சாதிகளின் குடியிருப்புக்களின் நியமத் திட்டம் - பகுதி 3
Arts
10 நிமிட வாசிப்பு

சாதிகளின் குடியிருப்புக்களின் நியமத் திட்டம் – பகுதி 3

June 8, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட்

நியமப் பகுப்பாய்வு (Normative analysis)

ஒவ்வொரு பண்பாட்டிலும் குறியீடுகள் காணப்படும். அவை அச்சமூகத்தின் ஒரு கோட்பாட்டை (theory) உள்ளுறையாகக் கொண்டவை. தோற்றப்பாடுகளின் ஒழுங்கையும், மனிதர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் குறியீடுகள் தெரிவிக்கின்றன. சமூகச் செயல்களுக்கு (actors) குறியீடுகள் விளக்க முறையில் நடைமுறை விதிகளை எடுத்துச் சொல்வன. அத்தோடு அவை இன்னது இப்படித்தான் செய்யப்பட வேண்டும் என்று விதிப்பனவாகவும் இருக்கும். கட்டுப்பட்ட சாதி உறவுகள், கட்டுப்படாத சாதி உறவுகள் என்பன ஒன்றோடொன்று மாறுபாடுடைய நடத்தை விதிகளைக் கூறுவன. சாதிகளுக்கு இடையே இவ்வாறான ஒன்றோடொன்று மாறுபடும் விதிமுறைகள் இருக்கும் என்பதை எப்ஸ்டின் (Epstein) வைசர், பொக்கொக் (Pocock) ஆகியோர் ஆராயவில்லை. செயலுக்கு இருவகையான நிமயங்கள் (norms) இருப்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.

நான் பலமாதங்களாகப் பலரை நேர்முகம் கண்டேன். பல பிணக்குகளை நேரடியாக அவதானித்தேன். அதன் பின் செயலிகள் கொண்டுள்ள உறவுகளுக்குப் பின்னணியாக இரண்டு கோட்பாடுகள் உள்ளதைக் கண்டேன். பிறர் தம்மோடு எப்படி உறவு கொள்ள வேண்டும். தாம் எப்படிப் பிறருடன் உறவு கொள்ள வேண்டும் என்பன பற்றி அவர்களிடம் சில விதிமுறைகள் உள்ளன என்பதை அவதானித்தேன். ஒரு முறை மற்ற முறையிலிருந்து மாறுபட்ட குறியீடுகளைக் கொண்டது. ஆயினும் ஒரு முறையின் படியான குறியீடுகள் தமக்குள் ஒன்றோடொன்று முரண்பாடு இல்லாதவையாக இருக்கும். மற்ற முறையோடு அவை பொருந்தாதவையாகவும் இருக்கும். இதனால் செயல்கள் இருமுறைகளையும் ஒரே நேரத்தில் ஒன்று கலக்க முடியாது.

நியமத் திட்டம்

உயர்குடி வேளாளர்களாயின் உறவுகள் படித்தர அமைப்புடையவை, பரவலானவை, நீடித்து நிற்பவை, ஐக்கியத்தை ஏற்படுத்துபவை. உயர்குடி நியமத்திட்டத்தில் (Aristocratic scheme) பட்டம், உரிமை, கௌரவம், மரியாதை, வாரம், அனுமதி, ஆதாரம், வரிசை என்ற குறியீடுகள் இருக்கும். வர்த்தகத்திட்டத்தில் (mercantile scheme) உள்ள குறியீடுகள் தற்காலிகமானவை, குறித்த விடயம் சார்ந்தவை (specific) சமத்துவமுடையவை, தனிநபர்களின் பேரம் பேசலுக்கு உதவுபவை. வர்த்தகத் திட்டத்தில் காணப்படும் குறியீடுகளாவன உழைப்பு, சந்தோசம், நீதி, கெட்டித்தனம், உபகாரம் என்பனவாகும். பூசகர் அல்லது புரோகிதர் உறவில் படித்தரமான குறியீடுகள் இருக்கும். அது சமயத் தத்துவங்களின் படி இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் இருக்கும், அவரவர் இடத்தில் ஒவ்வொருவரும் நிற்கவும் வேண்டும். இக்குறியீடுகள் ஆசாரம் (தூய்மை), தீட்டு (துடக்கு) என்ற வகைக் குறியீடுகளாகும்.

வேளாளரின் உயர்குடி நியமத் திட்டம் செயலிகளின் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது. பிறப்பு (சாதி) உறவுகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய மரியாதையைத் தீர்மானிக்கும். உறவுகள் பொது விதிகளின் படி இடம்பெறும். தாழ்ந்த சாதியினர் உயர் சாதிக்கு மரியாதை செலுத்த வேண்டும். மேல்நிலையில் உள்ள உயர்சாதி எப்போதும் கொடுப்பவர். ஆகவே இருப்பார் (உணவு, பணம் முதலியன). தாழ்நிலையில் இருப்பவர் பெறுபவராகவும் சேவை செய்பவராகவும் இருப்பார். மேல்நிலையில் இருப்பவர் கட்டளை இடுவார், பணிப்பார், அனுமதி கொடுப்பார். தாழ்ந்த நிலையில் உள்ளவர் கட்டளைப் படி செய்யலாம். அல்லது பாசாங்காக நடிக்கலாம். அல்லது சம்மதமின்றி விலகியும் கொள்ளலாம். ஆயினும் அவர் ஒருபோதும் கட்டளை இடுபவராகவோ, அனுமதி கொடுப்பவராகவோ இருப்பதில்லை.

உயர்குடி உறவுகள் வரிசை (அந்தஸ்து) ஆதாரம் (பரஸ்பர உதவி) ஆகிய குறியீடுகளால் மேலும் விளக்கம் பெறுகிறது. வரிசை என்பது சாதிகளுக்கு உள்ளே இருக்கும் ஏற்றத்தாழ்வைக் குறிப்பது. கட்டுப்பட்ட சாதிகளுக்குள் உயர்குடி வேளாளருக்குச் சேவகராக உள்ளவர், சாதிப்படித்தரத்தில் குறைந்தவருக்கு சேவகம் செய்யும் இன்னொருவருடன் விவாகம் செய்வதற்கோ உணவு உண்பதற்கோ உடன்படமாட்டார். ஆதாரம் என்பது மகிழ்வடையும் சந்தர்ப்பத்தில், (வேளாளருக்கு) சேவைச் சாதியினர் உதவியாக இருப்பார். அதேபோல் சேவைச் சாதியினரின் துன்பத்தின் போது வேளாளர் உதவி செய்வார். 

வர்த்தக உறவுத் திட்டம் கட்டுப்படாத தொடர்புக்கான நியமம் ஆகும். இத்தொடர்பில் செயலிகளின் பிறப்பு அந்தஸ்து முக்கியமில்லை. தமிழர்கள் வாழ்நாளில் குறியீட்டு மதிப்புடைய பொருட்கள் பலவற்றைக் கொள்வனவு செய்கின்றனர். இவற்றுள் பொன், துணி, எண்ணெய் என்பன அடிக்கடி கொள்வனவு செய்யப்படுவன. இவற்றை விற்கும் வியாபாரிகள் நீதி, சந்தோஷம் (இரு தரப்பிற்கும் மகிழ்ச்சி) என்ற கொள்கைகளால் வழிநடத்தப்படுவர். இவ்வுறவு படிநிலையானதன்று. படிநிலை அல்லாததது என்பதன் பொருள் சமத்துவம் என்பதல்ல. நீதி, சந்தோஷம் என்ற கருத்துக்கள் இவ்வுறவில் நிலவும் சமத்துவத்தைக் காட்டுவன. உயர்குடியினர் சேவைச் சாதிகளுடன் கொள்ளும் உறவு வேறுபட்டது. அங்கே மேல்நிலையில் உள்ளவர் அதிகாரத்தோடு நடந்து கொள்வார். கீழ் நிலையில் உள்ளவர் அதில் திருப்தி காண்பதைத் தவிர வேறு வழியில்லை. மரியாதை என்பதற்குப் பதில் கெட்டித்தனம் கட்டுப்படா உறவில் முக்கியம் பெறும். கைவினைஞர் புத்திசாலி, திறமை மிக்கவர் என்பதை நிரூபிக்கிறார். அத்தோடு உழைப்பும் முயற்சியும் உடையவர்களாகக் கைவினைஞர்களும் மீன்பிடிப்போரும் விளங்குகின்றனர். பரஸ்பர உதவியாகிய ஆதாரம் என்பதற்குப் பதில் குறிப்பிட்ட ஒரு தருணத்தில் நிகழும் உபகாரம் (உதவி) என்பதாக அவர்களின் செயல் அமையும்.

உயர் குடித்திட்டம்

படித்தர முறையிலான நல்லுறவு
(hierarchical Amity)

வர்த்தகத் திட்டம்

படித்தர முறையிலான பயன் நோக்கு
(hierachical Instrumentality)

உயர் குடித்திட்டம், வர்த்தகத் திட்டம் என்ற இரண்டையும் மேற்குறித்தவாறு வேறுபடுத்தலாம். உயர் குடித்திட்டம் பரவலானது (diffuse). வணிகத்திட்டம் குறித்த ஒரு விடயத்தினைப் பற்றியது. முன்னது நீடிப்பது, ஐக்கியத்தை வெளிப்படுத்துவது, படித்தரமானது என்ற பண்புகளை உடையது. வணிகத் திட்டத்தில் இவற்றின் எதிர்ப் பண்புகளே முதன்மை பெறும். உயர் குடியினர் - சேவைச் சாதிகள் உறவில் சடங்கியல் தூய்மை (Ritual purity) என்ற  அம்சம் குவி மையம் பெறும். கட்டுப்படா உறவுகளில் சடங்கியல் தூய்மை பார்க்கப்படுவதில்லை.

பொருத்தமான உறவுகளின் தெரிவு

சமூக உறவுகளை அடையாளப்படுத்தி வேறுபடுத்தும் பண்புகளைக் கிராம வாசிகள் நன்கு அறிவர். உயர்குடித்திட்டம், வர்த்தகத்திட்டம் என்ற இரண்டும் எவ்வகைச் சந்தர்ப்பங்களில் பிரயோகமாகும் என்பதை அவர்கள் நன்கு அறித்திருப்பதால் அத்திட்டங்களின் நியமங்களின் படி உறவுகளைத் தெரிந்து கொள்வர். உயர் குடித்திட்டத்தில் உயர்ந்த சாதியும் தாழ்ந்த நிலையில் உள்ள சாதியும் உறவு கொள்ளும். இங்கே உறவு கொள்ளும் அலகுகளிடையே கொண்டாட்டம் இருக்கும். வர்த்தகத் திட்டத்தில் உள்ள உறவுகளில் கொண்டாட்டம் இல்லை.

குறிப்பு : ‘Spatial Organization and Normative Schemes in Jaffna, Northern Sri Lanka’ என்ற தலைப்பில் 1973 ஆம் ஆண்டு Modern Ceylon Studies, 4 (1&2), 21-52 என்னும் இதழில் கென்னத் டேவிட்அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6435 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)