ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன்
பிரஞ்சும் ஆங்கிலமும்
இக்கட்டுரைத்தொடரின் முதலாவது தொடரில் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையை பேணுவதில் கனடா தேசம் வெற்றி கண்டுள்ளது என மதிப்பிடப்படுகின்றது. இந்த வெற்றியின் பின்னணியில் கனடா மாதிரியின் (Canadian model) சில தனித்துவமான பண்புக்கூறுகள் அமைந்துள்ளன.
1. அது சமஷ்டியாக இணைந்துள்ள ஒரு சமூகம்.
2. ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல், அரசியல் யாப்புவாதம் ஆகிய கொள்கைகள் அங்கு ஏற்புடைமை பெற்றுள்ளன.
3. பிரெஞ்சுமொழி பேசுவோரான கியூபெக்கியர்கள், தாம் தனித்துவமிக்க தேசிய இனமென கருதுகிறார்கள். அவர்களிடையே தாம் தனித்த தேசிய இனமா? இல்லையா என்பது அல்ல. பிரிந்து போவதா அல்லது சமஷ்டியில் ஒரு அங்கமாக நீடிப்பதா என்பதே அங்கு நடைபெறும் விவாதமாகும்.
விளிம்புநிலை மக்களாக இருந்துவரும் கனடாவின் பழங்குடியினர் முதற்தேசியங்கள் (1st nation) என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் ஏதாவது வகை சுயாட்சி தமக்கு வேண்டும் என கோருகின்றனர். வேற்றுமைகள் இல்லையென மறுப்பதும் அவற்றை நிராகரிப்பதும் சரியான வழியல்ல என்பது கனடாவின் கொள்கையாகவுள்ளது போன்ற விடயங்களை அவதானித்திருந்தோம். இனி மேலதிக விடயங்களை நோக்கலாம்.
பிரஞ்சு மொழி பேசுவோர், ஆங்கிலம் பேசுவோர் என்ற இரு தேசிய இனங்களை ஒன்றாகச் சேர்த்துக் கொண்ட அரசியல் ஒழுங்கமைப்பே கனடா என்ற தேசத்தின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த வரலாற்று நிகழ்வாகும். 1759 ஆம் ஆண்டில் அப்பிரஹாம் பள்ளத்தாக்கில் (Plains of Abraham) நிகழ்ந்த போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது. பிரித்தானியாவிற்கும் பிரான்சுக்கும் ஏழாண்டுகளாக நடைபெற்ற போரின் முடிவில் 1763 இல் பரிஸ் உடன்படிக்கை (Treaty of Paris) ஏற்பட்டது. பிரித்தானியாவிற்குக் கிடைத்த இந்த வெற்றி பிரஞ்சு – கனடிய உறவுகளில் இன்று வரை எதிரொலித்த வண்ணம் உள்ளதோடு, கனடாவின் வரலாறு பற்றிய விளக்கத்தில் முக்கியம் பெறும் நிகழ்வாகவும் உள்ளது. 1763 இல் பிரித்தானிய அரசு பிரகடனம் ஒன்றை வெளியிட்டு, கனடாவின் பழங்குடி மக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர் என்ற கடமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது. 1774 இல் பிரித்தானிய பாராளுமன்றம் கியூபெக் சட்டம் (Quebec Act) என்ற சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டத்தின் பயனாக ஒன்டாரியோவும், அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி என இன்று கூறப்படும் பிரதேசமும், கனடாவுடன் இணைக்கப்பட்டன. இச்சட்டத்தின் பயனால் றோமன் கத்தோலிக்க மதம் கனடாவில் பின்பற்றப்படுதலும், பிரஞ்சு சிவில் சட்டம் பிரயோகமாதலும் உறுதிசெய்யப்பட்டன.
1759 வெற்றியைத் தொடர்ந்து கனடாவுக்குள் அலை அலையாக குடியேற்றங்கள் நிகழ்ந்தன. கியூபெக் பகுதியின் தோற்பொருள் வர்த்தகத்தை பிரித்தானிய வர்த்தகர்கள் தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நாடாக மாறியபோது ஏற்பட்ட புரட்சியில் பிரித்தானியாவிற்கு விசுவாசமாக இருந்த ஆங்கிலேயர்கள் கனடாவிற்குள் தஞ்சம் புகுந்து அங்கு குடியேறினர். அதனால் ஆங்கிலம் பேசுவோர் சனத்தொகை அதிகரித்தது. ஒன்டாரியோவிலும், இன்று அத்திலாந்திக் மாகாணங்கள் என்று அழைக்கப்படும் பகுதிகளிலும் ஆங்கிலம் பேசுவோர் குடியேற்றங்கள் அதிகரித்தன. 19 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தில் ஏற்பட்ட உருளைக்கிழங்குப் பஞ்சம் காரணமாக ஐரிஷ்காரர்கள் அங்கிருந்து வெளியேறிக் கனடாவில் குடியேறினர். இதேபோன்று ஸ்கொட்லாந்தின் உயர் நிலங்கள் விவசாயப் பண்ணைகளை அமைப்பதற்காக பயன்படுத்தியபோது அங்குள்ள ஸ்கொட்லாந்தியர் வெளியேறிக் கனடாவில் குடியேறினர். இவ்விதமாக கனடாவின் குடிப்பரம்பலில் பிரித்தானிய தொடர்புடைய குடியேறிகள் தொகை அதிகரித்தது. இதன் பின்னர் கனடாவின் மேற்குப் பகுதியின் விஸ்தரிப்பு நிகழ்ந்த போது கிழக்கு ஐரோப்பியர்கள், சீனர்கள், ஜப்பானியர் ஆகியோரும் பிறரும் கனடாவில் குடியேறலாயினர். இவ்வாறான குடியேற்றமும், சனத்தொகை மாற்றமும் தொடர்ந்து ஏற்பட்டது .
1867 இல் கனடா ‘கொன்பெடரேசன்’ ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது அங்கு பிரித்தானியர்கள் 60.5 வீதமாகவும் பிரஞ்சுக்காரர்கள் 31.1 வீதமாகவும் காணப்பட்டனர். இவ்வாறாக மொத்த சனத்தொகையின் 92 வீதத்தினராக ஆங்கிலம் பேசுவோர், பிரஞ்சு மொழிபேசுவோர் என்ற இரு பிரிவினரும் விளங்கினர். அக்காலத்தில் கனடாவில் இருந்த ஏனைய குடியேறிகளில் பெரும்பான்மையினர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர் . குறிப்பாக ஜேர்மனியர்கள் அதிகளவில் இருந்தனர். அக்காலப் புள்ளிவிபரங்களின்படி மொத்த சனத்தொகையில் 6.9 வீதம் கிழக்கு ஐரோப்பியக் குடியேறிகளாகவும் 0.7 வீதம் கனடாவின் பழங்குடிகளாகவும் மீதமுள்ள 0.7 வீதத்தினர் வேறு தேசங்களின் குடியேறிகளாகவும் இருந்தனர்.
சனத்தொகையில் ஏற்பட்ட மேற்கூறிய மாற்றங்கள் கனடாவில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்தன. முதலாவதாக, மொத்த சனத்தொகையில் பிரஞ்சு மொழி பேசுவோரின் வீதாசாரம் குறைந்தது. இரண்டாவதாகப் பிரஞ்சு மொழி பேசுவோர் கியூபெக்கின் எல்லைக்குள்ளே செறிந்து வாழ்பவராக இருந்தனர். இது ஒரு தற்செயல் போக்கல்ல. இது பொதுக்கொள்கையொன்றின் விளைவு என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். இது பற்றிப் பின்னர் குறிப்பிடுவோம்.
கனடா என்னும் பரிசோதனையின் மிகவும் சிக்கலான பிரச்சினை மூலமாக, பிரஞ்சு மொழிபேசும் கனடா மக்களுக்கும், கனடாவின் பிறமக்களுக்கும் இடையிலான பிளவு இருந்துவந்துள்ளது. இன்று கனடாவின் சனத்தொகையின் காற்பங்கினராக பிரஞ்சு மொழிபேசுவோர் உள்ளனர். கியூபெக்கின் பிறப்பு வீதமும், அங்கு குடியேறுவோர் வீதமும் குறைவாக இருப்பதால் கியூபெக் பகுதியின் சனத்தொகை விகிதம் மேலும் குறைந்து செல்கிறது. பிரஞ்சு மொழிபேசுவோரில் 80 வீதத்தினர் கியூபெக் பகுதியிலேயே வதிகின்றனர். அங்கு மொத்த சனத்தொகையின் 85 வீதத்தினர் பிரஞ்சுமொழி பேசுவோராகவும் உள்ளனர். நியு பிரண்ஸ்விக் மாநிலத்தில் பிரஞ்சு மொழி பேசுவோர் மொத்த சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கினராய் உள்ளனர். கியூபெக் – ஒண்டாரியோ எல்லையை ஒட்டி ஒரு நீளமான துண்டு போன்ற இடப்பரப்பில் பிரஞ்சு மொழியினர் வாழ்கின்றனர். கனடாவின் ஏனைய பகுதிகளில் பிரஞ்சு மொழியினரின் பிரசன்னம் மிகக் குறைவு. அப்பகுதிகளில் ஆங்கில மொழியுடன் விரைவாக உள்ளீர்க்கப்படும் சனத்தொகையில் பிரஞ்சுமொழியினரும் ஒரு பகுதியாக உள்ளனர். கியூபெக்கிற்கு உள்ளேயும், அதற்கு வெளியேயும் கனடாவின் பிறபகுதிகளிலும் பல மொழிகளைப் பேசுவோர் உள்ள போதும் கனடாவின் மொழி அடிப்படையிலான வேற்றுமை, கியூபெக் – கனடாவின் பிறபகுதிகள் என்ற புவியியல் இருமைத் தோற்றத்தைக் கொண்டுள்ளதைக் காணலாம்.
கியூபெக்கின் பிரஞ்சுமொழி பேசுவோர் அனைவரிடமும் பிரஞ்சு என்ற அடையாள உணர்வு ஆழமாக உள்ளது. அவர்களில் தனிநாட்டை அல்லது தனித்த இறைமையைக் கோருவோர், சமஷ்டி ஆதரவாளர் என்ற இரு பிரிவுகள் இருந்தாலும் யாவரும் பிரஞ்சு என்ற அடையாள உணர்வாலும், கியூபெக் ஒரு தனித்த தேசியம் (Nation) என்ற உணர்வாலும் ஒன்றுபட்டவர்களாய் உள்ளனர். பிரஞ்சு மொழி பேசுவோர் தனித்த ஒரு தேசிய இனமா இல்லையா என்ற விவாதம் கியூபெக்கிற்குள் நடைபெறுவதாகக் கொள்ள முடியாது. தனித்துவமான பிரஞ்சுத் தேசியம் அல்லது தேசிய இனமான கியூபெக்கியர் சுதந்திர நாடாகப் பிரிந்துபோக வேண்டுமா அல்லது கனடாவுக்குள்ளேயே தொடர்ந்து இருப்பதனால் அதன் தனித்துவம் பாதுகாக்கப்படுமா என்ற விவாதமே அங்கு நடைபெறுகிறது. இருந்தபோதும் கியூபெக்கின் பெரும்பான்மையினர் கனடா தேசத்தோடு வலுவான, நேர்மறையான பிணைப்பையும் பற்றுதலையும் கொண்டுள்ளார்கள். இதனால் தான் பிரஞ்சு பேசும் மக்களின் சுதந்திர வேட்கை (இறைமை பற்றிய வேட்கை) கனடாவோடு தொடர்ந்தும் பங்குடமை (Partnership) நீடிக்கவேண்டும் என்ற விருப்பம் என்ற இரண்டு உணர்வுகளும் ஒருங்கே காணப்படுகிறது .
வரலாற்றுப் பின்னணி
முதன் முதலில் கனடாவிற்குள் கால்பதித்த ஐரோப்பியர்கள் என்றால் அது பிரஞ்சுக்காரர்களே என்று கூறவேண்டும். யுத்தம் ஒன்றின் முடிவில் 1759 இல் வடஅமெரிக்காவிற்கான உரிமையை பிரான்ஸ் பிரித்தானியாவிற்கு விட்டுக்கொடுத்தது . இதன் பின்னர் பிரஞ்சுக்காரர்களிற்கும், பிரித்தானியாவிற்கும் பல இணக்கப்பாடுகள் ஏற்பட்டன. விட்டுக்கொடுப்புக்களும் நிகழ்ந்தன. பிரித்தானியர்கள் கனடாவின் கியூபெக் மக்களின் சில உரிமைகளைத் தயக்கத்தோடு, விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்பட்டது. கியூபெக்கியர்கள் தமது மதமாகிய கத்தோலிக்கத்தை பின்பற்றலாம். தமது மொழியைப் பேணலாம், அவர்களுக்கென்றே உரியதான நில உரிமை முறையை (Seigniorial System of Land Tenure) தொடரலாம், அவர்களுக்குரியதான சிவில் சட்டமுறையைத் தொடரலாம் என்பன கியூபெக் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளாகும். கியூபெக்கியர்களின் இந்த உரிமைகள் கணிப்பைப் பெற்ற காலகட்டத்தில் கனடாவில் இன்னொரு அரசியல் போக்கும் காணப்பட்டது. கனடாவின் வட மாநிலங்களிலும், தென்மாநிலங்களிலும் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட ஜனநாயக அரசியல் முறைக்கான இயக்கம் தொடங்கியது. 1837 – 1838 காலத்தில் கிளர்ச்சிகள் வடக்கு, தெற்கு பகுதிகளில் நிகழ்ந்தன. இதன் பயனாக ‘பிரித்தானிய மாதிரியை’ ஒத்ததான அரசியல் முறை வளர்ச்சிபெற்றது. கனடாவிற்கு ‘பொறுப்பாட்சியுடைய அரசாங்கம்’ (Responsible Government) வழங்கப்பட்டது. கனடாவின் ஆளுநர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவராக ஆகினார்.
19 ஆம் நூற்றாண்டு முதலாக கனடாவில் பிரஞ்சுக்காரர் – ஆங்கிலேயர், கத்தோலிக்கர் – புரட்டஸ்தாந்தியர் என்ற முறுகல் நிலையும் நெருக்கடிகளும் தொடர்ந்தன. 1840 ஆம் ஆண்டில் பிரித்தானியா டர்ஹாம் பிரபுவை ஆணையாளராக நியமித்து விசாரணை அறிக்கை ஒன்றை பெற்றுக் கொண்டது. அந்த அறிக்கையில் டர்ஹாம் பிரபு ‘கனடா என்ற அரசுக்குள் இரண்டு தேசியங்கள் (Two Nations) ஒன்றோடு ஒன்று போரிட்ட வண்ணம் உள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார். கனடாவில் வாழும் பிரஞ்சுக்காரர்கள், பிரித்தானியா குடியேறிகள் சமூகத்தோடு இணைக்கப்பட்டு உள்ளீர்க்கப்படுதல் (Assimilation) என்ற கொள்கையை டர்ஹாம் தம் அறிக்கையில் சிபாரிசு செய்திருந்தார். கனடாவின் எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கிய காலனியின் கீழ் ஒன்றிணைந்த சட்டசபையை உருவாக்குதல், கனடாவிற்குள் பிரித்தானியர் குடியேற்றத்தை அதிகரித்தல், பிரித்தானியர்களின் உயர் விழுமியங்களிலும் பண்பாட்டிலும் (டர்ஹாம் பிரபுவின் கருத்தின்படி) பிரஞ்சுக்காரர்களுக்கு கல்வியை அளித்தல் ஆகியன அவரின் சிபாரிசுகளாக இருந்தன. ஐக்கிய கனடா மாநிலம் (United Province of Canada) ஒன்றை 1840 இல் பிரித்தானிய அரசு ஏற்படுத்தி, இந்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தியது. 1840 இல் ஏற்படுத்தப்பட்ட இந்த இரட்டை நிர்வாகமுறை (பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய இரு மொழியினர் சமூகங்களைக் கொண்ட நிர்வாகம்) தோல்வியில் முடிந்தது. (இன்று பெல்ஜியம் நாட்டில் காணப்படுவதை ஒத்த இரட்டை நிர்வாக முறையாக இது இருந்தது) நெருக்கடிகள் ஏற்பட்டன. ஆங்கிலம் பேசுவோர்களின் குடிப்பரம்பல் மேற்கு நோக்கிப் பரவத் தொடங்கியபோது 1840 இல் ஏற்படுத்தப்பட்ட (பிரஞ்சு – ஆங்கில மொழியினரின்) பங்குடமையில் விரிசல்கள் ஏற்படத்தொடங்கின. பிரஞ்சு மொழிபேசும் மக்களின் தலைவர்களும் ஆங்கிலமொழி பேசுவோரின் தலைவர்களும் நெருக்கடி, நிலையைத் தணிப்பதற்கான வழிமுறைகளைக் கூடி ஆலோசித்தனர்.
கனடாவில் பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் வாழும் வெவ்வேறு பகுதிகள் என்று இரு அலகுகளை ஏற்படுத்த முடிவு செய்தனர். கனடாவின் கீழ்ப்பகுதி (Lower Canada) கியூபெக் மாநிலம் ஆகியது. இங்கு கத்தோலிக்கர்களான பிரஞ்சு மொழியினர் செறிந்து வாழ்ந்தனர். கனடாவின் மேற்பகுதி (Upper Canada) என்ற அலகு ஆங்கில மொழிபேசும் புரட்டாஸ்தாந்தியர் வாழும் ஒன்டாரியோவையும் பிறபகுதிகளையும் கொண்டதாய் இருந்தது. ஐக்கியப்பட்ட கனடா மாகாணம் (United Province of Canada) இவ்வாறாக தனது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டபோது அத்திலாந்திக் கனடா எனப்படும் வட அமெரிக்கப் பகுதிகளிலும், பசுபிக் கரையோரமாக அமைந்திருந்த பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் தமது எதிர்காலம் குறித்த பிரச்சினைகள் பற்றிய சிந்தனை வலுவடைந்தது.
ஐக்கிய அமெரிக்காவின் (USA) இராணுவ பொருளாதார மேலாதிக்கம், பிரித்தானியாவில் இருந்து கிடைத்து வந்த ஆதரவு குறைந்து செல்லுதல் ஆகியனவே இப்பகுதிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகள். 1860களில் அத்திலாந்திக் கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகியவை இணையும் செயற்பாட்டின் தொடர்ச்சியாக 1867 ஆம் ஆண்டில் கனடாவின் ‘கொன்பெடரேசன்’ உருவானது. ஒன்டாரியோ (கனடாவின் மேற்பகுதி) கியூபெக் (கனடாவின் கீழ்ப்பகுதி) நோவா ஸ்கொட்டியா, நியூ பிரன்ஸ்விக் ஆகிய மாநிலங்கள் சேர்ந்த ‘கொன்பெடரேசன்’ ஆக இது அமைந்தது. கனடா தேசத்தை கட்டியெழுப்பும் செயல்முறை 1867 முதல் 1949 வரை தொடர்ந்தது . பல புதிய மாநிலங்கள் கனடாவுடன் இணைந்தன. 1949 இல் நியுபவுண்ட்லாந்தும், லபரடோரும் கனடாவுடன் இணைந்தன.
குறிப்பு : ‘Power Sharing : The International Experience’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து, அலெய்ன் ஜி கக்னொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் எழுதிய, ‘Addressing Multi Culturalism in Canada’ என்ற கட்டுரையின் மொழிப்பெயர்ப்பே இக்கட்டுரையாகும்.
தொடரும்.