நவீன காலத்தில் அச்சு முதலாளித்துவம் பெருக்கெடுத்த பெரும் பண்பாட்டுக் களங்களில் ஈழத்தமிழ் பண்பாடும் ஒன்றாகும். காலனியம் உருவாக்கிய சமூக, பண்பாட்டு தொழில்நுட்ப நிலவரங்களின் விளைவாக அது காணப்பட்டது. உலகின் முதலாவது அச்சிடப்பட்ட நூல் வெளிவந்து ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே (1465) தமிழின் முதலச்சுப் புத்தகம் ‘தம்பிரான் வணக்கம்’ (1554) இல் கேரளத்திலிருந்து வெளியாகியது. இவற்றைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அச்சிடப்பட்ட நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், துண்டுப்பிரசுரங்கள் எனப் பல்வேறு வடிவங்களிற் தொடர்ச்சியாக, தீவின் பல பாகங்களிலிருந்தும் அச்சிடப்பட்ட பனுவல்கள் வெளிவந்தன. காலனியம் உருவாக்கிய பண்பாட்டு மோதற் களத்தின் பிரதான தளகர்த்தர்களாக இந்த அச்சுடல்களே காணப்பட்டன.
சமய இறையியல் சார்ந்த விடயங்கள், கண்டனங்கள் – எதிர் கண்டனங்கள், நவீனத்துவத்தின் புதிய அனுபவங்களை எழுதல், புதிய இலக்கிய வடிவங்களை தமிழில் பரிசோதித்தல், மேற்கத்தைய வகையில் அணுகப்பட்ட அறிவியற் துறைகளை தமிழுக்குத் தருதல் என இவை மாபெரும் சிந்தனைப் புலத்தைத் தமிழுக்குத் திறந்தன. வைத்திய கலாநிதி கிறீனின் மேற்கத்தைய வைத்தியத்தை தமிழுக்கு கொண்டுவரல் முதல் தமிழின் அற்புதங்களை பிற மொழிகளுக்கு கொண்டு செல்லல் வரை ஒரு பரந்த செயற்பாட்டுப் புலம் இதனூடாக வலுப் பெற்றது. இவை பொதுமக்களுக்கான ஒரு பெருங் கருத்தாடல் வெளியைக் கட்டமைப்பதிலும், அந்த வகையில் சமூக ஜனநாயகத்தின் குரலை உருவாக்குவதிலும் பேரிடம் வகித்தன. கோயில்களுக்காகவும், தேவாலயங்களுக்காகவும் ஊர் தோறும் இருந்த புலவர்களால் எழுதப்பட்டவை தொடக்கம், ஏடுகளிலிருந்து அச்சுக்கு வந்தவை மற்றும் சபைகள் – இயக்கங்களது செயற்பாட்டியக்கத்தின் பகுதியான பிரசுரங்கள் வரையும் என கடந்த நூற்றாண்டுகள் பல்லாயிரக்கணக்கான் பக்கங்களை அச்சு வாகனம் ஏற்றியுள்ளன.
இந்த அச்சுப் பண்பாட்டைத் தோற்றுவித்ததில் இன்று நினைவுகளிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் மறந்தும், காணாமலும் போய்விட்ட பலநூறு அச்சகங்களும், அச்சகர்களும் உள்ளனர் (அவற்றைத் தொகுக்கவும், பட்டியலிடவும் கூடத் தவறியுள்ளோம்). அதிகம் பேசப்பட்ட நாவலரது நாவலர் அச்சகம் – அச்சிடற் பணிகளுக்கு அப்பாலும் தொழிற்பட்ட பல அச்சகங்கள் – அச்சகர்கள் பலரும் இன்னும் சரியாக இனங்காணப்படவில்லை என காலனியகால தமிழியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், மேற்படி ஆய்வாளர்கள் அல்லது பல நூற்றாண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்ட பெருந்தொகையான மேற்படி அச்சுடல்கள் ஊடாக ஈழத் தமிழ் சமூக பண்பாட்டு வரலாறு – கலை இலக்கியப் பயில்வுகளை ஆராயப் புகுவோர் பேரளவு இடர்பாட்டை அடைகின்றனர். அவர்கள் எங்கெங்கோ கேள்விப்பட்ட ஒன்றையும் அவர்களால் இலகுவிற் கண்டுபிடிக்க முடியவில்லை. அல்லது சிலவேளை அவை தப்பியொட்டி மேற்குலக ஆவணக்காப்பகங்களில் உள்ளன. ஏன்? இவற்றை உள்ளூரில் கண்டுபிடிக்க முடியவில்லை ? என்னதான் இதற்கான காரணம்?
எம்மிடம் ஏற்கனவே தயாரான இலகுவான உடனடிப் பதிலொன்று உண்டு. அது ‘சண்டைக்குள்ள எல்லாம் போட்டுது’ – இது பொய்யில்லை – ஆனால் முழுதாய் உண்மையுமில்லை. இது பற்றிக் கொஞ்சம் நாம் தேடிப்பார்க்கப் புறப்பட்டாலே அது எமக்குப் புரியத் தொடங்கும். இன்னும் எம்மிடமுள்ள பழைய பல நூலகங்களில் மேற்படி அச்சுடல்களில் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ எம்மால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அவை எப்படியுள்ளன என்பதற்கு தான் ஈழத் தமிழ்கூறு நல்லுலகத்தின் தமிழ் பற்றை நாம் கண்டுபிடிக்க முடியும். அவை யாவும் தூசுமண்டி – கிழிந்து – பூச்சிகள் அரித்து – பொடியாய் நொருங்கிக் கொண்டு இருக்கின்றன. இவ்வாறு மிஞ்சியுள்ள அவற்றின் ஆயுளோ மிகக் குறைவு. அவையும் இன்னும் கொஞ்சக் காலத்தில் விடை பெற்றுவிடும்.
ஆனால் ஏன் நாம் அவற்றை பாதுகாக்கவோ – நவீன தொழில்நுட்பங்களைப் பாவித்து காப்புச் செய்யவும் முயற்சிக்கின்றோம் இல்லை? இவற்றோடு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இதற்கு பல காரணங்களைக் கற்பிக்க முயற்சிக்கின்றன. அதிற் பிரதானமானது பணமில்லை அல்லது அதிக பணம் வேண்டும் என்பது. இது எவ்வளவு தூரம் சரியானது எனப் புரியவில்லை. இவ்வாறான விடயங்களை ஆற்றக் கூடிய பல்வேறு நிதி முதல்கள் சர்வதேச மற்றும் தேசிய ரீதியாகவெல்லாம் காணப்படுகின்றன. அதேசமயம் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை மிகப் பெரிய புலம்பெயர் நிதிவளங்கள் கூடவுள்ளன. அவர்களது நிதி வழங்குதல் சரியாக மடை கட்டப்படவில்லை என்பதற்கான பெரும் பொறுப்பை உள்ளூரவர்களே பொறுப்பெடுக்க வேண்டும். அவற்றை சரியான தேவைகளுக்கு திசை திருப்புவதன் மூலம் பல ஆரோக்கியமான – சமூகப் பயனுடைய காரியங்களை எம்மால் ஆற்ற முடியும். இவ்வாறெல்லாம் இருக்கும் போது எமது இந்தக் காத்திருப்பின் பொருள்தான் என்ன?
இதேவேளை தொண்டடிப்படையில் (volunteer basis) இவற்றை டிஜிற்றலாக்கம் செய்ய சில முக்கியமான அச்சுடல்கள் காணப்படும் நிறுவனங்களோடு தொடர்பு கொண்டவர்களுக்கு எந்தவித நியாயமான காரணங்களுமற்று அது மறுக்கப்பட்டு இருக்கிறது. அதேசமயம் அந்த நூல் நிலையங்களும் இதுவரை எதையும் செய்யவும் இல்லை. கங்கணம் கட்டி அவற்றின் அழிவை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதா இதன் பொருளா? புரியவில்லை.
அடுத்து நூலகர்கள் கூறும் மிகப் பெரிய புகார் – எமது கற்றறிந்த சமூகம் பற்றியது. அதாவது கற்றறிந்தோர் பலர் இந்த மூத்த அச்சு மரபுரிமைகளை தம் வசப்படுத்தி தம்மிடம் வைத்துக் கொள்ளும் ஒருவகையான புலமைச் சொத்துத் திருட்டை மேற்கொள்கிறார்கள் என்பது. அதில் மேலும் துரதிர்ஷ்டமானது அவ்வகையானவை பலவேளைகளில் மறுபதிப்புக் கூடக் காண்பதில்லை அல்லது ஆய்வுகளுக்காக முதலிடப்படுவதுமில்லை என்பதுதான். இன்னும் சில இடங்களில் இப்பழைய அச்சுடல்கள் அவற்றின் முதன்மை கருதாது வருடாந்த நூற் கழிப்புக்குள் சிக்கிக் காணாது போகின்றன. அல்லது மலிவு விலைக்கு விற்கப்படுமொன்றாகின்றன.
இது ஒருபுறமாயின் அடுத்தது வீடுகளில் தப்பிப் பிழைத்துள்ள பிரதிகள் தொடர்பானது. மூத்த தலைமுறை வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி சேமித்த மேற்படி புலமைச் சொத்துக்களை எரித்தல் – கறையானிடம் விட்டுவிடல் அல்லது சமூக நன்மைக்குத் தராத தனிநபர்களின் இனிய வார்த்தைகளுக்கு மயங்கிக் கொடுத்து விடல் என அவை போய் மடிகின்றன. இதேவேளை யாழ்ப்பாணத்தில் பழைய கடதாசி வியாபாரம் செய்யும் நண்பர் ஒருவர் மனம் நொந்து சொன்னார்- “ஐயோ எவ்வளவு முக்கியமான புத்தகங்களையெல்லாம் நிறைக்குக் கொடுக்கிறார்கள் – நான் முடிந்த வரை எனக்கு தெரிந்தவற்றை வெளியெடுக்கப் பார்க்கிறேன் , ஆனால் ஆயிரக்கணக்கான அச்சிடப்பட்ட பிரதிகளுக்கு நடுவிலது சாத்தியமில்லாமலும் இருக்கிறது”.
இதுதான் இன்றைய தமிழ் சமூக நிலவரங்கள் – பல தலைமுறைகளின் அச்சுடல் ஏறிய புலமை மரபுரிமைகள் இவ்வாறுதான் தம் கதைகளை முடித்து வருகின்றன. ஒரு குரும்சிட்டி கனகரத்தினமும் – கலைஞானியும் எனச் சிலரது முன் முயற்சிகளும் கவலைக்கிடமான அழிவை வன்னியிற் சந்தித்தன. இன்னும் பல தனிநபர் சேகரிப்புக்கள் துண்டு துண்டாக உள்ளன. இவற்றை எல்லாம் இணைத்த ஒரு ஈழத் தமிழ் அச்சு மரபுரிமைக் கூடம் இன்றைய தொழில் நுட்ப சாத்தியங்கள் அனைத்தோடும் கொண்டுவரப் படவேண்டும். டிஜிற்றலாக்கம் முதல் மூலப் பிரதி பேணல் , தேவைப்படின் மீளச்சு வசதி முதலிய யாவற்றோடும் – சரியான வெப்பம், ஈரப்பதன் பேணுகைகள் – இயற்கை அனர்த்தங்களில் இருந்த தப்பக் கூடிய வசதிகளுடனான ஒரு கட்டுமானம் தனிநபர் சேகரங்களை அவர்களுக்கான அனைத்து மதிப்புகளும் தந்து பேணக் கூடியவாறு அமைக்கப்படவேண்டும்.
யாழ்ப்பாணம் நூலகம் எரித்த நாட்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்ற ஈழத் தமிழ் சமூகம் தனது வீட்டில், பாடசாலையில், பல்கலைக்கழகங்களில், ஊர் நூலகங்களிலெல்லாம் கண்ணுக்கு முன்னால் எம் அசட்டையாலும், வீம்பினாலும் அழிந்து கொண்டிருக்கும் – அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அச்சு மரபுரிமைகள் தொடர்பில் சொல்ல விரும்பும் பதில் என்ன?
தொடரும்.