யாழ்ப்பாணத்தில் ஆங்கில மருத்துவத்தின் வெற்றிக்கு வித்திட்ட மருத்துவர் கிறீன்
Arts
7 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் ஆங்கில மருத்துவத்தின் வெற்றிக்கு வித்திட்ட மருத்துவர் கிறீன்

September 1, 2022 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

ஒரு சிறந்த தளபதி யுத்தம் செய்யாமல் ஒரு நகரத்தைக் கைப்பற்றவே விரும்புவான்.”-   சன் சூ.

சீனதேசத்துப் போரியல் வல்லுநர் சன் சூ வினால் 2500 வருடங்களுக்கு முன்னர் மூங்கில் கீற்றுக்களில் எழுதப்பட்ட போர்க்கலை (The Art of War) என்னும் நூலானது யுத்த மூலோபாயங்களைக் குறித்த ஆலோசனை நூலாக இருந்த போதிலும், சிக்கலான நிலைமைகளில் தீர்மானங்களை மேற்கொள்ள உதவும் தலைமைத்துவ வழிகாட்டி நூலாகவும் விளங்குகிறது.

கடந்த நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத் தமிழர்களின் மனங்களை வெற்றி கொண்ட அந்நிய தேசத்தவர்கள் பலர் இருந்தார்கள். யாழ்ப்பாணத்திலே வாழ்ந்து தன்னலமற்ற பணியாற்றி தமிழர்களின் மனதிலே இடம்பிடித்த, மருத்துவத்துடன் தொடர்புடைய மறைந்துபோன இருவரை இங்கே மீள நினைவூட்டுகின்றேன்.

ஒருவர், வடமாகாணம் என்று அழைக்கப்பட்ட அன்றைய யாழ்ப்பாண பிராந்தியத்தின் பிரித்தானிய குடியேற்ற நாட்டுப் பிரிதிநிதி, சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக் (Sir. Percival Acland Dyke: Pro-Consul of the British in mid nineteenth Century Northern Sri Lanka. Dyke had lorded over as an almost autonomous administrator).  

“புரோ-கொன்சல்” – ஓர் அரசன் தனது சொந்த நாட்டு மக்களைப் பாதுகாப்பது போல் தமது ஆளுகைக்கு உட்பட்ட குடியேற்ற நாட்டு மக்களைக் பாதுகாப்பது பிரித்தானிய புரோ -கொன்சல்களது கடமை.

டைக் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராக  (01.10.1829 – 09.10.1867) கடமையாற்றியவர். இவரே யாழ். போதனா மருத்துவமனையின் ஸ்தாபகர். டைக், யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்த அரச அதிகாரிகளில் ஒருவர். தனது சொந்த வருமானத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி இன்று பழைய பூங்கா என்று அழைக்கப்படும் காணியில் மரங்களை நாட்டி, வளர்த்து யாழ். நகரத்தில் ஒரு பூங்காவை உருவாக்கியவர். அதனை யாழ்ப்பாண மக்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக தனக்குப் பின்னரும் எவரும் அதனை மீள உரிமைகோராத வண்ணம் விக்ரோரியா மகாராணியாரிடமிருந்து விசேட உறுதியையும் பெற்றிருந்தார். டைக் தனது ஆளுகைக்குள் இருந்த யாழ்ப்பாணத்தில் மக்கள் அச்சமின்றி வாழும் வகையில் சட்டம் ஒழுங்கைப் பேணியவர். அன்றைய யாழ்ப்பாணத் தமிழர்கள் டைக் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். பேர்சிவல் ஒக்லண்ட் டைக் தனது சம்பளத்தின் பெரும் பகுதியை யாழ். போதனா மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்காகவும் செலவிட்டவர். கோப்பாயில் வசித்து வந்த டைக் 09.10.1867 அன்று மறைந்த போது , அவருக்கு அஞ்சலி செலுத்துமுகமாக வட மாகாணத்தில் இயங்கிய கச்சேரி, நீதிமன்றங்கள் மற்றும் சுங்கம் முதலான அரச நிறுவனங்கள் யாவும் 5 தினங்கள் பூட்டப்பட்டன. டைக் யாழ்ப்பாண மக்களால் ராஜா என்று அழைக்கப்பட்ட கௌரவத்துக்குரியவர்.

மற்றையவர், மருத்துவர் கிறீன். முன்னவர் பிரித்தானியர், பின்னவர் அமெரிக்கர்.

மருத்துவர் கிறீன்

1847 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 6 ஆம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்த மருத்துவர் கிறீன் வல்வெட்டித்துறையில் வசித்த வண. கோப் பாதிரியாரது இல்லத்தில் ஓரிரவு தங்கி 1847 ஒக்ரோபர் 8 ஆம் திகதி வட்டுக்கோட்டையைச் சென்றடைந்தார்.  அடுத்தநாளே தமிழ் படிக்க ஓர் ஆசிரியரையும் அமர்த்திக் கொண்டார். ஓர் ஆண்டு காலத்துக்குள் தமிழில் சொற்பொழிவாற்றவல்ல தமிழ்ப்புலமையாளராக வேண்டும் என்பதை கிறீன் இலக்காகக் கொண்டிருந்தார். அதே நேரம் வட்டுக்கோட்டையிலே சிறு டிஸ்பென்சரி ஒன்றை நிறுவி நோயாளர்களைப் பார்வையிடவும் ஆரம்பித்தார்.

1847 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நோயாளர் ஒருவரைப் பார்வையிடுமாறு கிறீனுக்கு அழைப்பு வந்தது. அடுத்து நிகழ்ந்தவை, யாழ்ப்பாணத்தில் கிறீன் மேற்கொண்ட முதலாவது சத்திர சிகிச்சை, தன்னை  உலகப் புகழ்பெற வைக்கும் என்று கிறீனும் நினைத்திருக்கவில்லை;   கிறீனை, யாழ்ப்பாணத் தமிழர்கள் கடவுளின் தூதுவர் என்று கருதி வியப்பார்கள் என்று அமெரிக்க மிசனரிகளும் நினைத்திருக்கவில்லை.

1884 இல் மருத்துவர் கிறீன் மறைந்த போது மானிப்பாயில் கிறீன் ஆரம்பித்த மருத்துவக் கல்லூரியில் முதல் வகுப்பில் மருத்துவ மாணவனாக இருந்த மருத்துவர் இளையதம்பி வைத்திலிங்கம், கிறீன் மேற்கொண்ட முதலாவது சத்திர சிகிச்சையையும் அன்று யாழ்ப்பாணத்தில் நிலவிய சூழ்நிலையையும் நினைவு கூர்ந்து பின்வருமாறு விவரிக்கின்றார்.

இரண வைத்திய விஞ்ஞானக் கலைநுட்பம்

“அன்று யாழ்ப்பாணத்தில் (1847 இல்) ஒரு சில ஆங்கில மருத்துவர்களே இருந்தார்கள். அன்று ஆங்கில மருத்துவத்தைப் பின்பற்றுவதில் யாழ்ப்பாண மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. புகழ்பெற்றிருந்த சுதேச மருத்துவர்களை மீறி, ஆங்கில மருத்துவர்களை நாட, யாழ்ப்பாணத்தவர்கள் விரும்பவில்லை. இந்த நிலையில் எனது உறவினரும் தமிழ், சம்ஸ்கிருத மொழிப் பண்டிதருமான முத்துத்தம்பி என்பவர்  நீண்டகாலமாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு எனது தந்தையாரிடம் சிகிச்சை பெற்று வந்தார். எனது தந்தையார் சுதேச மருத்துவர். முத்துத்தம்பி அவர்களைப் பீடித்த காய்ச்சல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. நோயின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் நோயாளி சிகிச்சையை பெற்றுக் கொள்ளாது சிலநாள்கள் காணமற்போயிருந்தார். அவரை சுகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை எனது தந்தையார் இழந்திருந்தார். வேறு புகழ்பெற்ற சுதேச மருத்துவர்களிடம் ஆலோசித்த போதும் அவர்களும் முத்துதம்பியவர்களது நோயைக் குணப்படுத்த இயலாது என்றே கைவிரித்தனர்.

பண்டிதரான முத்துத்தம்பி அமெரிக்க மிசனரியிருக்குத் தமிழ் கற்பித்து வந்த போதிலும், மிசனரி மருத்துவர்களை நாட விரும்பவில்லை. சுதேச மருத்துவர்கள் அனைவரும் கூடி நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் வட்டுக்கோட்டைக்கு அப்போது வருகைதந்து சில நாட்களேயான ஆங்கில மருத்துவரும் அமெரிக்கருமான கிறீனை அழைப்பது என்று முடிவு செய்தனர்.  இம்முடிவும் விருப்புடன் எடுக்கப்பட்டதல்ல. மருத்துவர் கிறீன், முத்துத்தம்பியைப் பரிசோதித்துவிட்டு உடனடியாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்; நோயாளியைக் காப்பாற்ற வேறு வழியின்றியே சம்மதித்தனர்.

இரண வைத்திய விஞ்ஞானக் கலைநுட்பம் நூலின் நுன்முகம்

கிறீன் நோயாளின் அடிவயிற்றில் காணப்பட்ட கட்டியை சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி, காயத்துக்கு கவனமாக மருந்திட்டு சிகிச்சை அளித்தார். நோயாளி 100 மடங்கிலும் அதிகமாகக் குணமடைந்தார்.

ஆங்கில மருத்துவர் ஒருவர் நோயாளி ஒருவரின் வயிற்றைக் கீறி, குடலை வெளியே எடுத்து அதனை வெட்டிச் சரிசெய்து மீண்டும் வயிற்றில் வைத்துப் பொருத்தினார் என்று மக்கள் அதிசயத்துடன் கதைத்தனர். கிறீன் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான சத்திரசிகிச்சை பற்றிய செய்தி யாழ். குடாநாடெங்கும் பரவியது. இதன் பின்னர் குடாநாட்டின் நாலாபுறமிருந்தும் கிறீனிடம் சிகிச்சைபெற மக்கள் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.”

மருத்துவர் கிறீன் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முதலாவது சத்திரசிகிச்சை கிறீனுக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. அன்று யாழ்ப்பாணத்தில் சுதேச மருத்துவருக்கும் தமிழ்ப் பண்டிதருக்கும் பெருமதிப்பிருந்தது. மக்கள் இவர்களது ஆலோசனையை முடிவாகக் கொள்வார்கள். சுதேச மருத்துவர்களால் கைவிடப்பட்ட முத்துத்தம்பி என்னும் பண்டிதருக்கு ஒரு ஆங்கில மருத்துவர் சத்திரசிகிச்சை செய்து சுகப்படுத்தியமை யாழ்ப்பாணத் தமிழர்களை ஆங்கில மருத்துவம் நோக்கி ஈர்த்தது.

மருத்துவர் கிறீனது 200 ஆவது பிறந்த ஆண்டை யாழ்ப்பாணத்தில் நினைவு கூருதலுக்கான சொற்களின் பொழிவு:

  • உடல் வலிமை குறைந்தவராகவும் வாழ்வின் பெரும்பாலான காலப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நோயுடன் போராடுபவராகவும் விளங்கிய கிறீன் பலமாதங்கள் கடற்பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து மானிப்பாயிலே மருத்துவக் கல்லூரியை நிறுவி 26 வருடங்கள் யாழ்ப்பாணத்திலே பணியாற்றி பல்லாயிரக்கணக்கானவர்களுக்குச் சிகிச்சையளித்து உயிர்கொடுத்தார். இவர்களில் அநேகமானவர்களுக்குச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
  • மருத்துவர் கிறீன் யாழ்ப்பாணத்தில் 1848 இல் மானிப்பாயில் நிறுவிய மருத்துவக் கல்லூரியில் 62 தமிழ் மாணவர்களுக்கு நேரடியாகத் தானே மருத்துவம் கற்பித்தும் மேலும் 50 இற்கும் மேற்பட்டவர்களுக்குத் தனது மாணவர்கள் மூலமும் பிற ஆசிரியர்கள் மூலமும் மருத்துவம் கற்பித்தும் யாழ்ப்பாணத்தில் மருத்துவர்களை உருவாக்கியிருந்தார். இவர்கள் அனைவரும் தமிழர்களே. இவர்களில் 33 பேர் மருத்துவர் கிறீனிடம் தமிழ்மொழி மூலம் நேரடியாக மருத்துவம் பயின்று மருத்துவர்களாயினர்.
  • மருத்துவர் கிறீன் அவர்களது இறுதி விருப்பம்: தான் இறக்கின்றபோது தனது கல்லறை மிக எளிமையானதாக இருக்க வேண்டும் என்றும் கல்லறையில் “தமிழர்களின் மருத்துவ ஊழியர்” (MEDICAL EVANGELIST TO THE TAMILS) என்ற வாசகம் மாத்திரமே பொறிக்கப்படல் வேண்டும் என்றும் இருந்தது. மாசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள கிறீனது குடும்பக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட கிறீனது பூதவுடலின் மீது அமைக்கப்பட்ட கல்லறையில் “தமிழர்களின் மருத்துவ ஊழியர்” என்ற வாசகங்களைக் காணலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11713 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)