தொழிலாளர்கள் மீதான சட்டத்தின் பாய்ச்சல்; எதிர்விளைவுகளும் மாற்றங்களும்
Arts
8 நிமிட வாசிப்பு

தொழிலாளர்கள் மீதான சட்டத்தின் பாய்ச்சல்; எதிர்விளைவுகளும் மாற்றங்களும்

October 4, 2022 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோ. நடேசய்யரின் அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மக்களைச் சென்று அடைவதற்கு முன்னரேயே நகர்ப்புற மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மிக உரத்துக் குரல் கொடுத்தவர் சேர். பொன். அருணாசலம் (1853 – 1924) என்றால் அது மிகையாகாது. இவரது கருத்துக்கள் மிக ஆணித்தரமாகவும்  உச்சந்தலையில் சம்மட்டி கொண்டு  ஓங்கி அடிப்பது போலவும் காணப்பட்டன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம் அவர் கொண்டிருந்த புரட்சிகரமான கருத்துக்கள், பிரித்தானிய பாராளுமன்ற அங்கத்தினர்களுடன் அவர் கொண்டிருந்த உறவு மற்றும் ஏனைய உலகளாவிய தொழிலாளர் அமைப்புக்களுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட சம்பந்தங்கள் என்பனவாகும்.

 சேர். பொன். அருணாசலம்

சேர். பொன். அருணாசலம் ஒரு செயல்திறன் மிக்க சிவில்  சேவை (Civil Servant)   அதிகாரியாக இருந்து 1913ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபின் தீவிரமான  கிளர்ச்சிக்   கருத்துள்ள  (Radical and Militant) அரசியல் செயற்பாட்டாளராக இயங்கத் தொடங்கினார். அவர் தான் அழைக்கப்பட்டு கலந்துக்கொண்ட கூட்டங்களில் எல்லாம் தொழிலாளர்கள் மீதான முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை பற்றியும் அவ்விதம் ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட குற்றவியல் அம்சங்கள் கொண்ட சட்டங்கள் பற்றியும் காரசாரமாக சாடினார். இதனால் எரிச்சலுக்குட்பட்ட அரச அதிகாரிகள் அவரைப் பயமுறுத்தும் வகையில் அவரது நடவடிக்கைகளைக் கூர்ந்து ஆராயும்படி  பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கட்டளை பிறப்பித்தனர்.

இவர் தனது அரசியல்  நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சமூக சேவைகள் லீக்  (Social Service League)  என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டார். இந்த அமைப்பு பல சமூக புரிந்துணர்வு மற்றும் அறிவூட்டல் செயற்திட்டங்களை நடைமுறைபடுத்தியது. இவ்வமைப்பின் கூட்டமொன்று  1916 மே மாதத்தில் இடம்  பெற்றபோது அதில் உரை நிகழ்த்துவதற்காக பிரிட்டிஷ் சமூக அரசியல் செயற்பாட்டாளரான, பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜி. எச். லெனார்ட் (G. H. Lenard)   அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்வு அப்போதைய  புறக்கோட்டை நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் காலகட்டத்தில் இலங்கையில் தொழிலாளர்கள் மீதான சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு பல வழிகளிலும்  அவர்கள் துன்புறுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மிகக் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டனர். கர்ப்பிணித் தாய்மார்களையும்,  நோயுற்ற மற்றும் கைக்குழந்தைகளுடன் இருந்த தாய்மார்களையும், சிறுவர்களையும் கூட தயவு தாட்சண்யமின்றி கடூழியச் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தினர்.  அவர்களின் குரூரத்தனமான நடத்தையை மேலும் பறைசாற்றும் வகையில்    12 தொழிலாளர்களை அல்லது அதற்கு மேற்பட்ட  தொகையினரை கைது செய்யும் துரை ஒருவருக்கு  ரூ. 50/= பரிசளிக்கப்படும் என்று தொடர்ச்சியாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது.

சேர். பொன். அருணாசலம் அன்றைய கூட்டத்திற்கு பங்குபற்ற சென்ற போது அத்தகைய விளம்பரம் ஒன்றின் பிரதியையும் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். அதனை தனது  இரண்டு கரங்களாலும்  தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து அங்கிருந்தோருக்கு   காட்டிய அவர் “இது அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கறுப்பின அடிமைகளை நடத்துவதை விட மிகக் கேவலமானது. இது மாத்தளை மாவட்டத்தில் தோட்டத்தை விட்டு ஓடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒரு பெண் தொழிலாளியின் படம். இவளது முகத்தைப் பார்த்தாலே இவள் ஒரு நோயாளிப் பெண் என்று தெரிகிறது. இடுப்பில் ஒரு கைக்குழந்தை. அத்துடன் இவளுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளதாக காட்டப்பட்டுள்ளது. இது மனித குலத்திற்கு எதிரான மிகக் கேவலமான செயலாகும்”  என்று மிக கடுமையான குரலில் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில் தெரிவித்ததாவது : – “மேற்படி தோட்டத்துரைக்கும் ஏனைய துரைமார்களுக்கும் கூட  இந்த நாட்டின் பொதுமக்களின் நலன் தொடர்பில் எந்தவிதமான அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் மனிதர்களுக்கான ஒழுக்க நெறி பற்றியும் மனிதர்களின் உரிமைகள் தொடர்பிலும் மரமண்டைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்

இவர்கள் இத்தகைய செயல்களை செய்ய கொஞ்சமும் வெட்கம் அடைகிறார்கள் இல்லை. இவர்களது மரமண்டைகளுக்கு இது விளங்க வேண்டுமாயின் இங்கிலாந்திலும் தொழிலாளர் மற்றும் ஏழை மக்கள் தொடர்பில் உரத்துக் குரல் கொடுக்கும் கனவான்களின் ஆதரவு எமக்கு கிடைக்க வேண்டும்” என்று அவர் பேராசிரியர் லெனார்டிடம் கோரிக்கை விடுத்ததுடன் இந்த அழகிய தீவில் இருந்து இத்தகைய அசிங்கமான செயல்களை இல்லாமல்  செய்ய பேராசிரியர் தனது செல்வாக்கை பயன்படுத்தி இங்கிலாந்து அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையிலும் இங்கிலாந்திலும் செய்திப் பத்திரிகைகளில் மிகப் பரவலான பிரசாரங்கள் கிடைத்ததுடன் கண்டனங்களும் எழுந்தன. தொழிலாளர்களை கைது செய்யும்படி பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. மற்றும் இரண்டு வாரங்களிலேயே தொழில் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவர இலங்கை காலனித்துவ அரசாங்கம் ஒத்துக் கொண்டது.

இருந்தபோதும் சேர். பொன். அருணாசலமும் அவரது சமூக சேவை சங்கமும் தமது தொடர்ச்சியான நடவடிக்கைகளை கைவிடவில்லை. அவர்கள் தோட்டங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் விஜயம் செய்து தொழிலாளர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டினார்கள். அதன் பிரகாரம் 1916 ஆம் ஆண்டு ஜுன் மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் பதுளை நீதவானால் இரண்டு பெண்கள் மீது, துரைமார்களுக்கு கீழ்ப்படிய மறுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் மீது வழங்கப்பட்டிருந்த ஒரு மாதக் கடூழிய சிறைத் தண்டனை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததன் பேரில் அவர்கள் மீது கருணை காட்டி விடுவிப்பதற்கு நீதிமன்றத்தின் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டது.

மற்றுமொரு சம்பவத்தில் பால் குடிக்கும் பச்சைக் குழந்தையுடன் இருந்த ஒரு பெண் தொழிலாளிக்கு வழங்கப்பட்ட இரண்டு மாத கால கடூழிய சிறைத்தண்டனை பற்றி ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை நீக்கி விடும்படி அவர் ஆணை பிறப்பித்தார். இந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்குமே பத்திரிகைகளில் போதுமான பிரசாரங்கள் கிடைத்தன. துரைமார்களின் நடத்தைகள் தொடர்பில் கண்டனக் குரல்கள் எழுந்தன. 

இதன் விளைவாக தோட்டங்களில்,  தோட்டத் தொழிலாளர்களின் நிலை மற்றும் தொழில் சட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு துரைமார் சங்கத்தின் விசேட கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.  இந்த கூட்டத்தில் மொத்த சமூகத்தையும் கண்டனத்துக்கு உட்படுத்திய சில துரைமார்களின் கீழ்த்தரமான செயல்கள் பற்றி காரசாரமான விவாதங்கள் எழுந்தன. ஈ. ஈ. மெக்கட்  (E. E. Maggot) என்ற துரை மேலும் ஒரு படி மேலே சென்று இத்தகைய காட்டுமிராண்டித் தனமான தொழிலாளர் சட்டங்கள் முழு நாட்டையும்  இழிவுபடுத்துவதாக உள்ளன என்று கோபத்துடன் கூறினார். வேறு சில துரைமார்கள் “அவர்கள் வேண்டுமென்றே இவ்விதம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்” என துரைமார்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

இது இப்படி இருக்கும்போது டைம்ஸ் ஒப் சிலோன் (Times of ceylon) பத்திரிகைக்கு ஒரு  தோட்டத் துரையால் அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :- “ஒவ்வொரு தொழிலாளியும் அவன் எவ்வளவு உழைக்கிறானோ அதற்கும்  மேல் பெறுமதியானவன். அதை விட நமது தேயிலை தோட்டங்களிலும், றப்பர் தோட்டங்களிலும் உழைக்கும் தமிழ் தொழிலாளியை விட வேறெந்தத் தொழிலாளியும் பெறுமதிமிக்கவனல்ல. அந்த தொழிலாளி நமது சொத்து. அவன் தான் நமது உடம்பில் கொழுப்பு படிந்து புடைத்துப்போன சதைக்கும், அவ்வப்போது பெருத்த மூட்டையாக கிடைக்கும் பங்கு லாபத்துக்கும் காரணம். இன்று சிலோன் இப்படி பொன் கொழிக்கும் நாடாக இருப்பதற்கும் காரணம் அவன் தான். அவனுக்குரிய ஊதியத்தை நாம் அவனுக்கு கொடுத்துத் தான் ஆக வேண்டும். அதற்கு அவன்முற்றிலும் தகுதியுடையவன்”  என்று எழுதப்பட்டிருந்தது.

இலங்கையில் மாத்திரமன்றி ஏற்கனவே பிரித்தானியாவின் ஏனைய காலனித்துவ நாடுகளான பிஜி,  பிரிட்டிஷ் கயானா, டிரினிடாட், ஜமேய்கா போன்ற நாடுகளிலும் தொழிலாளர்களை சட்டங்கள் வாயிலாக துன்புறுத்துதல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாடுகளில் தொழில் பிரச்சினைகள் தொடர்பில் தொழிலாளர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் இந்திய காலனித்துவ அரசாங்கம் கரிசனை கொண்டிருந்தது. தற்போது இலங்கையிலிருந்து அதிக முறைப்பாடுகள் தீவிரமாக எழுந்ததைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் கூலிகள் இலங்கைக்கு புலம் பெயர்வதை தடை செய்யலாம் என்ற பீதியும் தோட்ட துரைமார்கள் மத்தியில் ஏற்பட்டது.

இந்நிலையில் சமூக சேவைகள் லீக் அமைப்பு வாயிலாக சேர். பொன். அருணாசலம் இந்த நாட்டின் அதிகார வர்க்கத்தின் மீது புகார் தெரிவித்து பல்வேறு மேல் முறையீடுகளை பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கும், பிரித்தானியாவில் இயங்கிய அழுத்தக் குழுக்களுக்கும் (Pressure Groups) அனுப்பிக் கொண்டே இருந்தார்.

(தொடரும்)


ஒலிவடிவில் கேட்க


About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்