அடையாள மீட்பைத் தேடும் ஆதிக்குடிகளின் குரல்
Arts
10 நிமிட வாசிப்பு

அடையாள மீட்பைத் தேடும் ஆதிக்குடிகளின் குரல்

June 29, 2022 | Ezhuna

இலங்கைத் தீவின்  பூர்வீக குடிகளாக சிங்களவர்களையும்  மற்றும் தமிழர்களையும்  அவர் தம் பேரினவாத சிந்தனையானது,  பல வரலாற்று புனைவுகளின் ஊடாக இற்றை வரை  தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால்  இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் வேடுவர் என்பதை எவரும் மறுக்கவியலாது. அதனடிப்படையில், கிழக்குக் கரையோரம் எங்கும் வாழும் இன்று தமிழை பேசு மொழியாகக் கொண்டுள்ள வேடுவர்களின் இருப்பியல் பற்றியும், அவர் தம் தேவை பற்றியும் ‘வேடர் மானிடவியல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் ஆய்வுப்பாங்கில் விவரிக்கின்றது. வேடுவர்களுக்கே உரித்தான அடையாளங்களை வெளிக்கொணர்வதாகவும், இதுவரை நாம் அறிந்திடாத வேடுவர் குணமாக்கல் சடங்குகள், இயற்கையுடன்  பின்னிப்பிணைந்த அவர்களின் வாழ்வியல், வேடுவர் மீதான ஆதிக்க சாதியினரின் பாகுபாடுகள் என்பன உள்ளிருந்து மரபு மீட்கும் நோக்கில் பிரதானமாகக் கண்டறியப்பட்டு, அவை தொடரின் ஊடாக முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் காலனிய எண்ண மேலாதிக்கத்துள் சிக்குண்டு அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர் தம் மானுட நகர்வுகள் முதலான பல அல்லோல கல்லோல நிலைமைகளும் இதில் விரிவாகப் பேசப்படுகின்றன.

“நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணக்கொடுத்தானே பூர்வக்குடி” இந்த பாடல் வரிகள் இன்றும் உலகெங்கும் ஓயாமல் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்களின் வாழ்வில் ஒளியிழந்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டமை எத்துணை பேருக்குத் தெரியும். உலகரங்கிலும் நிலமையிதே. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இயற்கையுடன் இணைந்து அதை தன்வயப்படுத்தி வாழ்ந்து வந்த எம்மை, மனித முன்னேறுகைகளின் படிப்படியான ஈடேற்றங்கள் அனைத்தும் கால வர்த்தமானங்களுக்கு அமைய ஓர் கை பார்த்துக் கொண்டே வந்துள்ளமைதான் வரலாறு. இன்று இலங்கைக்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பல்லினத்தவரும் நாம் தான் உரித்துடையவர்கள் என்று கூறிக்கொண்டு இனத்துக்கிடையில் சண்டை பிடித்தாலும் சரி, அதை வைத்து வங்குரோத்து அரசியல் செய்து கொண்டு இருந்தாலும் சரி இந்த நாடு வேட்டுவரான எமக்குச் சொந்தமான எமது உத்தியாக்கள் (முன்னோர்கள்) பாதுகாத்து வளப்படுத்திய நாடு. நாம் சிங்களவரும் அல்லர் தமிழரும் அல்லர் முஸ்லிமும் அல்லர், நாம் வேடர்கள். இந்நாட்டின் ஆதிப்பிரஜைகள். ஆனால் பருவ காலங்களுக்கு புகுந்து கொண்ட வரத்தினங்கள் நாடு பிடிச்சண்டையில் காலங்காலமாக இடம் பெற்ற பண்பாட்டசைவுகளுக்கு அமைய சிங்களவருடன் அண்டிய வாழ்ந்த நாம் சிங்கள மொழியையும், தமிழருடன் அண்டி வாழ்ந்த நாம் தமிழ் மொழியையும் வரிந்து புகுத்திக் கொண்டதுதான் வரலாறு. ஆனால் இது பல நூறு ஆண்டுகளாக படிப்படியாக நடந்தேறிய செயற்பாடு.

வேடுவர்களின் சடங்குகளின் போது


இலங்கையின் கிழக்கிலங்கைக் கரையோரங்களில் வாழ்ந்து வந்த, வாழ்ந்து வருகின்ற பூர்வகுடிகளின் நாட்டாரியலுள் ஆழ உட்புகாத ஆய்வாளர்களினாலும், ஏனைய சமூகங்களினாலும், நாம் கரையோர வேடர்கள் அல்லது கடல் வேடுவர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறோம். ஆனால் இவ்வாறு தொழில் ரீதியாகவோ, புவியியல் ரீதியாகவோ அழைக்கப்படுவதை நாம் விரும்பவில்லை. இது பற்றி நான் குஞ்சப்பாவிடம் கேட்கும் போதெல்லாம் “சூரியன் என்றால் அது பூமிக்கு ஒன்றுதான்” என்பார். அதற்கு அவர் இந்த பாடலையும் அடிக்கடி பாடிக்காட்டுவார்.


“ கண்டியோ காலியோ கொழும்போ…….. ஓ……..
செல்ல பட்டணமோ…….ஓ…….
கதிரமலையோ வேல மலையோ கணவந்தா……
உமகிரி…… கோபாலபுரி……..
குஞ்சுமப்பா கணவந்தா……
சுல்லித்தீவு….. கரடிமல…… ஆமபதி….”

(வேட்டுவ சடங்கு வழிபாடுகளின் போது பாவிக்கப்படும் வேட்டுவ வழிபாட்டுப் பாடல்.)

பின்னர் அவர் இவ்வாறு கூறுவார். “ நாம இலங்கையில இருக்குற வேடர்கள் எல்லாரும் ஒண்டுதான். எங்கள கரையோர வேடர் அந்த வேடர் இந்த வேடர் எண்டு ஆதிக்க சாதிகள் அத்துறுமங்கை (நிலைகுலைதல்) ஆக்கிப்போட்டுதுகள். நாங்க அப்புடி எல்லாம் இல்ல மன. இந்த சனங்கள் தான் நம்மள இப்புடி ஆக்கிப்போட்டுதுகள்

குஞ்சப்பா இப்படிச் சொல்லும் போது இந்த பாட்டில் இருக்கும் மானுடவியல் பார்வைகளை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. ஆய்வாளர்கள் கூறுகின்றபடி கடல் வேடுவர்களுக்கு ஏனையவர்களுடன் தொடர்பு இல்லை என்றால் இப்பாடல் எங்ஙனம் இருந்து தோன்றின? மேற்கில்,தெற்கில் எங்கையோ இருக்கின்ற இடங்களையும் அதன் உத்தியாக்களையும் பற்றி கிழக்கின் கரையோரத்தில் ஏதோவொரு ஒரு குக்கிராமத்தில் இருக்கும் பூர்வ குடிகளுக்கு இப்பாடல்கள் எவ்வாறு கடத்தப்பட்டிருக்கும்? இது சார்ந்தும் நான் அவருடன் வினவியதுண்டு. அதற்கு அவர் இவ்வாறு கூறுவார். “நாங்க தொழிலுக்காகவும், மத்தாக்களுட தொல்லைக்காகவும் தான் மனே இஞ்சால வந்த. வேடர்கள் ஆன நமக்கு இந்த சனங்கள் போல ஆராவது கரச்சல் தந்தா நாம அந்த இடத்துல இருக்க மாட்டம். நம்மட ஆக்களுக்கு இந்த சச்சரவுகள் சரிவராது. அப்புடி படிப்படியாதான் நாம இஞ்சால வந்து சேர்ந்த.” என்பார்.

கிழக்கிலங்கைக் கரையோரத்தில் வாழ்ந்த பூர்வடிகள்


கிழக்கிலங்கையில் வாழ்கின்ற எமக்கு பெரும்பாலான தொல்லை தருபவர்கள் தமிழர்களாகவே இருந்தனர். இன்று அதன் பட்டியலில் ஏனைய இனத்தினரும் சேர்ந்து கொண்டு விட்டனர். ஆரம்பத்தில் எம்மை எமது கலை, பண்பாட்டு ரீதியில் நெருக்கினர். போர் கால இடப்பெயர்வுகளின் பின்னர் நில ஆக்கிரமிப்பினை படிப்படியாக முன்னெடுத்துக் கொண்டு வந்து, நாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த கிழக்கு கரைப் பகுதிகளான மூதூர் பிரதேசத்திற்குட்பட்ட உல்லக்குளம் கிராமத்தை அண்டிய 200 ஏக்கர் வளமான காணிகள் ஆதிக்க சாதிகளினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வெருகல் உப்பூறல் பிரதேசத்திற்குட்பட்ட எமது அதிமுக்கிய பூர்வீக தளமான மாவடியூற்று நிலப்பிரதேசமானது தாகிப் நகர் என முஸ்லிம் கிராமமாக்கப் பட்டுள்ளது. கட்டைப்பறிச்சான் பிரதேசத்திற்குட்பட்ட சந்தனவட்டை, இலக்கந்த, பாலை வனக்குளம், சாலையூர் ஆதிகிராமங்கள் பலவந்தமாக ஆதிக்கவாதிகளால் அதன் இயற்கையை சீர்குலைப்புச் செய்து கொண்டு பலவந்தமாக தமது ஆதிக்கத்தின் கீழ் சுருட்டி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்வதற்கு எத்துனையுண்டு.

இன்று நாம் அமைப்பு ரீதியாக ஒன்று சேர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக எமது பின்வாங்காத காத்திரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றமை இலைமறை காயாகவே வெளிவராமலுள்ளது. எம்மை அமைப்பாக பதிவு செய்வதற்கே ஒன்றரை வருடமாக இழுத்தடித்தார்கள். இருந்தும் இன்றும் ஆதிக்கத்துக்கு எதிராக பின்வாங்காத தீவிர செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற போதும், இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காக பேரினவாதம் எமக்கு உதவுவதான பாசாங்கு செய்து கொண்டு எம்மை அவர்களின் கீழான பூர்வகுடிகளாக அடையாளம் காட்ட எத்தனித்துக் கொண்டு இருப்பதும் இங்குதான் ஈடேறிக் கொண்டு இருக்கின்றன.

இலங்கையில் வேடுவர்கள்

சில நேரங்களில் நான் குஞ்சப்பாவிடம் வினவுதுண்டு எமது ஆதி நிலங்கள் எவ்வாறு அவர்களிடம் போனதென்று. அதற்கவர் “மன இவனுகள் எல்லாம் அந்த நேரம் நம்மட ஆக்களுட்ட வந்து நிண்டு இந்த பருவத்துக்கு மட்டும் கொஞ்சம் பயிர் செய்யலாமா எண்டு கேட்பானுகள். நம்மட ஆக்களும் பாவத்துக்காக ஒத்துப் போய் குடுத்திருவாங்க. இது கன காலமா நடந்து வந்த. இப்ப கொஞ்சக் காலத்துக்குள்ளதான், வன்செயல் நேரத்துலதான் எல்லாத்தையும் இப்புடி கண்கெட்ட வேல செய்றானுகள்.” இவ்வாறு பதிலளிப்பார். இது முற்றிலும் உண்மை கூட. போலித் தமிழ்த்தேசியமும், அதனூடே முகிழ்ந்த வன்செயல் ஈடேற்றங்களில் அறுவடைகளும் இவ்வாறுதான் இன்றும் 20 வருடங்கள் எம்மை பின் தள்ளியே வைத்துள்ளமையை யாராவது மறுக்க முடியுமா?

குஞ்சப்பா சொல்லுவார் “மனே இந்த பாவிகள் எல்லாம் என்னவோல்லாம் செய்றானுகள் அதுகள பொறுத்துக் கொண்டாளும், இந்த காடுகள, குளங்கள, கடல் வளத்த படுத்துற பாடுகளத்தாண்டா பாத்தும் கேட்டும் வாழ ஏலுதில்ல. வெள்ளக்காரன் இருக்கக்குள்ள கூட இப்புடி அத்துறுமங்கப் படுத்தல. அந்நேரம் எங்களுக்குள்ள “பட்டாங்கட்டி” பட்டம் எடுத்தவருதான் தலைவர். அவருக்கு வெள்ளக்காரன் சம்பளமும் கொடுத்தவன். அவருட பேச்சுக்குதான் எல்லாரும் கட்டுபட்டு நடப்பம். ஒரு நேரத்துக்கு கிழங்கு எடுக்குற பருவம் வந்தா அவருட நடவடிக்கைகள் அப்புடி இரிக்கிம். நாங்க கவலக்கிழங்கு, அல்லக் கிழங்கு, ஒல்லிக் கிழங்கு, பண்டிக்கிழங்கு எண்டு ஏகப்பட்டதுகள் எடுப்பம். கவலக்கிழங்கு எடுக்குறது கொஞ்சம் நூதனமான வேல. என்னனெண்டு கேட்டா கவலக்கிழங்குட கொடி நூலாட்டம் மெல்லிசா ரெண்டு பாகத்துக்கு மேல கிடக்கும். அத தோண்டி எடுக்க அகப்பையில பெரிய கம்ப கட்டி பாவிப்பம். அத நெட்டகப்ப எண்டு சொல்ற. பட்டாங்கட்டி சொல்லுவார் ஆரெண்டாலும் கிழங்கு கல்லப் போகலாம். ஆனா கிழங்க எடுத்த உடனே அதுட கொடிய கல்லின(தோண்டிய) மடுவுக்க போட்டு மூடிப்போட்டு வரனும். அப்புடி யாராவது செய்யாட்டி அவங்க அந்தப் பருவம் முழுக்க கிழங்கு எடுக்க போக ஏலாது. ஆனா அப்புடி குற்றம் செய்தவங்களுக்கு கிழங்கு எடுக்கப்போற மத்தவங்க ஆளுக்கொரு பங்கு கொடுக்கனும்” இது பட்டாங்கட்டியோட கட்டளை.


இப்புடித்தான் காட்டுல என்ன பழம் எடுக்குற எண்டாலும் சரி அந்த மரத்துட ஓரு கந்தும் உடையாக்காம ஆயனும். ஆனா இப்ப மரத்தோட வெட்டுறானுகள். குளத்துள மீன் புடிக்கிற எண்டாலும் இப்படித்தான்டா மனே. மீன் சரியான பருவத்துக்கு வரும் வரைக்கும் ஆரும் மீன் புடிக்க போக கூடாது. சரியான பருவம் வந்ததும் பட்டாங்கட்டி அறிவிப்பார். இனி மீன் புடிக்க போகலாம் எண்டு. போய் ஒரு பாடு வீசினாலே போதும். நாலு ஊட்டுக்கு மீன் வரும். ஓவ்வொரு மீனும் ரெண்டு மூண்டு கிலோ வரும். இப்புடி எத்தனைய மனே சொல்லலாம். காடும் குளமும் தான் நம்மட சொத்து. நாம அதுகள்ட சொத்து. ஆன இப்ப?”


குஞ்சப்பா இவ்வாறான உரையாடல்களைப் பேசும் போது நான் மெய் மறந்து போயிருப்பேன். அவரது கருத்துக்களை கேட்ட பின்னர்தான் எனக்குள் பல விடயங்கள் மீளெழும்பிக் கொண்டிருக்கும். தமது வாழ்க்கை நெறிகளிலே தவறிழைப்பவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுத்தாலும், அவர்களும் மனிதர்கள் நமது உறவுகள் என்னும் சிந்தனையில் எவரையும் பாதிக்காத நீதிக்கையாள்கையை நாம் இன்று எங்காவது காண முடியுமா? இயற்கையுடன் இணைந்து வாழ்தல் என்பது என்னவென்று அவரின் உரையாடல்களின் மூலமே வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். இயற்கையை தன்வயப்படுத்தும் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பதும், இயற்கையை கட்டுப்படுத்தி வாழும் வாழ்க்கை எவ்வளவு மூர்க்கத்தனமானது என்றும், அதைத் தடுக்க முடியாமலும் எதிர்க்க முடியாமலும் வாழும் காலத்திலேயே அதை உணர்ந்து கொண்டிருக்கும் வக்கற்ற தலைமுறையில் இருக்கின்றேன் என்னும் போது மனம் கனத்துப் போய்விடும்.


இன்று இலங்கையின் ஆதிப்பிரஜைகள் எம்மை பற்றிய உரையாடல்களும், செயற்பாட்டு முன்னெடுப்புக்களும் ஏதோ எம்மை பரிதாப நோக்குடன் பார்ப்பதாகவும், வேற்று ஜந்துக்கள் போலவே காட்ட முனைவதாகவுமே அமைந்து விடுகின்றமை கண்டனத்திற்கு உரிய விடயமாகும். முதலில் நாம் எம்மை எவ்வாறு அழைக்க விரும்புகிறோம்?, எவ்வாறு வாழ விரும்புகின்றோம் என்பதை ஆய்வாளர்களோ, வரத்தினங்களோ தம் பாட்டிற்கு எடுத்துக் கூவுவதை நிறுத்திக் கொள்வதே மிகச்சிறப்பாக அமையும். காரணம் நாங்களே இந்நாட்டின் வேர்கள்!

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8567 பார்வைகள்

About the Author

கமலநாதன் பத்திநாதன்

கமலநாதன் பத்திநாதன் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நாடகமும் அரங்கியலும் கற்கைநெறியில் இளமானி சிறப்புப்பட்டம் பெற்றவர். கிழக்கிலங்கையின் பூர்வ குடிகளான வேடர் சமூகத்தைச் சேர்ந்த இவர் இலங்கையில் தமிழ் பேசும் வேட்டுவ மக்கள் சார்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார். அவ்வகையில் ‘வேடர் மானிடவியல்’ எனும் விடயத்தின் கீழ் பல ஆய்வுக் கட்டுரைகளை தொடரச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

மேலும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நாளிதழ்கள், சஞ்சிகைகளில் வேடர் சமூகத்தின் சமயம், வரலாறு, தமிழ் இலக்கியம், பண்பாட்டு ஆய்வு சார்ந்த கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள பத்திநாதன் தற்பொழுது இலங்கை நூலக நிறுவனத்தில் கள ஆய்வாளராகக் கடமையாற்றுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)