வவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவின் ஒழுங்கமைப்பில், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில், மனிதக் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கின்போது, எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்” என்ற தலைப்பிலான ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திரையிடலில் பங்குபற்றியிருந்த றகமா நிறுவனத்தினுடைய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளரான கலாநிதி இந்திரமூர்த்தி சுதன் அவர்கள், “சுத்திகரிக்கப்பட்ட நீர் தொடர்பில் இருந்த என்னுடைய பார்வை பிழைத்துவிட்டது. அதனை ஆவணப்படம் தெளிவுபடுத்தியுள்ளது. இரசாயனம் கலக்காத சுத்தமான தண்ணீரை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்வோம்“ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.