கோட்டைகளுக்குப் பதிலாக பாதைகள்
Arts
26 நிமிட வாசிப்பு

கோட்டைகளுக்குப் பதிலாக பாதைகள்

October 29, 2022 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

1815 HENRY MARSHALL'S CEYLON A GENERAL DISCRITOPN OF THE ISLAND 1846

1818 இல் கிளர்ச்சி வெடிக்கும் வரை தமக்கு சரியான தகவல் கிடைக்காததற்கும், கிளர்ச்சி  வெடித்தபின்னர் அதனை நசுக்குவதற்கும்  தாம் மிகுந்த சிரமப்பட்டதற்கும் இரு காரணங்களை பிரித்தானியர் இனம்கண்டனர். ஒன்று கண்டியை சிறப்பாக கண்காணித்து நிர்வகிப்பதற்கு மலைப்பாங்கான கண்டி பிரதேசத்தினை பாதைகளால் இணைக்கவேண்டும். மற்றையது தமக்கு விசுவாசமான உள்ளூர்த் தலைவர்களை உருவாக்கி தமது நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும்.  1818 இல் கிளர்ச்சியை அடக்குவதற்கு தமது படைகளை அனுப்பியதன் மூலம் கண்டி இராச்சியத்தில் அதுவரை தொடர்பு இல்லாதிருந்த  பகுதிகள் பற்றிய  புவியியல் அறிவு அவர்களுக்கு ஓரளவு கிடைத்தது. உண்மையில் கண்டிய மன்னர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பெரும்பாலான மாட்டுவண்டி, குதிரை வண்டி பாதைகளை கைவிட்டிருந்தனர். வெல்லஸ்ஸ கிளர்ச்சி நசுக்கப்பட்ட பின்னர் உடனடியாக உள்ளூரில்  தகவல் வழங்குபவர்களையும் பிரிட்டிஷ் அளவையாளர்களையும் பயன்படுத்தி  தீவின் வரைபடத்தை முழுமைப்படுத்தி, பின்னர் மத்திய மலைநாட்டை இணைக்கும் சாலைகளின் வலையமைப்பை பிரித்தானியர் உருவாக்கினர். இது அவர்களது இராணுவக் கட்டுப்பாட்டை ஸ்தீரப்படுத்தியதுடன்,  பெருந்தோட்ட  உற்பத்தியை சாத்தியமாக்கியது.

ஹப்புத்தளை பாதை

அப்போது கொழும்பில் இருந்து கண்டிக்கு வருவதற்கான பிரதான வழிகள்தோறும்  கோட்டைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இவற்றைப் பராமரிப்பதற்கு கணிசமாகச்  செலவானது. அத்துடன் பிரயாணம் மிகவும் சிரமமானதாக இருந்தது. எனவே ஆளுநர்களான ரொபர்ட் பிரவுன்றிக்கும்(Robert Brownrigg), எட்வர்ட் பார்ன்பார்ன்ஸும் (Edward Barnes) கொழும்பையும்  கண்டியையும்  இணைக்கும்  சாலையை இராணுவ நோக்கத்துக்காக  – அப்போது நிலவிய ராஜகாரிய முறையைப்பயன்படுத்தி இலங்கையர்களின் உடலுழைப்பை இலவசமாகக்கொண்டு – வேகமாக நிர்மாணித்தார்கள். அவர்களுக்கு  தோமஸ் ஸ்கின்னர் என்ற திறமைமிக்க இராணுவப் பொறியியலாளர் கிடைத்திருந்தார்.

ஆனால் அப்போது  குதிரை வண்டிகளும் மாட்டுவண்டிகளும் செல்லக்கூடிய  இராணுவப் பாதைகளைத் தவிர இலங்கையில்  அமைக்கப்பட்ட ஏனைய  சாலைகள்  உண்மையில் காடுகளை  வெட்டி  சுத்தம் செய்த செப்பனிப்பனிடாத  மாட்டுவண்டிப் பாதைகளாகவே இருந்தன. அவையூடாக   வறட்சி  காலங்களில் மாத்திரம் கரடுமுரடான வண்டிப் போக்குவரத்திற்கு சாத்தியமாயிருந்தது; மழைக்காலங்களில்   பயணம் செய்யமுடியாதிருந்தது. இதன் விளைவாக வண்டிகளை விட தவளம் மந்தை (பொதி சுமக்கும் கழுதை/ எருது கூட்டம்)  இப் பாதைகளில்  பயன்படுத்தப்பட்டது.  இதற்கு முன்னர் இருந்த நிலைமை இதை விட மோசமானது. உதாரணமாக 1800 ஆம் ஆண்டில் கரையோரப் பகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்த கவர்னர் ஃபிரடெரிக் நோர்த் தனது பரிவாரத்தின் ஒரு பகுதியாக 160 பல்லக்குகளையும்  ஏராளமான யானைகளையும்  கொண்டுச் செல்ல  வேண்டியிருந்தது.

1818 கிளர்ச்சியின் பின்னர் கண்டிய சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட  சில முக்கிய மாற்றங்கள்

ரதல சாதியினர்

அதுவரை கண்டிய சமூகத்தின் சாதி கட்டமைப்பில் ‘ரதல’ (Radala) சாதியினரே அரசனுக்கு அடுத்த உயர் நிலையில்  இருந்தனர். கரையோரச் சிங்களவரிடையே மிக உயர்ந்த சாதியினராக கருதப்படும் கொயிகம (Goyigama) சாதியினர் இரண்டாம்  நிலையிலேயே இருந்தனர்.

ரதல சாதியினருக்கு தொடர்ந்தும் முக்கியமான அந்தஸ்து கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் 1818 கிளர்ச்சியின் பின்னர் ரதல சாதியை சேர்ந்த பிரதானிகள் அநேகமாக அனைவரும் கொல்லப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். அதன் பின்னர் கொயிகம உயர் சாதியினர் நிர்வாகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும் அவர்கள் ரதல சாதியினரைப்போலப்போல அதிகாரம் மிக்கவர்களாக இருக்கவில்லை, பிரித்தானியரின் சேவகர்களாவே மாற்றப்பட்டனர்.

கண்டி மன்னன் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட கொடூரமான தண்டனை வழங்கும் முறை தடுக்கப்பட்டது. கண்டி மன்னராட்சியின் கீழ் சமூக ஒழுங்கைப் பேணுவதற்கும் அரசனின்  அரசியல் அதிகாரத்தினை வெளிப்படுத்துவதற்கும்  கொடூரமான தண்டனைகள் வழங்குவது ஒரு வழிமுறையாக இருந்தது. இம்முறை மாற்றப்பட்டது.  சாதி அந்தஸ்துக்கு ஏற்ப தண்டனை விதித்தல், தலையை வாளால் அறுத்தல்,  கழுமரம் ஏற்றுதல், தெருக்களில் வைத்து சாட்டையால் அடித்தல் போன்ற தண்டனைகள் தடைசெய்யப்பட்டு  கடும் தண்டனையாக  தூக்குத்தண்டனை விதிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

1815 இல் கண்டியப் பிரதானிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி பெளத்த மதத்திற்கும்  பெளத்த மத பீடத்துக்கு கண்டிய சமூகத்தில் முன்னர் இருந்த அந்தஸ்து 1823வரை  தொடர்ந்தது. உதாரணமாக வெஸ்லியன் மிஷனால் கண்டி மாகாணங்களில் ஒரு பாடசாலையை திறப்பதற்கு முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் – இன்னும் போதுமான அளவு அமைதி நிலவவில்லை  என்ற காரணம் காட்டப்பட்டு நிராகரிக்கப்பட்டது. மற்றுமொரு சந்தர்ப்பத்தில்,  பௌத்த பிக்கு ஒருவர் பௌத்தத்தை கைவிட்டு கிறிஸ்தவ மதத்தை தழுவுவதற்கான அவரது விருப்பத்தை ஆளுநரிடம் எழுத்துமூலம் தெரிவித்து அதற்கு அனுமதி கோரினர்.  ஆளுநர் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார். ஆனால் சகல மதத்துக்கும் சமவுரிமை உண்டு என்ற கொள்கையை பின்னர் கடைப்பிடித்து  சுமார் 1823 ஆம் ஆண்டிற்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் நடவடிக்கைகளுக்காக கண்டி மாகாணங்களுக்குள் நுழைய அனுமதித்தனர், ஆனால் பௌத்தமதம் வேரூன்றியிருந்த கண்டிய சமூகத்தில் மிஷனரிகளால்  விரைவாக ஊடுருவ முடியவில்லை.

பிரிட்டிஷாரின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான மற்றொரு சமூகப்பிரச்சினை கண்டிய சமூகத்தில் காணப்பட்ட பலதார மணமுறையும்  பலகணவர்   மணமுறையுமாகும். இந்த இரு மணமுறையும்  கரையோரைப்பகுதியிலும் காலனித்துவத்துக்கு முன்னர் இருந்தது. ஆனால் போர்த்துகேயர் ஆட்சியிலும் ஒல்லாந்தர் ஆட்சியிலும் அது தடை செய்யப்பட்டுவிட்டது. முஸ்லிம் சமூகத்தில் மாத்திரம் பலதார மணமுறை தொடர்ந்தது. கண்டிய சமுதாயத்தில்  பலதார மணமுறையும் பலகணவர் மணமுறையும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆயினும் பல கணவர் மணமுறை  அரிதாகவே நிகழ்ந்தது. அது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரண்டு அல்லது பல  சகோதரர்கள் ஒரே பெண்ணை மணக்கும் நிகழ்வாக இருந்தது. கண்டியை ஆங்கிலேயர் கைப்பற்றிய பின்னர் குறிப்பாக 1818 இன் பின்னர் இதனைப் படிப்படியாக தடுத்தனர்.

சில கண்டியப் பகுதிகளில் சிசுக் கொலை ஒரு பிரச்சினையாக இருந்தது. வலப்பனை, ஊவா மற்றும் சப்ரகமுவ போன்ற தொலைதூர பின்தங்கிய பகுதிகளில்  பிறந்த குழந்தைகளை கொன்றுவிடுவது சர்வ சாதாரண விடயமாக இருந்தது. இதற்கு வறுமை மட்டும் காரணமல்ல, மூட நம்பிக்கையும் காரணமாக இருந்தது.  உதாரணமாக, 1822 ஆம் ஆண்டு கண்டியில் நடந்த சிசுக்கொலை வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட   அறிவு குறைந்த  இருவர் மூடநம்பிக்கை  காரணமாக – தமது குழந்தை ஒரு அசுபமான நேரத்தில்  தீய கிரகத்தின் கீழ் பிறந்ததாகக் கருதப்பட்டதால் –  அது தமக்கும் அல்லது முழுக் குடும்பத்திற்கும் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதைக்  கொல்ல வேண்டியிருந்தது எனக்கூறியதைக்கேட்டு நீதிபதி திகைத்து நின்றார். இத்தகைய பிரச்சினைகளையும் ஆங்கிலேயர் கையாளவேண்டியிருந்தது. இத்தகைய மூட நம்பிக்கைகள் உலகம் பூராவும் முதலாளித்துவத்துக்கு முந்திய காலத்தில் அழுத்தம் பெற்றிருந்தன. இன்றும் பல பாகங்களில் தொடர்கின்றன. சோதிடர்கள் கிரகதோசம் இருப்பதாக  கூறிய காரணத்தால் பெற்ற குழந்தையை மன்னர்கள் காட்டில் கைவிட்ட வரலாறுகளை நாம் படித்திருக்கிறோம்.

மற்றுமொரு பிரதான  மாற்றம் யாதெனில் கண்டிய இராச்சியத்தில் பொது நிலங்கள் யாவும் அரசனுக்கே சொந்தமானதாக இருந்தது. அவற்றில் சேனைப் பயிர்ச்செய்கை செய்யவும் தமது கால்நடைகளை மேயவிடவும் அனுமதி இருந்தது. நிலமும் உழைப்பும் இன்னும் விற்பனைப் பண்டமாகவில்லை. ஆனால் ஆங்கிலேயர் கொண்டுவந்த நிலம் சம்பந்தமான சட்டங்கள் நிலத்தையும் உழைப்பையும் விற்பனைப் பண்டங்களாக்கின. அது பற்றி பின்னர் பார்க்கலாம்.

அனைத்துக்கும் மேலாக இலங்கையின் தலையெழுத்தையே மாற்றிய, அதன் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பை தலைகீழாக மாற்றி போட்ட அடிப்படை மாற்றம் கண்டி இராச்சியம் ஆங்கிலேயரால் கைப்பற்றபின்னரே ஏற்பட்டது.  அது கோப்பி பெருந்தோட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 1823 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது.

மன்னர் ஆட்சி செய்த இடத்தில் கோப்பியின் ஆட்சி

இலங்கையில் முதன்முதலில் கோப்பி பயிரிட்ட இடம்-சிங்கப்பிட்டிய

பிரிட்டிஷ் காலனித்துவத்தின் ஆரம்ப ஆண்டுகளில் இலங்கை  பொருளாதார ரீதியில் முக்கியமான ஒரு நாடாகக் கருதப்படவில்லை. சனத்தொகை குறைவான வளர்ச்சிகுன்றிய, மூலவளம்  இல்லாத பழமைவாத நாடாகவே பார்க்கப்பட்டது. பூகோள இராணுவ கேந்திர முக்கியத்துவமிக்க இலங்கையை அவர்கள் தம்வசமாக்கிக்கொண்டிருந்தனர். இருப்பினும், 1820 களில் இந்தக் கருத்து மாறியது. அந்த மாற்றத்துக்கான  காரணம் 1923 இல் தொடங்கி புயல் வேகத்தில் மலையகமெங்கும் பரவிய கோப்பிப் பெருந்தோட்டமும் அதன்  பின்னர் உருவான தேயிலைப்  பெருந்தோட்டமும்தான்.

மேற்கிந்தியத்தீவுகள், தென் அமெரிக்கா,  பிரேசில் போன்ற நாடுகளில் புதுவிதமான நவீன பெருந்தோட்டங்களின் மூலமாக பெரும் லாபம் கிடைத்ததால் இலங்கையில் அத்தகைய வாய்ப்புகளை பிரித்தானியர் தேடினர். ஏற்கெனவே பருத்தி, கரும்பு, இண்டிகோ, அபின், பட்டு ஆகியவற்றை உ ற்பத்தி செய்யும் சோதனை முயற்சிகளை ஆங்கிலேயரும் மேற்கொண்டனர். இத்தகை தேடலின்போதுதான் 1815 இல் கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டது.

அப்போது இலாபமீட்டும் ஒரு புதியதுறையாக பெருந்தோட்டத்துறை சர்வதேச அரங்கில் உருவாகியிருந்ததுடன் ஐரோப்பாவெங்கும் அப்போது கோப்பிப்பானம் மிகவும் பிரபல்யமடைந்து பருகுவோர் தொகையும் அதிகரித்திருந்தது. அதற்கு பிரதானகாரணம் 1801இல் பிரன்ஸ் அகார்ட் (Franz Achard) என்பவரால் ஐரோப்பாவில் முதலாவது சீனித் தொழிற்சாலை அமைக்கப்பட்ட பின்னர் சீனியின் விலை வெகுவாகக் குறைந்தது. அதுவரை தனவந்தர்களால் மாத்திரமே பயன்படுத்தப்பட்ட சீனி சாதாரண மக்களாலும் கோப்பியுடன் கலந்து அருந்தப்பட்டு ஜனரஞ்கமானது. எனவே கோப்பி உற்பத்தி மேலும் கவர்ச்சிகரமானதாக மாறியது

கண்டி இராச்சியம் ஆக்கிரமிக்கப்பட்ட போது   பிரதான வருவாய் கறுவா ஏற்றுமதி மூலமே அரசுக்கு கிடைத்துவந்தது. அது அரசின் ஏகபோகமாக இருந்தது.  கண்டி இராச்சியம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் அது  கறுவாப்பட்டை விநியோகத்திற்கான முக்கிய ஆதாரமாக மாறியது. கண்டிய மாகாணங்களில் கறுவா காடுகளில் இயற்கையாக  வளர்ந்தது.   கடல்சார் மாகாணங்களின் சில பகுதிகளில் செய்தது போல் ஆங்கிலேயர்கள் அதை கண்டி மாகாணங்களில் வளர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.  மாறாக, கண்டியர்கள் கறுவாப்பட்டையை வெட்டி தமக்கு விற்பதை  ஊக்கப்படுத்தினர். அத்துடன் அவர்கள் தங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக கறுவாவை பயிரிடவும் அனுமதித்தனர். இம்முயற்சிகள் பெரிதாக வெற்றியடையாவிட்டாலும்  கண்டியில் இருந்து சுமார் ஆறு மைல் தொலைவில் இரண்டு சிறிய தோட்டங்கள் தனியார்களால் நிறுவப்பட்டன.

அராபியப் பயிரான கோப்பி இலங்கைக்கு  17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முஸ்லீம் யாத்ரீகர்களால் யேமனில் இருந்து இந்தியா வழியாக கொண்டுவரப்பட்டிருக்கலாம்  என நம்பப்படுகிறது. இருப்பினும்,  அதனை ஒரு  பானமாகத்  தயாரிப்பது  பற்றி இலங்கையர் அறிந்திருக்கவில்லை. கொழுந்து  இலைகளை கறிகளுக்கும், பூக்களையும் தங்கள் கோவில்களில் காணிக்கையாகவும் மட்டுமே பயன்படுத்தினர்.

கோப்பியை காசுப்பயிராகப்  பயிரிடுவதற்கான முதலாவது  முயற்சி டச்சுக்காரர்களால் 1740 இல் மேற்கொள்ளப்பட்டது. இது கவர்னர் பரோன் வான் இம்ஹாஃப் (Governor Baron van Imhoff) காலத்தில் தொடங்கப்பட்டு  அவருக்கு பின்னர் ஆளுநர்களாக வந்த  வான் கோலினெஸ் (van Gollenesse)  லோட்டன் (Loten) ஆகியோரால் தொடரப்பட்டது. இருப்பினும், இம்முயற்சி பெரிதளவு வெற்றி பெறாவிட்டாலும் கூட தோட்டப்பயிர்களாக ஆங்காங்கு கரையோரப்பகுதிகளில் உற்பத்திசெய்யப்பட்டு வருவாய் தரும் பயிராக மாறியிருந்தது. கோப்பி மூலம் கிடைத்த ஏற்றுமதி வருமானம் கணிசமானதாக இருந்தது. 1782ல் ஜாவாவின் கோப்பி போட்டியிடத் தொடங்கும் வரை அராபியரின்  கோப்பியோடு இலங்கைக்  கோப்பி  வெற்றிகரமாக போட்டியிட்டது.

பின்னர் அப்போது ஒல்லாந்தரின் மற்றொரு  காலனியான ஜாவாவில் கோப்பி இலங்கையின் கரையோரங்களைவிட  செழிப்பாக வளர்ந்ததால்  அதற்குப்  போட்டியாக இலங்கை வளர்வதை டச்சு கிழக்கிந்தியக் கம்பனி விரும்பவில்லை. இக்காரணங்களால்  கோப்பி உற்பத்தி பெரிதாக ஊக்குவிக்கப்படவில்லை. எனினும்  கண்டி இராச்சியம் கைப்பற்றப்படும்வரை  பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த  கடலோரப் பகுதிகள் ஆண்டுதோறும்  48 முதல் 274  தொன் வரையான  கோப்பியை ஏற்றுமதி செய்தன.

கண்டியில் கோப்பி

கண்டிக்கு அருகில் கோப்பி  பயிரிடும் தொழிலில் ஒரே ஒரு கண்டிய பிரபு ஈடுபட்டிருந்தார் என நம்பகரமான குறிப்பொன்று கூறுகிறது. அது கோப்பி ஏற்றுமதிக்காகவா அல்லது  பெளத்த விகாரைகளுக்காகவா  பயிரிடப்பட்டது என்பது தெரியவில்லை. ஆயினும் அன்று கோப்பிப் பானம் இலங்கையர் மத்தியில் பாவனையில் இருக்கவில்லை. கரையோரப் பகுதிகளில் கூட கோப்பி ஏற்றுமதி நோக்கத்திற்காகவே பயிரிடப்பட்டது. உள்நாட்டவர்கள் மத்தியில்  கோப்பிப் பானம் பிரபல்யமாகி அதன் மூலம் தமது ஏற்றுமதி வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் கவனமாக இருந்தனர். ஏனெனில் கோப்பி அப்போது சிறு அளவிலேயே இலங்கையில் உற்பத்தியாகிக்கொண்டிருந்தது.

ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பே கண்டி மாகாணங்களில் கோப்பி மிக முக்கியமான பயிராகப் போற்றப்பட்டது.  புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்படும் தலதாமாளிகையில்  புத்தரின் சிலைக்கு முன்னால் வைத்து வழிபடுவதற்கும் ஏனைய பௌத்த விகாரைகளில் புத்தருக்கு படைக்கும் பூவுக்காகவுமே  கோப்பிச் செடி நாட்டப்பட்டிருந்தது. மன்னரின் வாசஸ்தலங்களைக்  கொண்டிருந்த  கண்டி,  ஹங்குரன்கெத்த கம்பளை ஆகிய பழைய நகர அரசபூங்காக்களில்  பூச்செடியாகவும் கோப்பி வளர்க்கப்பட்டிருந்தது. இவற்றுள் கம்பளையைச் சுற்றியிருந்த மலைச்சரிவுகளில் கரையோரப் பகுதிகளை விட கோப்பி சிறப்பாக வளர்வதை கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் கண்டனர். இங்கு நிலவிய கால நிலை, மண் வளம், நீர்வளம், மலைச் சரிவுகள் என்பன கோப்பி உற்பத்திக்கு மிகவும் பொருத்தமானவை என்பதை விரைவில் உணர்ந்தனர்

முதலாவது கோப்பி பெருந்தோட்டம்  

ஜோர்ஜ் பேர்டால் (George Bird)

இன்னும் கோல்புரூக் அரசியல் சீர்த்திருத்தம் (1833) அறிமுகப்படுத்தப்படாத சூழலில் சகல அதிகாரமும் ஆளுநரின் கையிலே குவிந்திருந்த நிலையில் இவ்விடயம் அவர்களது கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்த்ததுதான் திருப்புமுனையாக அமைந்தது. கண்டிய மாகாணங்களில்  ஆரம்பகால கோப்பி தோட்டங்களை அறிமுகம்  செய்வதிலும் விரிவாக்கம்  செய்வதிலும் ஆளுநர்களான ஜேம்ஸ் கேம்ப்பெல் (James Campbell)  எட்வர்ட் பார்ன்ஸ் (Edward Barnes) ஆகியோர் முக்கிய பங்கு வகித்தார்கள். முதல் பெரிய அளவிலான கோப்பித் தோட்டம் 1823 ஆம் ஆண்டில் கம்பளைக்கு அருகில் இருந்த சிங்கப்பிட்டியவில்  ஐரோப்பிய தோட்டக்காரர் ஜோர்ஜ் பேர்டால் (George Bird) தொடங்கப்பட்டது. அவரது  தந்தை  ஐந்நூற்று தொண்ணூறு[1] ஏக்கர் நிலத்தை பத்தாண்டுகளுக்கு வரியின்றி பெற்றுக் கொண்டார், மேலும் ஐந்தாண்டுகளில் வட்டியின்றி திருப்பிச் செலுத்துவதற்காக நான்காயிரம் ரிக்ஸ்  டொலரை கடனாகப் பெற்றார். மற்ற விதிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் போது, காலனியில்  செயலர் இந்த கடன் ஊக்கத்தை எதிர்த்தார். ஆயினும்  அதனை ரத்து செய்யாததால் காலனித்துவ அரசாங்கம் ஒப்பந்தத்தை அனுமதித்ததாகக் கருதப்பட்டு  முழு  ஏற்பாடும்  ஆளுநரால்  அனுமதிக்கப்பட்டது.

ஜோர்ஜ் பேர்ட் (George Bird 1792 – 1857) என்ற வேல்ஸ்காரர் அப்போது இலங்கையில் இருந்த ஒரே விவசாயவியலாளராவார். இவரது தந்தையான கேர்ணல்  ஹென்றி பேர்ட் (Col. Hendry Byrde) என்பவரே இலங்கையில் பிரித்தானிய அரசாங்கத்தால் இனாமாக காணிவழங்கப்பட்ட முதலாவது ஐரோப்பியராவார். இந்நிலத்தில் தான் அவரது மகன் ஜோர்ஜ் பேர்ட்டால் இந்தச் சாதனை  நிலைநாட்டப்பட்டது.

ஆளுநர் காம்பல் கோப்பி உற்பத்தியில்  ஈடுபட அரசாங்க அதிகாரிகளை ஊக்குவித்தார். இதன் விளைவாக, அரசாங்கத்தின் சில முகவர்கள்   பல பரிசோதனை கோப்பித்  தோட்டங்களைத் திறந்தனர். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. 1824 ஆம் ஆண்டில், ஆளுநர் பார்ன்ஸ் பேராதனையில் உள்ள தாவரவியல் பூங்காவின்அத்தியட்சகருக்கு  அதன் அருகில் இருநூறு ஏக்கர் காணியில் கோப்பியை பயிரிட உத்தரவிட்டபோது காலனித்துவ அரசாங்கமே கோப்பி உற்பத்தியில் நேரடியாக  இணைந்தது. 1825 ஆம் ஆண்டில், பார்ன்ஸ்  கன்னொருவாவில்  இருநூறு ஏக்கர் பரப்பளவில் தனது சொந்த  கோப்பித் தோட்டத்தைத் திறந்தார்[2]. 1829 ஆம் ஆண்டில் அவர் விவசாயக் கருவிகளை இறக்குமதி செய்வதில் விதிக்கப்பட்ட வரிகளை ரத்து செய்தார்.  அத்துடன் கோப்பி, பருத்தி, கரும்பு, இண்டிகோ, அபின், பட்டு போன்றவற்றின் உற்பத்தியில்  ஈடுபட்டிருந்த அனைவருக்கும் ராஜகாரிய என்ற கட்டாய அரசுப் பணிக்கு அழைக்கப்படுவதிலிருந்து விலக்கு அளித்தார்

பார்ன்ஸ் இலங்கையின் ஆளுநராக இருந்துக்கொண்டே  கோப்பி பெருந்தோட்டத்துறையில்  தனிப்பட்ட அக்கறை கொண்டிருந்தார்.  சொந்த கோப்பித் தோட்டத்தை வைத்திருந்த பார்ன்ஸ், கோப்பி பெருந்தோட்டத்துறையை  ஊக்குவிக்கும் பல அரசியல் முடிவுகளுக்கு பொறுப்பானவர். கோப்பி பெருந்தோட்டத்துறையில் ஈடுபடுவோருக்கு வரி விலக்களித்தும்   நிலமானியங்கள் வழங்கியும், மத்திய மலைநாட்டின் பலபாகங்களை இணைக்கும் பாதை வலைப்பின்னல்களை நிர்மாணித்தும் இத்துறையை ஊக்குவித்தார்- தானும் பயன்பெற்றார். ஜாவா,  கோல்ட் கோஸ்ட் (கானா) போன்ற சில ஐரோப்பிய காலனிகளில் சிற்றுடைமை  விவசாய உற்பத்திமுறை பின்பற்றப்பட்டது. ஆனால்  பெரிய அளவிலான பெருந்தோட்ட விவசாயமுறையே இங்கு பின்பற்றப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் இங்கு பயன்படுத்தப்படாத தொடர்ச்சியான நிலங்கள் தாராளமாக இருந்ததுதான்.

போக்குவரத்து பாதைகள் இன்னும் உருவாகாத அந்தக் காலத்தில் யானையும் சிறுத்தையும் மலிந்த மத்திய மலைநாட்டின் உயரமான பகுதிகளுக்கு அடர்ந்த காடுகளினூடாக செல்வதற்கு   அசாதாரணமான துணிச்சலும் உடல்பலமும் தேவை. அது இரண்டுமே  ஆளுநர் பார்ன்சுக்கு இருந்தது. இவர் இராணுவப் பின்புலம் கொண்டவர். நெப்போலியனுக்கெதிரான வாட்டர்லூ யுத்தத்தில் பங்கேற்று கடுமையாக காயமடைந்து பல இராணுவ உயர் விருதுகளைப்பெற்றவர். இலங்கையில் அதி உயரமான  இடமான – இன்று நுவரெலியா என்று அழைக்கப்படும் அடர்ந்த காட்டு  பகுதிக்கு முதன்முதலில் பிரயாணம் செய்து  1829 ஆம் ஆண்டில், நோயுற்ற இராணுவத்தினர் புனர்வாழ்வு பெறும் சுகாதாரத்தளமாக அதனை நிர்மாணித்தவரும் இவரே.  உல்லாசப்பிரியரான இவர் நாட்டின் பலபாகங்களிலும் ஆளுநர் மாளிகைகளை அமைத்தார்.  இவ்வாறு நுவரெலியாவில் கவர்னர் இல்லத்தையும் இவர் கட்டினார், அதற்கு பார்ன்ஸ் ஹால் என்று பெயரிடப்பட்டது. அது  இப்போது பல மாற்றங்களுடன் நுவரெலியாவின் புகழ்பெற்ற கிராண்ட் ஹோட்டலாக உள்ளது. இவர் காலத்தில் தான் முதற்தடவையாக  தீவு முழுவதும் தபால்  சேவை நிறுவப்பட்டது.

அதுவரை அதிகம் அறியப்படாத சிங்கபிட்டியவில் – 1823 இல் உருவான முதலாவது கோப்பி பெருந்தோட்டம் இலங்கையின் தலையெழுத்தையே மாற்றப் போகிறது என்பதை அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் அதுவரை கறுவாத் தோட்டங்களைக் கொண்டிருந்த தென்பகுதியில் அரும்புநிலையில் மையம் கொண்டிருந்த பொருளாதார நடவடிக்கை மத்திய மலைநாட்டுக்கு இடம் பெயர்ந்து இலங்கையின் முகத்தையே மாற்றிவிட்டது.

அதுவரை பிரித்தானியாவுக்கு லாபகரமான கோப்பி, பிரதானமாக மேற்கிந்திய தீவுகளிலிருந்தே கிடைத்துவந்தது. அடிமைமுறை ஒழிக்கப்பட்டதை அடுத்து அங்கு மலிவான உழைப்பு கிடைக்காமற்போனது. அத்துடன் சுங்கவரியில் செய்யப்பட்ட மாற்றங்களும் மேற்கிந்திய கோப்பிக்குப் பாதகமாக அமைந்தன. இதனால் இலங்கைக் கோப்பிக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. 1835 இல் கோப்பி மீதான இலங்கைக்கான இறக்குமதித் தீர்வையை இங்கிலாந்து குறைத்ததால் கோப்பி ஏற்றுமதி லாபகரமான வியாபாரமாக மாறியது

நிலம், மூலதனம், தொழிலறிவு, போக்குவரத்து, உழைப்பு

சிங்கபிட்டிய கோப்பித்தோட்ட வெற்றியை அடுத்து பிரித்தானிய அரசாங்க ஊழியர்களும் சிறுமுதலீட்டாளர்களும் மிகுந்த ஆர்வத்தோடு இத்துறையில் ஈடுபட்டனர். பெருந்தோட்டத்துறைக்கு அத்தியாவசியமான ஆறு அடிப்படைத் தேவைகள்  உகந்த காலநிலை, நிலம், பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும், தொழிலாளர்,  தொழிலறிவு, போக்குவரத்து வசதி ஆகியனவாகும். உகந்த காலநிலை இயற்கையாக கண்டிப் பிரதேசத்தில் இருந்தது. பயன்படுத்தப்படாத நிலமும் தாராளமாக இருந்தது. பாதுகாப்பான நிலைமையும் ஸ்திரத்தன்மையும் அப்போது ஏற்பட்டிருந்தது. பெருந்தோட்டத்தின் இலாபமானது நிலம், உழைப்பு, போக்குவரத்து ஆகிய மூன்றும் மலிவாக கிடைப்பதிலேயே தங்கியிருந்தது. அப்போது செல்வாக்குச் செலுத்திய ‘வேக்பீல்ட் தத்துவத்தின்” ((Walkfieeldian Theory)  அடிப்படையில் காலனிய அரசாங்கம் மலிவாக நிலம் கிடைப்பதை உறுதிப்படுத்தியது. போக்குவரத்துப் பாதைக்கும் ரயில்வேக்கும் பெருமளவு அரசாங்கமே செலவுசெய்தது. தோட்டத்தொழிலாளர்களின் ஊதியம் மிகக்குறைவாக இருப்பதை் அரசாங்கத்தின் துணையோடு தோட்டத்துரைமார் உறுதிப்படுத்திக்கொண்டனர். இதனால் கோப்பித்தோட்டங்கள் முதற்தடவையாக பழைய கண்டி இராச்சியத்தில் வேகமாகப் பரவின.

நிலம்

இலங்கையில ஐரோப்பியர் நிலம்வாங்குவதற்கு இருந்த தடை 1810 இல் தளர்த்தப்பட்டு ஒருவர் தலா 4000 ஏக்கர் காணிவரை வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

1832வரை கோப்பிப் பயிர்ச்செய்கைக்கான காணி இலவசமாகவே ஆள்பதியின் விருப்பப்படி வழங்கப்பட்டது. பிரித்தானியர் தம்விருப்பப்படி தமக்குத் தேவையான நிலத்தை தேர்ந்தெடுத்தனர். பின்னர் ஒரு ஏக்கருக்கு 5சிலிங் (அப்போது சுமார் 25 சதம்) வீதம் அளவைக்கட்டணம் விதிக்கப்பட்டது. வணிகர்களும் காணிவாங்க போட்டியிட்டதால் அளவியலாளருக்கு பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் அளவைக்கான கட்டணமும் பின்னர் 20 சிலிங்காக உயர்ந்தது. நாளடைவில் அளக்கப்பட்ட காணிகள் அரசாங்கத்தால் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டன.

மன்னராட்சியின் கீழ் மக்கள் குடியிருக்காத – மக்களால் பயன்படுத்தப்படாத -விகாரைகளுக்கும் பிரதானிகளுக்கும் சேவகர்களுக்கும் சன்மானமாக வழங்கப்படாத – நிலம் அனைத்தும் அரசனுக்கு சொந்தமானதாகக் கருதப்பட்டது. இம்மரபை காலனிய அரசுகள் பயன்படுத்திக் கொண்டன. அப்போது காணிகள் சந்தையில் விற்பனைக்கான சாதனமாக மாறியிராததால் காணிஉரிமம் பற்றிய கரிசனையும் ஆர்வமும் இருக்கவில்லை. பெருந்தோட்ட அறிமுகத்துடன் முதற்தடவையாக கண்டியநிலம் விற்பனைக்குரியதாக மாறியது. ஆனால் பெரும்பாலான கண்டியச் சிங்களவரிடம் காணி உரிமைப்பத்திரம் இருக்கவில்லை. 1841 முதல் 1844 வரை ‘கோப்பி மேனியா’ (Coffee Mania) என வர்ணிக்கப்பட்ட காணிக்கான போட்டி தீவிரமாக இருந்தது. இவ்வாறு வாங்கப்பட்ட நிலங்கள்யாவும் கோப்பிப் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படவில்லை. எதிர்காலத்தில் பயிரிடுவதற்காகவும் லாபத்திற்கு விற்பதற்காகவும் மலிவாகக் கிடைத்த பெருமளவு காணிகள் முடக்கப்பட்டன

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இவ்வாறு 1.6 மில்லியன் ஏக்கர் காணிகளை காலனியல் அரசாங்கம் இலவசமாக வழங்கியிருந்தது. அவற்றில் நாலில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலமே ஐரோப்பிய தோட்டஉரிமையாளருக்கு சொந்தமாக இருந்தது. மீதி்க்காணிகள் கிராமவாசிகளுக்கும் இலங்கை முதலீட்டாளர்களுக்கும் விகாரைகளுக்கும் சொந்தமாகின

 1838 ஓகஸ்ட் மாதம் தங்கல்லயைச் சேர்ந்த ஒருவரது மேன்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் காணிக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் எனத் தீர்ப்பளித்தது. இதனை சமாளிப்பதற்காக தரிசுநிலச்சட்டம் என்ற பெயரில் (The Crown Lands Encroachment Ordinance No 12 of 1840 and NO. 9 of 1841) கடுமையான சட்டங்களை காலனியல் அரசு நிறைவேற்றியது. இச்சட்டங்கள் அரசர்காலத்தில் காணிகளை தடையின்றி பயன்படுத்திய விவசாயிகளுக்கு நியாயம் வழங்கவில்லை. எனினும் சனத்தொகை குறைவாகவும் நிலம் தாராளமாகவும் இருந்த அன்றைய  சூழலில் காணிஉரிமையை சட்டரீதியாக நிரூபிக்க முடியாத கண்டிய விவசாயிகள் குறிப்பிடத்தக்களவு வெளியேற்றப்பட்டதாக சான்றுகள் கிடையாது. ஆயினும் அதுவரை பொதுவில் இருந்த மேய்ச்சல் நிலங்களும் சேனைப்பயிர்ச்செய்கை நிலங்களும் பறிபோனதால் அவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாயினர்.

தொழிலாளர் – உழைப்பு

பெருந்தோட்ட  உற்பத்தி முறை  இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக  எண்ணிக்கையில் அதிகமான மலிவான உழைப்பாளர்களின் ஆதாரப்பட்டிருப்பது. கோப்பி பெருந்தோட்டங்களுக்கு தேவையான ஏராளமான தொழிலாளர்களை திடீரென கண்டிய சமூகத்திலிருந்து பெறமுடியாதிருந்தது. அவர்கள் தங்கள் வயல்களோடும் குடும்பங்களோடும் பிணைந்திருந்தார்கள். நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறைக்கு ஆண்டாண்டு காலமாக பழகிப் போயிருந்த அவர்களுக்கு கூலிக்கு வேலை செய்து பழக்கமில்லை. நீண்டகாலமாக ஐரோப்பியர்களின் ஆளுகையின் கீழ் இருந்த கரையோரச் சிங்களவர் ஓரளவுக்கு முதலாளித்துவத்திற்கு பரிச்சயமாகியிருந்தனர். அவர்களில் சிலரை சில குறிப்பிட்ட உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுத்த முடிந்தது.

கோப்பிபருவகாலப் பயிராகும்.  அறுவடைக்  காலத்தில்  அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். பழுத்த பெர்ரிகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்-அதிக பழுத்த பெர்ரி சுருங்கி காய்ந்துவிடும். இதனைவிட  நிலத்தை பண்படுத்தவும்  செடிகளை நடுவதற்கும் கணிசமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். ஆனால் கண்டியில் நிலம் தாராளமாகக் கிடைத்த அளவுக்கு தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. சிங்கப்பிட்டியவில் உருவான முதலாவது கோப்பித் தோட்டத்தில் கரையோரச் சிங்களத் தொழிலாளரும் – பாதைகள் அமைக்கும் வேலைக்காக தென்இந்தியாவிலிருந்து சுயமாக வந்தவர்கள் எனக்கருதப்படும் – தென் இந்தியத் தமிழ் தொழிலாளரும், சில கண்டிய சிங்களத் தொழிலாளரும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் சிங்களத் தொழிலாளர் நிரந்தரமாக அங்கு பணிபுரிய விரும்பவில்லை அவர்கள் – பல்வேறு தேவைகளுக்காக – அடிக்கடி தமது வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இவ்வாறு நாளடைவில் தென் இந்தியாவிலிருந்து வந்த தொழிலாளர்களை தங்கவைத்து வேலை வாங்குவது சிறந்த முறையாக மாறியது. அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து, கூடிய நேரம் வேலை வாங்கக்கூடியதாக இருந்தது. அத்துடன் இந்நாட்டில்  சொந்த பந்தமற்ற ‘அந்நியத் தொழிலாளர்களை’ அடக்கி கட்டுப்படுத்துவது இலகுவாக இருந்தது.

வெட்டிச்சாய்த்த மரங்களை அகற்றவும், வெட்டப்பட்ட பாரிய மரங்களின் வேர்களைப் பிடுங்கவும், மரங்களை  களனி ஆற்றில் மிதக்கவிடுவதற்கும்  யானைகள் பயன்படுத்தப்பட்டன. பலகை அறுக்கும்  ஆலைகளுக்கும் அவற்றை கொண்டு சேர்க்க யானை வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. புல்டோசர்களும்  லொறிகளும் கண்டுபிடிக்கும் வரை யானைகளின் பயன்பாடு அதிகமாக இருந்தது. மரம் வெட்டுதல், அவற்றை  உரிய இடங்களுக்கு அனுப்புதல், யானைகளை கையாளுதல், அவற்றைப்  பராமரித்தல், மாட்டு வண்டி ஓட்டுவது போன்ற வேலைகளில் கரையோரச் சிங்களவர்களே பெரும்பாலும் ஈடுபட்டனர். சிறிய எண்ணிக்கையிலான கண்டியச் சிங்களவர்கள் அவ்வப்போது இவர்களுடன் இணைந்து கொண்டனர்.

அப்போது கோப்பி  தோட்டத்துரையாக  இருந்த பி. டி. மில்லி (P. D. Millie) என்பவரின் கூற்றுப்படி சிங்கள விவசாயிகள் உடல் கட்டுமஸ்தானவர்களாகவும், கோப்பி பயிர்செய்கைக்காக  காடுகளை வெட்டி சுத்தம் செய்வது போன்ற கடினமான வேலைகளை  செய்வதற்கு  ஏற்றவர்களாகவும் இருந்தனர். ஆனால் தோட்டங்களின் மோசமான  நிலைமைகளின் கீழ் அவற்றில் வாழவும் ஏனைய  வேலைகள்  செய்வதிலும் ஆர்வம் காட்டவில்லை. எனவே கோப்பி பெருந்தோட்டங்கள் பெரும்பாலும் தென்னிந்திய தமிழ்  தொழிலாளர்களின் உழைப்பிலேயே தங்கி இருந்தது. மேற்கிந்தியத் தீவுகளில் அடிமைகளுக்கு வழங்கப்பட்ட வன்முறைத் தண்டனைகள் 20 ஆம் நூற்றாண்டு வரை இந்த நாட்டில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன. ஒரு முன்னாள் தோட்டத்துரை, தொழிலாளர் தலைவனான  கங்காணி ஆகியோர், ஒரு தொழிலாளியை மரத்தில் கட்டி வைத்து தடியால் அடித்ததை தான் கண்டதாக அப்போது தோட்ட நிர்வாகியாக இருந்த ஒருவர் பதிவு செய்துள்ளார்.

சிங்களத் தொழிலாளரைக் கவர்வதற்கு தோட்டத்துரைமார் முயற்சி   எடுக்கவில்லை. மாறாக தென்னிந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வேதனத்தைக் குறைந்த நிலையில் வைத்திருப்பதையே விரும்பினர். எனவே கோப்பித்தோட்ட ஸ்தாபர்களான ஜோர்ஜ் பேர்ட்டும் ஆள்பதி பார்ன்சும் 150 தென்னிந்தியத் தொழிலாளர்களை 1828 இல் இறக்குமதிசெய்தனர். கோப்பித்தோட்டத்திற்கு தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டது இதுவே முதற்தடவையாகும். ஆயினும் இறக்குமதிசெய்யப்பட்ட அனைவரும் ஒருவருடத்திற்குள்ளாகவே தோட்டத்தை விட்டு ஓடிவிட்டனர்.

(தமிழ்நாடு திருநெல்வேலி, திருச்சி, மதுரை மற்றும் தஞ்சை நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தமிழ் தொழிலாளர்கள் எவ்வாறு ஏமாற்றி அழைத்துவரப்பட்டார்கள், அவர்களின் நீண்ட கடல் பயணத்தின் போதும் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வழியாக கண்டிக்கு கால்நடையாக வந்தடையும் வழியில் இறந்த லட்சக்கணக்கானோர் போக எஞ்சி பிழைத்தவர்கள் எலும்பும் தோலுமாய் தமது கங்காணிகளால் கோப்பி தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு எத்தனை   மோசமான நிலையில் நவீன அடிமைகளாக நடத்தப்பட்டனர் என்பதை இங்கு விபரிக்கவில்லை. அவர்களது கதை நான் எழுதி ஈரோஸ் 1984ல் வெளியிட்ட ‘இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்’ என்று நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.)

கம்பளையும் கண்டியும் தென்னிந்தியத் தொழிலாளர்கள் வந்து குவியும் மையமாகத் திகழ்ந்தன. இவர்கள் தங்குவதற்காக கண்டி குளத்தி்ற்கும் போகம்பரைக்குமிடையே இதற்கான நீண்ட லைன்கள் மண்சுவரால் அமைக்கப்பட்டிருந்தன .இவர்களுக்கு சேவைசெய்வதற்காக ‘கண்டி ஆபத்தில் உதவும் நண்பர்கள் அமைப்பு’ (Friends in need)  என்ற தொண்டர் நிறுவனம் ஒன்று 1837 இலிருந்து செயற்பட்டது. இவ்வமைப்பால் இவர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு சிறிய மருத்துவக்கூடமே இன்று கண்டி பெரிய ஆஸ்பத்திரியாக மாறியிருக்கிறது.

 அடிமைமுறையை  பிரிட்டிஷ் அரசாங்கம் 1833 லும் பிரான்சு  1848 லும்  டென்மார்க்  1848லும் ஒல்லாந்து  1863 லும் ஒழிக்கவேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டபின்னர் அவர்கள் தமது பெருந்தோட்டங்களில் மலிவான கூலிகளை ஈடுபடுத்துவதற்கு குத்தகை ஊழிய முறையை (Indentured labour)  கண்டுபிடித்தனர். இதன்கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மலிவான உழைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்டகாலம், பொதுவாக ஐந்து வருடங்கள், தன்னை இறக்குமதி செய்த எஜமானுக்குக் கீழ் மோசமான நிலைமையில், குறைந்த ஊதியத்துக்கு, கடுமையாக உழைக்க வேண்டும். அதன் பின்னர் அவர் விரும்பினால் அதே எஜமானிடமோ அல்லது வேறு எஜமானிடமோ வேலை  செய்யலாம் அல்லது சொந்தமாக நிலம் வாங்கி குடியேறலாம். இது மற்றொரு நவீன அடிமை முறையாக இருந்தது. இலங்கையில் மாத்திரம் அதற்கு வித்தியாசமான ஆயுள் கால நவீன அடிமை முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து தூர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட குத்தகை ஊழியர் முறை  அரசின் கண்காணிப்புடன் நடைபெற்றது. இலங்கை இந்தியாவுக்கு அருகில் இருந்ததாலும் இருநாடுகளும் வெவ்வேறு நாடுகளாக இருந்தபோதும் ஒரே காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தபடியாலும் இருநாட்டு அரசுகளுமே  இந்த சுதந்திரமான குடிப்பெயர்வை  நீண்ட காலம் வரை கண்டுகொள்ளவில்லை. இந்தியாவில் தேசிய சக்திகளின் குரல் ஒலிக்கத்தொடங்கிய பின்னர் தான் 1904 இல் முதல் தடவையாக கடற்கரை முகவர் நிறுவனத்தை (coast agency) இந்தியா ஏற்படுத்தி  அதில் தலையிட்டது. அதன் பின்னரும் தொழிலாளர் இறக்குமதி  அடிப்படையில் மாற்றமின்றி தொடர்ந்தது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11791 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்