இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நாட்டின் பூர்வீகக் குடிகளுக்கும் அவரவர்களுக்கான பல சிறப்புரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா ஏன் நமது அண்மைய நாடான இந்தியாவிலும் கூட மிகத்தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் எமது நாடான இலங்கையில் பூர்வகுடிகளான வேடர் என்போர் அரும்பொருட்காட்சியகத்தில் இருக்கும் காட்சிப்பொருட்களாகவும், அழிந்து வரும் உயிரினம் ஒன்றை பாதுகாக்க வேண்டிய பச்சாதாபச் சிந்தனையுடனும் தான் பார்க்கப்படுகின்றனர். இன்னமும் வேடுவர் என்பவர்களுக்கான அடையாளமானது இலையும் குழையும், அம்பு வில்லும் கொண்ட மனித உருவங்களாகவே அமைந்துள்ளது. இது சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பாரபட்சமின்றி புழக்கத்தில் உள்ளதென்பதே கசப்பான உண்மை.
இலங்கைத்தீவின் பூர்வீககுடிகளாக வேடர்கள் காணப்படுகின்றமை பலருக்கும் தெரிந்த விடயமாகும். அண்மைக்காலமாக வேடர் மானுடவியல் சார் பார்வைகள் பல ஆய்வாளர்களிடையே அகலித்துள்ளன. இது இலங்கையர்களான நமக்கும் மிகத் தேவையான விடயப்பொருள்தான். காரணம் இன்றைய நவீன உலகானது வரலாறு, பண்பாடு மற்றும் மானிடவியல் சார்ந்த ஆய்வாளர்களையே பெரிதும் வேண்டி நிற்கிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இவ்வகையான மானிடவியலாய்வை வேடர் சமூகத்தின்பால் தொடக்கி விட்ட பெருமை “செலிக்மனையே” சாரும். அவரின் காலத்திலும் சரி, அவருக்குப் பின்னரான காலத்திலும் சரி இலங்கையின் ஆதிப்பிரஜைகளான வேடர் சமூகத்தின் வாழ்வும், வளமும் ஓர் அரிய வகை ஆய்வுப்பொருளாகவே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது இவ்வகையான ஆய்வுப்பரப்பில் விடப்பட்ட அல்லது விட்டுக்கொண்டு இருக்கின்ற மிகப்பெரும் ஆய்வறிவுத்தவறாகும்.
வரலாற்றுக் காலம் முதல் இன்றைய காலம் வரை இலங்கையின் வேடர் சமூகம் சார்ந்தும், அவர் தம் பண்பாடு, சடங்கார்ந்த விடயங்கள் மற்றும் மரபு சார்ந்து பல ஆதாரங்கள் தீவின் நெடுகிலும் கொட்டிக்கிடக்கின்றன. அவ்வாறு இருக்கையில் ஏன் இச்சமூகம் சார்ந்த பார்வைகளானது, இன்னமும் ஒரு பாவப்பட்ட உயிரிக்கு உதவுவதாகவும், நம்மால் தான் உதவ முடியும் என்றெண்ணிக் கொண்டு இச்சமூகத்தின்பால் பூர்வகுடியென்ற உருவைச் சிதைப்புச் செய்வதாகவும் காணப்படுகின்றன? காணப்பட்டு வருகின்றன? என்பதனை நுணுகி ஆராயும் போதுதான் அதன் பின்னுள்ள காலனியச் சிந்தனையும், அதன் சிலந்திச் சிக்கலும் பற்றி அறியக்கிடைக்கின்றது.
காலனியம் என்றால் என்ன?
“குடியேற்றவியல் (Colonialism) என்பது, ஒரு தேசத்தின் எல்லைகளுக்கு வெளியே உள்ள ஆட்சிப்பகுதி ஒன்றின் மீது, இன்னொரு தேசமானது தனது இனத்தை குடியேற்றம் செய்வதன் மூலமோ, தனது நிர்வாக அலகினடிப்படையில் அடிமைப்படுத்துவதன் மூலமோ, அதன் இறைமையை விரிவாக்கம் செய்வதைக் குறிக்கும். இச் செயற்பாட்டின் போது குடியேற்றத்திற்கு ஆளான உள்ளூர் மக்கள் நேரடியாக அடிமைப்படுத்தப்படுகிறார்கள். அல்லது சொந்த நிலங்களைப் பறித்து, இடம்பெயரச் செய்விக்கப்பட்டு திக்கற்றவர்களாக ஆக்கப்படுகின்றார்கள்.
குடியேற்றம் செய்பவர்கள், பொதுவாகக் குடியேறிய பகுதிகளின் நில வளங்கள், சுதேசிகளின் உழைப்பு, சமயச்சடங்குகள் என்பவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சில வேளைகளில் தமது பண்பாடு, சமய மற்றும் மொழிக் கட்டமைப்புகளை உள்ளூர் மக்கள் மீது திணிப்பதும் உண்டு. இவ்வாறான குடியேற்றவியம் என்பது மேற்படி செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கும், வளர்த்தெடுப்பதற்குமான ஒரு தொகுதி நம்பிக்கைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுவதும் உண்டு.
பொதுவாக, குடியேறுபவர்களுடைய பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும், உள்ளூர் மக்களுடையவற்றைக் காட்டிலும் உயர்ந்தவை என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பது தான் குடியேற்றவியலின் உச்சகட்ட வெற்றி. குடியேற்றவியலின் தோற்றப்பாடு, பல்வேறு கால கட்டங்களிலும் உலகம் தழுவிய நிலையில் காணப்பட்டாலும், இது பொதுவாக ஐரோப்பியப் பேரரசுகள் தொடர்பிலேயே சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றது.” (நன்றி – விக்கிபீடியா)
இவ்வாறான போக்குடன் தான் காலனியம் என்ற சொல்லாடலானதும், அதன் கருத்தியலும் இன்று வரையிலும் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதையொட்டிய பார்வையுடன் நவீன சிந்தனையையும், காலனியத்தினையும் பார்க்க பலரும் எத்தனிக்கின்றனர். அதனடிப்படையில் பார்க்க முனைந்ததன் விளைவாகவே காலனியவாதிகளாக ஐரோப்பியர் மாத்திரம் கருத்தில் எடுக்கப்படுகின்றனர். இது இவ்வாறிருக்கையில் தான் இலங்கையின் வேடர் சமுகத்துள் காலனியப் பாதிப்பை ஐரோப்பியர் மாத்திரம் ஏற்படுத்தவில்லை எனும் பார்வையுடன் இப்பத்தி விரிகின்றது.
ஐரோப்பியக் காலனியமும் வேடரும்
ஐரோப்பியருக்கும் அப்பால் எவ்வகையான காலனியவாதிகள் உள்ளனர்? காலனியம் என்பது உண்மையில் எதைக்குறிக்கின்றது? ஐரோப்பியரும், அவர் தம் நவீன கல்வி, நவீன சிந்தனை என்பன இலங்கை வேடுவர்களின் மீது ஏற்படுத்திய காலனியத் தாக்கங்கள் எவை? என்று பார்ப்பது பொருத்தமானது.
ஏலவே சொன்னது போல் நவீன கல்வியும், அதன் சிந்தனையும் பின்வாறான நடைமுறைகளை வேடர் இனக்குழுமம் சார்ந்து ஏவிவிட்டது.
01.நாகரிகம் அடையாதவர்களை நாகரிகம் அடைய வைக்கப் போகின்றோம்.
02.அபிவிருத்தி அடையாதவர்களை அபிவிருத்தி அடைய வைக்கப்போகின்றோம்.
03.கல்வியறிவு இல்லாதவர்களுக்கு நவீன கல்வியைக் கொடுக்கப்போகின்றோம்.
எனும் நயவஞ்சகத் தொனியில் உண்டு பண்ணிய 95% மான வேலைப்பாடுகள் வேடர் இனக்குழுமத்தினை அவர்தம் தனித்துவப் போக்கில் இருந்து விடுபடச்செய்தனவாகவும், பண்பாட்டுச் சிதைப்புச் செய்தனவாகவுமே காணப்படுகின்றன. அவை இன்று வரை பல்வேறு பரிணாமங்களில் நீங்காத நோயாகப்பீடித்த வண்ணமே உள்ளன.
முதலில் வேடர் தம் பண்பாட்டு மரபுகளான வாழ்க்கை முறை, மரபு, சடங்கார்ந்த நடவடிக்கைகள் என அனைத்துக் கூறுகளினையும் எளிய விடயங்களாகக் கருதும் மேட்டிமைச் சிந்தனையையும், கல்விப்புலத்தினையும் ஏற்படுத்தினர். பின்னர் பொருளாதார ரீதியில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துகிறோம் என்ற போர்வையில் இயற்கை வாழ்விட முறைகளைச் சிதைத்தனர். இவ்வாறான செயற்பாடுகளினால் வேடர் குழுக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை, அவர் தம் சூழலியல் சார்ந்த அறிவுப்புலமை, இயற்கையைப் பேணி வந்த நற்திறக்கட்டமைப்புக்கள் என்பன எவ்வாறு அல்லோலகல்லோலப் பட்டுப்போயுள்ளன, போகின்றன என்பது பற்றி இன்னமும் ஆழமாக புரிந்து கொள்ளப்படாமலே உள்ளது.
இலங்கையில் இன்று வாழ்கின்ற வேடர் சமூகத்தின் மூத்த பிரதிநிதி ஒருவர் தனது மன ஆதங்கத்தினை இவ்வாறு வெளிப்படுத்தினார். “இந்த நாட்டில் பூர்வ குடிகளான நாம் எமது ஆதிப்பண்பாட்டினை எந்தவித நவீன சிந்தனைகளும் இடையில் புகுந்து கொள்ளா வண்ணம் மிகவும் சாதாரணமாகவும், சுதந்திரமாகவும் கற்றுக் கொள்வதற்கான ஏதாவது வாய்ப்புக்கள் உண்டா? அன்று தொடங்கி இன்று வரைக்குமான அரசுகளால் ஏற்படுத்தப்படுகின்ற எந்த நடவடிக்கைகளை உங்களால் எமக்கான அபிவிருத்திச் செயற்பாடாகச் சொல்ல முடியும்? எமது பிள்ளைகள் எங்கள் மொழியில் தமது கல்விப்புலமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பும் இல்லை. எமது பண்பாட்டை எமது குஞ்சுகளுக்குக் கடத்தக்கூடிய சூழலும் இல்லை. இது இவ்வாறு இருக்கையில் தான் இவற்றை வெறும் மனக்குமுறலாக மட்டும் இன்றைய அறிவுப்புலத்தினரால் கடந்து செல்ல இயலுமா?” இவரின் இக்கருத்தின் ஊடாக சில விடயங்களை நாம் கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய தேவையுண்டு.
ஐரோப்பியரை விடுத்தும் காலனியவாதிகள் உண்டா?
இந்தக்கேள்வி பலருக்கு வியப்பை உண்டு பண்ணலாம். காரணம் எமது அறிவுப்புலமானது காலனியம் சார்ந்து இவ்வாறான மீள் வாசிப்புக்கு வழிசமைத்தது குறைவு. வேடர் வழக்காறியலைப் பொறுத்தமட்டில் காலனியத் தாக்கமானது பல் நெடுங்காலமாக ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளமையினை நன்கறிய முடியும். அதற்கு வரலாற்று நெடுகிலும் இலங்கையில் வந்தேறிய சோழர் முதலான வந்தேறு குடிகளே சாட்சியாகும். காலனியம் சார்ந்தும், நவீனவாதத் தாக்கம் சார்ந்தும் ஒரு வேட்டுவ முதுசமான ஒருவர் தனது வரலாற்றுப்புரிதலை இவ்வாறு பதிவு செய்தார். “குஞ்சான் (மகன்) நம்மட சமூகத்த கட்டுப் படுத்தினது வெள்ளக்காரன் மட்டுமில்ல. அந்தக் காலத்துல இருந்து இஞ்ச வந்து குடியேறின வந்தேறு குடிகளான சோழர் தாண்டா.“
இவரது கருத்தின் ஆழம் மிகப்பெரியது. உண்மையில் ஐரோப்பியரின் வருகைக்கு முன்னரான பிற நாட்டவரின் வருகையினை நாம் இவ்வாறுப் பிரித்துப் பார்க்க முடியும்.
- இலங்கையின் தெற்கேயிருந்த றுகுணுப் பேரரசு.
- மட்டக்களப்பு மண்முனையில் உன்னரசகிரியைத் தோற்றுவித்தவர் எனக்கூறப்படும் வெளிலிருந்து வந்த ஆடகசவுந்தரியின் ஆட்சி.
- சோழப்பேரரசின் ஆட்சி.
- கிழக்கில் ஆட்சிபுரிந்த வெளியிலிருந்து வந்த மாஹோன் ஆட்சி.
- ஐரோப்பியக் காலனியவாதிகளான போர்த்துகேயர், ஒல்லாந்தர் ஆங்கிலேயர் அரசு.
- சுதந்திரத்திற்குப் பின்னரான சுதேசிய அரசு. (நன்றி – பேரா. மௌனகுரு)
மேற்சொல்லப்பட்ட மற்றும் சொல்லத்தவறிய அனைத்து வகையான வந்தேறு குடிகளும் வேட்டுவக்குடிகளை தமக்கிசைந்த வகைகளில் சாதிகளாகவும், குடிகளாகவும், மாற்றி, ஆரியச் சமய இடைச் செருகல்களினை மேற்கொண்டனர். மாஹோனின் வருகையின் பின்னர் தான் இயல்பாக இருந்த சமூகக்கட்டமைப்பானது குடிகள் எனும் ஏற்றத்தாழ்வுகளுக்குள் புகுந்து கொண்டமைக்கு வரலாறு சாட்சி.
ஆரியரும் சரி, ஐரோப்பியரும் சரி மதம் சார்ந்த விடயங்களிலும், சடங்கார்ந்த நடவடிக்கைகளிலும் தான் மிகப்பாரியளவிலான காலனியப் போர்களை மிக நுணுக்கமாகத் தொடுத்தனர். தன்னோடு வாழ்ந்த, தனக்காக வாழ்ந்த முன்னோரை வழிபட்டு, அவர்களையே வாழ்வுக்கான ஆதாரமுமாகக் கொண்டு வேடுவர்கள் வாழ்ந்தனர். ஆனால் இந்தக் காலனியக்கூட்டங்கள் சொர்க்கத்திற்கு படையல் அனுப்ப வைத்தன. மனிதனை விட மாட்டை உயர்வாக நினைக்க வைத்தன. சக மனிதனிடம் நீர் வாங்கிக் குடிப்பதை விட மாட்டு மூத்திரத்தைக் குடிப்பது புனிதம் என்றன. பல்லாயிரமாண்டுகாலமாக பேசிய மொழியை நீச மொழி என்றன. இவ்வாறு படிப்படியாக முன்னேறிய இவர் தம் காலனியாதிக்கம் சொந்த நிலத்தையும் பறித்து திக்கற்றவர்களாக ஆக்கியதை பலர் அறிந்தும் அறியாமல் உள்ளனர்.
இன்றைய காலத்தில் காலனியாதிக்கம் பல பரிணாமங்களை மிகச்சாதுரியமாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதைப் போல் தனது வேலையைக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. அண்மைய கால இலங்கையைப் பொறுத்த மட்டில் தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலையை வைத்தல் பெரும்பான்மைச் சிந்தனை, ஆதிக்க மனோபாவம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் வேடர் சமூகங்கள் பரந்து வாழும் கிராமங்களில் தமிழ்த் தெய்வங்களான அம்மனுக்கு கோயில் கட்டுவதோ, அதை நாகரிகமாக நினைத்து வணங்கப்பண்ண வைப்பதோ, கோயிலின் பெயருடன் “ஶ்ரீ” என்ற எழுத்தைப் புகுத்துவதோ, இன்னும் சொல்லப் போனால் ஒரு இனத்தினை அதன் பெயரையே பொதுவில் சொல்லத் தயங்கவைப்பதும் கூட பெரும்பான்மைச் சிந்தனையும் அல்ல, ஆதிக்க மனோபாவமும் அல்ல என்ற நிலை வலிந்து உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு பலவற்றைச் சொல்லலாம். அவற்றையெல்லாம் சொல்ல இந்தப்பத்தி போதாது.
ஆகவேதான் காலனியம் என்பது ஐரோப்பியருடன் வந்த விடயம் மட்டுமல்ல. அது ஆரியர்காலத்திலிருந்து இன்றுவரை மேட்டிமைச் சிந்தனையுடன் காணப்படும் சாதிய ஒடுக்குதலும், இன, மத, மொழி சார்ந்த சகல விடயங்களும் இன்று வரை வேடுவப்பழங்குடிகளை காலனியாதிக்கத்துள் வைத்திருப்பதை புத்திஜீவிகள் துரிதமாக உணரவேண்டும்.
தொடரும்.