பெண்களும் மரபுரிமைகளும்: எழுதப்படாத பக்கங்கள்
Arts
7 நிமிட வாசிப்பு

பெண்களும் மரபுரிமைகளும்: எழுதப்படாத பக்கங்கள்

May 21, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

பால்நிலை அசமந்தம், ஆண்முதன்மை ஆகிய சமூக பண்பாட்டு நிலவரங்கள் பலவேளைகளில் சமூக இயக்கத்தில் பெண்களது செயற்பாடுகள், பங்களிப்புக்கள், தனித்துவங்களை அடையாளப்படுத்தாமல் விட்டுவிடுகிறது. இதனால், பெண்கள் உட்பட்ட சிறுபான்மைக் குழுக்களது தனியடையாளங்கள், வரலாற்று வகிபாகங்கள் என்பன சமூக பண்பாட்டு வரலாறுகளில் தொடர்ச்சியாக விடுபட்ட – எழுதப்படாத பக்கங்களாகவே உள்ளன.

இந்த நிலைமையானது மரபுரிமைகள் பற்றிய எழுத்துக்களில் மேலோங்கியுள்ள மேட்டுக்குடிமைத் (elitism)  தன்மையை  ஒத்த இன்னொரு பிரச்சினைக்குரிய அம்சமாகும். அவ்வகையில் பால்நிலைப்பட்ட அசமந்தமானது மரபுரிமை எழுத்துக்கள் மற்றும் செயற்பாடுகளுள்  மறைந்து காணப்படுகிற  விவாதத்திற்குரிய மற்றொரு விடயமாகும். இந்தவகையில் பெண்கள் உட்பட்ட சிறுபான்மையினரை வரலாற்றிற் கண்டுகொள்ளாமல் விடுதல் என்பது சாதாரணமான ஒன்றாக நியமநிலைப்பட்ட (normalization), இயல்பானதொரு போக்காக சமூக பண்பாட்டுக் களத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இது பண்பாட்டியக்கத்தின் கண்ணுக்கு புலப்படாத மேலாதிக்கம் அல்லது பண்பாட்டு அரசியலின் விளைவுகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.

இந்தவகையான மரபுரிமை பற்றிய வாசிப்புக்களது உள்ளடக்கப் போதாமை பற்றிய விமர்சனமானது, மரபுரிமை பற்றிய வாதவிவாதக் களத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கோருவது அல்லது பெற்றுக் கொடுப்பது அல்ல. பதிலாக அவர்களது சமூக வகிபாகத்தின் பிரதானமான அம்சங்கள், பங்களிப்புக்கள் என்பவற்றை முறையாகப் பிரதிநிதித்துவம் செய்ய முற்படுதலாகும் அல்லது ஆண்மேலாதிக்க கருத்தியலுக்குள் மறைந்துவிடுகிற அல்லது மறைக்கப்பட்டிருக்கின்ற பெண்களை அதிலிருந்து  வெளி எடுத்தல் சம்மந்தப்பட்டதாகும். இது எமது மரபுரிமை பற்றிய பார்வையை தொடர்ச்சியாக மேலும் ஜனநாயகப்படுத்த உதவும். இது இன்னொருவகையில் நியமமாக்கலினுள் சிக்குண்டுள்ள எமது சமூக பண்பாட்டுப் பார்வைகளை விரிவாக்கவும்,  இப்போதுள்ள குறுகிய எல்லைகளைக் கடந்து செல்லவும் உதவும்.

பெண்களது கலை வெளிப்பாடுகள்

குறிப்பாக, பண்பாட்டு மரபுரிமைகளது (Cultural heritage) பேணுகைகள் – அதனைச் சமூக பண்பாட்டு ரீதியாகக் கைமாற்றஞ் செய்தல் என்பனவற்றில் பெண்களது சமூக வகிபாகம் முதன்மையானது. இந்தக் கையளிப்பு முறைகள் அதற்கான பால்நிலை சார்ந்த பரிமாணங்களை உடையவையாகினும் அப்படிப்பட்ட உள்ளார்ந்த விடயங்கள் தொடர்பான எமது பார்வைகள் – ஆய்வுமுறைகள் என்பன குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவிற்கு விரிவாக்கம் பெறவில்லை. பெண்களது சமூகப் பணிகள், பங்குகள் பற்றியே இன்னும் எம்மிடம் சரியான மதிப்பீடுகளோ, பார்வைகளோ இல்லாதபோது  அதற்கடுத்த கட்டங்கள் பற்றிச் சிந்திக்க முயலுதல் சற்று அதிகமான எதிர்பார்ப்பாகக் கூட இருக்கலாம். 

பண்பாட்டு மரபுரிமைகளிலும், குறிப்பாக ‘தொட்டுணர முடியாத பண்பாட்டு மரபுரிமைக்’ (intangible cultural heritage) களத்தில் உலகளாவிய ரீதியில் பெண்களது வகிபாகம் முக்கியமானதாக எடுத்துக்காட்டப்படுகிறது. 1999 – 2001 காலப்பகுதியில், இது தொடர்பாக யுனெஸ்கோ அதிக கவனஞ் செலுத்தத் தொடங்கி இருந்தது. ஆனாலும், கடந்த இரு தசாப்தங்கள் கழிந்தும் இச்செயற்பாட்டிலோ அல்லது ஒரு கோட்பாடாக அதனைக் கட்டி எழுப்புவதிலோ உலகம் கணிசமான தூரம் சென்றடைந்ததாகக் கூறுவதற்கில்லை. அதேசமயம் தமிழ் பண்பாட்டு மரபுரிமை மற்றும் பெண்ணிய கருத்தாடற் செயற்பாட்டுக் களத்திலும் இது தொடர்பான முன்னசைவுகள் எதுவும் குறிப்பிடும் படியாக நடந்தேறவில்லை. 

பண்பாட்டு உருவாக்கத்தில் வீடு – குடும்பம் என்பன அடிப்படை அலகுகளாகும் என்பதுடன் இது பாரம்பரியமாகப் பெண்களுடன்  நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட ஒன்றாகவும் காணப்படுகிறது. அவ்வகையில் பெண்கள் பண்பாட்டினது சமூகவயமாக்கலை கைமாற்றும், மீள் உருவாக்கும், மாற்றியமைக்கும் செயற்பாட்டினைப் புரிபவர்களாக பிரதானமாக எடுத்து நோக்கப்படுகின்றனர். அவ்வகையில் பண்பாட்டின் பன்மைத்துவம், பண்பாட்டு வேறுபாடுகள் மற்றும் சிறப்பாக உள்ளுர் பண்பாட்டைப் பேணுதல் என்பனவற்றில் பெண்களது சமூக பண்பாட்டு வகிபாகம் முக்கியத்துவமுடைய ஒன்றென்று யுனெஸ்கோவின் அறிக்கை ஒன்று எடுத்துக்காட்டுகிறது. 

கைவினைப் பாரம்பரியம்

அவ்வகையில், பண்பாட்டுக் குழுமம் ஒன்றின்  குழும அடையாளத்தைக் காவுவதில் பெண்கள் முக்கிய இடத்தில் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. குறிப்பாக உடை, உணவு, மொழி, சடங்குகள்- விழாக்கள், வாய்மொழி மற்றும் ஆற்றுகை மரபுகள் என்பன பெண்களது பண்பாட்டுச் செயற்பாடுகளோடு பிரதானமாகக் சமூகத்துள் கடத்தப்படுவதாக இவர்களால் எடுத்துக் காட்டப்படுகிறது. அதாவது, பண்பாட்டின் நாளாந்ததத்துவம் (everyday) என்பது பெண்களோடு அதிகபட்சம் பின்னிப்பிணைந்ததாக எடுத்துக்காட்டப்படுகிறது. 

அதேசமயம், பெண்களது மேற்படி பண்பாட்டுச் செயற்பாடுகள் தொடர்பான மேற்படி முன்வைப்புக்களை விமர்சனபூர்வமாக அணுகவேண்டியவர்களாக நாம் உள்ளோம். ஏனெனில், இவை ஒருவகையில் பால்நிலையின் வகைமாதிரித் (gender Stereotype) தன்மையை அழுத்தவும், அதன் அசமத்துவங்களை முன்னெடுப்பதற்கான களமாகவும் தொழிற்படாதிருக்க அவற்றைப் பற்றிய பகுப்பாய்வுடன் கூடிய கூர்மையான பார்வையொன்று எமக்குத் தேவைப்படுகிறது.

அதாவது, நடைமுறை யதார்த்தத்தின் பால்நிலை அரசியல் பற்றிய விரிவான விவாதங்களோடு கூடிய, அதேநேரம் பெண்களது மரபுரிமைகளுடான சிறப்புத் தொடர்பினையும் இணைத்து வாசிக்கத் தக்க ஒரு பார்வையை இது தொடர்பிற் கட்டி எழுப்ப வேண்டும். இல்லாவிடில், பால்நிலை அசமத்துவத்தை மரபுரிமைக் கருத்தாடலுக்குள் கொண்டுவருதல் எனும் பெயரில் அதனை மீளவும் அதன் பாரம்பரியமான மேலாதிக்கம்,  வன்முறை ஆகியவற்றோடு முன்னிலைப்படுத்தி விட்டவராவோம். ஆகவே இந்த விடயம் தொடர்பில் இரட்டை எச்சரிக்கை எமக்குத் தேவைப்படுகிறது.

கைவினைப் பாரம்பரியம்

குறிப்பாக அரும்பொருளகங்கள்,  ஆவணக்காப்பகங்கள், பண்பாட்டு மையங்கள், கற்பித்தல் மற்றும் ஆய்வுப் புலங்கள் என்பன பண்பாட்டு மரபுகள் என்ற பெயரில், பழமைவாதத்தைப் பேணுகை, கைமாற்றுகை சம்மந்தப்பட்ட செயற்பாடுகளது பிரதான பண்பாட்டு முகவர்களாகச் (cultural agents) செயற்படுகின்றனர்.. இதேசமயம், இவை யாவுமே நடைமுறையில் ஆண் மேலாதிக்கக் கருத்தியலோடு  அதிகபட்சம் இணைப்புற்றவையாகவே உள்ளன. இதனால்,  பெண்களது மரபுரிமைச் செயற்பாட்டினை அங்கீகரிக்கவும், பதிவு செய்யும்போதும் ஏற்படக் கூடிய கருத்துநிலை சார்ந்த தடைகளைத் தாண்டத்தக்க பரந்த வேலைத்திட்டம் எம்மிடம் இல்லாதபோது, நடைமுறையில் இத் திட்டம் அல்லது மரபுரிமைக் களத்தை ஜனநாயமாக்கல் நடைபெறாமற் போய் விடும். அது வெறுமனே பால்நிலை சம்மந்தப்பட்ட மோதலாகக் குறிக்கப்பட்டுவிடும். ஆகவே அரசுகள் இது தொடர்பில் கொள்கை (Policy) ரீதியான முடிவுகள் எடுக்க வேண்டும். அத்துடன் அது தொடர்பிலான பரந்துபட்டதும், இலக்குக் குழுக்களை நோக்கிய சிறப்புச் செயற்பாடுகளும் தேவைப்படுகிறது.

அதுதான் பெண்களது பௌதீக மற்றும் கைவினைப் பாரம்பரியம் சார்ந்த மரபுரிமைப் பங்களிப்புக்களை, வாய்மொழி மரபுகள் – இலக்கியம், கலை, சமயரீதியான அவர்களது வெளிப்பாடுகள் உட்பட்ட அனைத்துச் செயற்பாடுகளையும் கவனப்படுத்தும் ஒன்றாக மாற்றும். அத்துடன் வரலாற்றில் காலந்தோறும் நடைபெற்ற பண்பாட்டு மாற்றங்களை, புத்தாக்கப் பயணங்களை ஆவணமாக்கும். அதே சமயம் பெண்களது சமூக இருக்கை சார்ந்த வேறுபாடுகள் வழிப்பட்ட வெளிப்பாட்டு மாற்றங்களை இதன்போது கவனத்திற் கொள்ள வேண்டும், இல்லை என்றால் பெண்கள் என்ற பெருங்குடையின் கீழ் அனைத்தையும் ஒற்றையாக்கம் செய்வதற்கான வாய்ப்போ அல்லது மேட்டுக்குடிப் பெண்கள் முன்னுரிமை பெறுதலோ நடந்துவிடலாம். ஆகவே எமது ஆய்வு அறிவுகோல் மிகப்பரந்துபட்ட சட்டகத்தை நோக்கியதாக எப்போதும் இருக்கவேண்டும். அது பண்பாட்டின் அனைத்து அடுக்களையும் ஊடறுக்கும் ஒன்றாகவும் இருக்க வேண்டும்.

இந்தப் பின்னணியில் தமிழ் மரபுரிமைப் புலத்தில் பெண்களது மரபுரிமைகள், மரபுரிமைப் பயில்வில் அவர்களது பங்களிப்பு என்பனவற்றை ஒட்டிய விவாதங்களும், செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும். அல்லாத பட்சத்தில் ஒரு புறம் எமது மரபுரிமைக் களத்தின் உள்ளீர்க்கப்பட வேண்டிய கூறுகளை மெல்ல மெல்ல காலத்தில் அழியவிட்டுவிடுவோம். அது எமது மரபுரிமையின் பரந்துபட்ட செழுமை மிக்க கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர் காலத்தையும் வறியதாக்கி விடும். அத்துடன், அதற்கும் மேலாக மரபுரிமை பற்றிய கருத்தாடலை அதிகார ஆதிக்கத்தின் பலவேறு குரல்களில் ஒன்றாக மீள மீள நிலைநிறுத்தும் கைங்கரியத்தை செய்தவராவோம்.

அதேநேரம் இச்செயற்பாடுகள் மிகவும் விரிவான தளத்தில் பெண்களை வலிமையாக்கும் செயற்பாடும், சமூக பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கான திறவுகோல்களுள் ஒன்றாக அமையும். அதுவே, ஒட்டுமொத்த அபிவிருத்திக்கான அடித்தளம் ஆகும். மரபுரிமைகளை உள்ளடக்கிய அபிவிருத்தியே மிகச் சரியாக உள்ளூரை பரந்துபட்ட தளத்தில் சமூக பொருளாதார பண்பாட்டு ரீதியாக மேம்பாட்டடைய வைக்கும் செயற்பாடாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6149 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)