இலங்கையில் இறக்குமதியாகும் பால்மாவின் விலை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முதல் 380 /= ரூபாவாக இருந்த 400 கிராம் பால்மா இன்று 1160/= வரை அதிகரித்துள்ளது. [ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகரிப்பு]. இது சாதாரண மக்கள் நுகரமுடியாத அதிகரிப்பாகும். அத்துடன் வழமையாக கிராமத்தின் பெட்டிக் கடைகளிலும் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பால் மாவை நகரங்களின் பிரதான பல்பொருள் அங்காடிகளிலும் பெறமுடியாது மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். கடந்த பல மாதங்களாகவே நாடு முழுவதும் பால் மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. உள்நாட்டில் உள்ள பசுக்களில் இருந்து பெறப்படும் திரவப் பால் கூட கிடைக்க முடியாத நிலையே பல இடங்களில் நிலவுகிறது. பல இடங்களில் அதிக விலையில், அதாவது 170/= ரூபா வரையில் திரவப் பால் விற்கப்படுவதையும், விற்பனை நிலையங்களுக்கு வரும் பால் சில மணி நேரத்தில் முடிவடைவதையும் காண முடிகிறது. குறைந்த பட்சம் இரண்டு வேளை பாலையோ, பால்தேநீரை அருந்திய பல இலங்கை மக்கள் அதனை ஒரு வேளையாக குறைத்தோ அல்லது முற்றுமுழுதாக அருந்துவதை நிறுத்தியோ உள்ளனர். ஏனைய புரதம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகளை வழங்கும் உணவுகளின் தட்டுபாடு நிலவும் இந்த காலத்தில் பால் நுகர்வின் வீழ்ச்சி ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் இதனால் கணிசமாகப் பாதிக்கப்படப் போகின்றனர்.
மனிதனின் மிக முக்கியமான உணவுப் பொருளாகக் காணப்படும் பால் தொடர்பான, பல விடயங்களை இந்தக் கட்டுரைத் தொடர் ஆராய்கிறது. பாலின் அடிப்படைகள், உலக பாலுற்பத்தியின் போக்குகள், அதன் நுண் அரசியல், இலங்கையின் பாலுற்பத்தித் துறையின் கூறுகள் மற்றும் மக்களின் பால் நுகர்வு தொடர்பான விடயங்களை இந்த தொடரில் உள்ளடக்கியுள்ளேன். கட்டுரையாளனாகிய நான் கால் நடைவைத்தியர் என்பதால் என்னுடைய அனுபவத்தையும் துறை சார்ந்த அறிவையும் பயன்படுத்தியதோடு இலங்கை மற்றும் தமிழகத்திலுள்ள கால்நடை உற்பத்தித் துறையின் அதிகாரிகளினதும் பல்கலைக்கழக பேராசிரியர்களினதும், கால்நடை பண்ணையாளர்களின் கருத்துகளையும் உள்ளடக்கியுள்ளேன். இங்கு பால் என நான் குறிப்பிடுவது மாடு, எருமை, ஆடு போன்ற விலங்குகளில் இருந்து மனிதன் பயன்படுத்தும் பாலாகும்.
பாலும் மனிதனும்
இயற்கையில் மனிதன் மற்றும் பல விலங்குகள் தமது இளம் பருவங்களுக்கு ஊட்டுவதற்காக, பெண் விலங்குகளின் முலைச் சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் சுரப்பே பால் எனப்படுகிறது. இந்த வகை விலங்குகள் முலையூட்டிகள்/பாலூட்டிகள் [mammals]என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஏனைய விலங்கு வகைகளை போலல்லாது மனிதன் பசு, எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, ஒட்டகம், யாக் போன்ற பல விலங்குகளின் பாலை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து நுகர்கின்றான். இந்த விலங்குகள் புற்களை பாலாக மாற்றக் கூடிய உணவுக் கால்வாய் தொகுதியை உடையவை. பால் பலவித ஊட்டச்சத்துகளை கொண்டமைந்த ஒரு நிறையுணவாகும். இது உடலின் வினைத்திறனான செயற்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டவும் தேவையான விற்றமின்கள், புரதம், கொழுப்பு மற்றும் கல்சியம் போன்ற கனியுப்புகளையும் சிறப்பான விகிதத்தில் கொண்டமைந்துள்ளது. இறைச்சி, முட்டை போன்ற ஏனைய விலங்குணவுகளைப் போலன்றி சமய, சமூக வேறுபாடுகளின்றி சகலராலும் நுகரப்படும் பால், மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை சகல வாழ்க்கைப் பருவத்திலும் பயன்படும் ஒரு அற்புத உணவாக விளங்குகிறது. பாலைப் பொறுத்த வரை நேரடியாக திரவப் பாலாகவும், உருமாற்றம் செய்யப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களாகவும் மனிதனால் பயன்படுத்தப்படுகிறது. பால் ஒரு உயிர்த் திரவம் என்றபடியால் கறந்த பாலை நீண்ட நேரத்துக்கு வைத்திருக்க முடியாது. நேரம் செல்லச் செல்ல நோய்க் கிருமிகளின் அளவு அதில் அதிகரிக்கும் என்பதால் நீண்ட காலம் பாலை வைத்திருக்க பல நுட்பமான முறைகளை கையாள வேண்டும்.
பாற்பொருட்களின் உருவாக்கம் மற்றும் வியாபாரம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் கட்டாக்காலிகளாக காடுகளில் திரிந்த விலங்குகளை பழக்கப்படுத்திய மனிதன் அவற்றிலிருந்து பாலையும், பாலிலிருந்து தயிர், வெண்ணெய், நெய் போன்ற பல உணவுகளையும் உருவாக்கி உண்ணத் தொடங்கியிருந்தான். தொழில்நுட்பம் மேம்படத் தொடங்க குறிப்பாக குளிர்ப்பதன வசதிகள் உருவாக, நீண்ட காலம் வைத்திருக்க தக்க பாற் பொருட்கள் உருவாக்கப்பட்டன. பால் அதிகமாகக் கிடைக்கும் பருவத்தில் பால் பவுடர் போன்ற பல பொருட்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு பால் கிடைக்காத பருவத்தில் பயன்படுத்தப்பட்டன. சர்வதேச போக்குவரத்து வசதிகள் மேம்பட அவை உலகில் பல நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டன. முன்பு அருகருகே இருந்த வீடுகளுக்கு மட்டும் மிதமிஞ்சிய பால் விற்பனை செய்யப்பட்ட நிலை மாறி, உலகில் ஒரு மூலையில் உற்பத்தியாகும் பால் பொருட்கள் மில்லியன் கணக்கில் இன்னொரு மூலைக்கு விற்பனையாகும் ஒரு மிகப் பெரிய வணிகமாக பால் வணிகம் மாறியுள்ளது. இன்னும் விளக்கமாகச் சொன்னால் ஆரம்ப காலத்தில் தமது வீடுகளில் வளர்க்கப்படும் ஓரிரண்டு மாடுகளை விவசாயத்தில் பயன்படுத்தி, வைக்கோல் போன்ற விவசாயக் கழிவுகளையும், அங்கு வளரும் புற்களையும் மனிதன் பயன்படுத்தும் உணவுக் கழிவுகளையும் உணவாக வழங்கி அவற்றின் மூலம் கிடைக்கும் பாலை நுகரும் காலம் மாறி, மில்லியன் கணக்கான பணத்தைச் செலவிட்டு அதிக பால் தரக்கூடிய கால்நடை இனங்களை உருவாக்கி, சகல வசதிகளும் கொண்ட பிரமாண்டமான தொழிற்சாலைப் பண்ணைகளை அமைத்து, பல ஆயிரம் ஏக்கரில் செய்யப்படும் தீவனப் பயிர்களையும், பெருமளவு வர்த்தக விலங்குணவுகளையும் உணவாக வழங்கி, செய்யப்படும் மிகப் பெரும் வணிகமாகும். பல ஆயிரக் கணக்கான நேரடி, மறைமுகத் தொழில்களை தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ள பெறுமதியான தொழிலாகவும் இது மாறியுள்ளது. பல நாடுகள் இந்தக் கால்நடைகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் பால் வருமானத்தை நம்பியே இருக்கின்றன.
பால் நுகர்வின் அவசியம் மற்றும் ஊட்டச் சத்து தொடர்பான விடயங்களை அரச, தனியார் சுகாதார அமைப்புக்களும் பால் வணிக நிறுவனங்களும் மக்களுக்கு தொடர்ச்சியாக நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் தெளிவுபடுத்துவதன் காரணமாக ஆரம்ப காலத்தில் உலக மக்கள் எல்லோராலும் நுகரப்படாமல் இருந்த பால் இன்று அதிகளவாகப் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ச்சியாக ஏற்படும் சனத்தொகை அதிகரிப்பின் காரணமாக தேவைப்படும் பாலும் அதிகரித்துள்ளது. அத்துடன் மிகச் சிறந்த பால் உற்பத்தி, விநியோக, விற்பனைக் கட்டமைப்புகள் உலகெங்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் இலகுவாக பால் பொருட்களை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை உள்ளது.
பால் நுகர்வின் பயன்பாடுகள்
பாலில் சதவீதம் 87 % வரை தண்ணீர் உள்ளது. மிகுதியில் புரதம், omega-3 போன்ற கொழுப்பமிலங்கள், கல்சியம், பொஸ்பரஸ், விற்றமின் A, D, B, B12, பொட்டாசியம், செலேனியம் என பலதரபட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம் உடல் வளர்ச்சிக்கும், நொதியங்களின் உருவாக்கத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், தேய்வடைந்த கலங்களை திருத்தவும் பயன்படுகிறது. பாலிலுள்ள casein மற்றும் whey புரதங்கள் முழுமையான புரதங்களாகும் [complete proteins] அதாவது அவை எல்லாவிதமான அமினோ அமிலங்களையும் கொண்டமைந்தவை.
பாலிலுள்ள விற்றமின் D, கல்சியம், பொஸ்பரஸ் என்பன எலும்பு வளர்ச்சிக்கும் தசைத் தொழிற்பாட்டுக்கும் அவசியமானவை. வயதானவர்களில் ஏற்படும் osteoporosis போன்ற நோய்களை தடுக்க குணமாக்க அதற்குரிய சரியான விகிதத்தில் கல்சியம், பொஸ்பரஸ் மற்றும் விற்றமின் D நிறைந்த பால் கலவைகள் சந்தையிலுள்ளன. மேலும் குழந்தைகளுக்குரிய பால், பால் சேர்வைகள், மாற்றுப் பெறுமதிசேர் பால் பொருட்கள் என பல வகைவகையாக, வயதுப் பிரிவுக்கு ஏற்ப சந்தையில் கிடைக்கின்றன. உலகிலுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை தீர்ப்பதில் இந்தப் பால் பொருட்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன என்றால் அது மிகையாகாது. பல்வேறு நோய்களையுடையவர்களுக்கு பிரத்தியேகமாக பயன்படக்கூடிய கொழுப்பு நீக்கிய, கொழுப்பு குறைத்த பால் மா [skimmed milk/ nonfat milk] வகைகளும் உள்ளன. உடல் வலுவூட்டும், உடல் வளர்ச்சி குறைந்தவர்களுக்குரிய அதிக ஊட்டச் சத்துள்ள பால் வகையும் [ whey protein powder] சந்தையில் உள்ளது. இறைச்சி, மீன் போன்ற ஏனைய விலங்கு உணவுகளை நுகராத மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் தான் சரியான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இந்தியாவில் அதிகமாக உண்ணப்படும் விலங்கு சார் உணவு பால் தான்.
எதிர்ப்பு வாதங்களும் எதிர்மறை விளைவுகளும்
எனினும் தரமற்ற பால் மற்றும் பால் பொருட்களின் நுகர்வு தொடர்பாக பலதரப்பட்ட வைத்திய நிபுணர்களின் எதிர்மறையான எச்சரிக்கையும் இல்லாமலில்லை. விலங்குகளின் பால் அவற்றுக்கே பொருத்தம் மனிதனுக்கு சரிவராது என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது. எனினும் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் விலங்குகளின் பாலை அருந்துகிறான் என்பது குறிப்பிடத்தக்கது. கெட்டுப்போன தரமற்ற பால் பல நோய்களுக்கு காரணமாகிறது. வியாபார ரீதியாக அதிக இலாபத்தை பெற, பாற் பொருட்களில் சேர்க்கப்படும் பதார்த்தங்கள் சிலவும் மனித சுகாதாரத்தை பாதிக்க கூடியன என்பதை மறுக்கவும் முடியாது. [சீனாவில் ஏற்பட்ட melamine சம்பவம் இதற்கு நல்ல உதாரணம்] மனிதர்களில் கணிசமான அளவினருக்கு lactose intolerance எனும் பால் ஒவ்வாமை நிலையும் ஏற்படுகிறது. அதாவது பாலிலுள்ள lactose சமிபாடடைய முடியாத நிலையாகும். அவர்கள் பாலை அருந்த முடியாது என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும். பாலைப் பொறுத்த வரையில் நான் முன்பு கூறியது போல விலங்குகளின் இளம் பருவங்களுக்கு உணவூட்டவே தேவைப்படுகிறது. ஒரு குறித்த வயதின் பின் அவை வேறு உணவுக்கு மாறி விடுகின்றன. அவற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்து அந்த பாலில் குறைவது மட்டுமின்றி ஒரு குறித்த வயதின் பின் பாலைச் சமிபாடு அடையச் செய்யும் லக்டேஸ் போன்ற நொதியங்களின் அளவும் குறைவடைந்தும் விடும். மனிதனுக்கும் இதே நிலைமைதான் ஆரம்ப காலத்தில் இருந்தது. எனினும் தொடர்ச்சியாக பாலை குறிப்பாக விலங்குகளின் பாலை அருந்த அருந்த, மனித மரபணுவில் லக்டோஸ் எதிர்ப்பு நிலை மாற்றமடையத் தொடங்கி, இன்று மனிதரில் கணிசமான தரப்பினருக்கு பாலை அருந்தக் கூடிய நிலை உள்ளது. எனினும் குறித்தளவு சீனர்கள் போன்ற மக்கள் கூட்டங்களில் இன்றும் இந்த எதிர்ப்பு நிலையை அவதானிக்க முடிகிறது. இந்த உலகிலுள்ள உயிரினங்களில் மனிதர்கள் மட்டும் தான் வாழ்நாள் முழுதும் எதோ ஒரு வகையில் பாலை அருந்துகிறார்கள்.
உலக பால் நுகர்வு
உலகத்தில் வளர்ந்த நாடுகளில் தனி நபர் ஒருவர் வருடாந்தம் 200 லீட்டருக்கு அதிகமாக பாலை அருந்துவதோடு, வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளோர் 40 லீட்டருக்கும் குறைவாகவே பாலை அருந்துகின்றனர். சராசரி மனிதர் அருந்தக் கூடிய அளவாக நாற்பது லீட்டரை சுகாதார அமைப்புகள் நிர்ணயித்துள்ளன. இலங்கையில் பல வருடங்களாக நாற்பதுக்கும் குறைவாகவே சராசரி பால் நுகர்வு காணப்பட்ட போதும் நீண்ட முயற்சியின் பலனாக தற்போது 58 லீட்டர் வரை அதிகரித்துள்ளது. [தகவல்- கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள வெளியீடு-2019 ]. ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் உள்ள மக்கள் ஏனைய நாடுகளை விட அதிக பாலை நுகர்கின்றனர். அண்மைக்காலமாக ஆசிய நாடுகள் ஆபிரிக்க நாடுகளிலும் பாலின் நுகர்வு அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. ‘’பொதுவாக எமது கீழைத்தேய நாடுகளிலுள்ளவர்கள் பாலைக் குடிகின்றனர். மேலைத்தேய நாடுகளில் உள்ளவர்கள் பாலை உண்கின்றனர்.’’ அதுதான் வித்தியாசம்.
இன்றைய உலக வருடாந்த பால் உற்பத்தி 906 மில்லியன் தொன் லீட்டர் ஆகும். இந்தியாதான் உலகின் முதன்மை உற்பத்தியாளர். உலக பாலுற்பத்தியில் 17 சத வீதத்தை இந்தியா கொண்டுள்ளது. [200 மில்லியன் தொன் லீட்டர்]. 1970 களில் இருந்து இந்திய அரசு Dr. வர்கீஸ் குரியன் அவர்களின் தலைமையில் தொடங்கிய வெண்மைப் புரட்சியின் [white revolution- operation flood] அடிப்படையில் இந்த முதல் நிலையை அடைந்துள்ளது. [இந்தியாவின் பால் தொடர்பான வெற்றிக் கதையை தனி ஒரு அத்தியாயத்தில் காண முடியும்] இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளும் தமது உற்பத்தியின் பெரும்பாலானவற்றை உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுத்துகின்றன. அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் மிகை பாலுற்பத்தி நாடுகள். உலக பால் ஏற்றுமதி வர்த்தகத்தை இவை செய்கின்றன. திரவப் பாலாகவும். பால் பவுடராகவும் ஏனைய மதிப்பு கூடிய பொருட்களாகவும் ஏற்றுமதி செய்கின்றன. உலக மொத்த பால் உற்பத்தியில் ஏற்றுமதிப் பால் 5 – 8 வீதமாக உள்ளது. நெஸ்ட்லே, பொண்டீரோ போன்ற பல தனியார், கூட்டுறவு அமைப்புகள் ஊடாக பால் விற்பனையாகிறது. சீனாதான் உலகின் பாலுற்பத்திகளை அதிகம் [20%] இறக்குமதி செய்கிறது. அதனைத் தொடர்ந்து ஜெர்மனி, ரஷ்யா, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் சில அரபு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் பால் பொருட்களை இறக்குமதி செய்கின்றன. இந்த ஏற்றுமதி இறக்குமதிகள் ஒரு வித சர்வதேச விலைக்கோரல் முறைகளின் ஊடாக இடம்பெறுகின்றன. மேய்ச்சலுக்குரிய இடப் பற்றாக்குறை கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம், பெற்றோலியப் பொருட்களின் விலையேற்றம் காரணமான போக்குவரத்துக் கட்டண உயர்வு, காலநிலை மாற்றம் எனப் பல காரணிகள் சர்வதேச பால் வளத் துறையைப் பாதிக்கின்றன. ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனி அரசியல், சமூக, புவியியல் காரணிகள் உள்ளன. அண்மைய கொவிட் பெருந்தொற்றும் பாலுற்பத்தி, பால் வணிகம் மற்றும் பால் நுகர்வுச் செயற்பாட்டை தலை கீழாக மாற்றியுள்ளது.
இலங்கையானது நியுசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பாலை, பால் பவுடராக இறக்குமதி செய்கிறது. ஆரம்ப காலங்களில் ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் இருந்தும் பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இலங்கையில் பால் தேவையில் 40 வீதம் உள்நாட்டு பாலில் இருந்தும் 60 வீதம் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பால் பொருட்களில் இருந்து நிறைவு செய்யப்படுகிறது.
அதிகரித்துள்ள சீனர்களின் பால் நுகர்வு
உலக சந்தையில் அண்மைக் காலமாக சீனர்களின் அதிகரித்த பால் பொருட்களின் நுகர்வு காரணமாக அதிகளவு அந்த நாடு இறக்குமதியை செய்கிறது. [சீனர்களில் கணிசமானவர்களுக்கு லாக்டோஸ் எதிர்ப்பு நிலை உள்ளது] இது ஏனைய நாடுகளுக்கு செல்லும் பாலின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனர்கள் தமது பால் உற்பத்தி துறையை மிக விரைவாக மேம்படுத்தி வருகின்றனர். இலங்கையும் பால் இறக்குமதி மூலம் நாட்டுக்கு வெளியே செல்லும் பணத்தை தடுக்க பல முயற்சிகளை எடுத்து வருவதை காண முடிகிறது. குறித்த காலத்தில் பாலுற்பத்தியில் தன்னிறைவு காண, திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பால் நுகர்வு தொடர்பான விடயங்களை தொடர்ந்து வரும் வாரங்களில் ஒவ்வொன்றாக விரிவாக ஆராய்வோம்.
தொடரும்.