18ம் நூற்றாண்டில் வடஇலங்கையின் வேளாளர்கள் : வர்த்தகமும் முயற்சியாண்மையும் சமூக உயர்ச்சியும் – பகுதி 4
Arts
11 நிமிட வாசிப்பு

18ம் நூற்றாண்டில் வடஇலங்கையின் வேளாளர்கள் : வர்த்தகமும் முயற்சியாண்மையும் சமூக உயர்ச்சியும் – பகுதி 4

September 5, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

ஆங்கில மூலம் : பேராசிரியர் சி. அரசரத்தினம்

சமூகப்பிரிவுகள், சமூகப்படி நிலையில் உயர்ச்சியடைதல் என்னும் சமூக அசைவியக்கத்திற்கான (Social Mobility) வழிகளில் வர்த்தகமும், முயற்சியாண்மையும் (Entrepreneurship) முக்கியமானவை. யாழ்ப்பாண மாவட்டத்தில் வர்த்தகம், அதனோடு தொடர்புடைய வட்டிக்குப் பணம் கொடுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் மரபுவழியாக ஈடுபட்டுவந்த சமூகப் பிரிவினர் மிகச் சிறிய எண்ணிக்கையினராக இருந்தனர். இதனால் இச்சிறிய வர்த்தக சமூகப்பிரிவு, வேளாளர்களுக்கு அறைகூவல் விடுக்கக்கூடியளவுக்குப் பலம் உடையதாக இருக்கவில்லை. நாம் முன்னரே குறிப்பிட்டதுபோல, செட்டிகள் என்ற சமூக பிரிவினரான வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தின் சில கிராமங்களிலேயே குடியேறி வாழ்ந்து வந்தனர். இச்சமூகப் பிரிவினர் கடல்கடந்த வர்த்தகத்திலும், உள்நாட்டில் சில்லறை வர்த்தகத்திலும் செல்வாக்குச் செலுத்தி வந்தனர். புகையிலை, யானை ஏற்றுமதி என்பன முக்கியமான ஏற்றுமதிகளாக இருந்த அக்காலத்தில் செட்டிகள் இப்பண்டங்களின் (Commodities) தரகர்களாக (Brokers) செயற்பட்டு இலாபம் ஈட்டினர். முன்னர் குறிப்பிட்டது போன்று இச்சமூகப்பிரிவைச் சேர்ந்த சில தனிநபர்கள், வர்த்தகர், வட்டிக்குப் பணம் கொடுப்போர், ஏற்றுமதிப் பண்டங்களின் தரகர்கள் ஆகிய வகிபாகங்கள் மூலமாக சமூகத்தில் பிரபலம் பெற்ற ஆளுமைகளாக விளங்கினர். இவர்கள் ‘பரதேசிகள்’ என்ற சமூகப்பிரிவினருடன் இணைந்து கொண்டனர். வேளாளர், செட்டிகள் ஆகிய சமூக அந்தஸ்துடைய உயர் குழுக்களுக்கு சமதையானவர்கள் இந்த பரதேசிகள் என்பதை நாம் முன்னரே குறிப்பிட்டிருந்தோம். செட்டிகள், வேளாளர்களுடன் நல்லுறவைப் பேணிவந்தனர். வேளாளர் சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்களாய் இருந்தனர். அவர்கள் விவசாய வளங்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். இக்காரணங்களால் செட்டிகள், வேளாளர்களோடு நட்புறவைப் பேணியமை, அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவியது.

வர்த்தகம், பண்டங்களின் தரகுவேலை, ஏனைய முயற்சியாண்மை நடவடிக்கைகள் என்பனவற்றில் டச்சுக்காரர் ஆட்சியின்போது வேளாளர்களும் படிப்படியாக ஊடுருவத் தொடங்கினர். அக்காலத்தின் முக்கியமான மாற்றங்களில் வேளாளர்களின் வர்த்தகத்துறை ஊடுருவல் குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும். தென்னிந்தியாவில் ஆர்க்காடு, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் முதலியார்கள் என்ற சமூகப் பிரிவினர், 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதராஸ், பாலக்காடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்த ஐரோப்பியக் கம்பனிகளுடன் வர்த்தக நல்லுறவை வளர்த்துக் கொண்டு, வர்த்தகத்துறையில் உயர்ச்சி பெற்றதை, யாழ்ப்பாணத்தின் வேளாளர்களின் வர்த்தகத்துறை உயர்ச்சியுடன் ஒப்பிடுவது பொருத்தமானது எனக் கருதுகிறேன். வேளாளர்களும் தென்னிந்திய நகரங்களில் நிலைகொண்டிருந்த கம்பனிகளுடன் புகையிலை, யானை ஆகிய பண்டங்களின் தரகர் தொழில் (Brokerage) நடவடிக்கைளில் ஈடுபட்டு இலாபம் ஈட்டினர். யானை ஏற்றுமதி வர்த்தகம் யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக நிலைபெற்றிருந்த வர்த்தக நடவடிக்கையாகும். வங்காளம், கோல்கொண்டா, மதுரா ஆகிய தூர இடங்களில் இருந்து யானை வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்திற்கு யானைகளைக் கொள்வனவு கொள்வதற்காக வந்து போயினர். டச்சு கிழக்கிந்தியக் கம்பனி யானை ஏற்றுமதி வர்த்தகத்தைத் தனது ஏகபோக உரிமையாக வைத்திருந்தது. இந்நிலையில் இந்திய வர்த்தகர்களுக்கு யானைகளின் ஏல விற்பனை நடைமுறைகளில் நல்ல பரிச்சயம் உடைய உள்ளூரவர்களான தரகர்களின் (Brokers) உதவி தேவைப்பட்டது. வர்த்தகர்கள் மட்டுமல்லாது தென்னிந்தியாவின் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம் ஆகிய இராச்சியங்களின் அரசர்களும் யானைகளைக் கொள்வனவு செய்வதற்கு தரகர்களின் உதவியை நாடினர்.

புகையிலை உற்பத்தி

வர்த்தகர்களதும், மேற்குறித்த அரசர்களதும் நம்பிக்கையைப் பெற்றிருந்த யானைத் தரகர்கள் பெருந்தொகைப் பணத்தைத் தரகுக் கூலியாக உழைத்தனர். புகையிலைத் தரகு வேலையும் பணம் திரட்டுவதற்கான இன்னொரு வழியாக இருந்தது. தரகு வேலையைச் செய்தது மட்டுமல்லாது கிராமங்களிற்குச் சென்று விவசாயிகளிடம் புகையிலையைக் கொள்வனவு செய்து, பிற ஏற்றுமதியாளர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்தல் அல்லது தாமே நேரடியாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தல் ஆகிய வர்த்தக நடவடிக்கைகளிலும் வேளாளர்கள் ஈடுபட்டனர். தரகர்களுக்குரிய புகையிலைத் தரகுப்பணம் (Commission) பொதுவாக
10 வீதமாக இருந்து வந்தது. தரகர்கள் இதற்குக் கூடிய அளவிலும் இலாபம் ஈட்ட முடிந்தது. வரிக்குத்தகை இன்னொரு முக்கியமான முயற்சியாண்மையாகும்.

காலனிய அரசாங்கம் அறவிட வேண்டிய பல்வகை வரிகள், வாடகைப்பணம் என்பனவும் (தபால் சேவை, படகுச்சேவை போன்ற) சேவைகளும் ஏலத்தில் குத்தகைக்கு விடப்பட்டது. ஏலத்தில் குத்தகையைப் பெறுவோர் வரிக்குத்தகை மூலம் இலாபம் உழைத்தனர். பணம் படைத்தவர்களே ஏலத்தில் போட்டியிட்டு முதலிடவும், இவைபோன்ற வர்த்தக ஆபத்துக்களை (Business Risk) ஏற்கக்கூடிய முயற்சியாண்மையுடையோராயும் இருந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியின் வரிக்குத்தகை ஆவணங்களைப் பரிசீலனை செய்யும்போது குத்தகைக்காரர் அட்டவணைகளில் வேளாளர்களான வர்த்தகர்கள் பலரின் பெயர்கள் முதலிடம் பெற்றிருந்ததைக் காணமுடிகிறது. அத்தோடு வேளாளர்கள் பல்வேறு வகைப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தமையையும் காணமுடிகிறது. தமது விவசாய உற்பத்தித் தொழிலோடு தொடர்புடையதான நெல்வரியை அறவிடுதல், கள்ளுச் சீவுதலுக்கான வரியை அறவிடுதல், கடலின் சில வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் மீன்பிடிப்போரிடமிருந்து வரியை அறவிடுதல் ஆகிய வரிக்குத்தகைகைளை வேளாளர்களான வர்த்தகர்கள் நடத்தினர். மீனவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கூடியவகையில் கடற்பகுதியில் மீன்பிடித்தலுக்கு வரி அறவிடுதல், மீன்சந்தைக் குத்தகை என்பனவற்றில் வேளாளர் தம் ஆதிக்கத்தை விரிவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்க மாற்றமாகும். மரபுவழியாக இவ்வதிகாரம் வேளாளர்களிடம் இருக்கவில்லை. 18ஆம் நூற்றாண்டு ஆவணங்களான குத்தகை உடன்படிக்கை விதிகளைப்பார்க்கும் போது, மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல், காவல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரம் என்பன வேளாளர்களான குத்தகைக்காரர்களுக்கு இருந்தமையைக் காணமுடிகிறது. படகுகளின் சொந்தக்காரர்களாகவும், மீனவர்களைப் படகுகளில் வேலைக்கு அமர்த்தி தொழில் செய்விப்போராகவும் இருந்தமையைப் பார்க்கும்போது, இலாபம் தரும் கடற்றொழில் பொருளாதார நடவடிக்கைகளிலும் வேளாளர்கள் முதலீடு செய்திருந்தமை தெரியவருகிறது.

ஒருவர் வரிக்குத்தகைக்காரராக ஏலத்திற்கான போட்டியில் உயர்ந்த கூறுவிலையைக் கோரி, குத்தகையைப் பெற்றுக் கொள்வதற்கு அவருக்குச் சில அடிப்படைத் தகைமைகள் இருக்கவேண்டும். ‘குத்தகைக்காரரும், அவரது பங்காளிகளும் மதிப்பும் நாணயமும் மிக்கவர்கள், அவர்களிடம் பெறுமதியான சொத்துக்கள் உள்ளன’ என்பதை அதிகாரிகளுக்கு நிரூபிக்க வேண்டும். ஏலத்தை நடத்தும் உத்தியோகத்தர் இவைபற்றி தனது மேலதிகாரிகளுக்கு அறிக்கையனுப்பி உடன்படிக்கை கையொப்பமிடப்படுவதற்கு முன்னர் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பணம் படைத்தவர்களும், செல்வாக்குமிக்கவர்களுமான வேளாளர், சமூகத்தில் மேல்நிலைக்கு உயர்ச்சி பெற்றிருந்ததைக் காணமுடிகிறது. அவர்களில் சிலர் அடுத்தடுத்து ஆண்டுதோறும் ஏலத்தில் போட்டியிட்டு குத்தகை உரிமையைப் பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிகிறது. ஏலத்தில் வெற்றி பெறுபவர் குறித்த தொகையைப் பிணைப் பணமாகச் செலுத்த வேண்டும். உடன்படிக்கையில் ஏலத்தின் பெறுமதியை செலுத்தக்கூடிய தகுதி குத்தகைக்காரருக்கு உண்டு என பிணையாளிகள் கையொப்பமிட்டு உறுதிப்படுத்த வேண்டும். குத்தகை உடன்படிக்கைகளைப் பெற்றுக் கொள்வதில் வேளாளர்கள் பிறரைவிட முன்னணியில் விளங்கினர் என்பதோடு, மடப்பள்ளி, செட்டி, முஸ்லிம்கள் போன்ற பிற சமூகப் பிரிவினர்களோடு பங்காளிகளாகச் சேர்ந்து வரிக்குத்தகை நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் காணமுடிகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தின் குத்தகைகளுள், யாழ்ப்பாணத் துறைமுகத்தின் சுங்கக் குத்தகையே அதிகூடிய பெறுமதி உடையதாக இருந்தது. 1760 ஆம் ஆண்டில் இக்குத்தகையை வேளாளர், மடப்பள்ளி, கரையார், முஸ்லிம் வர்த்தகர்கள் ஆகிய நான்கு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தோர் கூட்டாக இணைந்து ரூ.41,000ற்குப் பெற்றுக் கொண்டனர்.

மீன்பிடித் தொழில்

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரிக்குத்தகை வியாபாரத்திலும், பண்டங்களின் ஏற்றுமதித் தரகர் வேலையிலும் முஸ்லிம் வர்த்தகர்கள் வேளாளர்களுக்குப் போட்டியாக உயர்ச்சி பெற்றனர். ஏனைய சமூகப்பிரிவினர் பின் தள்ளப்படுவதை அல்லது வேளாளருடன் கலப்புற்றுத் தமது அடையாளத்தை இழந்து போவதையும் காணமுடிகிறது. மீனவர் சமூகம் பின்னடைந்தமைக்கான காரணங்களை ஊகித்து அறியும் நிலையிலேயே உள்ளோம். அவர்கள் முன்னைய நிலையில் இருந்து ஏன் தாழ்ந்தனர் என்பது புதிராகவே உள்ளது. தென்னிலங்கையின் கராவ சமூகப் பிரிவினர் இக்காலப்பகுதியில் சிங்கள சமூகத்தில் உயர்ச்சியும் பலமும் பெறுவதைக் காண்கிறோம். தென்மேற்குக் கரையோரப் பகுதிகளின் கராவ சமூகப் பிரிவினர் சமூகப் படிநிலையில் உயர்ந்து செல்வதற்கு அவர்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளைப் பன்முகப்படுத்தியமை முக்கிய காரணமாகும். மீன்பிடியும் கடலோடுதலும் அவர்களது மரபுவழித் தொழில்களாக இருந்தன.இவற்றைவிட அவர்கள் தச்சுவேலையில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்களாயும், தோணிகளைக் கட்டுதல் தரைவழிப் போக்குவரத்துக்கான வண்டிக்காரர் தொழில், ஒப்பந்தக்காரர், வரிக்குத்தகை ஆகிய பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களின் வாழிடமான இலங்கையின் தெற்கு, மேற்குக் கரையோரப் பகுதி பல பொருளாதார நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்படும் வர்த்தக பொருளாதார மையங்களாகத் திகழ்ந்தன. யாழ்ப்பாணத்தின் மீனவர் சமூகப் பிரிவினர் தமது பாரம்பரியத் தொழில்களான மீன்பிடித்தல், கடலோடுதல், கரையோர வர்த்தகம் ஆகியவற்றில் தொடர்ந்தும் ஈடுபட்டனர். ஆனால் இந்நடவடிக்கைகள் வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் தன்மைகொண்டனவாக அமையவில்லை. இதனைவிட யாழ்ப்பாணத் துறைமுகத்திற்குள் நுழைவதற்கும், வெளிச்செல்வதற்கும் தடைவிதிக்கும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தமையால், அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. மீனவர் சமூகம் பிறதொழில் துறைகளில் புகுவதற்கு சாதிவேற்றுமையும் தொழிசார் சாதி உணர்வும் தடையாக இருந்தது.

பாரம்பரியத் தொழிலான வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய செட்டிகளும் வேளாளர்களுடன் ஒப்பிடுமிடத்துப் பின்னடைவைச் சந்தித்தனர். செட்டிகளில் பலர் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகக் குடியேறியிருக்கவில்லை என்பதும், அவர்களின் பின்னடைவுக்கு ஒருகாரணமாகும். அத்தோடு டச்சுக்காரர்களின் வர்த்தகக் கொள்கைகள் செட்டிகளின் நலன்களுக்கு விரோதமானவையாக அமைந்தன. செட்டிகளின் வர்த்தகத்தில் முக்கியமானவையாக விளங்கிய நெசவு செய்யப்பட்ட துணியின் இறக்குமதி, யானைகளின் ஏற்றுமதி என்ற இரண்டையும் டச்சுக்காரர் தமது ஏகபோக உரிமையாக அறிவித்தனர். தென்னிந்தியத் துறைமுகங்களிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பிரயாணத்தினையும் டச்சுக்காரர் அனுமதிப்பத்திரம் நடைமுறை மூலம் கட்டுப்படுத்தினர். எல்லோரிடமும் கட்டாய உடலுழைப்பை டச்சுக்காரர் கோரினர். இதற்காக உழைப்பாளர்களுக்கு கூலிகொடுத்துத் தமது சார்பில் ஊழியர் கடமையை வழங்கும் கட்டாயம் செட்டிகளுக்கு ஏற்பட்டது.

தென்னிந்தியாவில் இருந்து வந்த செட்டிகள்

கொழும்புச் செட்டிகளும், சிலாபத்தைச் சேர்ந்த செட்டிகளும் கிறிஸ்தவர்களாக மாறியது போல் யாழ்ப்பாணச் செட்டிகள் தம்மை மதமாற்றம் செய்து கொள்ளவில்லை. இந்து சமயத்தை பின்பற்றுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், யாழ்ப்பாணத்திற்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே பயணத்தடைகள் விதித்தமையால் பிராமணப் பூசகர்கள் பயணிப்பதில் தடைகள் ஏற்பட்டமையும் செட்டிகளுக்கு தொல்லை தருவனவாக இருந்தன. இதனால் செட்டிகளில் பலர் தமது தாயகமான தென்னிந்தியாவிற்கே திரும்பிச் சென்றனர். இன்னும் சிலர் கூடிய வர்த்தக வாய்ப்புகள் உள்ள இலங்கையின் தென்பகுதிக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர்.

யாழ்ப்பாணத்திலேயே தங்கியவர்கள் வேளாளர்களோடு நெருங்கிய உறவுகளை வளர்த்து, காலப்போக்கில் அவர்களோடு கலப்புற்றனர்.1796 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் கையில் இருந்து யாழ்ப்பாணம் (அத்தோடு கரையோர மாகாணங்களும்) பிரித்தானியர் கைக்குமாறியது. பிரித்தானியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய மூன்றாவது காலனிய ஆட்சியாளர்களாவர். பிரித்தானியர் ஆட்சியும், மேல்நிலைக்கு வந்து கொண்டிருந்த வேளாளர்களுக்கு சமூக மேலாதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்) விவசாயத்துறையில் வேளாளர்களுக்குப் போட்டியான வேறு எந்த சமூகப்பிரிவும் தோன்றவில்லை. கிராமநிலைப் பதவிகளும் மாவட்டமட்டப் பதவிகளும் பெரும்பான்மையாக வேளாளர்களிடம் இருந்தன. வர்த்தகம், முயற்சியாண்மை எனக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தனவெனில் அவையும் வேளாளர் கையிலேயே இருந்தன. சாதி அந்தஸ்து நிலையில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தோர் செல்வாக்கு மிக்க நில உடைமையாளர்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்களாக ஆயினர். சுதந்திரமான சமூகப் பிரிவுகளாக இருந்து வந்த சமூகப் பிரிவினரும் வேளாளர்களின் மேலாண்மையை ஏதோ ஒரு வகையிலாயினும் ஏற்றுக் கொள்ளும் நிலை உருவானது. பிரித்தானியர் ஆட்சியில் ஏற்பட்டுக் கொண்டிருந்த இம்மாற்றங்களின் பின்னணியில் 1830 களில் ஆங்கிலக் கல்வி யாழ்ப்பாணத்தில் வேகமாகப் பரவியமை சமூக அசைவியக்கத்திற்கு (Mobility) ஓர் உந்துதலை வழங்கியது. ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் வேளாளர் மிகுந்த ஊக்கத்துடன் செயற்பட்டனர். கிறிஸ்தவ மிசனரி பாடசாலைகள் மூலமும் இந்துப் பாடசாலைகள் மூலமும் வேளாளர் பெற்றுக்கொண்ட கல்வி அச்சமூகத்தினரின் உயர்ச்சிக்கு உதவியது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் உருவாக்கிய அதிகாரக் கட்டமைப்பில் (Power Structure) பிரித்தானியர் உயர் நிலையில் இருந்தனர். பிரித்தானியருக்கு அடுத்த நிலையில் வேளாளர்கள் இவ் அதிகாரக் கட்டமைப்பில் இடம் பிடித்துக் கொண்டனர். போர்த்துக்கேயர் ஆட்சியிலோ அல்லது டச்சுக்காரர் ஆட்சியிலோ வேளாளர் பெற்றிராத உயர்ந்த இடம் அவர்களுக்குப் பிரித்தானியர் ஆட்சியில் கிடைத்தது.

குறிப்பு : ‘Social History of a Dominant Caste Society: The Vellalar of North Ceylon (Sri Lanka) in the 18th Century, Social History of a Dominant Caste Society: The Vellalar of North Ceylon (Sri Lanka) in the 18th Century’, என்ற தலைப்பில் 1981 ஆம் ஆண்டு Indian Economic and Social History Review, xviii(3 and 4): 377-391 என்னும் இதழில் சின்னப்பா அரசரத்தினத்தால்  எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்


ஒலிவடிவில் கேட்க

10504 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)