18ம் நூற்றாண்டில் வட இலங்கையில் வேளாளர்கள் : மேலாதிக்கச் சாதிக்குழுமத்தின் சமூக வரலாறு - பகுதி 1
Arts
15 நிமிட வாசிப்பு

18ம் நூற்றாண்டில் வட இலங்கையில் வேளாளர்கள் : மேலாதிக்கச் சாதிக்குழுமத்தின் சமூக வரலாறு – பகுதி 1

July 2, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

’மேலாதிக்கச் சாதி’ என்னும் கருத்தை விளக்கும் மானிடவியல் ஆய்வுகள் பல உள்ளன. கிராமம், மாவட்டம், பிராந்தியம் என்ற மூன்று நிலைகளில் ஒரு சாதியின் மேலாதிக்கம் இருக்க முடியும். இந்த மேலாதிக்கத்தின் பண்புக் கூறுகள் சில உள்ளன என்றும் மானிடவியலாளர்கள் கூறுவர். ஒரு குறிப்பிட்ட சாதி சனத்தொகையின் பெரும்பான்மையாக இருக்கும்போது அந்தச்சாதிக்குப் பிறசாதிகளை விடப் பல சாதகமான நிலைமைகள் இருக்கும். சனத்தொகையில் பெரும்பான்மையாக இருத்தல் மூலம் மேலாதிக்கத்தை பெறுதல் நவீனத்துக்கு முந்திய சமூகங்களிலும் (pre-modern societies)இருந்துள்ளது. சர்வசன வாக்குரிமையும், தேர்தல் அரசியலும் நிலவும் இன்றைய காலத்திற்கும் இவ்வகை மேலாதிக்கம் பொதுவானது. மேலாதிக்கம் பெறுவதற்கு யாவற்றிலும் அடிப்படையான விடயம் பொருளாதார அதிகாரத்தைப் பெறும் வழிகள் பலவற்றையும் குறிப்பிட்ட சாதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகும்.

விவசாயத்தோடு தொடர்புடைய சாதியினர்

விவசாய சமூகங்களில் (Agrarian societies ) நில உடைமையும், விவசாய வளங்களை கையகப்படுத்திக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் முக்கியமானதாகும். பொருளாதாரக் கட்டுப்பாட்டின் ஏனைய கூறுகள் பல உள்ளன. விவசாய சமூகங்களில் மிக அருந்தலாக உள்ள மட்டுப்படுத்தப்பட்ட நிதிவளத்தை (பணம்)கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியமானது. அத்தோடு வர்த்தகம், பொருட்களின் பரிவர்த்தனை சேவைத் தொழில்கள் ஆகியவற்றினைக் கட்டுப்படுத்தலும் அவற்றில் ஆதிக்கம் செலுத்துதல் என்பன முக்கியமானவை. உழைப்பையும், உழைப்புக்கு கொடுக்கும் ஊதியத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மேற்சொன்ன காரணிகளை ஒரு சாதி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம் நிர்வாகப் பதவிகள், உத்தியோகப் பதவிகள் என்பனவற்றையும் தனது உடைமையாக்கிவிடும். இந்நிர்வாக அதிகாரம் கிராமம் மாவட்டம், பிராந்தியம் என்ற மூன்று நிலைகளில் எவ்வாறு உடைமை கொள்ளப்படுகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். இவ்வதிகாரங்கள் யாவற்றுக்கும் சிகரம் வைப்பது போன்று அமைவது குறித்த மேலாதிக்கச் சாதிக்குக் கிடைக்கும் சடங்கியல் மேலாண்மையும் (ritual superiority) சமய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுமாகும். இவ்வதிகாரம் அதன் சாதிய மேலாண்மைக்கு நியாயத்தையும் வலிதுடமையையும் வழங்குகிறது.

மேலாதிக்கச் சாதி ஒன்றன் மேலாதிக்கம்
• அரசவம்சம் ஒன்றின் சர்வாதிகார ஆட்சி
• காலனிய சர்வாதிகார ஆட்சி
• நவீனகாலத்து வெகுஜன சனநாயகம்

என்ற வெவ்வேறு அரசியல் முறைகளின் கீழும் சாத்தியமானது.

20ஆம் நூற்றாண்டு வட இலங்கைத் தமிழ்ச் சமூகம், மேலாதிக்கச் சாதிச் சமூகம் என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். அந்நூற்றாண்டில் வேளாளர் சாதி யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேலாதிக்கச் சாதியாக உருவாக்கம் பெற்றிருந்தது. சனத்தொகையில் எண்ணிக்கை அடிப்படையில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய பதினேழு வரையான சாதிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தன. இவற்றுள் எச்சாதியும் சனத்தொகை என்ற அளவுகோலின்படியான வேளாளர் சாதி மேலாதிக்கத்துடன் போட்டியிடும் நிலையில் இருக்கவில்லை. வேளாளர் நிலச்சொத்துக்களின் பெரும்பகுதியை உடமை கொண்டும் இருந்தனர். ஏனைய பொருளாதார நடவடிக்கைகளிலும் அச்சாதியினரின் ஆதிக்கம் அதிகரித்து இருந்தது. பிரித்தானிய ஆட்சியின்போது அவர்கள் ஆங்கிலக் கல்வியை ஊக்கத்தோடு கற்று எழுதுவினைஞர் தொழிலிலும், உயர் தொழிற் பதவிகளிலும், நிர்வாகத்துறைப் பதவிகளிலும் இடம் பிடித்தனர். சுதந்திரத்தின் பின்னர் தேர்தல் அரசியல் ஊடாக அரசியல் அதிகாரப் பதவிகளையும் பெற்றனர்.

கைவினைத் தொழில்களிடன் தொடர்புடைய சாதியினர்

வேளாளர்கள் 20 ஆம் நூற்றாண்டில் பெற்றுக் கொண்ட மேலாதிக்கத்தை ஆதாரமாகக் கொண்டு வட இலங்கையில் தமிழர் குடியேற்றத்தின் ஆரம்ப காலம் தொட்டே வேளாளர் என்ற சாதியினர் மேலாதிக்கச் சாதியாக இருந்தனர் எனக் கொள்வது தவறு. பண்டைய நாளில் வேளாளர் பிற சாதிகளைவிட முன்னணி வகித்தனர் என்று கொள்ளலாம், ஆயினும் முற்காலக் குடியேற்றம் பற்றிய தகவல்கள் புனைவுகள், நாட்டார் வழக்காற்று மரபுகள் என்பனவற்றின் கலவையாகத் தெளிவற்று உள்ளன. யாழ்ப்பாணத்தின் சமூக வரலாற்றினை எடுத்துநோக்கும் போது, அதன் பொருளாதாரத்தின் மூன்று துறைகளோடு சம்பந்தப்பட்ட மூன்று சாதிகள் இருந்தன என்பது தெரிகிறது.

• விவசாயத்தோடு தொடர்புடைய சாதிகள்.
• கைவினைத் தொழில்களுடன் தொடர்புடைய சாதிகள்.
• கரையோரத் தொழில்களுடன் தொடர்புடைய சாதிகள்.

மேற்குறித்து மூன்று உற்பத்தித் துறைகள் சார்ந்த மூவகைச் சாதிகளிடையே ஒரு அதிகாரச் சமநிலை (Balance of power) இருந்தது. ஆயினும் ஆரம்பம் முதலே வேளாளர் சாதி அதன் அதிகாரத்தையும், செல்வாக்கையும் பலப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிறசாதிகளைப் பின்னிலைக்குத் தள்ளியது என்பதற்கு ஆதாரம் உள்ளது. வேளாளரின் உயர்ச்சிக்கு அரசியல் மாற்றங்களும் அதன் பயனாக பொருளாதார அதிகாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் துணையாக அமைந்தன எனலாம்.

கரையோரத் தொழில்களிடன் தொடர்புடைய சாதியினர்

யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் பற்றிய மரபுவழி வரலாற்று நூல்களை வேளாளர் குலத்தினரான கற்றறிந்த புலவர்களே எழுதினார்கள். ஆகையால் அந்நூல்களில் வேளாளத் தலையாரிகளின் (chieftains) நடவடிக்கைகளும் தலைமைத்துவமும் முதன்மைப்படுத்தப்பட்டு சித்திரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாயமாலை என்னும் நூல் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் பற்றிய ஆதாரபூர்வமான செய்திகளைக் கொண்ட பனுவல் என நம்பப்படுகிறது. இப்பனுவலில் யாழ்ப்பாண இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளிற்கும் நியமனம் செய்யப்பட்ட வேளாளர்களான நிர்வாக அதிகாரிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நியமனங்கள் முதலாவது அரசனான சிங்கையாரியன் (கி.பி.1280) காலத்தில் செய்யப்பட்டன என்றும் இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களை ‘போர் வீரர்களான தலையாரிகள், ‘நிலமானிய தலையாரிகள்’ என்ற தொடர்களாக அண்மைக் காலத்தில் ஆய்வு நூல் எழுதிய ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இத்தலைவர்கள் பாண்டிய நாட்டில் இருந்து வந்தவர்கள், விவசாயிகளான வீரர் குலங்களைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. இவ்வீர குலங்கள் மழவர், காங்கேயர் ஆகிய பெயர்களைப் பெற்றிருந்தன. இவ்வீர குலத்துக் குடும்பங்கள் குடியேறியதாக குடா நாட்டில் விவசாயக் குடியிருப்புகள் பல இடங்களில் ஏற்பட்டன. இக்குடியிருப்புகள் ஏற்பட்ட காலத்தில் நல்லூரைத் தலைநகராகக்கொண்டு உருவாக்கம் பெற்ற இராச்சியம், மத்தியப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தின் கீழ் சமூக உறவுகள் வளர்ச்சியடைய உதவியது. இவ்வீரகுலக் குடும்பங்களின் குடியிருப்புக்கள் ஏற்பட்ட காலத்தில் இக்குடும்பங்கள் தமக்குச் சேவைகளை வழங்குவதற்காக ‘குடிமைகள்’ அல்லது கட்டுப்பட்டவர்கள் ஆகிய சமூகப்பிரிவினரையும் இங்கு கொண்டு வந்து குடியேற்றினர் எனக் கருதப்படுகிறது

தென்னிந்தியாவின் வேளாளர்கள் பல உபகுழுக்களாகப் பிரிபட்டு இருந்தனர். இவ் உபபிரிவுகள் புவியியல், குடி (Clan) ஆகிய அடிப்படைகளில் பிரிபட்டிருந்தன. வேளாளர்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறிய போது அவர்களிற்கிடையிலான இப்பிரிவினைகள் இங்கும் தொடர்ந்தன எனக் கருதமுடிகிறது. இன்றுவரை தொடரும் இப்பிரிவினைகளை அவதானிக்க முடிவதோடு, இங்கு குடியேறியவர்களிடம் பொருளாதார வேறுபாடுகளும் தோன்றி வளர்ந்தன. தலையாரிக் குடும்பங்கள் (chieftain families) என அழைக்கப்பட்டவர்களுக்கு அரசனால் அமைச்சுப் பதவிகளும் மாவட்டங்களின் வரிவருமான அதிகாரி பதவிகளும் வழங்கப்பட்டன. இவ்வாறான பதவி நியமனங்களைப் பெற்றோர் பேரளவு நிலங்களையும் மானியமாகப் பெற்றனர். அத்தோடு வரியை அறவிட்டு அரசுக்குக்கு அனுப்பும் அதிகாரத்தையும் அவர்கள் பெற்றனர். இவ்வதிகாரிகள் அக்காலத்தில் முதலியார்கள் என அழைக்கப்பட்டனர். முதலியார் என்ற பெயர் அக்காலத்தில் இவர்களின் சமூகத்தகுதியை அடையாளப்படுத்தும் சின்னமாக அமைந்தது. இம்முதலியார்களின் கீழ் படித்தர முறையில் அமைந்த பல பதவி நிலையினரும் இருந்தனர்.

மணியகாரர், தலைவர், விதானை முதலிய பெயர்களால் இவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்கள் கிராம மட்டத்தில் அதிகாரம் உடையவர்களாய் விளங்கினர். இவர்களிற்கும் நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டன. இவ்வாறு நிலங்களைப்பெற்றோர் பழைய குடியேறிகளின் தலைவர்களாக இருந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். ஒரு கிராமம் முழுவதையுமோ அல்லது அதன் ஒரு பகுதியையோ தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த குடும்பங்களிடையே இருந்த அதிகாரக் கட்டமைப்பை இது பிரதிபலிப்பதாக இருந்தது. இந்த அதிகாரக் கட்டமைப்பின் அடித்தளத்தில் நிலத்தைப் பயிரிடும் குடியான்கள் இருந்தனர். இவர்கள் சிறு நிலத்துண்டுகளின் உடைமையாளர்களான குடியான்கள் ஆவர். இதே காலத்தில் குடா நாட்டின் பிறபகுதிகளில் விவசாயம் அல்லாத வேறு தொழில்களைச் சார்ந்த குடியிருப்புகளும் இருந்தனர். அக்குடியிருப்புக்களின் சாதியினரின் பொருளாதார நிலைக்கு ஏறக்குறைய சமமான நிலையிலேயே வேளாண்குடிகளின் வாழ்நிலையும் இருந்தது. இவ்வாறு வெவ்வேறு தொழில்களை செய்தோரான மக்கள் யாவரையும் ஒன்றிணைத்த சமூகக் குழுவாக, வேளாளர் மேலாதிக்கத்தின் கீழ்கட்டமைக்கும் செயல்முறை யாழ்ப்பாண இராச்சியக் காலத்தில் ஏற்பட்டு, யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் பின்னரும் தொடர்ந்தது. ஆகையால் இது 400 ஆண்டுகளாகத் தொடரும் செயல்முறை ஆகும்.

யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின்னுள்ள நான்கு நூற்றாண்டு காலத்தில், பல்வேறு காரணிகள் வேளாளர் மேலாதிக்கம் ஓங்குவதற்குத் துணை செய்தன. அரசியல் மாற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டன. பொருளாதார மாற்றங்களும் ஏற்பட்டன. இவை யாவற்றினதும் விளைவாக பல சாதிக் குழுக்கள் வேளாளர் சாதியுடன் இணைந்து கொண்டன. இவ்வாறான ஒன்றிணைதலில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் வளர்ச்சியை இங்கு குறிப்பிடுவோம். வேளாளர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு குடாநாட்டில் அதிகாரச் சமநிலையைப் பேணிய சமூகப் பிரிவினர் இருந்துவந்தனர். அச்சமூகப் பிரிவினர் தமக்கெனத் தனித்துவமான மரபுகளைக் கொண்டிருந்தனர். தமக்குரிய பொருளாதார முயற்சித்துறைகளில் அவர்கள் தமது சுயத்துவத்தையும் பேணி வந்தனர். தம் துறைகளில் அவர்கள் அதிகாரம் உடையவர்களாயும் விளங்கினர். ஆயினும் மரபுவழி வரலாற்று நூல்களில் வேளாளர் அல்லாத இச்சமூகப் பிரிவினர்களின் வரலாறுகள் குறிப்பிடப்படுவதில்லை. இவ்வரலாற்று நூல்கள் வேளாளர் மரபைப் போற்றும்நோக்குடன் எழுதப்பட்டமை இதற்கான காரணமாகும். இருந்தபோதும் யாழ்ப்பாணத்தின் சில சாதிகளின் மரபுகள் இருந்துள்ளன. குறிப்பாக கடலும் கடல்சார்ந்த வாழ்க்கையை உடைய மீன்பிடித்தொழில் செய்யும் சாதிகளின் மரபுவழி வரலாற்றுக் கதைகள் உள்ளன.

A southern karava wedding

கரையார் சாதியின் குடியேற்றம், முக்குவர் சாதியின் குடியேற்றம் பற்றிய மரபுவழி வரலாறுகள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். இவ்விரு சாதியினருள் முக்குவர் சாதியின் வரலாறு முக்கியம் பெறுகிறது. முக்குவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வெளியே மட்டக்களப்பிலும் புத்தளத்திலும் குடியேறிப் பரவி மேலாதிக்கச் சாதியாக இருந்தனர். இதனால் இவர்களது வரலாற்று மரபுகள் வாய்மொழியாகவும், ஏட்டிலும், எழுத்திலுமாகப் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது. முக்குவர் சாதி அரசியல் அதிகாரமும், சடங்கியல் அதிகாரமும் உடையதாய் இருந்தது. கரையார் சாதியிடமும் அரசியல், இராணுவ அதிகாரத்தையும் சைத்திரிய அந்தஸ்தையும் கோரும் மரபுகள் பல இருந்துள்ளன. இவற்றுள் பலமரபுகள் தென்னிலங்கையின் சிங்களவர்களாக உள்ள ‘கராவ’சாதிக்கும் தமக்கும் பொதுவானவை என இவர்களால் கருதப்படுகிறது. கராவ சாதிக்கும் தமக்கும் பொதுவான மூலம் உள்ளது என இவர்கள் கருதுவர்.


கரையார், முக்குவர் ஆகிய இரு சாதியினரதும் குடியேற்றம் பற்றிய எழுத்தாவணங்கள் சில உள்ளன. இது ஒரு நற்பேறு எனவே கொள்ளலாம். ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த டச்சு கிழக்கிந்தியக் கம்பனி (1658 – 1795) இத்தகைய எழுத்தாவணங்கள் சிலவற்றை விட்டுச் சென்றுள்ளது. யோன் சைமன் (Joan Simon) என்ற டச்சுத் தேசாதிபதி 1704 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தான், அப்போது யாழ்ப்பாணச் சமூகத்தின் பிரதிநிதிகள் பலருடனான சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. இச்சந்திப்பு வழமைப் படியானது, அப்போது பலரும் தமது மனக்குறைகளைத் தெரிவிப்பதுண்டு.யோன் சைமன் உடனான இச்சந்திப்பின் போது வடமராட்சியின் கற்கோவளம், நாகர்கோவில் ஆகிய இரு கரையோரக் கிராமங்களின் பிரதிநிதிகளும் வந்திருந்தனர். அப்போது அப்பிரதிநிதிகள் தம்மீது ஆள்வரி (Personal tax) விதிக்கப்படுவதை ஆட்சேபித்து முறையிட்டனர். தமது கிராமங்களில் தம் மூதாதையர் வந்து குடியேறிய வரலாறு பற்றியும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தமது மூதாதையர் தென் இந்தியாவின் சோழமண்டலக் கடற்கரையில் (Coromandal Coast)) இருந்து இடம்பெயர்ந்து வந்து கற்கோவளத்திலும், நாகர்கோவிலிலும் குடியேறியதாக அவர்கள் குறிப்பிட்டனர். தமது மூலத் தாயகத்தில் தமக்குச் செய்யப்பட்ட, பாரபட்சம், புறக்கணிப்பு காரணமாக தமது பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தம் மூதாதையர் இங்கு வந்து குடியேறியதாகவும் கூறினர். இக்குடியேற்றம் செகராஜசேகரன் என்ற மன்னனின் காலத்தில் நிகழ்ந்தது. அம்மன்னன் அக்குடியேறிகளை துறைமுகப் பகுதிகளில் குடியேற அனுமதித்தான். இம்மக்களின் தலைவனான வர்ணகுலாதித்தன் பின்னர் யாழ்ப்பாணத்திற்குவந்து தன் மக்களை திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கும் படி மன்னனை கேட்டான். அதற்கு மன்னன் மறுப்புத் தெரிவித்தபோது, கடற்கரைப் பகுதியில் அம்மக்களுக்கு நிலத்தைக் கொடையாகவழங்கும்படி கேட்டான். அவ்வாறு நிலம் கொடையாக வழங்கப்பட்டதன் பயனாக கற்கோவளம் நாகர்கோயில் என்ற இருகிராமங்கள் உருவாகின. அக்கிராமத்தவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டனர். அச்சமூகப்பிரிவினர் ஆண்டு தோறும் 300 சக்கரம் வரியாகச்செலுத்தவேண்டும் என விதிக்கப்பட்டது (‘சக்கரம்’ என்பது யாழ்ப்பாண அரசர்காலத்து நாணயம்). இவ்விரு கிராமங்கள் பற்றிய உடன்படிக்கை பின்னர் வந்த அரசர்களாலும் உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாண இராச்சிய காலத்திற்கு பின்னர் போத்துக்கீசரும் இந்த உடன்படிக்கையை உறுதிசெய்து வந்தனர். யாழ்ப்பாணஅரசர்கள் பலர் செகராஜசேகரன் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டதால், யோன் சைமனுக்கு விபரித்துக் கூறப்பட்ட இவ்வரலாற்றில் குறிப்பிடப்படும் செகராஜசேகரன் என்ற மன்னன் யார் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை.கற்கோவளம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்ற குடியேற்றங்கள் பற்றிய தகவல்கள் ஓர் உண்மையைத் தெளிவுபடுத்துகின்றன. யாழ்ப்பாண அரசர் காலத்தில் பல்வேறு காரணங்களால் தென்னிந்தியாவில் இருந்து பல சமூகப்பிரிவினர் இடம்பெயர்ந்து வந்து வட இலங்கையில் குடியேறினர். அவ்வாறு குடியேறியவர்கள் தம்குழுவின் அதிகாரக் கட்டமைப்பை இலங்கையில் குடியேறிய இடத்திலும் பின்பற்றினர். இந்த அதிகாரக் கட்டமைப்பு அதிகளவு தலையீடு இல்லாது தொடர்வதற்கும் யாழ்ப்பாணத்து அரசர்கள் இடமளித்தனர். கற்கோவளம், நாகர்கோவில் ஆகிய இரு கிராமங்களிலும் குடியேறியோர் மீதான வரி வித்தியாசமானது, அரசனின் சார்பில் வரி அறவிடுவோர் இச்சமூகக் குழுவின் மீது தலையீட்டைச் செய்வது குறைவாகவே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : ‘Social History of a Dominant Caste Society: The Vellalar of North Ceylon (Sri Lanka) in the 18th Century, Social History of a Dominant Caste Society: The Vellalar of North Ceylon (Sri Lanka) in the 18th Century’, என்ற தலைப்பில் 1981 ஆம் ஆண்டு Indian Economic and Social History Review, xviii(3 and 4): 377-391 என்னும் இதழில் சின்னப்பா அரசரத்தினத்தால்  எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்

தொடரும்


ஒலிவடிவில் கேட்க

10777 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)