பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இலங்கையில் வளர்ச்சியடைந்து வந்த பெருந்தோட்டத்துறையானது தொடர்ந்துவந்த காலப்பகுதியில் இலங்கையினது பொருளாதாரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறையாக மாறியது. தேயிலை உற்பத்தியும், அதன் ஏற்றுமதியும் இதில் முதன்மை வகித்தது. சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நாட்டினது பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளும் சமூக-பொருளாதார முன்னேற்றமும் பெருந்தோட்டத்துறையினது வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்பு கொண்டனவாக இருந்தன. இத்துறையினது தோற்றமும் வளர்ச்சியும் பொருளாதாரத்தில் அடிப்படையான சில மாற்றங்களை ஏற்படுத்தியது. பெருந்தோட்டத்துறையினது அறிமுகத்தால் அதுவரை காலமும் நிலவிவந்த மானியமுறைப் பொருளாதார அமைப்பு முதலாளித்துவப் பொருளாதாரமுறைக்கு நெகிழ்ந்து கொடுத்ததுடன், பெருந்தோட்டத்துறையினது நடவடிக்கைகளோடு தொடர்புபட்ட புதிய பல தாபனங்களும் உருவாகின. ஆரம்பத்தில் இத்துறைக்குத் தேவையான வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக சில வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள் இங்கு திறக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, பெருந்தோட்ட உற்பத்திக்குத் தேவையான நிதிசம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கும் பல்வேறு நிதிநிறுவனங்களின் கிளைகளும், தேயிலைத் தொழிற்சாலைகளின் பொறியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பெருந்தோட்டப் பிரதேசங்களுக்கு அமைக்கப்பட்ட புகையிரதப்பாதை, பெருந்தெருக்கள், அவற்றில் கையாளப்பட்ட இயந்திர சாதனங்கள் என்பவற்றைப் பராமரிப்பதற்கும் தேவையான பொறியியல் நிறுவனங்கள் சிலவும் தாபிக்கப்பட்டன. தேயிலையைப் பொதிசெய்தல், அதனை ஏலத்தில் விற்றல், தரகு நடவடிக்கைகளையும் காப்புறுதி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கான சில தாபனங்களும், தேயிலையையும் றப்பரையும் கப்பல் மூலம் ஏற்றுமதி சேவைகளை வழங்குவதற்குத் தேவையான துணைத்தாபனங்கள் சிலவும் படிப்படியாக வளர்ச்சியுற்றன.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பெருந்தோட்டத்துறையினது பங்களிப்பு
1930 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நாட்டினது மொத்த ஏற்றுமதி உழைப்பில் பத்தில் ஒன்பது பங்கு பெருந்தோட்டப் பண்டங்களின் ஏற்றுமதியினின்றே பெறப்பட்டதுடன், அதில் தேயிலையின் ஏற்றுமதி முதன்மை வகித்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும் இதில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படவில்லை. ஏற்றுமதிகளின் மொத்தப் பெறுமதி நான்கு மடங்குகளால் அதிகரித்தபோதும், அதில் பல்வேறு துறைகளின் ஏற்றுமதி உழைப்பினது விகிதாசாரப் பங்குகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லை. தொடர்ந்தும் பெருந்தோட்டப் பண்டங்களின் ஏற்றுமதி, அதிலுங்குறிப்பாக, தேயிலை ஏற்றுமதி முதன்மை வகித்தது. 1960 ஆம் ஆண்டுகளிற்கூட, நாட்டினது மொத்த ஏற்றுமதி வருவாயில் 60.0 வீதத்திற்கும் மேலான பகுதி பெருந்தோட்டப் பண்டங்களின் ஏற்றுமதிகளினின்றே பெறப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி, அரசாங்க வரிவருவாய் என்பவற்றிற்கும் கணிசமான பங்கு அளித்ததோடு, சுமார் 800,000 பேருக்கு நேரடியான வேலைவாய்ப்பையும் அது அளித்தது. இது நாட்டினது மொத்த வேலைவாய்ப்புக்களில் ஏறக்குறைய 20.0 வீதமாக இருந்தது. தேயிலைத் தொழிற்சாலைகளின் பொறியியல் தேவைகளைப் பூர்த்திசெய்தல், பெருந்தோட்டப் பிரதேசத்திற்கு அமைக்கப்பட்ட புகையிரதப்பாதைகள், பெருந்தெருக்கள் என்பவற்றைப் பராமரித்தல், தேயிலையைப் பதனிடல், பொதிசெய்தல், அதனோடு தொடர்புபட்ட போக்குவரத்து, கப்பல் மூலமான ஏற்றுமதி , ஏலவிற்பனை, தரகுநடவடிக்கைகள், காப்புறுதிசெய்தல் போன்ற சேவைகளை வழங்குவதற்காக தாபிக்கப்பட்ட துணைத்தொழில்களிலும் பலர் வேலைவாய்ப்பினைப் பெற்றனர். மொத்தமாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை பெருந்தோட்டத்துறையிலும் அதனோடு சம்பந்தப்பட்ட ஏனைய துறைகளிலும் அது உருவாக்கிற்று. வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் அண்மைக்காலம் வரை நெல்உற்பத்திக்கு அடுத்த முக்கிய துறையாக அது இருந்து வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சுமார் நான்கு தசாப்த காலப்பகுதியில் பல்வேறு காரணங்களினால் இத்துறையினது பொருளாதார சார்புமுக்கியத்துவத்தில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஏற்பட்டு வந்துள்ளது. எண்பதாம் ஆண்டுகளின் முற்பகுதியில் அது மொத்த ஏற்றுமதி வருவாயில் சுமார் 50.0 வீதத்தையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 7.0 வீதத்தையும் பெற்றுக் கொடுத்தது. எண்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதி முதல் இப்பங்குகள் மேலும் வீழ்ச்சியடையத் தொடங்கின. மொத்த உற்பத்தியில் அதன் பங்கு 2005இல் 4.0 வீதமாகவும், வெளிநாட்டு நாணய உழைப்பில் அதன் பங்கு 10.0 வீதமாகவும் குறைந்தது. கடந்த சில ஆண்டுகளில் தேயிலை ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வெளிநாட்டு செலாவணி உழைப்பு சற்று உயர்ந்து வந்துள்ளது. 2008 ஆம் ஆண்டில் அது 1.23 பில்லியன் அமெரிக்க டொலராகவும், 2012ம் ஆண்டில் 1.5 பில்லியன் டொலராகவும் உயர்ந்தது. இது நாட்டினது மொத்த வெளிநாட்டு நாணய உழைப்பின் 15.0 வீதமாக இருந்தது. எனினும், இத்துறையினின்று கிடைக்கும் அரசாங்க வரிவருவாயில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. 1992 ஆம் ஆண்டு தோட்டங்களைத் தனியார்மயப்படுத்துவதற்கு சற்று முன்னர் தேயிலை ஏற்றுமதி மீதான வரிகள் நீக்கப்பட்டதே இதற்கான காரணமாகும். ஆனால் வெளிநாட்டு நாணயத்தை உழைப்பதிலும், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதிலும் இத்துறை தொடர்ந்தும் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.
அண்மைய ஆண்டுகளில் வெளிநாட்டு நாணய உழைப்பில் பெருந்தோட்ட ஏற்றுமதிகளிலும் பார்க்க புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையரது வருமானச்செலுத்தல்கள், கைத்தொழிற் பொருட்களின் ஏற்றுமதி, உல்லாசப்பயணத்துறை போன்றவற்றினின்று கிடைக்கும் வெளிநாட்டு நாணய உழைப்பு உயர்வாக இருப்பதாக சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இவற்றுள் முதலாவது எண்பதாம் ஆண்டுகளின் பின்னர் வெளிநாட்டுநாணய உழைப்பின் பிரதான மூலமாக மாறியுள்ளது என்பதை மறுக்கமுடியாது. ஏனையவை மொத்த வெளிநாட்டு நாணய உழைப்பின் அடிப்படையில் மட்டுமே உயர்வாக உள்ளன. அவற்றின் உற்பத்தியின் பல்வேறு கட்டங்களில் கையாளப்படும் இறக்குமதி செய்த உள்ளீடுகளின் பெறுமதி நீங்கலாக, அதாவது, தேறிய வெளிநாட்டு நாணய உழைப்பின் அடிப்படையில், பெருந்தோட்டப் பொருட்களின் ஏற்றுமதியே இன்றும் முதலிடம் வகிக்கின்றது. புடவைகள், தைத்த ஆடைகள், பெற்றோலியப் பொருட்கள் போன்றவற்றோடு, ஒப்பீட்டு ரீதியில் தேயிலை, றப்பர் என்பவற்றின் உற்பத்தி குறைந்த இறக்குமதிச் சேர்க்கையைக் கொண்டதாகும். இதன் காரணமாக, இவற்றினது ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் தேறிய வெளிநாட்டு நாணய உழைப்பு மொத்த வெளிநாட்டு நாணயஉழைப்பின் 70.0 தொடக்கம் 80.0 வீதமாக உள்ளது. மேலே குறிப்பிட்ட ஏனைய பொருட்களைப் பொறுத்தவரை இது தலைகீழாக உள்ளது. அப்பொருட்களை உற்பத்தி செய்வதற்குக் கையாளப்படும் இறக்குமதி செய்த உள்ளீடுகள் மொத்த ஏற்றுமதிப்பெறுமதியில் சுமார் 80.0 வீதமாக உள்ளன. இந்தவகையில், பல்வேறு ஏற்றுமதிப் பொருட்களை அவற்றின் வெளிநாட்டு நாணய உழைப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தும்போது அது மொத்த அடிப்படையிலா, தேறிய அடிப்படையிலா செய்யப்படுகின்றது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
தேயிலைச்செய்கை இயற்கைச்சூழலின் மீது ஏற்படுத்தும் பாதிப்புக்கள்
தேயிலைப்பயிர்ச்செய்கை, தேயிலை ஏற்றுமதி என்பவற்றின் பொருளாதாரப் பங்களிப்பைப் பற்றி ஆராயும்பொழுது இயற்கைச்சூழலின் மீது அது ஏற்படுத்தும் தாக்கத்தினை கவனத்தில் கொள்ளாது விடமுடியாது. பெருந்தோட்ட உற்பத்திமுறையானது சூழல் சார்ந்த பல பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது. சூழலின் பன்மைத்தன்மை இழக்கப்படுதல், மண்ணரிப்பு, நிலச்சீரழிவு, நிலத்தின் உற்பத்தித்திறனில் ஏற்படும் வீழ்ச்சி போன்றவற்றை இங்கு விசேடமாகக் குறிப்பிடலாம். தேயிலை உற்பத்தி அப்பிரதேசங்களின் உயிரியல் பன்மைத்தன்மையினைப் பாதிக்கின்றது. பல்வகைத்தன்மை கொண்ட சாதனங்கள் காணப்படும் மலைசார்ந்த பகுதிகளில் தேயிலை உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் இது ஏற்படுகின்றது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் பெருந்தோட்ட உற்பத்திக்காக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டதால் நிலத்தின் மேற்பரப்பு மண் பெரிதும் இழக்கப்பட்டது. தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட பின்னர் பல தோட்டமுகாமைகள், மரக்கறி, காய் கனி மரங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தோட்ட வேளாண்மையில் ஈடுபடுவதால் சூழல் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. ஒரு குறிப்பிட்ட காணியில் தொடர்ந்து பல வருடங்களுக்கு தனியொரு பயிர் மட்டுமே செய்கை பண்ணப்படுவதும் நிலத்தின் செழிப்பைப் பாதிக்கின்றது. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக உயர்நிலப் பிரதேசங்களில் காடுகள் அழிக்கப்பட்டதாலும், அங்கு தேயிலை பயிரிடப்பட்ட காணிகளில் களைகளின் வளர்ச்சி தடைசெய்யப்பட்டதாலும், அங்குள்ள நீரேந்துப் பகுதிகளில் மழைவீழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நீர் இலகுவாக மலைச்சரிவுகளில் வழிந்தோடி விடுகின்றது. இதனால் இப்பிரதேசங்களில் மழைவீழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நீருக்கும் ,வழிந்தோடிவிடும் நீருக்கும் இடையிலான விகிதாசாரம் உயர்வாக இருப்பதனால் நிலத்திற்கு அடியில் சேமித்து வைக்கப்படும் மழைநீரின் விகிதாசாரம் குறைவடைந்து வந்துள்ளது. இங்கு ஊற்றெடுக்கும் நீரோடைகளிலும் ஆறுகளிலும் கோடைகால நீரினளவை இது பாதிக்கின்றது. அத்துடன், சரிவான மலைப்பிரதேசங்களிலேயே தேயிலை பயிரிடப்படுவதால் அவை மண்ணரிப்பிற்கும் மண்சரிவிற்கும் உட்படக்கூடிய பிரதேசங்களாக மாறியுள்ளன.
தேயிலையைப் பயிரிட்டு அதிலிருந்து கிடைக்கும் தேயிலைத் தளிரைப்பதப்படுத்தி தேயிலைத்தூளாகவும் வேறு வடிவங்களுக்கும் அதனை மாற்றுவதற்கு பெருமளவு சக்தி (energy) தேவைப்படுகின்றது. இவ்வாறு பெருமளவு சக்தியைக் கையாளுவது இயற்கைச்சூழலில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இயற்கைச்சூழலை இது எவ்வாறு பாதிக்கும் என்பது எவ்விதமான சக்தி கையாளப்படுகின்றது என்பதில் தங்கியிருக்கும். உதாரணமாக, தேயிலைத்தளிரை உலரவைப்பதற்கு காடுகளிலிருந்து பெறப்படும் பெருமளவு விறகு கையாளப்படுகின்றது. இது காடழிப்பிற்கு இட்டுச்செல்வதோடு அவ்வித காடழிப்பு சூழலின் மீது பல தாக்கங்களையும் ஏற்படுத்தும். கடந்த சுமார் 150 ஆண்டுகளாக பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கும், தேயிலையைப் பதனிடல் உட்பட்ட வேறு நடவடிக்கைகளுக்கும் தேவையான சக்தி பெற்றோலியம், இயற்கை வாயு, விறகு என்பவற்றின் மூலமும், சில சந்தர்ப்பங்களில் வசதிக்கேற்ப நீர்மின்சக்தி மூலமும் பெறப்பட்டு வருகின்றது. அத்துடன், தேயிலையின் உற்பத்தித்திறனை உயர்த்திக்கொள்வதற்காக பலவித இரசாயனப்பசளைகள், களைக்கொல்லிகள், கிருமிநாசினிகள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் உபயோகம் ஏதோ ஒரு வகையில் இயற்கைச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் தேயிலைச்செய்கையின் ஆரம்ப காலந்தொட்டே அதில் அக்கறை கொண்ட பல்வேறு சாராரின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. மண்ணரிப்பு, மண்சரிவு என்பன தொடர்பான பிரச்சினையும், அதனைத்தடுத்து நிறுத்துவதற்கான மண்பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் முக்கியத்துவமும் தேயிலைச்செய்கையின் ஆரம்பக்காலத்திலேயே உணரப்பட்டது. கண்மூடித்தனமாக பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதன் மூலம் எழும் ஆபத்துக்களை 1873இல் ஹுக்கர் (Hooker) என்பவர் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து, 1500 மீற்றருக்கும் உயரமான பிரதேசங்களில் தேயிலைச்செய்கையினை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. மேலே கூறியவாறு, தேயிலைச்செய்கையின் ஆரம்பகாலத்திலேயே மண்ணரிப்பு தொடர்பான பிரச்சினை இனங்காணப்பட்டபோதும், அது தொடர்ந்தும் இடம்பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டதுடன் காலப்போக்கில் அது தீவிரமடைந்தும் வந்துள்ளது.
தேயிலை உற்பத்தியில் மறுநடுகை செய்தல், களைகளை அகற்றுதல், தவறான பயிர்ச்செய்கை முறைகள் கையாளப்படுதல் என்பவற்றால் மண்ணரிப்பு கூடுதலாக ஏற்படலாம். விதைத்தேயிலைச்செடிகள் காணப்படும் எல்லைத் தேயிலைக்காணிகளில் மண்ணரிப்பு கூடுதலாக இருக்கலாம். பெருந்தோட்டப் பிரதேசங்களில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட மண்ணரிப்பு, மிதமிஞ்சியதாக உள்ளமை இன்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உயர்நிலப் பிரதேசங்களில் தேயிலைப் பயிர்ச்செய்கை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து சுமார் 30 செ.மீற்றர் மேற்பரப்புமண் இழக்கப்பட்டுள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது. உயர்நிலப்பிரதேசங்களில் ஏறக்குறைய 181,000 ஹெக்டயர் காணிகள் அல்லது அப்பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 28.0 வீதமான பகுதி மண்ணரிப்பு, மண்சரிவு என்பவற்றால் பாதிப்படையக்கூடிய நிலையில் இருப்பதாக 1979இல் வெளியிடப்பட்ட காட்டியல் முதன்மை அறிக்கை (Forestry Master Plan) கூறியது. மகாவலி வடிநிலப்பிரதேசத்தின் மேற்பகுதிகளில் 39.0 வீதமான பகுதியில் மோசமான மண்ணரிப்பு காணப்படுவதாகத் தெரியவருகின்றது. மேலும், காடுகள் துரிதமாக அழிக்கப்பட்டதன் காரணமாக ஈரலிப்பு வலயத்தில் காணப்படும் காடுகளின் பரப்பு அப்பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 9.0 வீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ச்சியான மண்ணரிப்பும் மண்சரிவுகளுமே காடுகள் அழிக்கப்பட்டதன் உடனடியானதும் நாசகாரமானதுமான விளைவுகளாகும். எழுபதுகளில் ஏற்பட்ட கடும்வரட்சியும், 1986இலும் 1989இலும், அண்மையில் மீரியபெத்த உட்பட பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளும் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். காடுகளை அழித்து சுத்தப்படுத்தியதன் பின்னர் மறுநடுகை செய்யப்படாமலும், மண்ணரிப்பிற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலும் விடப்பட்ட காணிகளே மீண்டும் காடுகளாக மாறாது பட்னா புற்றரைகளாக மாறியதாகக் கூறப்படுகின்றது. மேற்பரப்பு மண் கழுவிச் செல்லப்பட்டதால் வேறு உள்நாட்டுத்தாவரங்கள் எதுவும் பட்னாப்புற்களோடு போட்டியிட்டு வளர்ச்சியடைய முடியவில்லை. இப்பிரதேசங்களே அதிக மண்ணரிப்பிற்கு உள்ளாகின. காடுகளின் அழிப்பும் அதனாலேற்பட்ட மண்ணரிப்பும் காரணமாக நிலத்தின் மேல்மட்டமண் அடித்துச் செல்லப்படுவதோடு, நிலஅடிமட்டப்பாறைகளை அது நிலத்திற்கு வெளியே தள்ளி உள்ளது. உயர்நிலப்பிரதேசத்தில் ஏற்படும் மண்ணரிப்பின் விளைவாக பொல்கொல்ல அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டு (1976) 12 ஆண்டுகளுக்குள் அதன் 44.0 வீதமான இயலளவு வண்டல்மண்களால் நிரம்பி இருந்ததாக ஆய்வொன்று சுட்டிக்காட்டியது.
ஆற்றுப்படுகைகளில் வண்டல்மண் நிரம்புவது அதன் இன்னொரு பாதகமான விளைவாகும். நிலத்தடி நீரின் அளவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கையான காடுகள் அழிக்கப்பட்டமை இன்னொரு முக்கிய பிரச்சினையையும் ஏற்படுத்தியுள்ளது. இயற்கையான காடுகளில் காணப்படுவதுபோன்று பெருந்தோட்டங்களில் பல்லினத்தாவரங்கள் காணப்படுவதில்லை. ஓரிரு வகையான தாவரங்கள் மட்டுமே அங்கு பயிரிடப்படுகின்றன. பல்லினத் தாவரங்கள் இயற்கைச்சூழலில் ஏற்படுத்தும் நுண்ணிய சமநிலையைப் பாதிக்கும். இது பயிர்நோய்களையும் ஒட்டுண்ணிகளையும் பெருகச்செய்துள்ளதோடு, அவ்வித நோய்களுக்கெதிரான பயிர்களின் எதிர்ப்புத்தன்மையையும் வீழ்ச்சி அடையச்செய்துள்ளது. 1990ம் ஆண்டுகளில் றப்பர் மரங்களுக்கு ஏற்பட்ட நோய் இதற்கு சிறந்த உதாரணமாகக் கூறப்படுகின்றது.
தேயிலைக்காணிகளில் வளரும் களைகளை அகற்றுவதற்கு ஏற்படும் ஊழியச் செலவைக் குறைக்கும் நோக்கமாக தனியார்மயமாக்கலின் பின்னர் பெருந்தோட்டங்களின் முகாமையைப் பொறுப்பேற்ற பிராந்திய பெருந்தோட்டக்கம்பனிகள் இரசாயன களைக்கொல்லிகளைப் பெருமளவில் கையாளுவதாகவும், அது இப்பிரதேசங்களில் இருந்து ஊற்றெடுக்கும் அருவிகளை மாசுபடுத்துவதோடு, தேயிலைச்செடிகளின் மீதும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது. மேற்படி விடயங்களைக் கவனத்தில்கொண்டு உயர்நிலப்பிரதேசங்களில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் கம்பனிகளும், அரசகூட்டுத்தாபனங்களும், தனிப்பட்ட உற்பத்தியாளரும் இப்பாதகமான விளைவுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்வது இயற்கைச்சூழல் மேலும் பாதிப்பிற்கு உள்ளாகாது பாதுகாக்கப்படுவதற்கு இன்றியமையாததாகும்.
தொடரும்.