குவைரோசின் நூலும் யாழ்ப்பாணமும்
Arts
10 நிமிட வாசிப்பு

குவைரோசின் நூலும் யாழ்ப்பாணமும்

February 11, 2021 | Ezhuna

யாழ் நகரம் அதன் வரலாற்றுக் காலத்தில், அதன் நிர்வாக எல்லைகளுக்கும் அப்பால் பரந்துள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் பல்வேறு பொருளாதார, அரசியல், நிர்வாக, பண்பாட்டு வகிபாகங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண நகர வரலாறு, அதன் மரபுரிமை சார் அம்சங்கள், ஐரோப்பியர் ஆட்சியில் யாழ். நகரின் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களின் திரட்டுகள் என்பனவற்றை உரிய ஆதாரங்களோடு ‘யாழ்ப்பாண நகரம் 400’ என்ற இத்தொடர் முன்வைக்கின்றது. 400 ஆண்டுகால யாழ்ப்பாணத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்த கட்டுரைகளை இத்தொடர் கொண்டமைந்துள்ளது.

இலங்கையின் வரலாறு தொடர்பில், போர்த்துக்கேயப் பாதிரியாரான பெர்ணாவோ டி குவைரோஸ், “இலங்கை மீதான உலகியல், ஆன்மீக வெற்றி” (Temporal and Spiritual Conquest of Ceylon) என்னும் நூல் மிகவும் முக்கியமானது. இலங்கை வரலாற்றைப் பொறுத்த அளவில், மகாவம்சத்துக்கு அடுத்ததாகப் பெறுமதி வாய்ந்த நூலாக இதைக் கருதலாம் என இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான எஸ். ஜி. பெரேரா குறிப்பிட்டுள்ளார். போர்த்துக்கேய மொழியில் எழுதப்பட்ட இந்நூல், 1930 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் 1300 க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட பெரியதொரு நூல்.

16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையான யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பிலும் முக்கியமான தகவல்களை இந்நூல் தருகின்றது. மேற்குறிப்பிட்ட ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலப் பகுதியில் யாழ்ப்பாண இராச்சியம் தொடர்பான பொதுவான விபரங்களையும், அரசியல், மதம் என்பவை தொடர்பான விபரங்களையும் இந்த நூலிலிருந்து அறிய முடிகின்றது.

இலங்கை மீதான உலகியல், ஆன்மீக வெற்றி

இந்த நூலை எழுதிய கத்தோலிக்கக் குருவானவரான குவைரோஸ் யேசு சபையைச் சேர்ந்தவர். 1617 ஆம் ஆண்டில் போர்த்துக்கலில் பிறந்த இவர் தனது 14 ஆவது வயதில் யேசு சபையில் இணைந்தார். ஆரம்பகாலக் கல்விக்குப் பின்னர் 1635 ஆம் ஆண்டில், அவரது 18 ஆவது வயதில், 30 யேசுசபையினருடன் சேர்ந்து இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் போர்த்துக்கேயரின் தலைமையிடமாக இருந்த கோவாவில், மெய்யியல், இறையியல் ஆகியவற்றைக் கற்றுச் சில காலம் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் யேசுசபையின் நிர்வாகம் சார்ந்த பதவியொன்றில் இணைக்கப்பட்ட  குவைரோஸ் படிப்படியாகப் பல உயர் பதவிகளை வகித்தார். 53 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த இவர் 1688 ஆம் ஆண்டில் காலமானார்.

இவர் “இலங்கை மீதான உலகியல், ஆன்மீக வெற்றி” என்னும் நூலை 1671 ஆம் ஆண்டில் தொடங்கி 1687 ஆம் ஆண்டில் எழுதி முடித்தார். இவர் இலங்கைக்கு வந்ததில்லை. ஆனாலும், இவர் பிறர் எழுதிய நூல்கள், குறிப்புக்கள் போன்றவற்றையும், கோவாவில் அவருக்குக் கிடைக்கக்கூடியதாக இருந்த தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டே இந்த நூலை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரின் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் (1635-1658) குவைரோஸ் கோவாவிலேயே இருந்துள்ளார். எனவே, இக்காலத்தில் யாழ்ப்பாணம் தொடர்பான சமகால விவரங்களை இவர் அறிந்திருக்கக்கூடிய வாய்ப்புக்களும் உண்டு.

இலங்கை மீதான உலகியல், ஆன்மீக வெற்றி – ஆங்கில மொழிபெயர்ப்பு

நூலின் தொடக்க அத்தியாயங்களுள் ஒன்றில் யாழ்ப்பாண இராச்சியத்தின் பொதுவான விபரங்கள் தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் என்னும் பெயர் பற்றிய விளக்கங்கள், யாழ்ப்பாணம் ஒரு இராச்சியமாக உருவான வரலாறு, யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆட்சிப் பகுதிகள், வளங்கள், போன்ற விபரங்களுடன், போர்த்துக்கேயரின் படையெடுப்புக்கள் தொடர்பான மேலோட்டமான விபரங்களும் தரப்பட்டுள்ளன. பெயர் தொடர்பாகத் தரப்பட்டுள்ள விபரங்களில் இருந்து, அக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு “யாழ்ப்பாண நாயன் பட்டினம்” அல்லது “யாழ்ப்பாணாயன் பட்டினம்”, யாழ்ப்பாணப் பட்டினத்துறை” போன்ற பெயர்கள் புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகின்றது. யாழ்ப்பாண இராச்சியம் தோற்றம் பெற்ற வரலாற்றை விளக்கும்போது, தொடக்கத்தில் இப்பகுதி, இலங்கைப் பேரரசர்களின் கீழ் இருந்ததாகவும், முதலில் “விதானை” பதவியில் உள்ள ஒருவரால் நிர்வகிக்கப்பட்டுப் படிப்படியான வளர்ச்சி ஏற்பட “அதிகாரி”, “முதலியார்” என நிர்வாகியின் தரம் உயர்ந்ததாகவும் நூல் குறிப்பிடுகின்றது. பின்னர் கோட்டை இராச்சியத்தின் பிரதிநிதியாக யாழ்ப்பாணத்துக்கு வந்த செண்பகப் பெருமாள் என்பவனே முதன்முதலாக அரசன் என்ற தரத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்டவன் என்றும் அக்காலத்திலிருந்தே யாழ்ப்பாண இராச்சியம் உருவானது என்றும் நூல் கூறுகின்றது. ஆனால், செண்பகப் பெருமாள் 1450 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே யாழ்ப்பாண இராச்சியம் உருவாகிவிட்டது என்பதும் செண்பகப் பெருமாளுக்கு முன்னர் பல தமிழ் மன்னர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டுள்ளனர் என்பதும், இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

1544 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மன்னாரில் போர்த்துக்கேயக் குருமார் உள்ளூர் மக்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்த காலத்தில் இருந்து, யாழ்ப்பாண இராச்சிய விவகாரங்கள் குறித்த விவரமான தகவல்களைக் குவைரோசின் நூலின் தொடர்ந்து வரும் அத்தியாயங்களிலிருந்து இருந்து அறிய முடிகின்றது. மன்னாரில் மதம் மாறியோர் முதலாம் சங்கிலி மன்னனால் கொல்லப்பட்டமை, சங்கிலியைத் தண்டிப்பதற்கு இந்தியாவில் இருந்த போர்த்துக்கேய மதகுருமார் எடுத்த முயற்சிகள், மூன்று தடவைகள் இடம்பெற்ற போர்த்துக்கேயப் படையெடுப்புக்கள், இப்போர்களுக்கான பின்னணிகள் என்பன நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியைக் காட்டும் போர்த்துகேயர் கால நிலப்படம்

1560 ஆம் ஆண்டிலிருந்து 1619 வரையிலான ஏறத்தாழ 60 ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரின் தலையீடுகளும், கட்டுப்பாடுகளும் படிப்படியாக அதிகரித்து வந்ததை நூல் தரும் விபரங்கள் மிகவும் தெளிவாகக் காட்டுகின்றன. முதலாம் சங்கிலியின் காலத்தில் இருந்து, இரண்டாம் சங்கிலி அல்லது சங்கிலி குமாரன் காலம் வரை நல்லூரில் இருந்து யாழ்ப்பாணத்தை ஆண்ட  அரசர்களின் பெயர்கள், ஆட்சிக்காலம், அவர்களின் செயற்பாடுகள் போன்றவற்றை அறிந்துகொள்வதற்கான நம்பத் தகுந்த மூலமாகவும் இந்த நூல் விளங்குகின்றது. யாழ்ப்பாண வைபவ மாலையில் குளறுபடியாகத் தரப்பட்டுள்ள பிற்கால நல்லூர் அரசர்களைப் பற்றிய வரலாற்றை முறைப்படுத்துவதற்கு இந்நூல் பயன்பட்டது.

யாழ்ப்பாணம் இறுதியாக வீழ்ச்சியடைந்த பின்னர், கட்டளைத் தளபதியாகப் பதவியேற்ற ஒலிவேராவின் செயற்பாடுகள் பற்றி இந்நூல் சிறப்பாகப் பேசுகின்றது. குறிப்பாகக் கத்தோலிக்க மதத்தின் வளர்ச்சிக்கு ஒலிவேரா ஆற்றிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒலிவேராவின் காலத்தில் புதிய யாழ்ப்பாண நகரம் உருவானமை, அதன் பின்னணி, ஆகிய விடயங்கள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தாலும், அந்நகரின் அமைப்பு வளர்ச்சி ஆகியவை குறித்து மிகவும் குறைவான தகவல்களே நூலில் உள்ளன. யாழ்ப்பாண இராச்சியத்தின் மீதான ஆன்மீக வெற்றிக்காகக் கத்தோலிக்கக் குருமார்கள் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பான விரிவான தகவல்களும் நூலில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தை 1591 இல் போர்த்துக்கேயர் கைப்பற்றிப் பொம்மை அரசொன்றை உருவாக்கிய பின்னர், போர்த்துக்கேயப் பாதிரிமார்கள் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். பண்ணைத்துறைக்கு அருகில் புதிய தேவாலயம் அமைத்தமை, அத்தேவாலயத்துக்காகச் செய்யப்பட்ட மாதா சொரூபத்தின் புதுமைகள், யாழ்ப்பாண அரச குடும்பத்தவர்களை மதம் மாற்றியமை போன்ற மதம் சார்ந்த விடயங்களும் நூலில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9516 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்