இரசவர்க்கம் - மருந்தாகும் மசாலாப் பொருள்கள் - பகுதி 2
Arts
10 நிமிட வாசிப்பு

இரசவர்க்கம் – மருந்தாகும் மசாலாப் பொருள்கள் – பகுதி 2

September 19, 2022 | Ezhuna

ஈழத்தில் தோன்றிய வைத்தியம் தொடர்பான நூல்களில் ஒன்று செகராசசேகரம். கி.பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் குடிமக்களுக்காக இந்தியாவில் இருந்து பண்டிதர்களை வரவழைத்து செகராசசேகரம் என்னும் வைத்தியநூலை ஆக்குவித்தான். இதில் பல பகுதிகள் தற்போது அழிந்துள்ளன. தற்போது  கிடைக்கும் செகராசேகரம் நூலில் உள்ள ‘இரசவர்க்கம்’ என்ற பகுதியில் சொல்லப்பட்டுள்ள, பாரம்பரிய வைத்திய முறைமைகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள், நோய்களுக்கான சிகிச்சைகள் பற்றி தெளிவுபடுத்துவதாக ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகிறது.

பெருங்காயம்

அட்டகுன்மம் தானும் அணுகாது ஆகமதில்

ஒட்டியவாய்வுத் திரட்சி ஓடுமே-முட்டவே

வருங்காயம் புட்டியாம் மாரிழையீர் கேளீர்

பெருங்காயம் என்று குணம் பேசு

இதன் பொருள்: எட்டுவகையான குன்மங்களும் சேராது. வாய்வுப் பிரச்சனைகளை ஓட்டிவிடும். உடலுக்கு வலுவைக்கொடுக்கும். பெண்ணே பெருங்காயத்தின் குணம் இதுவாகும்.

மேலதிக விபரம்: பெருங்காயம் என்பது பெருஞ்சீரகக்குடும்பத்துக்குரிய ஒரு தாவரத்தின் வேர்க்கிழங்கிலிருந்தும் தண்டில் இருந்தும் பெறப்படும் ஒரு பிசின் ஆகும். ஈரான் தேசத்துக்குரியது இந்தத்தாவரம். இந்த மூலிகைப் பொருளைக் கட்டியாகவோ தூளாகவோ கடைகளில் பெற்றுக்கொள்ள முடியும். செமியாக்குணம், வாய்வு என்பற்றைத் தீர்த்து வைக்கும் சிறந்த மருந்தாகப் பெருங்காயம் உள்ளது. எளிதில் சமிபாடு அடையாத போஞ்சி கடலை மற்றும் பருப்பு வகைகளைச் சமைக்கும்போது பெருங்காயத்தையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் வாய்வுக்கோளாறுகள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.

இருமலுக்குப் பெருங்காயக்குடிநீரை சிறிதளவு தேனுடன் குடிக்கலாம். இரத்தத்தில் கூடுதலாக உள்ள கொலெஸ்ரெறோல் உட்பட்ட கொழுப்புக்களின் அளவைக்குறைக்கும் குணமுடையது பெருங்காயம் என்று கூறப்படுகிறது.

Asafoetida என்பது பெருங்காயத்தின் ஆங்கிலப்பெயர். Hingu என்பது இதன் வர்த்தகப் பெயர். Ferula assa-foetida L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

இஞ்சி

இஞ்சிக்கு வாதம் இருமல் இவை தோன்றாது

வஞ்சிக்கும் சோகைதனை மாற்றுமே-துஞ்சவரும்

சூலை கயரோகம் தொடராது இப்புவிவில்

வேலனைய கண்ணாய் விளம்பு

இதன் பொருள்: இஞ்சியைத் தொடர்ந்து பயன்படுத்திவருவோர்க்கு வாதம் இருமல் என்னும் வியாதிகள் வராது. உடலை வாட்டும் காமாலைநோய் மாறும். மரணத்தை ஏற்படுத்தக்கூடிய சூலை மற்றும் காசநோய்கள் பரவாது. வேலை ஒத்த கண்ணை உடையவளே இதனை எல்லோருக்கும் எடுத்துரைப்பாயாக.

பாடபேதம்:

இஞ்சிக்கிழங்குக்கு இருமல் ஐயம் ஓங்காளம்

வஞ்சிக்கும் சன்னி சுரம் வன்பேதி-விஞ்சுகின்ற

சூலையறும் வாதம்போம் தூண்டாத தீபனமாம்

வேலையுறுங் கண்ணாய் விளம்பு

-பதார்த்தகுணசிந்தாமணி-

மேலதிக விபரம்: வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு மருந்தாக இஞ்சி நெடுங்காலமாகப் பயன்பட்டு வந்துள்ளது. குடல் வாயுவை வெளியேற்றவும் உணவுப்பாதையைச் சீராக்கவும் இஞ்சி உதவுகின்றது.

இஞ்சி

பிரயாணத்தின்போது குறிப்பாகக் கடல்பிரயாணத்தின்போது ஏற்படக்கூடிய தலைச்சுற்று ஓங்காளம் வாந்தி என்பவற்றை நிறுத்த இஞ்சி பெரிதும் உதவும். பிரயாணச் சுகயீனம் (motion sickness) தொடர்பான குறிகுணங்களை குறைப்பதற்காக ஆங்கில மருந்துக்கடைகளில் விற்கப்படும் ட்ராமாமைன் (Dramamine) என்னும் மருந்திலும் பார்க்கச் சிறந்த பலனை இஞ்சி கொடுக்கக்கூடியது என்ற உண்மை சமீபத்தைய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களுக்கு ஆரம்பகாலத்தில் (20 கிழமைகளுக்குள்) ஏற்படக்கூடிய ஓங்காளம் சத்தி என்பவற்றின் கடுமையைக் குறைக்கவும் இஞ்சி பெரிதும் உதவும். பக்கவிளைவு எதனையும் இஞ்சி ஏற்படுத்தாது என்பது இதன் இன்னுமொரு சிறப்பு. இதுபற்றிய ஆய்வுமுடிவுகள் Obstetrics and Gynecology என்னும் மருத்துவ விஞ்ஞான சஞ்சிகையின் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழில் தரப்பட்டுள்ளன.

ஓங்காளம் வாய்குமட்டல் போன்ற குணங்கள் காணப்படும்போது அரை அங்குலம் நீளமான ஒன்று அல்லது இரண்டு இஞ்சித்துண்டுகளை ஒரு கோப்பை சுடுநீரில் ஊறவைத்து எடுத்த இஞ்சிக்குடிநீரைக் குடிப்பதன் மூலம் சுகம் காணலாம்.

மூட்டுவாதத்தால் முழங்காலில் நோவு ஏற்பட்டு அவதிப்படுவோருக்கு இஞ்சி நிவாரணம் அளிக்கின்றது. இஞ்சியில் செறிந்து காணப்படும் ஜிஞ்ஜெறோல்  (gingerol) என்னும் இரசாயனமே இதற்குக்காரணம் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாப்பாட்டில் இஞ்சியை வழக்கமாகச் சேர்த்து வருபவர்களுக்கு மூட்டுக்களில் ஏற்படும் வலியின் தாக்கம் குறைகிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள் (Life Sciences, November 2003).

தோலில் உள்ள வியர்வை சுரப்பிகளினால் சுரக்கப்படும் டேர்மிசைடின் (dermcidin) என்னும் ஒருவகைப் புரதப்பொருள் தோலில் தொற்றுப் புண்களைத் தோற்றுவிக்கும் பற்றீரியா மற்றும் பங்கசுக் கிருமிகளுக்கெதிரான பாதுகாப்பை அளிப்பதாக ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். குளிர்நாட்களில் இஞ்சி உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுப்பதுடன் வியர்வையையும் ஊக்குவிக்கும். வியர்வை உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுகின்றது. வியர்வையில் உள்ள கிருமிகொல்லும் இரசாயனங்கள் தடுமல், காய்ச்சல்  (Flu) போன்ற தொற்றுநோய்கள் வராமல் தடுக்கின்றன.

Ginger என்பது இதன் ஆங்கிலப்பெயர். Zingiber officinale ROSC. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

உள்ளி

உள்ளிக்குப் பித்தம் ஓங்கிப்பெருகிவிடும்     

கள்ளமுள்ள சேட்டுமத்தைக் கட்டறுக்கும்-மெள்ளவே

வாதம்தனைப்போக்கும் வாய்வுக்கிகிராணி ரத்த

சீதம் தனைப்போக்கும் செப்பு                                                                                                                                        

இதன் பொருள்:  உள்ளி பித்தத்தைக் கூட்டிவிடும். நெஞ்சுச்சளி தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். வாதநோய் ஏற்படுவதைத் தவிர்க்கும். சமிபாட்டுக் கோளாறினால் ஏற்படும் மாந்தம் வயிற்றோட்டம் என்பவற்றைக் குணப்படுத்தும்.

மேலதிகவிபரம்:  நல்ல கொலெஸ்ரறோலைப் (HDL cholesterol)) பாதிக்காது கெட்ட கொலெஸ்ரறோலை (LDL cholesterol) மாத்திரம் குறைக்கும் குணம் உள்ளிக்கு உள்ளது. இரத்தக் குழாய்களை விரிவடையச்செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை சிறிதளவு குறைக்கவும் உள்ளி உதவுகின்றது. உள்ளியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பு (heart attack) மற்றும் பக்கவாதம் (stroke) போன்ற வியாதிகள் தோன்றும் அபாயத்தை ஓரளவு குறைக்கமுடியும் என்று நம்பப்படுகிறது. இரசவர்க்கத்தில் ‘உள்ளிக்குப் பித்தம் ஓங்கிப்பெருகிவிடும்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். அளவுக்கு அதிகமாக உள்ளியைச்சாப்பிடுவது ஓங்காளம், நெஞ்செரிவு, வயிறெரிவு என்பவற்றைத் தோற்றுவிக்கலாம்.

காதுவலியைக் குணப்படுத்துவதற்கு உள்ளி சிறந்த மருந்து என்பது பலரும் அறிந்த உண்மை. எனினும் இதற்கு உள்ளியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்துவைத்திருத்தல் அவசியம். மூன்று உள்ளிப்பூடுகளைச் சுத்தம்செய்து நசித்து எடுத்தபின் அவற்றை அரை கப் (120 mL) சுத்தமான ஒலிவ் (olive) எண்ணெயில் இலேசான சூட்டில் இரண்டு  நிமிடங்கள்வரை விடவேண்டும். பின்னர் எண்ணெயை மாத்திரம் வடித்து எடுத்து குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கவும். காதுவலி ஏற்படும்போது இந்த எண்ணெயில் சிறிதளவு எடுத்துச் சற்று சூடாக்கி ஒன்று அல்லது இரண்டு துளிகளை இளஞ்சூட்டுடன் காதுக்குள் விடவும். ஆயுள்வேத வைத்தியர்கள் ஒலிவ் எண்ணெய்க்குப் பதிலாகக் கடுகு எண்ணெயைப் (mustard oil) பயன்படுத்தி உள்ளித் தைலம் தயாரிக்கிறார்கள்.

இவர்களது முறைப்படி 5 அல்லது 6 உள்ளிப்பூடுகளை நசித்துஎடுத்து அவற்றை 4 தேக்கரண்டி (20 mL) கடுகெண்ணெயில் போடவேண்டும். இந்தக்கலவையை 5 தொடக்கம் 10 நிமிடங்கள் வரை இலேசான சூட்டில் உள்ளி பிறவுண்நிறம் அடையும்வரை விடவேண்டும். பின்னர் எண்ணெயை வடித்தெடுத்து ஒரு கண்ணாடிக் குப்பியில் அடைத்து வைக்கவேண்டும்.

வலி உள்ள காதுக்குள் ஒவ்வொரு துளியாக சில துளிகள் விட்டபின் 30 நிமிடங்களுக்குக் காதைப் பஞ்சினால் அடைத்துவைக்கவும். காதில் விடப்படும் சமயத்தில் எண்ணெய் அதிக சூடாகவோ குளிராகவோ இருத்தல் கூடாது. ஒரு நாளைக்கு இரு தடவைகள் வலி குறையும் வரை 2 அல்லது 3 நாட்களுக்குத் தொடர்ந்து செய்யலாம். இதற்கு மேலும் காதுவலி நீடித்தால் உடனடியாக வைத்தியரிடம் செல்லவும். காதில் சீழ் வடியும்போது இந்தச் சிகிச்சையைச் செய்யக்கூடாது.

உள்ளியை வெள்ளைப்பூடு அல்லது பூடு என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு. Garlic என்பது உள்ளியின் ஆங்கிலப்பெயர். Allium sativum L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.

இலவங்கப்பட்டை (கறுவா)

பித்த மிகப் போக்கும் பேதியொடு வாந்திபோம்

சுத்த ரத்தக்கடுப்பு சூழாது-மெத்த

இலவங்கப் பட்டை இதமாகக் கொண்டால்

மலங் கட்டும் என்றே மதி

இதன் பொருள்: பித்தத்தைப் போக்கும். பேதியையும் வாந்தியையும் நிறுத்தும். இரத்தக்கடுப்பு ஏற்படாது. உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் மலக்கட்டு ஏற்படும்.

மேலதிகவிபரம்: உணவுக்குச்சுவையூட்டுவது என்ற விடயம் ஒருபுறம் இருக்க கறுவாப் பட்டையின் மருத்துவப் பயன்பாடுகள் இன்று உலகின் பலபாகங்களிலும் பேசப்பட்டும் ஆராயப்பட்டும் வருகின்றன.

பற்றீரியா மற்றும் பூஞ்சணங்களை அழிக்கும் கறுவாப்பட்டைத் தைலத்தின் குணம் பற்றிய எனது ஆய்வின் பெறுபேறுகளை 1976 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் சமர்ப்பித்து உரையாற்றினேன். இன்று கறுவாவின் தொற்றுநீக்கும் இயல்பு பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக்குணம் வயிற்றுப்புண்ணைத் (ulcer) தோற்றுவிக்கும் ஒருவகையான பற்றீரியாக்கிருமியை (Helicobacter pylori) அழிக்க உதவுகின்றது.

இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் குணமுடைய கறுவாப்பட்டை நீரிழிவு நோயாளர்க்கு உபயோகமானது. கறுவா இரத்தத்தை ஐதாக்குவதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் இயல்பு உடையது. இதன் காரணமாக இருதயவியாதிகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றது.

கறுவா சாப்பிடுவோர் ஒரு நாளைக்கு அரைத்தேக்கரண்டி கறுவாத்தூளுக்கும் அதிகமாக எடுக்கவேண்டியதில்லை. இதனைத்தேனீருடன் சேர்த்தும் அருந்தலாம். அதிக அளவிலான கறுவா கெடுதி விளைவிக்கக்கூடியது.

கறுவாவில் உள்ள சினமால்டிஹைட் (cinnamaldehyde) என்னும் இரசாயன உள்ளடக்கம் பெண்களில் பாலியல் ஹார்மோன்களின் (sex hormones) சமநிலையைப் பேணுவதன் மூலம் மாதவிலக்கின் போது ஏற்படக்கூடிய வலி, கருத்தரித்தலில் குறைபாடு என்பவற்றைத் தவிர்க்கக்கூடியது.

கறுவாத் தைலமும் கர்ப்பூரமும் சேர்ந்த தைலத்தை மூட்டுவாதத்தால் அவதிப்படுவோர்கள் நோவுள்ள மூட்டுக்களில் தேய்த்து உருவுவதன் மூலம் உடனடி நிவாரணம் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆதியில் கறுவா மரத்தின் வேரில் இருந்து கர்ப்பூரம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சீனக்கறுவா / இலங்கை கறுவா

பல்வேறு வகையான சமையல்களிலும் உணவுப் பண்டங்களிலும் சுவையூட்டியாகப் பயன்படும் கறுவாவில் இருவகையுண்டு. ஒன்று உண்மையான கறுவா (true cinnamon) எனப்படும் இலங்கைக்கறுவா. மற்றது கசியா சினமன்( cassia cinnamon) எனப்படும் சீனக்கறுவா. இலங்கைக்கறுவா தரமுடையதாயினும் இரத்தத்தில் உள்ள சீனியைக் குறைப்பதில் இதன் செயல் திறன் சீனக்கறுவாவை விடக் குறைவானது.

கறுவாவை மருந்தாகப் பயன்படுத்தும்போது பக்கவிளைவுகள் ஏதும் இல்லை. எனினும் அளவுக்கதிகமான கறுவா அதிலும் குறிப்பாக சீனக்கறுவா ஈரலைப் பாதிக்கக்கூடியது.

நீரிழிவு, இருதய வியாதி என்பவற்றுக்குக்குக் கொடுக்கப்படும் வேறு மருந்துகளினதும் அன்ரிபையோற்றிக் (antibiotics) அஸ்பிரின்  என்பவற்றினதும் செயற்பாட்டில் கறுவா குறுக்கிடலாம். எனவே இம்மருந்துகளை எடுப்போர் கறுவாவைத் தொடர்ந்து பயன்படுத்தும் முன் குடும்ப டாக்டரைக் கலந்தாலோசிப்பது அவசியம்.

சீனக்கறுவா செங்கபில (reddish brown) அல்லது கபிலநிறத்துடனும் (dark brown) தடிப்பான பட்டைகளாகவும் காணப்படும். இலங்கைக் கறுவா சற்று வெளிறியும் எளிதில் உடைந்துவிடக்கூடிய மெல்லிய பட்டைகளாகவும் காணப்படும்.

முதலில் அராபியரும் பின்னர் போர்த்துக்கேயர் முதலான ஐரோப்பியரும் இலங்கையில் காலூன்ற விரும்பியதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்தக்கறுவா. வட இலங்கையை ஆரியச்சக்கரவர்த்தி என்றழைக்கப்பட்ட தமிழரசர் ஆண்டுகொண்டிருந்த காலம் அது. இபின்பதூதா என்னும் பெயருடைய அராபிய யாத்திரிகர் ஆரியச்சக்கரவர்த்தியின் ஆட்சிக்குட்பட்டிருந்த புத்தளத்தில் மலைபோலக் குவித்து வைக்கப்பட்டிருந்த கறுவாப் பட்டைக் குவியலைக்கண்டு வாய்ப்பிளந்து நின்றாராம். அவர் இங்கு வந்த ஆண்டு கி.பி.1344.

Cassia cinnamon என்பது சீனக்கறுவாவின் ஆங்கிலப்பெயர். Cinnamomum cassia BLUME என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர். True cinnamon என்பது இலங்கைக் கறுவாவின் ஆங்கிலப்பெயர். Cinnamomum zeylanicum BL. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

சாதிக்காய்

ஆதிக்கமுண்டாம் அழகுமிகும்மேனி

சாதிக்காய் நோய்களைத் தானகற்றும்-பேதிக்காய்

கமலவிழிமாதர் கலவிக்கு நல்லதாம்

நிமலுதரம்போக்கும் நேர் 

இதன் பொருள்: உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வையும் பொலிவையும் தரும் சாதிக்காய் பலநோய்களுக்கும் மருந்தாகும். உடலுறவுக்கு உந்துதல் அளிக்கும்.

மேலதிகவிபரம்: சாதிக்காய் மூளைக்குப் புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியது. பதட்டம், மன உளைச்சல் என்பவற்றுக்கு மருந்தாக உதவக்கூடியது. வேலையிலும் படிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த உதவும்.

சாதிக்காய்

முகப்பரு, அவற்றினால் ஏற்படும் அடையாளங்களை அகற்ற சாதிக்காய் பயன்படும். இதற்கு ஒரு தேக்கரண்டி சாதிக்காய்த்தூளை சிறிதளவு தேனுடன் கலந்து ஒரு பசையாக எடுத்து பரு அடையாளங்கள் உள்ள இடத்தில் பூசவும். அரைமணித்தியாலத்தின் பின்னர் இலேசான சூடு உள்ள நீரினால் முகத்தைக்கழுவவும். தேனுக்குப் பதிலாக பசும்பாலையும் பயன்படுத்தலாம்.

எக்சிமா (eczema) உள்ள இடங்களில் சாதிக்காய்த்தூளைச் சிறிதளவு தண்ணீருடன் கலந்து மெல்லிய பசையாகப் பூசுவதும் ஒரு வீட்டு வைத்திய முறையாகும்.

உடலுறவுக்கு ஊக்கமளிக்கும் சக்தி சாதிக்காய்க்கு உள்ளது என்பது அரபு நாட்டவரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. சாதிக்காயில் இருந்து அற்ககோல்  மூலம் பெறப்பட்ட சத்து ஆண் எலிகளின் பாலுறவுச் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்வதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ‘கமலவிழிமாதர் கலவிக்கு நல்லதாம்’ என்று இரசவர்க்கத்தில் கூறப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்

வயிற்றோட்டம், தொற்றுக்கள், வாதம் போன்ற பலவியாதிகளுக்கு மருந்தாகப் பயன்பட்டாலும் சாதிக்காயை மிகச்சிறிய அளவிலேயே பயன்படுத்தவேண்டும். மூன்று தொடக்கம் பத்து கிராமுக்கு அதிகமாக இதனை எடுக்கக்கூடாது.

இற்றைக்கு முன்னூறு ஆண்டுகளுக்குமுன்னர் இந்தோனேசியாவுக்குச் சொந்தமான பண்டாதீவுகள் (Banda islands)  என்றழைக்கப்பட்ட சிலதீவுகளில் மாத்திரமே சாதிக்காய் மரங்கள் காணப்பட்டன. பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டுகளில் இத்தீவுகளைக் கைப்பற்ற டச்சுக்காரரும் ஆங்கிலேயரும் போர்களில் ஈடுபட்டதுண்டு. சாதிக்காயின் விலை தங்கத்திலும் கூடியதாக இருந்த நேரம் அது. ஆங்கிலேயர்கள் சாதிக்காய் மரங்களை ஆபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் போன்ற இடங்களிலும் வளர்க்கத் தொடங்கியதால் பண்டாத்தீவுகள் வருமானத்தை இழந்து இன்று வறுமையில் வாடுகின்றன.

Nutmeg  என்பது சாதிக்காயின் ஆங்கிலப்பெயர். Myristica fragrans HOUTT என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12207 பார்வைகள்

About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)