போர்த்துக்கேயர் 1619 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாண இராச்சியத்தைத் தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்றும், அதன் பின்னரே யாழ்ப்பாண நகரம் உருவானது என்றும் முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். இன்றைய கட்டுரையில் காணும் விடயங்கள் யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றுக்குள் அடங்கவில்லை. எனினும், யாழ்ப்பாண நகரம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த போர்த்துக்கேயச் செல்வாக்குப் படிப்படியாக அதிகரித்தது தொடர்பான விபரங்களை இது விளக்குகின்றது.
போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முன்னர் அவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது மூன்று தடைவைகள் படையெடுத்துள்ளனர். இவற்றுள் முதலாவது 1560 ஆம் ஆண்டிலும், இரண்டாவது 1591 இலும், மூன்றாவது 1619 இலும் இடம்பெற்றன. மூன்று போர்களின் போதும் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது நல்லூர்.
முதலாவது யாழ்ப்பாணப் போர்
1560 இல் இடம்பெற்ற முதலாவது படையெடுப்பின்போது யாழ்ப்பாண இராச்சியத்தை நல்லூரில் இருந்து ஆட்சி செய்தவன் முதலாம் சங்கிலி எனச் சில வேளைகளில் குறிப்பிடப்படும் சங்கிலி மன்னன். இவன், 1544 ஆம் ஆண்டில் மன்னாரில் மதம் மாறிய அவனது 600 குடிமக்களைக் கொலை செய்ததற்குப் பழிவாங்குவதும், மதம் மாறுவோருக்குப் பாதுகாப்பு வழங்குவதுமே போர்த்துக்கேயரின் இந்தப் படையெடுப்பின் முக்கிய நோக்கம் எனத் தெரிகின்றது.
1960 ஆம் ஆண்டுக்குச் சற்று முன்னர் இந்தியப் பகுதிகளில் இருந்த போர்த்துக்கேய ஆட்சிப் பகுதிகளுக்கான அரசப் பிரதிநிதியாக (வைஸ்ரோய்) அனுப்பப்பட்டவன் கொன்ஸ்தந்தீனோ டி பிரகன்சா. இவன் கோவாவில் இருந்து செயற்பட்டான். போர்த்துக்கலில் இருந்து புறப்படு முன்பே இவனுக்கு யாழ்ப்பாண இராச்சிய அலுவல்களைக் கையாள்வதற்கான அறிவுறுத்தல்கள் போர்த்துக்கேய அரசியால் விசேடமாக வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது.
1560 செப்டெம்பரில் ஏறத்தாழ 100 கடற்கலங்கள், பிரகன்சா தலைமையிலான போர்த்துக்கேயப் படையினரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டன. கொழும்புத்துறையில் இறங்கிய போர்த்துக்கேயப் படை நல்லூரை நோக்கிச் சென்று அந்நகரத்தைக் கைப்பற்றியது. எனினும் மன்னனைப் பிடிக்க முடியவில்லை. அவன், தந்திரோபாய அடிப்படையில் வன்னிக்குள் பின்வாங்கினான். துரத்திச் சென்ற படையினரால் சங்கிலியைப் பிடிக்க முடியவில்லை. பல கிழமைகள் கடந்துவிட்ட நிலையில், வன்னியிலும், நல்லூரிலும் இருந்த போர்த்துக்கேயப் படைகள் பல பிரச்சினைகளை எதிர் நோக்கின.
இந்நிலையில் சங்கிலி மன்னன் ஒரு சமாதான உடன்படிக்கைக்கான கோரிக்கையை முன்வைத்தான். பாதகமான சூழ்நிலையில் இருந்த போர்த்துக்கேயப் படையினரின் பாதுகாப்புக் கருதி, இதை பிரகன்சா ஏற்றுக்கொண்டான். உருவான ஒப்பந்ததின்படி, சங்கிலி ஒரு சிற்றரசனாக யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. அத்துடன் வேறும் பல நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாண மன்னன் சில நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை போர்த்துக்கேயப் படைகள் யாழ்ப்பாண இராச்சியத்திலேயே தங்கியிருந்தன. இக்காலப் பகுதியில் மக்கள் எழுச்சியை உருவாக்கிப் போர்த்துக்கேயர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்கள் தப்பி ஓடவேண்டியதாயிற்று. எனினும், மன்னார்த் தீவை நிரந்தரமாகவே போர்த்துக்கேயர் கைப்பற்றிக் கொண்டனர். மன்னாரை இழந்தது பல விதத்திலும் யாழ்ப்பாண இராச்சியத்துக்குப் பெரும் அடியாகவே விளங்கியது.
அடுத்த முப்பது ஆண்டுக் காலத்தில் நேரடியான தாக்குதல்கள் எதுவும் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது நடத்தப்படவில்லை. முதலாம் சங்கிலி மன்னனும் போர் நிகழ்ந்து சில ஆண்டுகளில் இறந்துவிட்டான். எனினும் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அழுத்தங்கள், கோவாவில் இருந்த அரசப் பிரதிநிதிகள் மீதும், போர்த்துக்கேய அரசு மீதும் தொடர்ந்தன.
இரண்டாம் யாழ்ப்பாணப் போர்
தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகவும், அப்போது யாழ்ப்பாணத்தை ஆண்ட புவிராசபண்டாரம் போர்த்துக்கேயருக்கு எதிராக எடுத்த சில நடவடிகைகளாலும், 1591 ஆம் ஆண்டில் இரண்டாம் படையெடுப்பு இடம்பெற்றது. இப்படையெடுப்பை அந்தரே பூர்த்தாடோ என்பவன் தலைமை ஏற்று நடத்தினான். இந்தத் தடவையும் போர்த்துக்கேயப் படைகள் கொழும்புத்துறையிலேயே இறங்கின. நல்லூரை நோக்கிச் சென்ற போர்த்துக்கேயப் படைகளிடம் யாழ்ப்பாணப் படைகள் தோல்வியடைந்தன. அரசனும் பிடிபட்டான். அவன் தலை கொய்யப்பட்டது.
இப்போரின்போது கொல்லப்படவிருந்த எதிர்மன்னசிங்கன் என்னும் யாழ்ப்பாண இளவரசன் ஒருவனைப் போர்த்துக்கேயத் தளபதி காப்பாற்றி அவனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவனைப் போர்த்துக்கேயரின் கீழ் ஒரு சிற்றரசனாக ஆக்கினான். எதிர்மன்னசிங்கன் காப்பாற்றப்படும் காட்சியின் சிற்பம் ஒன்று இரத்தினபுரியில் உள்ள புத்த கோயில் ஒன்றிலிருந்து கிடைத்தது. அதன் படத்தை இங்கே காணலாம். திறை செலுத்துதல், மத மாற்றத்துக்கு உதவி செய்தல், கண்டி அரசனுக்கு உதவி செய்யாதிருத்தல் உள்ளிட்ட பல நிபந்தனைகள் இந்த ஒப்பந்ததில் அடங்கியிருந்தன. இது யாழ்ப்பாண இராச்சியத்தில், போர்த்துக்கேயரின் நேரடித் தலையீடுகள் வளர்வதற்குக் களம் அமைத்துக் கொடுத்தது.
மூன்றாம் யாழ்ப்பாணப் போர்
1619 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இப்போர்க் காலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகாரம் செலுத்தியவன் சங்கிலி குமாரன். உண்மையில் இவன் ஒரு மன்னன் அல்ல. முடிக்குரிய வாரிசு சிறுவனாக இருந்ததால், அவனுக்காக நாட்டை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவன். இவனை இரண்டாம் சங்கிலி என்று அழைப்பதுண்டு. பல சூழ்ச்சிகளின் பின்னரே சங்கிலி குமாரன் இப்பதவியைப் பெற்றிருந்தாலும், போர்த்துக்கேயர் இவனை ஏற்றிருந்தனர். ஆனாலும், போர்த்துக்கேயருக்குச் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்தவில்லை என்றும், பழைய ஒப்பந்தங்களின்படியான சில நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் சங்கிலி குமாரன் மீது இருந்தன. இதற்கான அழுத்தங்களைக் கொடுத்துப் பெறவேண்டியவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக பிலிப் டி ஒலிவேரா என்னும் போர்த்துக்கேயத் தளபதி படைகளுடன் அனுப்பப்பட்டிருந்தான். தேவைப்பட்டால், நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கைது செய்வதற்கான இரகசிய ஆணையும் அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஒலிவேராவும் படைகளும் பூனகரியில் இருந்து கடல்நீரேரியைக் கடந்து பண்ணைப் பகுதியில் இருந்த புதுமைமாதா தேவாலயப் பகுதியில் தங்கியிருந்தனர். அங்கிருந்து ஒலிவேரா, சங்கிலி குமாரனுக்குத் தூது அனுப்பினான். போர்த்துக்கேயர் விரும்பிய அளவுக்குச் சங்கிலி குமாரன் ஒத்துழைக்கவில்லை. இதனால், ஒலிவேரா நல்லூரைத் தாக்கினான். யாழ்ப்பாணப் படைகளின் எதிர்ப்பு வெற்றியளிக்கவில்லை. நல்லூர் போர்த்துக்கேயப் படைகளிடம் வீழ்ச்சியடைந்தது. சங்கிலி குமாரன் இந்தியாவுக்குத் தப்ப முயற்சி செய்தபோது கடலில் வைத்துப் பிடிபட்டுக் கைதியாகக் கோவாவுக்கு அனுப்பப்பட்டான்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல தடவைகள், தஞ்சாவூர் அரசனின் உதவியுடன் போர்த்துக்கேயரை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சிகளையும் போர்த்துக்கேயர் முறியடித்து விட்டனர். இவ்வாறான பிரச்சினைகள் ஓயும்வரை ஒலிவேரா நல்லூரிலேயே தங்கியிருந்தான். இதன் பின்னர் தலைநகரத்தை வேறிடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தொடரும்.