மருத்துவர் கிறீன் 1847 இல் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முதலாவது சத்திர சிகிச்சையால் பண்டிதர் முத்துத்தம்பி உயிர்பெற்றமை அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற சுதேச மருத்துவராக விளங்கிய இளையதம்பியின் மைந்தன் வைத்திலிங்கத்துக்கு ஆங்கில மருத்துவத்தையும் சத்திரசிகிச்சை முறையையும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.
வட்டுக்கோட்டையில் மருத்துவப் பணியை ஆரம்பித்த மருத்துவர் கிறீன், அமெரிக்க மிஷனரிகளது வேண்டுகோளை ஏற்று மானிப்பாய்க்குச் சென்று அங்கு தனது மருத்துவப் பணியைத் தொடர்ந்தார். யாழ்ப்பாணத்திலே மருத்துவ மற்றும் சத்திரசிச்சைக் கற்கைநெறியை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் கிறீன் மிகவும் ஆர்வமுடன் இருந்தார். கிறீன், யாழ்ப்பாணத்தில் 10,000 பேருக்கு ஒரு மருத்துவரையாவது நியமிப்பது அவசியம் என்று கருதினார். 1848 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மொத்த சனத்தொகை 3 இலட்சம். எனவே 30 மருத்துவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
அன்றைய காலப்பகுதியில் அமெரிக்காவிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்பட்ட 3 வருட பாடத்திட்டத்தையே கிறீன் மானிப்பாயில் 1848 இல் நிறுவிய இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரியிலும் நடைமுறைப்படுத்தினார்.
இலங்கையின் முதலாவது மருத்துவ மாணவர் அணி (1848 – 1850)
1. ஜோசுவா இடன்போர்த்
2. ஜோன் டெனின்சன்
3. இளையதம்பி வைத்திலிங்கம்
மேற்குறிப்பிட்ட மூன்று மாணவர்களுமே மானிப்பாயில் கிறீனது மருத்துவக் கல்லூரியில் முதல் வகுப்பில் பயின்றவர்கள். இங்கு ஆரம்பத்தில் ஆங்கில மொழி மூலமே மருத்துவக் கற்கை நெறி மருத்துவர் கிறீனால் ஆரம்பிக்கப்பட்டது. இவர்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலர் வட்டுக்கோட்டை செமினரியில் மருத்துவப் பயிற்சியைப் பெற்று மருத்துவர்களாகக் கடமையாற்றிய போதிலும், அவர்கள் முறைப்படி மருத்துவப் பல்கலைக்கழகத்துக்குரிய பாடநெறியைப் பூர்த்தி செய்து பட்டம் பெற்றவர்கள் அல்லர்.
இலங்கையின் முதல் வகுப்பு மாணவர்கள் என்ற அரிதான, அதிகஅளவில் பகிரப்படும் புகைப்படத்தில் சுதேச உடையில் காணப்படும் மாணவர்கள் 6 பேரில் ஜோசுவா இடன்போர்த் மட்டுமே கிறீனது மருத்துவக் கல்லூரியில் முதலாவது அணியில் பயின்றவர்; ஏனைய ஐவரும் கிறீனது மருத்துவக் கல்லூரியில் பயின்ற 2 ஆவது அணி மாணவர்கள் (1850-1853) ஆவர்.
ஜோசுவா இடன்போர்த், ஜோன் டெனின்சன் ஆகிய இருவரும் கிறீனுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய அமெரிக்க மிசனரி மருத்துவர் நேத்தன் வோட்டிடம் வட்டுகோட்டை செமினரியில் மருத்துவக் கல்வியின் ஆரம்ப அறிவைப் பெற்றனர். மருத்துவர் கிறீன் ஜோசுவா இடன்போர்த்திடம் தமிழ் மொழியைக் கற்றார்.
யாழ்ப்பாணத்திலிருந்து 1849 இல் மருத்துவர் கிறீன் மாசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிறதேசங்களுக்கு மிஷனரிகளை அனுப்பும் அமெரிக்க மிஷன் சங்கத்துக்கு (ABCFM) வரைந்த கடிதம் ஒன்றில் அன்றைய யாழ்ப்பாணத்தின் நிலைமையைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“யாழ்ப்பாணத்தில் கொலரா மிகவும் உக்கிரமாகக் கட்டுப்படுத்த முடியாதளவுக்குப் பரவிவருகிறது. இது 1845 இல் தாக்கிய கொலராவைப் போன்று தீவிரமாக மக்களிடையே பரவியுள்ளது. 1845 இல் பரவிய கொலரா அன்றைய யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் 10 சதவீதத்தினரைக் காவுகொண்டது. இன்று (1849 இல்) தீவிரமாகப் பரவும் கொலரா இரு அமெரிக்க மிஷனரிகளது உயிர்களைக் காவுகொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று மக்களது உயிரைப் பறிக்கும் பிரதான நோய்களாகக் கொலராவும் சின்னம்மையுமே காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் 3 மருத்துவ மாணவர்கள் தங்களது மருத்துவப் படிப்பின் முதல் வருடத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளனர். இக்காலப் பகுதியில் 7 மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளன…..”
1849 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 3 ஆம் திகதி மருத்துவர் கிறீன் தனது சகோதரர் ஜோனுக்கு வரைந்த கடிதத்தில் தான் யாழ்பாணத்துக்கு வந்து முதல் ஓராண்டு காலப்பகுதியில் மேற்கொண்ட சத்திர சிகிச்சைகள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“என்னிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்குக் கட்டிகளைச் சத்திரசிச்சை செய்து அகற்றினேன். கட்ராக்ற் சத்திர சிகிச்சைகளைப் பலருக்கும் மேற்கொண்டேன். ஒரு தடவை ஸ்ராங்குலேற்றட் கேர்ணியாவுக்கும் (strangulated hernia) சத்திரசிகிச்சை மேற்கொண்டேன். ஒருவருடைய பாதிக்கப்பட்ட கையை அகற்றினேன். புற்றுநோய்க் கட்டிகளையும் பலதடவை அகற்றியுள்ளேன். கைவிரல்கள், கால் விரல்களையும் சிலருக்கு அகற்ற வேண்டி இருந்தது. எலும்பு முறிவுகளுடன் வந்த பலருக்கும் அவர்களது காயங்களுக்கும் சிகிச்சை அளித்தேன். மிகவும் ஆபத்தான நிலையில் என்னிடம் குழந்தைப் பிரசவத்துக்கு வந்த தாய்மாரையும் கவனிக்க வேண்டியிருந்தது. இங்கு ஓய்வாக இருப்பது என்பது சாத்தியமற்றது. நோயாளர்கள் வந்து கொண்டே இருப்பர். மருத்துவர்களது கடமை எப்போதும் ஓய்வின்றியே காணப்படும் என்பதை நீ அறிவாய்…….. கடந்த திங்கட்கிழமை புற்றுநோய் பரவியிருந்த ஒருவருடைய இடதுபுற மேல்தாடையையும் கன்னத்திலுள்ள சில என்புகளையும் அகற்றினேன் ………நேற்று அவசியமான நோயாளர்களைப் பார்வையிட்டு மாணவர்களுக்குச் சிறந்த விரிவுரையை எடுத்தேன்.”
மருத்துவர் கிறீன் இலங்கைக்கு வந்த முதல் ஓராண்டு காலப்பகுதியிலேயே பல்வேறுபட்ட சிக்கலான சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டிருந்தமையை இந்தக்கடிதம் மூலமாக அறியமுடிகிறது. கிறீன் இலங்கைக்கு வந்த முதல் 13 மாதங்களில் 2,544 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளார். இவர்களில் மூன்றிலொரு பகுதியினர் சத்திரசிகிச்சைக்குரியவர்களாக இருந்தனர்.
இந்தக்காலப் பகுதியில் மருத்துவர் கிறீன் சத்திரசிகிச்சையின் போது மயக்கமருந்து பாவித்தமைக்கான எந்த ஒரு குறிப்பும் காணப்படவில்லை. ‘அனஸ்தெற்றிக்’ என்ற சொல் 1846 ஆம் ஆண்டு காலப்பகுதியிலே மருத்துவ உலகுக்கு அறிமுகமாகியது.
இந்தக்காலப்பகுதியில் கிறீன் சத்திரசிகிச்சையின்போது ஒபியம், ஈதர், எதனோல் கலந்த வலி நிவாரணி மருந்துகளைப் பாவித்திருக்கலாம். இக்காலப்பகுதி அமெரிக்க இலங்கை மிஷன் பதிவுகள், மேற்குறிப்பிட்ட மருந்துகள் மீதமிருப்பதைக் குறிப்பிடுகின்றன.
கிறீன் 1850 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்க மிஷனுக்கு அனுப்பிய கடிதங்களில் தான் தமிழ் மொழியில் சரளமாகப் பேசவும் எழுதவும் வல்ல புலமை பெற்றிருந்தமையையும் முதலாவது அணி மருத்துவ மாணவர்கள் 2 ஆவது வருட கற்கைநெறியைப் பூர்த்தி செய்து பொதுமக்களிடையே அறிமுகமாகி சிகிச்சை அனுபவத்தைப் பெறுவதற்குத் தயாராக இருந்தமையையும் குறிப்பிடுகிறார்.
இந்தக்காலப் பகுதியில் 1850 ஆண்டு யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆபத்துக்குதவிச் சங்கத்தினர் (Friend-in-Need Society) யாழ் நகரத்தில் டிஸ்பென்சரி மற்றும் மருத்துவமனையை நிறுவ விரும்பி 700 ஸ்ரேலிங் பவுண் நிதியை நன்கொடை மூலம் திரட்டியிருந்தனர்.
தொடரும்.