கீழைக்கரை தொடர்பான வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு மூன்று வகையான ஆதாரங்களை நாம் பயன்படுத்தலாம். முதலாவது பொறிப்புச் சான்றுகள், இரண்டாவது எழுத்துச் சான்றுகள், மூன்றாவது வாய்மொழி மற்றும் தொன்ம மரபுரைகள்.
பொறிப்புச் சான்றுகள் (Epigraphic evidences) என்பதன் மூலம் நாம் கருதுவது, கல்லிலும் செப்பு, பொன், ஐம்பொன் முதலிய உலோகங்களிலும் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, சாசனச் சான்றாதாரங்களை எழுத்துச் சான்றுகளில் பாலி இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், வடமொழி இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்தமிழ் இலக்கியங்கள், ஐரோப்பியர் கால இலக்கியங்கள், சமகால ஆய்வுநூல்கள் என்பன அடங்கும். வாய்மொழி மரபுரைகளில் நாட்டார் பாடல்களாகவும் தொன்மக்கதைளாகவும் ஏட்டுச்சுவடிகளாகவும் கிடைக்கின்ற உள்ளூர் மரபுரைகளைச் சொல்லலாம். வாய்மொழி மற்றும் தொன்ம மரபுரைகளில் சில கடந்தகாலத்தில் நூலுருப்பெற்றும் உள்ளன.
பொறிப்புச் சான்றுகள் (Epigraphic Sources):
அண்ணளவாக பொ. மு 4ஆம் 3ஆம் நூற்றாண்டிலிருந்து கீழைக்கரையெங்கணும் தொடர்ச்சியாக கல்வெட்டுக்களும் உலோக மட்பாண்டப் பொறிப்புகளும் பரவலாகக் கிடைத்துவருகின்றன. இலங்கையில் ஈழப்பாகதம்[1], சிங்களம், தமிழ், சங்கதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பொறிப்புச் சான்றுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் ஈழப்பாகதம்[1], சிங்களம், தமிழ், சங்கதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பொறிப்புச் சான்றுகள் கிடைத்துள்ளன. பொறிப்புச் சான்றுகளில் கல்வெட்டுக்களும் உலோக – மட்பாண்டச் சாசனங்களும் அடங்கும்.
கல்வெட்டுக்களில் குகைக் கல்வெட்டுக்கள், பாறைக் கல்வெட்டுக்கள், பலகைக் கல்வெட்டுக்கள், தூண் கல்வெட்டுக்கள் என்று பலவிதமான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. நமக்குக் கிடைக்கும் பொறிப்புச் சான்றுகளில் ஆதியானவை குகைக்கல்வெட்டுக்கள் . மக்கள் குடியிருப்புகளுக்கு வெளியே துறவிகளுக்கு, குறிப்பாக புத்தநெறித் துறவிகளுக்கு குகைகள் இல்லறத்தாரால் கொடையளிக்கப்பட்டபோது இவை பொறிக்கப்பட்டன. பெரும்பாலும் குகைகளின் வாசலில் மலையின் மேல்விளிம்பில் மழைநீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்படும் தவாளிப்புகளின் அருகே குகைக் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். குகையை வசிப்பிடத்துக்குத் தகுந்ததாக மாற்றி அதைத் தானம் கொடுத்தவர், தானத்தைப் பெற்றவர், தானம் வழங்கப்பட்டதன் நோக்கம் என்பன அடங்கிய மிகச்சிறிய கல்வெட்டுக்களாக குகைக்கல்வெட்டுக்கள் இருக்கும்.
பாறைக் கல்வெட்டுக்கள், குன்றுகள் மீதும் பாறைகளின் மேற்பரப்பிலும் பொறிக்கப்பட்டவை. பாறைக் கல்வெட்டுக்கள் அமைந்துள்ள மலைகளில் செங்கற் கட்டடங்களின் சிதைவுகள் பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளமையால், புத்த துறவிகள் குகைகளிலிருந்து சற்று வசதியான செங்கல் அல்லது கல்லாலான உறைவிடங்களுக்கு நகர்ந்த காலகட்டத்தில் இவை பொறிக்கப்பட்டிருக்கக்கூடும். இந்தக் கட்டடச் சிதைவுகள் சமய அல்லது பொதுத்தேவைக் கட்டடங்களாகவும் அமைந்திருக்க இயலும். இன்னும் சில பாறைக்கல்வெட்டுக்களில் அப்பகுதியை ஆண்ட சிற்றரசர்கள் அல்லது நிலக்கிழார்களைப் பற்றிய தகவல்களும் காணப்படுகின்றன.
தூண் கல்வெட்டுக்களும் பலகைக் கல்வெட்டுக்களும் இலங்கைத்தீவின் நாகரிகம் உன்னத நிலையடைந்த காலத்தில் பொறிக்கப்பட்டவையாகும். வளர்ச்சியடைந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி மலைப்பாறைகளை தூண் வடிவில் அல்லது பலகை வடிவில் உடைத்துப் பெயர்த்து, அவற்றின் மீது உளி மூலம் செதுக்கி தூண் கல்வெட்டுக்களும் பலகைக் கல்வெட்டுக்களும் உருவாக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை குகை – பாறைக் கல்வெட்டுக்களைப் போலவே சமயக் கொடைகளைக் குறிப்பிடுவன தான்.
அரசாணைகளையும் கொடைகளையும் உறுதிப்படுத்துவதற்காக செப்பு, தங்கம் ஆகிய உலோகங்களைப் பயன்படுத்தி, செப்பேடுகளும் பொற்றகடுகளும் உருவாக்கப்பட்டதுடன், ஐம்பொன் முதலிய உலோகங்களால் இறையுருவங்கள், வழிபாட்டுப் பொருட்கள், நாணயங்கள் செய்யப்படும் போதும், அவற்றில் அரசாட்சியையோ அல்லது கொடையாளியையோ குறிப்பிட பொறிப்புகள் உருவாக்கப்பட்டன. மிகப்பழங்காலத்தில் மட்பாண்டங்களில் கூட பொறிப்புகள் இடம்பெற்றிருந்தன என்பதற்கு இன்று கிடைக்கும் உடைந்த பானைக் கல் ஓடுகளைச் சான்றாகச் சொல்லலாம்.
ஈழத்துக் கீழைக்கரையில் 175இற்குக் குறையாத பிராமிக்கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன[2]. இன்னும் வாசிக்கப்படாத ஏராளமான கல்வெட்டுக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் பிராமி எழுத்துருவில் ஈழத்துப் பாகத மொழியில் எழுதப்பட்டவை. ஆனால் கீழைக்கரையில் மாத்திரமன்றி, முழு இலங்கைத் தொல்லியலிலும் கடந்த 15 ஆண்டுகளில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டு வரும் தமிழி அல்லது தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள்.
தமிழி என்பதும் தமிழ்ப்பிராமி என்பதும் தமிழை எழுத ஆரம்பகாலத்தில் பயன்பட்ட ஒருவகைப் பிராமி எழுத்துமுறை. இலங்கையில் பிராமியின் எழுத்துரு ஈழத்துப் பாகதம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் எழுதப் பயன்பட்டுள்ளது. ஆனால் தமிழை எழுதும் போது, பிராமிக்கு தமிழ்ப்பிராமி அல்லது தமிழி என்று பெயர். ஏனென்றால், வடநாட்டு மொழிகளை எழுதப் பயன்படுத்திய பிராமிக்கும், தமிழை எழுதிய தமிழ்ப்பிராமிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன .
அவற்றில் முக்கியமாக இரண்டைச் சொல்லலாம். முதலாவது, எழுத்து வேறுபாடு. பாகத மொழியிலுள்ள வர்க்க ஒலிப்புகளுக்கான எழுத்துக்கள் தமிழில் இல்லை. (உதாரணம், க என்பதற்கு நான்கு வர்க்க எழுத்து ஒலிப்புகள். க = ka ; ~க = kha ; |க = ga ; ||க = gha) இதனால், பிராமிக் கல்வெட்டில் பெருமளவில் இடம்பெறும் அவ்வெழுத்துக்கள் தமிழிக் கல்வெட்டில் இடம்பெறாது. அதே போல் ள, ழ (𑀵), ற (𑀶), ன (𑀷) ஆகிய நான்கு தமிழ் எழுத்துக்களுக்கான ஒலிப்புகள் பாகத மொழியில் இல்லை என்பதால், பிராமிக் கல்வெட்டில் இவ்வெழுத்துக்கள் இடம்பெறுவதில்லை. ஆக, பிராமிக்கல்வெட்டொன்றில் தமிழுக்குச் சிறப்பான இந்நான்கு எழுத்துக்கள் பயன்பட்டிருந்தால், அது தமிழி தான் என்று இலகுவாக இனங்காணமுடியும். தாய்லாந்திலும் எகிப்திலும் கண்டறியப்பட்ட பிராமி எழுத்து வாசகமொன்றை தமிழி என்று இனங்காண முடிவது, அதிலிருந்த ‘ற’ எழுத்து மூலம் தான் (Mahadevan 2010).
இரண்டாவது வேறுபாடு, தமிழியிலுள்ள சில எழுத்து வரிவடிவங்கள், பிராமியில் மாறுபடுகின்றன. உதாரணத்துக்கு “ஈ, ம” முதலிய எழுத்துக்களைச் சொல்லலாம். இன்றுள்ள ‘ஈ’, தமிழியில் “ 𑀈 ” என்றும் பிராமியில் “ : : “ என்றும் எழுதப்படும். அதேபோல் “ம” என்ற எழுத்து பிராமியில் “𑀫” என்று எழுதப்படும் போது, தமிழியில் U வடிவில் எழுதப்படுகிறது (உரு.01). “ர” எழுத்திலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. கல்வெட்டுப் பொறிப்பியலில் தேர்ந்த அறிஞர்கள், தமிழிக்கும் பிராமிக்கும் பொதுவான எழுத்துக்களில் இன்னும் பல நுண்ணிய வேறுபாடுகளை அடையாளப்படுத்துவார்கள்.
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளைப் பொறுத்தவரை, தமிழியின் செல்வாக்கைக் காட்டும் முக்கியமான சான்றுகள் சில கிடைக்கின்றன. உதாரணமாக வழக்கமான பிராமியில் உள்ள ‘ம’விற்கு மேலதிகமாக, தமிழி ‘ம’ எழுத்து இலங்கைப்பிராமியில் ஏராளமாகப் பயன்பட்டுள்ளமை, மருமகன், மருமகள், பெருமகன் அல்லது பருமகன், பருமகள் ஆகிய தமிழ்ச்சொற்கள் ஈழப்பாகத மொழியில் எழுதப்பட்டுள்ளமை என்பவற்றைச் சொல்லலாம் (புஷ்பரட்ணம் 2003:115-20).
ஆனால் 2010இல் முழுக்கத் தமிழியில் எழுதப்பட்டிருந்த – தமிழ் மொழியில் வாசிக்க முடிந்த மட்டக்களப்பு வெல்லாவெளி சமணக் கல்வெட்டின் கண்டுபிடிப்பு இலங்கைத் தமிழ்த் தொல்லியலில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது (பத்மநாதன் 2013:27-48). அக்கல்வெட்டில் துவங்கி, நேரடியாகவே தமிழி எழுத்தில் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் பேராசிரியர் சி.பத்மநாதனாலும் அவரது மாணவர்கள் பலராலும் தொடர்ச்சியாகக் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன[3]. இவற்றில் கணிசமானவை நாகர் தொடர்பானவை என்பதுடன், நாகரின் சமயம், அவர்களது பண்பாடு, வாழ்வியல் பற்றிய பல புதிய தகவல்களும் இக்கல்வெட்டுக்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான நான்கு விடயங்களை வருமாறு வரிசைப்படுத்தலாம்.
முதலாவது, கீழைக்கரையில் ‘நாகர்’ பற்றிய கல்வெட்டுக்களும் ‘பத’ என்ற பெயரிலமைந்த குழுவினருடைய[4] கல்வெட்டுக்களும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. நாகர் ‘வேள், ர|ச, அய’ உள்ளிட்ட பல பதவிகளையும் “பருமக, கமிக” முதலிய பட்டங்களையும் சூடியிருந்தார்கள். ஆனால், இத்தகைய பட்டங்களெதுவும் ‘பத’ என்ற பெயர்களோடு காணப்படாமையால் பத என்போர் நாகரைவிடப் பிற்பட்ட ஒரு தனி இனக்குழுவாக இருக்கவேண்டும் என்று இனங்காண்பார் சி.பத்மநாதன். பத (பத்தர் அல்லது பட்டர்?) இனக்குழுவை இயக்கருடன் அல்லது குறுணிக்கற்கால [5] மாந்தருடன் அடையாளப்படுத்திக்கொள்ளமுடியும். நாகர்கள் பெருங்கற்காலப் பண்பாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய ஆதி இரும்புக்கால (Early iron Age) இனக்குழுவினர். பதர் அல்லது இயக்கர்கள் இவர்களுக்கு சிலகாலம் முன்பிருந்தே இலங்கையில் வாழ்ந்து வந்த குறுணிக்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இனக்குழுவினர். ஆக, இலங்கையில் வி`சயன் வருகைக்கு முன்னர் நாகரும் இயக்கரும் இருந்தனர் என்ற பாலி இலக்கிய வாசகத்தை விரிவாக விளங்கிக்கொள்வதற்கான சான்றுகள் இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் துலங்கிவருகின்றன. (பத்மநாதன் 2016:443-481).
இரண்டாவது, நாகர்கள் நாகபாம்பு வழிபாட்டினராக இருந்ததுடன் “மணிநாகன்” என்ற பெயரில் ஐந்து தலை நாகத்தை அல்லது நாகதேவனை வழிபட்டனர். சிவலிங்க வழிபாடும் அவர்களிடம் காணப்பட்டிருந்தது. சிவநெறி, புத்தநெறி, சமணம் ஆகிய சமயங்கள் இலங்கைக்கு அறிமுகமான போது, அவர்கள் அச்சமய நெறிகளையும் ஆர்வத்தோடு கடைப்பிடித்தனர். பூர்விக நாக வழிபாடு, சிவநெறி, புத்தநெறி, சமணம் ஆகிய நான்கு சமயங்களும் நாகரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. திருக்கோணமலையின் கரைசை முதலிய இடங்களில் “மணிநாகன்” என்ற பெயர் பொறித்த சிவலிங்கமும் நந்தியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. “மணிநாகன்” என்ற பெயர் பொறித்த புத்தர் பாதம் சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. நாகதேவதை வழிபடப்பட்ட மட்டக்களப்பு வெல்லாவெளி மலைக்குன்றொன்றில் சமண தீர்த்தங்கரர்களின் படிமங்களும் சமணப் பெண் துறவியரின் தங்குமிடங்களும் அமைந்திருந்தன. இவை தவிர “மணிநாகன்” பொறிக்கப்பட்ட ஏராளமான நாகசிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை புதிய சமயங்களின் அறிமுகத்தின் போது, அவற்றை தங்கள் பண்பாட்டுக்குள் நாகர் உள்ளீர்க்க முயன்றதாக வாசிக்க முடிகின்றது. (பத்மநாதன் 2016:481-505).
மூன்றாவது விடயம், தங்கள் சமயச்சின்னங்களில் தமிழில் “மணிநாகன்” என்று எழுதியுள்ளதாலும், அதே தமிழியில் மூன்று தலைமுறை நாக அரசர்களின் பெயரை ஆங்காங்கே எழுதுவித்திருப்பதாலும், நாகர்கள் தமிழ் பேசிய இனக்குழுவினர். இந்தக் கண்டுபிடிப்பு சமகால அரசியல் பண்பாட்டு வரலாற்றில் கவனமாக ஆராயப்படவேண்டிய ஒன்று.
நாகர்கள், புத்த சமயத்தின் போதனை மொழியான பாலியை அல்லது பாகதத்தையும் கற்றுத்தேர்ந்தனர். அம்மொழி இலங்கையின் தனித்துவமான புவியியல் அமைப்பால் வடநாட்டுப் பாகதத்திலிருந்து வேறுபட்டு ஈழப்பாகதமாக அல்லது எலு மொழியாகப் பரிணமித்தது. இந்த ஈழப்பாகதமே 8ஆம் நூற்றாண்டளவில் இன்றைய சிங்கள மொழியாக வளர்ச்சி காணத்தொடங்கியதுடன் 13ஆம் நூற்றாண்டில் தனக்கென முதல் இலக்கண நூலையும் பெற்றுக்கொண்டது (Coperahewa 2022:9-11).
பௌத்தம், சைவம் ஆகிய இரு சமயங்களைச் சார்ந்திருந்தபோதும் நாகரில் ஒரு சாரார் தமிழராகவே நீடித்தனர் என்பது தமிழிக் கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. நாம் முன்பு கண்ட, இயக்கர் அல்லது ‘பத’ மக்களும் இச்சமயங்களைச் சார்ந்திருக்கவேண்டும். நாளடைவில் இந்த இயக்கர் அல்லது ‘பத’ மக்கள் அல்லது குறுணிக்கற்கால மாந்தர் நாகருடனும் ஏனைய இனக்குழுக்களுடனும் கலந்து, தாம் பேசிய ‘முண்டா’ குடும்பத்தைச் சேர்ந்த’ மொழியுடன் முற்றாக மறைந்து போயிருக்கிறார்கள் (தில்லை நடேசன் 2015:20). அவர்களின் மிச்சசொச்சப் பரம்பரையினர், ஈழப்பாகதத்தின் திரிபான வேட்டுவ மொழியுடன், வேடர்களாக எஞ்சினர்.
நான்காவது, நாகரிகமுற்றிருந்த நாகர்கள் கீழைக்கரையில் பல வேளிர் சிற்றரசுகளின் தோற்றத்துக்கு வித்திட்டனர். அவர்களது கல்வெட்டுக்களும் தொல்லியல் சான்றுகளும் கிடைக்கும் இடங்களை வைத்து பத்மநாதன் நாகர்களின் சிற்றரசுகள் நிலவிய கீழைக்கரையின் 15 நாகர் ‘வேள்புலங்களை’ அடையாளப்படுத்துகிறார் (உரு. 02). அவை: வாகரை, கிரான், வந்தாறுமூலை, கல்லடிச்சேனை, குசலான்மலை, பாலாமடு, இலாவணை வேரம், வடகுடும்பிமலை, நெடியமடு, தாந்தாமலை, வெல்லாவெளி, நாவற்குடா, களுவாஞ்சிக்குடி, காரைதீவு, சங்கமன்கண்டி என்பனவாகும் (பத்மநாதன் 2016:462). இந்த நாகர்கள், தொடர்ச்சியாக இந்தியப்பெருநிலத்திலிருந்து புலம்பெயர்ந்த வெவ்வேறு இன மக்களுடன் ஊடாடியதன் ஒட்டுமொத்த விளைவே இன்றைய முழு இலங்கைப் பண்பாடு.
பொ. மு 2 முதல் பொ. பி 4ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் நாகர்களின் தமிழிக் கல்வெட்டுக்கள் புதிய கண்டுபிடிப்புகளாதலால் இவை தொடர்பான மேலதிக விவாதங்கள் மேற்கொள்ளப்படும் போதே இன்னும் விரிவான – திருத்தமான தகவல்களை நம்மால் பெற்றுக்கொள்ளமுடியும். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். ஏறாவூர்ப்பற்றிலுள்ள குசலானமலை, கல்லூடுபொத்தானை, விந்தனைப்பற்றின் கெனன்னகல (ஃகெனன்னே|கல, henannēgala), அக்கரைப்பற்று மொட்டையாகல் மலை, பாணமைப்பற்றின் போவத்தகல (|போவத்தே|கல, bōvattēgala) ஆகிய இடங்களில் கிடைக்கின்ற பிராமிக் கல்வெட்டுக்கள் மூலம் கீழைக்கரையை ஆண்ட ‘பத்து உடன்பிறந்தார்’ (|த`ச |பதிகன, dasa batikana) என்ற அரசகுலம் ஒன்றின் குறிப்பு கிடைக்கிறது (உரு.03). வியாளைப் பெருங்காட்டுக்குள் அமைந்துள்ள கொத்ததாமூகலயிலும் (கொ|ட்|ட|த_மூஃகல, koṭṭadæmūhela) இவர்களது கல்வெட்டு கிடைத்துள்ளது (Ranawella 2018:11).
லலாட தாதுவம்சம் எனும் பாலி இலக்கியத்தில் ‘கதிர்காமத்து பத்து சகோதர மன்னர்கள்’ என்று கூறப்பட்டவர்கள் இவர்களே. இவர்களில் பெரும்பாலானோரை துட்டகாமணியின் பாட்டன் கோதாபயன் கொன்றொழித்தான் என்கிறது தாதுவம்சம் (Vijitha Kumara, 2016:37). இந்தப் பதின்மரில் கடைக்குட்டியான கனிட்ட உபராசன் நாகன் (கனய உபர||ச ந|க, kanaya Uparajha Naga) என்பவனின் கல்வெட்டுக்கள் குசலான்மலையிலும் மொட்டையாகல் மலையிலும் கிடைத்துள்ளன (Paranavitana 1970:30-31,37). குசலானமலையில் நாகர்களின் தமிழிக் கல்வெட்டுக்களும் அண்மையில் அவதானிக்கப்பட்டிருப்பதால் பத்து சகோதரர்கள் பற்றிய பாலி நூல்களின் தரவுகளையும், நாக வேள்புலங்கள் பற்றிய சி.பத்மநாதனின் கண்டடைவுகளையும் ஒப்பிட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அடுத்ததாக, பொறிப்புச் சான்றுகள் மூலம் கிடைக்கும் மிக முதன்மையான நன்மை, மகாவம்சம் முதலிய பாலி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை கல்வெட்டுக்கள் மூலம் உறுதிப்படுத்திகொள்ள முடிகின்றது என்பதே. மகாவம்சம் சொல்லும் தீகவாபிமண்டலம் உண்மையான ஆட்சிப்பிரிவு தான் என்பதையும் அதன் இருப்பிடத்தையும் உறுதிசெய்ய உதவியது, அட்டாளைச்சேனைக்கு அருகே கிடைத்த குடுவில் பிராமிக் கல்வெட்டு ஆகும் (Paranavitana 1970:37 – Inscription No. 487). அதில் தீகவாபியில் வசிக்கும் வணிகர்கள் பற்றிய வரியொன்று இடம்பெற்றிருக்கிறது. (|தி|கவாபி[பொ]ரண வணி||ஜன, digavāpi poraṇa vaṇijhana). இலாஞ்சதீசன் (பொ. மு 119 – 109), வலகம்பாகு (பொ. மு 103 – 89) முதலிய மன்னர்களின் பெயர் பொறித்த பிராமிக் கல்வெட்டுக்கள் இராசக்கல் (உரு.04) முதலிய இடங்களில் பெறப்பட்டுள்ளன.
ஆனால், முன்பு அறியப்படாத புதிய மன்னர்கள் பலர் பற்றிய தகவல்களும் இப்பிராமிக் கல்வெட்டுக்களில் கிடைத்துள்ளன. உதாரணமாக, சாம்பன் (ச|ப Saba, சங்கதம்: சாம்|ப Samba) என்ற மன்னனைப் பற்றிய குறிப்பு அம்பாறை முவாங்கல்லிலும் வசப மகாராசன் (வஃகக மஃகர|ச Vahaka Maharaja, சங்கதம்: வ்ரு_^ச|ப மஃகாரா|சா, Vrshabha Mahārajā) என்ற மன்னனைப் பற்றிய குறிப்பு இலகுகலைக்கு அருகிலும் கிடைத்திருக்கின்றன. இவர்களைப் பற்றிய விபரங்களெதுவும் மகாவம்சத்திலோ வேறு பாலி இலக்கியங்களிலோ கூறப்படவில்லை (Ranawella 2018:11-15).
பொதுக் காலத்தை அண்மித்து கீழைக்கரையானது, “உரோகண” ஆட்சிப்பிரிவின் கீழ் அமைந்திருந்தது. உரோகண அரசு தொடர்பாக பாலி – சிங்கள இலக்கியங்கள் கூறுகின்ற பல தகவல்களை உறுதிப்படுத்தும் கல்வெட்டுக்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன. தாதாசிவன் எனும் ஆதிபாதன், முதலாம் உதய மன்னன் (797 – 801) அனுராதபுரத்தை ஆண்டபோது உரோகணத்தை ஆண்டான் என்கிறது மகாவம்சம் (49:10). வேகம்பற்று உகணைக்கருகே இராசக்கல் மலையில் தாதாசிவனின் எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று பெறப்பட்டுள்ளது (Ranawella 2016:80). சம்மாந்துறைக்குத் தெற்கே மல்வத்தை – வளத்தாப்பிட்டிக்கு இடையே கிடைத்த இன்னொரு கல்வெட்டு, அனுராதபுரத்தை ஆண்ட நான்காம் உதய மன்னன் காலத்தில் (946 – 954) பொறிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களிலிருந்தும் பல சுவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. சான்றாக, இலங்கையைக் கைப்பற்றிய சோழரின் ஆதிக்கம் திருக்கோவில் சாகாமம் வரை நீண்டிருந்ததை மகாவம்சம் கூறுகிறது. அதன்படி, சோழரை இலங்கையிலிருந்து அகற்றிய முதலாம் வி`சய|பாகு மன்னனின் படைகள், சாகாமத்திலும் அதற்கருகே அங்குமிங்கும் இருந்த சோழர் காவலரண்களை அழித்தொழித்தன (மகாவம்சம் 58:41-47). வெருகல் கங்கைக்குத் தெற்கே சோழர் காலக் கல்வெட்டெதுவும் கிட்டாத நிலையில், அண்மையில் மட்டக்களப்பு இடச்சுக்கோட்டையில் கிடைத்த சிதைந்த சோழர் காலத்துக் கல்வெட்டொன்று, மட்டக்களப்புப் பகுதி சோழராட்சியின் கீழ் இருந்தது என்ற மகாவம்சத் தகவலை உறுதிப்படுத்த உதவுகின்றது (பத்மநாதன் 2013:413-416).
மாமன்னன் இரா|சரா|சசோழன் (947-1014) காலத்தில் ஈழ மண்டலத்தின் மாப்பிசும்பு கொட்டியாரப் பகுதியிலிருந்த ஊர்களிலிருந்து நெல்லும் இலுப்பைப் பாலும் தஞ்சை இராசராசேச்சரத்துக்கு ஏற்றுமதியானதை இராசராச சோழனின் தஞ்சைப் பெருங்கோவில் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது (Krishna Sastri 1913:426-28). கல்வெட்டு சிதைந்துள்ளதால், அதிலுள்ள ஏனைய ஈழத்து ஊர்களின் பெயரை அறியமுடியவில்லை. ஆனால் அந்த மாப்பிசும்பு கொட்டியாரம் முன்பு அல்லை என்று அறியப்பட்ட இன்றைய சேறுவில் ஊரைக் குறிக்கும்[6] என்பதைச் சொல்கிறது நிசங்கமல்ல மன்னனின் (1187-1196) அல்லைச் சிங்களச் செப்பேடு (Fernando 1978:89-90). அதே தஞ்சைப் பெருங்கோவில் கல்வெட்டில் கூறப்படும் கணக்கன் கொட்டியாரம், சோழராட்சிக்கு முன், சிங்கள மன்னர் ஆட்சிக்காலத்தில் “கிணிகம் கொத்தசாரம்” (கிணி|கம் கொ|ட`சற, kiṇigam koṭasara) என்று அழைக்கப்பட்டதையும், அந்த நிருவாகப் பிரிவு, இன்று மறைந்துவிட்ட பழந்தமிழ் ஊரான திருமங்கலாய்க்கு மேற்கே மகாவலி கங்கைக் கரையோரமாக அமைந்திருந்ததையும், நான்காம் தப்புல மன்னனால் பொபி 929இல் பொறிக்கப்பட்ட அல்லைத் தூண் கல்வெட்டு குறிப்பிடுகின்றது (Ranawella 2004:25-29).
15ஆம் நூற்றாண்டு வரை, கீழைக்கரையின் உள்ளும் வெளியும் பொறிக்கப்பட்டுள்ள பல்வேறு தமிழ் – சிங்களக் கல்வெட்டுக்களும் கூட, இப்பிராந்தியத்தின் வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு உதவுகின்றன. கண்டி அரசின் முதல் மன்னன் சேனாசம்மத விக்கிரமபாகுவால் (1469 – 1511) கண்டி கடலாதெனிய விகாரையில் 1477ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ள சிங்களப்பாறைக் கல்வெட்டு (உரு.05) அவற்றில் முதன்மையானது. “மட்டக்களப்பு” என்ற பெயரை முதன்முதலில் குறிப்பிடும் வரலாற்று ஆவணம் இது தான்[7] (Codrington 1994:13-15). இதே விகாரையில் பொறிக்கப்பட்டுள்ள கம்பளை அரசன் நான்காம் புவனேகபாகுவின் (1344 – 1354) கல்வெட்டில் “கேசவ வண்ணக்கன்” என்றோர் அரச பிரதானியின் பெயர் இடம்பெறுகிறது (Paranavitana 1994:101-108). வண்ணக்கர் என்பது கீழைக்கரையின் கோவில்களில் இன்றும் முக்கிய இடம் வகிக்கும் நிர்வாகியின் பதவிப்பெயராக விளங்குகின்றது. வண்ணக்கன் என்ற பதவிப்பெயர் இடம்பெற்றுள்ள மிகப்பழைய கல்வெட்டு ஆதாரங்களில் ஒன்று, கடலாதெனிய விகாரைக் கல்வெட்டு ஆகும்[8]. இவ்வாறே பொலனறுவை, அனுராதபுரம், திருக்கோணமலை உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் கணிசமான கல்வெட்டுக்கள் கீழைக்கரை பற்றிய பல்வேறு தரவுகளைத் தம்வசம் வைத்திருக்கின்றன.
எவ்வாறெனினும், பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கீழைக்கரையில் தமிழ்க்கல்வெட்டுக்கள் மாத்திரமே கிடைப்பதுடன், கிடைக்கும் கல்வெட்டுக்களின் எண்ணிக்கையும் சடுதியாகக் குறைந்துவிடுகிறது. அவற்றில் 1519ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டு திருக்கோவில், தம்பிலுவில் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள கோட்டை மன்னன் ஆறாம் வி`சய|பாகுவின் (1509 – 1621) இரு கல்வெட்டுக்கள், ஐரோப்பியர் வருகையையும், அவற்றின் பின்னணியில் கீழைக்கரையில் ஏற்பட்ட கோட்டை அரசின் செல்வாக்கையும் கற்பதற்கு முதன்மையான ஆதாரங்களாகி விடுன்றன (Nevill 1885:04, இந்திரபாலா 1968:40-43, பத்மநாதன் 2013:429-446).
அதே போல், இன்று இருப்பிடம் தெரியாது மறைந்து விட்ட வீரமுனைச் செப்பேடுகளும், சம்மாந்துறைச் செப்பேடுகளும், கீழைக்கரையிலிருந்த மட்டக்களப்புத் தேசத்தோடு கண்டி அரசர்கள் கொண்டிருந்த உறவுக்குச் சான்றுகளாகும். இவற்றில் வீரமுனைச் செப்பேடு புவனசிங்க சுவாமி எனும் கண்டி அரசன் காலத்தில் வீரமுனைக்கு சிந்தாத்திரைப் பிள்ளையாரைக் கொண்டுவந்த பன்னிரண்டு மதுரைச் செட்டிமார்கள், ஒரு அரசகுமாரத்தியை அழைத்து வந்து மன்னனுக்குக் கொடுத்து, மல்வத்தை ஊரின் அருகே சில வயல் நிலங்களைப் பெற்றுக்கொண்டதைச் சொல்கிறது. நீதிமன்ற வழக்கொன்றில் ஆதாரமாக வழங்கப்பட்ட இச்செப்பேட்டின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானமை பற்றி பதிவுசெய்யும் கா.இந்திரபாலா இதை மெய்யான செப்பேடு என்று ஏற்றுக்கொள்ள, சி.பத்மநாதன் இதைப் போலி என்று மறுக்கிறார். போலி என்று நிரூபிக்க சி.பத்மநாதன் முன்வைக்கும் வாதங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியனவாகவே உள்ளன (இந்திரபாலா 1968:43-46; பத்மநாதன் 2013:457-470).
சம்மாந்துறைச் செப்பேடு, பொபி 1693ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இராசிங்க மகாராசாவால் இராமநாத பிராமணர் என்பவருக்கு சம்பாந்துறைக்கடுத்த பண்டித்தீவு வெளிப்பத்து கோணவட்டவான் வெளி, கோட்டான்பத்து என்பன கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது (இந்திரபாலா 1968:47-50; பத்மநாதன் 2013:470-78). இராசிங்க மகாராசாவை கண்டி மன்னன் இரண்டாம் இராசசிங்கனாக (1637 – 1687) அடையாளம் காண்கின்றனர் வரலாற்றறிஞர்கள். அவன் மறைந்தபின்னர் கண்டி அரசின் கீழிருந்த மட்டுக்களப்பு வன்னிபங்களால் இச்செப்பேடு எழுதி வழங்கப்பட்டிருக்கவேண்டுமென அனுமானிப்பார் சி.பத்மநாதன்.
இப்படி, பொறிப்புச் சான்றுகளைப் பலவிதமாகப் பயன்படுத்தி நாம் கீழைக்கரையின் வரலாற்றைக் கட்டியெழுப்ப முடியும். கூடவே இந்தக் கல்வெட்டாதாரங்கள் கண்டறியப்பட்ட இடங்களிலுள்ள இடிபாடுகள், கட்டடச் சிதைவுகள், கைவினைப்பொருட்கள், நாணயங்கள், சிலைகள் முதலியவற்றிலிருந்தும் பல்வேறு வரலாற்றுச் செய்திகளை நம்மால் ஊகித்துக்கொள்ளமுடிகின்றது.
தொடரும்.
அடிகுறிப்பு
[1] பாகதம் (பிராகிருதம் – ப்ராக்ரு_த, prākṛta ) என்பது, இந்தியத் துணைக்கண்டமெங்கும் பேச்சுவழக்கில் புழங்கிய பாகதம், மாகதி, சௌரசேனி, பாலி முதலான இந்தோ-ஆரிய மொழிகளைக் குறிக்கும் பொதுப்பதமாகும். பொதுவாகப் பாகதத்தை சங்கதத்தின் (சமற்கிருதம் – `சம்`ச்க்ரு_தம், saṃskṛtam) பேச்சுவழக்குகளாகச் சொல்வது வழக்கமெனினும் பாகத மொழிகள் சங்கதத்தை விடப் பழைமையானவை என்பதே பொருத்தமானது. பாகத மொழிகளில் ஒன்றான ஈழப்பாகதம், பாலிக்கு மிக நெருக்கமானது என்பதுடன், இலங்கைப் புலமையாளர்கள் மத்தியில் எலு என்றும், சிங்களப்பாகதம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. ஈழப்பாகதம் பொபி 7 – 8ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இன்றைய சிங்களமாக மாறத் துவங்கிற்று. (Ranesinghe 1900:1-10, Rajan 2008:51-52).
உதா: தர்மம். சங்கதம்: ||தர்ம – Dharma ; பாலி: ||தம்ம – Dhamma ; எலு: ||தஃகம – Dahama ; சிங்களம்: ||தஃகம், Daham.
[2] பரணவிதானவால் மட்டு – அம்பாறை மாவட்டங்களில் 166 பிராமிக் கல்வெட்டுக்கள் வாசித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. திருக்கோணமலையின் கொட்டியாரப்பற்றில் அவரால் 09 பிராமிக் கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டுள்ளன. (No.s 382-387, 1171-1173). இவற்றில் பெரும்பாலான கல்வெட்டுக்கள் தற்போது மீள்வாசிப்பைக் கோருவதையும், அதே இடங்களிலுள்ள சில தமிழிக் கல்வெட்டுக்கள் பரணவிதானவால் வாசிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளமையும் இலங்கை ஆய்வுலகில் சர்ச்சைக்குரிய விடயங்களாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. (Seneviratne, 1989:111-119 ; புஷ்பரட்ணம், 2003:112-150 ; பத்மநாதன், 2013:1-48)
[3] நாகர்களின் தமிழிக் கல்வெட்டுக்கள் பற்றிய இந்தப் புதிய கண்டுபிடிப்புகளை வைத்து சி.பத்மநாதனால் எழுதப்பட்ட நூல் (2016) இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றெனினும், தமிழ் வாசகர்களாலேயே கூட அத்தனை கொண்டாடப்படவில்லை. அதில் கூறப்பட்ட விடயங்கள் மிகப்புதுமையாக இருப்பதாலும், விளக்கப்படங்கள் தெளிவின்றி ‘மிகைபடக் கூறலோ’ என்று ஐயுறும் வண்ணம் அமைந்திருப்பதாலும் இது நேர்ந்திருக்கக்கூடும். ஆனால் அந்நூல் இலங்கை வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்ற ஒன்று; அதில் வருகின்ற புத்தம்புதுக் கருத்துக்கள் மீள்பார்வைகள் – விமர்சனங்கள் வழியே செம்மையூட்டப்படவேண்டுமேயன்றி முற்றாகத் தவிர்க்கப்படலாகாது. கடந்த பத்தாண்டுகளில் இலங்கைத் தொல்லியலில் நிகழ்ந்த புதிய பாய்ச்சலைத் திறம்பட ஆவணப்படுத்தியுள்ள இந்நூலை தமிழ் வாசகர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
[4] ‘பத’ (|பத, Bata) என்ற ஈழப்பாகதச் சொல்லை கல்வெட்டு அறிஞர்கள் ஆரம்பத்தில் “பரதர்” (||பரத, Bharatha) என்று வாசித்தார்கள். ஆனால் பரத என்ற சொல்லை பெரும்பாலான இடங்களில் அப்படியே பிராமிக்கல்வெட்டில் அக்கால மக்கள் குறிப்பிடும் போது, வேறு இடங்களில் பத என்று உருத்திரித்துக் குறிப்பிடவேண்டிய தேவை ஏன் எழுந்தது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. எனவே ‘பத’ என்பது வேறொரு தனித்த இனக்குழு ஆகவேண்டும் என்று முடிவுகாண்கிறார் பத்மநாதன் (2013:19-20). பத என்ற ஈழப்பாகதச் சொல்லை சங்கதத்திலோ பாலியிலோ பட்டன் (||ப|ட்|டர், Bhatta) என்று அல்லது பக்தன் (||பக்|த, Bhakta) என்று எழுத முடியும் (Paranavitana 1970:116). பக்தன் தமிழில் பத்தன் என்று ஆகும். இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் போன தலைமுறை வரை வழக்கில் இருந்த “பத்தன்” என்ற ஆட்பெயராக அச்சொல்லை வாசிக்க இயல்வது ஒரு ஆர்வமூட்டக்கூடிய ஊகமாகும்.
[5] உலகவரலாற்றில் குறுணிக்கற்காலம் (Mesolithic period), பெருங்கற்காலம் (Megalithic period) என்பவை மனித நாகரிக வளர்ச்சியில் கல்லாயுதங்கள், கற்கருவிகளின் அளவுகளில் மாற்றம் நிகழ்ந்த இரு வேறு காலகட்டங்களைக் குறிக்கும். குறுணிக்கற்கால மாந்தர் குறுகிய கல்லாயுதங்களையும் கற்கருவிகளையும் பயன்படுத்தியவர்கள். நாடோடிகளாகவும் வேடுவர் – சேகரிப்போராகவும் இருந்தவர்கள். இவர்கள் இலங்கையில் வாழ்ந்த சான்றுகள் இற்றைக்கு முன் 38,000 முதல் கிடைக்கின்றன (Perera 2014:29). ஆனால் பெருங்கற்கால மனிதர் பொமு 800ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு அறிமுகமானார்கள். இவர்கள் ஒப்பீட்டளவில் குறுணிக்கற்கால மாந்தரை விட நாகரிகமானவர்கள். பெருங்கற்களைப் பயன்படுத்தி ஈமக்கல்லறைகளை அமைக்கும் வழக்கம் கொண்டிருந்தார்கள். ஊர்களின் தோற்றம், மட்பாண்டம் முதலிய கைத்தொழில்கள், இரும்பின் பாவனை, வேளாண்செய்கை, என்பன பெருங்கற்கால மாந்தரின் சிறப்பியல்புகள். பண்பாட்டாலும் மொழியாலும் வேறுபட்டிருந்த குறுணிக்கற்கால மாந்தருக்கும் பெருங்கற்கால மாந்தருக்கும் இடையே இனக்கலப்பு ஏற்பட்டு குறுணிக்கற்கால மாந்தர் அவரிலும் மேம்பட்ட பெருங்கற்கால மாந்தருடன் கலந்து மறைந்தார்கள் என்பது மானுடவியல் கோட்பாடு (பத்மநாதன் 2013:25-29).
[6] சேறுவில் அல்லைக் கிராமத்தின் உள்ளூர்க் குடிமகனொருவர் 1963இல் பழைய கட்டட இடிபாடொன்றுக்கு அருகே மண்ணை அகழ்ந்தபோது பெறப்பட்ட அல்லைச் செப்பேடு, நீலாப்பளை விகாரத்து தேரர் மூலம் தனக்குக் கிடைத்ததாகச் சொல்கிறார் ஆய்வாளர் பெர்னாண்டோ (Fernando 1978:73). அச்செப்பேட்டில் “தும்பாறை” என்றோர் இடம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்பெயரிலமைந்த குளமொன்று இன்றும் சேறுவில் பகுதியில் அமைந்திருக்கிறது.
[7] இக்கல்வெட்டு, கண்டிப்பிராந்தியங்களும் மட்டக்களப்பு, திருக்கோணமலை, மாதோட்டம் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதியும் புதிதாக உருவான கண்டி அரசின் உடனடி ஆளுகைக்கீழ் வந்ததைச் சொல்வதாகலாம். எவ்வாறெனினும் அடுத்த இருநூறாண்டுகளுக்கு வடக்கே யாழ்ப்பாண அரசும், கிழக்கே வன்னிப அரசுகளும் பலம் பெற்றுத் திகழ்ந்தன என்பது வேறு வரலாற்று ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது. குறிப்பாக இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட நாற்பதாண்டுகளில் மட்டக்களப்பின் தென்பகுதி கோட்டை அரசின் ஆளுகையின் கீழ் இருந்ததைச் சொல்கின்றன தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் கல்வெட்டுக்கள் (பார்க்க: மேலது).
[8] கண்டி அரசின் காலத்தில் அரச கருவூலத்தை மேற்பார்வை செய்யும் “வண்ணக்கு நிலமை” என்றோர் பதவி அரண்மனையில் காணப்பட்டிருக்கிறது. நாணயங்களின் தரத்தைச் சோதிக்கும் “வண்ணக்கர்கள்” பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களும் சொல்கின்றன. வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார், விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் முதலிய பெயர்களில் சங்ககாலப் புலவர் வாழ்ந்துள்ளனர். தமிழகத்தின் ஈரோடு அறச்சலூரிலுள்ள பொ.பி 2ஆம் நூற்றாண்டு இசைக்கல்வெட்டில் மணியவண்ணக்கன் என்றொருவர் குறிப்பிடப்படுகிறார். இந்தப் பின்னணியிலேயே கீழைக்கரைக் கோவில்களின் கருவூலச் செல்வங்களைப் பாதுகாத்து மேற்பார்வை செய்யும் வண்ணக்கர்கள் வழக்கில் வந்திருக்கவேண்டும்.
உசாத்துணை
- இந்திரபாலா, கா. (1968). “ஈழநாட்டுத் தமிழ்ச் சாசனங்கள்”, சிந்தனை, மலர் 2, இதழ் 1-2, பப.35-50.
- தில்லைநடேசன், ச. (2015). பண்டைய இலங்கையின் இனக்குழுக்களிலிருந்து இனங்களின் உருவாக்கம். ஆக்காட்டி, இதழ் 09, பப.16-23.
- பத்மநாதன், சி. (2013). இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் – II. கொழும்பு: இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.
- __________________. (2016). இலங்கைத் தமிழர் வரலாறு: கிழக்கிலங்கையில் நாகரும் தமிழரும் (கிமு 250 – கிபி 300). கொழும்பு: இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.
- புஷ்பரட்ணம், ப. (2003). தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு. யாழ்ப்பாணம்: பவானி பதிப்பகம்.
- Codrington, H.W. (1994). The Gadaladeniya Inscription of Senasammata Vikramabahu. in Codrington, H.W., & Paranavitane, S. (eds.) Epigraphia Zeylanica, Volume 4, pp. 8-15.
- Coperahewa, S. (2022). The lexicography of Sinhala. International Handbook of Modern Lexis and Lexicography, Springer.
- Fernando, P.E.E. (1978). Allai Copper Plate Charter of King Nissankamalla, The Sri Lanka Journal of the Humanities, Vol. IV(1,2), pp.73-91.
- Mahadevan, I. (2010.06.24). An epigraphic perspective on the antiquity of Tamil. The Hindu. Retrieved from https://www.thehindu.com.
- Nevill, Hugh. (1885 September – October). The Taprobanian, Bombay:London Education Society’s Press.
- Paranavitana, S. (1970). Inscriptions of Ceylon: Volume I, Ceylon: Department of Archaeology.
- _________________. (1994). Gadaladeniya Rock Inscription of Dharmmakirtti Sthavira. in Codrington, H.W., & Paranavitane, S. (eds.) Epigraphia Zeylanica, Volume 4, pp. 90-110
- Perera, H.N. (2014). Prehistoric Sri Lanka. Journal of the Royal Asiatic Society of Sri Lanka, Vol. 59, No. 2, pp. 23-41.
- Rajan, K. (2008). Situating the Beginning of Early Historic Times in Tamil Nadu: Some Issues and Reflections, Social Scientist, Vol. 36, (1/2), pp. 40 -78.
- Ranawella, G.S. (2004). Inscriptions of Ceylon, Vol V, pt II, Sri Lanka: Department of Archaeology.
- __________________. (2018). History of the Kingdom of Rohana: From the Earliest Times to 1500 AC. Colombo: Ministry of Higher Education and Department of Archaeology.
- Ransinghe, W.P. (1900). The Sinhalese Language: Its Origin and Sructure, Colombo: Author.
- Krishna Sastri, H. (1913) Inscription No. 92. On the South Wall Third Tier. South Indian Inscriptions, Vol. II:(04), p. 424 – 428.
- Seneviratne, S. (1989). Pre-state chieftains and servants of the state: a case study of Parumaka. Sri Lanka Journal of Humanities, XV, pp. 99-131.
- Vijitha Kumara, S. (2016). A Critical Edition of the Nalāṭa Dhātuvaṃsa: Chapter III. WWJMRD 2016; 2(2), pp.32-43.