Arts
9 நிமிட வாசிப்பு

உலகையே அடிமையாக்கிய இலங்கைத் தேயிலை

September 12, 2022 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 “உலகிலேயே மிகச்சிறந்த தேயிலை இலங்கைத் தேயிலை” என்ற பெயரைப் பெற்றுக்கொள்ள ஜேம்ஸ் டெய்லரின் பங்களிப்பும், உழைப்பும் மிகவும் மகத்தானது. ஆனாலும் இந்த நிலையை அடைவதற்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாக இருந்தது. அதற்குக்  காரணம் இலங்கைத் தேயிலைக்கு முன்னதாகவே சீன, இந்தியத் தேயிலைகள் உலக சந்தையை மிக வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தமையாகும். இதன் காரணமாக, ‘இலங்கைத் தேயிலை மிகச் சிறந்த தரத்தில் ஆனது’ என்ற தகுதியை வைத்து அது உலக சந்தையை வெற்றி கொள்ள வேண்டியதாக இருந்தது.

மிகக்குறுகிய காலத்திலேயே இலங்கையில் தேயிலை உற்பத்தித்துறை பன்மடங்கு வளர்ச்சி கண்டது. பல தேயிலைத் தோட்ட துரைமார்கள் ஜேம்ஸ் டெய்லரின் உற்பத்தி முறையைப் பின்பற்றலாயினர். 1882 ஆம் ஆண்டு 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு 7 லட்சம்  இறாத்தல்  மாத்திரமே ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை   பின்னர் 1886ஆம் ஆண்டு சுமார் நான்கு வருடங்களிலேயே 900 தோட்டங்களில் செய்கை பண்ணப்படுமளவுக்கு விஸ்வரூபமெடுத்தது. 1907ஆம் ஆண்டில் 3 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட 170 மில்லியன் இறாத்தல் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. இவ்வாண்டில் 16 ஆயிரம் தேயிலைத் தோட்டங்கள் உருவாகி இருந்ததுடன் இவற்றில் 4 லட்சம் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். இதற்கான மொத்த முதலீடு   50 மில்லியன்  ஸ்டேர்லிங் பவுண்டாக அதிகரித்திருந்தது.

 அக்காலத்தில் புகழ்பெற்ற ஊடகவியலாளராக  இருந்த ஜோன் பெர்குசன்   (John Ferguson) இது தொடர்பில் வியந்து குறிப்பிடுகையில் :- “வரலாற்றில் என்றும் இல்லாதபடி பாரியளவில் தேயிலையானது கோப்பி இருந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு ஆச்சரியப்படத்தக்க வகையில் அபிவிருத்தி அடைந்துள்ளது. அது,  தான்  இருக்கவேண்டிய எல்லைகளையும் தாண்டி இலங்கை முழுவதிலும் வியாபித்துள்ளது” என்றார். இதனை அடுத்துவந்த மூன்று வருடங்களில் இங்கிலாந்தில் அபர்டீன்  என்ற இடத்தில் இயங்கிய உலகின் புகழ்பெற்ற தேயிலை வர்த்தக நிறுவனமான ’வெஸ்ட்லேண்ட் சிலோன் டீ நிறுவனம்’   (Westland Ceylon Tea Agency) உலகின் அனைத்து தேயிலைகளிலும் இன்றைய சிறந்த தேயிலை இலங்கைத் தேயிலை தான் என்பதற்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது” எனப் பிரகடனப்படுத்தியது.

 இலங்கை தேயிலை

1885 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் தேயிலைக்  கொள்வனவில்,  சீனத் தேயிலை 62 சதவீதத்தைத் தனது பங்காகக்  கொண்டிருந்தது. இது 1895 ஆம் ஆண்டில் 14  சதவீதமாக குறைந்து போனது. இக்காலத்தில் பிரித்தானியா 35   சதவீதமான தேயிலையை இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்தது. பிரிட்டனில் இவ்விதம் இலங்கைத் தேயிலையின் நுகர்வின் அதிகரிப்பும், ஏனைய நாடுகளில் உருவான தேயிலைக்கான அதிகரித்த கேள்வியும் இலங்கையில் தேயிலைப் பயிர்ச் செய்கைக்கான ஆர்வத்தை சடுதியாக அதிகரித்தன. இதனால் அழிந்து போய்க் கொண்டிருந்த கோப்பித் தோட்டக் காணிகளுக்கு திடீரென மவுசு அதிகரித்து,  அவற்றை தேயிலை உற்பத்தியாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி,  கோப்பிச் செடிகளை வேரோடு பிடுங்கி, அவை இருந்த இடத்தில் தேயிலைச் செடிகளை  நாட்டினர்.  கோப்பிச் செடிகள் போலல்லாது தேயிலைச் செடிகள் அதி உயர் மலைப் பிரதேசங்களான 5000  அடி உயரப் பிரதேசங்களிலும் செழிப்பாக வளர்ந்தன. மத்திய மலைநாட்டின் மழை, வெயில், குளிர் கலந்த இதமான காலநிலை கோப்பியைவிட தேயிலைப் பயிர்ச்செய்கைக்கே  மிக சாதகமாக அமைந்து இருந்தது.

இத்தகைய சாதகமான தன்மைக்கு மேலதிகமாக ஏற்கனவே கோப்பிப் பயிர்ச்செய்கைக்கென  ஏற்படுத்தப்பட்டிருந்த உட்கட்டமைப்பு வசதிகளான பாதைகள், பெருந்தெருக்கள்,  ரயில்வே போக்குவரத்து, துரைமார் பங்களாக்கள், தொழிற்சாலைகள், நீர் வடிகால் அமைப்புகள் என்பன காரணமாக பாரிய முதலீடுகளுக்கு தேவை ஏற்படவில்லை.  மேலும் தலைநகரின் கப்பல் துறைமுக அபிவிருத்தி, 1869 ஆம் ஆண்டு சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டமை,  கப்பல் போக்குவரத்தில் நீராவிக்கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டமை என்பவை எல்லாம் சேர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதிக்கு மிக உயர்ந்த சக்தியாக அமைந்தன . இதன் காரணமாக தேயிலைச் சந்தையில் அசாம், சீனத் தேயிலை உற்பத்தியாளர்களின் ஆக்கிரமிப்பை இலங்கை முறியடிக்கக் கூடியதாக இருந்தது.

இயந்திரமயமாக்கப்பட்ட தேயிலைத் தூள் உற்பத்தி

இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட மிகக் குறைந்த செலவிலான கூலித் தொழிலாளர்கள் மற்றும் தேயிலைத் தூள் உற்பத்தி முற்றிலும் இயந்திர மயமாக்கப்பட்டமை, சீனப் பச்சைத் தேயிலையை விட இலங்கையின் கறுப்புத் தேயிலை விரும்பத்தக்க ருசி, மணம், குணம் என்பவற்றை கொண்டிருந்தமை  போன்றனவும்  இலங்கைத் தேயிலையின் வர்த்தகப் பெரு வெற்றிக்கு பாரிய பங்களிப்புச் செய்தன. இதற்கு மேலதிகமாக மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் உபாயங்களும் இந்த வெற்றியில் பங்காற்றின. இதன் பொருட்டு பல சர்வதேச சந்தைப்படுத்தல் உபாயங்கள் தெரிவு செய்யப்பட்டு விற்பனைக் கண்காட்சிகள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய கண்காட்சிகள் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் (1880 – 1881), லண்டன் 1886, கிளாஸ்கோ 1888,   நியூசிலாந்தின் டுனேடின் (Dunedin) 1889, பாரிஸ் 1889  ஆகிய நகரங்களில் இடம்பெற்றன.

1880 ஆம் ஆண்டு  ஒக்ரோபர் தொடக்கம் 1881 ஏப்ரல் வரையில் மெல்பர்ன் நகரில் இடம்பெற்ற வர்த்தகக் கண்காட்சியில் சுமார் 15 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது லூல் கொந்தரா தோட்டத்தின் தேயிலை உற்பத்திகளும் அதன் தயாரிப்பாளரான ஜேம்ஸ் டெய்லரும் மிக உயர்வாக பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். ஜேம்ஸ் டெய்லரின் தேயிலை உற்பத்தி வகைகள் என வரிசைப்படுத்தப்பட்ட ஒரேஞ் பெக்கோ, பிலவரி (Flavery  ) பெக்கோ,  சச்கொங் பெக்கோ,  புரோக்கன் பெக்கோ ஆகிய தேயிலைத் தூள் வகைகள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எல்லாத் தேயிலைகளிலும் பார்க்க சிறந்ததென முதல்தர திறமை சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்றுக் கொண்டன.  கண்காட்சியின் முடிவில் இடம்பெற்ற மிகச் சிறந்த தேயிலை  உற்பத்திக்கான விருது வழங்கும் விழாவில் போட்டிக்கு விண்ணப்பித்திருந்த 78 வகையான பிரிவுகளில் 36 வகையான பிரிவுகளுக்கான முதல் தர திறமை விருதுகளை ஜேம்ஸ் டெய்லரின் உற்பத்திகள் பெற்றுக்கொண்டன. அந்த விருதுகளையும் சான்றிதழ்களையும் ஜேம்ஸ் டெய்லரின் சார்பில் லூல்கொந்தரா தோட்ட உரிமையாளர்கள் கெயார் மற்றும் டுண்டாஸ்  (Keir and Dundas)   அன்ட் கம்பெனியினர் பெற்றுக்கொண்டனர். இந்தச் சம்பவம் தேயிலையையும் ஜேம்ஸ் டெய்லரையும் வாழ்நாள் முழுவதும் ஒன்றிலொன்று இரண்டறக் கலக்கச் செய்துவிட்டது.  அந்தக் கண்காட்சியை தொடர்ந்து அவுஸ்திரேலியச் சந்தையில் இலங்கைத் தேயிலையின் விற்பனை பன்மடங்கு அதிகரித்தது.

ஆரம்பத்தில் இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 670 இறாத்தல்களாக இருந்த அவுஸ்திரேலியாவுக்கான தேயிலை ஏற்றுமதி, 1889 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டில் 7 லட்சம் இறாத்தல்களாக  அதிகரித்தது.  இதேபோல லண்டனில் 1883 ஆம் ஆண்டும்,1886 ஆம் ஆண்டும்  இரண்டு தேயிலை விற்பனைக் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. இவை இரண்டுமே மிகுந்த வெற்றியைத் தந்தன.  இரண்டாவது கண்காட்சியில் 5.5 மில்லியன் மக்கள் கலந்து கொண்டிருந்தனர் என்றும் அங்கு இந்தியத் தேநீர் ஒரு கோப்பை விற்ற போது இலங்கை தேநீர் 3 கோப்பைகள் விற்பனையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உலகெங்கும் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக சிலோன் டீ சிண்டிகேட்  (Ceylon Tea Syndicate) மற்றும் தேயிலை நிதியம் (Tea Fund)  ஆகிய அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நிகழ்த்தப்பட்ட கிளாஸ்கோ  சர்வதேச கைத்தொழில், விஞ்ஞானம் மற்றும் கலைக் கண்காட்சியில் இலங்கைத் தேயிலை   “தேநீர் இல்லம்” மற்றும்  “இலங்கை மன்று” ஆகிய மண்டபங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் தேயிலைக் கைத்தொழிலில் ஒரு முக்கியமான பிரமுகராக பின்னர் புகழ் பெற்ற தோமஸ் லிப்டன்

இந்தக் கண்காட்சியின் போது இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி எதிர்பாராத வகையில் இலங்கையின் தேநீர் இல்லத்திற்கு விஜயம் செய்து ஒரு கோப்பை தேநீர்  அருந்தியமையானது உலகெங்கும் பேசப்படும் ஒரு பரபரப்புச் செய்தியானது. இது இலங்கைக்கு பெரும் விளம்பரத்தை பெற்றுக் கொடுத்தது. இந்த கண்காட்சியின் போது சராசரியாக ஒரு வாரத்துக்கு 6 ஆயிரம் இலங்கைத் தேநீர்க் கோப்பைகள் விற்றுத் தீர்ந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . அதனை தொடர்ந்து பிரித்தானியர்கள் அதிகம் பேர் இலங்கைத் தேநீர் பிரியர்களானார்கள். இலங்கையின் தேயிலைக் கைத்தொழிலில் ஒரு முக்கியமான பிரமுகராக பின்னர் புகழ் பெற்ற தோமஸ் லிப்டன்  (1838 – 1931) ஆரம்பத்தில் வெற்றிகரமான தேயிலை வர்த்தகராகவே பிரித்தானியாவில் அறியப்பட்டிருந்தார். இவர் பிரித்தானியாவெங்கும்  பல மாவட்டங்களிலும் பரவிக் கிடந்த தனது சங்கிலித்தொடர் விற்பனை நிலையங்களில் குறைந்த விலையிலான  தேயிலைத் தூள் வகைகளை அறிமுகப்படுத்தினார். விலையை குறைக்க,  இடைத்தரகர்களை நீக்கி விட்டு  அவர்களின் வேலையையும் தன் கையில் எடுத்துக் கொண்டார்.

Ceylon tea

அவர் தேயிலையை சுவையாக்குவதற்கு மற்றுமொரு வழிமுறையையும் கையாண்டார். ஒவ்வொரு பிராந்தியத்திலும் நிலத்தடி நீரின் சுவை அவற்றில் கலந்திருக்கும் இரசாயனங்களுக்கு  அமைய வேறுபடும் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு,  அந்தத் தண்ணீருக்கு பொருந்தும் வகையில் தேயிலைத்தூள் அளவுகளை தயாரித்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என வித்தியாசமான தேயிலைப்   பைக்கற்றுகளை அறிமுகப்படுத்தினார். இதனாலும் லிப்டன் தேயிலை பிரசித்தி பெற்றது.

தேயிலை உற்பத்திக்கான செலவை விட மிகப் பெருந்தொகையான பணம் தேயிலையைச் சந்தைப்படுத்துவதற்காகவும்  விளம்பரப்படுத்துவதற்காகவும் செலவிடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அன்று மாத்திரம் அல்ல இன்றும் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தொலைக்காட்சியில் அரை நிமிட விளம்பரத்துக்கு ஒரு லட்சம் ரூபாவை செலவிடுகிறார்கள். அன்றாடம் “வட்டவல காட்ட”  “பொகவந்தலாவ காட்ட”  “கொட்டகல காட்ட ”  என்று இந்தச் சொற்களை எத்தனை முறைகள் கேட்கிறோம்.  ஆனால் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளத்தை கொஞ்சம் கூட்டிக்கொடு என்று  கேட்டால் மாத்திரம் அவர்களின் மூக்குநுனி உடனேயே வேர்த்து விடுகின்றது .

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12545 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)