இரசவர்க்கம் - மருந்தாகும் மசாலாப் பொருள்கள் - பகுதி 1
Arts
7 நிமிட வாசிப்பு

இரசவர்க்கம் – மருந்தாகும் மசாலாப் பொருள்கள் – பகுதி 1

September 8, 2022 | Ezhuna

ஈழத்தில் தோன்றிய வைத்தியம் தொடர்பான நூல்களில் ஒன்று செகராசசேகரம். கி.பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் குடிமக்களுக்காக இந்தியாவில் இருந்து பண்டிதர்களை வரவழைத்து செகராசசேகரம் என்னும் வைத்தியநூலை ஆக்குவித்தான். இதில் பல பகுதிகள் தற்போது அழிந்துள்ளன. தற்போது  கிடைக்கும் செகராசேகரம் நூலில் உள்ள ‘இரசவர்க்கம்’ என்ற பகுதியில் சொல்லப்பட்டுள்ள, பாரம்பரிய வைத்திய முறைமைகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள், நோய்களுக்கான சிகிச்சைகள் பற்றி தெளிவுபடுத்துவதாக ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகிறது.

கடுகு

படுகின்ற ரத்தம்போம் பாலார் முலை சுரக்கும்

அடுகின்ற மூலம் அணுகாது-தொடுகின்ற

தாளிதத்துக்காகும் தழலாகும் கண்டீர்

வாளித்த வல்ல கடுகு                                        

கடுகு, பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படக்கூடிய கூடுதலான உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மாருக்குப் பாற்சுரப்பை ஊக்குவிக்கும். மூல வியாதியைத் தவிர்க்கும். சமையலுக்குத் தாளிதம் செய்வதற்கு உதவும்.

கடுகு

பொதுவாக ஹோர்மோன் சமநிலை பிறழ்வு காரணமாக இளம் வயதுப் பெண்களுக்கும் நடுவயது கடந்த பெண்களுக்கும் மாதவிலக்கின்போது கூடுதலாக இரத்தம் வெளியேறுவதுண்டு. இதைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மூலிகைகளுள் கடுகும் ஒன்று. 40 கிராம் (8 தேக்கரண்டி) கடுகை எடுத்து நன்றாகப் பொடிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். மாதவிலக்கு தொடங்கும் முன்னரும் மாதவிலக்கின் போதும் கடுகுத்தூளில் இரண்டு கிராம் (அரைத்தேக்கரண்டியிலும் சற்றுகுறைவு) எடுத்து அதனைப் பாலுடன் அல்லது சுடுநீருடன் ஒரு நாளைக்கு இரு தடவைகள் அருந்தவேண்டும். கூடுதல் இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த வீட்டுவைத்தியம் என்று கூறப்படுகிறது.

கடுகில் செலெனியம் (selenium) என்னும் கனிப்பொருள் நிறைந்து காணப்படுகிறது. பாலூட்டும் தாய்மாருக்கு இந்த செலெனியம் ஏனைய பெண்களைவிடச் சற்றுக் கூடுதலாகத் தேவைப்படுகிறது என்பதைச் சமீபத்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுகளின்படி பாலூட்டும் தாய்மாருக்கு ஒருநாளைக்கு 70 µg மைக்றோகிராம் (microgram) என்ற அளவிலும் கர்ப்பிணிப்பெண்களுக்கு ஒருநாளைக்கு 60 µg மைக்றோகிராம் என்ற அளவிலும் ஏனைய பெண்களுக்கு ஒருநாளைக்கு 55 µg மைக்றோகிராம் என்ற அளவிலும் இது தேவைப்படுகின்றது. (ஒரு மைக்றோகிராம் (µg) என்பது ஒரு கிராமின் (g) ஆயிரத்தில் ஒரு பங்காகும். (1 µg = 0.001 g)

தைரொய்ட் (thyroid) கோளாறு உள்ளவர்கள் கடுகைக் கூடுதலாகவும் தொடர்ந்தும் எடுப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. Mustard என்பது கடுகின் ஆங்கிலப்பெயர். Brassica nigra L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.

சீரகம்

வாயின் அரோசிகம் போம் வாந்திபோம் வாசனையாம்

நோயகலும் பித்தம் நொடியிற்போம்-பாயில்

சுரமும்கடுப்பும்போம் சொன்னோமேசீரகத்தைத்

தரமுடைய கண்குளிரும் தான்                                                  

சீரகம் வாய்க்கசப்பைப் போக்கி பசியை ஏற்படுத்தும். வாந்தியை நிறுத்தும். உணவுக்கும் வாய்க்கும் ஒரு வாசனையைக் கொடுக்கும். பித்தத்தால் ஏற்படும் காய்ச்சல் தீரும். கண்ணுக்கும் நல்லது.

பாடபேதம்:

வாய்வு அணுகாது வந்து பிணிசேராது

காயம் நெகிழாது இருகண்குளிரும்-சீயான

காரனைய கூந்தல்நல்லீர் கைகண்டதித்தனையும்

சீரகத்தைத் தின்பீர் தினம்                                                                      

இதன் பொருள்:  சீவிய மேகம் போன்ற கூந்தலை உடைய பெண்ணே! சீரகத்தை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதனால் சமிபாட்டுக் குறைவினால் ஏற்படும் வாய்வு அணுகாது. நோய் ஏற்படாது. உடல் பலவீனம் அடையாது. கண்களுக்கும் நல்லது. இவை அத்தனையும் அனுபவமூலம் கண்டறிந்தவை.

நற்சீரகம்

சீரகத்தில் இரும்புச்சத்து நிறைய உண்டு. பொதுவாக இந்தச் சத்துக்குறைவினால் பெண்கள், குழந்தைகள் மற்றும் பருவ வயதினரே கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் உணவில் சீரகத்தைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. பருவம் அடைந்த பெண்களுக்கு மாதவிலக்கின்போது வெளியேறும் இரத்தத்துடன் இரும்புச்சத்து இழக்கப்படுவதால் இவர்களுக்குச் சீரகம் சேர்ந்த கறி சமைத்துக்கொடுக்கும் வழக்கம் இலங்கை மக்களிடம் இருப்பதை இவ்விடத்தில் நினைவுகூரலாம். பெண்களில் மாதவிலக்குச் சுழற்சி சீராக நடைபெறுவதற்கு சீரகம் உதவுகிறது.

‘சீரகம் தின்னச் சீரணம் யாவும்’ என்பது மருத்துவப்பழமொழி. சமிபாட்டுகோளாறுகளைச் சீரகம் தீர்த்துவைக்கின்றது என்பது அநுபவமூலமாக அறியப்பட்ட உண்மை. உணவு உண்டபின் சீரகம், சீனி, மாங்காய்த்தூள் என்பன சேர்த்துத் தயாரிக்கப்படும் ஜீர கோலி (Jeera Goli) சாப்பிடுவது இந்தியர்களின் வழக்கம். சமிபாட்டை ஊக்குவிப்பதுடன் வாய்க்கு நறுமணத்தையும் சீரகம் தருகிறது.

Cumin என்பது நற்சீரகத்தின் ஆங்கிலப்பெயர். Cuminum cyminum L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர். சீரகத்தில் நற்சீரகம், பெருஞ்சீரகம் என்று இருவகை உண்டு. பெருஞ்சீரகத்தை இந்தியாவில் சோம்பு என்றே குறிப்பிடுவார்கள்.

Fennel என்பது பெருஞ்சீரகத்தின் ஆங்கிலப்பெயர். இதன் கீரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சலாட், சூப் என்பவற்றில் தாராளமாகச் சேர்க்கப்படுகிறது. Foeniculum vulgare GAERTN என்பது பெருஞ்சீரகத்தின் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.

வெந்தயம்

மாந்தங்கணசுரத்தை மாத்திவிடும் வல்வினையால்

ஏந்தல் வாய்க்களிச்சல் ஏகுமே – போந்துடம்பு

வெச்சென்றால் போக்கிவிடும் மெல்லிநல்லீர்கேளீர்

அச்சமறும் வெந்தயத்துக் காம்                              

இதன் பொருள்:  வெந்தயம் சமிபாட்டுக்குறைவினால் ஏற்படும் மந்தம், காய்ச்சல், வலிப்பு என்பவற்றைக் குணமாக்கும். வாந்தி, வயிற்றோட்டம் என்பவற்றைப் போக்கும். உடம்புச்சூட்டைக் குறைக்கும்.

வெந்தயம்

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு தேக்கரண்டி அளவு  சுத்தமான வெந்தயத்தை எடுத்து 200 mL (ஒரு கப்) தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிட்டுவிட்டு அந்தத் தண்ணீரையும் குடிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்துவர  உடல் சூடு, மலச்சிக்கல் என்பன வராமல் தடுக்கலாம். கோடைகாலத்தில் மோரில் வெந்தயத்தை ஊறவைத்தும் குடிக்கலாம். நீரிழிவு நோயாளர்க்கும் இது நல்லது என்று கூறப்படுகிறது.

வெந்தயத்துடன் சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து  அரைத்து எடுத்த தூளை ஒரு கோப்பை  வெந்நீரில் அல்லது மோரில் போட்டுக் குடிக்க வயிற்றோட்டம் செமியாக்குணம் என்பன தீரும் என்னும் ஒரு நம்பிக்கையும் உண்டு.

Fenugreek என்பது வெந்தயத்தின் ஆங்கிலப்பெயர். Trigonella foenum-graecum L என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.

கொத்தமல்லி

கொத்தமல்லிவெட்டைகுளிர்காய்ச்சல்வாய்வுடனே

இத்தனையும்போக்கும் இதங்கொடுக்கும்-உத்தமமாம்

கண்ணுக்குக்காந்தியாம் கடுகியரோசியம்போம்

மண்ணுக்குமேல் நல்ல மருந்து

இதன் பொருள்: கொத்தமல்லிக்கு குளிர்காய்ச்சல் வாய்வு என்பன தீரும். கண்ணுக்கும் ஒளியைக்கொடுக்கும். மண்ணில் கிடைக்கக்கூடிய நல்ல மருந்து இது.

கொத்தமல்லிக்கு வெப்புக்குலையும் பழசுரம்போம்

சத்திவிக்கல்தாகம் தனைப்போக்கும்-பித்தமறும்

மந்தம்தனைப்போக்கும் வாயுவிகாரம்போக்கும்

செந்திருவே இக்குணத்தைச் செப்பு

இதன் பொருள்: கொத்தமல்லிக்கு உடற்சூடு காய்ச்சல், சத்தி, விக்கல், தாகம் என்பன தீரும். பித்தம் இல்லாதொழிந்துவிடும். மந்தம் மற்றும் வாய்வினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும்.

கொத்தமல்லி

வைட்டமின் K, வைட்டமின் A, மற்றும் வைட்டமின் C சத்துக்கள் நிறைந்த தாவர உணவுகளில் கொத்தமல்லிக் கீரையும் ஒன்று.

இரசவர்க்கத்தில் கொத்தமல்லி கண்ணுக்கும் காந்தி (ஒளி) தரும் என்று கூறப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். வைட்டமின் A கண்களின் விழிவெண்படலத்தைப் (cornea) பாதுகாப்பதன் மூலம் கண்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. ஆரோக்கியமான சளியமென் சவ்வுகளினதும் சருமத்தோலினதும் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் A அவசியமாகும்.

எலும்பின் அடர்த்திக் குறைவினால் ஏற்படும் ஒஸ்ரியோபொறோசிஸ் (osteoporosis)ஐக் கட்டுப்படுத்தும் வைட்டமின் K கொத்தமல்லிக் கீரையில் அதிக அளவில் காணப்படுகிறது. முதியவர்களுக்கு எலும்பின் அடர்த்தி படிப்படியாகக் குறைவதனால் கூன் விழுதல். எலும்பு நோவு, எலும்புமுறிவு போன்ற பிரச்சனைகளுக்கு இவர்கள் உள்ளாக நேரிடுகின்றது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கு, குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக உருவெடுக்கலாம். இவர்கள் தமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கீரைவகைகளுள் கொத்தமல்லிக்கீரையும் ஒன்று.

பொது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு எமக்குத்தேவையான வைட்டமின் C அளவின் 30 சதவீதத்தை 100 கிராம் கொத்தமல்லிக்கீரையில் இருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

செமியாக்குணம், பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்று என்பவற்றுக்கும் கொத்தமல்லிக்கீரை மருந்தாகும். இதன் வலுவான ஒட்சி எதிர்ப்புக் (antioxidant) குணங்கள் ஈரலின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.

நல்ல கொலெஸ்ரறோலைப் (HDL cholesterol)) பாதிக்காது கெட்ட கொலெஸ்ர றோலை (LDL cholesterol) மாத்திரம் குறைக்கும் குணம் கொத்தமல்லிக்கு உள்ளது.

கொத்தமல்லி விதையை ‘தானியா’ என்று குறிப்பிடுவது இந்தியர்களின் வழக்கம். குளிர்காய்ச்சலுக்கு அல்லது தடுமலுடன் கூடிய காய்ச்சலுக்கு கொத்தமல்லியும் (தானியா) இஞ்சியும் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் மருந்தாகும். சரக்குத்தூளில் (curry powder) கொத்தமல்லியும் தவறாமல் சேர்க்கப்படுவதுண்டு. இந்தியர்கள் தமது சமையலின் முடிவில் கறிகளில் கொத்தமல்லிக் கீரையைச் சுவையூட்டியாகச் சேர்த்துக்கொள்ளத் தவறுவதில்லை.

கொத்தமல்லிக் கீரையை சிலன்ரோ (cilantro) என்னும் பெயரில் கனடா உட்பட மேலைத்தேய நாடுகளில் அனைத்து பலசரக்கு மற்றும் காய்கறிக்  கடைகளிலும் பெற்றுக்கொள்ளமுடியும் Coriander மற்றும் Cilantro என்பவை கொத்தமல்லியின் ஆங்கிலப்பெயர்கள். Dhanaiya என்பது இதன் வர்த்தகப் பெயர் Coriandrum sativum L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11037 பார்வைகள்

About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)