இரசவர்க்கம் - மூலிகை மருந்துகள்
Arts
12 நிமிட வாசிப்பு

இரசவர்க்கம் – மூலிகை மருந்துகள்

October 8, 2022 | Ezhuna

ஈழத்தில் தோன்றிய வைத்தியம் தொடர்பான நூல்களில் ஒன்று செகராசசேகரம். கி.பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் குடிமக்களுக்காக இந்தியாவில் இருந்து பண்டிதர்களை வரவழைத்து செகராசசேகரம் என்னும் வைத்தியநூலை ஆக்குவித்தான். இதில் பல பகுதிகள் தற்போது அழிந்துள்ளன. தற்போது  கிடைக்கும் செகராசேகரம் நூலில் உள்ள ‘இரசவர்க்கம்’ என்ற பகுதியில் சொல்லப்பட்டுள்ள, பாரம்பரிய வைத்திய முறைமைகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள், நோய்களுக்கான சிகிச்சைகள் பற்றி தெளிவுபடுத்துவதாக ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகிறது.

கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தாற் கரப்பனும்புண்ணும்
வரும்சீராய்ப் பீனிசமும் மாறுமே – அருந்தினால்
காய்ச்சல்தலைவலியும் கண்வலியும்போமுலகில்
வாய்ச்ச மருந்தெனவே வை

இதன் பொருள்: கருஞ்சீரகத்தால் கரப்பனும் புண்ணும் மாறும். பீனிசமும் மாறும். காய்ச்சல், தலைவலி, கண்வலி என்பவற்றையும் கருஞ்சீரகம் துரிதமாகத் தீர்த்துவைக்கும். உலகத்தில் நமக்கு அருமையாகக் கிடைத்த மருந்து இது என்று அறிந்து கொள்வாயாக.

கருஞ்சீரகம்

மேலதிகவிபரம்: அரபு நாட்டவர்களால் அருமருந்தாக எண்ணப்படுவது கருஞ்சீரகம். சாவு ஒன்றைத்தவிர மீதி எல்லா நோய்களையும் தீர்த்துவைக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உண்டு என முகம்மது நபி அவர்கள் கூறியதாக ஒரு செய்தியும் உள்ளது. ஏராளமான இரசாயனப்பொருட்கள் கருஞ்சீரகத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முகப்பரு தொடக்கம் சொறி முதலான தோல் வியாதிகள் மற்றும் தலைவலி, வயிற்றுக் கோளாறுகள், ஆஸ்துமா என்பவற்றுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிப்பதன்மூலம் ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கிறது.


கருஞ்சீரகத்தை அரைத்து நெற்றியில் பற்றுப்போட அல்லது கருஞ்சீரக எண்ணெயை நெற்றியில் தேய்த்துவிட்டு ஓய்வு எடுக்க தலைவலி மறைந்து போகும். ஒரு கோப்பை எலுமிச்சம்பழச்சாற்றில் அரைத் தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணையைக் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் முகத்தில் பூசிவர பருக்கள் மறைந்துவிடும்.

கருஞ்சீரகம் உடற்பருமனைக் குறைக்க உதவும் என்பது சமீபத்திய ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. எனினும் முழுப்பலன் அடைய கருஞ்சீரகத்துடன் குறைந்த கலோரி உணவை உட்கொள்ளுவதையும் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். எடை குறைப்புக்கு கடுஞ்சீரகத்தூள் ஒரு நாளைக்கு 1 – 3 கிராம் அல்லது எண்ணெயின் 3 – 5 மில்லி எடுக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த அளவுகள் இதய ஆரோக்கியத்திற்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் உதவும் என்பதும் அறியப்பட்டுள்ளது. கருஞ்சீரக எண்ணெயை அரைக்கோப்பை தேனீருடன் காலையில் அருந்திவர ஒருசில கிழமைகளுக்குள் பலனைக்காணலாம் என்கிறார்கள் பலன் அடைந்தவர்கள்.


நீரிழிவு நோய் அல்லது தைராய்டு பிரச்சனைக்கான மருந்துகளை எடுக்கும் நபர்கள் கருஞ்சீரகத்தையும் முயற்சிக்க விரும்பினால் முதலில் தங்கள் மருத்துவருடன் பேச வேண்டும், ஏனெனில் கருஞ்சீரகம் அவர்கள் எடுக்கும் மருந்துகளின் செயல்திறனில் குறுக்கிடக்கூடும்.
Black cumin என்பது கருஞ்சீரகத்தின் ஆங்கிலப்பெயர்: Kalonji இதன் வர்த்தகப் பெயர்: Nigella sativa L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.

ஓமம்

போமேவாயுவலி அக்கினிமந்தமறும்
ஓமந்தனைக்கண்டால் ஓடுமே – சேமந்தான்
வயிறுபலபோக்கும் வன்பிணியைத்தீர்க்கும்
துயர் அறுக்கும் தான்
மந்தக்கிறாணிகளை மாற்றிவிடும்வாய்வும்போம்
சுந்தரமாய்மேனி துலங்கிடுமே – இந்துநுதல்
மானேஅதிசாரம் வாதபித்தம் போக்குமே
தேனேகேள் ஓமச் செயல்

இதன் பொருள்: சூடு, செமியாக்குணம் என்பவற்றால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மந்தம், வாய்வு, மலக்கட்டு, வயிற்றோட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு ஓமம் நல்ல மருந்தாகும்.

ஓமம்

மேலதிகவிபரம்: பாலூட்டும் தாய்மார் தாமே ஓமக்குடிநீர் குடிப்பதால் குழந்தைக்கு மாந்தம் (infantile diarrhoea and indigestion) ஏற்படுவதைத் தடுக்கலாம். ஒரு தேக்கரண்டி ஓமவிதைகளை இரண்டு கப் தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். தண்ணீரை வடித்து எடுக்கவும். விதைகளை நீக்கிவிட்டு தங்கநிறத்தில் காணப்படும் குடிநீரை மாத்திரம் குடிக்கவும்.
குழந்தைக்கு மலக்கட்டு இருந்தால் அரைத்தேக்கரண்டி ஓமத்தை ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைக்கவும். இக்குடிநீரை வடித்து எடுத்து ஐந்து மாதக்குழந்தையானால் இதில் ஒரு தேக்கரண்டி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தடவையும் ஆறுமாதத்துக்கு மேற்பட்ட குழந்தையாயின் 2 அல்லது 3 தேக்கரண்டி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தடவைகள் கொடுக்கவும்.


‘ஊதாரிப்பிள்ளைக்கு ஓமந்தான் கதி’ என்பது மருத்துவப்பழமொழி. குழந்தைகளின் வயிற்றோட்டத்துக்கு ஓமந்தான் மருந்து என்பது இதன் கருத்து. குழந்தைக்கு வயிற்றோட்டம் இருந்தால் ஓமத்தை வறுத்து எடுத்த பின்னரேயே குடிநீர் காய்ச்சிக் கொடுக்க வேண்டும் என்பது பாட்டிவைத்தியம். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றோட்டம் தொடர்ந்து நீடித்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்குச் செல்லவேண்டியது அவசியம்.


மூட்டு வாதம் காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் நோவுக்கு ஓமத்தை அரைத்துப் பசையாக்கி மூட்டுக்களில் பூச நோவு குறையும் என்பது ஆயுர்வேதமருத்துவர்களின் ஆலோசனையாகும். ஓமத்தைக் குடிநீர் காய்ச்சியும் குடிக்கலாம்.

கர்ப்பிணி பெண்கள் கருவின் ஆரோக்கியத்தில் ஆபத்தான விளைவுகள் காரணமாக அவற்றைத் தவிர்க்க வேண்டும், இதில் சாத்தியமான பிறப்பு குறைபாடுகள் அல்லது கருச்சிதைவும் கூட அடங்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், விதை, சாறு அல்லது தூள் வடிவத்தில் ஓமம் எடுத்துக்கொள்வதற்கு முன்பு உங்கள் சுகாதார வழங்குநருடன் கலந்தாலோசிப்பது முக்கியம். அசமோதகம் என்பது ஒமத்தின் வேறு பெயர்.


Bishop’s weed என்பது ஓமத்தின் ஆங்கிலப்பெயர். செலெறி (celery) எனப்படும் கீரையின் விதைக்கும் ஓமத்துக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. எனினும் இவை இரண்டும் வெவ்வேறு தாவரங்கள் என்பது மனம்கொள்ளத்தக்கது. Ajowan என்பது ஒமத்தின் வர்த்தகப் பெயர். Trachyspermum copticum [L.] Link என்பது ஓமத்தின் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.

சதகுப்பை


நிதமிக்க வாழ்கின்ற நேரிழையீர் கேளீர்
சதகுப்பை தன்குணத்தைச் சாற்றவே-விதமாக
மூலக்கடுப்புப் போம் முட்டத் தலைவலி போம்
சாலச் சுரம்போகும் சாற்று


இதன் பொருள்: சதகுப்பை மூலக்கடுப்பு, தலைவலி, காய்ச்சல் என்பவற்றுக்கு மருந்தாகப் பயன்படும்.


மேலதிகவிபரம்: வயிற்றோட்டம், வாய்வு, செமியாக்குணம், வயிற்றுவலி, சுரம் போன்ற சாதாரண சுகவீனங்களுக்கு சதகுப்பை வீட்டுமருந்தாகப் பயன்படுகிறது. சதகுப்பையின் இலைகள், கனிகள் இரண்டுமே மருந்தாகப் பயன்படுகின்றன.

சதகுப்பை கீரை
சதகுப்பை விதை


தாய்மாருக்கு மகப்பேற்றின் பின்னர் சதகுப்பைக் கீரை சமைத்துக் கொடுப்பது கருப்பையைச் சுத்தப்படுத்துவதோடு சமிபாட்டையும் ஊக்குவிக்கும். சதகுப்பை இலையில் ஒருகைப்பிடியளவு எடுத்து அரை லீட்டர் தண்ணீரில் போட்டுக்காய்ச்சி அரைவாசியாக வற்றியபின் அதனை வடிகட்டி பிள்ளை பெற்ற தாய்க்குக் கொடுக்க உதிரச்சிக்கல் நீங்குமென்கிறார்கள் ஆயுள்வேத மருத்துவர்கள். குறிப்பாக வலியுடன் கூடிய மாதவிலக்கு அல்லது பிள்ளைப்பேறின் பின்னர் ஏற்படக்கூடிய இரத்தப்போக்கு என்பவற்றுக்கு சதகுப்பை சிறந்தமருந்தாகும் என்பது ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் இந்த மருந்தைத் தவிர்க்க வேண்டும்.
சதகுப்பை, எள்ளு, கருஞ்சீரகம் என்பவற்றை சமஅளவில் எடுத்து இலேசாக வறுத்தெடுக்கவேண்டும். இந்தத் தூளில் ஒரு தேக்கரண்டியுடன் சமஅளவு பனைவெல்லம் சேர்த்து உருண்டை செய்யவும். இந்த உருண்டையில் ஒன்று ஒரு நாளைக்கு இரு தடவைகள் கொடுக்க மாதவிலக்கு சீராக நடைபெறும்.


சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் குணமும் சதகுப்பைக்கு உள்ளது. நீரிழிவுக்கான மருந்து எடுப்பவர்கள் அதனுடன் சதகுப்பையைச் சேர்த்து எடுத்தால் இரத்தத்தில் சீனியில் அளவு மிகவும் குறைந்துவிட வாய்ப்புண்டு.

சதகுப்பை விதை (உலர்கனி) யை இடித்து எடுத்த தூளில் 30 கிராமை அரை லீட்டர் வெந்நீரில் ஊறவைத்துக்கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் பெரியவர்களுக்கு உண்டாகும் வயிற்றுவலி வாய்வு என்பன குணமாகும் என்பது ஆயுள்வேதியரின் அநுபவம். குழந்தைகளின் வயிற்றுவலிக்கு சதகுப்பை இலைச்சாறு 20 மில்லிலீற்றர் (5 தேக்கரண்டி) எடுத்து 1 தேக்கரண்டி தேனுடன் சேர்த்துக் கொடுக்கலாம். சதகுப்பை இலையை நிழலில் காயவைத்துத் தூளாக்கி சீனியுடன் 3 வேளை சாப்பிட்டு வர தலைவலி குணமாகும் என்பதும் இவர்களது கருத்து.

கல்சியம் சத்து நிறைந்த இந்தத்தாவரத்தை தொடர்ந்து உணவில் சேர்த்துவருவது எலும்புகளுக்குப் பலம் கொடுக்கும். பெருஞ்சீரகக் குடும்பத்தை சேர்ந்தது சதகுப்பை. Indian Dill என்பது சதகுப்பையின் ஆங்கிலப்பெயர் இதற்கும் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்குலக நாடுகளில் இதே பெயரில் (Dill) கிடைக்கும் தாவரத்துக்கும் (Anethum graveolens L.) குணங்களில் மிகுந்த ஒற்றுமை உண்டு. Anethum sowa KURZ. என்பது சதகுப்பையின் இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

அரத்தை


தொண்டைகட்டும் சேட்டுமத்தைத் தூரத்துரத்திவிடும்
பண்டையுள்ள சீதம் பறக்குமே-கெண்டைவிழி
மின்னே கரப்பனை வேறாக்கியே பொசிக்கும்
சொன்னேன் அரத்தைச் சுகம்

இதன்பொருள்: தொண்டையில் கட்டும் சளியை அகற்றிவிடும். நெடுநாளாக இருக்கும் வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தும். கரப்பன் போன்ற தோல் வியாதிகளுக்கும் மருந்தாகப் பயன்படும்.

சித்தரத்தை
பேரரத்தை

மேலதிகவிபரம்: நெஞ்சில் சளிக்கட்டு, சுவாசிப்பதில் கஷ்டம் போன்ற சுவாசத்தொகுதி சம்பந்தமான நோய்களுக்கு அரத்தை மருந்தாகப் பயன்படுகின்றது. அரத்தையில் சித்தரத்தை, பேரரத்தை என்னும் இரு இனங்கள் உள்ளன. இரண்டும் மருந்தாகப் பயன்படுகின்றன.
இருமல் தடுமலுக்கு அரத்தையும் எலுமிச்சம்பழச்சாறும் கலந்த சேர்வை மருந்தாகப் பயன்படும். வாயில் துர்நாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க அரத்தைப் பொடி உதவும். அரத்தைப்பொடியில் குடிநீர் செய்து குடிப்பதனால் உடம்புக்குப் புத்துணர்ச்சி ஏற்படும்.


தமிழ் மருத்துவத்தில் சித்தரத்தை, வேர்க்கொம்பு (சுக்கு), அதிமதுரம், பேரீஞ்சு என்பவை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட குடிநீர் இருமலுக்குச் சிறந்த மருந்தாகக் கொடுக்கப்படுகின்றது. சித்தரத்தை, வேர்க்கொம்பு, அதிமதுரம், பேரீஞ்சு ஒவ்வொன்றும் 8 கிராம் அளவு எடுத்து நன்றாகத் தூளாக்கி ஒரு துணியில் முடிச்சாகக் கட்டி 30 மில்லி லீட்டர் பாலும் 30 மில்லி லீட்டர் தண்ணீரும் கலந்த கலவையுள் அமிழ்த்தி இலேசான சூட்டில் கொதிக்கவைக்கவேண்டும் பின்னர் பாலை எடுத்து அதனுடன் 8 கிராம் பனங்கற்கண்டு சேர்க்கவேண்டும். இக்குடிநீரில் 50 மில்லி லீட்டர் குடிக்கவேண்டும் சிறிது தேனும் சேர்க்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் 5 நாட்களுக்குக் குடிக்கவேண்டும்.


ஒட்சியெதிரிகள் நிறைந்த அரத்தை ஆண்களில் விந்து உற்பத்தியைக் கூட்டுவதாகவும் அறியப்பட்டுள்ளது. இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்த அரத்தை இஞ்சிபோன்றே கறிச்சுவையூட்டியாகவும் பயன்படுகின்றது. குறிப்பாக தாய்லாந்து மக்களின் சமையலில் பேரரத்தை தவறாமல் இடம் பிடித்துவிடும். இதனால்தான் ஆங்கிலத்தில் பேரரத்தையை சயாமீஸ் ஜிஞ்சர் என்று குறிப்பிடுவார்கள். சயாம் தாய்லாந்தின் முந்தைய பெயர். அரத்தை இஞ்சியிலும் காரம் கூடியது.


Lesser galangal என்பது சித்தரத்தையின் ஆங்கிலப் பெயர். Alpinia officinarum ROSCOE என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர். Greater galangal, Siamese ginger என்பன பேரரத்தையின் ஆங்கிலப் பெயர்கள். Khulanjan என்பது இதன் வர்த்தகப் பெயர். Alphinia galanga (L.) Willd என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.

வசம்பு


வசம்புக்குமிஞ்சி வலிகுன்மம்சேராது
துசம்பெற்றவாய்வு தொடராது-நிசம்பெத்த
அத்திசுரத்தை அகற்றும் அதிசாரம்
நிச்சயத்துப் போமே நெறி


இதன் பொருள்: வசம்புக்கு அடங்காத வயிற்றுவலி கிடையாது. வீறுகாட்டி நிற்கும் வாய்வுக்குணம் தொடராமல் நின்றுவிடும். எலும்பிச்சையின் பாதிப்பால் ஏற்படும் சுரத்தை மாற்றும். வயிற்றோட்டத்தை நிறுத்தும்.

வசம்பு


மேலதிகவிபரம்: வசம்பைச்சுட்டுச் சாம்பலாக்கி அந்தச்சாம்பலில் சிறிதளவு தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவ வாந்தி குணமாகும் என்று கூறப்படுகிறது. மூட்டைப்பூச்சி, பேன் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வசம்புத்தூள் பயன்படும்.


வசம்பு மனத்தை அமைதிப்படுத்தும் மருந்தாகவும் வியர்வையைத் தூண்டவும், முடக்கு வாதம் மற்றும் பக்கவாதத்திற்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சிலர் புகையிலையின் வாசனையை அகற்ற வசம்பை மெல்லுகிறார்கள். அளவுக்கு அதிகமாக வசம்பை உட்கொள்ளுவது தீங்கு விளைவிக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். Sweet flag என்பது வசம்பின் ஆங்கிலப்பெயர். Bach என்பது இதன் வர்த்தகப் பெயர். Acorus calamaus L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.

கஸ்தூரிமஞ்சள்


சந்தனத்துக்கே யழகாம் சார்ந்த கஸ்தூரிமஞ்சள்
முந்தச் சிரங்குதனை முன்ஆற்றும்-பிந்தக்
குளிர் காய்ச்சலைத் துரத்தும் கொடியகரப்பன் போம்
ஒளி சேரும் மேனி என்றே ஓது


இதன் பொருள்: மேனிக்கு அழகைத்தரும் கஸ்தூரிமஞ்சள் சொறி, சிரங்கு முதலான தோல் வியாதிகளைப்போக்கும். தோலுக்கு ஒரு பளபளப்பைக் கொடுக்கும். குளிர்காய்ச்சலுக்கும் மருந்தாகப்பயன்படும்.

மேலதிக விபரம்: காட்டு மஞ்சள் என்றும் அழைக்கப்பெறும் கஸ்தூரிமஞ்சள் மேனியை அழகுசெய்ய உதவும் ஆயுர்வேத ஒப்பனைப் பொருட்களில் முக்கிய இடம்பெறுகின்றது. பக்ரீரியா உள்ளிட்ட நுண்கிருமிகளை அழிக்கும் குணமுடையது இந்தக் கஸ்தூரிமஞ்சள். இதிலுள்ள மஞ்சள்நிறப்பொருள் தொடர்ந்து பயன்படுத்தும்போது பெண்களின் முகத்தில் தோன்றும் உரோமங்களையும் (facial hairs) பருக்களையும் (pimples) அகற்றக்கூடியது.

கஸ்தூரிமஞ்சள்

இந்தியப்பெண்களிடையே மஞ்சள் குளித்து முகம் மினுக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது.

ஒரு தேக்கரண்டி கஸ்தூரிமஞ்சள் தூளுடன் இரண்டு தேக்கரண்டி கடலைமாவைக்கலந்து காய்ச்சாத பால் ஒரு தேக்கரண்டி விட்டுப்பிசைந்து ஒரு தடிப்பான பசையாக எடுக்கவும். (தோலில் எண்ணெய்த்தன்மை உடையவர்கள் பாலுக்குப் பதில் தயிரைப் பயன்படுத்தலாம்.) இந்தப்பசையை முகத்திலும் கழுத்திலும் ஒரு சீராகப்பூசவும். பதினைந்து நிமிடங்கள் பசையை உலரவிடவும். தோல் இழுபடுவதுபோல் உணர்வு தோன்றும். உடனே முகத்தையும் கழுத்தையும் தண்ணீரால் கழுவியபின் வேண்டாத உரோமங்கள் உள்ள இடத்தில் மசாஜ் செய்யவும். பின்னர் முகத்தை நன்றாகக் கழுவிவிடவும். முகத்தில் ஒரு செந்தளிப்பு காணப்படும். முகத்தை நன்றாகக் கழுவிவிட்டால் முகத்தில் மஞ்சள்நிறம் தென்படாது.


பலசரக்குக்கடைகளில் அல்லது ஆயுர்வேத மருந்துக்கடைகளில் கஸ்தூரிமஞ்சள் என்று கேட்டுவாங்கவும். இதனை நன்றாக அரைத்துத் தூளாக எடுத்துக்கொள்ளவும். கஸ்தூரிமஞ்சளைத் தூளாகவும் கடைகளில் பெற்றுக்கொள்ளமுடியும்.

வேறு சில பயன்பாடுகள்: கருவுற்றிருக்கும் தாய்மார்களின் அடிவயிற்றில் தோல் சுருக்கங்கள் ஏற்படுவதைத்தவிர்க்க ஒன்றுவிட்டு ஒருநாள் கஸ்தூரிமஞ்சள் பசையைப் பூசுவது உண்டு. கஸ்தூரிமஞ்சளை இலேசான சூடுள்ள தேங்காய் எண்ணெயுடன் கலந்து பசையாக எடுத்து முகத்தில் பூசிவர முகத்தில் வேண்டப்படாத உரோமங்கள் வளர்வதைக் குறைக்கமுடியும்.
கஸ்தூரிமஞ்சட்தூளை சந்தனத்தூளுடன் கலந்து பூசி 30 நிமிடங்கள் சென்றபின் முகத்தை கழுவிவிடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர பருக்கள் மறைந்துவிடும்.

கஸ்தூரிமஞ்சட்தூளை கருப்பஞ்சாற்றுடன் கலந்து முகத்தில் பூசிவைத்திருந்து பின்னர் கழுவிவிடவேண்டும். இவ்வாறு செய்துவர முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும். கஸ்தூரிமஞ்சளை மோருடன் சேர்த்துப்பிசைந்து கண்களின் சமீபமாகப் பூசிவர கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களும் கருவளையங்களும் மறையும் என்னும் நம்பிக்கையும் உண்டு.

Wild turmeric என்பது கஸ்தூரி மஞ்சளின் ஆங்கிலப்பெயர். kasthuri manjal என்பது இதன் வர்த்தகப் பெயர். Curcuma aromatica SALISB. என்பது இதன் லத்தீன் விஞ்ஞானப்பெயர்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

15002 பார்வைகள்

About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்