மலையகத்திலே ஒரு பல்கலைக்கழகமும் சமூக - பொருளாதார மேம்பாடும்
Arts
12 நிமிட வாசிப்பு

மலையகத்திலே ஒரு பல்கலைக்கழகமும் சமூக – பொருளாதார மேம்பாடும்

September 14, 2022 | Ezhuna

மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக ‘மலையகம் : சமூக – பொருளாதார அரசியல் பரிமாணங்கள்’ இந்தத்தொடர் அமைகின்றது. அத்தோடு இந்தத்தொடர் மலையத்தில் தேயிலை கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகள், தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும்  வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைக்கின்றது.

சலனங்கள் இல்லாத நீர் ஒருபோதும் கடலையடையமாட்டாது. அதுபோன்றே, காலத்தின் தேவைகளுக்கேற்ப மாற்றங்களை அடைந்து கொள்ளமுடியாத ஒரு சமூகமும் வளர்ச்சியை அடையமாட்டாது. ஒரு சமூகம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், காலத்திற்குக் காலம் அதில் வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்கள் ஏற்படுவது இன்றியமையாததாகும். அப்படியெனின், சமூகத்தில் இவ்வித மாற்றங்களை ஏற்படுத்துவது யார் என்ற கேள்வி எழுகின்றது. ஒரு சமூகத்திலிருந்து உருவாகும் தொலைநோக்குள்ள அரசியற் தலைவர்கள், ஆற்றல்மிகு அறிவியலாளர்கள், சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், திறமைமிக்க வியாபார முகாமையாளர்கள், ஆளுமைநிறைந்த நிர்வாகிகள் போன்ற துறைசார் நிபுணர்களே இவ்வித மாற்றங்களை ஏற்படுத்துவதில் முக்கியமான பங்கு வகிக்கின்றனர். சுதந்திரம் பெற்ற காலம் முதல் குறைந்த தலாவருமானத்தையும் மிதமான பொருளாதார வளர்ச்சியையும் கொண்டிருந்த எமது நாடு, மனித அபிவிருத்தியில் இன்று உன்னதமான ஒரு நிலையை அடைந்துள்ளது. இதனை அடைந்து கொள்வதில் எமது ஆரம்பகால அரசியற் தலைவர்களும் சமூக முன்னோடிகளும் பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர் என்பதும், அவர்களுட் பெரும்பாலானோர் சிறந்த கல்விமான்களாகவிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கன. இது போன்ற சமூக முன்னோடிகளை உருவாக்க முடியாத ஒரு சமூகம் வளர்ச்சியில் பின்தங்கி நிற்கும் என்பதற்கு மலையகச் சமூகம்  சிறந்ததொரு உதாரணமாக இருந்து வந்துள்ளது.

நாட்டின் ஏனைய சமூகங்களோடு ஒப்பீட்டுகையில் மலையகச் சமூகமானது சமூக, பொருளாதார, கல்வித்துறைகளில் பின்தங்கியிருப்பது எல்லோரும் அறிந்த ஒரு உண்மையாகும். இச்சமூகத்திற்கு உண்மையான விடிவு ஏற்பட வேண்டுமாயின் இந்தநிலை மாறவேண்டும். கல்வித்துறையில், அதிலுங்குறிப்பாக, பல்கலைக்கழக அல்லது மூன்றாம் நிலைக்கல்வியில் அது துரித முன்னேற்றம் அடைவது இன்றியமையாதது. கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளின் பயனாக ஆரம்பக்கல்வியிலும், இடைநிலைக் கல்வியிலும் அது ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், மூன்றாம்நிலைக் கல்வியைப் பொறுத்தவரை, அது இன்னும் குழந்தைப் பருவத்திலேயே உள்ளது.  1960 ஆம் ஆண்டு முதல்   இலங்கையில் மூன்றாம் நிலைக்கல்விக்கான வசதிகளும் வாய்ப்புக்களும் அதிகரித்து வந்துள்ளபோதும், உயர்கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வயதுப்பிரிவினரில் ஒரு சிறிய விகிதாசாரத்தினரே இன்றுங்கூட, பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்று உயர்கல்வியை பெறக்கூடியதாக உள்ளது. உதாரணமாக, பல்கலைக்கழக அனுமதிக்கான நடப்பு விதிகளுக்கமைய 2008 – 09 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர (உயர்தர) பரீட்சையில் மொத்தமாக 130,236 பேர் ஆகக்குறைந்த தகுதியையாவது பெற்றிருந்த போதும், அவர்களுள் 20,846 பேர் மட்டுமே பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினது 2009 ஆம் ஆண்டறிக்கை காட்டுகின்றது. இது அவ்வாண்டில் அனுமதிக்கான தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் 17.0 சதவீதம் மட்டுமேயாகும். மேலும், இலங்கையில் 20 – 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுள் 2. 0 வீதமானோர் மட்டுமே பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இது 18.0 சதவீதமாக இருப்பதும், ஏனைய விருத்தியடையும் நாடுகளில் சராசரியாக 3.0 சதவீதமாகவிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கன. எமது பல்கலைக்கழகங்களில் காணப்படும் இடவசதி போதாமையும் சாதனங்களின் பற்றாக்குறையுமே இதற்கான முக்கியமான காரணங்களாகும். அண்மைக்காலத்தில் தாபிக்கப்பட்டுள்ள தனியார்துறை உயர்கல்வி நிறுவனங்கள் இதை ஓரளவிற்கேனும் நிவர்த்தி செய்வதாக உள்ளன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பயிற்சிநெறிகளை உள்நாட்டிலேயே பயின்று, அந்தப் பல்கலைக்கழகங்களின் பட்டங்களை பெறுவதற்குத் தேவையான வசதிகளை இவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. எனினும், மாணவர்களிடமிருந்து இவை மிகவும் உயர்ந்த கட்டணங்களை அறவிடுவதால் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவற்றிற் சேர்ந்து  உயர்கல்வியைப் பெறுவது சாத்தியமற்றதாக உள்ளது. நிதிவசதி படைத்த ஒரு சிலர் தமது பிள்ளைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி பட்டம் பெறவைக்கின்றனர்.

எமது நாட்டில் பட்டதாரிகளிடையே பரவலான வேலையின்மை காணப்பட்டபோதும், கடந்த காலங்களில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு உயர்கல்வியே சிறந்த மார்க்கமாக இருந்துள்ளதோடு, தொடர்ந்து இருந்தும் வருகின்றது. மேலும், பல்கலைக்கழகக் கல்வியானது ஒருவனது உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவேதான், பட்டதாரிகளிடையே வேலையின்மை காணப்பட்டாலுங்கூட,  பல்கலைக்கழகக் கல்விக்கான கேள்வி உயர்வாக உள்ளது.  1960 களில் எமது பல்கலைக்கழகங்களில் தாய்மொழிமூலக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசு பல புதிய பல்கலைக்கழகங்களைத் தாபித்ததாலும், அதனைத்தொடர்ந்து பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அவற்றில் அனுமதி பெறுவதற்கு மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலை  அறிமுகம் செய்ததாலும் , ஆயிரக்கணக்கான கிராமிய இளைஞர்க்கும் யுவதிக்கும், வறிய குடும்பங்களைச் சேர்ந்த பலருக்கும் அவற்றில் அனுமதி  கிடைத்து உயர்கல்விக்கான வாய்ப்பினைப் பெற்றனர். பல அரச நிறுவனங்களிலும், தனியார் தாபனங்களிலும், ஏன் சில சர்வதேச நிறுவனங்களிலுங்கூட, இன்று உயர்மட்டப் பதவிகளை வகிக்கும் பல இலங்கையர்கள், இதன்மூலம் உருவாக்கப்பட்டவர்களே. தேசியமட்டத்தில் இவ்வித மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்த ஒரு காலப்பகுதியில்  மலையகச்சமூகம் பல்வேறு   காரணங்களினால்  இவ்வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மூன்றாம்நிலைக்கல்வியில் முன்னேற முடியாது போயிற்று.

இலங்கையில் கடந்த நான்கு தசாப்தகாலப்பகுதியில் ஏனைய சமூகங்கள் மூன்றாம் நிலைக்கல்வியைப் பெற்றுக்கொள்வதில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளன. 1970  ஆண்டுகளுக்கு முன்னர் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த எமது சகோதர முஸ்லிம் சமூகம், சமூக உணர்வுமிக்கதும் தொலைநோக்கு கொண்டதுமான அதன் அரசியற்தலைவர்கள் மேற்கொண்ட காத்திரமான நடவடிக்கைகள் காரணமாக, தொடர்ந்துவந்த காலப்பகுதியில் பாடசாலைக்கல்வியில் துரிதமாக முன்னேற்றமடைந்தது. இன்று அச்சமூகத்தினர் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்தில் அரச பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதில் வெற்றி கண்டதன் மூலம் தமது இளைஞர்களின் உயர்கல்விக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், சமூக – கலாசார வளர்ச்சிக்கும் உறுதியானதொரு அடித்தளத்தை அவர்கள் அமைத்து கொண்டுள்ளனர். இதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்வோமாயின், மலையகச் சமூகம் செறிந்து வாழும் மலையகப் பிரதேசத்தில் இதே போன்றதொரு பல்கலைக்கழகத்தை அமைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

மலையக இளைஞர்கள் உயர்கல்வியைப் பெறுவதன் அவசியத்தையும் அதற்கென ஒரு பல்கலைக்கழகம் தேவையென்பதையும் மேலே குறிப்பிட்ட உள்நாட்டுக்காரணிகளின் அடிப்படையில் மட்டுமன்றி, சர்வதேசரீதியான காரணிகளின் அடிப்படையிலும் நோக்கலாம். தொழில்நுட்பத்தில் அண்மைக் காலத்திலேற்பட்டு வந்துள்ள வியத்தகு முன்னேற்றங்களினால் தகவல்பரிமாற்றம், போக்குவரத்து, தொடர்பாடல் என்பவற்றில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேற்படி மாற்றங்கள் காலத்தையும் தூரத்தையும் அர்த்தமற்றதாக்கி விட்டன. எனவேதான், உலகம் இன்று சுருங்கி வருவதாக, முழு உலகமுமே ஒரு கிராமமாக மாறி வருவதாகக் கூறப்படுகின்றது. கிராமங்கள், நகரங்கள், நாடுகள் என்ற எல்லைகளைத்தாண்டி பொருட்கள், சேவைகள் என்பவற்றிற்கான சந்தைகள் இன்று உலகெங்கும் வியாபித்துக் காணப்படுகின்றன. பல்நாட்டுக்கம்பனிகளின் உலகளாவிய உற்பத்தி நடவடிக்கைகள் காரணமாக பொருட்கள் எங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன, நுகர்வோர் அவற்றை எங்கே கொள்வனவு செய்கிறார்கள், அந்த நுகர்வோர்   எங்கு வாழுகின்றார்கள் என்பதெல்லாம் முக்கியத்துவமிழந்து வருகின்றன. அதேபோன்றே, ஊழியத்திற்கான சந்தையும் இன்று உலகளாவிய ஒரு சந்தையாக மாறிவிட்டது. போக்குவரத்து, தகவல் பரிமாற்றம், தொடர்பாடல் என்பவற்றுக்கான செலவுகள் குறைந்து செல்லும் அதேவேளையில், அவற்றிற்கு ஏற்படும் காலதாமதமும் குறைந்து வருகின்றது. இதனாலேற்படும் துரிதமான உலகமயமாக்கம் காரணமாக அறிவாற்றலும் வினைத்திறனும் கொண்டோர், போட்டியடிப்படையில் தத்தமது நாடுகளின் அரசியல், புவியியல் எல்லைகளுக்கு வெளியே பிறநாடுகளிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மூன்றாம்நிலைக்கல்வி பயின்றோருக்கே இவ்வாறான வாய்ப்புக்கள் அதிகமாகவிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றைய உலகம் ஒரு அறிவுசார் உலகமெனக் கூறப்படுகின்றது. பொருளாதார அபிவிருத்திக்கு அறிவே இன்று முக்கிய உந்துசக்தியாக மாறிவிட்டது. இந்தியாவின் பெங்களூர் நகரம் இன்று கணினி மென்பொருள் உற்பத்தித்துறையில் முன்னணியில் இருப்பதும், தமிழ்நாடு இத்தொழில்நுட்பத்துறையில் துரிதகதியில் வளர்ந்துவருவதும், கணினி மென்பொருள் உற்பத்தித்துறையில் அது பெங்களூருக்கு அடுத்த இடத்தைப்பிடித்து வருவதும்  இதற்கு சிறந்த உதாரணங்களாகும். கடந்தகாலங்களில் தொழில்வாய்ப்புக்களையும் செல்வத்தையும் பெருக்கிக் கொள்வதற்கு நாடுகள் தமது உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து கொள்வதிலேயே பாரிய முதலீடுகளை மேற்கொண்டன. ஆனால் அதே நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக இன்று மக்களது அறிவாற்றல், ஆக்கசக்தி, வினைத்திறன் என்பவற்றை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்கள் மீதே இவ்வித முதலீடுகள் செய்யப்படுகின்றன. அறிவினை உற்பத்திசெய்தல், அதனைக்  குறிப்பிட்ட நோக்கங்களுக்காகத் தெரிவுசெய்தல், அந்நோக்கங்களுக்காக அதனை சரியானமுறையில் பயன்படுத்திக்கொள்தல் என்பவற்றில் சமூகத்திற்கு உள்ள ஆற்றலை மேம்படுத்திக் கொள்வதே இதன் நோக்கமாகும்.

இலங்கை பல்கலைக்கழகங்கள்

இன்றைய அறிவுசார் உலகில் மலையக இளைஞர்களும் இணைந்து கொள்ளவேண்டுமாயின், அவர்கள் தமது அறிவாற்றலையும் ஆக்கத்திறனையும் பெருக்கிக்கொள்வது இன்றியமையாததாகும். இதனை அடைந்து கொள்வதற்கு அவர்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்தில் பல்கலைக்கழகமொன்று அமைவது அவசியமானது. நாட்டில் இருக்கும்   பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலாவது தமிழ்மொழிமூல கல்விக்கான வாய்ப்புக்கள் இருந்தபோதும், அவை மலையக மாணவர்களின் விசேட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை. அறிவாற்றலால் உந்தப்படும் பொருளாதார வளர்ச்சிக்குப் பொருத்தமான கல்வி, பயிற்சி என்பவற்றை உறுதி செய்துகொள்வதில் மூன்றாம்நிலைக்கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்களிக்கின்றன என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மலையகச் சமூகம் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்தில் அரச பல்கலைக்கழகமொன்றை அமைத்துக்கொள்வதன் ஊடாக அவர்கள் உயர்கல்வியை பெற்றுக் கொள்வதோடு, தமது சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இனங்காண்பதற்கும், தமது சமூகத்தின் கலை, கலாசார, பாரம்பரியங்களை வளர்த்துக் கொள்வதற்கும் அது உதவியாகவிருக்கும்.

தேசிய பல்கலைக்கழகமொன்றினது இடவமைவானது தேசியரீதியான தேவைகளின் அடிப்படையிலேயன்றி, ஒரு மாகாகாணத்திற்கு ஒன்று என்ற எளிமையான அடிப்படையிலோ, இன அல்லது வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டோ அமைக்கப்படக்கூடாது என தேசிய கல்வி ஆணைக்குழு (National Education Commission – 1996) கூறுகின்றது. வேறுபட்ட சமூக – பொருளாதார பின்னணிகளைக் கொண்ட மாணவர்களை ஒன்றாகக் கொண்டு வருவதன் மூலம் அவர்களிடையே சமூக ஊடாடலை ஏற்படுத்தி அதனூடாக ஒத்துழைப்பு, சமாதான சகவாழ்வு போன்ற நற்பண்புகளையும், உயரிய சமூகப்பெறுமானங்களையும் ஏற்படுத்துவதே பல்கலைக்கழகங்களின் நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் அது கூறுகின்றது. இக்கருத்து பெருமளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே. எனினும், இலங்கையைப் பொறுத்தவரையில், பிராந்தியரீதியிலும், ஓரளவு இனஅடிப்படையிலும் ஏற்கனவே பல பல்கலைக்கழகங்கள் தாபிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக இளைஞர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு அம்மக்கள் செறிந்துவாழும் ஒரு பிரதேசத்திலே பல்கலைக்கழகமொன்றை நிறுவுவது மலையக இளைஞர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புக்களை அதிகரிக்க உதவுமென்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

மூன்றாம்நிலைக்கல்வியில், அதிலுங்குறிப்பாக, பல்கலைக்கழகக் கல்வியில் பங்குபெறுவது எந்தவொரு சமூகத்தினதும் கல்வி அடைவினை அளவிடுவதற்கான நியமமானதொரு சுட்டியாக கருதப்படுகின்றது. பெருந்தோட்டத் தமிழ்மாணவர்களைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட வயதுக்குட்பட்டோரில் வருடாந்தம் ஒரு வீதத்திற்குக் குறைவானோரே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர். இலங்கையின் மொத்த சனத்தொகையில் இந்திய வம்சாவழித்தமிழரின் இனவிகிதாசாரம் ஏறக்குறைய 7.0 சதவீதமாகவிருக்கும் நிலையில் குறைந்தது இச்சமூகத்தைச் சேர்ந்த 3,000 மாணவர்களாவது பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் 400 தொடக்கம் 450 பேர் மட்டுமே எமது பல்கலைக்கழகங்களில் பயின்று வருவது கவலைக்குரியதே. பல்கலைக்கழகங்களில் இணையும்  மலையக மாணவர்களின் மொத்த எண்ணிக்கையானது காலப்போக்கில் ஓரளவு அதிகரித்து வந்துள்ளபோதும், பல்கலைக்கழக மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் அவர்களது பங்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு  ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இம்மாணவர்களது பாடசாலைக்கல்வியில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளே இதற்கான முக்கியமான காரணமாகும். உதாரணமாக, இச்சமூகத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், கல்விஅதிகாரிகள் என்போரின் பற்றாக்குறை, இப்பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏனைய வளங்களும் போதாமை, பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் அசமந்தப்போக்கு, வறுமைநிலை போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். இவ்விதக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே இம்மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ளமுடியும். அத்துடன், கடந்த காலங்களில் அறிமுகம் செய்யப்பட்ட பிரதேசரீதியான தரப்படுத்தல் போன்று இம்மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதியில் ஏதோ ஒருவகையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

இலங்கையில் தொழிற்கல்வி

பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட கல்வித்துறைகளில் பட்டப்படிப்பினை நடத்துவதோடு நின்றுவிடாது, பல விசேட துறைகளில் குறுகியகால டிப்ளோமா, சான்றிதழ் மட்ட பயிற்சிநெறிகள் போன்ற விரிவாக்கல் பாடநெறிகளை நடத்துவதற்கும் வாய்ப்பு இருப்பதால், பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு ஆகக்குறைந்த கல்வித் தகைமைகளையாவது கொண்டிராதோர் மேற்படி பயிற்சி நெறிகளில் பங்குபற்றி ஏதெனுமொரு துறையில் விசேட திறமைகளை அபிவிருத்தி செய்து கொள்வதன் மூலம் தொழிற்சந்தையில் போட்டியிட முடியும். இவ்வித பயிற்சி நெறிகள் ஏற்கனவே தொழிலில் இருப்போருக்கும் வழங்கப்படலாம். அத்துடன், பல்கலைக்கழகங்கள் நடத்தும் பல்வேறு கற்கைநெறிகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஆகக்குறைந்த தகைமைகளாவது உள்ளோரின் எண்ணிக்கை மலையகச் சமூகத்தினரிடையே குறைவாகவிருப்பதாலேயே பல்கலைக்கழகங்களில் பயிலும் மலையகமாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இப்படியான மாணவர்கள் தேவையான போதிய தகைமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு புதிதாகத் தாபிக்கப்படும் பல்கலைக்கழகம் 1½ தொடக்கம் 2 வருட கால துணை பட்டப்பயிற்சி (Associate degrees) அல்லது அடிமட்டப் பயிற்சி நெறிகளை (Foundation Courses) நடத்தலாம். இப்பயிற்சி நெறிகளில் தேர்ச்சியடைவோர் குறிப்பிட்ட காலத்திற்கு ஏதேனுமொரு தொழிலைச் செய்துவிட்டு, மீண்டும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 1 தொடக்கம் 1½ வருடகாலப்பயிற்சியின் பின்னர் முழுமையான பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை அளிக்கலாம். இப்படியானதொரு பட்டப்பயிற்சி முறை திறந்த பல்கலைக்கழகத்தில் காணப்படுவதை இங்கு சுட்டிக்காட்டலாம். மலையக மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை அதிகரிக்கும் அதேவேளையில்,  மலையகத்தைப் பொறுத்தவரை இவ்வித பயிற்சிநெறிகள் மனிதவளத்தையும்,  மானுட அபிவிருத்தியையும் மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கினை அளிக்கலாம்.

புதிதாகத் தாபிக்கப்படும் பல்கலைக்கழகமானது கல்விநடவடிக்கைகளை மேற்கொள்தல், ஆராய்ச்சியில் ஈடுபடுதல் என்பவற்றோடு நின்றுவிடாது தம்மைச்சுற்றி இருக்கும் சமூகத்துடன் தொடர்பாடலையும் ஏற்படுத்திக்கொள்ளலாம். அதாவது, பல்கலைக்கழகத்துக்கு வெளியேயுள்ள அமைப்புக்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி அச்சமூகம் எதிர்நோக்கும் சமூகப்பிரச்சினைகள், அவற்றிற்கான சாத்தியமான தீர்வுகள் என்பன பற்றிய தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். அதேபோன்று, பல்கலைக்கழகத்துக்கும் அந்த அமைப்புக்களுக்கும் இடையே அச்சமூகத்தைப் பற்றிக்  காணப்படும் பொதுவான அக்கறைகள் பற்றி அறிந்துகொண்டு, அவற்றை மேம்படுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபடலாம். மலையகச் சமூகம் போன்றதொரு சமூகத்தைப் பொறுத்தவரை இது அந்தப்பல்கலைக்கழகத்தின் முக்கியமானதொரு கடமையுமாகும். எனவே, மேலும் தாமதிக்காது இவ்வித பல்கலைக்கழகமொன்றை மலையகப் பிரதேசத்தில் தாபிப்பது அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும். அதேபோன்று, மலையகச் சமூகத்தின் சமூக, பொருளாதார, கல்வி, கலாசார மேம்பாட்டில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட அனைவரும் இதற்குத் தமது பூரணமான ஆதரவை அளிப்பது காலத்தின் தேவையுமாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10049 பார்வைகள்

About the Author

முத்துவடிவு சின்னத்தம்பி

முத்துவடிவு சின்னத்தம்பி அவர்கள் 1965ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்று அதே பீடத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகினார். 1969இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டத்தைப்பெற்றார்.

1993ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற முத்துவடிவு சின்னத்தம்பி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அலங்கரித்த மலையகத்தின் முதலாவது பேராசிரியர் என்ற சிறப்புக்குரியவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)