யாழ்ப்பாணப் பாரம்பரிய வீடுகளிற் காணக் கிடைக்கக்கூடிய கட்டுமான அலகுகளில் ஒன்று சங்கடப் படலை எனும் வாயிற் கட்டட அமைப்பாகும். பேராசிரியர் கா.சிவத்தம்பி யாழ்ப்பாணத்தில் வீடு என்பது வளவுடன் கூடிய வேலியால் (மதிலால்) எல்லையிடப்பட்ட முழு மனையமைப்பு பரப்பாகும் என்பார். அதாவது வீட்டுக்கட்டடம், கொட்டில், கிணற்றடி, முற்றம் முதலியவற்றை உள்ளடக்கிய கட்டுமானங்களும், அதனைச் சூழ்ந்த எல்லையிடப்பட்ட பரப்பே யாழ்ப்பாணத்தில் வீடென்பதன் பரந்த பொருள் கொள்ளலாகும். இந்த எல்லையானது பாரம்பரியமாகப் பனையோலை அல்லது கிடுகு வேலி கொண்டமைக்கப்படும் – சற்றுப் பிற்பட்ட காலத்தில் சுண்ணாம்பு அல்லது சீமெந்தால் ஆன மதில்களும் எல்லைப்படுத்தலின் பொருட்டாக அமைக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு முதலான ஊர்களில் பாரம்பரியமான கல்வேலி எனும் அமைப்புமுறை வழக்கிலுள்ளது. இந்த சுற்றெல்லையுடைய வீட்டமைப்பின் பிரதான நுழைவாயில் சங்கடப்படலை என அழைக்கப்படும் ஒருவகையான படலை அமைப்புடன் காணப்பட்டது.
சங்கடப்படலை என்ற சொல்லின் அடிப்படை அவ்வளவு தெளிவாக இல்லை. படல் என்பது பொதுவாக மூங்கிலால் வரிசையாகக் கட்டப்பட்ட வழித் தடுப்பைக் குறித்துள்ளது. அதிலிருந்து தான் படலை என்பது மருவியுள்ளது என நம்பப்படுகிறது. ஆனால் இதன் முன்னொட்டாகவுள்ள சங்கடம் இவ்விடத்தில் பெறும் பொருள் நிலை தெளிவில்லை. வழிப்போக்கர்களின் பயணச் சங்கடத்தை போக்கும் வாயிலமைவு எனச் சங்கடப்படலைக்குச் சிலவேளைகளில் தரப்படும் சொற்பொருள் விளக்கம் வெறும் சொல்லுக்குப் பொருளாக உருவாகியதா? என்பது தெளிவாகவில்லை.
உருவ ரீதியாக சங்கடப்படலை என்பது கூரையுடன் கூடிய படலை அமைப்பாகும். பாரம்பரியமாக அது இரு புறமும் திண்ணையமைப்புடன் காணப்பட்டது. இந்தத் திண்ணை சில வீடுகளில் வீட்டின் வெளிப்புறத்தில் மட்டுமின்றி, உட்புறமாகவும் காணப்படுகின்றது. அவ்வகையில் அது ஒரு நுழைவாயில் தடுப்பு என்பதற்கப்பால் வாயிற் கட்டட உறுப்பாகக் காணப்படுகின்றது.
இந்தக் கட்டுமான அமைவு பற்றி பொதுவாகவும், ஆசியக்கட்டுமான அமைப்புப் பின்புலத்தில் வைத்தும் நோக்கும்போது இவ்வகையான கட்டுமானங்கள் ஒரு நெடிய மனிதகுலப் பாரம்பரியத்தின் சுவடுகளை கொண்டுள்ளன என வாதிக்க இடமிருக்கிறது. குறிப்பாக நகர அல்லது கிராம வாயில் எனும் பண்டைய மரபின் சிறிய வடிவமாக (miniature) இதனைக் கருத இடமுண்டு.
இதேநேரம், கேரள மரபார்ந்த வீட்டுக் கட்டடங்களில் ‘படிப்புற’ (Padippura) எனும் பெயரில் சங்கடப்படலையை போன்ற ஓரமைப்புக் காணப்படுகின்றது. காலனியகால மலேசிய வீட்டுக்கட்டங்களும் சங்கடப்படலை போன்ற ஓரமைப்பைக் கொண்டுள்ளன. ஜப்பானிய – சீனப் பாரம்பரிய வீடுகளிலும் படலை வீடும் பெயரில் (gate house) சங்கடப்படலையை ஒத்த அமைப்புக்கள் காணப்படுகின்றன. சில சீனப் பாரம்பரிய வீடுகள் திண்ணையை ஒத்த விறாந்தை போன்ற ஓரமைப்பைக் கூடக் கொண்டுள்ளன. அவ்வாறு பார்க்கும்போது சங்கடப்படலை ஒருவகையான பகிரப்பட்ட பண்பாட்டு வெளிப்பாடாகவும், காலனியகால சமூக பண்பாட்டு நிலவரங்களுள் உருவாகிய அல்லது தகவமைக்கப்பட்ட கட்டுமான வடிவமாகவும் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமுண்டு. ஆனால் அது தன்னமைப்பிலும் தோற்றப்பாட்டிலும் யாழ்ப்பாணத்துக்கேயான தனிக்கூறுகளின் ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. முக்கோணக் கூரை (Pitch roof) – கூரை தாங்கும் தூண்கள் – திண்ணை – கதவு (மரம் / இரும்பு) என்பவற்றுடன் கூடிய அமைப்புக்களை உள்ளடங்கிய இவ்வமைவு, கட்டடவியல் ரீதியான கலப்பொட்டு (hybrid) நிலையையையும் அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை மாற்றங்களின் அடிப்படையில் சங்கடப்படலையை நிறுத்தி வாசிக்க முற்படும்போது சங்கடப்படலை என்பது தமிழ் நிலப்பிரபுத்துவ பாரம்பரிய மேட்டுக்குடிப் பண்பாட்டின் குறியீடாக அதன் பொருளாதார உபரியையும், அதன் வழிப்பட்ட அதிகாரத்தையும் – அந்தஸ்தையும் வெளியீடு செய்யும் ஒன்றாகவும் காணப்படுகிறது.
அதேநேரம் சாதியடுக்கு முறையை வலுவாகக் கொண்டிருந்த காலனியகால வேளாள அல்லது வேளாளக் கருத்துநிலை மேலாதிக்க யாழ்ப்பாணத்தில் சங்கடப்படலையானது வீட்டின் நுழைவுப் பகுதி மட்டுமின்றி – மறைமுகமாக யார் வீட்டுக்குள் நுழையலாம் அல்லது நுழையக்கூடாது அல்லது அவர்கள் உள்ளே எவ்வளவு தூரம் உள் நுழையலாம் என்பதற்கான ஒரு அதிகார எல்லையுமாகும். அந்தவகையில் யாழ்ப்பாணச் சாதிப் பயில்வுகள் – அதனதிகாரக் கட்டமைப்பு (caste practices and power structure) ஆகியவற்றுடன் அது தொடர்புபட்டுள்ளது.
இதேநேரம் சில சடங்கு சார்ந்த சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதற்கான ஓரிடமாகவும் மேற்படி படலை பயன்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் சில ஊர்களில் சுவாமி ஊர் முழுதும் சுற்றி வரும் திருவிழாக்களில், மேற்படி கூரையின் உட்புறம் ‘வெள்ளை கட்டப்பட்டு’, தோரணம் – மாவிலை – சரம் தொங்கவிடப்பட்டு மடைப் பண்டங்கள் பரவப்படும். இவ்வாறான சங்கடப்படலை அமைவு இல்லாத வீடுகளில் அல்லது மாற்றியமைக்கப்பட்ட தற்கால தோற்றப்பாடு உடைய வீடுகளிற் தற்காலிகமான கிடுகு அல்லது ஓலையாலான மிக அடிப்படைகளுடன் கூடிய தற்காலிக சங்கடப் படலை போன்ற கட்டுமான அமைவுகள் செய்யப்படுகின்றன. சுமார் 40 வருடங்களுக்கு முன்பதாக கிராம – சமூகக் கட்டமைப்பு அதிகம் குலைக்கப்படாத காலகட்டத்தில் திருமணமான சோடிகள், தத்தம் வீடு நோக்கிய பாதையில் தமது உறவினர்கள் வசிக்கும் வீடுகளின் வழி நடந்து செல்கையில் இச் சங்கடப்படலைகளிலேயே பூரணகும்பம் வைத்து அவர்களை மாலையிட்டு வீடுதோறும் வாழ்த்தினர். சங்கடப்படலைகள் கடவுள் உருவங்களைத் தமது கூரைக்குள் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இலக்குமி உருவம் செல்வ வளத்தின் குறியீடாக இவற்றில் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
இதற்கும் முன்னாற் சென்றால் பொதுமக்களின் பயணங்கள் கால்நடையாக அதிகம் நிகழ்ந்த காலத்தில் இந்தச் சங்கடப் படலையின் தெருப்பக்கம் பயணிகள் ஓய்வுகொள்ளலுக்கான ஓரிடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெயிலுக்கான நிழலமைவாகவும், அமர்ந்து ஓய்வெடுக்க திண்ணையுடனும் காணப்பட்ட சங்கடப்படலை, தான, தருமம் பற்றிய நம்பிக்கை சார்ந்தவொன்றாகவும் அக்காலகட்டத்து யாழ்ப்பாணத்தால் பார்க்கப்படிருக்கிறது. இதேநேரம் சில இடங்களிற் சங்கடப்படலையின் தெருப்பக்கத்தில் நன்னீர்ப் பானைகள் கூட வைக்கப்பட்டிருந்தமை பற்றிய குறிப்புகளுண்டு. அதற்கும் அப்பால் கால்நடைகள் நீரருந்த வெண்கல்லாலான நீர்த் தொட்டிகள் கூட இப் படலைகளுக்கருகாமையில் நீர்வரத்து ஏற்பாட்டுடன் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அமைவுகள் இன்னொருவகையில் விருந்தோம்பற் பண்பாட்டின் சுட்டியாகவும் இது கொள்ளப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக மேற்படி கட்டுமானங்கள் பலவும் அதன் பண்பாட்டு வரலாற்றுப் பெறுமதி தெரியாது உடைத்தெறியப்படுகின்றன. யுத்தம் காரணமாக மேற்படி கட்டுமானங்களையுடைய வீடுகளோடு தொடர்புபட்டவர்களின் வெளியேற்றம், தலைமுறை மாற்றங்கள், நடப்பு வழக்குகளுக்கு பின்னால் எந்தக் கேள்வியுமற்றுப் பின்னோடல், பண்பாட்டு வரலாற்றுச் சின்னங்களின் சமூக வரலாற்றுப் பொருளாதார சிறப்பு – வாய்ப்பு என்பன தொடர்பான கல்வியின் சமூகத் தேக்கம், இவ்விதமான கட்டுமானங்களை காப்புச் செய்தல் தொடர்பான செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட வேண்டிய அரச தரப்புக்களின் பாராமுகம் என்பவற்றின் கீழாக மேற்படி சங்கடப்படலைகள் யாவும் விரைந்து காணாமற் போகின்றன.
இவற்றை யாழ்ப்பாணக் கட்டடக்கலை மரபுரிமையின் சின்னமாக காத்துப் பேணுதலுக்கான நடவடிக்கைகள் அவசரமானவை. முறைப்படி அவற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகள் வேண்டும். வெறும் குறியீட்டு ரீதியான செயற்பாடுகள் அல்ல – மேடைப் பேச்சுக்களும் – வலைத்தளத்தில் இரண்டு படங்களைப் போடுதலுமல்ல. பதிலாக ஆக்கபூர்வமான முழுமையான செயற்பாடுகள் மட்டுமே பயனுறுதி மிக்க செயலாக அமையும். அத்துடன் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள் முதலியோர் இதனைப் பேணுதலின் முக்கியத்துவத்தை பற்றிய கருத்துக்களை பொதுமக்கள் மத்தியில் வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும். கட்டடக்கலை வரலாற்றாசிரியர்கள் மற்றும் கட்டக்கலைஞர்கள் முதலியோரும் இக்காப்புச் செயற்பாடுகளில் கவனமெடுக்க வேண்டும். அதேநேரம், யாழ்ப்பாணத்தின் மரபுரீதியான கட்டக்கலையின் அம்சங்களை மறுகண்டுபிடிப்புச் செய்தலின் பகுதியாக சங்கடப்படலையை மறுபடி முன்னிறுத்தல் ஆகிய முயற்சிகளில் இறங்கவேண்டும். இதன்மூலமே சமகாலத்தில் எந்த அடையாளமும் – தனிப்பெறுமானமும் கட்டக்கலைச் சிறப்புமற்றுப் போய்க் கொண்டிருக்கிற யாழ்ப்பாணக் கட்டடக்கலைக்கு மீள வலுவூட்ட முடியும்.
தொடரும்.