2017இல் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்ற கலையார்வலர் குழுவொன்று தென்னிந்திய ‘பறை’ வாத்தியத்தை யாழ்ப்பாணத்திலும் இலங்கைத் தீவின் வேறு சில பிராந்தியங்களிலும் உள்ள ஆர்வலர்களுக்கு பயிற்றுவித்தது. இதற்காக தமிழகத்திலிருந்து ‘பறை’ வாசிக்கும் ஒரு குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். மேற்படி ‘பறை’ வாத்தியக் கருவி இலங்கையில் வாசிக்கப்படும் பறை மேள வடிவத்திலிருந்து மாறுபட்ட ஒன்று. இந்தக் கருவி இலங்கையில் மலையக மக்களிடம் பாவனையில் உள்ளது. அங்கு அது ‘தப்பு வாத்தியம்’ என்கின்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. அதனை ஒட்டிய நடனம்’ தப்பாட்டம்’ என அழைக்கப்படுகிறது. அதேவேளை மேற்படி வாத்தியத்தை தமிழகத்திலும் ‘தப்பு’ என்ற பெயரில் அழைக்கும் வழக்கு இன்றும் உண்டு என தமிழகத்தைச் சேர்ந்த புலமையாளர் ஒருவர் இது குறித்த உரையாடல் ஒன்றில் என்னிடம் தெரிவித்தார். அதேநேரம் அதனை பறை எனவும் அழைப்பதுண்டெனவும், அண்மைக்காலத்தில் அதனைப் பறையென அழைக்கும் மரபு அதிகரித்து உள்ளது எனவும் இன்னொரு தமிழக நண்பர் கூறினார். இந்தப் பெயரிடல் விவகாரத்தை ஒருபுறம் வைத்துவிட்டு, ஈழப் பின்னணியில் ‘தமிழகப் பறையை’ (அல்லது தப்பு வாத்தியம் எனவும் அழைக்கப்படுவதை) எந்த விழிப்புமற்று ஈழத்தில் உள்வாங்குகையில் ஏற்படும் பண்பாட்டு நெருக்கடி பற்றியதே இக்கட்டுரை.
ஏனெனில் எங்களிடம் இருக்கும் பறை வடிவ ரீதியாகவும் பயில்வு ரீதியாகவும் வேறுபட்ட ஒரு வாத்தியக் கருவி மட்டுமின்றி, அதனை வாசிக்கும் முறைமைகளும் வேறுபட்டவை. பன்னெடுங் காலமாக அதனை வாசிக்கும் சமூகமும், குழுக்களும் எம்மிடையே காணப்படுகின்றன. எமது கோயிற் திருவிழாக்கள் முழுவதும் அது கோலோச்சிய காலம் ஒன்று இருந்தது. இன்றும் சந்நிதி முருகனுக்கு அதுதான் பூசை வாத்தியம்.
இந்தப் பின்னணியில் தப்பைப் பறையாக ஈழத்தில் அறிமுகம் செய்தல் ஊடாக உள்ளூரில் ஒரு வகையான குழப்பம் இதனை அறிந்தோர் மத்தியில் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி இது மறுவளமாக எமது ஈழப் பறையையும் அதன் பறையும் முறையையும், பறையறையும் சமூகத்தையும் ஓரங்கட்டி, விளிம்புநிலைப்படுத்தும் ஒரு பண்பாட்டு மேலாதிக்கத்தின் புதுவித வடிவமா? என்ற கேள்வியும் எழுகிறது. இக் கேள்விகள் எமது பண்பாட்டுக்கு புதியதாகவுள்ள ஒரு இசைக் கருவியைப் பழகக் கூடாது – பயிலக் கூடாது என்ற அடிப்படை கொண்டதல்ல. மாறாக எமது சமூகப் பண்பாட்டையும் – பயில்வுகளையும் புரிந்து கொண்டு அதனுள் நின்று நாம் தொழிற்படவேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டது மட்டுமே.
பறை வாத்தியம் என்பது சுமார் 2000ஆண்டு கால தொல்வரலாறுடைய பழம்பெரும் தமிழ் வாத்தியக் கருவிகளுள் ஒன்றாக இனங்காணப்படுகிறது. சங்க இலக்கியம் தொடக்கம் இது பற்றிய குறிப்புகள் பதிவில் உள்ளன. இத்தகைய நிலவரத்தில் ஒரு பண்டைய வாத்தியத்தின் பிராந்திய தனித்துவமுடைய வடிவத்தையும் ஆற்றுகையையும் இன்னுமது அங்கும் இங்குமாக ஈழத் தமிழ் பிராந்தியங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அதனை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடாது, இந்தப் பிராந்தியத்தோடு சம்பந்தமில்லாத தமிழகத்தில் பயில்வில் இருக்கும் ‘பறையை’ முன்னிலைப்படுத்தியமையானது. ஈழத்தமிழ் பண்பாடு பற்றிய ஆய்வாளர்கள் மத்தியில் பலகேள்விகளை உருவாக்கியுள்ளதை பல வேளைகளில் காண முடிந்தது. அது தப்பு வாத்தியமாக அறிமுகமானாலோ அல்லது தமிழகப் பறையாகவோ அறிமுகமாக்கப்பட்டிருந்தால் அது வேறுவிடயம். பதிலாக அதனை வெறுமனே ‘பறை’ எனும் போது அது எமது மலையகத் ‘தப்பினையும்’ ஏனைய பிராந்தியப் பறையையும் அடையாளச் சிக்கலுக்கு உள்ளாக்கி விடுகிறது. அதுமட்டுமின்றி அது தமிழின் பல்பண்பாட்டு நிலவரங்களின் மீது ஒருவகைத் தமிழக மேலாண்மையை உண்டாக்கும் விடயமாகவும் ஆகிவிடுகிறது. அத்துடன் இதனை எந்தவிதமான விழிப்புமற்று அதனை ஈழத்துள் கொண்டுவருபவர்கள் தம்மை அறியாமலே மேற்படி கண்ணுக்குப் புலனாகாத மேலாதிக்கத்தின் முகவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.
பண்டைய வரலாற்று தகவல்களின் அடியாகப் பார்க்கும்போது வடக்கிலும் கிழக்கிலுமாக பறை வாத்தியம் மிக முக்கியமான ஆற்றுகைக் கருவியாக பயில்விலிருந்துள்ளது. சடங்குகள், கூத்துகள், காவடியாட்டங்கள், பறைக் கச்சேரிகள் என அதன் பயில்களம் மிகப் பரந்ததாக இருந்துள்ளது. இன்று கூட அது முழுதாக அழிந்துவிட்டதாகக் கூறுவதற்கில்லை. ஆனால் காலனியத்தோடு வருகின்ற நவீனமும் அது உருவாக்கிய புதிய சமூக மத்தியதர வர்க்க அடையாளங்களும் – வர்க்க சாதிய அடையாள நெருக்கடிகளும், இதன் தொடர்ச்சியாக உருவாகிய சாதியப் போராட்டங்களும், சாதியப் போராட்டம் நடந்த முறைகளும், புதிய ஆகம மயமாக்கச் சைவ மேலாதிக்கமும் என அவை யாவும் சேர்ந்துருவாக்கிய சமூக வரலாற்று நிலவரங்களும் உண்டாக்கிய நெருக்குவாரங்களுள் சிக்கிய தன்னுடைய தமிழ்ப் பண்பாட்டின் பேரடையாளத்தை பெருமளவிற்கு இழந்த பலவற்றுள் பறையும் ஒன்றாகும். இன்றதன் பெருமை மிக்க கடந்த காலம் பலருக்குத் தெரியாது. அதனால் இன்றது வெறும் சாவீட்டுக்கான வாத்தியமாகவே அறியப்படும் அவலம் இளம் சமூகத்துள் ஏற்பட்டிருக்கிறது. நாளாந்த வாழ்க்கையிலும், கலகங்களிலும் கூட நடப்புப் பெருவழக்கின் பின்னால் தலைதெறிக்க ஓடும் இளம்தலைமுறை நின்று நிதானித்துத் தன் பண்டைய காலத்தை விசாரிப்பதில்லை.
சந்தேகமில்லாமல் சாதியோடு சேர்ந்திருக்கும் பறையின் அடையாளம் அதன் வீழ்ச்சியில் பெரிய பங்கையாற்றியுள்ளது. குறிப்பாக தமிழ் நிலமானியச் சமூகத்தின் சாதி அடுக்குமுறையில் கீழ்நிலையில் வைக்கப்பட்ட பறையர் சமூகம் தனது மேற்படி குடிமைசார் சமூகக் கட்டமைப்புக்கு எதிராகவும், சாதி அடையாளத்தை மறைப்பதற்காகவும், சமூக மேன்னிலையாக்கத்தை புரிந்து கொண்ட முறைமை காரணமாகவும் பறையை உடைத்தல் தொடக்கம் அதனை அடிக்காது கைவிடுதல் வரை சென்றது. சில பிரதேசங்களில் அது சாதியத்திற்கெதிரான ஒரு போராட்ட வடிவமாகவே முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலவர உருவாக்கத்திற்கு சாதிய ஏற்றத் தாழ்வுகள் மாத்திரமன்றி இடதுசாரிகள் சாதிப்போராட்டத்தை நடத்திய முறையும் ஒரு காரணமாகியுள்ளது என வாதிடமுடியும்.
அவர்கள் சாதியின் பெயரால் ஆன ஒடுக்குமுறை, தீண்டாமை என்பதற்கு எதிராக உருவாக்கிய போராட்டம் துரதிர்ஷ்டவசமாக வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்கள் தமது கடவுளர்கள் தொடக்கம் தமக்கேயான தனித்துவமான சடங்குகள் – விழாக்கள் – உணவுகள் – கலைகள் வரை கைவிட்டுச் செல்ல வழிவகுத்தன. இந்தப் போராட்டங்கள் பலவேளைகளில் ஒருவகையான வெள்ளாள மயமாக்கம் நோக்கியே அவர்களுக்கு கீழிருந்த சாதிகளை கொண்டு சென்றது. இது தொடர்பான பரந்துபட்ட சிந்தனையோ வாத விவாதங்களோ எம்மிடையே நடைபெறவில்லை. வேளாளர் அல்லாத சாதிகளினது பண்பாட்டுத் தனித்துவங்கள் – சிறப்புக்களை போற்றுதற்குரிய வேறுபாடுகளாய்க் காணாது அவற்றை ஒரு தாழ்வுச்சிக்கலுக்குரிய விடயமாக நாம் மாற்றியுள்ளோம் என்பது பண்பாட்டு ரீதியாக ஒரு வேறுபாடுகளின் செழுமை மிகுந்த சமூகத்தை உருவாக்காது அதனை ஒற்றைப் படையாக்கம் செய்யவே அதிகம் உதவியுள்ளது.
இது சமூக வேறுபாடுகளையும் தனித்துவங்களையும் சமனாக ஏற்றுக்கொள்ளுதல் என்பதற்குப் பதிலாக அவற்றை மூடிமறைத்தல், அழித்தல் ஊடாக மேன்நிலையாக்கம் அடையலாம் என்ற வெறும் கற்பனை சார்ந்த முடிவுகளை நோக்கி ஒடுக்கப்பட்ட சமூகங்களை தள்ளியுள்ளது. இத்தகைய மேலோட்டமான சாதி சார்ந்த சமத்துவப் போராட்டங்களை ஒப்பீட்டளவில் இந்தியர்கள் நடத்தவில்லை. அவர்கள் அதற்குப் பதிலாக தம்முடைய தனித்துவங்களையும் அடையாளங்களையும் கொண்டாடிய படியே நாங்கள் மற்றவர்களில் இருந்து கீழானவர்கள் அல்லர் என்பதை முன்னிறுத்த முற்பட்டனர். இதனால் அவர்களது கடவுள்களும் வழிபாடுகளும் கலைகளும் அவர்களால் பெருமளவு காக்கப்பட்டன – கொண்டாடப்பட்டன. ஆனால் மறுவளமாக எங்களிடம் உருவாகிய முற்போக்கு எண்ணங்கொண்டோர் இது தொடர்பில் ஆழமாகச் சிந்திக்காது விட்டுவிட்டார்கள் எனவே தோன்றுகிறது. அவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தாக்கங்களால் கவரப்பட்ட உள்ளூர்சாதிகள் அவர்களது அடையாளங்களும் தனிமரபுகளும் இல்லாதொழிக்கப்படுகின்ற ஒரு வரலாற்று நிலவரம் உருவாக தாமே கணிசமானளவுக்கு காரணமாகப் போயினர். இன்னொரு வகையில் அது வேளாளர் உள்ளிட்ட ஆதிக்கச் சக்திகளினுடைய அடையாளக் குலைப்பின் அனைத்து பொறிமுறைகளுக்கும் வாய்ப்பாகவும் இருந்தது. ஏனெனில் மறைமுகமான பண்பாட்டளிப்பை அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மீது அவர்கள் வெற்றிகரமாக நடத்தினர் எனவும் வாதிடலாம்.
இதேநேரம் புலம்பெயர்தல், கல்வி, உத்தியோகம் காரணமான பொருளாதார – சமூக நிலை மாற்றங்கள் ஆகியவற்றின் ஊடாக வருகின்ற புதிய வர்க்க அடையாளம் முதலியனவும் இன்னொரு தளத்தில் அவற்றின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும் காரணிகளாகத் தொழிற்படுகின்றன. போர், வடக்கிலும் கிழக்கிலும் இவை மேலும் சிதைவடையக் காரணமாகியுள்ளது.
இத்தகைய நிலவரங்களுக்கு மத்தியிலிருந்து பறை வாத்தியத்தையும் அதன் பலதரப்பட்ட பயில்வு முறைகளையும் அதற்குரிய கௌரவத்துடன் மீட்டெடுக்கவும் கொண்டாடவும் வேண்டிய தேவை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் காணப்படுகிறது. அதுதான் அதன் பல்வகைத் தன்மையையும் பண்பாட்டு ஜனநாயகத்தையும் அதன் தொன்மை வரலாற்று அடையாளங்களையும் நிலைநிறுத்துதற்கான அடிப்படையாக இருக்கும்.
ஒருகால சைவக்கோயில்கள் பறை மேளங்களாலான பெரிய கச்சேரிகளை தவில் கச்சேரிகள் போலவே நடத்தியதை மூத்தவர்கள் பலர் பதிவுசெய்திருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு அம்மன் ஆலயத்தில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு நிகழும் பலமணிநேர பறைக்கச்சேரி பற்றி மறைந்த நாடகக்காரரும் கல்விப் பணிப்பாளருமான நா.சுந்தரலிங்கம் சொல்ல இப்பத்தியாளர் கேட்டிருக்கிறார். இதைப்போலவே கிழக்கிலும், வன்னியிலும் பறை மேளக்கூத்துக்கள் காணப்பட்டன – காணப்படுகின்றன. நீர்வேலியில் வசந்தன் கூத்து பறைக்கு ஆடப்படுகிறது. இன்னும் காவடிகளுக்கும் வெவ்வேறு தெய்வங்களுக்கு வெவ்வேறு தாளநடைகளில் உருவேற்றும் பறை ஒலிகள் என மிகவும் பன்மைப்பாட்டுடன் காணப்பட்ட ஒரு செழுமையான வாத்தியக்கருவி துரதிர்ஷ்டவசமாக இந்த தலைமுறையினருக்கு மரண வீட்டு வாத்தியமாக மட்டுமே சுருங்கிப்போய் இருக்கின்றது. இந்தச் சுருக்கம் அந்தக் கருவியை பல்விதமாக வித்துவத் தன்மையுடன் பிரயோகிக்கத்தக்க பறை அறைவோரையும் இல்லாதாக்கி வருகிறது. இந்தத் தலைமுறையில் இப்பறை வாசிக்கும் பெரும்பாலானோருக்கு இந்த வாத்தியத்தின் பல்வகை தன்மைகளையும் ஆற்ற தெரியாதிருக்கின்றது.
குறிப்பாக பறையுடன் சேர்த்து நாதஸ்வரம் போல் வாசிக்கப்படும் சிறு கருவியான ‘சொர்ணாலி’ யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதாகவே இல்லாதுபோய்விட்டது. யாழ்ப்பாணத்தில் சொர்ணாலியை பறையுடன் சேர்த்து வாசித்தமைக்கான சாட்சியமாக இன்று எம்மிடையே இருப்பது மறைந்த கொழும்புத்துறை ஓவியர் மு.கனகசபையினது ஓவியம் மட்டுமே. மட்டக்களப்பில் அதனை வாசிக்கத் தக்கோர் விரல் விட்டு எண்ணுமளவுக்கு எண்ணிக்கையில் குறைந்துவிட்டனர். எனினும், சில கண்ணகை அம்மன்கோயிற் சடங்குகளில் இன்றும் சொர்ணாலியைக் காணமுடிகிறது. ஒரு வகையான மந்திரச் செழுமையுடைய இந்த வாத்தியத்தைத்தான் ரூவான்வெலிசாய முதலிய பௌத்தகோயில்களின் சடங்கு நேரத்தில் கேட்கின்றோம். அவர்கள் மீட்டனர் – ஆனால் நாங்கள் தொலைய விட்டபடி உள்ளோம்.
இந்த நிலையில் மட்டக்களப்பில் சில அரங்கக் குழுக்களும், வன்னியில் சில ஆர்வலர்களும் இதனை மறுபடி மீட்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் தமது கட்புல மற்றும் சினிமாக் காட்சிகளில் பறையை மங்களவாத்தியமாக பயன்படுத்தும் முன்னோடிச் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் இத்தகைய மீட்பு முயற்சிகள் அவசரமானவையும் அத்தியாவசியமானவையுமாகும். ஏனெனில் அதன் பல்வகைகளைத் தெரிந்த மூத்த தலைமுறை தமது வாழ்க்கையின் அந்திம காலத்தில் இருக்கின்றது. அவர்கள் பூமியை விட்டுப் போகும்போது இந்த கலைவடிவங்களும் அவர்களோடு போய்விடும். ஆகவே இதை இளைய தலைமுறையினருக்குத் தருவதற்கான செயற்றிட்டங்கள் தேவைப்படுகின்றன. அதேநேரம் அதன் சமூக மற்றும் உலகளாவிய மதிப்பு இந்தத் தலைமுறையினருக்கு அதனுடைய தர்க்கங்களோடும், யதார்த்தங்களோடும் புரியவைக்கப்பட வேண்டும். அவர்களிடம் அதை கைமாற்றுவதன் ஊடாகவே இந்த அழிவின் விளிம்பில் இருக்கும் கலைவடிவத்தின் பன்மைப்பாங்கை காக்கமுடியும். அதேசமயம் அவற்றைப் பதிவுசெய்ய, எழுத்துப் பிரதிகளைப்- ஏடுகளைப்- படியெடுக்க, அச்சிட சமூக அமைப்புக்களும், பிரதேச சபைகளும் முன்வர வேண்டும். இதை ஆடிச் சென்றுவிட்ட பல தலைமுறை கலைஞர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். இதனூடாக ஒரு பிராந்திய அடையாளமுடைய கலைவடிவத்தை உலக ஆற்றுகை வரலாற்றின் பகுதியாக்கலாம்.
இளைய தலைமுறையினரிடம் வேண்டப்படுவது ஆழமான ஆய்வு மற்றும் சமூகப் பார்வையுடன் கூடிய இந்தப் பிராந்தியத்திற்கேயான தனித்துவமான அழிந்துகொண்டிருக்கும் ஒரு பண்டைய மரபைக் காத்தலுக்கான செயற்றிட்டங்களும் அவற்றை தமிழ் ஆற்றுகையின் பெருமரபில் ஒன்றாக நிலைநிறுத்தலுமாகும்.
தொடரும்.