ஒரு ‘சமூகம்’ என்பது எதனைக் குறிக்கும்?
‘ஒரு சமூகம் என்பது அதன் அங்கத்தவர்களை அடையாளங்காட்டுவதும், அவர்களுக்கிடையிலான ஒற்றுமையை நிர்ணயிப்பதுமான பொதுவான நோக்கம், நம்பிக்கைகள், விருப்பங்கள், தேவைகள், அத்தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கு அச்சமூகத்திற்குக் கிடைக்கப்பெறும் சாதனங்கள் என்பவற்றைக் கொண்டதாக இருக்கும். துரதிஷ்டவசமாக பெருந்தோட்ட மக்களிடையே மேற்படி அம்சங்கள் இன்றுவரையும் போதுமான அளவு வளர்ச்சியடையாத நிலையிலேயே காணப்படுகின்றன. கடந்த சுமார் நான்கு தசாப்த காலப்பகுதியில் இச்சமூகத்தில் பல மாற்றங்களும் அபிவிருத்திகளும் ஏற்பட்டு வந்துள்ளபோதும், அதன் அடிப்படையான பண்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அதாவது, அது இன்னும் ஒரு முழுமையான சமூகமாக வளர்ச்சியடையாத நிலையில் உள்ளதாகவே தோன்றுகின்றது. இந்நிலையில், எந்த ஒரு அபிவிருத்தி முன்னெடுப்பும் அவர்களுக்கு நன்மை பயக்கவேண்டுமாயின் முதலில் அவர்கள் தம்மை ஒரு சமூகமாக வளர்த்துக்கொள்வதோடு, அதில் முதிர்ச்சியும் அடையவேண்டியது இன்றியமையாததாகும்.
‘சமூக அபிவிருத்தி’ என்பது யாது?
ஒரு சமூகத்தின் வேறுபட்ட வாழ்வியல் அம்சங்களில் ஏற்படும் முன்னேற்றகரமானதும் நேர்மறையானதுமான மாற்றங்களே, பரந்த ஒரு கருத்தில், ‘சமூகஅபிவிருத்தி’ எனப்படும். அது சமூகநடத்தைகள், சமூகஉறவுகள், சமூகத்தாபனங்கள் என்பவற்றோடு தொடர்புபட்ட ஒன்றாகும். அவற்றிலேற்படும் முன்னேற்றகரமான மாற்றங்களே, அதாவது, அச்சமூகத்தில் ஏற்படும் சமூக – பொருளாதார பரிணாம வளர்ச்சி, சமூக முன்னேற்றம் என்பனவே ‘சமூக அபிவிருத்தியாகும். ஒரு சமூகத்தில் இவ்வித மாற்றங்கள் ஏற்படவேண்டுமாயின், அச்சமூகத்தில் இருக்கும் வறியமக்கள் தம்முள் பொதிந்துகிடக்கும் ஆக்கத்திறன்களை வெளிக்கொணர வேண்டும். நடைமுறையிலுள்ள சமூக–பொருளாதார யதார்த்தத்தை தமக்குச்சாதகமாக மாற்றி அமைத்துக்கொள்வதன் மூலமே அவர்கள் இதனை அடைந்து கொள்ளமுடியும். சமூகநடவடிக்கைகளில் ஒரு சமூகத்தின் அங்கத்தவர்களது நேரடியான பங்கெடுப்பு இன்றி இது சாத்தியப்படமாட்டாது. அதேவேளையில், அச்சமூகம் தன்னைத்தானே வலுப்படுத்திக்கொள்வதும் அவசியமாகும். இது ‘சுயவலுப்படுத்தல்’ (self-empowerment) எனப்படும். சமூக அணிதிரட்டல் (Social Mobilization) நடவடிக்கைகளின் மூலமே ஒரு சமூகம் தன்னை வலுப்படுத்திக்கொள்ள முடியும்.
வறியமக்கள் தம்மை குழுக்களாக இணைத்துக்கொண்டு கூட்டுநடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் தமக்கிடையே ஏற்படுத்திக்கொள்வதே இச்சுயவலுப்படுத்தலாகும். எனவே, கூட்டுநடவடிக்கைகள் சமூகவலுப்படுத்தலுக்கான ஒரு முக்கிய அடிப்படை எனலாம். கூட்டுநடவடிக்கைகளின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஒரு சமூகம் பெற்றுக்கொள்ளும் ஆற்றலை அது குறிக்கும். ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட வறிய மக்கள்குழுக்கள் அதினின்றும் விடுபடுவதற்கு தம்மை சுயவலுப்படுத்திக்கொள்வதே சிறந்த வழியாகும் என்பதையும், அவ்வாறு தம்மை வலுப்படுத்திக்கொள்வற்கு தாமே பொறுப்பு என்பதையும், குறிப்பிட்ட சமூகத்திற்கு வெளியே உள்ளவர்களால் இவ்வித சுயவலுப்படுத்தலை ஏற்படுத்த முடியாது என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும். எனினும் புதிய சிந்தனைகள், செயல்முறைகள் என்பவற்றை அம்மக்களிடையே பரப்புவதன் மூலம் சமூகவலுப்படுத்தலுக்கான அம்மக்கள் குழுக்களது விழிப்புணர்வு மட்டத்தை உயர்த்துவதில் வெளியார் முக்கிய பங்கு ஆற்றலாம். அதாவது, தாம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை அவர்கள் இனங்கண்டு கொள்வதற்கும், அவற்றை எதிர்கொள்வதற்கு தம்மை வலுப்படுத்திக்கொள்வதற்கும் தாமே பொறுப்பு என்பதை அச்சமூகத்தின் தலைவர்களும் ஏனைய அங்கத்தவர்களும் விளங்கிக்கொள்வதற்கும் வெளியார் உதவலாம். ஒரு சமூகத்தைச்சேர்ந்த வீட்டுத்துறையினரும் தனிநபர்களும் சமூகரீதியானதும் அரசியல்ரீதியானதுமான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமே தம்மை வலுப்படுத்திக்கொள்ளலாம். தமது பிரச்சினைகளுக்குப் பொறுப்பானவர்கள் எனத்தாம் கருதும் சக்திகளை நேரடியாக எதிர்கொள்வதற்கான ஆற்றலை சமூகவலுப்படுத்தலின் மூலமே அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒரு சமூகத்தின் அங்கத்தவர்கள் தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தமக்கிடையே கூட்டங்களை ஏற்பாடு செய்வதும், உள்ளூர் அதிகாரக்கட்டமைப்புக்கள், சமூகப்பிரச்சினைகள், மனிதத்தேவைகள் என்பன தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் அவற்றை இனங்காணுவதும் அபிவிருத்திக்குத் தேவையானவையாகும். தனிமனிதரும் சமூகக்குழுக்களும் தமது சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான வினைத்திறன்களைப் பெற்றுக்கொள்வதற்கு இது உதவும். அதேபோன்று, பொதுவானதொரு நிகழ்ச்சி நிரலைக்கொண்ட சமூகக்குழுக்களை உருவாக்குவதன் மூலம் தமது அரசியல் சக்தியைக் கட்டிஎழுப்பிக் கொள்வதற்கும் இவ்வினைத்திறன்கள் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ஒரு மக்கள் குழுவினரது சமூக அபிவிருத்தியானது அம்மக்கள் வாழுகின்ற பொதுவான சூழலினாலேயே நிர்ணயிக்கப்படும். ‘பொதுவான சூழல்’ என்பது இங்கு அச்சமூகம் வாழுகின்ற சமூக – கலாச்சார – பொருளாதார சூழலைக்குறிக்கும். அப்படியாயின், இம்மக்களிடையே சமூகஅபிவிருத்தி ஏற்படுவதற்கு உந்துதல் அளிக்கக்கூடிய ஒரு சமூக – கலாச்சார – பொருளாதார சூழல் அங்கு உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். சமூக உறுதிப்பாடு, தேவைக்கேற்ப சூழலை மாற்றிக்கொள்ளக்கூடிய தன்மை என்பவற்றோடு, உறுதியான சமூக–பௌதீக உட்கட்டமைப்பு வசதிகளும் காணப்படுதல் ஒரு சிறந்த சூழலின் பண்புகளாகும். சமூக அபிவிருத்திக்குத் தடையாக உள்ள காரணிகள், சமூகச்சூழலில் காணப்படும் பின்னடைவுகள் என்பவற்றை இனங்கண்டு அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அங்கு காணப்படும் சமூக மட்டத்தாபனங்களை (Community-Based Organizations–CBOs) வலுப்படுத்துதல், அவை இல்லாத இடங்களில் புதியவற்றை உருவாக்குதல் என்பவற்றினூடாக மக்கள் தம்மை சுயவலுப்படுத்திக் கொள்வதற்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்குவதை அது குறிக்கும். சமூக அபிவிருத்திக்கு மக்களிடையே காணப்படும் தேவை, சமூகஅபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு ஒரு சமூகத்திற்கு காணப்படுகின்ற வரையறைகள், இடர்ப்பாடுகள் என்பவற்றோடு சமூகஅபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு அங்கு காணப்படும் வாய்ப்புக்களும் இனங்காணப்படவேண்டும்.
இலங்கையின் பெருந்தோட்டச் சமூகம்
இலங்கையின் பெருந்தோட்டச் சமூகமானது நிறைவேற்றப்படாத பல மனிதத்தேவைகளையும், தரங்குன்றிய ஒரு வாழ்க்கைமுறையையும் கொண்டதாக சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்துள்ளது. நாட்டின் ஏனைய சமூகங்களிலிருந்து இச்சமூகத்தை தனிமைப்படுத்திவைத்த பல்வேறு வரலாற்று ரீதியான காரணங்களினாலேயே அது இந்த நிலைக்கு தள்ளப்பட்டது. பல பெருந்தோட்டங்கள் நாட்டின் பிரதான தெருவமைப்புகளிலிருந்து தொலைதூரங்களில் மலைப்பாங்கான பிரதேசங்களில் அமைந்துள்ளதால் அங்கு வாழ்ந்துவரும் மக்கள் புவியியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டனர். வணிக அமைப்புக்களாக இருக்கும் இத்தோட்டங்களில் பெருமளவு தொழிலாளரும் அவர்களது குடும்பத்தாரும் வாழ்ந்துவரும் நிலையில் தோட்டங்களுக்குத்தேவையான தொழிலாளரின் கிரமமான வேலைவருகையை உறுதி செய்துகொள்வதற்காக தோட்டமுகாமைகள் தோட்டஎல்லைகளுக்குள்ளேயே அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின. எனவே, ஒவ்வொரு தோட்டமுகாமையும் தத்தமது தொழிலாளர்களுக்கு லயன்அறை வடிவிலான இருப்பிடவசதிகளையும், வாழ்க்கைக்குத் தேவையான வேறுபல அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தன. ஆயினும் இந்த வசதிகள் பெரிதும் தரங்குன்றியனவாக இருந்தன. மேற்படி வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் தோட்டமுகாமையாளர் இம்மக்களது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைத் தமது நேரடிக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடியதாக இருந்தது. பல தசாப்தங்களாக நீடித்துவந்த இவ்வித வாழ்க்கைமுறையின் காரணமாக தமது வாழ்க்கைத்தேவைகள் பலவற்றிற்கு இம்மக்கள் தோட்டமுகாமையிலேயே தங்கியிருக்கும் ஒரு மனப்பாங்கை வளர்த்துக்கொண்டனர். இது ஏனைய சமூகங்களிலிருந்து அவர்களது தனிமைப்படுத்தலை மேலும் உறுதிப்படுத்துவதாக இருந்தது. அத்துடன், இவ்வித தனிமைப்படுத்தலும் தோட்டமுகாமையில் தங்கியிருக்கும் மனப்பாங்கும் இம்மக்கள் தம்மை முழுமையான ஒரு சமூகமாக வளர்த்துக்கொள்வதற்கு பெரும் தடையாக இருந்தன. அவர்களிடையே மிகமோசமான சமூக–கலாசார நிலையொன்று உருவாகுவதற்கும் அதுவே காரணமாயிற்று.
மேலும், அவர்களது அரசியல்-பொருளாதார வறுமைநிலை காரணமாக நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் நாட்டில் ஏற்பட்டு வந்த சமூக-பொருளாதார அபிவிருத்தியின் ஒரு சில நன்மைகளை மட்டுமே அவர்கள் அனுபவிக்கக்கூடியதாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்ட சமூகத்தின் வரலாற்றுரீதியான தனிமைப்படுத்தலானது 1949 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழி மக்களது குடியுரிமைச்சட்டத்தின் மூலம் அவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டபோது முழுமையடைந்தது. குடியுரிமை பறிக்கப்பட்டதால் அடுத்து வந்த நான்கு தசாப்தங்களுக்கு அவர்கள் தமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் அரசியல் அதிகாரத்தைப்பகிர்ந்து கொள்ளும் உரிமையையும் இழந்தனர். இதனால் தமது சொந்த விவகாரங்களிற் கூட தீர்மானங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போயிற்று. எண்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அவர்களுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்படும் வரை இந்தநிலை நீடித்துவந்தது.
பெருந்தோட்டமக்களிடையே சமூக அணிதிரட்டலின் இன்றைய நிலை
பெருந்தோட்டமக்களிடையே சமூக அபிருத்தி நடவடிக்கைகளை செயற்படுத்துவதில் இப்பொழுது பல்வேறு பிரிவினர் ஈடுபாடு காட்டிவருகின்றனர். அரசாங்கநிறுவனங்கள், பெருந்தோட்ட மனிதஅபிவிருத்தி நிதியம் (Plantation Human Development Trust – PHDT), உள்நாட்டு, வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் (Non-Governmental Organizations–NGOs), தொழிற்சங்கங்கள், சமூகமட்டநிறுவனங்கள் (CBOs) என்பவற்றை இங்கு விசேடமாகக் குறிப்பிடலாம்.
அரசநிறுவனங்களும் முகவர்தாபனங்களும்
தேசியமட்டத்தில் சில அமைச்சுக்களும் அரசநிறுவனங்கள் சிலவும் பெருந்தோட்டச் சமூகத்தின் சமூக அபிவிருத்திக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அண்மைக்காலம்வரை, பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்தவர்களை அமைச்சர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வீடமைப்பு – தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு (1997), சமூகஅபிவிருத்தி அமைச்சு (2001) என்பன அம்மக்களது சமூகநலனையும் சமூகஅபிவிருத்தியையும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தன. தோட்டப்புறங்களில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதிருப்பதும், இருக்கும் ஒரு சில வசதிகளும் பல குறைபாடுகளைக் கொண்டனவாக இருப்பதும் சமூக அபிவிருத்தியில் தோட்டமக்கள் பின்தங்கி இருப்பதற்கான முக்கிய காரணங்கள் என்பது உணரப்பட்டபோதே தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது. தோட்டப்பகுதிகளில் அரசாங்கம் மேற்கொள்ளும் சமூகநலன்சேவை முயற்சிகளைப் பலப்படுத்துவது அதன் நோக்கமாகவிருந்தது.
இதனைத்தொடர்ந்து, சமூக அபிவிருத்திக்கான புதிய அமைச்சொன்று ‘சமூக அபிவிருத்திக்கும் சமூக சமத்துவமின்மை ஒழிப்பிற்குமான அமைச்சு’ என்ற பெயரில் தாபிக்கப்பட்டது. இந்த அமைச்சு நாட்டிலுள்ள வசதிகுறைந்த சமூகங்கள் அதிலுங்குறிப்பாக, பெருந்தோட்டச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருந்தது. கல்வி, மற்றும் சமூக வசதிகளை மேம்படுத்துவதற்கான பொறுப்பு இந்த அமைச்சிடம் கையளிக்கப்பட்டதோடு, இந்த அமைச்சுக்கு அமைச்சரவை அந்தஸ்தும் அளிக்கப்பட்டது. எனினும், 2010 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசு மேற்படி இரு அமைச்சுக்களையும் கலைத்துவிட்டு முக்கிய பெருந்தோட்டத்தலைவரை அமைச்சராகக் கொண்ட இளைஞர் வலுவூட்டல், சமூக – பொருளாதார அபிவிருத்தி என்பவற்றிற்கான ஒரு புதிய அமைச்சைத்தாபித்தது. சமூக அபிவிருத்தி அமைச்சு போன்றே இளைஞர் வலுவூட்டல் அமைச்சும் பெருந்தோட்டத்துறைக்கென விசேட அதிகாரங்களைக் கொண்டிராதபோதும், அதன் செயற்றிட்டங்கள் பெருந்தோட்டத்துறையை மையமாகக்கொண்டனவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிற்குப் புறம்பாக, பெருந்தோட்ட அமைச்சும் கல்வி, சுகாதாரம் என்பன சார்ந்த துறைகளில் சில சேவைகளை ஆற்றிவருகின்றது. மேலே குறிப்பிட்டவாறு விசேட அமைச்சுக்களினூடாக தோட்டமக்களின் சமூகநலன், சமூக அபிவிருத்தி என்பவற்றிற்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டபோதும், தோட்டமக்களது சமூகநலனை மேம்படுத்துவதிலும், சமூகஅபிவிருத்தியை ஏற்படுத்துவதிலும் மேற்படி அமைச்சுக்கள் எந்தளவு பங்காற்றின, எந்தளவு பங்காற்றுகின்றன என்பது ஆய்விற்குரிய ஒரு விடயமாகும். மாகாணமட்டத்தில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் விசேட மாகாணமட்ட அமைச்சுக்கள் செயற்பட்டுவந்தன. ஆனால், மாகாணசபை வரவுசெலவுத்திட்டங்களில் தோட்டச்சமூகத்திற்கென விசேட நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதில்லை. அதேபோன்று, பிரதேசசபைத் தேர்தல்களில் தோட்டமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருப்பதோடு, அச்சமூகத்தைச்சேர்ந்த சிலர் பிரதேசசபைப் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டபோதும், பிரதேசசபைகள் தோட்டச் சமூகத்தின் அபிவிருத்திக்கென எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு பிரதேசசபைச்சட்டம் தடையாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பிரதேசசபைகளிடம் இருந்து தமக்குக் கிடைக்கும் சிறியஅளவு நிதியை மட்டுமே இப்பிரதேசசபைப் பிரதிநிதிகள் தோட்டப்பகுதிகளுக்கு செலவிடக்கூடியதாக உள்ளது. அண்மையில் இச்சட்டவிதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம்
தனியார்மயமாக்கலுக்கு முன்னர் காணப்பட்ட பெருந்தோட்டமுகாமையின் இறுக்கமான படிமுறைஅமைப்பின் கீழ் இருப்பிடவசதி, பல்வேறு அடிப்படை வசதிகள், வேறு சமூகநலன்சேவைகள், வாழ்வாதாரம் என்பவற்றிற்கு பெருந்தோட்டச்சமூகம் முற்றுமுழுதாக தோட்டமுகாமையிலேயே தங்கி இருந்தது. ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நடைமுறையில் இருந்துவந்த இந்த முகாமைமுறையின் கீழ், தோட்டமக்கள் ஒரே இடத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களால் தம்மை ஒரு சமூகமாக வளர்த்துக்கொள்ள முடியவில்லை. சுய-உதவி (Self–help) அணுகுமுறைகளை ஊக்குவிப்பதற்கு இந்த முகாமைமுறையானது சாதகமாக இல்லாதிருந்தமையே இதற்கான முக்கிய காரணமாகும். எனினும், பெருந்தோட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் பெருந்தோட்டமக்களுக்கு சமூகநலன் சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட மனிதஅபிவிருத்தி நிதியம் சமூகநலன் சேவைகளை வழங்குவதில் அதன் மூலம் நன்மையடைவோர் “சுய – உதவி” செயற்பாட்டின் மூலம் அதில் பங்குபற்றுவதை ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. உதாரணமாக, வீட்டுக்கழிவறைகளை நிர்மாணிப்பதில் தனிப்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பங்குபற்றுவதை அது ஊக்குவிக்கின்றது. பங்குபற்றல் வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் மக்களது இயலளவைக்கட்டி எழுப்புவதற்கு இந்த நிதியம் முயலுகின்றது. உற்பத்தித்திறன் வாய்ந்ததும், சுயமாகத் தங்கியிருப்பதுமான ஒரு பெருந்தோட்டச் சமூகத்தை உருவாக்குவது நிதியத்தின் நோக்கமாகும். எனவே, சமூகநலன்சேவைகளை வழங்குவதில் அதன் மூலம் நன்மையடைவோர், அவற்றின் பயனை அனுபவிப்போராக மட்டும் இராது சமூகநலன் சேவைகளினது வழங்களில் பங்குபற்றுவோராகவும், அதற்குப் பங்களிப்போராகவும் இருப்பதை ஊக்குவிக்க அது முயலுகின்றது. இந்த நோக்கத்திற்காகவே அது 1993 இல் தோட்டத்தொழிலாளர் வீடமைப்பு கூட்டுறவுச் சங்கங்களைத் தாபித்தது. இப்போது சுமார் 432 சங்கங்கள் செயற்படுவதாகவும், இவற்றில் 419,907 குடும்பங்களைச்சேர்ந்த 817,330 பேர் அங்கம் வகிப்பதாகவும் நிதியத்தின் அறிக்கைகள் காட்டுகின்றன.
அரசசார்பற்ற நிறுவனங்கள் அல்லது தன்னார்வ நிறுவனங்கள்
தோட்டமக்களின் சமூகஅபிவிருத்திக்கும் சமூகஅணிதிரட்டலுக்கும் பங்களிக்கும் இன்னொரு முக்கிய குழுவினர் உள்நாட்டு – வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களாகும். உள்நாட்டு நிறுவனங்களுக்குப் புறம்பாக Care International, World Vision, World University Services of Canada–(WUSC), Oxfam (UK and Australia) போன்ற வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களும் இதில் பங்கு பற்றுகின்றன. பெருந்தோட்ட மக்களின் சமூக அபிவிருத்திக்கும் சமூக அணிதிரட்டலுக்குமென மேற்படி நிறுவனங்கள் பல்வேறு செயற்றிட்டங்களை அமுலாக்கி வருகின்றன. மனிதவள அபிவிருத்தி, வருமான ஆக்கம், தொழிற்பயிற்சி வழங்கல், சிறுவர்பாதுகாப்பு, முன்பள்ளிக்கல்வி, சமூகமட்டத் தாபனங்களை உருவாக்குதல் என்பவற்றோடு, வாழ்வாதார நடவடிக்கைகள், சுகாதாரம் போன்ற துறைகளில் பல செயற்றிட்டங்களையும் அவை அமுலாக்கியுள்ளன. சில நிறுவனங்கள் பெருந்தோட்டமக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தி வருகின்றன. பல்வேறு காரணிகளால் தோட்டமக்களின் சமூகஅபிவிருத்தி பின்தங்கியே காணப்படுகின்றது. அச்சமூகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் காணப்படுகின்ற பலதரப்பட்ட வரையறைகள் அல்லது தடைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். எனவே, பெருந்தோட்டச் சமூகத்தினது சமூக அபிவிருத்தி பற்றி ஆராயும்பொழுது அதற்கு அச்சமூகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வித வரையறைகள் அல்லது இடர்ப்பாடுகள் காணப்படுகின்றன என்பது பற்றியும் நன்கு அறிந்திருத்தல் முக்கியமானதாகும்.
பெருந்தோட்ட மக்களின் சமூக அபிவிருத்திக்கு காணப்படும் வரையறைகள் அல்லது இடர்ப்பாடுகள்
ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு பல்வேறுபட்ட தடைகளும் வரையறைகளும் இடர்பாடுகளும் காணப்படுவது இயல்பாகும். சமூகத்திற்கு சமூகம் இவை அளவிலும் தன்மையிலும் வேறுபட்டனவாக இருக்கும். இவ்வரையறைகள் அல்லது தடைகள் அச்சமூகம் சார்ந்த சமூக –அரசியல் – பொருளாதார விடயங்களுடன் தொடர்புபட்டனவாக இருக்கலாம்.
சமூக அணிதிரட்டலுக்கு ஒரு சமூகத்தில் உள்வாரியானதும் வெளிவாரியானதுமான இருவிதமான காரணிகள் பிரச்சினைகளை உருவாக்கலாம். உதாரணமாக, ஒரு சமூகத்திற்குள்ளேயே காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் இவ்வித நடவடிக்கைகளுக்கு வரையறைகளாக இருக்கக்கூடும். இவ்வித உள்வாரியான அல்லது குறிப்பிட்ட சமூகத்திற்குள்ளேயே காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் சமூகத்திற்கு உள்ளேயே செயற்படும் அமைப்புசார்ந்த காரணிகளின் விளைவாக இருக்கலாம். அதேபோன்று, வெளிவாரி அல்லது வெளிக்காரணிகளும் இவ்விதப்பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். பெருந்தோட்டச் சமூகத்தைப் பொறுத்தவரை, இந்த இரண்டு விதமான வரையறைகளும் காணப்படுவதோடு சமூகஅபிவிருத்திக்கு அவை இடையூறுகளையும் விளைவிக்கின்றன.
உள்வாரி இடர்பாடுகள்
தோட்டங்களிலே காணப்படும் இறுக்கமானதும், படிமுறையானதுமான முகாமை அமைப்பு ஆரம்பகாலந்தொட்டே தோட்டமக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்துள்ளது. பெருந்தோட்டங்களின் ஆரம்பகாலங்களில் பெருந்தோட்டவேலைகளையும், வேலைசெய்யும் இடங்களையும் ஒதுக்கீடு செய்வதில் கையாளப்பட்டமுறைகள் அச்சமூகத்தில் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வுகளை இதற்கு சிறந்த உதாரணமாகக் கூறலாம். வேலைசெய்வதற்கு வசதியான இடங்களும், இலகுவான வேலைகளும், மேற்பார்வையாளர் பதவிகளும் உயர்சாதியினருக்கே ஒதுக்கப்பட்டன. இது சமூகரீதியான அமைப்புசார் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திற்று. மேலேகுறிப்பிட்ட நடைமுறைகள் இன்று அருகிவிட்டபோதிலும், ஆரம்பகாலப்பகுதியில் அவற்றால் உருவாக்கப்பட்ட சமூகஇடைவெளிகள் இன்றும் நிலைத்திருப்பதோடு, சமூகத்தில் அவை ஓரளவிற்காவது பலருக்குப்பாதகமாகவும் இருந்து வருகின்றன. தோட்டமக்களது புவியியல்ரீதியான தனிமைப்படுத்தலும், சமூக – கலாசாரரீதியாக அவர்கள் ஓரங்கட்டப்பட்டதும் அவர்களது புவியியல்ரீதியான அசைவையும் வெளியுலகத் தொடர்புகளையும் வரையறுக்கின்றன. இந்தநிலை மாறுவதற்கு பெருந்தோட்டக்குடியிருப்புக்கள் எல்லாவித அடிப்படைவசதிகளையும் கொண்ட கிராமக்குடியிருப்புக்களாக மாற்றப்படவேண்டியது அவசியமாகும்.
பெருந்தோட்டங்களின் ஆரம்பகாலங்களில் காலனித்துவ ஆட்சியும், அதனைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக உற்பத்தியை மையமாகக்கொண்ட ஒரு அமைப்பில் தனித்துவமான ஒரு கலாசாரத்தைக் கொண்டதும், மூடியதுமான அவர்களது வாழ்க்கைமுறையும் அவர்களது மனப்பாங்குகளில் பெரும் செல்வாக்கு செலுத்தின. இம்மக்களிடையே அர்த்தமுள்ள சமூக அபிவிருத்தி ஏற்படவேண்டுமாயின் இந்த மனப்பாங்குகளில் மாற்றங்கள் ஏற்படுவது இன்றியமையாததாகும்.
வெளிவாரி இடர்பாடுகள்
i) பெருந்தோட்டங்களின் நிறுவனம் சார்ந்த கட்டமைப்பு – பெருந்தோட்டங்களின் படிமுறையிலான முகாமை அமைப்பு அங்கு அர்த்தமுள்ள சமூக அணிதிரட்டலுக்கும் சமூகவலுப்படுத்தல் செயற்பாடுகளுக்கும் சாதகமானதாக இல்லை.
ii) நாட்டின் பிரதான அபிவிருத்தி நீரோட்டத்தில் பெருந்தோட்டச் சமூகம் இணைந்துகொள்ள முடியாமை – பெருந்தோட்டத்துறையில் காணப்படும் பொதுவான சூழலானது நாட்டின் தேசிய நீரோட்டம், சமூக – பொருளாதாரவாழ்வு என்பவற்றிலிருந்து தோட்டமக்களை தனிமைப்படுத்துவதாக உள்ளது. அங்கு நடைமுறையில் இருக்கும் தாபனஅமைப்புக்கள் பெருமளவிற்கு மரபுசார்ந்தனவாகவும், ஊழியத்தைச் சுரண்டும் தன்மையைக் கொண்டனவாகவும் உள்ளன. மேலும், உள்ளூராட்சி அதிகாரசபைகள், பொதுநிர்வாக வலைப்பின்னல் என்பவற்றின் பிரசன்னமும் பெருந்தோட்டப்பகுதிகளில் குறைவாகவே உள்ளது. பொதுநிறுவனங்கள் பெருந்தோட்ட மக்களுடன் வரையறுக்கப்பட்ட அளவே தொடர்பு கொண்டுள்ளன. அச்சமூகத்திற்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் மிகமிகக் குறைவான நேரடித் தொடர்புகளே காணப்படுகின்றன.
iii) பெருந்தோட்ட மக்களது தனிமனித – சமூகத்தேவைகள் பாரிய அளவினதாக இருத்தல் – பெருந்தோட்டத்துறையில் உள்ள குடும்பங்களில் பெரும்பாலானவை வறிய குடும்பங்களாகும். அத்துடன் தோட்டவேலையிலிருந்து உழைக்கும் நாளாந்த வேதனங்களிலேயே அவை பெரிதும் தங்கியுள்ளன. இச்சமூகத்திற்கு இருக்கும் வரையறுக்கப்பட்ட சாதனங்களைக்கொண்டு சமூக அங்கத்தவர்களது தேவைகளை நிறைவேற்றுவது ஒரு இயலாத காரியமாக உள்ளது.
iv) சமூகத்தைப் பற்றிய போதுமான தகவல்கள் கிடைக்காமை – அண்மைக்காலங்களில் பெருந்தோட்டங்கள் தொடர்பான பெருமளவு தரவுகளும் தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளபோதும், அச்சமூகத்தைப் பற்றி தெரியாத பல விடயங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன. அச்சமூகத்தின் அபிவிருத்திக்கான கொள்கைகள், உபாயங்கள் போன்றவற்றை உருவாக்குவதற்கும், சமூகப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்குப் பொருத்தமான பொறிமுறைகளை கட்டிஎழுப்புவதற்கும் இவை பெரும் தடையாக உள்ளன. நம்பகத்தன்மை வாய்ந்;த தகவல்கள் போதியளவு இல்லாதநிலையில் இச்சமூகத்தின் அபிவிருத்தித்தேவைகளை கருத்துநிலைப்படுத்துவதும், பொதுமைப்படுத்துவதும் சிரமமாக உள்ளது.
v) பெருந்தோட்டச்சமூகம் பற்றிய அரசாங்கக் கொள்கைகளில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை – அரசாங்கத்தின் மத்தியமட்டத்திலும் பிராந்தியமட்டங்களிலும் பெருந்தோட்டத்துறை பற்றிய கொள்கைகளில் ஒருவித நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. அரசாங்கங்கள் மாறும்பொழுது பெருந்தோட்டத்துறை பற்றிய அபிவிருத்திக்கொள்கை, உபாயங்கள் என்பவற்றிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெருந்தோட்டத்துறையைப் பொறுத்தவரை, உறுதியானதொரு அரசாங்கக்கொள்கை நிலைப்பாடு இல்லை என்றே கூறலாம்.
vi) அபிவிருத்திக்குத் தேவையான சாதனங்களின் பற்றாக்குறை – பெருந்தோட்டத்துறையின் சமூகஅபிவிருத்திக்கு கிடைக்கப்பெறும் சாதனங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. மேலும், இந்த வரையறுக்கப்பட்ட அளவிலான சாதனங்களைக்கூட முறையாக பயன்படுத்திக்கொள்வதற்கு அங்கு காணப்படும் சமூக–பொருளாதார – இனரீதியான வரையறைகள் அச்சமூகத்தின் ஆற்றலைக் குறைக்கின்றன. மக்களின் சமூகமூலதனத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்க முதலீடுகள் போதாமல் இருப்பதோடு, தனது சமூக–பௌதீக மூலதனத்தின் மீது முதலீடு செய்வதற்குத் தேவையான சாதனங்களை வேறுமூலங்களில் இருந்து பெற்றுக்கொள்வதற்கான அச்சமூகத்தின் ஆற்றலும் குறைவாகவே உள்ளது.
vii) தமிழ்மொழி தெரியாத அரசஅலுவலர்கள் சேவையாற்றுதல் – அரசாங்க வைத்தியசாலைகளிலும் பல்வேறு அரசாங்க அலுவலகங்களிலும் தமிழ்மொழி தெரியாத அலுவலர்கள் கடமையில் இருப்பதால் அரசாங்கத்தினது சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தோட்டமக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். தோட்டமக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் உள்ள அரசாங்க அலுவலகங்களிலாவது போதுமான தமிழ் பேசும் அலுவலர்களை நியமிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்குத்தீர்வு காணலாம்.
பெருந்தோட்டமக்களின் சமூக அபிவிருத்திக்கு வரையறைகளை அல்லது தடைகளை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகள் மேலே இனங்காணப்பட்டுள்ளன. இவற்றை அகற்றி அல்லது வலுவிழக்கச்செய்து அம்மக்களின் சமூகஅபிவிருத்திக்கு உந்துதல் அளிக்கக் கூடிய ஒரு சமூக – கலாசார – பொருளாதார சூழலை உருவாக்குவதே அம்மக்களிடையே சமூக அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான சிறந்த வழியாகும். பெருந்தோட்ட மக்களின் சமூக அபிவிருத்திக்குத் தடையாக இருக்கும் மேற்படி காரணிகளை அகற்றி சமூக அபிவிருத்திக்கு சார்பானதும், அதற்கு உந்துதல் அளிப்பதுமான ஒரு சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் சில கீழே தரப்பட்டுள்ளன.
சமூக அபிவிருத்திக்கு சார்பானதும், அதற்கு உந்துதல் அளிப்பதுமான ஒரு சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள்
- பெருந்தோட்டச் சமூகத்தின் சமூக–பௌதீக உட்கட்டமைப்புக்களை துரிதமாக அபிவிருத்தி செய்தல்
- நாட்டினது பிரதான வாழ்க்கை நீரோட்டத்தில் பெருந்தோட்டச் சமூகத்தை உள்வாங்கும் வகையில் பொதுநிர்வாக வலையமைப்பை விரிவாக்குதல்
- தோட்டச்சமூகத்தின் அபிவிருத்தியில் அரசதுறை பங்கெடுப்பதற்குத் தேவையான ஒரு தாபனக்கட்டமைப்பை அல்லது வலையமைப்பைத் தாபித்தல்
- பெருந்தோட்டச்சமூகத்தில் சமூகமூலதன ஆக்கத்தையும், மனிதசாதன அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு உதவுதல்
- பெருந்தோட்டச்சமூகத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கமுகவர் தாபனங்களுக்கும் பெருந்தோட்டத்துறைக்குமிடையிலான தொடர்புகளை அதிகரித்தல்
- பெருந்தோட்டச்சமூகத்தின் அபிவிருத்தியில் பங்குபெறும் வகையில் அமைச்சுக்களின் ஆற்றலை அதிகரித்தல்
- பொதுத்துறைக்கும் பெருந்தோட்டத்துறைக்கும் இடையிலான தொடர்பாடலையும் கூட்டுச் செயற்பாட்டு மட்டத்தையும் உயர்த்துதல்
- சமூகமட்ட நிறுவனங்கள், அபிவிருத்தி முகவர் நிறுவனங்கள், குடிசார் சமூகம் என்பவற்றின் இயலளவை அதிகரித்தல்
- பெருந்தோட்டச்சமூகம் சுயதங்கியிருத்தல், சுயஉதவி என்பவற்றை நோக்கி முன்னேறுவதற்கு ஏற்ற விதத்தில் அது தனது மனப்பாங்குகளை மாற்றிக்கொள்வதற்கு உதவுதல்
இச்சமூகத்தின் அபிவிருத்தியில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் மேலே குறிப்பிட்ட நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
தொடரும்.