எழுநா மற்றும் சுன்னாகம் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 15.03.2025 அன்று, சனிக்கிழமை சுன்னாகம் பொது நூலகத்தின் டிஜிட்டல் அறிவு மையத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் வாழ்த்துரையினை சுன்னாகம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சுதர்சன் ஜெயலக்ஷமி வழங்கியிருந்தார். நூல் அறிமுக உரையினை அச்சுவேலி, சுதேசிய மருந்து உற்பத்தி பிரிவு, சித்த மருத்துவ வைத்தியரான சோமசுந்தரம் கனகசுந்தரம் வழங்கியிருந்தார். குறித்த உரையில், மருத்துவ நூல்களை தமிழில் ஆக்கும் முயற்சி பாராட்டத்தக்கது எனவும், இந்நூல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்தும் விரிவாக தெளிவுபடுத்தியிருந்தார். இந்நூலுக்கான கருத்துரையினை சித்த வைத்தியர் தியாகராஜா சுதர்மன் ஆற்றியிருந்தார். மேலும், சிரேஸ்ர விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய் கலாநிதி. பா.தனபாலன் சிறப்புரையினை ஆற்றியிருந்தார். நூலில் குறிப்பிடப்பட்ட இயற்கை மூலிகை தொடர்பான விடயங்களை சமூகத்தினரிடம் கொண்டுசேர்க்க வேண்டிய கடப்பாடு குறித்தும் தனது கருத்தை முன்வைத்திருந்தார்.
இந்நிகழ்வில் பல அறிவார்ந்த நபர்கள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் நூலக நண்பர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது, நூலின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து முனைவர் பால.சிவகடாட்சம் காணொளியினூடாக விளக்கமளித்திருந்தார்.
‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்பது எளிமையான வடிவில் பாரம்பரிய மூலிகைகள் தொடர்பில் ஏட்டுச் சுவடியில் இருந்த விடயங்களைக் கொண்டு எழுதப்பட்டதாகும். இந்நூல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் மருந்துப் பொருட்களின் குணங்களை எடுத்துரைக்கும் வெண்பாக்களாலானது.