கூலிகள் என்றும் அவமானப்படுத்தும் வண்ணம் உரையாற்றிச் செயற்பட்ட போது, எந்தவொரு தமிழ்த் தலைவர்களும் இவ்வாறான உரைகளை மறுக்கவில்லை என்பதுடன், அவர்களும் தோட்டத் தொழிலாளர்களை கள்ளத்தோணிகள் என்றும் கீழ்ச்சாதிகள் என்ற அடிமை நிலைக் கண்ணோட்டத்திலேயே நோக்கினர். இதன் காரணமாக அவர்களுடைய உரிமைகளுக்கு யாழ். வேளாள மேலாதிக்கம் பெரிதளவாகக் குரல் கொடுக்கவும் இல்லை. தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நடேச ஐயர் (1925 – 1931, 1936 – 1947) மொத்தம் 17 வருடங்கள் இந்தத் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக குரலெழுப்பிய சந்தர்ப்பங்களில், மட்டக்களப்பைச் சேர்ந்த ஈ.ஆர்.தம்பிமுத்து, வடமாகாணத்திலிருந்து துரைசாமி ஆகிய இரு தமிழ் உறுப்பினர்கள் மாத்திரமே அவருக்கு ஆதரவாக இருந்துள்ளனர் என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது.
நாடாளுமன்றத்திலிருந்த தமிழ் உறுப்பினர்களை விட தோட்டத்தொழிலாளர்களின் பிரஜா உரிமை மற்றும் அரசியல், பொருளாதார, சமூக நலன்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் இடதுசாரிகளும் சில மனிதாபிமானம் மிக்க சுயேச்சைக்குழு உறுப்பினர்களும் அக்கறையுடையவர்களாக இருந்துள்ளனர்.
பிரஜா உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது, லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரான என்.எம்.பெரேரா பின்வருமாறு கூறினார், “இவ்வகை இனவாதம் ஹஸ்டன் சம்பர்லேன், அடல்வ் ஹிட்லர் போன்றோரின் இனவாதமாகவே முடியும். ஓர் அரசியல்வாதி ,நாட்டுத் தலைவர் என்று தன்னைக் கூறும் ஒருவர் இத்தகைய ஒரு சட்டத்திற்கு ஆதரவளிக்கும்படி எம்மைக் கேட்பார் என நான் நினைக்கவில்லை. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகில் இருந்து வேறான ஒரு தனிச்சாதியாக எம்மை கற்பனை செய்து இதனை அனுமதிக்க முடியாது. நாம் மட்டுமே இந்நாட்டின் பிரஜைகளாக இருக்கும் பேறு பெற்றவர் என்பது தவறு” என்றார்.
போல்சவிக் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கொல்வின் ஆர்.டீ.சில்வா குறிப்பிடும் போது, “இச்சட்டத்தின் பின்னணியை இதன் அரசியல் காரணிகளையும் சமூக நோக்கங்களையும் பார்த்தால் பிற்போக்குத்தனத்தில் சிறந்த உதாரணமாகக் காணலாம். வகுப்புவாதம் பிற்போக்கிற்கு வாய்ப்பான ஆயுதம். இச்சட்டம் சர்வசன வாக்குரிமையின் எதிர்காலச் சவக்குழியைத் தோண்டப் பயன்படுவதாகும்.ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு எதிராக வகுப்புவாத அடிப்படையைப் பிரயோகிக்க அரசாங்கம் தொடங்குவது இன்று இலங்கையர் என ஏற்றுக் கொள்ளப்படும் ஏனைய சிறுபான்மையினருக்கு எதிராகவும் வேறுபாடு காட்டுவதற்கு வழிகோலும்.” (மேற்கோள், குமாரி ஜயவர்த்தன) என்று எதிர்காலம் பற்றி மிகவும் தீர்க்கதரிசனத்துடன் கூறிய போதிலும், ஜி.ஜி.போன்றவர்கள் கொண்டிருந்த சாதாரண மக்கள்நாட்டமற்ற சமூக அரசியல் கருத்துநிலை காரணமாக இவற்றை விளங்கிக் கொள்வதற்கோ அல்லது ஊகிப்பதற்கோ முடியாமல் போய்விட்டது.
இதனை விட கம்யூனிசக் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் பேச்சாளருமான பீற்றர் கெனமன் ”இச்சட்டம் பணக்கார, படித்தவரது நன்மைக்காகச் செயற்படுகிறது. இந்நாட்டின் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் எதிரானது” என்றும் “வர்க்க நலன் இச்சட்ட விதிகளில் சேர்ந்திருப்பதால் நாம் இம் மசோதாவை எதிர்க்கிறோம். இச்சட்டம் தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்த இந்தியர்களுக்கு எதிரானது. இங்கு எழும் வினா, வர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. இம்மசோதாவின் அடிப்படைத் தத்துவம் நேர்மையற்றது. ஒரு வர்க்கத்துக்கு எதிராக வேறுபாடு காட்டும் முறையையும், இந்நாட்டு மக்களுக்கு பிரஜா உரிமை வழங்கும்படி கூறிக்கொண்டு யூ.என்.பி. அரசு தன் அரசியல் அமைப்பை நிலை நிறுத்த முயல்வதையும் காணலாம்.” (மேற்கோள், குமாரி ஜயவர்த்தன) இங்கு பீற்றர் கெனமன் குறிப்பிடுகின்ற அரசியல் அமைப்பை பேரினவாத முதலாளித்துவத்தினுடைய அரசியல் அமைப்பாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு பார்த்து சிறுபான்மையினர் நலனை அல்லது உரிமையினை பேசுவதற்குப் பொருத்தமான தலைவர்களாக அப்போதைய தமிழ்த் தலைவர்கள் இருக்கவில்லை என்பதே உண்மையாகும்.
ஆயினும் அரசாங்கத்தில் முக்கியமானவராகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கூட பிரஜா உரிமைச் சட்டம் தொடர்பாக U.N.P அரசாங்கத்திடமிருந்து வேறுபட்ட கருத்தினைக் கொண்டிருந்தார் என குமாரி ஜயவர்த்தன சுட்டிக்காட்டுகின்றார். அதாவது “இந்தியத் தொழிலாளர் இன்னும் தேவை என்று கருதப்பட்டால் அவர்களுக்குரிய சகல உரிமைகளும் இந்நாட்டின் தொழிலாளர்களுக்கு உரிய எல்லா நலன்களும் அளிக்கப்பட வேண்டும் என்பது பண்டாரநாயக்காவின் கருத்தாகும். இந்தியாவுக்கு திரும்ப விரும்புவோருக்கு நீதியான சிறந்த வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.” இந்த மனிதாபிமானத் தன்மையும் சமத்துவ உணர்வும் தமிழ் மக்கள் நம்பிய பெருமளவான தலைவர்களிடத்தில் இருக்கவில்லை.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பிரஜா உரிமைச் சட்டம் தொடர்பில் உரையாற்றும் போது “இன்று இந்தியத் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நாளை மொழிப்பிரச்சினை வரும்போது இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இதே கதி நேரிடும். எனவே, இன்றே நாமெல்லாம் ஒன்று சேர்ந்து இந்த அநீதியை எதிர்க்க வேண்டும்” (மேற்கோள், த.சபாரெத்தினம்) என்று மிக முன்னெச்சரிக்கையோடு சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறு சுட்டிக்காட்டிய விடயத்தைக் கூட கவனத்தில் கொள்ளும் தன்மைகூட, பிரித்தானியாவில் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று, இலங்கையில் தலைசிறந்த சிவில் குற்றவியல் வழக்கறிஞராகவும் மகாராணியின் வழக்கறிஞராகவும் கடமையாற்றிய ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கு இருக்கவில்லை என்பது முட்டாள்தனமாகும். இதனுடைய எதிர்கால ஆபத்துக்கள் குறித்து சிந்திப்பதற்குக் கூட அவருக்குள்ளிருந்த மேலாதிக்க உணர்வு இடம்கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.
மகாதேவாவை துரோகி என்று கூறி, அவரைத் தோற்கடித்து சிறுபான்மையினர் உரிமைகளை வென்றெடுப்போம் என நாடாளுமன்றம் வந்தவரை தமிழ் மக்கள் பெருமளவு நம்பியிருந்தனர். ஆனால் அவருடைய படிப்பும், பட்டங்களும், பதவியும் அவருடைய சுகபோகத்துக்கு உதவினவே தவிர, தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே இருந்தன. 1948 ஆம் ஆண்டு பிரஜா உரிமைச் சட்ட வாக்கெடுப்பின் போது ஜி.ஜி.யுடன் சேர்ந்து சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களுள் எச்.எஸ்.இஸ்மாயில், கே.கனகரெட்ணம், எம்.எஸ்.காரியப்பர், எம்.எம்.இப்ராஹிம், எஸ்.யு.எதிர்மன்னசிங்கம், ரி.ராமலிங்கம், எம்.சின்னலெவ்வே, ஏ.எல்.தம்பையா ஆகியோர் அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களித்தனர்.
ஆனால் இவர்களுக்கு மாறாக இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாசக் கட்சி, போல்சவிக் லெனின்ஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் என்பவற்றுடன் சேர்ந்து பிரபல அரசியல்வாதிகளாக இருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய லக்ஷ்மன் ராஜபக்ஷ்ச, வில்மட் பெரேரா, ஆர்.எஸ்.பொல்பொல, ஐ.எம்.ஆர்.ஏ.இரியகொல்ல, எச்.ஸ்ரீநிசங்க ஆகியவர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இவர்களுடன் சேர்ந்து தமிழ் காங்கிரசிலிருந்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம், சி.வன்னியசிங்கம், சு.சிவபாலன் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர். இவ்வாறு எதிர்த்து வாக்களித்தவர்களில் முஸ்லிம் சிறுபான்மையினர் எவரும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும். மனிதாபிமானம், ஜனநாயகம், சிறுபான்மையினர் என்ற விடயங்களுக்கப்பால், அப்போதிருந்தே அரசியலை தமது இனத்துக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சாதுரியமாக நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
1952 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தோட்டத்தொழிலாளர்கள் பெரும்பான்மையோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு 1950 ஆம் ஆண்டு தேர்தல் பதிவேட்டின் பிரகாரம் தேர்தல் நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, இலங்கை இந்திய காங்கிரஸ், இலங்கைப் பிரஜா உரிமை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு வாக்குரிமை வழங்குமாறு வேண்டி நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில், பல்வேறு மட்ட ஜனநாயகவாதிகளும் ஒன்று கூடி தோட்டத்தொழிலாளர்களுக்கு நீதி வேண்டி உரையாற்றினர். கம்பளையைச் சேர்ந்த பிரபுத்த பிக்கு மண்டலய என்ற அமைப்பைச் சேர்ந்த 29 பௌத்த பிக்குகள் சார்பாக கே.இந்தசார தேரோ, பிரதம மந்திரிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். “அறிவு மிக்க அரசியல்வாதி என்ற வகையிலும், பௌத்தர் என்ற முறையிலும் நெருக்கடி மிகுந்த இக்கட்டத்தில் இலங்கையின் தலைவிதியை வழிநடத்துவதில் சட்டரீதியான முறையில் அல்லாது பிரச்சினையை மனிதாபிமான முறையில் தாங்கள் அணுகவேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும். இங்குள்ள இந்தியர்கள் எங்கள் நாட்டின் விவசாயக் கைத்தொழிலினது மிக முக்கியமான அங்கமாவர். இதற்கு மேலாக அவர்கள் இங்கு பிரிட்டிஷாரினால் கொண்டுவரப்பட்டு மறைமுகமாகவோ, நேரடியாகவோ நாட்டின் அபிவிருத்திக்கு உதவியவர்கள், எமக்கு பயனற்ற அந்நியர்கள் என இவ்வேளை கருதுவது பெரும் அநீதியாகும். எமது பொருளாதாரத்தை நிலைநிறுத்த அவர்களது சேவையை நாம் பயன்படுத்துகிறோம். அவர்கள் கோரும் அடிப்படை உரிமைகளை நாம் வழங்க வேண்டும்” (மேற்கோள், குமாரி ஜயவர்த்தன)
இவ்வாறு இடதுசாரிகள், பௌத்த பிக்குகள், ஜனநாயகவாதிகள் எனப் பெரும்பாலானோர் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பாக அக்கறையுடையவர்களாக அவை வழங்கப்பட வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர்களாக இருந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக தோட்டத்தொழிலாளர்களின் பிரஜா உரிமை சட்டமூலம் தொடர்பாக தமிழ் காங்கிரஸினுடைய தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்துக்கும், எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து, செல்வநாயகமும் அவருடன் சேர்ந்து வாக்களித்தவர்களும் நியமன உறுப்பினராக இருந்த இ.எம்.வி.நாகநாதனும் தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறி இலங்கைத் தமிழரசுக் கட்சியினை நிறுவியதைத் தொடர்ந்து, சிறுபான்மையினருடைய உரிமை, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சுயநிர்ணய உரிமை என்பதிலிருந்து விலகி தமிழ் இனவாத அரசியலாக வளர ஆரம்பித்தது. ஏனெனில் எஸ்.ஜே.வி.யும் ஜி.ஜி.யும் தங்களுடைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழர்களை உணர்ச்சிகரமான அரசியல் பேச்சுக்களையும், எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்களே தவிர யதார்த்த அரசியல் பற்றி சிந்திக்கவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்காக ஆதரவு தெரிவித்து இயங்கிய பெரும்பான்மையின நேச சக்திகளையும் விலகிச் செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன.
தேசியக் கொடி விவகாரம்
1948 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்கின்ற உறுதி மொழியினை பிரித்தானிய அரசு டி.எஸ்.சேனநாயக்காவுக்கு வழங்கியிருந்தது. இலங்கை சுதந்திரமடையும் போது இலங்கைக்கான தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என டி.எஸ்.சேனநாயக்கா விரும்பினார். சுதந்திரத்திற்கு முற்பட்ட இலங்கை கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என்ற இராச்சியங்களாக தனித்தனியாக இருந்ததுடன் அவற்றுக்கென கொடிகளும் காணப்பட்டன. பிரித்தானியர் ஆட்சியின் போதே இந்த இராச்சியங்கள் ஒன்றிணைக்கப்பட்டு முழு இலங்கையும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. பிரித்தானியர் இலங்கையை, இலங்கையர்களுக்கு கையளிக்கும் போது ஒட்டுமொத்த இலங்கைக்குமான தேசியக் கொடியின் அவசியத்தினை உணர்ந்த டி.எஸ்.சேனநாயக்கா இது தொடர்பாக விவாதத்தினை 1948 ஜனவரியில் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தார்.
டி.எஸ்.சேனநாயக்கா, ஏ.ஈ.குணசிங்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்ற சிங்களத் தேசியவாதிகள் சிங்கக் கொடியே இலங்கைக்கான தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என்று வாதாடினர். இவர்களின் உள்நோக்கம் சிங்கள பௌத்த கருத்தியலின் அடையாளமாக சிங்கக் கொடியைக் கொண்டுவருவதும் அதனூடாக நாட்டின் அடையாளமாக சிங்கள பௌத்தத்தை முன்னிறுத்துவதுமாகும். சிங்கள பௌத்தம் பல நூற்றாண்டுகளாக தன்னைக் கருத்தியல் ரீதியாக கட்டியெழுப்பி அமைப்பாக்கம் பெற்றுவந்த சூழலில் நாட்டிலும் நாடாளுமன்றத்திலும் சிறுபான்மையாக இருக்கின்ற தமிழர்கள் சிங்கக் கொடியை இலங்கைக்கான தேசியக் கொடியாக உடனடியாக ஏற்க மறுப்பதென்பது சிங்கள பௌத்தத்தைப் பலப்படுத்துமே தவிர, சிறுபான்மையினருக்கு எவ்வித பலனையும் பெற்றுக்கொடுக்காது என்பதை உணரத் தவறியோராக தமிழ்த் தேசியவாதிகளான எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம், சி.வன்னியசிங்கம் போன்றவர்கள் செயற்பட்டனர்.
இவர்கள் இவ்வாறு உணரத் தவறியமைக்குக் காரணம் சிங்கள பௌத்தத்தின் அடையாளமாக சிங்கத்தையும், சைவமும் தமிழும் என்பதின் அடையாளமாக நந்தியை ஏற்றுக்கொண்டதினாலாகும். இவ்விரண்டுமே, இரண்டு மேல்வர்க்கங்களின் கருத்துநிலைக் கட்டமைப்பே தவிர வரலாற்றுரீதியான இயக்கவியலுக்குட்பட்டவையல்ல என்பது எனது இக்கட்டுரைத்தொடர் 01 இல் விளக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கருத்துநிலைகளைக் கடந்து மக்களுக்கான இலங்கையை இரு தரப்பினராலும் சிந்திக்க முடியாதளவுக்கு அவர்கள் தங்கள் வர்க்கநிலையில் இருந்துள்ளனர்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தேசியக் கொடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, “இலங்கையின் தேசியக் கொடி, சிங்களவரின் சிங்கக் கொடியையும், தமிழரின் நந்திக் கொடியையும், முஸ்லிம்களின் பிறை-நட்சத்திரக் கொடியையும் கொண்டதாக அமைய வேண்டும்” என்றார்.
சுதந்திர அரசொன்றை நாம் நிறுவுகின்றபோது அதனை மதரீதியாக அடையாளப்படுத்துவதும் அதனூடாக மேலே சுட்டிக்காட்டிய இரு கருத்துநிலைகளைப் பேணுவதோடு மேலதிகமாக இஸ்லாமிய கருத்துநிலையொன்றினை உருவாக்கவுமே எஸ்.ஜே.வி. முயன்றிருக்கிறார் என்பதையே அவரது மேற்படி உரை காட்டுகின்றது.
இது யாழ்.மேலாதிக்க கருத்தியலின் வெளிப்பாடு எனலாம். ஏனெனில் இந்த நந்தி அடையாளத்துக்குள்ளோ அல்லது யாழ்ப்பாண இராச்சியத்துக்குள்ளோ கிழக்கு மாகாணமும் மலையகமும் இல்லை என்பதை நாம் மறந்துவிடலாகாது. கிழக்கு மாகாணத் தமிழர்களையும் மலையகத் தமிழர்களையும் கவனத்தில் கொள்ளாது தனியே யாழ்ப்பாணத் தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட உயர் வர்க்கத்தினரை மாத்திரமே கவனத்தில் கொண்டு நந்தியை முன்மொழிந்து செல்வநாயகம் உரையாற்றியுள்ளார் என்பதை இதனூடாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மதத்தைக் கொடியில் வைத்துக் கொண்டு மதச்சார்பற்ற அரசு தொடர்பாக எவ்வாறு எம்மால் பேசமுடியும் என்பதைக்கூட அவர் சிந்திக்கவில்லை. எஸ்.ஜே.வி. தனது அதிகார வர்க்க கருத்தியலை முன்னிறுத்திக் கொண்டு செயற்படும் போது டி.எஸ்.சேனநாயக்கா தனது அதிகார வர்க்க கருத்தியலை முன்னிறுத்திச் செயற்பட்டுள்ளார். ஆனால் அவருடைய சாணக்கியம் இதனை ஒரு சிங்கள பௌத்த அடையாளமாக முன்னிறுத்தாது அதனை வரலாற்றுக்கூடாக எடுத்துரைத்த முறையில் தங்கியுள்ளது. “நான் சிங்கக் கொடி ஏற்றப்பட வேண்டும் என விரும்புவதற்கான பிரதான காரணம் என்னவெனில், நாம் எமது தேசத்தைத் தோற்று, மக்கள் இங்கிலாந்தின் அரசரைத் தமது அரசராக ஏற்றுக்கொண்ட சமயத்தில், இறுதிக் கண்டியரசன் சிம்மாசனத்திலிருந்து அகற்றப்பட்டு, அவனது சிங்கக்கொடி கீழே இறக்கப்பட்டது. இப்போது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மீளளிக்கையில் அதனுடன் கூடவே அந்தக் கொடியையும் இங்கிலாந்து மீளளிக்க வேண்டுமென நான் விரும்புகின்றேன். நாம் சுதந்திர தினத்தன்று சிங்கக் கொடியை ஏற்ற எண்ணுவதற்கு இதுவே பிரதான காரணமாகும்.
இந்தக் கொடியை ஏற்றிய பின், அதில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்பது யாரேனுக்கும் விருப்பமாக இருக்கும் பட்சத்தில் அவ் விருப்பத்திற்குப் பொருத்தமானதொரு கொடியை ஏற்றலாம். சிங்கக் கொடியை ஏற்றிய பின், அதற்குப் பதிலாக வேறாரு கொடியை ஏற்றுவதில் எமக்கு ஆட்சேபனை கிடையாது.” (மேற்கோள், முருகர் குணசிங்கம்) என்று மிகவும் ஜனநாயகத் தன்மையுடனும் தேசபக்தியுடனும் எடுத்துக் கூறியிருந்தார்.
ஜி.ஜி. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்றவர்கள் தங்களுடைய கருத்துநிலைக் கட்டமைப்பினை விட்டு வெளியே வந்து, மேற்படி டி.எஸ் சேனநாயக்காவினுடைய கருத்துக்குள்ளே தமிழர்களையும் அடையாளப்படுத்தி, சிங்கம் இரு இனத்துக்கும் உரியது என்பதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு வெளிப்படுத்துவதற்கு பின்வரும் காரணங்களை முன்வைத்திருக்க முடியும்.
- கண்டியரசன் தமிழன் என்பதை வலியுறுத்துதல்
- கண்டி இராச்சியத்துக்குள்ளும் அதனுடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டதாகவும் கிழக்கு மாகாணம் இருந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டல்
- சிங்கம் பல்லவர் காலத்திலிருந்து தமிழ் சிற்ப மரபிலும் ஓவிய மரபிலும் தவிர்க்கமுடியாத ஒரு அடையாளமாக இருந்து வந்திருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தல். என்பன போன்ற காரணங்களை முன்வைக்கின்றபோது தனியே சிங்களப் பௌத்தம் என்கின்ற தூய்மைவாத அடையாளம் சிக்கலுக்குள்ளாகின்ற நிலையினை தோற்றுவித்திருக்க முடியும்.
இவ்வாறு தூய்மைவாதத்தினை களங்கப்படுத்துவது சாத்தியமற்றது எனக்கொண்டால் கண்டியரசனின் கொடியாக சிங்கக் கொடிதான் இருந்தது என்பதை வரலாற்று விடயங்களுக்கூடாக மறுத்திருத்தல் வேண்டும். இது பற்றி ‘சிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி’ எனும் கட்டுரையில் என் .சரவணன் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.
“கண்டி ராஜ்ஜியம் ஏழு பிரிவுகளாக நிர்வகிக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கென கொடிகளும் இருந்தன. அந்த ஏழில் ஒன்று “சத்கோறளை” எனப்படும் பிரதேசம். இன்றைய குருநாகல் பகுதியின் பெரும்பகுதியை உள்ளடக்கியது அது. சத்கோறளையின் கொடிதான் சிங்கக் கொடி. ராஜசிங்கனுக்கு எதிரான கிளர்ச்சி சத்கோறளையிலிருந்துதான் ஆரம்பித்தது எனலாம். இலங்கையில் சிங்கள சாதியமைப்பில் மேனிலையில் இருந்த சாதிகளுக்கென்று தனித் தனியான கொடிகள் இருந்திருக்கின்றன. கராவ (மீன்பிடி கரையார் சாதிக்கு ஒப்பானவர்கள்) சாதியினர் சிங்கத்தை தனது கொடியில் வைத்திருக்கின்றனர்”.
ஐரோப்பியர்கள் பலரின் குறிப்புகளில் மன்னர் சூரியனையும் சந்திரனையும் கொண்ட கொடியையும் சில நேரங்களில் அன்னம், மயில், மான், கரடி, சிங்கம், புலி, யானை, மேலும் சில பறவைகள் போன்ற பல்வேறு பிராணிகளைக் கொண்ட கொடியையும் பயன்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றனர். ரொபர்ட் பேர்சிவல் தனது நூலில் (An Account of the Island of Ceylon, Containing its history, Geography) ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் பரிவாரங்கள் சூரியனின் உருவத்தைக் கொண்ட கொடியை தாங்கிச் சென்றதாகக் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை இன்று நாம் பயன்படுத்தும் வாளேந்திய சிங்கத்தின் உருவத்துக்கு நிகராக ஐரோப்பாவில் பல சின்னங்களும் கொடிகளும் இலச்சினைகளும் இருந்திருக்கின்றன. இன்றும் இருக்கின்றன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் அவர்களின் முக்கிய இலச்சினைகளாகவும் சின்னங்களாகவும் நாணயங்களிலும் சிங்க உருவம் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.” என்பார். மேலும் சரவணன் குறிப்பிடுகையில், பிரித்தானியர் கண்டியில் 3 கொடிகளை கைப்பற்றி அவற்றை செல்சீ வைத்தியசாலையில் வைத்திருந்ததாகவும் அவற்றில் ஒரு கொடியில் மாத்திரம் வாள் ஏந்திய சிங்கம் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இக்கொடியினையே சிங்களக் கொடியாக கொண்டுவந்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு வரலாற்றின் அடியாக டி.எஸ்.சேனநாயக்காவினுடைய கருத்து தவறு என்பதை வெளிப்படுத்தி எந்தவித அதிகாரக் கருத்துநிலைகளுக்கும் இடம்கொடுக்காத சமத்துவமான கொடி ஒன்றினை முன்மொழிந்திருப்பார்களேயானால் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தினை வெற்றிகொண்டிருக்க முடியும். இதை விடுத்து சிங்களத்துக்கு எதிராக தமிழ் என்று தமிழ் தலைவர்கள் எதிர்நிலை எடுத்ததன் காரணத்தினால் சிங்களம், தமிழ் என்ற இனப்பகைமை இற்றைவரை எவ்வித மாற்றமுமின்றி தொடர்வதற்கும் அழிவுகளைச் சந்திப்பதற்கும் முதல் அடியெடுத்துக் கொடுத்த சந்தர்ப்பம் இந்த தேசியக் கொடி விடயமாகும்.
தொடரும்.