இது நெருக்கடிகள் மிகுந்த காலம்… “என்ன வளம் இல்லை எங்கள் தாய் நிலத்தில்“ என்று பாடிய காலம் மாறி உணவுக்கும் எரிபொருளுக்கும் நெருக்குண்டு தள்ளுண்டு நீண்ட வரிசைகளில் நாம் காத்திருக்கத் தொடங்கியிருக்கும் காலம்… எங்களிடம் நிலைத்திருந்த தன்னிறைவை நாமே தொலைத்து விட்டிருப்பதை உணரத் தொடங்கியிருக்கும் காலம்… உணவுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் உருவாகியிருக்கும் காலம்.
முன்னைய காலங்களிலே வட பிராந்தியத்திலே பெரும் பொருளாதாரத் தடை அமுலில் இருந்தபோதும் கூட அதை எதிர்கொள்ளும் வல்லமை எமக்கிருந்தது. அன்று எங்கள் பொருளாதாரத்தில், அதுவும் உணவுப் பாதுகாப்புத் தொடர்பில் பண்டமாற்றம் பெரும் பங்கு வகித்தது. இந்தப் பண்டமாற்றின் அச்சாணியாகத் திகழ்ந்தவை பெரும்பாலும் மரங்களேயன்றி வேறல்ல.
என் பால்ய காலம் இன்னும் நினைவிருக்கிறது. அது தொண்ணூறுகளின் ஆரம்ப காலம். எங்கள் குடும்பத்தின் அச்சாணி எங்கள் அம்மம்மா. கிளிநொச்சிச் சந்தையில் அவர் பணம் கொண்டு சென்று தனக்குத் தேவையான மரக்கறிகளையும் மீன் வகைகளையும் வாங்கியதாய் எனக்கு நினைவில்லை. வீட்டிலே இருக்கும் கீரைகளையும் பழங்களையும் கொடுத்து விட்டுத்தான் மரக்கறியும் மீனும் வாங்கி வருவார். எங்கள் வீட்டுக் கறிவேப்பிலை, ஜம்பு, நெல்லி மற்றும் எலுமிச்சம்பழம் மற்றும் தேங்காய்களை வாங்கக் காத்திருக்கும் வியாபாரிகளும் இருந்தார்கள். மேலதிகமாக இருந்தால் படலை வாசலிலே முக்காணி ஒன்றின் மேல் ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து விடுவார். வீதியால் செல்பவர்களும், அருகிலுள்ள பாடசாலை மாணவர்களும் தம் விருப்பத்துக்கேற்ப எடுத்துச் செல்வர். இம்மரங்களிலிருந்து அறுவடை வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய வகையிலே இருக்கும். காணிகளிலே பயன் தரு மரங்களை வளர்ப்பதன் மிகப்பிரதானமான நன்மை இதுவாகும்.
ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. தொடர் இடப்பெயர்வுகள், கிராமங்களிலே தன்னிறைவோடு வாழ்ந்த எம்மில் பலரை நகரங்களை நோக்கி இடம்பெயர வைத்துவிட்டன. பலர் தொடர்மாடிக்குடியிருப்புகளில் தம் வாழ்வை நிலைப்படுத்திக் கொண்டனர். சிலர், சிறிய பரப்பளவிலான காணித்துண்டுகளிலே தமது வாழ்வை மட்டுப்படுத்தத் தலைப்பட்டனர். உயர் வேலிகளும் மதில்களும் நீரை உட்செல்லவிட்ட வளமிகு மண் கொண்ட தரைகளைக் ‘கொங்கிறீற்றுக் கற்களும் பிரதியீடு செய்யத்தொடங்கின. காணிகளில் இருந்த பயன்தரு மரங்கள் பல டெங்கு பாதுகாப்பு என்ற பெயரில் அழிக்கப்பட்டன. இதன் விளைவாக, முன்னொரு காலத்திலே நாம் பண்டமாற்றுக்குப் பயன்படுத்திய அறுவடைகளை எல்லாம் பின்னர் பணம் கொடுத்து சந்தையிலே பெற்றுக்கொள்ளத் தலைப்பட்டோம். கறி வேப்பிலை, அகத்தி இலை தொட்டு எலுமிச்சம்பழம், மாம்பழம் வரை பல இலைவகைகளும் பழ வகைகளும் இவற்றில் அடங்கி விடுகின்றன. இறுதியாக, வடக்கு மண்ணிலும் நுகர்வுக் கலாசாரம் தன் வெற்றிக்கொடியை நாட்டியது.
இவ்வாறு நாம் தொலைத்த மரங்கள் பல, இலங்கையிலே, அதுவும் வட பிராந்தியத்திலே இயற்கையாக வளர்பவை. காணிகளின் பரப்பளவு குறைய, நுகர்வுக் கலாசாரம் தம் வெற்றிக்கொடியை நாட்டி வலுப்படுத்த வலுப்படுத்த இம்மரங்களெல்லாம் எமக்கு இடைஞ்சலாய்த் தெரியத் தொடங்கின. ஏறத்தாழ ஒரு தசாப்தத்துக்கு முன்னைய காலம் வரை பயனுள்ளவையாய்த் தெரிந்த பல சுதேச மரங்களை மீளக்குடியமர்த்தவெனவும், உட்கட்டமைப்பு அபிவிருத்தியெனவும் நாம் தொலைத்துவிட்டிருக்கிறோம். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் காடுகளில் இயற்கையாய் வளரும் என பிரித்தானிய தாவரவியலாளர்களால் அடையாளம் காணப்பட்ட பெரு மரங்கள் பல இப்போது வீதியோரங்களிலே காணப்படுகின்றன. நாளடைவில் அவை தொலைந்தே போய்விடும்.
“காலம் என்பது கழங்கு போற் சுழன்று மேலது கீழாய் கீழது மேலாய் மாறிடும் தோற்றம்” என்கிறது மனோன்மணீயம். அன்றொருகாலம் போல் தற்போதும் உணவுப்பாதுகாப்புக்கு மீண்டுமொரு பெரும் அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது. உலகளாவிய ரீதியிலே தீர்க்கப்பட வேண்டிய மிக முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றாக உணவுப் பாதுகாப்பின்மை கருதப்படுகிறது. உணவுப்பாதுகாப்பு எனப்படுவது சகல மக்களுக்கும் எல்லா நேரத்திலும் சுறுசுறுப்பான, ஆரோக்கியம் மிக்க வாழ்வுக்காக அவர்களது தெரிவுகள் மற்றும் உணவுத் தேவைக்கேற்ப போதுமான, பாதுகாப்பான, ஊட்டச்சத்து மிக்க உணவுக்கான பௌதிக, சமூக, பொருளாதார அணுகலைக் குறிக்கிறது.
இந்த உணவுப்பாதுகாப்பின்மையைக் கையாள்வதில் காடுகளுக்கும் மரங்களுக்கும் பெரிய பங்கிருக்கிறது. அவற்றின் வகிபாகம் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுமிருக்கிறது. கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் உள்ள குடும்ப அலகுகள் ஒவ்வொன்றினதும் அன்றாட உணவிலே அவற்றின் வகிபாகம் அளப்பரியது. பிரதான உணவுப்பொருட்களான அரிசி, கோதுமை ஆகியவற்றில் காணப்படாத நுண்ணூட்டச்சத்துகள் பழங்களிலும் இலை வகைகளிலும் காணப்படுகின்றன. பஞ்சம் ஏற்படும் காலங்களிலே, எங்கள் உணவின் பல்வகைமை குறைந்து விடும். அப்படியான வேளைகளில் உணவின் பல்வகைமையை அதிகரிப்பதற்கு இம்மரங்களிலிருந்து கிடைக்கும் உண்ணக்கூடிய காய், பூ, பழம், இலை போன்றன உதவுகின்றன. பஞ்ச காலங்களில் வருமானம் ஈட்டுவதற்கும் கூட இம்மரங்களின் பகுதிகள் உதவுகின்றன. சமைப்பதற்கான எரிபொருள் பற்றாக்குறை நிலவும் காலங்களிலே இம்மரங்களிலிருந்து பெறப்படும் விறகும் சுள்ளிகளும் ஓலையும் பாலையும் மட்டையும் தான் சமையல் எரிபொருட்களைப் பிரதியீடு செய்கின்றன.
சமையலுக்குத் தேவையான எரிபொருள் எப்படி உணவுப்பாதுகாப்புக்குத் துணைபுரிகிறது என நீங்கள் எண்ணக்கூடும். சமையல் எரிபொருளுக்கான அணுகலானது ஒருவர் உண்ணும் உணவில்/ அவரது உணவுத் தெரிவில், நெகிழ்வுத் தன்மையை உருவாக்குவதில் பங்களிக்கும். அதில் சமைப்பதற்கு அதிக சக்தித் தேவையைக் கொண்டிருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளும் அடங்கும்.
விவசாய உற்பத்தி முறைமைகளின் நிலைபேறான தன்மையை உறுதி செய்வதும் கூட இந்த மரங்களே. கால்நடைகளின் தீவனமாகவிருப்பவையும் இம்மரங்களின் குழைகளே. மரங்களை பயனில்லையென்றோ அல்லது அரிமரத்தேவைகளுக்காகவோ தறிக்காமல், அவற்றிலிருந்து பெறப்படும் அரிமரமல்லாத பொருட்களை மட்டுமே கொண்டு பஞ்சத்தை எம்மால் இலகுவாக எதிர்கொள்ள முடியும். ஆதலினால் நாம் தொலைத்துவிட்ட பல பயன் தரு மரங்களை மீள நடுகை செய்வது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். செயற்பட வேண்டும். அவை மட்டுமன்றி அம்மரங்களுடன் தொடர்புடைய சமையல் முறைகளையும் ஆவணப்படுத்த விழைய வேண்டும். இவற்றையெல்லாம் செய்யவேண்டுமானால், முதலில் எம்மைச் சூழ இருந்த, இருக்கின்ற மரங்கள் யாதென நாம் அறிய வேண்டும். அவை பற்றித் தெரிந்த கிராமத்து மக்களிடமும் ஆங்காங்கே வாழும் முதியவர்களிடமும் விபரங்களைக் கேட்டறிய வேண்டும். இம்மரங்களைப் பற்றிப் பகிர்வதற்கு ஆயிரமாயிரம் கதைகள் அவர்களிடம் பொதிந்திருக்கின்றன.
உணவு என்றதும் பெண்களின் வகிபாகம் முன்னே தெரியும். எங்கள் சமூகம் பால் நிலை சார்ந்து பெண்களுக்கென காலம் காலமாக வகுத்து வைத்திருக்கும் வகிபாகம் அது. ஆதலினால் மரங்களிலிருந்து பெறப்படும் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிக்கும் அறிவு ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களிடம் அதிகமாகக் காணப்படுவதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இது தமது அறிவையும் திறனையும் கைப்பக்குவத்தையும் கொண்டு பெண்கள் வருமான மீட்டுவதற்கும் வழிவகுக்கும். அதுமட்டுமன்றி ஆண்களுடன் ஒப்பிடுகையில் உணவுக்குப் பயன் தரும் மரங்களை வளர்க்கும் ஆர்வம் பெண்களிடம் அதிகமாகக் காணப்படுவதையும் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இந்த அறிவு இளஞ்சந்ததியினரிடம் அற்றுப் போய்க்கொண்டிருக்கும் இன்றைய காலத்திலே அவற்றிற்குப் புத்துயிர் கொடுக்க வேண்டிய தேவையொன்றும் உருவாகியிருக்கிறது.
எங்கள் பால்ய காலங்களை எண்ணிப் பின்னோக்கி நகர்கையில், தொண்ணூறுகளில், பெரும் பொருளாதாரத் தடைகளுடன் பஞ்சம் நிலவிய காலங்களிலெல்லாம் பாலைப்பாணி மட்டுமன்றி அகத்தியிலைச் சொதி, முல்லையிலைக் குழம்பு, அகத்திப் பூப்பொரியல், தவசிமுருங்கையிலை வறை, மாங்காய் வத்தல், சொதி என நாவிற்கு வகை வகையாய் விருந்தளித்து எங்கள் வயிறுகளை நிறைத்த அந்த உணவுகளின் நினைவுகளை மனம் அசை போடுகிறது.
தொடரும்.