Arts
21 நிமிட வாசிப்பு

இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் – பகுதி 3

September 9, 2022 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

கட்டுக்கரையின் பண்டைய கைத்தொழிற்சாலைகள்

கட்டுக்கரையின் பண்பாட்டுத் தொன்மையையும், தொழில்நுட்பச் சிறப்பையும் அடையாளப்படுத்திக் காட்டுவதில் அங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் சிறு கைத்தொழிற்சாலைகளுக்கு முக்கியமான இடமுண்டு. தென் தமிழகத்திலும், இலங்கையிலும் இரும்பின் பயன்பாட்டை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களாவர். இதன் விளைவால் இதுவரை காலமும் கல்லாயுதங்களைப் பயன்படுத்திவந்த மக்கள் இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்தமாற்றம் பெருங்கற்கால மக்களின் பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் புரட்சிகர மாற்றங்களேற்பட வழிவகுத்தன. இங்கு இரும்புத்தாதின் படிமங்களை அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிகளிலும், பிற தேவைகளுக்கு மண்ணகழப்பட்ட ஆழமான குழிகளிலும் பரவலாகக் காணமுடிந்தது. பெருங்கற்கால கலாசார மண் அடுக்குகளில் அந்தப்பண்பாட்டு மக்கள் இரும்பை உருக்கிக் கருவிகளைச் செய்ததற்கான சான்றுகள் (Iron Slacks) அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை மேலும் உறுதிப்படுத்துவதாக இரும்புத்தாதை உருக்குவதற்கு பயன்படுத்திவந்த சிறிய இரும்புச் சூளைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தோன்றிய நிரந்தரப் பொருளாதாரக் கட்டமைப்பால் ஏற்பட்ட மிகை உற்பத்தி, மக்களுக்கு ஓய்வுகாலத்தை வழங்கியது. இதன் விளைவால் ஆன்மீகம், கலைகள், அழகுசாதனப் பொருட்கள் போன்ற துறைகளில் நாட்டம் காட்டினர். பெண்களின் அலங்காரப் பொருட்களாக கற்கள், சங்குகள், சிற்பிகள், மிருக எலும்புகள், மீன்களின் முள்ளந்தண்டு எலும்புகள் என்பவற்றைப் பயன்படுத்திக் கழுத்துமாலைகள், காற்சலங்கைகள், கைவளையல் என்பவற்றை உற்பத்தி செய்தனர். கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வில் பல அளவுகளில், பல வடிவங்களில் பயன்படுத்தப்பட்ட கல்மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கார்லினிலேயன், அகட் முதலான கற்களில் செய்யப்பட்டவை. இந்தக்கல்மணிகள் பெருங்கற்காலப் பண்பாட்டில் காணப்பட்ட பிரதான அம்சங்களில் ஒன்றாகும். விலையுயர்ந்த கற்கள் வடஇந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தமிழகப் பெருங்கற்கால மையங்களில் வைத்து கல்மணிகள் உற்பத்திசெய்யப்பட்டமைக்கு கொடுமணல், காரைக்காடு முதலான தொல்லியல் மையங்களில் சான்றாதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அம் மையங்களில் இருந்தே இலங்கைக்கான கல்மணிகள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் பேராசிரியர் ஒஸ்மோன் பொப்பே ஆராய்ச்சி, இலங்கைப் பெருங்கற்கால மையங்களிலும் கல்மணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் இருந்ததாகக் கூறுகின்றார். அவரின் கூற்று பொருத்தமானது என்பதற்கு கட்டுக்கரை அகழ்வாய்வில் சில சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு பலவகை கல்மணிகளுடன், கல் மணிகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்திய விலையுயர்ந்த கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தக்கற்களில் பல அளவுகளில் கல்மணிகள் வெட்டியெடுக்கப்பட்டதற்கான அடையாளங்களும் காணப்படுகின்றன. இவை கட்டுக்கரை மக்களிடையே கல்மணிகளை உற்பத்தி செய்யும் தொழிற் கூடங்கள் இருந்ததற்குச் சான்றாகும்.

குறியீடுகளும் பிராமி எழுத்துக்களும்

பூர்வீக மக்கள் வாழ்ந்த இடங்களை அடையாளம் காண்பதற்கு மட்பாண்டங்கள் முக்கிய சான்றுகளாகக் காணப்படுகின்றன. பண்டைய காலங்களில் அனைத்து தேவைகளுக்கும் மட்பாண்டங்களே பயன்படுத்தப்பட்டன. இவை இலகுவாக அழிவடைந்து போவதால் அவற்றைத் தொடர்ந்து உற்பத்தி செய்யவேண்டியிருந்தது. இதனால் பண்டைய குடியிருப்புகள் இருந்த இடங்களில் இவையே அதிக அளவில் காணப்படுகின்றன. கட்டுக்கரையில் பல அளவுகளில், பல வடிவங்களில், பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டங்கள் முழுவடிவிலும், உடைந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொழில்நுட்பம், வடிவமைப்பு, அலங்காரங்கள், வர்ணங்கள், குறியீடுகள் என்பவற்றின் அடிப்படையில் அவற்றின் காலங்களைக் கணிப்பிடமுடிகின்றது. கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்காலத் தாழிகள், வட்டில்கள், மண்தட்டுக்கள், மண்பானைகள், குவளைகள், உடைந்த மட்பாண்ட விளிம்புகள் என்பவற்றின் வடிவமைப்பு, தொழில்நுட்பம், வர்ணம், அலங்காரம் என்பன பெருமளவு ஒரே தொழில்நுட்பம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இதற்கு அவை சக்கரங்கள் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டதே காரணமாகும். உற்பத்திசெய்யப்பட்ட மட்பாண்டங்களை செம்மைப்படுத்தவும், அவற்றின் மீது அலங்காரங்களைப் பொறிக்கவும், வர்ணங்கள் தீட்டவும் பயன்படுத்தப்பட்ட தனித்துவமான கற்கருவிகள் பல கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் கட்டுக்கரைப் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களிடையே மட்பாண்டங்களை உற்பத்திசெய்யும் சிறுதொழிற் சாலைகள் இருந்தமைக்குச் சான்றாகும். மேலும் பெருங்கற்கால ஈமச் சின்னங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கையான சங்குகளுடன் சங்கை வெட்டியெடுத்து செயற்கையாகச் செய்யப்பட்ட சில பொருட்களும் கிடைத்துள்ளன. இவை சங்குத் தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

கட்டுக்கரைக்கு புலம்பெயர்ந்து வந்த பூர்வீக மக்கள்

கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்விலிருந்து இங்கு வாழ்ந்த பூர்வீக மக்கள் நுண்கற்கால, பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரியவர்கள் என்பது உறுதியாகின்றது. தொல்லியல் அறிஞர்கள் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் ஒரே இனவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். தொல்லியலாளர் அல்ஜின், இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இருபக்க அலகுடைய நுண்கற்காலக் கல்லாயுதங்கள் தமிழகத்தில் உள்ள தேரிக் கலாசாரத்துடன் ஒரே பிராந்தியம் எனக் கருதும் அளவிற்கு ஒற்றுமை கொண்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார் (Sitrampalam, 1990:34). மொழியியலாளர்கள் இலங்கையில் நுண்கற்கால மக்கள் பேசிய ஆதிஒஸ்ரிக் மொழி தென்னிந்தியாவில் நுண்கற்கால மக்கள் பேசிய ஆதிஒஸ்ரிக் மொழியோடு கொண்டுள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் தற்காலத்தில் இலங்கையில் பேச்சுவழக்கில் உள்ள 200 க்கும் மேற்பட்ட சொற்கள் நுண்கற்காலப் பண்பாட்டு மக்கள் பேசிய ஆதிஒஸ்ரிக் மொழிச் சொற்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வொற்றுமைகளின் அடிப்படையில் இலங்கையில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் தென்னிந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள தேரிமணற்குன்றுப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது. பேராசிரியர் இந்திரபாலா, வடஇலங்கை அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு தமிழகத்தின் தொடக்க வாயிலாக இருப்பதால் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த இம்மக்கள் முதலில் யாழ்ப்பாணத் தீபகற்பத்திலேயே குடியேறியிருக்க வேண்டும் எனக் கூறுகிறார். இக்குடியேற்றம் கட்டுக்கரையிலும் ஏற்பட்டதை அங்கு கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகள் உறுதிசெய்கின்றன.

நுண்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த பெருங்கற்கால மக்களையும், அவர்களின் பண்பாட்டையும் அறிஞர்கள் பலரும் இலங்கை நாகரிகத்தின் ஆக்ககாலமாகவே எடுத்துக் கொள்கின்றனர். இப்பண்பாடு எங்கே தோன்றியது? எப்போது தோன்றியது? தோற்றுவித்த மக்கள் யார்? என்பது தொடர்பாக அறிஞர்களின் மத்தியில் வாதப்பிரதி வாதங்கள் உள்ளன. ஆயினும் திராவிட மொழி பேசும் மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலப் பெருங்கற்காலப் பண்பாட்டில் காணப்படும் தனித்துவமான அம்சங்கள் ஒரே பிராந்தியத்திற்குரிய பண்பாடாகத் தோற்றமளிக்கின்றன. இப்பண்பாட்டு வட்டத்திற்கு உள்ளேயே இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாடும் உள்ளடக்கப்படுவதால் இப்பண்பாட்டைத் தென்னிந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த திராவிட மக்களே அறிமுகப்படுத்தினர் என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும். பேராசிரியர் இந்திரபாலா நுண்கற்காலப் பண்பாட்டு மக்களைப் போல் பெருங்கற்கால மக்களும் தென் தமிழகத்தில் இருந்தே வடஇலங்கை ஊடாக இலங்கைக்குப் புலம்பெயர்ந்தனர் எனக் கூறுகின்றார். இதற்கு கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெருங்கற்காலக் குடியிருப்புக்கள் மேலும் சான்றாகும்.

பெருங்கற்காலப் பண்பாடும் நாக இனக்குழுவும்

நாகபடுவானில் நாக வழிபாட்டுச் சின்னங்கள்

கலாநிதி சிரான் தெரணியாகல போன்ற அறிஞர்கள் இலங்கைக்கு பெருங்கற்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் என அடையாளப்படுத்திக் கூறுகின்றனர் (Deraniyagala, 1992:735). பேராசிரியர் இந்திரபாலா இம்மக்கள் தென் தமிழகத்திருந்தே இலங்கைக்குப் புலம் பெயர்ந்ததாகக் கூறுகின்றார் (இந்திரபாலா 2006). தென்னாசியாவில் பண்டுதொட்டுப் பயன்படுத்தப்பட்ட பெயர்களில் ஒன்றாக “நாக” என்ற பெயர் காணப்படுகின்றது. இதற்கு மத வழிபாட்டில் நாகத்தை குலமரபுத் தெய்வமாகக் கொண்டிருந்த மக்கள் வாழ்ந்து வந்ததே காரணம் எனக் கூறப்படுகின்றது. வட இந்தியாவில் அரசமைத்த குப்தரும், தக்கணத்தில் ஆட்சி புரிந்த சாதவாகனரும் தம்மை நாக குலத்தவர் என அழைத்துக் கொண்டனர். தமிழகத்தின் பண்டைய தலைநகரான நாகபட்டினம் நாகரின் தலைநகர் என்ற கருத்துண்டு. சங்ககாலத்தில் இப்பெயர்கள் குறுநிலத் தலைவர்களுடனும், புலவர்களுடனும், நாடு, நகர், ஊர் ஆகிய இடப்பெயர்களுடனும் இணைந்து வருகின்றன. சமகால இலங்கையின் பாளி நூல்களிலும், பிராமிக் கல்வெட்டுகளிலும் இப்பெயர்கள் அரசர்களுடனும், சிற்றரசர்களுடனும், நகரங்களுடனும், தனிநபர்களுடனும் இணைந்து வருகின்றன.

கட்டுக்கரைப் பெருங்கற்கால குடியிருப்பு மற்றும் ஈமச்சின்ன மையங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட, நாக வழிபாட்டுச் சின்னங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்களே என்பதை உறுதிப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வகையான சான்றாதாரங்கள் இலங்கையின் வேறு எந்தப் பெருங்கற்கால மையங்களிலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த அகழ்வாய்வின் போது முதலாவது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆய்வுக்குழியில் இருந்து இப்பிரதேசத்திற்கு அந்நியமான வெண்மையான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கற்களில் சில வடிவங்கள் செயற்கையாகச் செதுக்கப்பட்டிருந்தன. அக்கற்களை ஆய்வுசெய்த தமிழக ஆய்வாளர்கள் அவற்றில் செதுக்கப்பட்டுள்ள உருவம் நாக பாம்பைப் பிரதிபலிப்பதாகக் கூறுகின்றனர். மேலும் முதலாம், இரண்டாம் ஆய்வுக்குழிகளில் இருந்து பல்வேறு அளவுகளில், பல வடிவங்களில் சுடுமண் நாக சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பெரிய அளவிலான நாக சிற்பங்கள் சில சாதாரணமாகப் படுத்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏனைய நாக சிற்பங்கள் வாயைப் பிளந்து படமெடுப்பது போன்ற தோற்றத்தில் செதுக்கப்பட்டிருந்தன. ஐந்து தலைகொண்ட சிறிய நாக சிற்பங்கள் படமெடுத்து ஆடுவது போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றன. இவை மண் சட்டியில் வைத்து வழிபடப்பட்டவையாக இருக்கலாம். சில சிறிய நாக சிற்பங்கள் பீடத்துடன் காணப்படுகின்றன. இச்சிற்பங்களின் கீழ்ப்பகுதில் காணப்படும் அரைவட்ட வளைவு இவை பிற தெய்வங்களுடன் இணைந்திருந்ததைக் காட்டுகின்றன. இந்த அம்சம் பிற்கால நாக வழிபாட்டு மரபை நினைவுப்படுத்துவதாக உள்ளது.

பெருங்கற்காலப் பண்பாட்டிற்கும் நாக இன மக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் அடையாளப்படுத்துவதில் 2016 -2017 காலப்பகுதியில் நாகபடுவான் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்விடம் கட்டுக்கரைக்கு வடக்கே ஏறத்தாழ 50 கிலோ மீற்றர் தொலைவில் பூநகரிப் பிராந்தியத்தின் காட்டுப் பகுதியிலுள்ள சிறிய கிராமமாகும். இங்கே நாகபடுவான் என்ற இடப்பெயரே நாக மக்களோடு தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. இப்பெயர் நாகர்களின் குளம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. படுவம், படுவான் என்பது பழமையான தமிழ்ச்சொல். இது சங்க இலக்கியத்தில் ஆழமான குளம், பெரிய குளம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாகர்களின் குளம் என்ற பொருளைக் கொண்ட இடப்பெயரே இன்றும் மாற்றம் அடையாது நாகபடுவான் என்ற பண்டைய தமிழ்ச் சொல்லில் அழைக்கப்பட்டு வருகின்றது. கலாநிதி இரகுபதி, நாகபடுவான் என்ற இடப்பெயர் ஆதியில் இங்கு நாகத்தைக் குலமரபாகக் கொண்ட மக்கள் வாழ்ந்ததன் காரணமாகத் தோன்றியது எனக் கூறுகிறார்.

நாகபடுவானில் நாக வழிபாட்டுச் சின்னங்கள்

நாகபடுவானில் 4 x 3 மீற்றர் நீள அகலத்தில் ஆறு ஆய்வுக் குழிகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் இயற்கை மண் அடையாளம் காணும்வரை அகழ்வு செய்யப்பட்டது. இங்கு வாழ்ந்த தொடக்ககால மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரியவர்கள் என்பதை 4ஆம் 5ஆம் ஆய்வுக்குழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால ஈமத் தாழிகளின் எச்சங்கள் உறுதிசெய்கின்றன. அவற்றுள் 2ஆம், 3ஆம் ஆய்வுக்குழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றாதாரங்களில் 90 வீதமானவை நாக வழிபாட்டுடன் தொடர்புடையவையாகக் காணப்பட்டன. அக்குழிகளில் இருந்து களிமண், குருமணல், உமி அல்லது வைக்கோல் என்பன கலந்து செய்யப்பட்டு பின்னர் நெருப்பினால் சுடப்பட்ட பலவகையான நாகவழிபாட்டுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆண் – பெண் சிலைகள், அவற்றின் பீடங்கள், நாகக் கற்கள், பல அளவுகளில் வடிவமைக்கப்பட்ட நாக சிற்பங்கள் என்பன அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆண்- பெண் சிலைகள் நாக, நாகினி தெய்வங்களின் சிலைகளாகக் கருதப்படுகின்றன.

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சான்றாதாரங்கள், பெருங்கற்காலப் பண்பாட்டிற்கும் நாக மக்களுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றன. அவற்றுள் மூன்றாவது ஆய்வுக்குழி அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட மண் சட்டிகளின் விளிம்புப் பகுதியில் நான்கு திசைகளை நோக்கியவாறு நாகபாம்புகள் படமெடுத்த நிலையில் இருக்க, அவற்றின் வால் பகுதிகள் சட்டிக்குள் இணைந்து சட்டியின் நடுமையத்தில் ஒரு வளையமாகக் காணப்படுகின்றன. இம்மரபு தற்கால நாக வழிபாட்டில் செப்புத்தட்டத்தில் அல்லது மண்பாத்திரத்தில் நாகபாம்புகளை வைத்து வழிபடுதல் அல்லது நாகதோசம் நீங்குவதற்காக அதனை ஆலயங்களுக்கு கொடுக்கும் மரபை நினைவுபடுத்துவதாக உள்ளது. இவற்றில் இருந்து நாகதோசம் நீங்குவதற்கு நாகபாம்பை மண் சட்டியில் வைத்து வழிபடுதல் அல்லது ஆலயங்களுக்கு கொடுக்கும் மரபு இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து தோன்றியதெனக் கூறலாம்.

இவ்வாய்வுக்குழியின் இன்னொரு இடத்தில் கவிழ்க்கப்பட்ட நிலையில் பெரிய பானையும், பானையின் மேற்பகுதியின் மையத்தில் நீண்ட வாய்ப்பகுதியும், அதைச் சுற்றி மூடிய நிலையில் நான்கு சிறு கலசங்களும் காணப்படுகின்றன. பானையின் மூன்று திசைகளிலும் தெய்வங்கள் அமர்ந்திருக்கும் பீடங்கள் காணப்படுகின்றன. அவற்றில் அமர்ந்துள்ள தெய்வத்தின் இடது கால் பானையை முட்டியவாறு உள்ளது. நான்காவது திசையில் சட்டியின் விளிம்பில் படமெடுத்த நாக பாம்பு காணப்படுகிறது. இவை நாக வழிபாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. இப்பானையில் செய்யப்பட்ட துவாரமும், அதைச் சுற்றிக் கவிழ்ந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய கலசங்களும் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றன. இதனால் இப்பானைக்குள் இருக்கக் கூடிய சின்னங்களை கண்டறியும் நோக்கில் தமிழகத் தொல்லியல் அறிஞர் வை.சுப்பராயலு அவர்களின் ஆலோசனையுடன் ஆராய்ந்த போது அதற்குள் அழகான நாகபாம்புச் சிலையைக் கண்டுபிடிக்க முடிந்தது. இதிலிருந்து நிலத்தில் நாட்டப்பட்ட நாகபாம்புச் சிலையை அரைவட்ட வடிவில் செய்யப்பட்ட பானையால் மூடி அதை அக்கால மக்கள் வழிபட்டனர் என்பது தெரியவந்துள்ளது. இம்மரபே பிற்காலத்தில் பாம்புப் புற்று வழிபாடு தோன்றக் காரணமாக இருந்துள்ளது. இவ்வழிபாடு பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்களிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதன் முக்கியத்துவம் தொடர்பாக கலாநிதி பொ.இரகுபதி கூறும்போது “பானையின் விளிம்பைச் சுற்றி கவிழ்ந்த வடிவில் உள்ள சிறிய கலசங்களை பாம்புப் புற்றில் வரும் சிறிய துவாரங்களாகவும், பானையின் வாய்ப்பகுதி பாம்புப் புற்றிலிருந்து பாம்பு வெளியேறும் வழியாகவும் உள்ளன. பிற்காலத்தில் பாம்புப் புற்றை நாக தெய்வத்தின் ஆலயமாகக் கொண்டு படையல் செய்து வழிபடும் மரபு தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்த பூர்வீக வழிபாட்டு மரபையே நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட வழிபாட்டு மையம் உறுதிப்படுத்துவதாகக் கொள்ள முடிகின்றது” எனக் குறிப்பிடுகின்றார்.

நாகபடுவானில் நாக வழிபாட்டுச் சின்னங்கள்

ஆகவே இலங்கைக்கான பெருங்கற்காலப் பண்பாட்டை அறிமுப்படுத்தியவர்கள் நாக இனக்குழு என அறிஞர்கள் கூறிய கருத்துக்களையும், ஊகங்களையும் நம்பத்தகுந்த தொல்லியல் ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்துவதில், கட்டுக்கரை மற்றும் நாகபடுவான் தொல்லியல் ஆய்வுகள் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன எனலாம்.

நாகரும் தமிழரும்

பௌத்த மதம் அரச மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை வரலாற்றை வாய்மொழிக் கதைகளாகப் பேணும் மரபும் தோற்றம் பெற்றது. இந்தக்கதைகளை அடிப்படையாகக் கொண்டே பாளி வரலாற்று இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இவ்விலக்கியங்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றிய மக்கள், அம்மதத்திற்கு தொண்டாற்றிய மன்னர்கள் ஆகியோரின் வரலாற்றை முதன்மைப்படுத்தி எழுந்ததினால் அவை தமிழர் வரலாற்றையோ, பண்பாட்டையோ அறிவதற்கு பெரிதும் உதவவில்லை. இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து எழுந்த வரலாற்று ஆய்வுகளில் விஜயன் வருகையைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட மக்கள் குடியேற்றம், பௌத்த மதம், எழுத்து, மொழி, கலை, பண்பாடு என்பன சிங்கள மக்களின் வரலாறாகவே பார்க்கப்பட்டன. அவற்றில் விஜயன் வருகைக்கு முன்னர் வாழ்ந்த யக்ஷ, நாக மக்கள் பற்றியோ, இலங்கை நாகரிகத்திற்கு வித்திட்ட பெருங்கற்காலப் பண்பாடு பற்றியோ அல்லது பிற்கால வரலாற்றுடன் அம்மக்களுக்குள்ள தொடர்புகள் பற்றியோ ஆராய்ந்து பார்ப்பதில் அக்கறை காட்டப்படவில்லை. அவ்வாறு ஆராய்ந்து பார்க்கப்பட்டிருந்தால், இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாறும், பண்பாடும் யக்ஷ, நாக மக்களுடன் சிறப்பாக பெருங்கற்காலப் பண்பாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய நாக இன மக்களுடன் தொடங்கியது என்ற உண்மை துலக்கம் பெற்றிருக்கும். அவற்றைப் பின்வரும் சான்றாதாரங்களின் அடிப்படையில் எடுத்துக்காட்டலாம்.

பேராசிரியர் இந்திரபாலா, தென்னிந்தியாவிலிருந்து பெருங்கற்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்திய நாக இனக்குழுக்கள் அநுராதபுரத்திலும், தென்னிலங்கையின் ஏனைய பிராந்தியங்களிலும் பிராகிருத மொழி தழுவிய பேரினக் குழுவாக உருவாகிய போது, ஏனையோர் வடக்கில் தமிழ் இனக்குழுவுடன் கலந்து கொண்டனர் எனக் குறிப்பிடுகிறார் (Indrapala 2005:172-73). இக்கூற்று மேலும் விரிவாக ஆராய்ந்து பார்க்கப்படவேண்டும். பேராசிரியர் கே.எம்.டி. சில்வா கி.பி. 7 ஆம் நூற்றாண்டு அளவில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் செல்வாக்கினால் இலங்கையில் இந்து – பௌத்தம் என்ற சமய வேறுபாடுகள் ஏற்பட்டு அது தமிழ் – சிங்கள இன முரண்பாட்டுக்கு வழிவகுத்த போது இரு இனமக்களும் தமது தனித்துவத்தைப் பேணுவதில் அக்கறை கொண்டனர் எனக் கூறுகின்றார். இந்நிலையில் இனம், மொழி, மதம், பண்பாடு என்பவற்றால் தமிழகத்துடன் ஒன்றுபட்ட இலங்கைத் தமிழர்கள், தமிழகத்திற்கு அண்மையிலுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்களை தமக்குப் பாதுகாப்பான பிராந்தியம் எனக் கருதினர். ஆயினும் இப்பக்தியியக்கத்திற்கு முன்னர் இங்கு வாழ்ந்த நாக இனக்குழுக்களின் ஒரு பிரிவினர் பௌத்த மதத்தையும், அம்மத மொழியான பிராகிருதத்தையும ஏற்றுக் கொள்வதற்கு முன்பாகவே அவ்வினக் குழுக்கள் வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும், தென்னிலங்கையின் பல வட்டாரங்களிலும் தமிழ் மொழி பேசும் நாகர்களாகவே வாழ்ந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதனால் இலங்கையில் தமிழ் மொழியின் தோற்றகாலம் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் உருவானதெனக் கூறலாம்.

பிராமிக் கல்வெட்டு

தென்னாசியாவில் தோன்றிய முதலாவது எழுத்து வடிவம் பிராமி என அழைக்கப்படுகின்றது. வடஇந்தியாவில் அசோக மன்னனது ஆட்சிக்காலத்தில் இருந்து கல்வெட்டுக்களை எழுதுவதற்கு பிராமி எழுத்து பயன்படுத்தப்பட்டதால், இதற்கு அசோக பிராமி அல்லது வடபிராமி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வெழுத்தே கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து பௌத்தமதம் பரவிய தென்னாசியா, தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றின் தொடக்ககால எழுத்தாக இருந்ததெனக் கூறப்படுகின்றது. ஆனால் இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள எழுத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்ந்த பெர்ணாந்தோ, சத்தமங்கல கருணாரத்ன, ஆரிய அபயசிங்கா போன்ற அறிஞர்கள் பௌத்த மதத்துடன் வடபிராமி எழுத்து இலங்கைக்கு அறிமுகமாவதற்கு முன்னர் இங்கு திராவடி (தமிழ்) எழுத்து முறை பயன்பாட்டில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் அநுராதபுரத்திலும், தமிழகத்தில் ஆதிச்சநல்லூரிலும் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால மட்பாண்ட பிராமிச் சாசனங்கள் பற்றிய நவீன காலக்கணிப்புகள் வடபிராமி எழுத்திற்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கணித்துள்ளன. இப்புதிய காலக்கணிப்புகளால் வடஇந்தியாவிற்குரிய பிராமி எழுத்து தமிழகத்திலிருந்து அல்லது இலங்கையிலிருந்து சென்றிருக்க வேண்டும் என்ற வலுவான புதிய கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இக்கருத்து மாற்றங்கள் இலங்கையின் தொடக்ககால எழுத்தையும், தமிழ் மொழியையும் இலங்கையில் வாழ்ந்த நாக இன மக்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கு வழிவகுத்துள்ளன.

தென்னாசியாவில் பௌத்த மதம் பரவிய எல்லா நாடுகளிலும் பிராகிருதமே கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பௌத்த மதம் பரவிய போதும் அதன் கல்வெட்டு மொழி தமிழாக இருந்ததுடன் தமிழ் மொழிக்கே சிறப்பான எழுத்து வடிவங்களும் காணப்பட்டன. இதனால் இக்கல்வெட்டுக்கள் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. அதேவேளை தமிழகத்திலும் இலங்கையிலும் பிராமி எழுத்துக்கள் கல்லில் எழுதப்படுவதற்கு முன்னரே அவ்வெழுத்துக்களை மட்பாண்டங்களில் எழுதும் மரபு இருந்துள்ளது. இம்மரபு இருநாடுகளுக்கும் உரிய தனிப்பண்பாகக் காணப்படுகின்றது. இது பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் தோன்றிய மரபாகும். தமிழகத்தில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட பெருங்கற்கால மையங்களில் இருந்து பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சாசனங்களில் மட்பாண்டத்தை செய்தவர்களின் அல்லது அவற்றைப் பயன்படுத்தியவரின் பெயர்களே பெரும்பாலும் காணப்படுகின்றன. இலங்கையில் கந்தரோடை, சாட்டி, பூநகரி, இரணைமடு, ஈழவூர், கட்டுக்கரை, அநுராதபும், அம்பாந்தோட்டை, அண்மையில் மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் இலங்கைக்குப் பெருங்கற்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் நாக இனக்குழுவினர் என்பதை ஏற்றுக் கொள்ளும் போது, அந்தப்பண்பாட்டு மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட தொடக்ககால எழுத்தையும், மொழியையும் அவ்வினக்குழுவுடன் தோன்றியதெனக் கூறுவதே பொருத்தமாகும். இதன் மூலம் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் எழுத்து வாசனையுடைய சமூகம் இலங்கையில் தோன்றியிருந்ததையும் எடுத்துக்காட்டுகின்றன.

நாகபடுவானில் நாக வழிபாட்டுச் சின்னங்கள்

அண்மையில் மட்டக்களப்பில் நாகன், ணாகன், வண்ணக்கன், தம்பன் முதலான பெயர்கள் பொறித்த பிராமிச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் வண்ணக்கன் என்ற பெயர் மட்டக்களப்பு சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கும் வண்ணக்கருக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு உண்டு என்பதற்கு சான்றாகும். நாகன், ணாகன் என்ற பெயர் பொறித்த சாசனங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் நாக இனக்குழுவினர் என்பதற்கும், அவ்வினம் மட்டக்களப்பில் பண்டுதொட்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கும் சான்றுகளாகக் காணப்படுகின்றன. 1999 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் அக்றுகொட என்ற இடத்தில் பிராமி எழுத்துப் பொறித்த பல நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Bopearachchi 1999:51-60). அவை சிற்றரசர்களால் அல்லது குறுநிலத் தலைவர்களால் தமிழ் மற்றும் பிராகிருத மொழிகளில் வெளியிடப்பட்டவையாகும். அவற்றுள் இரு நாணயங்களில் நாக என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தில் தமிழில் “திஷபுர சடநாகராசன்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது (Pushparatnam 2002: 5-6). இதன் பொருள் திஷபுரத்தில் ஆட்சிபுரிந்த சடநாகராசனால் வெளியிடப்பட்ட நாணயம் என்ற கருத்தைத் தருகின்றது. இதிலிருந்து நாகச் சிற்றரசனின் ஆட்சி தென்னிலங்கையில் இருந்தமையும், அவன் ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் தமிழர்களாக இருந்துள்ளனர் என்பதும் உறுதிப்படுத்தப்படுகின்றது. இதற்கு மேலும் சான்றாக சமகால அரசியல் வரலாறு கூறும் மகாவம்சத்தில் துட்டகாமினி, எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொள்வதற்கு முன்னர் தென்னிலங்கையில் 32 தமிழ்ச் சிற்றரசர்களை வெற்றி கொள்ளவேண்டியிருந்ததாகக் கூறப்பட்டதையும் இங்கு சிறப்பாக கவனத்தில் கொள்ளத்தக்கது.

பௌத்த மதத்தின் அறிமுகத்தைத் தொடர்ந்து இலங்கையில் தோன்றிய புதிய பண்பாட்டில் பெருங்கற்காலப் பண்பாட்டு அம்சங்களும் இணைந்து கொண்டுள்ளன. அவற்றுள் தமிழ் மொழி, தமிழ்ப்பிராமி எழுத்து என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. பௌத்த மதத்துடன் அம்மத மொழியான பிராகிருதத்தை எழுதுவதற்கு தேவையான 40 வடபிராமி எழுத்துக்களும் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆயினும் தொடக்ககாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் தமிழ் மொழியில் அமைந்த தனிநபர்களின் பெயர்களும் காணப்படுகின்றன. அவற்றுள் மகன், மகள், மருமகன், மருமான், மருகன், சகலன் முதலான குடும்ப உறவு முறைப் பெயர்களும், வேள், ஆய் முதலான பட்டப்பெயர்களும், அடி, கல், நாடு, ஆவி, வாவி, காடு முதலான இடப்பெயர்களின் பின்னொட்டுச் சொற்களும், பரதவ சமூகம் பற்றியும் கூறப்பட்டுள்ளன. அப்பெயர்களுக்குள் நாகச் சிற்றரசர்கள் பற்றிக் கூறப்பட்டிருப்பதுடன் பிராகிருத மொழியில் நாஹ என எழுதப்படவேண்டிய இப்பெயர் சில கல்வெட்டுக்களில் நாக, ணாக என தமிழ் மயப்படுத்தியும் எழுதப்பட்டுள்ளன. இத்தமிழ்ப் பெயர்களுக்குள் குடும்ப உறவு முறை சார்ந்த உறவுமுறைப் பெயர்கள், அக்காலத்தில் குறிப்பட்ட சில இடங்களில் தமிழர்கள் ஒரு குழுவாக அல்லது குடும்பமாக வாழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றன. மேலும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தில் வாழ்ந்த வணிகர்கள் பற்றிக் கூறுகின்றன. அவற்றுள் அநுராதபுரத்தில் கண்பிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டைத் தவிர ஏனைய நான்கு கல்வெட்டுக்களும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை. இக்கல்வெட்டுக்கள் வணிகர்களை தமிழ் வணிகர் என தனித்து அடையாளப்படுத்திக் கூறியிருப்பதன் மூலம் தமிழர்கள் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னரே மொழியால் ஒரு இனக்குழுவாக இலங்கையில் வாழத் தொடங்கிவிட்டனர் என்பதைக் காட்டுகின்றன. இதற்கான உருவாக்கம் பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து ஏற்பட்டதெனக் கூறலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

18850 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (16)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)