பூர்வகுடிகள் தம் வாழ்வியல் அசைவுகளில் இயற்கையின் வகிபங்கு - பகுதி 2
Arts
10 நிமிட வாசிப்பு

பூர்வகுடிகள் தம் வாழ்வியல் அசைவுகளில் இயற்கையின் வகிபங்கு – பகுதி 2

June 15, 2022 | Ezhuna

இலங்கைத் தீவின்  பூர்வீக குடிகளாக சிங்களவர்களையும்  மற்றும் தமிழர்களையும்  அவர் தம் பேரினவாத சிந்தனையானது,  பல வரலாற்று புனைவுகளின் ஊடாக இற்றை வரை  தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால்  இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் வேடுவர் என்பதை எவரும் மறுக்கவியலாது. அதனடிப்படையில், கிழக்குக் கரையோரம் எங்கும் வாழும் இன்று தமிழை பேசு மொழியாகக் கொண்டுள்ள வேடுவர்களின் இருப்பியல் பற்றியும், அவர் தம் தேவை பற்றியும் ‘வேடர் மானிடவியல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் ஆய்வுப்பாங்கில் விவரிக்கின்றது. வேடுவர்களுக்கே உரித்தான அடையாளங்களை வெளிக்கொணர்வதாகவும், இதுவரை நாம் அறிந்திடாத வேடுவர் குணமாக்கல் சடங்குகள், இயற்கையுடன்  பின்னிப்பிணைந்த அவர்களின் வாழ்வியல், வேடுவர் மீதான ஆதிக்க சாதியினரின் பாகுபாடுகள் என்பன உள்ளிருந்து மரபு மீட்கும் நோக்கில் பிரதானமாகக் கண்டறியப்பட்டு, அவை தொடரின் ஊடாக முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் காலனிய எண்ண மேலாதிக்கத்துள் சிக்குண்டு அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர் தம் மானுட நகர்வுகள் முதலான பல அல்லோல கல்லோல நிலைமைகளும் இதில் விரிவாகப் பேசப்படுகின்றன.

காரை இலை – (தாவரவகைப்பாடு: Canthium parviflorum)

பொதுத்தன்மை


காரை இலை என்பது, பூர்வகுடிகளின் உணவுத்தாவரங்களின் பழந்தாவரங்களில் ஒன்றாகும். இது காரைச்செடி என்றும் அழைக்கப்படும் இதன் காய்கள் காரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு முட்செடியாகும். இதில் சாதாரண காரை, சோத்துக்காரை (சோற்றுக்காரை) எனும் வகைகள் உண்டு. இது ஒரு பூக்கும் தாவர இனமாகும். இதன் காய்கள் பிஞ்சுப் பருவத்தில் பச்சை நிறத்தில் காணப்படும். பிறகு முதிர்ந்து மஞ்சள் நிறமாகி மங்கலான மஞ்சள் நிறப் பழமாக மாறும். இதன் காய்கள், பழங்கள் உண்ணக்கூடியவை. இதன் இலை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இதனை காரை, கருந்தும்பி, தும்பி, தும்பிலி எனவும் அழைக்கும் மரபும் உண்டு.

மருத்துவ நடவடிக்கை

காரை இலை


காரை மரமானது பலவகையான மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதம், சித்தமருத்துவம், யுனானி, மற்றும் நாட்டு மருத்துவம் எனப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அரக்வதாதி கஷாயம் இது சொரியாசிஸ் உள்ளிட்ட தோல் நோய்களை குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

2. அரிமேதாதி தைலம் இது பல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

3. பலா தேல் (ஆயுர்வேத மருத்துவ பண்டம்) இது சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

தேனீக்கள் அதிகமாக விரும்பும் பூக்களில் ஒன்றாகும். இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணுகிறது. ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் காரை பழம் சாப்பிட்டால் 100% குணமாகும். ஆடு இதன் இலைகளை விரும்பி உண்ணும். உயிர்வேலியில் அவசியம் இருக்க வேண்டிய மரம். பல நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது காரை மரங்கள். அத்தி பழத்துக்கு நிகரான ஒரு பழம் இருக்கிறதென்றால் அது காரைப்பழம் தான். மனிதர்களைத் தாக்கும் பிளாஸ்மோடியம் பால்சிபோரம் மலேரியாக் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

பொதுவான பயன்பாடுகள்

விவசாயக் கருவிகள், வண்டிச்சட்டங்கள், மற்றும் தூண்கள், கடைச்சல் வேலைகள், பொம்மைகள் செய்ய, காகிதம் தயாரிக்க என பலவகையான பலன்களினை காரை மரத்தில் இருந்து பொதுவாகப் பயன்படுத்த முடியும். இலைகள், கிளைகள், மரம் ஆகியன அனைத்துக் கூறுகளும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி , தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும் சூழல் பாதுகாப்பு வேலைகளினைப் தானாகவே செய்து விடுகின்றன. இதனுடைய வேர் பூச்சிக் கொல்லி திறனுடையது. இதன் தழையானது விவசாய நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்தக் கூடியது. கால்நடைகளுக்கு தீவனமாகவும் (ஆடு மிகவும் விரும்பி உண்ணும்) பூக்கள் தேனீக்களுக்கு தேன் தருபவையாகவும் காணப்படுகின்றன. தற்காலத்தில் இதன் நறுமணம் கொண்ட பூக்களிலிருந்து வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுவதாகவும் தகவலுண்டு.

பூர்வகுடிகள் தம் பயன்பாடுகள்

பூர்வகுடிகள் இதனை தமது வாழ்தல் நிலவுகைக்கு அமைய இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் இதன் நன்கு முற்றிய காயானது பொருத்தமான முறையில் பதப்படுத்தப்பட்டு சமைத்து உண்ணப்படுகிறது. இதன் பழத்தினை நன்றாக வேகவைத்த பிறகு சாப்பிடப் பயன்படுத்துகின்றனர். இதனை பச்சையாகவும் சாப்பிடலாம். இதன் இலைகளைப் பொறுத்தமட்டில் அவற்றை அரிசி கழுவும் தண்ணீரில் இட்டு (இந்தத்தண்ணி பேச்சு வழக்கில் களணித்தண்ணி எனப்படும்) அவித்துண்பர். அதுபோல முற்றிய காரைக்காயை உப்பிட்டு அவித்துண்பர்.

காரை இலையுடன் பலவகையான இலைகளையிட்டு இலைக்கஞ்சி எனும் ஒருவகை உணவு காய்ச்சும் உணவுப்பழக்கமும், இவர்களிடம் இன்றும் மிகவும் பிரபல்யமான நடைமுறையாகக் காணப்படுகின்றது. அதாவது காரை இலை, முல்லை இலை, முருங்கை இலை, முசுட்டை இலை, கானாந்தி, பொன்னாங்கன்னி ஆகிய இலைகளை பொருத்தமான முறையில் தயாராக்கிக் கொண்டு, குறுநெல்லை (அரிசியின் உடைந்த துகள்கள்) எடுத்து தேங்காய்ப் பாலில் அவிப்பர். பின்னர் அதனுடன் உப்பிட்டு தயார்நிலையில் உள்ள இலைகளைச் சேர்த்து மறுமடியும் அவித்து தேவைக்கு ஏற்ப தேங்காய்ப் பாலை விட்டு இறக்கி எடுப்பர். இதனுடன் எதுவித இரசாயனக் கலப்பும் சேர்க்கப்படுவதில்லை. இதைப்போலவே காரை இலையுடன் ஏனைய இலைகளைச் சேர்த்து கறி(சொதி/ஆணம்) சமைக்கும் முறையும் உண்டு.

பிரண்டைக்கொடி (Cissus quadrangularis)

பிரண்டைக்கொடி

பொதுத்தன்மை


இதற்கு பிராணக்கொடி, வச்சிரவல்லி என வேறு பெயர்கள் உண்டு. இதில் ஓலைப்பிரண்டை, உண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. பொதுவாக, மனித நடமாட்டம் அற்றுக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் ஒருவகையான ஒவ்வாமையையும் ஏற்படுத்தக் கூடியது. இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத் தேவைக்காகப் பயன்படுத்தப் படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்ககூடியதாகவும், பயன்பாட்டில் உள்ளதாகவும் காணப்படுகிறது.

மருத்துவ நடவடிக்கை


அடிபட்ட வீக்கம், சுளுக்குப்பிடிப்பு போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. சம்பல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் சமையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும், ஞாபகசக்தியை பெருக்கும், மூளை நரம்புகளை பலப்படுத்தும், எலும்புகளுக்கு சக்தி தரும், ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும் மற்றும் உடல் வனப்பும் பெறும்.

எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும். பிரண்டையானது ஒத்தன்மையற்ற நோய்களுக்கான மருத்துவக் குணங்களைக் கொண்டு காணப்படுகின்றன. உதாரணமாக மூலநோய், வாய்ப்புண், வயிற்றுப்புண், தொய்வு (ஆஸ்துமாவின் ஒரு வகை) முதலான நோய்களைத் தீர்க்கவல்லதாகவும் காணப்படுகின்றது.

மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும். மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர். அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.


எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இளம் தண்டுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து, நன்றாகக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப் போடுவதன் (பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவது) மூலம் பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.

பூர்வகுடிகளின் பயன்பாடுகள்

பூர்வகுடிகளிடையே இதன் பயன்பாடு மேற்சொன்னவற்றைப் போலக் காணப்பட்டாலும் அதைவிடவும் மிக அரிதான சுவாரஸ்யமான நடவடிக்கையும் காணப்படுகின்றது. அதாவது இன்றும் பூர்வகுடிகளின் (மட்டக்களப்பு களுவன்கேணி) இறப்புச் சடங்குகளில் இதற்கு முக்கிய பங்குண்டு. எவ்வாறெனில் இறந்த உடலை இடுகாட்டில் புதைத்து விட்ட பின்னர் அதன் மேல் மண்ணை இட்டு நிரப்புவர். பின்பு பிரண்டைக் கொடியை ஆறு துண்டுகளாக எடுத்து தலைப்பக்கம் மூன்று, மார்பு பக்கம் இரண்டு, பாதங்களில் ஒன்று வீதம் வைப்பர். இதற்கான காரணங்கள் என்னவென முதுசங்களிடம் கேட்க மிக வியப்பாக இருந்தது. அதாவது பிரண்டைக் கொடியானது கண்ணுக்குத்தெரியாத கிருமிகளை அழிக்கவல்லதாம். இவ்வாறு செய்யும் போது இறந்த உடலில் இருந்து ஏனையவர்களில் பரவியிருக்கும் கிருமிகள் பிரண்டைக் கொடியால் ஈர்க்கப்பட்டு விடும். இதானல் குறித்த நபருக்கு கிருமித்தொற்றானது வீடு செல்லும் போது குறைவடைந்து விடும் என்பதனாலே இவ்வாறு வைக்கப்படுவதாகக் கூறினார்.

பிரண்டக் கொடியை இவ்வாறு வைப்பதற்கு மேற்கூறப்பட்டதற்கு முற்றிலும் மாறுபட்ட காரணமும் சொல்லப்பட்டது. அதாவது முன்னைய காலங்களில் இடுகாடுகள் மனித நடமாற்றம் அற்ற ஈறல் காடுகளாகவே காணப்பட்டதனால் அங்கு புதைக்கப்படுகின்ற சடலங்களினை நாய், நரி போன்ற மிருகங்கள் தோண்டி எடுத்து அத்துறுமங்கை ஆக்கிவிட்டுச் செல்வதானாலேயே சவப்புதையலின் மீது இவ்வாறு பிரண்டக்கொடி வைக்கப் படுவதாகவும் கூறினார். (இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் ஒருவகையான ஒவ்வாமையையும் ஏற்படுத்தக் கூடியது). இச்செயற்பாடானது பூர்வகுடிகளிடையே இன்றுவரை பின்பற்றப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதே.

மோதிரக்கன்னி (Hugonia mystax)

மோதிரக்கன்னி

பொதுத்தன்மை


இது மோதிரக்கன்னி மற்றும் அகோரி என தமிழில் பொதுவாக வழங்கப்படுகிறது. அதே நேரம் மலையாளத்தில் கார்த்தொட்டி எனவும் அழைக்கப்படுவதாகத் தகவல். இது ஒரு முற்தாவரம் ஆகும். இதனது முற்கள் மோதிரத்தின் வடிவில் வளைந்து காணப்படுவதனால் மோதிரக்கன்னி என்னும் பெயர் வந்ததாகவும் கூறுவர். அதே நேரம் இதன் பழங்களையும் முற்களையும் சிறுவர்கள் ஒன்றிணைத்து மோதிரமாகச் கைவினை செய்து விளையாடுவதனாலும் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இப்பழங்களின் அதீத இனிப்பினால் இக்கொடியை அதிகளவான பறவைகள் ஆக்கிரமித்துக் கொள்வதாகவும் காணப்படுகிறது.

மருத்துவ நடவடிக்கை

இதன் பழங்களை உடல் எரிச்சல் மற்றும் சூடு ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தலாம். பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்புகளில் இதன் பழத்தினை பிழிந்து அதன் சாற்றினைப் பூசி வர பித்த வெடிப்புக்கள் தானாக மறைந்து விடும். இதன் பழங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாகவும் காணப்படும். இதன் இலை, பழம், பட்டை ஆகிய பகுதிகள் உணவு மற்றும் மருத்துவ நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரம் இதன் பட்டைகளை விசக்கடிகள் மற்றும் கட்டுகளுக்கு அரைத்துக் கட்டினால் குணமாகும். இதனுடைய வேர்களில் சற்றே இனிப்புத் தன்மை காணப்படுகிறது. இதனால் வேர்களை காய்ச்சிக் குடித்தால் உடலில் காணப்படும் கெட்ட நுண்ணுயிரிகள் அழிவடைந்துவிடும். இதன் பழம் சுவாசப்பிரச்சினைகளுக்கு மிகவும் சிறப்பான நிவாரணியாகவும் காணப்படுகிறது.

பூர்வகுடிகளின் பயன்பாடுகள்

பூர்வகுடிகளிடத்தே மோதிரக்கன்னியின் பயன்பாடானது இவ்வாறு காணப்பட்டது. இவர்கள் தமக்கு ஏற்படும் ஆறாத காயங்களுக்கு இதன் வேரைப் பயன்படுத்துகின்றனர். அதாவது இதன் கிழங்குப் பக்கமாக நிலத்துள் செல்லும் வேரினைப் பயன்படுத்துகின்றனர். இதன் வேரில் ஒருவகையான வளுத்தன்மை காணப்படும். அதைச் சுரண்டி எடுத்து குறித்த காயத்தில் வைத்து வர நாள்பட்ட காயங்களும் ஆறிவிடுகிறது.


இக்கொடியானது அவர்களின் வீட்டுத்தளபாடத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. அதாவது இதன் கொடியானது நல்ல கடினமான, இறுக்கமான கொடியாகும். எவ்வகையான பாரத்தையும் தாங்கவல்ல அதே நேரம் நன்கு வளையும் தன்மை கொண்டதாகவும் காணப்படும். இதனை பூர்வகுடிகள் தமது தளபாடத்தேவைக்காக அதிகம் பயன்படுத்தி உள்ளனர். இக்கொடியை வளைத்து இருக்கைகள், கோழிக்கூடுகள், கூடைகள் எனப்பல தளபாட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இதைப் போலவே பிரப்பைக் கொடியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாற்கொடி எனப்படும் ஒருவகைக் கொடியானது கயிறாகப் பயன்படுத்தப்படுகிறது. வெல்லங்கம்பு எனப்படும் ஒருவகைத் தாவரம் மாடுகள் மேய்க்க, வண்டில்களுக்குப் பயன்படும் கேட்டிக்கம்பாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தண்ணிக்கொடி


தண்ணிக்கொடி எனும் ஒருவகைத் தாவரமானது இவர்கள் வாழும் காடுகளில் அதிகம் காணப்படும். காட்டிலே தேனெடுக்கவோ, வேட்டைக்கோ அல்லது வேறு தேவைகளுக்கு செல்லும் போது தாகம் ஏற்பட்டால் இக்கொடியில் இருந்து தண்ணீரைப் பெற்றுக்கொள்கின்றனர். இதன் தண்டை பதம் பார்த்து ஒருபக்கம் கீறி விட ஒரு லீட்டருக்கு மேல் தண்ணீர் சீறிக்கொண்டிருக்கும். அதிகளவு தாகம் கொண்ட இருவருக்கு தாகம் தீர தாராளமாகப் போதும்.


மேற்கண்டவாறு அதிகளவான இலைகள், கீரைகள் என்பன பூர்வகுடிகள் வாழ்க்கையில் உணவுத்தேவை உட்பட பல தேவகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் மான்பாஞ்சான்/ஊண இலை, காட்டு எலுமிச்சை, கானாந்தி, புளிமதுரை, ஓரிதழ் தாமரை, அறுகம்புல் (பாலருகு, ஆனையறுகு, முசுமுசுட்டை, குறிஞ்சா (சிறு குறிஞ்சா, பாற்குறிஞ்சா -கசப்பற்றது, காட்டுக்குறிஞ்சா), பாலிலைக்கறி, கொவ்வை இலை, காட்டு மல்லிகை, கல்காரை(வெற்றிலைக்கு பதிலாக எடுத்தல்), பொரி கீரை, குமிட்டி, பசளி, நத்தை சுரி, எலிச்சொவி என ஏகப்பட்டவைகள் இன்றும் பூர்வகுடிகள் தம் உணவுப் பாத்திரங்களை அலங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. (ஒரு சிலதைத் தவிர)

அடுத்து நாம் பழங்களையும் பார்த்துவிட வேண்டிய தேவையுண்டு. ஏனென்றால் இவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் பழங்கள் இன்றியமையாதவைகளாகும். அவ்வகையில் கட்டாயம் கூறிச்செல்ல வேண்டிய, அதே சமயம் அழிவடைந்து வருகின்ற சில வகைப் பழங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

லாக்கடப்பழம்

பேச்சு வழக்கில் அழைக்கப்படும் பெயராகும். இது ஒரே தண்டில் வளர்ந்து காணப்படும் ஒருவகையான பழமரமாகும். இதன் பழங்களுக்கு இடையில் பிசின் போன்ற கட்டியான திரவ அமைப்பு காணப்படும். அது லாக்கடப்பிசின் என அழைக்கப்படும். இம்மரத்தின் பழம், பிசின் என்பன அனைத்தும் பயன்பாட்டுக்குரியன. பழத்தினை உணவாக எடுத்துக்கொள்வர். இதன் பிசினானது ஒட்டுவதற்காகப் பயன்படும் அதே வேளை பூச்சி கொள்ளிப் புகையாகவும், பீடை நாசியியாகவும் பயன் படுத்தப்படும். அதாவது வேட வழிபாட்டுச் சடங்குகளின் போது இன்றைய சாம்பிராணிக்குப் பதிலாக இதன் புகையே பாவிக்கப்படும். இது ஒருவகையான வாசனை கொண்ட புகையாக வெளிப்படும். இன்றைய காலங்களில் வீடுகளில் நுளம்புத் தொல்லைக்கு புகை மூட்டுவதற்காக லாக்கடப் பிசின் பயன்படுத்தப்படுகின்றது.

நுரைப்பழம் (Longan; Dimocarpus longan)

இது மிகவும் அரிதாகக் கிடைக்கக்கூடிய பழமாகும். காரணம் இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை காய்க்கும் தாவரமாகும். இதன் பழங்கள் தேனையொத்த இனிப்புச் சுவையை உடையன. காடுகளில் இதன் மரமானது குளவி, தேனீக்களின் ஆக்கிரமிப்பினால் வெட்டுப்பட்டே காணப்படும். அவ்வளவுக்கு இனிப்பைக் கொண்ட பழமாக இது காணப்படுகின்றது. இது போலவே கடுபுளிய மரமானது 06 ஆறு வருடங்களுக்கு ஒரு முறை காய்க்கும் இனிப்புடன் புளிப்புச் சுவை கொண்ட பழமாகும். இதே தன்மையைக் கொண்டதாகவே பிரப்பம் பழமும் காணப்படுகின்றது. இதுவும் வித்தியாசமான புளிப்புச் சுவை கொண்ட பழமாகும். நன்கு பழுத்த பிரப்பம் பழத்தினை பதப்படுத்தி சமையல் கறிகளுக்கு புளிக்காகச் சேர்க்கும் மரபு இற்றை வரைக்கும் பூர்வகுடிகளிடம் உண்டு.

தண்ணிச்சோத்துப் பழம்

இது ஒருவகையான கொடித்தாவரமாகக் காணப்படுகிறது. கொவ்வை கொடியைப் போல காணப்படும். கொடிகளின் இடையே முதிர்ந்த திராட்சை போன்ற அளவில் பழம் காணப்படும். இதன் இலையானது மூன்று இதழாகப் பிரிந்த ஓரிலையாகக் காணப்படும். பழத்தின் உள்ளே சோற்றை போல விதைகள் திரவத்துடன் இருப்பதனாலேயே இக்காரணப்பெயர் வந்திருக்கக்கூடும். கொடி, இலை, பழத்தின் உள்ளமைப்பு, சுவை என்பன இன்று பெருவாரியாகக் காணப்படுகின்ற கொடித்தோடையை ஒத்ததாகவே காணப்படும். பல நேரங்களில் இதுதான் காலை உணவு. இதைப் போலவே கடலாஞ்சிப் பழம் (Peanut fruit) எனும் ஒருவகைப் பழமும் உண்டு. இது ஒரேஞ் பழத்தை ஒத்ததாகக் காணப்படும்.

இவற்றை விட வீரப்பழம், வில்வம் பழம், தெகிழம் பழம், சொறவணப் பழம், கச்சக்கொடிப் பழம், துவரம் பழம், கிளாத்திப் பழம், மீனாட்சிப் பழம், பாலைப் பழம், கறுக்காப் பழம், விளாம் பழம், முந்திரிப் பழம், நாவற்பழம், ஈச்சம் பழம், பனம் பழம், கிண்ணம் பழம், மருங்கை பழம், சூரப்பழம், நாயுருவிப் பழம், மயிர்க்கொட்டிப் பழம், புளியம் பழம், பலாப்பழம், பனிச்சம் பழம், வம்மிப்பழம், ஆலம் பழம், கத்தாப் பழம் முதலான ஏகப்பட்ட பழங்களும் இவர்களின் உணவுகளாக காணப்படுகின்றன. இவற்றை போலவே பலவகையான கிழங்கு வகைகளும் பூர்வகுடிகள் தம் உணவுச்சங்கிலியில் உண்டு.

தொடரும்.

நன்றி- (https://www.vikatan.com/health/healthy/92641-health-benefits-of-pirandai)


ஒலிவடிவில் கேட்க

10868 பார்வைகள்

About the Author

கமலநாதன் பத்திநாதன்

கமலநாதன் பத்திநாதன் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நாடகமும் அரங்கியலும் கற்கைநெறியில் இளமானி சிறப்புப்பட்டம் பெற்றவர். கிழக்கிலங்கையின் பூர்வ குடிகளான வேடர் சமூகத்தைச் சேர்ந்த இவர் இலங்கையில் தமிழ் பேசும் வேட்டுவ மக்கள் சார்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார். அவ்வகையில் ‘வேடர் மானிடவியல்’ எனும் விடயத்தின் கீழ் பல ஆய்வுக் கட்டுரைகளை தொடரச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

மேலும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நாளிதழ்கள், சஞ்சிகைகளில் வேடர் சமூகத்தின் சமயம், வரலாறு, தமிழ் இலக்கியம், பண்பாட்டு ஆய்வு சார்ந்த கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள பத்திநாதன் தற்பொழுது இலங்கை நூலக நிறுவனத்தில் கள ஆய்வாளராகக் கடமையாற்றுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)