பசியும், பிணியும் போக்கும் அரிசி
Arts
19 நிமிட வாசிப்பு

பசியும், பிணியும் போக்கும் அரிசி

August 17, 2022 | Ezhuna

ஈழத்தில் யாழ்ப்பாணம் தனக்கென சிறப்பான உணவுப் பழக்கவழக்கங்களையும் மருத்துவத்தில் சில விசேட முறைகளையும் கொண்டிருந்தது. ஆயினும் அந்நியர் ஆட்சி, பூகோளமயமாதல், வர்த்த நோக்கிலான வாழ்வியல், நாகரிகமோகம் என்பன அந்த உணவுப்பழக்கவழக்கத்தைக் குலைத்துப்போட்டது. அதன் விளைவாக, ஆரோக்கியக் குறைபாடுகள், தொற்றா நோய்கள் என பலவீனமான சமுதாயம் ஒன்று நம்மிடையே உருவெடுத்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைத்து, மீண்டும் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எமது பாரம்பரிய உணவுமுறைமையை மீட்டெடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் உணவுப்பழக்க வழக்கங்கள், உணவுகள் என்பன தொடர்பாக  சித்தமருத்துவம், தற்கால உணவு விஞ்ஞான  ஆய்வு என்பவற்றின் நோக்குநிலையில் விளக்குகின்றது ‘மாறுபாடில்லா உண்டி’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர்.

தானியங்கள்

தாவரப்பொருட்களும் அவற்றை உண்டுவாழும் விலங்குகளுமே மனிதனுக்கு உணவாகின்றன. பொதுவாக விலங்குப் பொருட்களைவிட தாவரப்பொருட்களே அதிகம் உணவாகின்றன.

தாவரப் பொருட்களில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் பிரதான உணவாக நெல், குரக்கன், தினை, வரகு, சாமை போன்ற தானியங்களே அமைந்துள்ளன. இவற்றிலும் நெல்லில் இருந்து பெறப்படும் அரிசி, அரிசி மா என்பன பிரதான உணவு வகைகளில் முதன்மையாக இருக்கின்றன. இதிலும் பாரம்பரிய சிவப்பரிசி வகைகளும், மொட்டைக்கறுப்பன் வகை அரிசிகள், சம்பா வகை அரிசிகள் போன்றன முக்கியமானவை.  இவை அவிக்காத பச்சை அரிசியாகவும் (Non Parboiled rice), நெல்லை அவித்து அதிலிருந்து பெற்ற புழுங்கல் அரிசியாகவும் (Parboiled rice) பயன்படுத்தப்படுகின்றன.

 புழுங்கலரிசி

புழுங்கலரிசியை தமிழர்களாகிய தென்குமரிகண்டத்தினர் பிரதான உணவாக தினமும் பாவித்திருப்பதை கீழ்வரும் சித்தர் பாடல் கூறுகின்றது.

“புழுங்கலி னரிசிச் சோறு புசிக்கநன் றுரோகம் வாரா

வழங்குதென் பூமி யோர்கள் வண்மையாய் நானு முண்பர்

அழுங்கல்செய் வடிகஞ் சிக்கே யடைந்திடுங் கரப்பன் சீதம்

கொழுங்குடி கஞ்சி யுண்ணக் குறையுநோய் சுகமுடற்கே”

– பக்.62, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி

நெல்லினை சுத்தப்படுத்தி நீரினில் குறைந்தது 12 மணிநேரம் ஊறவைத்து 10 -15 நிமிடங்கள் ஆவிவரும்படி வேகவைத்து எடுத்து காயவிட்டு பின்னர் உரலில் குற்றியோ அல்லது மில்லில் குற்றியோ புழுங்கல் அரிசியாக பயன்படுத்தப்படுகின்றது.

நெல்லினை அவிக்கும்போது, அதன் உமிக்கும் அரிசிக்கும் இடைப்பட்ட பகுதியான உட்கோதில் (தவிடு) காணப்படும் உயிர்ச்சத்துக்கள்,  குறிப்பாக B வகை உயிர்ச்சத்துக்கள், நார்ச்சத்து என்பன நீரில் கரைந்து அரிசியின் உட்பகுதிக்கு செல்வதாலும், அவிக்கப்பட்ட அரிசியை முழுமையாக  தீட்டாது பயன்படுத்துவதாலும் மேற்கூறிய ஊட்டச்சத்துக்கள்  முற்றாக இழக்கப்படுவதில்லை. இதனால் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன் மாப்பொருளானது தனி மாப்பொருளாக அல்லாது  சேர்க்கைகளாக  (Complex Carbohydrate) இருப்பதினால் சலரோகம் போன்ற நோய்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உண்ணக்கூடியதாக உள்ளது.

புழுங்கலரிசியானது குழந்தைகள், வாதரோகிகள், பத்தியமுள்ளவர்களுக்கு சிறந்தது எனவும் ஆனால் உடலுக்குப்பலத்தைக் கொடுக்காது என கீழ்வரும் பாடல் மூலம் சித்தமருத்துவம் கூறுகின்றது.

“புழுங்கல் அரிசியிது புத்திரர்க்கும் ஆகும்

அழுங்குகின்ற வாயுவிற்கும் ஆகும் – ஒழுங்காய்

நிலைத்தபத்தி யத்திற்கும் நீட்டலாம் மெய்க்குப்

பலத்தைக் கொடுக்காது பார்”

– பக். 249-250, பதார்த்தகுண சிந்தாமணி

“தென்புவியி னாளுஞ்செ ழித்துவள ரு ஞ்சாலி

வன்பு ழுங்கல் வடிசாத – முன்புணவே

வாயுவிலையத்தால் வலியும் வன்னோயுமிலை

நோயுடையார்க் காகு நுவல்”

– பக்.385, பதார்த்தகுண சிந்தாமணி

சம்பா அரிசி வகைகளின் வகைகளின் குணங்கள்

“ஈர்க்குச்சம் பாவின் சாத மினிமை மெவர்க்கு மாகும்

ஆர்க்குநற் புழுகு சம்பா வதிகமாம் பெலனுண் டாக்கும்

பார்த்திடு முடற்கு நன்றாம் பகர்ந்தகை வரைச்சம் பாவும்

ஆக்கமுஞ் சுகமு நல்கு மாமென வுரைத்திட் டாரே”

– பக். 61, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

சம்பா அரிசிவகைகளில் பலவகை இருந்தாலும் நாம் பயன்படுத்தும் ஏனைய அரிசி வகைகளை விட சம்பாவகையானது இலகுவாக சமிபாடு அடையக்கூடியது. அத்துடன் சிறிது இனிப்புச்சுவையும் ஏனையவற்றுடன் ஒப்பிடும்போதும் அதிகமாகக் கொண்டது.

பச்சை அரிசி (சிவப்புப் பச்சை அரிசி)

பச்சை அரிசி (சிவப்புப் பச்சை அரிசி)

பச்சை அரிசி கூட நன்றாகத் தீட்டப்படுவதில்லை. அத்துடன் உமி அகற்றிய தவிட்டுடன் கூடிய உடையல் அரிசியாகவும் பாவிக்கப்படுகின்றது.

சைவ உணவுப் பழக்கமுள்ளோர், அந்தணர்கள், வன்னியில் பல பகுதிகளில் பச்சை அரிசியே சோற்றுக்கு பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக வடகுமரி கண்டத்தைச் சேர்ந்தவர்கள் பச்சரிசிச் சோற்றினை உண்டு வந்துள்ளார்கள் என்றும் சலரோகம், பித்தரோகங்களை குறைக்கச் செய்யும் என்றும் சோர்வுடன் உடற்பலமும் உண்டாகும் என்றும் கீழ்வரும் சித்தமருத்துவப் பாடல் இவ்வாறு கூறுகின்றது.

“இடியவல் மந்தஞ் சேர்க்கு மினியபச் சரிசிச் சோறு

படுசல ரோகம் பித்தம் பாறச்செய் திடுமாம் மந்த

முடன்பெல முண்டா மீதை யுத்தர பூமி யோர்கள்

அடைவுடன் விரும்பி யுண்பா ராமென வறையு நூலே”

– பக்.61, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

இங்கு சலரோகத்தை குறைக்கும் என்பதற்கான ஆய்வுமுடிவுகள் இல்லை என்பதும் தற்கால உணவுவிஞ்ஞானத்தில் இது தொடர்பில் நிலவும் கருத்துக்களை கீழே காணலாம்.

சலரோகத்துக்கு அரிசிச்சோறு உகந்தது. எனினும், யாழ்ப்பாண அரிசிச் சோறுவகைகளின் Glycemic Index ஆனது நடுத்தரமாக உள்ளதால் (GI 55-70)  நாம் உண்ணும் அளவு முக்கியமானதாக கருத்திற் கொள்ளவேண்டியிருப்பது கட்டாயமாகும். பொதுவாக ஒரே இன அரிசியில் புழுங்கலரிசியானது பச்சை அரிசியைவிட சிறந்தது.

அதாவது சலரோகத்துக்கு புழுங்கல் அரிசியா ,பச்சை அரிசியா நல்லது எனப் பார்க்கும்போது அவை அரிசிவகைகளின் இனம், அளவு (Size), நிறத்திலும், அவை கொண்டுள்ள மாப்பொருள் வகைகளிலுமே (Amylose / Amylopectin) தங்கியுள்ளன. அத்துடன் அரிசிவகைகளில் தவிடு நீக்கும் அளவிலும் தங்கியுள்ளது. நன்றாக தீட்டப்பட்ட அரிசியிலும் பார்க்க தீட்டப்படாத  அரிசியே சிறந்தது.

ஒப்பீட்டளவில் எமது பாரம்பரிய அரிசி வகையான மொட்டைக்கறுப்பன் அரிசி வகை சிறந்தது.

மேற்குறிப்பிட்ட பாடலில் பச்சையரிசி எனக்குறிப்பிடப்பட்ட அரிசியானது அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த அரிசி இனமாகவும், உரலில் இடித்தெடுக்கப்பட்ட உடையல் அரிசியாகவோ அல்லது நன்றாக தீட்டப்படாத அரிசியாகவோ இருந்திருக்கும்.  பாரம்பரிய இனங்கள் அருகி தேர்ந்தெடுக்கப்பட்ட இனங்கள், மரபணுமாற்ற இனங்கள் என வகைகள் மாறியுள்ளதால் மருத்துவரது ஆலோசனையுடன் உண்ணும் அளவினை கருத்தில் கொள்ள வேண்டும்.

பச்சை அரிசி நோய்களின்போது பத்தியமாக பயன்படுத்தமுடியாது என்றும், வாதத்தை ஏற்படுத்தும், சோம்பலை ஏற்படுத்தும், பித்த எரிச்சலைப் போக்கும் (Neuritis), ஆனால் தேகத்துக்கு வலிமையைக் கொடுக்கும் என்கின்றன சித்தமருத்துவ பாடல்கள்.

“சுத்த வனிலமந்தந் தோன்றுமெரி பித்தம்போம்

பத்தியத்தி லெண்ணார்கள் பண்டிதர்கள் – மெத்தவுமே

வைச்ச சுமைதாங்க வலியுண்டாந் தேகத்திற்

பச்சரிசி யைப்புசித்துப் பார்”

–    பக். 249, பதார்த்தகுண சிந்தாமணி.

“பச்சரிசிச் சோறு பலங்கொடுக்கும் வாயுவென்பார்

நிச்சயமாய் பித்தத்தை நீக்குங்காண் – அச்சமற

மூத்திரக்கி ரிச்சரத்தை முன்பொழிக்குஞ் சேய்க்குமந்த

மாத்திரமுண் டாக்கும் வழுத்து”

– பக்.386,பதார்த்தகுண சிந்தாமணி.

ஆனால் இன்று நன்கு தீட்டப்பட்ட (Polished Rice) அரிசியே விரும்பப்படுகின்றது. இது ஒப்பீட்டளவில் பாரம்பரிய அரிசிப்பாவனைகளுடன் ஒப்பிடுகையில் ஆரோக்கியம் குறைந்ததாகவே காணப்படுகின்றது.

மேற்படி நெல்வகைகள், அரிசிவகைகள், அரிசிமாவைக் கொண்டு பொங்கல், பிட்டு, இடியப்பம், பலகாரங்கள் மற்றம் அவல், நெற்பொரி போன்ற நெற்தானியதத்தை அடிப்படையாகக் கொண்டு உணவு வகைகளாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

அரிசி சார்ந்த யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகள்

நெற்பொரி

பெருநெல்லுக் கரப்ப னோடு பேர்க்குங் கிரந்தி சேர்க்கும்

பரம்பிவற் றின்பொ ரிக்குப் பகர்சுரந் தாகம் வாந்தி

வெருவிடு மரிசி தன்னின் மேவிய தவிடு வாயு

உரம்மந்தஞ் சேர்க்கு மொவ்வா திரப்பவர் தமக்கு மோதில்”

– பக். 61, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

நெற்பொரி

பொதுவாக நெற்பொரியானது உணவாகப் பயன்படுத்தப்படாவிடினும் நோய்நிலைகளில் முக்கியமாக குழந்தைகள், சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்றது. காய்ச்சல், வாந்தி, கழிச்சல் போன்ற நிலைகளில் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கவும், காய்ச்சலினைக் குறைக்கவும் வீடுகளிலேயே நெற்பொரியினை அவித்து, அதன்மூலம் வரும் நெற்பொரித் தண்ணீரைக் கொடுப்பது நமது பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாகும். இதனை நெற்பொரிக் கஞ்சி என்பர். இதன் மூலம் தீரும் நோய்நிலைகளையே மேற்கூறிய சித்தர்பாடல் கூறுகின்றது.

இங்கு அரிசியின் மேல் கவசமாகக் காணப்படும் தவிடானது வாயுவைக் கூட்டும். இதனால் உடலில் பலவீனத்தால் ஏற்படும் உடல் வலிகள் தீரும். உடலுக்கு உரத்தைத் தரும். அதேவேளை சோம்பல் குணத்தையும் தரும். 28 கிராம் அரிசித் தவிட்டில் குறிப்பாக B வகை விற்றமின்கள் அதிகம் காணப்படுகின்றன.

அமெரிக்காவின் விவசாய திணைக்களத்தின் நாளாந்த தேவையான உணவுக்கூறுகளின் அளவுகளின் படி, 28 கிராம் தவிட்டில் ஒருவருக்கு நாளாந்தம்  தேவையான B வகை விற்றமின்களான தயமின் (B1 – Thiamine), நியாசின் (B3 – Niacin), பைரிடொக்சினன் (B6 – Pyridoxine)  என்பனவற்றின் நாளாந்த தேவையின் அரைப்பங்கு கிடைப்பதாக பேராசிரியர் Elizabeth Ryan கூறுகின்றார். அரிசித்தவிட்டில் புரதம் 12-15% காணப்படுகின்றது. அத்துடன் தேவையான அளவு நார்ச்சத்தும் காணப்படுகின்றது.

இதனாலேயே தவிடு நீக்காத அரிசி நமது பாரம்பரியத்தில் உள்ளது.  உடையல் எனப்படும் தவிடு நீக்காத அரிசியில் அரிசிமா தயாரிப்பது சிறந்தது.

அவல்

இரண்டு பங்கு நீர்விட்டு கொதிக்க வைத்து, அதில் சுத்தமான நெல்லைக்கொட்டி ஒரு முறை கொதித்தவுடன் சிறிது நீர்விட்டு இறக்கி ஓர் இரவு அப்படியே வைக்கப்படும். மறுநாள் நீரை வடித்து கொஞ்சம் கொஞ்சமாக வறுத்து, சூட்டுடன் உரலில் இட்டு நன்றாக இடிக்க உமி நீங்கி அரிசி தட்டையாகும். இதுவே அவல் ஆகும்.

பெரும்பாலும் கோயில் விழாக்களில் அவல் பிரதானமான பிரசாதமாகும். இலகுவாக உணவு தயாரிக்கக்கூடியதொன்றாகும். காலை உணவாக உட்கொள்ளப்படுகின்றது.

அவலுடன் பாலும் நெய்யும் சேர்த்துண்டால் உடலுக்குப் பலமும், தயிர் கலந்து உண்டால் சோர்வும் ஏற்படும். நீரில் ஊறவைத்து உண்டால் உடலில் வாயுவும் ஏற்படும், இதனால் உடல் உழைப்புள்ளவர்களுக்கு சிறந்தது. வயதானவர்களுக்கு வாதரோகிகளுக்கு நன்றன்று. மோரில் கலந்து உண்டால் தாகம், உடல் எரிவு இல்லாதுபோகும். புளிப்புப் பண்டங்களில் கலந்து உண்டால் பித்தரோகங்கள் இல்லாது போகும் என கீழ்வரும் சித்த மருத்துவப் பாடல் கூறுகின்றது.

“பானெய்சேர்த் துண்ணிற் பலமாம் ததிகண்மந்தந்

தானெய்து மோரயர்வு தாகமெரி – தேனிருக்கு

மம்புளியு மஞ்சுங்காலாகுமிரை யொழிவு

மெம்புளியும் பித்திலவலில்”

– பக். 405, பதார்த்த குணசிந்தாமணி

புழுங்கலரிசிச்சோறு, வடிகஞ்சி, குடிகஞ்சி

“புழுங்கலி னரிசிச் சோறு புசிக்கநன் றுரோகம் வாரா

வழங்குதென் பூமி யோர்கள் வண்மையாய் நானு முண்பர்

அழுங்கல்செய் வடிகஞ் சிக்கே யடைந்திடுங் கரப்பன் சீதம்

கொழுங்குடி கஞ்சி யுண்ணக் குறையுநோய் சுகமுடற்கே”

– பக்.62, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

புழுங்கலரிசிச் சோறு

உணவு ஒழுங்குவிதிகளுக்கு அமைய புழுங்கலரிசி சோறு உண்பவர்களுக்கு நோய்கள் வராது எனினும் இது ஏனைய காரணிகளிலும் தங்கியுள்ளது.

வடிகஞ்சி

வடிகஞ்சி என்பது சோறு சமைக்கும்போது  சோறு அவிந்தபின் வடித்து எடுக்கும் நீர். இக்கஞ்சியைக் குடிப்போருக்கு தோல் நோய்களும், உடலில் குளிர்ச்சியும் ஏற்படும். எனவே தோல் நோய் உள்ளவர்கள், குளிர் ஒத்துக்கொள்ளாதவர்கள் தனியே வடிகஞ்சியை குடிப்பது தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

குடிகஞ்சி

குடிகஞ்சி என்பது சிறிதளவு அரிசியினை நீரிலிட்டு  நன்றாக அவித்து நீராகாரமாக குடிப்பது ஆகும். இதற்கு தேங்காய்ப்பால், உப்பு என்பனவற்றை தேவையான அளவு  சேர்க்கலாம். இது உப்புக்கஞ்சி என்றும் சொல்லப்படும்.

இவ்வாறான கஞ்சியினைக் குடிக்கும்போது நோய்கள் குறைந்து சுகமுண்டாகும்.

கஞ்சி அன்னத்தின் குணம்

வடித்தகஞ்சியும் கஞ்சியின் அன்னமும்  கீழ்வரும் பாடல் மூலம் குறிப்பிடப்படுகின்றது.

“கஞ்சியன்னத்திற் காயம்பருத்திடு

மஞ்சிவெப்பமகலுஞ் சிலேத்துமமோ

டுஞ்சிற்றிடு மேனிமினுத்திடும்

பஞ்சிபோலப் பறந்திடும்பித்தமே”

– பக்.395, பதார்த்தகுண சிந்தாமணி.

அரிசிக்கஞ்சி வகைகள்

01.  புளிக்கஞ்சி
புளிக்கஞ்சி

யாழ்ப்பாணத்தில் புளிக்கஞ்சியானது காய்ச்சல் உள்ளபோது, நோய்கள் வந்து மாறியபின், உடல் அசதி ஏற்படும்போது கொடுக்கப்படுகின்றது. இது உடலில் பசியைத் தூண்டுவதுடன், வியர்வையையும் உண்டு பண்ணுகின்றது. நோய்நிலைகளில் வாயில் உணவு உட்கொள்ளமுடியாத நிலைகளில் புளிக்கஞ்சி வாய்க் கைச்சலை இல்லாது செய்கின்றது.

புளிக்கஞ்சி செய்முறை

தேவையான பொருட்கள்

1.   புழுங்கல் அரிசி – 200 கிராம்

2.   புளி 50 கிராம்

3.   முருங்கை இலை  – தேவையான அளவு

4.   மிளகு -10 கிராம்

5.   சீரகம் – 10 கிராம்

6.   செத்தல் மிளகாய் –  3 – 5 (தேவையான அளவு)

7.   உள்ளி – 01 கப்

8.   சின்ன வெங்காயம் – ½ கப்

9.   நீர் – 750 மி.லீ

10. உப்பு – தேவையான அளவு

நீரினை நன்றாகக் கொதிக்கவைத்து நன்கு கொதித்தபின் அரிசியினை அதனுள்போட்டு அரிசியை நன்கு அவிய விடவேண்டும்.

அரிசி நன்கு அவிந்தபின் கரைத்து வைத்துள்ள புளியினை அதனுடன் சேர்த்து கொதிக்கவைத்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், உள்ளி என்பவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கஞ்சி கொதித்து வர தூளாக்கிய மிளகு, சீரகம், மல்லி என்பவற்றை இட்டு கொதிக்கவிட்டு இறக்கியபின் தேவையான அளவு உப்பினைச் சேர்த்தல் வேண்டும்.

அடுப்பில் இருந்து இறக்கியபின் உப்பினைச் சேர்த்தல் என்பது பாரம்பரிய முறைகளில் இல்லை என்றாலும் இன்றைய காலத்தில் அயோடின் கலந்த உப்பினை பாவிக்கும் பொது அடுப்பில் இருந்து இறக்கியபின்னர் உப்பினைச் சேர்த்துக் கொள்வது அயோடின் இழப்பினை தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.

புளிக்கஞ்சிக்கு கூனிஇறால், இறால், நெய்த்தலி கருவாடு சேர்த்தும் செய்யப்படும்.

02.  பாற்கஞ்சி

பச்சரிசிக்கு பால் சேர்த்துக் காய்ச்சி தேவையான அளவு சீனி சேர்த்து குடிக்கலாம். இங்கு பால் எனப்படும்போது பசுப்பாலே நூல்களில் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் பசுப்பாலுக்கு பதிலாக தேங்காய்ப்பாலே பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

சித்திரை மாதத்தில் சித்திரைப் பௌர்ணமியில் கோயில்களில் காய்ச்சப்படும் கஞ்சியான சித்திரைக் கஞ்சியும் பாற்கஞ்சி வகை ஆகும்.

பாற்கஞ்சியானது பித்த எரிவை நீக்கி, புத்தியையும், விந்துவையும் விருத்தியாக்கும் என கீழ்வரும் சித்தமருத்துவப் பாடல் கூறுகின்றது.

“சுரை தருபாலில் வெந்த சோறுகஞ்சிகொள்ளி

லெரிதரு பித்தந்தாழு மெழுமதிவிந்துவுந்தான்

பொரிதருகஞ்சி பித்தம் போக்கிடும்சுடுகஞ்சிக்குத்

தரிதருமலமும்வாய்வுந் தாகமும்போகுங்காணே”

– பக்.394, பதார்த்தகுண சிந்தாமணி.

பொதுவாக பாற்கஞ்சிக்கு சிறுபயறு, உழுந்து போன்றன சேர்க்கப்படும். பயறு கட்டாயம் சேர்க்கப்படுகின்றது. சிறுபயறு, உழுந்து, பச்சரிசி சேர்க்கும்போது சித்தமருத்துவ ரீதியாக பித்தரோகங்கள், வாதத்துடன் கூடிய கபரோகங்களை  குணப்படுத்துவதுடன் உடலுக்கு பலத்தையும் கொடுக்கின்றது என கீழ்வரும் பாடல் விளக்குகின்றது.

“சிறுபருப்புக் கஞ்சி பித்தந் தீர்க்கு முழுந்தி

னுருபருப்புக் கஞ்சி வளிக் கூக்க – முறியகபம்

பச்சரிசிக் கஞ்சி பவனகபத்தைப் போக்குங்

கைச்சிறுக்குங் கொங்கைமின்னே காண்”

– பக்.395, பதார்த்தகுண சிந்தாமணி.

03.  புனற்பாக கஞ்சி

தீவிர நோய்நிலைகளில் நோய்க்குப் பத்தியமாகக் கொடுக்கக்கூடியது.  கஞ்சியை மீள மீள வடித்து நீரினை வெளியகற்றி, சோறு நன்றாகக் கரைந்து நீராக வரும்வரை மீள மீள புதிதாக நீர்விட்டு காய்ச்சி எடுத்து நீராகாரமாக வழங்கப்படும் கஞ்சி ஆகும். இதனை சித்தமருத்துவம்  “தாரக பத்தியம்”  என்கிறது.

இதன்மூலம் மனித உடலில் இயக்கத்துக்கு பொறுப்பான முத்தாதுக்களான வாதம், பித்தம், கபம் என்பன சமநிலைப்பட்டு ஆரோக்கியம் மேலோங்கும், சுரவெப்பம் அகலும், நோயாளிக்கு இலகுவாக சமிபாடு அடைந்து உடலுக்குத் தேவையான சக்தி உடனே கிடைக்கின்றது என கீழ்வரும் பாடல் கூறுகின்றது.

“புனற்பாக முத்தோடம் போக்கு மருந்தி

னனற்பாகந் தன்னை யடக்குங் – தனிக்குணங்க

ளும்மட்டோ வாய்க்கிதமா மாரோக்கியங் கொடுக்குங்

கம்மிட்ட பூவனமே காண்”

– பக். 395, பதார்த்தகுண சிந்தாமணி.

மேற்கூறிய விடயங்களையே யாழ்ப்பாண சித்தமருத்துவ நூலான அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி நூலில் உள்ள பாடலும் உணர்த்துகின்றது.

 “புனற்பாகக் கஞ்சி யோடு புகலுமச் சோறு தன்னை

இனையுநோ யுற்ற பேர்கட் கீயநன் றீவ தற்கு

நனிபழ வரிசிச் சோறு நாடநாடாது நோயைத்

தினப்புது வரிசிச் சோறு சேர்க்குநோய் செரித்திடாதே”

– பக்.65, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

04.  இலைக்கஞ்சி

சாதாரணமாக செய்யப்படும் கஞ்சிக்கு மருத்துவ குணமுள்ள, ஊட்டச்சத்துள்ள இலைவகைகள், தானியங்கள் சேர்த்து இலைக்கஞ்சியாக தேவைக்கேற்றவாறு செய்தல் ஆகும். இங்கு மூலிகைகள் சாறாக சேர்த்துக் கொள்ளப்படுவதே பயன்மிக்கதாகும்.

தானியங்களில் பயறு, உழுந்து பொதுவாக சேர்க்கப்படுகின்றன. இவை முளைக்கவிடப்பட்டு முளைவிட்ட தானியங்களாக சேர்க்கும்போது கூடுதலான, பலவகைப்பட்ட ஊட்டச்சத்துகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

01. பச்சையரிசி  – 200 கிராம்

02. தேங்காய்ப் பால் – 250 மி.லீ

03. முளைவிட்ட பயறு / முளைவிட்ட உழுந்து – 50 கிராம்

04. இலைவகைச் சாறு   – 250 மி.லீ

05.  நீர் – 500 மி.லீ

06. உப்பு – தேவையான அளவு

07. இஞ்சி, உள்ளி, மிளகு, நற்கீரகம் – தேவையான அளவு

அரிசி முக்கால் பதம் அவிந்து வரும்போது முளைவிட்ட பயறினையும் சேர்த்து நன்கு அவியவிடவேண்டும். நன்கு அவிந்தபின்னர் தேங்காய்ப்பால், இலைச்சாறு என்பவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்தல் வேண்டும்.

சேர்க்கக்கூடிய இலைவகைகள் அல்லது மூலிகைகள்

பொதுவாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வல்லாரை, பொன்னாங்காணி, சாத்தாவாரி, முருங்கை இலை, கீரைவகைகள் போன்றன சேர்க்கப்படும். இவற்றைவிட நோய்களுக்கு பலவீனங்களுக்கு தகுந்தமாதிரி மூலிகைச்சாறுகள் சேர்க்கப்படும்.

01. வாத ரோகங்கள் சந்தானவிருத்திக்கு – முடக்கறுத்தான். (புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இக்கஞ்சி உகந்தது.)

02. சுவாசத்தொகுதி தொடர்பான நோய்களின்போது மொசுமொசுக்கை, தூதுவளை போன்றன.

03. சிறுநீரகக்கல் போன்ற நோய்நிலைகளில் சதைகரைச்சான், முள்ளங்கி, போஞ்சி போன்றன.

04. நீரிழிவு நோயுள்ளவர்கள் குறிஞ்சா, சிறுகுறிஞ்சா, ஆவரசு இலை, பிஞ்சு போன்றன

05. பழஞ்சோற்றுக்கஞ்சி

“பழஞ்சோற்றை யந்தப் பழைய நீராகரக்

கொழுஞ்சேர்க்கை யோடுதயங் கொள்ளி – லெழுந்தாது

பித்தவாதம்போ பெரும்பசியா மெய்யெங்கு

மெத்தவொளி வுண்டாம் விரி”

– பக்.397, பதார்த்தகுண சிந்தாமணி.

இரவில் நீர்விட்டு வைத்த அன்னத்தை காலையில் அருந்தினால், விந்துவிருத்தியும், உடல் ஒளிபெற்று அழகும் பெறும். நன்கு பசி ஏற்படும். உளரோகங்கள் குறையும் என பழஞ்சோற்றுக் கஞ்சியின் குணங்களை மேற்கூறய பாடல் கூறுகின்றது.

பழஞ்சோற்றுக் கஞ்சியின் குணங்களை யாழ்ப்பாண சித்தமருத்துவ நூலான அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பழஞ்சோற்றுக்கஞ்சியானது பித்த உடலமைப்பு கொண்டோருக்கு சிறப்பானது என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பழஞ்சோற்றுக்கு தண்ணீர்விட்டு 24 நிமிடங்களுக்குள் பருகிடவேண்டும் என நேர வரையறையும் குறிப்பிடப்ட்டுள்ளது.

“நிகழ்த்திய சோறு தன்னி னீர்விட்டே யோர்நா ழிக்குள்

புகழ்ச்சியாய்ப் பித்த தேகி புசித்திட வினிமை யாகும்

மகிழ்ச்சிசேர் பழைய கஞ்சி மருவுமித் தன்மைத் தேயாம்

இகழ்ச்சியில் லாமற் கால தேயத்தா லிவற்றை யோரே”

– பக்.62, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.

மேற்கூறியவாறு தமிழ்மருத்துவ வழிகாட்டலுக்கு அமைவாக நமது பாரம்பரிய உணவுப்பழக்கங்களுக்குள் இருந்து ஆரோக்கியத்தை கொடுத்த பழஞ்சோற்றுக் கஞ்சியானது இன்று உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

American nutrition association கூறும் பழஞ்சோற்று கஞ்சியின் பயன்கள்
பழஞ்சோற்று கஞ்சி

01. சாதாரண சோற்றினை விட அதிகளவான  ஊட்டச்சத்துக்களைக் கொண்டது.

சோற்றினை நீர்விட்டு புளிக்கவைக்கும்போது சாதாரண சோற்றில் உள்ள இரும்புச்சத்தைவிட 21 மடங்கு அதிகரித்த இரும்புச்சத்து காணப்படுகின்றது. உதாரணமாக 100 கிராம் சோற்றில் 3.4 மில்லிகிராம் இரும்புச்சத்தின் அளவானது 73.91 மில்லிகிராம் ஆக மாறுகின்றது.

02. பல்வேறுவிதமான உடல்நலக்குறைபாடுகளுக்கு மருந்தாகின்றது.

பழஞ்சோற்றுக் கஞ்சியில் உருவாகும் உயிர்ச்சத்து B12 ஆனது சோர்வு, களைப்பு போன்ற உடற்பலவீனங்களைக் குறைக்கும்.

பழஞ்சோற்றுநீர் நோய்களில் இருந்து விரைவில் குணமடையக்கூடியவாறு உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது. இதில்  உருவாகும் B வகை உயிர்ச்சத்துக்கள் குடற் புண்களை ஆற்றுகின்றன. பொற்றாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது. மக்னீசியமும் செலனியமும் என்புகளை வன்மையாக்குகின்றன.

நொதித்தலின்போது உருவாகும் பற்றீரியாக்கள் இரைப்பையின் அமில-கார சமநிலையைப் பேணுகின்றன. இதன்மூலம் உடலுக்கு நன்மைதரும் பற்றீரியாக்கள் (Probiotics) வளர்ச்சிக்கு உதவுகின்றன.

இந்நன்மை தரும் பற்றீரியாக்களின் (Probiotics) பயன்கள்.

·        சீரான குடல் அசைவுகளுக்கு உதவுகின்றன.

·        மிதமான மலமிளக்கியாக செயற்படுவதன் மூலம் மலக்கட்டு ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கின்றன.

03. பழங்சோற்றுக் கஞ்சியில் காணப்படும் உயிர்ச்சத்து E, Ferulicid என்பன தோற்சுருக்கத்தை குறைப்பதாகவும், தலைமயிர் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.  இதில் இவை Antioxidant ஆக செயற்படுவதன் மூலம் நரைதிரை மூப்பின்றி வாழ உதவுகின்றன.

04. தலைமுழுகும்போது Shampoo பயன்படுத்திய பின்னர் கஞ்சியை பயன்படுத்தினால் முழுகும்போது தலைமயிர் ஆரோக்கியமானதாகவும் உறுதியானதாகவும் மாறுகின்றது.

05. பழஞ்சோற்றில் lactic acid அதிகமாகக் காணப்படுகின்றது. இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகின்றது.

06.  சரக்குக் கஞ்சி

சரக்குக் கஞ்சி என்பன கூடுதலாக மல்லி, நற்சீரகம் சோந்ததாக இருக்கும். சாதாரணமாகவும், எல்லாவிதமான நோய்நிலைகளிலும் வழங்கப்படலாம். இக்கஞ்சியில் மிளகாய்சார்ந்த பொருட்கள் சேர்க்கப்படமாட்டாது.

செய்முறை

அரிசி நன்கு அவிந்தபின்னர் அரைத்து வைத்திருக்கும் ஏனைய பொருட்களை சேர்த்து நன்கு அவிய கொதிக்கவைத்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். விரும்பியவர்கள் நெய்த்தலி கருவாடும் சேர்க்கலாம்.

சேரும் பொருட்கள்

1.   புழுங்கல் அரிசி – 200 கிராம்

2.   கொத்தமல்லி – 25 கிராம்

3.   நற்சீரகம் – 15கிராம்

4.   மிளகு -10 கிராம்

5.   மஞ்சள் – 10 கிராம்

6.   அரைத்த தேங்காய்ச்சொட்டு – சிறிதளவு

7.   இஞ்சி – சிறுதுண்டு

8. உள்ளி – தேவையான அளவு

9. சின்ன வெங்காயம் – தேவையான அளவு

10. நீர் – 750 மி.லீ

11. உப்பு – தேவையான அளவு

(கஞ்சிவகைகளின் தயாரிப்புமுறைகள், சேரும் பொருட்கள் யாழ்ப்பாணத்தின் உள்ளேயே இடத்துக்கு இடம் சிறு மாற்றங்களைக் கொண்டிருக்கும்.)

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

22841 பார்வைகள்

About the Author

தியாகராஜா சுதர்மன்

தியாகராஜா சுதர்மன் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ பட்டதாரியும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டதாரியும், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் உளவளத்துணை டிப்ளோமா பட்டதாரியும் ஆவார்.

அரச சித்த மருத்துவ உத்தியோகத்தராகப் பணிபுரியும் இவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார். இவர் 'ஆகாரமே ஆதாரம்' எனும் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)