இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் - பகுதி 4
Arts
7 நிமிட வாசிப்பு

இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் – பகுதி 4

October 5, 2022 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

பெருங்கற்காலப் பண்பாடும் தற்காலத் தமிழர் பண்பாடும்

தமிழ் சிங்கள மக்களின் பண்பாட்டு வேறுபாடுகள் மொழிகளின் வேறுபாட்டால் தோன்றியதெனக் கூறும் அறிஞர்களில் சிலர்  இனத்தால் அவர்களின் மூதாதையினர் இயக்கர், நாகர்களின் வழித்தோன்றல்கள் எனக் கூறுகின்றனர். ஆயினும் அம்மக்களின் பண்பாட்டுடன் சிங்கள மக்களுக்குள்ள தொடர்புகளும், நினைவுகளும் பௌத்த மதத்தின் வருகையோடு தோன்றிய புதிய பண்பாட்டால் மறைக்கப்பட்டது அல்லது மறக்கப்பட்டன என்றே கூறலாம். ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அப்பண்பாட்டு அம்சங்கள் சிறப்பாகப் பெருங்கற்காலப் பண்பாட்டின் மரபுகள் சில தற்காலம்வரை தொடர்ந்து நிலைத்திருப்பதைக் காணமுடிகின்றன. 

குறியீடுகளும் பிராமி எழுத்துக்களும்

பெருங்கற்கால மக்கள் பிராமி எழுத்தைப் பயன்படுத்த முன்னர் தொடர்பு மொழியாக குறியீடுகளை தமது மட்பாண்டங்களில் பொறித்துள்ளனர். கட்டுக்கரைப் பெருங்கற்கால மக்கள் மட்பாண்டங்களில் மட்டுமன்றி எருதின் சுடுமண் உருவங்களின் வயிற்றுப் பகுதியிலும்  இவற்றைப் பொறித்துள்ளனர். அவற்றுள்  சூலம், வேல் முதலான குறியீடுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவ்வடிவிலான குறியீடுகள் பிற்காலத்தில் தமிழர்கள் வெளியிட்ட நாணயங்களிலும், கல்வெட்டுக்களிலும்  தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.  தற்காலத்தில் அவ்வடிவிலான குறியீடுகள் பல தமிழர்களின் ஆடைகளிலும், மாடுகளிலும், மட்டக்களப்பில் நாளாந்த பாவனைப் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்காலத்தில் தனிநபர், குடும்பம், சமூகம்,  ஊர் என்பனவற்றை அடையாளப்படுத்த தமிழ் அல்லது ஆங்கில எழுத்துடன் குறியீடுகளையும் பயன்படுத்தும் முறை காணப்படுகின்றது.  இதற்கு குறியீடுகளைப் பயன்படுத்தும் முறை பண்டுதொட்டு தமது மூதாதையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மரபு என அவற்றைப் பயன்படுத்தும்  மக்கள் கூறுவது இங்கு நோக்கத்தக்கது.

பெருங்கற்காலப் பண்பாட்டில் இறந்தவர்களின் எலும்புகளைப் பானையில் (தாழி) வைத்து நிவேதனப் பொருட்களுடன் அடக்கம் செய்யும் மரபு காணப்பட்டது. சங்ககால மன்னர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்கள் தம்மை அடக்கம் செய்வதற்குரிய பானையைச் செய்து வைத்துள்ளனர். இது இறந்தவருக்கும் பானைக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றது. தற்காலத் தமிழர்களின் மரணக்கிரியையில் இறந்தவரது உடல் எரிக்கப்பட்ட பின்னர் எரிந்த சாம்பலையும், எஞ்சியிருந்த எலும்புகளையும் கிரியை செய்வதற்காக பானையிலிட்டு வீட்டின் பின்புறத்தில் தொங்கவிடும் மரபு காணப்படுகின்றது. வடஇலங்கையில்  இரணைமடு, நெடுந்தீவு முதலான ஊர்களில் இறந்த ஒருவரை  பானையில் தூங்குகின்றார், உறியில் தொங்குகின்றார் எனக் கூறும் மரபு தற்காலத்திலும் காணப்படுகின்றது. 

பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்புண்டு என்ற நம்பிக்கையில் இறந்தவரின் ஈமச் சின்னத்தைச் சுற்றி அவர் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய உணவுகளையும், பிறபயன்பாட்டுப் பொருட்களையும் சிறிய மட்பாண்டங்களில் வைத்து அடக்கம் செய்யும் மரபு காணப்பட்டது. இதற்கு கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட இரு ஈமச் சின்னங்களும் சான்றாகும். தற்கால இலங்கைத் தமிழரிடையே இறந்தவருக்காக நாடாத்தப்படும் சடங்கில் பலவகை உணவுகளையும், இறந்தவர் பயன்படுத்திய சில பொருட்களையும் வைத்து கிரியை செய்யும் மரபு இன்றும் காணப்படுகின்றது.

தமிழ் நாணயம்

பெருங்கற்காலப் பண்பாட்டின் பிற்காலப் பகுதியில் சுடுமண் நாணயங்களுடன், வெள்ளி, செப்பு நாணயங்களும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதை இலங்கை தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்கள் உறுதிசெய்கின்றன. கட்டுக்கரை ஆய்வில் இவ்வகை நாணயங்கள் அகழ்வு செய்யப்பட்ட இடங்களைவிட மேலாய்வு செய்யப்பட்ட இடங்களிலேயே கிடைத்துள்ளன. இந்நாணயங்கள் பெருங்கற்கால ஈமச்சின்ன மையங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை நோக்கும் போது தற்கால இலங்கைத் தமிழரின் மரணக் கிரியைச் சடங்கின் இறுதியில் சுடுகாட்டில் வாய்க்கரிசி போடும் போது நாணயங்களையும் சேர்த்து வாய்க்கரிசி போடும் மரபை நினைவுபடுத்துவதாக உள்ளது.

கட்டுக்கரை, நாகபடுவான் அகழ்வாய்வுகளில் களிமண், மணல், உமி, வைக்கோல், சுதை என்பன கலந்து செய்யப்பட்டு பின்னர் நெருப்பில் சுடப்பட்ட ஆண், பெண் சிலைகள், சிற்பங்கள், பலவகையான கலைச்சின்னங்கள் என்பன கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவை பெருங்கற்கால மக்களின் கலைமரபையும், அழகியலையும், தொழில்நுட்பத் திறனையும் எடுத்துக்காட்டுகின்றன. இவைபோன்ற முழுவடிவிலான பெரிய சிலைகள், சிற்பங்கள் இதுவரை தென்னிந்திய இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  இவற்றுள் பல சிலைகள் பீடங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பீடங்கள் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இக்கலை வடிவங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டு  மக்களால் வழிபட்ட நாட்டுப்புறத் தெய்வங்களாகவும், கலைப்பொருட்களாக இருக்கவேண்டும். இக்கலைவடிவங்களில் காணப்படும் காதணிகள், கழுத்துமாலைகள், அட்டியல்கள், கைவளையல்கள், காற்சலங்கைகள், ஒட்டியாணங்கள், பொட்டுகள் (வர்ணங்கள்) கிரீடங்கள், தலைப்பாகைகள், ஆடைகளின் வடிவமைப்புகள் என்பன மண்ணில் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் தொழிநுட்பங்கள், பொருள் விளக்கம், கலைமரபு என்பவற்றை கலைவல்லுனர்கள் ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் பிற்காலத் தமிழரிடையே தோன்றி வளர்ந்த நாட்டுப்புறத் தெய்வங்களும், கலைவடிவங்களும் பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து தோன்றி வளர்ந்தவை என்ற உண்மை தெரியவரலாம்.

இலங்கையில் வாழ்ந்த இயக்க, நாக மக்கள் பற்றிய அதிலும் குறிப்பாக நாக மக்கள் பற்றிய ஆழமான ஆய்வுகள் இலங்கைத் தமிழரின் வரலாறும், பண்பாடும் அம்மக்களில் இருந்து தொடங்கவேண்டும் என்ற புதிய செய்திகளைச் சொல்வதாக உள்ளன. அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கிய இடமுண்டு. இலங்கைத் தமிழரை இதிகாச, புராணங்களை ஆதாரங்களாகக் காட்டி நாக இனக்குழுக்களுடன் தொடர்புபடுத்தி ஆராயும் மரபு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. பாளி இலக்கியங்களையும், பெருங்கற்காலப் பண்பாட்டையும் தொடர்புபடுத்தி அப்பண்பாட்டை நாகர்களே அறிமுகப்படுத்தினர் என்ற கருத்தும் தற்காலத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்நாக மக்களை வடஇந்தியாவிலிருந்து வந்தவர்கள் என வாதிடுவோரும் உள்ளனர். ஆயினும் கட்டுக்கரை, நாகபடுவான் தொல்லியல் ஆய்வுகளில் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாகவழிபாட்டுச் சின்னங்கள் நாகத்தை குலமரபுத் தெய்வமாகக் கொண்ட பெருங்கற்கால மக்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்தியுள்ளன. வடஇந்தியாவிலிருந்து பௌத்தமதத்துடன் வடபிராமி எழுத்தும், பிராகிருத மொழியும் அறிமுகமாவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் தமிழ் எழுத்தையும், தமிழ் மொழியையும் பயன்படுத்தி இருந்தனர் என்பதற்கு நம்பத்தகுந்த சாசன ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவ்வாதாரங்கள் நாகருடன் தமிழ் மொழியும், தமிழ் எழுத்தும் (தமிழப் பிராமி எழுத்து) இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டதைக் காட்டுகின்றன. இவற்றிலிருந்து இலங்கைத் தமிழரின் வரலாறும், பண்பாடும் பெருங்கற்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்திய நாக இனக்குழுவிலிருந்து தொடங்கியதெனக் கூறமுடியும். 

ஆதிகாலத்தில் நாக என்ற பெயருக்குரிய மக்கள் இலங்கையின் பல வட்டாரங்களில் வாழ்ந்துள்ளனர். ஆயினும் வரலாற்று மூலங்கள் அநுராதபுரத்திற்கு வடக்கே திருகோணமலை உள்ளிட்ட  வடபிராந்தியத்தையே  நாக மக்களுடன் தொடர்புபடுத்தி அதைத் தனியொரு பிராந்தியமாக அடையாளப்படுத்திக் கூறுகின்றன. பாளி மொழியில் நாகதீபம் என அழைக்கப்பட்ட இப்பெயர் தமிழில் நாகநாடு என அழைக்கப்பட்டுள்ளது. இப்பெயர்களே கி.பி.13ஆம் நூற்றாண்டில் பெருநிலப்பரப்பு வன்னி என்ற பெயரையும், 15ஆம் நூற்றாண்டில் குடாநாடு  யாழ்பாணயன்பட்டினம் என்ற பெயரையும் பெறுவதற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்துள்ளன. இப்பெயர்களுக்குரிய பிராந்தியத்தையே 14 ஆம் நூற்றாண்டில் எழுந்த நம்பொத்த என்ற சிங்கள இலக்கியமும் தமிழ்ப்பட்டினம் (டமிழ பட்டின) எனக் குறிப்பிடுகின்றது. 

நாக என்ற பெயர் பண்டையகால இலங்கையில் பல இன மக்களும் தனிநபர் பெயராகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால்  காலப்போக்கில் அப்பெயர் பல இன மக்களிடம் மறைந்து போக வடக்கு – கிழக்கு இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பெயராகக் காணப்படுகின்றது. இதற்கு நாகன், நாகி, நாகதேவன், நாகராசன், நாகம்மாள், நாகவண்ணன், நாகநாதன், நாகமுத்து முதலான தனிநபர் பெயர்களையும், நாகர்கோயில், நாகமுனை, நாகபடுவான், நாகதேவன்துறை, நாகமலை, நாகதாழ்வு முதலான  இடப் பெயர்களையும், ஊர்கள் தோறும் காணப்படும் நாகவழிபாட்டு ஆலயங்களையும் உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இப்பெயர்கள் இலங்கைத் தமிழரின் மூதாதையினர் நாக இனக்குழுவின் வழித்தோன்றல்கள் என்ற நீண்டகால வரலாற்று நினைவுகள் தமிழர் மத்தியில் இன்றும் நிலைத்திருப்பதைக் காட்டுகின்றன.

உசாத்துணை நூல்கள்

இந்திரபாலா, கா., 2006, இலங்கையில் தமிழர்- ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

இரகுபதி, பொ., 2006, வல்லியக்கனும் வல்லிபுர நாதரும், புலரி மறுபிரசுரம், யாழ்ப்பாணம்.

சிற்றம்பலம், சி.க., 1996, ஈழத்து இந்து சமய வரலாறு, பாகம்.1, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, கொழும்பு.

சேனக பண்டாரநாயக்கா.,1985, (தமிழாக்கம்) “இலங்கை மக்கள் வசிப்பிடாமதல், தேசிய பிரச்சனை, வரலாறு, இனம் தொடர்பான சில கேள்விகள்”இலங்கையில் இனத்துவமமும் சமூகமாற்றமும், சமூக விஞ்ஞான மன்றம், கொழும்பு:1-23.

பத்மநாதன், சி., 2016, இலங்கைத் தமிழர் வரலாறு: கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் (கிமு.250-கி.பி.300), இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், இந்துமத அலுவல்கள் அமைச்சு, கொழும்பு.

புஷ்பரட்ணம், ப., 1999,“வடஇலங்கைச் சமூகவழக்கில் பெருங்கற்காலக் குறியீடுகள்” வளர்தமிழியல் அறிவியல், அனைத்திந்திய அறிவியியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர்.

புஷ்பரட்ணம், ப.,  1999,“தென்னிலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்கள் – ஒரு வரலாற்று நோக்கு”நாவாவின் ஆராய்ச்சி, இதழ்.49, சென்னை:55-70.

புஷ்பரட்ணம், ப.,  2007, இலங்கைத் தமிழர்-ஒரு சுருக்க வரலாறு, தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து, மலேசியா.

Conigham,Robin.,2002, “Beyond and Before the Imperial Frontiers: ERLY Histoic Sri Lanka and the Origions of Indian Ocean Trade” Man and Environment, Journal of the Indian Society for Prehistoric and Quaternary Studies;Vol.XXVII,No.1:99-107.

Deraniyagala, S.U., 1992, The Prehistory of Sri Lanka: An Ecologygical Perspective, Department of Archaeological Survey, Colombo.

Mahadevan, I., 1966, Corpus of the Tamil- Brahmi Inscriptions, Reprint of Seminar on Inscriptions, Department of Archaeology Government of Tamil Nadu, Madras.

Mahavamsa, 1950, (e.d) Geiger, W., The Ceylon Government Information Department, Colombo.

Paranavitana, S., 1970, Inscription of Ceylon: Early Brahmi Inscrip­tions, The Department of Archaeology Ceylon, Colombo,I.

Pushparatnam, P. 2002, Naka Dynasty as Gleaned from the Archaeological Evidences in Sri Lanka” Jaffna Science Association Tenth Annual Session:1-34.

Pushparatnam, P. 2000, Tamil Brahmi Graffiti from Northern Sri Lanka” Studies in Indian Epigraphy, Vol.XXVI, Maysore. 

Rajan,K., 2015, Early Writing System, A Journey from Graffiti o Brahmi, Published by Pandya Nadu Centre for Historical Research, Chennai.

Ragupathy, P., 1991, The Language of the Early Brahmi Inscription in Sri Lanka, [Unpublished].

Seneviratne, S., 1984, The Archaeology of the Megalithic-Black and Red Ware Complex in Sri Lanka in Ancient Ceylon, Journal of the Archaeological Survey of Sri Lanka, 5:237-307.

Sitrampalam, S.K., 1990, Proto Historic Sri Lanka: An Inter­disciplinary Perspective in Journal of the Institute of Asian Stud­ies, VIII [1]: 1-8.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

24830 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்