யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆட்சி போர்த்துக்கேயரின் கையில் இருந்த 38 ஆண்டுகாலத்தில் கத்தோலிக்க மதத்துக்கு மட்டுமே அனுமதி இருந்தது. அதற்கு அரசாங்க ஆதரவும் இருந்தது. அப்போதைய யாழ்ப்பாண நகரில் பல கத்தோலிக்கத் தேவாலயங்கள் இருந்தன. இவற்றுள் ஒன்றைத் தவிர ஏனையவை 1621 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவானவை. அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் மதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மூன்று கிறித்தவ சபைகளைச் சேர்ந்தோரும் நகரத்தில் குரு மடங்களையும், தேவாலயங்களையும் நிறுவியிருந்தனர். இவர்களுள் யாழ்ப்பாணம் முழுமையாகப் போர்த்துக்கேயரின் கைக்கு வருமுன்னரே யாழ்ப்பாண இராச்சியத்தில் செயற்பட்டுக்கொண்டு இருந்தோர் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்தோர் ஆவர். இவர்களுடைய முக்கியமான தேவாலயத்துக்கு 1614 ஆம் ஆண்டில் அத்திவாரம் இடப்பட்டது. இதை உள்ளடக்கியே பின்னர் போர்த்துக்கேயரின் கோட்டை கட்டப்பட்டது.
இந்தத் தேவாலயத்தைத் தவிர டொமினிக்கன் சபையினருக்கும், யேசு சபையினருக்கும் தனித்தனியே குரு மடமும், தேவாலயமும் இருந்தன. இவற்றுடன், மிசரிக்கோடியா எனப்படும் கருணை இல்லத்தோடு இணைந்து ஒரு தேவாலயம் இருந்தது. அக்கால நகரத்தில் இருந்த மேற்படி தேவாலயங்களுக்குப் புறம்பாக, இன்றைய யாழ்ப்பாண நகர எல்லைக்குள் அடங்கிய சுண்டிக்குழி, நல்லூர், வண்ணார்பண்ணை ஆகிய இடங்களில் ஒவ்வொரு கோயிற்பற்றுத் தேவாலயங்கள் இருந்தன. மொத்தமாக இன்றைய யாழ் நகர எல்லைக்குள் ஏழு கத்தோலிக்கத் தேவாலயங்கள் காணப்பட்டன. இவற்றுள் நல்லூர்த் தேவாலயமும், வண்ணார்பண்ணைத் தேவாலயமும் ஒல்லாந்தர் காலத்தில் 1665 ஆம் ஆண்டு வரையாயினும் ஓலை வேய்ந்த மண் கட்டிடமாகவே இருந்தன. போர்த்துக்கேயர் காலத்திலும் இவை இவ்வாறான கட்டிடங்களாகவே இருந்திருக்கும். சுண்டிக்குழித் தேவாலயம் கற்கட்டிடமாக அமைக்கப்பட்டிருந்தது.
கொக்குவில், கோண்டாவில், திருநெல்வேலி, நல்லூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய நல்லூர்க் கோயிற்பற்றுக்கான தேவாலயமே நல்லூரில் இருந்தது. பால்தேயஸ் என்னும் ஒல்லாந்த மதகுரு எழுதிய குறிப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இன்று நல்லூர் முத்திரைச் சந்தைப் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள கிறித்தவ தேவாலயம் இருக்கும் இடத்திலேயே போர்த்துக்கேயரின் தேவாலயம் இருந்தது என்றும், அது முன்னர் நல்லூர்க் கந்தசாமி கோயில் இருந்த இடத்திலேயே அமைக்கப்பட்டது என்றும் தற்கால ஆய்வாளர்கள் பலரும் நம்புகின்றனர்.
போர்த்துக்கேயரின் வண்ணார்பண்ணைத் தேவாலயம் ஓட்டுமடப் பகுதியில் இன்று வெஸ்லிய தேவாலயம் இருக்கும் இடத்திலேயே அமைந்திருந்ததாக நம்பப்படுகின்றது. இங்கிருந்த போர்த்துக்கேயத் தேவாலயத்தை ஒல்லாந்தர் தமது தேவாலயமாக்கினர். பின்னர் அதைத் தம்வசம் எடுத்துக்கொண்ட பிரித்தானியர் அத்தேவாலயத்தை வெஸ்லிய மிசனுக்கு வழங்கினர். இன்றும் அவ்விடத்தில் வெஸ்லிய மிசனுக்குச் சொந்தமான ஒரு தேவாலயம் உள்ளது.
போர்த்துக்கேயரின் சுண்டிக்குழித் தேவாலயம், சுண்டிக்குழி, அரியாலை, கரையூர், கொழும்புத்துறை ஆகிய ஊர்களை உள்ளடக்கிய சுண்டிக்குழிக் கோயிற்பற்றுத் தேவாலயமாகும். இது பின்னர் ஏனைய போர்த்துக்கேயத் தேவாலயங்களைப் போலவே ஒல்லாந்தரின் கைக்கு மாறியது. பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலத்தில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த இத் தேவாலயத்தை கிறிஸ்டியன் டேவிட் என்னும் குருவானவர் ஒரு தேவாலயமாகப் பயன்படுத்தி வந்தார். காலப் போக்கில் இந்தத் தேவாலயமும் அது இருந்த நிலமும் சேர்ச் மிசனிடம் கையளிக்கப்பட்டது. இந்தப் பகுதியிலேயே தற்போது பரி. யோவான் கல்லூரியும், பரி. யோவான் தேவாலயமும் காணப்படுகின்றன. இன்றுள்ள தேவாலயக் கட்டிடம் 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில், முன்னைய இடத்தில் இருந்து சற்றுத் தள்ளிக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது.
இம்மூன்று கோயிற்பற்றுத் தேவாலயங்கள் எதிலுமே போர்த்துக்கேயரினதோ, ஒல்லாந்தரினதோ கூறுகள் எவையும் இன்று இல்லை. காலத்துக்குக் காலம் இடம்பெற்ற திருத்த வேலைகளும், மீள் கட்டுமானங்களும் அக்காலத்து அடையாளங்கள் எதையுமே விட்டு வைக்கவில்லை. போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாண நகரத்தில் இருந்த எல்லாத் தேவாலயங்களுமே இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டன. கோயிற்பற்றுத் தேவாலயங்களைத் புரட்டஸ்தாந்த தேவாலயங்களாக மாற்றிப் பயன்படுத்திய ஒல்லாந்தர், நகரத்திலிருந்த கத்தோலிக்கத் தேவாலயங்கள் அனைத்தையுமே முற்றாக அழித்துவிட்டனர்.
1614 ஆம் ஆண்டில் அத்திவாரமிட்டுக் கட்டிய, நகரில் இருந்த பிரான்சிஸ்கன் தேவாலயம், 1591 இல் போர்த்துக்கேயப் படைகள் நல்லூரைத் தாக்கி வெற்றி பெற்றதை நினைவுகூருமுகமாக வெற்றிமாதா தேவாலயம் எனப் பெயரிடப் பட்டிருந்தது. இந்தத் தேவாலயத்துக்காக வெற்றி மாதாவின் மரச் சிற்பம் ஒன்று உள்ளூர்ச் சிற்பி ஒருவரின் வீட்டில் உருவாகிக்கொண்டு இருந்தபோது நிகழ்ந்த சில புதுமைகள் காரணமாக மாதாவைப் புதுமை மாதா என அழைத்ததுடன், தேவாலயமும் புதுமைமாதா தேவாலயம் எனப் பெயர் பெற்றது.
டொமினிக்கன் தேவாலயமும், யேசு சபையினரின் தேவாலயமும் ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்டு விட்டன. ஒல்லாந்தருடைய நகரத்தில் கோட்டைக்குள் இருந்த புதுமை மாதா தேவாலயக் கட்டிடம் மட்டுமே ஒரு புரட்டஸ்தாந்த தேவாலயமாகச் சில காலம் பயன்பாட்டில் இருந்தது. அதுவும் பின்னர் அழிக்கப்பட்டுப் புதிய கோட்டைக்குள் வேறிடத்தில் ஒல்லாந்தரின் புதிய சிலுவை வடிவத் தேவாலயம் அமைக்கப்பட்டது. இந்த ஒல்லாந்தத் தேவாலயம் அண்மைக் காலம்வரை நல்ல நிலையில் இருந்து உள்நாட்டுப் போர்க் காலத்தில் முற்றாக அழிந்துவிட்டது.
ஆனாலும், போர்த்துக்கேயரின் தேவாலயத்தில் பயன்பாட்டில் இருந்த இரண்டு மணிகள் ஒல்லாந்தர் தேவாலயத்திலும் பயன்பாட்டில் இருந்தன.
ஒல்லாந்தரின் தேவாலயம் அழிந்த பின்னரும் முழுமையாக இருந்ததாகத் தெரியவரும் இந்த மணிகளுள் ஒன்று இப்போது கொழும்பில் உள்ள ஒரு தேவாலயத்தில் உடைந்த நிலையில் இருப்பதாகத் தெரிகின்றது. இன்னொரு மணி அண்மைக் காலம் வரை யாழ்ப்பாணத்திலேயே இருந்தது. இப்போது எங்கு இருக்கின்றது எனத் தெரியவில்லை. இந்த மணிகளில் இருந்த எழுத்துப் பொறிப்புக்கள், இந்த மணிகள் 1648 ஆம் ஆண்டில் வார்க்கப்பட்டு யாழ்ப்பாணப் புதுமை மாதா தேவாலயத்தில் பொருத்தப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.
அத்துடன், புதுமை மாதா தேவாலயத்தில் இருந்த சொரூபம் இன்று இந்தியாவின் கோவாவில் உள்ள தேவாலயமொன்றில் வைக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தரிடம் தோல்வியுற்ற போர்த்துக்கேயப் படையினர், போர்க் கைதிகளாக இன்று ஜக்கார்த்தா என அழைக்கப்படும் பத்தேவியாவுக்கு அனுப்பப்பட்டபோது இந்தச் சொரூபமும் மறைவாக எடுத்துச் செல்லப்பட்டதாம். அது சில ஆண்டுகளின் பின்னர் கோவாவுக்கு வந்து சேர்ந்தது. தற்காலத்தில் கோவாவுக்குச் செல்லும் இலங்கையர் இச்சொரூபத்தைப் பார்வையிடுவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படுவதாகத் தெரிகின்றது.
தொடரும்.