சாதிகளுக்கிடையிலான இடையூடாட்டத்தின் இருவேறு மாதிரிகள் - பகுதி 2
Arts
10 நிமிட வாசிப்பு

சாதிகளுக்கிடையிலான இடையூடாட்டத்தின் இருவேறு மாதிரிகள் – பகுதி 2

June 3, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

மொழிபெயர்ப்புக் கட்டுரை : கென்னத் டேவிட்

பகுதி 1 இல் நான் ஒரு குறிப்பிட்ட வகைச் சமூகச் செயல் பற்றிக் குறிப்பிட்டேன். இது புவி வெளியை Space ஒழுங்கமைத்துக் கொள்வது பற்றியது. இப்பகுதியில் சாதிகளுக்கிடையிலான நடத்தை நடைபெறும் இரு மாதிரிகளை  modes of intercaste canduct) விளக்குவேன். இம்மாதிரிகள் இருவகைப்படும்.

                    1. கட்டுண்ட சாதிகளின் நடத்தை அல்லது உறவு

                    2. கட்டுப்படாத சாதிகளின் நடத்தை

விவசாயக் கிராமம், மீனவக் கிராமம், நகரம் சார் குடியிருப்பு என்ற மூன்று வெவ்வேறு புவி வெளியில் இவை இடம் பெறுவதையும் காணலாம்.

caste system

  தென் ஆசியா பற்றிய இக்கால ஆய்வுகள் பல நில உடைமைச் சாதிகள் மேலாதிக்கம் செலுத்தும் விவசாயக் கிராமங்கள் பற்றியனவாக உள்ளன. இவை பல சாதிகள் உள்ள கிராமங்களாகும். இந்த ஆய்வுகள் ஒரு பகுதி பற்றிய ஆய்வாக இருந்து கொண்டு முழுமை பற்றிக் கூறுகின்றன. இதனால் ஒரு வார்ப்படமான அமைப்பு வெளிப்படுகிறது. எல்லா ஆய்வுகளும் நில உடைமைச் சாதியின் ஆதிக்கம், அதன் சமய அந்தஸ்து என்பனவற்றை எடுத்துக்காட்டும். மேலாதிக்கச் சாதி கிராமத்தின் பிறசாதிகளுடன் கொண்டுள்ள இடைத்தொடர்பு பல்வகையான சந்தர்ப்பங்களில் Multi-contextual) நிகழ்வது. அத்தொடர்புகள் பரவலானவை. பொருளாதாரப் பரிவர்த்தனை, சடங்கியல் பரிவர்த்தனை, அரசியல் பரிவர்த்தனை என அவை வேறுபடுவதோடு ஒவ்வொரு சாதியோடும் கொண்டுள்ள பரஸ்பர இடைத்தொடர்பாகவும் இருக்கும்.

பிரேத ஊர்வலத்தின் போது தீண்டதகாதவர்களின் வேலைகள்

இப்பொருளாதாரத் தொடர்புகள், பல்வகை உறவுகளின் ஓர் அம்சம் மட்டுமே ஆகும். இந்தியக் கிராமம் ஒன்றில் பல சாதிகளை இவை ஒன்றிணைத்தன. உதாரணமாக, தீண்டத்தகாத உழைப்பாளிக்கும் அவனது எஜமானிற்கும் இடையில் ஏற்படும் மரபு வழித் தொடர்புகள் பொருளியல் மட்டத்தில் மட்டும் செயற்படவில்லை. அவை அரசியல் சடங்கியல் நிலைகளிலும் மரபு வழியானவையாகச் செயற்பட்டன. தீண்டத்தகாதவன் ஒருவன் பிறர் ஒருவரோடு முரண்பாட்டில் ஈடுபட்டால் அப்பிறர் ஒரு தீண்டத்தகாதவனாக இருந்தால் என்ன அல்லாதவனாக (உயர்சாதியினன்) இருந்தால் என்ன எஜமான் அவனிற்கு ஆதரவு வழங்க வேண்டும். இது போன்றே தீண்டத்தகாதவனான உழைப்பாளி தனது எஜமானனின் பிணக்குகளோடும் சம்பந்தப்படும் நிலை இருந்தது. அவன் தனது எஜமானனிற்காகச் சண்டையிட வேண்டும். ஏனைய விவசாய எஜமானர்களுடன் சேர்ந்துள்ள தீண்டத்தகாதவர்களோடும் சண்டையில் ஈடுபடவும் வேண்டி ஏற்படும். இதனை விட தீண்டத்தகாதவன் எஜமானனிற்குப் பல சடங்கியல் சேவைகளையும் செய்ய வேண்டி ஏற்படும். பிரேத ஊர்வலத்தின் போது முன்னால் பந்தம் பிடித்துச் செல்லுதல் போன்ற பல வேலைகளை அவன் செய்வான். இவை அரசியல், பொருளாதாரம், சடங்கியல் என்ற வகைப்பட்ட கடமைகளாக இருந்தன. இவை எஜமான் – தீண்டத் தகாதவன் உறவுகளைப் பலப்படுத்தின. இந்தியாவின் விவசாயப் பொருளாதாரங்களின் உறுதி நிலைக்கு அவை உதவின.

                    மேற்குறித்த விதமான உறவுகள் சாதிகளுக்கு இடையிலான உறவு முறையைக் கூறுவன. இதனை ஜஜ்மானி முறை என்பர். இவ்வகை ஜஜ்மானி Jajmani)  உறவை விட தனிப்பட்ட விசேட வகையான ஒப்பந்த உறவுகள் பற்றியும் ஆய்வுகள் எடுத்துக் காட்டின. கைவினைச் சாதிகளுடனும், மீனவர் சாதியுடனும் வேறு பல சாதிகளுடனும் விவசாய நில உடைமைச் சாதி கொள்ளும் உறவு ஒப்பந்த உறவாகும். எப்ஸ்டீன் (Epstein இருவகையான உறவுகள் சாதிகளிடையே உள்ளன என்றும் அவ்வுறவுகளை மூன்று அம்சங்களின் அடிப்படையில் பகுத்துப் பார்க்கலாம் என்றும் கூறுகிறார்.  அவை,

                    1.                சேவைக்காக வழங்கும் சன்மானம் எவ்வகையினது? (mode of reward)

                    2.                சேவை நீடிக்கும் கால அளவு (duration of service)

                    3.                சேவைக்கான தேவை எப்போதாவது இடையிடையே தோன்றுவதா? அல்லது அடிக்கடி தோன்றுமா? (Regularity of demand)

எப்ஸ்டீன் மேற்கோள் ஒன்று வருமாறு “மைசூர் கிராமங்களில் நான் இருவகையான பரம்பரைப் பிணைப்புக்களை அவதானித்துள்ளேன். ஒன்று விவசாயியான சிற்றுடமையாளருக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையிலான உறவு,  மற்றது சலவைத் தொழிலாளி, முடி திருத்துபவர், கொல்லர் ஆகியோருடன் விவசாயச் சிற்றுடமையாளனுக்கு உள்ள உறவு. இத்தொடர்பும் அடிக்கடி நிகழ்வது, தொடர்ச்சியானது. வேறு சில கைவினைஞர்களின் சேவை அடிக்கடி பெறப்படுவதல்ல. உதாரணமாக பொற் கொல்லர், குயவர் என்ற இருவரதும் சேவைக்கு தொடர்ச்சியான கேள்வி இருப்பதில்லை. இவர்களுக்கு விவசாயிகள் குடும்பங்களுடன் பரம்பரைத் தொடர்பு இருப்பதில்லை. அவர்களுக்கு ஆண்டுதோறும் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதும் இல்லை. தேவை ஏற்படும் போது சேவையைப் பெற்றுக் கொண்டு அதற்குரிய கூலியை அப்பொழுதே செலுத்திவிடுவர்“.

  வைசர் wiser சாதிகளிடையிலான தொடர்புகளை ஆட்சேர்க்கும் முறை  recruitment அடிப்படையில் வேறுபடுத்துகிறார்.

(i)                சிலருக்கு மட்டும் சேவை புரிவோர்.

(ii)               எல்லோருக்கும் தமது சேவையை வழங்குவோர் என்று இருவகை உள்ளதை அவர் எடுத்துக் காட்டுகிறார்.

முதல் வகையில் வேலைக்கு அமர்த்தப்படும் சாதியின் சமய (சடங்கியல்) அந்தஸ்து முக்கியமானது. எல்லோருக்கும் சேவை செய்வோரின் சமய (சடங்கியல்) அந்தஸ்து கவனிப்புக்குரியதன்று. சைவர் கூறும் இவ்வேறுபாட்டை தூய்மை/ துடக்கு என்ற எதிர்மறைகள் மூலம் பொக்கொக் (Pocock) விளக்குகிறார். சில தொழில்களில் அத்தொழிலை வழங்குபவருக்கும், அத்தொழில்களால் பயன் பெறுபவருக்கும் இடையில் அடிப்படையாக அமைந்திருக்கும். தூய்மை / துடக்கு அம்சம் வெளிப்பட்டு நிற்கும். அம்பட்டர், வண்ணார் என்ற இரு சாதிகளின் சேவைகள் இதற்கு உதாரணங்களாகும். வேறு சில சாதிகள் ஒரு பண்டத்தை வழங்குபவராக இருப்பர். அவ்வேளை தூய்மை / துடக்கு நேரடியான விடயமாக இருப்பதில்லை.

மேலே குறிப்பிட்ட வகையில் இருவகை மாதிரிகள் உள்ளன. அவை,

                    i)  அந்தஸ்து மாதிரி – இங்கு தூய்மை / துடக்கு அடிப்படையாக இருக்கும்.

                    ii) ஒப்பந்த மாதிரி – தூய்மை / துடக்கு வெளிப்பட்டு நிற்காத மாதிரி. உதாரணமான, பண்டம் ஒன்றை வழங்குதலும் பெறுதலும்.

                    iii)  கலப்பு மாதிரி  ஒன்றையும் குறிப்பிடலாம். ஒவ்வொரு மாதிரியிலும் ஏழு பகுதிகளை pattern variables ஐயும் அடையாளம் காணலாம்.

                    நில உடைமையாளர், பூசகர், அம்பட்டர், தீண்டத்தகாதோர் என்போர் அந்தஸ்து மாதிரியில் அடங்குவர்.

                    பொற்கொல்லர், சிற்பாசாரி, நெசவாளர், எண்ணெய் வடிப்போர் என்போரும் முக்குவர், திமிலர் ஆகிய மீனவர் சாதியினரும் முதலாவது மாதிரிக்கு எதிர்நிலையில் உள்ள ஒப்பந்த மாதிரியில் அடங்குவர்.

                    கொல்லர், தச்சர், குயவர் என்போரும் கரையார் என்றும் ஆதிக்கம் மிக்க மீனவர் சாதியும் கலப்பு மாதிரியில் அடங்குவர். இவர்களது உறவுகளில் முன்னைய இரு மாதிரிகளின் கலப்பு அம்சங்கள் இருக்கும்.

நெசவாளர்

விவசாயக் கிராமத்தில் சாதிகளுக்கிடையிலான உறவுகளின் அமைப்பு

                    விவசாயக் கிராமங்களில் கட்டுண்ட சாதிகள் வேளாளரோடு கொள்ளும் உறவுகளில் அந்தஸ்து மாதிரி மேலோங்கியுள்ளது. இது வட இந்தியாவின் ஜஜ்மனி உறவுக்கு ஒப்பானது. இங்கு நயினார் குடிமைகள் சாதி உறவு, வீடு House என்பதற்கும் வீட்டின் மக்கள் என்போருக்கும் இடையிலான தொடர்பு ஆகும். நயினார் என்னும் தெலுங்குச் சொல் யாழ்ப்பாணத்தில் ‘எஜமான்’ என்ற பொருளில் வழங்குகிறது. குடிமகன் என்ற சொல் (குடிமகன்) வீட்டின் மகன் என்ற பொருள் உடையது. ‘மக்கள்’ என்ற பன்மைச் சொல் குடி(வீடு) என்பதுடன் சேரும் பொழுது குடிமைச் சாதிகளான எஜமானின் குடி மக்களைக் குறிக்கும்.

                    பிராமணர் (பூசகர்), கோவியர் (வீட்டு வேலையாள்), அம்பட்டர், வண்ணார், பள்ளர், நளவர் (இவ்விரு சாதிகளும் விவசாய வேலை செய்வோர்) பறையர் ஆகியோர் குடிமைச் சாதிகளில் அடங்குவர்.

பிராமணர்

                    இப்போது நில உடைமையாளரான வேளாளருக்கும் குடிமைச் சாதிகளோடும் இடையில் நிகழும் தொடர்புகளை ஏழு மாறிலிகளாக pattern variables ஆக வகுத்துக் கூறவுள்ளேன்.

அ)    ஆட்சேர்ப்பு (Recruitment) : வேளாள நில உடைமையாளர் மகனாகப் பிறந்தவர் வேளாளராவர். குடிமைச் சாதியில் பிறந்தவர் குடிமகன் ஆவர். ஆதலால் ஆட்சேர்ப்பு என்பது பிறப்பால் வருவது. அது சுயவிருப்பின்படி செய்யும் ஒப்பந்தம் அன்று. ஆகையால் ஆட்சேர்ப்பு என்ற சொல்லே இங்கு பொருத்தமற்றது. வேளாளர், குடிமைச் சாதிகள் என்ற சமூக வகைமைகள் பிறப்பால் அமைபவை.

ஆ)    காலம் (Time) : இது காலாகாலமாக நீடிப்பது, தொடர்வது, பரம்பரையாக வருவது.

இ)    புவிவெளி (Space) : இவ்வுறவு உள்ளூர் நிலையில் மட்டுப்படுத்தப்பட்டது. ஒரு கிராமத்தின் வட்டாரத்திற்குள் நிகழ்வது. அண்மியது.

ஈ) வாடிக்கையாளர் ( Clientele) : இவ்வுறவுகள் குறிப்பிட்ட வகை ஆட்களுக்கு இடையிலே நிகழ்வது. ஒரு குறிப்பிட்ட வகை அந்தஸ்து /தரம் உடைய வேளாளருக்கு அவரின் மதிப்பு / ஆதிக்கம் என்பன கருதிச் செய்யப்படுவது. அவ்வேளாளர் ஒரு குறிச்சியில் அல்லது வட்டாரத்தில் இருப்பவராவர். தூய்மை /துடக்கு சம்பந்தப்படுவது.

உ)    விலைப் பொறிமுறை  (pricing mechanism) : மரபு வழியான விலைப் பொறிமுறைப்படி எவ்வளவு கூலி கொடுக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும். ஹார்ப்பர் Harpar கூலியைக் கொடுத்தல், காசாகக் கூலியைக் கொடுத்தல் என்ற இரண்டு முறையை வேறுபடுத்துகிறார். இது பரிவர்த்தனையின் ஊடகத்தை முதன்மைப்படுத்தும் வகைப்பாடு. நான் ஊடகத்தை விட விலைப் பொறிமுறை முக்கியம் என்று கருதுகிறேன். ஆதிக்கச் சாதிக்கும் (வேளாளருக்கும்) குடிமைகளுக்கும் இடையில் பேரம் பேசுதல் நிகழ்வதில்லை. பிரதான கொடுப்பனவுகள் பயிர்ச்செய்கை வட்டத்தோடு தொடர்புடைய அறுவடையின் போது நிகழ்வது. விளைபொருளாகவோ, பண்டமாகவோ கூலி கொடுக்கப்படும். எஜமான் – வேலையாள் இடையில் ஒரு சிறு சடங்குடன் இப்பரிமாற்றம் நடைபெறும். ஒரு குறிப்பிட்ட வேலைக்கு அந்த வேலையின் அளவுக்கு கூலி கொடுத்தாலும் நிகழும். அது சடங்கின் தன்மை இல்லாதது.

ஊ)    உறவு நிகழும் சூழல்  Context of relationship) : பொருளாதாரம், சடங்கியல், அரசியல் என்ற மூன்று சூழமைவுகளிலும் உறவுகள் நிகழ்கின்றன. இதில் சம்பந்தப்பட்டோர் அச்சூழமைவுகளைத் தனிமைப்படுத்திப் பார்ப்பதில்லை. அவை ஒன்றுபட்ட சூழமைவாகவே உள்ளன. ஆய்வாளரே அவற்றை வேறுபடுத்திப் பார்க்கின்றார்.

எ)     சமச்சீர் – சமச்சீர் இன்மை: கட்டுப்பட்ட உறவுகளில் ஒவ்வொரு சூழமைவிலும் சமச்சீர் – சமச்சீர் இன்மை வேறுபடுகிறது. வேளாளர் ஒருவர் தனக்கு சேவை செய்யும் பிராமணரையும், அம்பட்டரையும் தன் பகுதிக்கு ஆதரவு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இதே போன்று பிராமணரும், அம்பட்டரும் தமக்குத் தொல்லை நேரும் போது உதவும்படி வேளாளரிடம் முறையிடுவர். சமைத்த உணவை பிராமணர் கொடுக்கும் போது வேளாளர்  பெறுவார். அம்பட்டரும் பெற்றுக் கொள்வார். ஆனால் பிராமணர் இருபகுதி யாரிடமும் இருந்து சமைத்த உணவைப் பெற்றுக் கொள்ளமாட்டார். வேளாளர் சமைத்த உணவை அம்பட்டருக்கு கொடுப்பார். ஆனால் அவர் சமைத்த உணவை அம்பட்டரிடமிருந்து பெறமாட்டார். வேளாளர் பிராமணருக்கும் அம்பட்டருக்கும் கூலி கொடுக்கிறார். ஆனால் அவர்களிடமிருந்து கூலி பெறுவதோ அவர்களுக்கு வேலை செய்வதோ கிடையாது.

                    எவ். பார்த் என்பவர் status summation என்ற கருத்தின் மூலம் சாதி முறையின் உறவுத் தொடர்புகளை விளக்குகிறார். நில உடைமையாளருக்கும் குடிமைகளுக்கும் இடையிலான உறவுகளில் சமச்சீர் இன்மை Asymmetry  எப்போதும் இருக்கும். சடங்குநிலையில் நில உடைமையாளர் அம்பட்டருக்கு (சவரம் செய்பவர்) உயர் நிலையில் உள்ளவர். அவ்வுறவு சடங்குநிலையில் மட்டுமன்றி அரசியல், பொருளியல் நிலையிலும் நில உடைமையாளர் ஆதிக்கத்தை வெளிப்படுத்துவர். ஆனால் நில உடைமையாளரான வேளாளருக்கும் பிராமணருக்கும் இடையே உள்ள உறவு சடங்குநிலையில் வித்தியாசமானது. பிராமணர் சடங்கு நிலையில் உயர்ந்தவர். வேளாளர் தாழ்ந்தவர். அரசியல், பொருளாதார நிலைகளில் வேளாளர் உயர்ந்தவர்.

கட்டுப்படாத தொடர்பு  (Non Bound Relationship)

                    கட்டுப்படாத தொடர்பு அல்லது இஷ்டமான தொடர்பு பற்றி அடுத்து நோக்குவோம். வட இலங்கையில் (யாழ்ப்பாணத்தில்) விவசாயக் கிராமங்களோடு மீன்பிடிக்கிராமங்களும், கைவினைஞர் வாழும் நகரங்களும் உள்ளன. விவசாயக் கிராமங்களில் இருந்து வேறுபட்டதான கட்டுப்படாத தொடர்புகள் ஏனைய வகைக் குடியிருப்புக்களில் உள்ளன. இவற்றை இஷ்டமான தொடர்பு அல்லது சுய விருப்பப்படியான தொடர்பு என்றும் கூறலாம். முன்னர் குறிப்பிட்ட ஏழு மாறிகளையும் கொண்டே கட்டுப்படாத தொடர்புகளை பின்வருமாறு குறிப்பிடலாம்.

அ)    ஆட்சேர்ப்பு (recruitment) :         கட்டுப்படாத உறவு ஒன்றில் ஆட்களுடன் சேர்ந்து கொள்வது அல்லது ஈடுபடுவது தனிநபர்களின் சுயவிருப்பப்படியானதாகும்.

ஆ)    காலம் (time) :       இத்தொடர்பு குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாட்டை உடையதல்ல. ஒவ்வொரு தொடர்பும் சில நிமிடங்களுக்குள் நிகழ்வதாக இருக்கலாம் (உதாரணம் மீனைக் கொள்வனவு செய்தல்). ஒரு நபர் பல மீனவர்களுடன் தொடர்பு வைத்திருந்து மீனைக் கொள்வனவு செய்பவராக இருக்கலாம். அல்லது ஒருவரிடமே தொடர்ச்சியாகக் கொள்வனவு செய்து வரலாம். அவர் யாரிடமும் கட்டாயமாகக் கொள்வனவு செய்யும் தேவை இல்லை.)

இ)    புவிவெளி (Space): ஒரு குறிப்பிட்ட இடத்தில் (locality) நிகழவேண்டும் என்ற கட்டாயம் கட்டுப்படாத தொடர்புகளுக்கு இருப்பதில்லை. சந்தை ஒருவரின் வதிவிடத்திற்கு அண்மையில் இருக்கலாம். ஆயினும் பல பொருட்களைக் கிராமத்தில் இருந்து தூர உள்ள இடம் சென்றே பெற வேண்டும். பொருள் எங்கு கிடைக்கிறது ?அதன் விலை குறைவா?  அல்லது ஒப்பீட்டளவில் கூடவா ? போன்ற விடயங்களே கட்டுப்படாத தொடர்புகள் நிகழும் இடத்தைத் தீர்மானிக்கின்றன. வேறு வகையான நிபந்தனைகளால் தொடர்பு நிகழும் இடம் தீர்மானிக்கப்படுவதில்லை.

ஈ)     வாடிக்கையாளர் (Clientele)    :      கட்டுப்படாத தொடர்புகள் ஒரு குறிப்பிட்ட வகை மனிதர்களுக்கு இடையில் மட்டும் நிகழ்வதில்லை. டபிள்யு-எச்.வைசர் சாதிகளை இருவகையாகப் பிரிக்கிறார். குறிப்பிட்ட வகையினருக்கு மட்டும் சேவையை வழங்குபவர்கள் ஒருவகை – உதாரணமாக அம்பட்டர் ஒருவர் தீண்டத் தகாத சாதியெனக் கருதப்படுபவருக்குத் தலைமுடியை வெட்டுவதில்லை. வேறு சில சாதியினர் பேதம் பாராமல் யாவருக்கும் தமது சேவையை அல்லது பண்டத்தை விற்பனை செய்வர். உதாரணமாக குயவர் ஒருவர் பானையை எவருக்கும் விலைக்குக் கொடுப்பார்.  வைசரின் பகுப்பு ஏற்றுக் கொள்ளக் கூடியதே. இருப்பினும் குயவர் ஒரு சேவையை வழங்குபவர் அல்ல. அவர் வர்த்தகம் செய்பவராகத்தான் இவ்வுதாரணத்தில் செயற்படுகிறார். மேற்கு நாட்டுச் சூழலில் வேலை – சேவை வேறுபாடு இங்கு உள்ளது போல் இருப்பதில்லை. கட்டுப்படாத உறவுகளில் வாடிக்கையாளர் பணம் கொடுத்து வாங்கும் சக்தியுடையவரா என்பதே முக்கியம். உயர்வு – தாழ்வு கவனிக்கப்படுவதில்லை.

உ)    விலைப் பொறிமுறை  (pricing mechanism) :      விலை, கேள்வி ,நிரம்பல் என்ற காரணிகளால் அந்தந்த வேளை தீர்மானிக்கப்படுவதேயல்லாமல், மரபு முறைப் படியான திட்டம் ஒன்றின் படி தீர்மானிக்கப்படுவதில்லை. 1968இல் பண்டமாற்று நடைமுறையில் இருக்கவில்லை. ஆயினும் சிலர் அரிசியைக் கொடுத்து மீனை வாங்குவதுண்டு. பரிவர்த்தனை ஊடகம் எதுவாயினும் விலை ஏற்ற இறக்கம் இருக்கும். மீன் நிரம்பல் குறைவாக இருந்தால் கூடியளவு அரிசியைக் கொடுக்க வேண்டும். பரிவர்த்தனை நிகழும் சந்தர்ப்பத்திலேயே கொடுப்பனவைச் செய்ய வேண்டும். கட்டுப்பட்ட தொடர்பு போன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் (உதாரணம் அறுவடை) பெருந்தொகையைச் செலுத்தும் தேவை இருப்பதில்லை. அடுத்ததாக கொடுப்பனவு செய்தல் ஒரு சடங்கின் தன்மையைப் பெறுவதில்லை.

ஊ)    உறவு நிகழும் சூழல் Context of relationship) :      கொள்வனவு செய்வோரும் விற்பனை செய்வோரும் பொருளாதாரம் என்ற சூழலில் சந்திக்கின்றனர்.  கட்டுப்படாத உறவுகளில் அரசியல், சடங்கியல் சூழல் இருப்பதில்லை. ஒரு கைவினைஞர் கோவில் ஒன்றிற்குச் சேவையை வழங்கும் போது கட்டுப்பட்ட தொடர்பின் சூழமைவு தோன்றக் கூடும். (இறப்பு, திருமணம், பூப்புச் சடங்கு போன்ற) தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகளிலும் சேவைகள் வழங்கும் போது கட்டுப்பட்ட தொடர்பின் அம்சம் வெளிப்படும். உற்பத்தியாளனும் நுகர்வோனும் சந்திக்காமல் இடையில் உள்ள வர்த்தகரால் பரிவர்த்தனை செய்யப்படும் போது சூழல் என்பது மறைந்து போகிறது.

எ)     சமச்சீர் – சமச்சீரின்மை : கட்டுப்படாத தொடர்பில் ஒவ்வொரு உறவும் நிகழும் போது அது சமச்சீர் உடையதாக இருக்கும். கொள்வனவு செய்பவரும், விற்பவரும் நடுநிலையான, சார்பில்லாத சந்தை என்ற களத்தில் சந்திக்கின்றனர். கொள்வனவு செய்பவர் உயர் அந்தஸ்து உடையவர் என்ற காரணத்தால் விற்பவர் பணிந்து போவதில்லை. விலையைக் குறைப்பதில்லை. விற்பவர் உயர்ந்தவர் என்பதால் கொள்வனவு செய்பவரை மடக்கி விட முடியாது. உயர்வு தாழ்வு உடைய படித்தர அமைப்பில் பேரம் பேசுதல் இடம் பெறமுடியாது.

கீழே தரப்பட்ட அட்டவணை-1 இல் கட்டுப்பட்ட உறவுகள், கட்டுப்படா உறவுகள் என்பனவற்றிக்கிடையிலான வேறுபாடுகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

                    கட்டுப்பட்ட உறவுகளில் கட்டுப்பட்ட சாதிகளே ஈடுபடுவர். கட்டுப்படாத உறவுகளில் கட்டுப்படாத (இஷ்டப்படியான சாதிகள்) சாதிகள் ஈடுபடுவர் என்று பொதுப்படக் கூறலாமாயினும் இதில் தெளிவான வரையறை கிடையாது. கைவினைஞர் சாதிகள் கட்டுப்படாத உறவுகளின் படியான வேலைகளையே செய்வர். அவர்களின் உழைப்பு, வளங்கள் என்பன அத்தகைய வேலைகளுக்கே உபயோகிக்கப்படும். விவசாய நில உடைமையாளர்களுக்கும் அவர்களுக்கு சேவை செய்யும் சாதிகளுக்கும் இடையில் கட்டுப்பட்ட உறவுகள் நிகழும். ஆயினும் இவ்விரு குழுவினரும் கைவினைஞர்களோடு அடிக்கடி கட்டுப்படா உறவுகளில் ஈடுபடும் தேவையும் உள்ளது. ஆகவே கட்டுப்பட்ட உறவுகள், கட்டுப்படாத உறவுகள் என்ற இரண்டும் ஒரே விதமான சமூகக் கட்டமைப்புக்குள் நிகழும் உறவுகளின் வேறுபட்ட மாதிரிகளாகும்.

                    விவசாயக் கிராமத்தில் கட்டுப்பட்ட உறவுகளில் இருந்து விலகல்கள் இடம்பெறுவது உண்டு. கட்டுப்பட்ட உறவுகளில் ஈடுபடுபவர்கள் அதில் இருந்து விலகிக் கட்டுப்படா உறவுகளாக தங்கள் உறவுகளை மாற்றுவர். இதேபோல் கைவினைஞர் சாதிகள் சில கட்டுப்பட்ட உறவுகளை இடைக்கிடை மேற்கொள்வதும் உண்டு.

குறிப்பு : ‘Spatial Organization and Normative Schemes in Jaffna, Northern Sri Lanka’ என்ற தலைப்பில் 1973 ஆம் ஆண்டு Modern Ceylon Studies, 4 (1&2), 21-52 என்னும் இதழில் கென்னத் டேவிட்அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8281 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)