தமிழர்களின் உணவுப்பழக்கவழக்கங்கள் எனும்போது அவர்கள் வாழும் இடத்துக்கு ஏற்பவும், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்பவுமே அவர்களது உணவுப்பழக்கங்கள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் காணப்படுள்ளன. இடத்துக்கிடம் சிறுசிறு வேறுபாடுகளைக் கொண்டாலும் உணவுப்பழக்கவழக்கத்தின் அடிப்படைகள் ஒன்றாகவே இருந்துள்ளன.
பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்கள் ஆனது பின்வருவனவற்றில் கூடுதலான கவனத்தை செலுத்தியிருக்கின்றன.
01. இயற்கைசார்ந்த உணவுகளாக இருத்தல் – இயற்கையோடு இணைந்த பசளைகள், பூச்சி கொல்லிகள், மாற்று பயிர்கள் போன்றவற்றுடன் காலநிலைகளுக்கு ஏற்ப பயிர்வகைகள், உணவுவகைகள் காணப்படல். பெரும்பொழுதுகளான பருவகாலங்களுக்கு, பருவகால சந்திகளுக்கு ஏற்பவும், ஆறு சிறுபொழுதுகளில் மூன்று சிறுபொழுதுகளான காலை, மதியம், இரவு என்பன உணவு உட்கொள்ளக்கூடிய காலங்களாகவும், அவற்றுக்கேற்ப உணவுமுறைகளும் அமைந்திருக்கின்றன.
பருவ காலங்கள்
1. கார்காலம் / மழைகாலம் – ஆவணி – புரட்டாதி
2. கூதிர்காலம் / குளிர்காலம் – ஐப்பசி – கார்த்திகை
3. முன்பனிக்காலம் – மார்கழி – தை
4. பின்பனிக்காலம் – மாசி – பங்குனி
5. இளவேனிற்காலம் – சித்திரை – வைகாசி
6. முதுவேனிற்காலம் – ஆனி – ஆடி
இக்காலங்களில் மாறுபடும் குளிர், வெப்பம் போன்றவற்றுக்கு ஏற்றவாறு உணவு வகைகள் மாறுபடும். பொதுவாக குளிர்காலங்களில் மாமிச உணவுகள், கொழுப்பு உணவுகள், கசப்பு சுவையுடைய இலைவகைகள் கூடுதலாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. வெப்பமான காலங்களில் குளிர்ச்சியான தானிய உணவுகள், பழங்கள் போன்றன அதிகம் உட்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
அதேபோல் சிறுபொழுதுகான காலை, மதியம், இரவு உணவுகளும் சித்தமருத்துவத்தில் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. காலை உணவு அல்லது அதற்கான கறிகள்
“காலைக் கறிக்காருங் காரா மணியுளுந்து
தூலக் கடலை துவரையெள்ளு – கோலமொச்சை
தட்டைச் சிறுபயறு தாழ்வில் கடுகுகறி
இட்டசுக்கு காயமிவை”
– பக். 360-361, பதார்த்தகுண சிந்தாமணி
பயறு, கடலை, துவரை, உழுந்து, காராமணி (கௌபி), எள்ளு, மொச்சை (அவரைவித்து), கடுகு, மிளகு, சுக்கு பெருங்காயம் முதலியன.
கூடுதலாக புரத உணவுகளும் அவற்றால் ஏற்படும் வாயுவைக் குறைப்பதற்கான பொருட்களுமே குறிப்பிடப்பட்டுள்ளன. காலை உணவானது உடல் வளர்ச்சிக்கு ஏற்ற உணவாக உள்ளதுடன். பகல்நேர வேலையின்போது தேவைப்படும் சக்தியை உடலில் உள்ள சேமிப்பில் இருந்து அதாவது குளுக்கோஸ், கிளைக்கோஜன் போன்றவற்றை உடல் பயன்படுத்துவதால் உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுவதாகவும் அமைகின்றது.
அத்துடன் எமது பாரம்பரியத்தில் மேலே பாடலில் குறிப்பிட்டதுபோல பாரம்பரிய காலை உணவுகள் புரதம் செறிந்த பலவகையான புரத அடிப்படை அலகுகளை (அமினோ அமிலங்கள் – Amino acids) கொண்டவையாகக் காணப்படுகின்றன. இதில் ரிப்ரோபன் (Tryptophan) எனும் அமினோஅமிலம் எமக்கு மனமகிழ்ச்சியைத் தரும் செரடோனின் எனும் பதார்த்த உற்பத்தியில் அவசியமாகின்றது. இது எள்ளில் அதிகளவு காணப்படுகின்றது.
இதனால் காலையில் புரதம்செறிந்த உணவுகளை பிரதானமான உட்கொள்ளும்போது காலையில் உற்சாகமான மனநிலை ஏற்பட்டு அன்றைய பொழுது உற்சாகமாகவும் மனமகிழ்வுடனும் காணப்படுகின்றது.
மன அழுத்தம், நெருக்கீடுகள் போன்ற நிலைகளை குறைக்கின்றன.
2. மதிய கறிக்கானவை
“கந்த வருக்கங் கனிவருக்கம் வாதமெழு
மந்த வருக்கமாந்த மாம்வருக்கங் – கந்தமுறு
தண்ணடைவ ருக்கந் ததிமோரி வையென்னா
ளுண்ணடையாற் றோடமறுமோர்”
– பக். 361, பதார்த்தகுண சிந்தாமணி
மதிய நேரத்தில் கிழங்கு, பழவகைகள், வாயுவைத்தரக்கூடிய உணவுகள், சமிபாட்டில் மந்தத்தை தரக்கூடிய உணவுகள், கீரை, எருமைத்தயிர், மோர் முதலியன. மதிய நேரத்தில் எல்லா வகையான உணவுகளும் தேவைக்கு ஏற்ப உண்ணலாம்.
மதியநேரத்தில் சமிபாட்டு செயற்பாடுகள் சீராக நடைபெறக்கூடியதாக உள்ளது. எனவே அனைத்துவகையான உணவுகளையும் உண்ணலாம். கூடுதலாக சக்தியைத்தரக்கூடிய மாப்பொருள் உணவுகள், மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தரக்கூடிய காய்கறிகள், கீரைவகைகள், பழங்கள் அதிகம் உள்ளெடுத்தல் நன்று.
3. இரவு கறிக்கானவை
“அவரைப்பிஞ் சத்திக்கா யாப்பான் முருங்கை
துவரைப் பருப்பாற்றுத் தோணி – யெவரையுமோ
கண்டா லிழுக்குங் கறித்தூ துணமிவையா
முண்டா லிழுக்குமிலை யுண்”
– பக். 361, பதார்த்தகுண சிந்தாமணி
இரவு நேரத்தில் அவரைப்பிஞ்சு, அத்திக்காய், முருங்கைப்பிஞ்சு, துவரம்பருப்பு, கண்டங்கத்தரி, தூதுவளங்காய் முதலியன. வேறு பொருட்கள் எனினும் பிஞ்சாக இருத்தல் நன்று.
இரவு நேரத்தில் சமிபாட்டு செயற்பாடுகள் மந்தப்படும். எனவே இலகுவாக சமிபாடு அடையக்கூடிய உணவுகளாக உண்ணுதல் வேண்டும்.
01. பிரதான உணவாக தானியங்கள், சிறுதானியங்கள் இருத்தல்
எமது பிரதான உணவு நெல் அரிசி சோறு ஆகும். இவற்றுடன் குரக்கன், தினை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. அரிசியானது புழுங்கல் அரிசியாகவே எமது தமிழ்ப் பாரம்பரியத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
02. இயன்றளவு தவிட்டுடன் கூடிய தானியங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. தானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தவிட்டிலேயே காணப்படுகின்றன. இதனால் தேவையற்ற ஊட்டச்சத்து இழப்புக்கள் தடுக்கப்படுகின்றன.
03. குழந்தைகளள், சிறுவர்கள், பெண்கள் உணவுகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கின்றன.
04. சமய சடங்குகள், விழாக்களில் அவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
சித்திரைக்கஞ்சி, ஆடிக்கூழ், ஆடி அமாவாசை காற்றோட்டிக்காய், பருவமடைந்த பெண்ணை பார்க்க செல்லும்போது உழுந்து, நல்லெண்ணெய், முட்டை என்பன வழங்கல்.
05. உணவு வீண்விரயத்தைத் தடுத்தல் உணவுப்பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தனர். ஊறுகாய், வற்றல், கருவாடு என்பன போடல். பழஞ்சோற்று கஞ்சியாக்கல்.
2.1 உணவில் கனிமங்களின் பிரயோகம்
சுண்ணாம்பு, உப்பு, நீர் போன்ற கனிமங்கள் தினந்தோறும் நாம் பாரம்பரிய உணவுப்பழக்கங்கள் மூலம் உள்ளெடுத்து வந்திருக்கின்றோம். இவற்றின் பாவனைகள் காலத்துடன் மாறுபாடடைந்துள்ளன.
2.1.1 சுண்ணாம்பு
சுண்ணாம்பு என்பது உண்மையில் சிப்பிகளை சூலையிட்டு அதிக வெப்பநிலையில் எரித்து எடுக்கப்படுவதொன்றாகும். இவ்வாறு எடுக்கப்படும் நீறிணை சுண்ணம் எனப்படும். இதனை நீர்விட்டு தாம்பூலம் தரிக்கும்போது சிறிதளவு வெற்றிலையில் பூசி பயன்படுத்துவதன் மூலம் சீரண சக்தி அதிகரிக்கும். அத்துடன் உடலுக்குத் தேவையான கல்சிய சத்தும் கிடைக்கின்றது. ஆனால் அதேவேளை பழைய சுண்ணாம்பினை உட்கொள்ளும்போது நோய்கள் உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் காலப்போக்கில் தாம்பூலத்தில் சேரும் பொருட்கள் இல்லாது, தாம்பூலம் தரிக்கும் முறைகள் இல்லாது, தனியே வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு என்பன பயன்படுத்தப்பட்டதுடன் புகையிலையும் சேர்த்து பாவிக்கப்பட தொடங்கினர். இதனால் தாம்பூலம் என்னும் முறை தவறி வாய்ப்புற்றுநோய், அனீமியா போன்ற நோய்களை விளைவிக்கக் கூடிய பொருளாக தற்காலத்தில் வெற்றிலைபாக்கு போடுதல் மாறியுள்ளது.
அதிகளவு தாம்பூலம், போடுவதாலும், நீண்டநேரம் வாயினுள் வைத்திருப்பதாலும் மாற்றமுடியாத நோய்களாக பாண்டு (Anaemia), விந்து, கருமுட்டைகள் போன்ற இனப்பெருக்கத்துக்கான தாதுக்கள் குறைவடையும், கண்பார்வை குறையும், பற்கள்கேடுறும் இவற்றுக்கு மருந்தில்லை எனக்கூறுவதன் மூலம் புற்றுநோய்வரும் வரும் எனவும் குறித்து கீழ்வரும் யாழ்ப்பாண சித்தமருத்துவ நூலான பரராசசேகரம் கூறுகின்றது.
“நாதனா ருரையி னேற நயந்ததாம் பூலங் கொள்ளின்
ஓதுமெய் வெளுப்புக் காட்டிப் பாண்டுநோ யுறுவ தாகும்
தாதுவுங் குறைந்து கண்ணி ணொளிபல்லுந் தான்பா ழாகும்
மாதுகே ளிந்நோய் தீர மருந்தில்லை மதுவென்பாரே”
– பக். 220, ஆகாரமே ஆதாரம் (பரராசசேகரம்)
தாம்பூலம் தரித்தலின்போதே இவ்வாறான நோய்கள் ஏற்படும் என்றால் இன்றைய வரைமுறையற்ற வெற்றிலை, பாக்கு, புகையிலை, அதிக சுண்ணாம்பு போன்றவற்றின் விளைவுகள் ஆரோக்கியத்துக்கு கேடு தருவனவாகவே அமைகின்றன.
தாம்பூலத்தில் சேரும் பொருட்கள் மற்றும் சித்தர்கள் கூறும் தாம்பூல பாவனை நெறிமுறைகள் தொடர்பாக எனது ஆகாரமே ஆதாரம் எனும் குறிப்பிட்டுள்ளேன்.
2.1.2 உப்பு
உப்பினை நாம் தனியே உணவாகக் கொள்ளவேண்டிய தேவையில்லை. நாம் சுவைக்காகவே உப்பினை உணவினில் சேர்த்துக் கொள்கின்றோம். அவ்வாறு சுவைக்காக சேர்க்கும் உப்பினை நாம் அளவோடு பாவித்தல் வேண்டும். இல்லையேல் உப்பில் உள்ள சோடியத்தின் அளவு உடலில் அதிகரிக்கும்போது நோய்கள் உருவாகின்றன.
இதனைக் கீழ்வரும் சித்தமருத்துவ பாடல் இவ்வாறு கூறுகின்றது.
“சோற்றுடனுப்புப் போட்டுச் சுவையுடன் சமைக்கையாலும்
மாற்றியே பழையச் சுண்ணாம்பதனையே யருந்தலாலும்
வெற்றநீர் மாறுமுன்னே விரைந்துமுன் குளிக்கையாலும்
சாற்றினார் திண்ணமென்று தனக்குநோய் தானிதாமே”
– பக்.161, ஆகாரமே ஆதாரம் (அகத்தியர் 2000)
குருதியில் சராசரியாக இருக்கவேண்டிய சோடியத்தின் அளவு – 136 – 145mEq/L. இந்த சராசரி அளவுகளைவிட குருதியில் உப்பின் அளவு குறைந்தாலோ கூடினாலோ நோய்கள் உருவாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு 5 கிராமிலும் குறைவாக இருத்தல் வேண்டும். அதிகளவிலான உப்புக்கொண்ட உணவுகள் உண்ணும்போது மேலும் உப்பினைக் குறைத்து பாவித்துக் கொள்ள வேண்டும்.
இங்கு அதிக உப்புப்பாவனையினாலேயே மக்கள் நோய்வாய்ப்படுகின்றனர். ஆனால் பாரம்பரிய உணவுப்பழக்கத்தில் உணவுக்கு மிகக்குறைந்தளவு உப்பே பயன்படுத்தியுள்ளனர். சுவைக்காக உப்பு மேலதிகமாக உணவில் பயன்படுத்துவதால் அதனைத் தனியான ஒருகிண்ணத்தில் உணவுபரிமாறும்போது வைத்துவிடுகின்றனர். ஏனெனில் தேவையானவர்கள் தமக்கு ஏற்றாற்போல் உப்பினை பயன்படுத்துவதற்காக. அல்லது எல்லோருக்கும் அதிகளவான உப்பு உட்கொள்ள வேண்டிவரும்.
இதனை கீழ்வரும் பரராசசேகர பாடல் கூறுகின்றது.
“சுத்தியா லமுதந் தன்னைத் துலங்கவே படைத்த பின்பு
சுத்தியாஞ் சலமுப் போடு சுவைக்கறி சூழ வைத்துச்
சுத்தியால் நெய்வே தித்துச் சூழ்ந்துமுக் கால்நீர் விட்டுச்
சுத்தியா போசனங்கள் கொள்வது சுத்தி யாகும்”
– பக்.153, ஆகாரமே ஆதாரம் (பரராசசேகரம்)
வயதுடன் நாக்கின் சுவையரும்புகளில் மாற்றம் ஏற்பட்டு சுவைஉணர்திறன் குறைவடைவதினால் வயதுடன் சுவைக்கான உப்புப்பாவனையும் அதிகரிக்கின்றது. இதனாலேயே இன்று குழந்தைகளுக்கு உப்புச்சுவையினை பிந்தி அறிமுகப்படுத்துகின்றனர். அல்லது மிகக்குறைத்து வழங்குகின்றனர்.
தற்காலத்தில் அதிக உப்புக்கொண்ட உணவுவகைகள்
01. பதனிடப்பட்ட உணவுகள் – கருவாடு, மாசிக்கருவாடு, இறைச்சி வத்தல், மோர் மிளகாய், உப்புமிளகாய், சோசேஜஸ், மாமைற் (Marmite), சோயாசோஸ்.
02. பேக்கரி உணவுகள்
03. நொறுக்குத் தீனிகள்
04. பொதி செய்யப்பட்ட உணவுகள்.
2.1.3 நீர்
எமது உடம்பு 70% நீரினால் ஆக்கப்பட்டதாகும். அதேபோல் எமது உடற்தொழிற்பாடுகளுக்கும் நீர் இன்றியமையாததாக அமைகின்றது. ஒரு நாளைக்குப் ஒருவருக்கு பொதுவாக 1.5 2 லீற்றர் நீர் தேவையாக உள்ளது.
உணவினை பசித்தபின் உட்கொள்ளவேண்டும் என்பதுபோல நீரினை தாகம் எடுக்கமுன் அருந்துதல் வேண்டும் என்கின்றது சித்தமருத்துவம். இதனைக் கருத்தில்கொண்டே பண்பாட்டில் முன்னரெல்லாம் வீட்டைவிட்டு வெளிக்கிடும்போது, வீட்டுக்கு திரும்பி வந்தவுடன் தண்ணீர் அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
இதன்மூலம் வெளியில் நீர் அருந்துவதால் ஏற்படும் நோய்த்தொற்றுக்களில் இருந்தும் தப்பித்துக்கொள்ளவும் கூடியதாக இருந்தது. இதேபோல் தற்சுகாதாரம் பொதுச்சுகாதாரம் என இரண்டையும் கருத்திற் கொண்டு மூக்குப்பேணியிலோ அல்லது செம்பில் நீரினை எடுத்து அண்ணாந்து குடிக்கும் வழக்கமும் இருக்கின்றது.
கிணற்று நீர், ஆற்றுநீர், குளத்துநீர், ஓடைநீர் போன்ற பல்வேறு நீர்வகைகளும் அவற்றுக்குரிய குணங்களும் யாழ்ப்பாணத்து சித்தமருத்துவ நூலான “அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணியில்” குறிப்பிட்டிருந்தாலும் கிணற்று நீரே அதிகம் பாவித்துக்கொள்வதாகும். கிணற்று நீரை பயன்படுத்தின் உடலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாவதுடன் நோய்களும் இலகுவில் மாறும் என்கின்றது இப்பாடல்.
ஊறுநற் கிணற்றின் றொன்னீ ரொழிந்திட நிதமி றைத்தே
மாறின்றிச் சனித்த நீரை மாந்திட லினிது மாந்தில்
வீறுசெய் பித்தஞ் சத்தி வெம்மையோ மதுர மாகும்
பாறிடுந் நோய்க ளித்தைப் பாகஞ்செய் தருந்தினாலே”
– பக்.60, அமிர்த சாகரம் பதார்த்த சூடாமணி
யாழ்ப்பாண பாரம்பரியத்தில் உடல்நலக்குறைவின்போது இளஞ்சூட்டுநீர் அருந்தும் பழக்கம் உண்டு. அதேபோல் இளஞ்சூட்டு நீரில் குளியலும் செய்வதுண்டு. இவை ஆரோக்கியத்தை தருவதுடன் நோய்களில் இருந்து விடுபடுதலையும் விரைவாக்குகின்றன. நொச்சி, ஆமணக்கு, பாவட்டை, பருத்தி, வாதமடக்கி போன்ற மூலிகைகள் சேர்த்து அவித்து குளிக்கும் வழக்கமும் உண்டு. முக்கியமாக பிள்ளை பெற்றபின்னர் இவ்வாறு குளிப்பர்.
வெந்நீர், இளஞ்சூட்டு நீரின் குணங்களை சித்தமருத்துவம் இவ்வாறு கூறுகின்றது.
“மாசில்வெந் நீர்க்கு மந்த மலங்கபஞ் சயமே யல்லால்
காசம்பீ னிசஞ்சு வாசங் கடுநவ சுரமும் போகும்
நேசமாய்ச் சிறுகக் காய்ந்த நீரினில் மூழ்கிற் கண்ணும்
தேகறும் பெலமுண் டாகுந் தேகமு மிறுகு மன்றே”
– பக்.60, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.
வெந்நீருக்கு மலக்கட்டு, கபரோகங்கள், மற்றும் காசம் பீனிசம், மூச்சுக்கஸ்டம், சுரங்கள் போன்றன மாறும். அதேபோல் இளஞ்சூட்டு நீரில் முழுகும்போது கண் ஒளிபெறும், உடல் இறுகிப் பலமுண்டாகும்.
பொதுவாக வீடுகளில் விசேட நிகழ்வுகளின்போது உணவு உண்ண அழைக்கும் முன் தண்ணீர்ச் செம்பு கொடுத்து சாப்பிட அழைப்பார்கள். வந்தவர்களும் கைகளைக்கழுவி ஒருமிடறு நீரருந்தி தொண்டையை நனைத்துச் சாப்பிடச் செல்வார்கள்.
பசிவந்து சாப்பிடச் செல்லும்போது ஏற்படும் தொண்டை வரட்சியினால் உணவினை விழுங்கக் கஸ்டமாக இருக்கக் கூடாது என சிறிது நீரருந்தி கொள்வது வழக்கமாகும். அதேபோல் சாதாரணமாக சாப்பிடும்போதும் நீரினை கொண்டு உணவினை சுற்றி வணங்கியபின் தொண்டையை நனைத்து உணவு உண்ணத்தொடங்குவார்கள்.
ஆனால் உணவு உண்ணமுன் சிறிதளவு நீரே இவ்வாறு குடிக்கவேண்டும். அதிகம் குடித்தால் அக்கினி மந்தம் ஏற்பட்டுவிடும் என சித்தமருத்துவம் கூறுகின்றது.
“உண்பவ ருண்ண முன்ன முவந்து தண்ணீரே யுண்டால்
உண்டவர் தமக்கு வன்னி யொடுங்கிடு மிளைக்கு மேனி
உண்டவர் நீருண் ணாம லுண்டுமத் தியிலே சோற்றை
உண்டவர் தமக்குத் தாதுற் பவித்திடு முரமுண்டாகும்”
– பக். 108, ஆகாரமே ஆதாரம் (பரராசசேகரம்)
உணவினை உண்பதற்கு முன்னர் நீர் அருந்தினால் பசித்தீ அடங்கி சமிபாடு குறைந்து அதனால் உடல் இழைத்திடும். உணவின் மத்தியிலே நீரினை அருந்தினால் உடற்தாதுக்கள் விருத்தியடைந்து உடற்பலமுண்டாகும்.
யாழ்ப்பாணத்தில் இன்னொரு பழக்கவழக்கமும் இருந்தது. இன்னொருவர் வீட்டினில் தண்ணீர் வேண்டி அருந்தும்போது சிறிது நீரை நிலத்தில் ஊற்றிவிட்டு குடிப்பார்கள். இதற்கான காரணம் சரிவரத் தெரியாது விடினும் உளரீதியாக அந்தத்தண்ணீரால் தனக்கு கேடெதுவும் இல்லை என்ற உணர்வைக் கொடுப்பதாகவே அந்தப்பழக்கம் அமைந்திருக்கின்றது.
தொடரும்.