பனையே எங்கள் வாழ்வியலின் ஆதாரம்
Arts
7 நிமிட வாசிப்பு

பனையே எங்கள் வாழ்வியலின் ஆதாரம்

July 20, 2022 | Ezhuna

பனை ஒரு காலத்திலே எங்கள் வாழ்வியலுடன் ஒன்றித்துப் போயிருந்தது. இலங்கை தேசம் பல்லினப் பனை மரங்களின் இருப்பிடமாக, வாழிடமாகத் திகழ்ந்திருந்ததன் சான்றுகளாக காலனித்துவ கால நூல்களே இன்று எம் மத்தியில் எஞ்சியிருக்கின்றன. பல பனை மர இனங்கள் இன்று அழிந்து போய்விட்டன. சில பேராதனைப் பூங்காவில் மாத்திரமே காணப்படுகின்றன. நாம் இன்றும் சாதாரணமாகக் காணும் பனை மரங்கள் ஓரிரு இனங்கள் மாத்திரமே.

தாளிப்பனை


கடதாசியும் அச்சிடலும் அறிமுகமாக முன்னர், ஓலைச் சுவடிகளே எழுத்துகளை வடிக்கப் பயன்பட்டன. ஒலைச் சுவடிகளுக்கான மூல ஓலைகளைத் தயாரித்தல் ஒன்றும் இலகுவான காரியமல்ல. தாளிப் பனை எனப்படும் (Taliput (Corypha umbraculifera)) பனை மரத்திலிருந்தே ஓலைகள் பெறப்பட்டு முறையாகப் பதப்படுத்தப்பட்டு சுவடிகள் ஆக்கப்பட்டன. ஒலைகளை மெல்லிய கீலங்களாகக் கிழித்து கொதி நீரிலே அவித்துக் காயவைத்துப் பதப்படுத்துவர். அப்படிச் செய்வதன் மூலம் ஓலைக் கீலங்கள் உறுதியாகும். உறுதியான ஓலைக் கீலங்களைத் தேவையான அளவில் வெட்டி அவற்றிலே எழுத்தாணி கொண்டு எழுதிப் பின்னர் கட்டுகளாகக் கட்டி வைப்பர்.


தாளிப்பனையின் ஓலையை விரித்து வைத்தால் 12 தொடக்கம் 15 அடி ஆரையுள்ள அரை வட்டத்தை ஆக்கமுடியுமெனவும் அதன் பரப்பளவு அண்ணளவாக 150 சதுர அடிகளாகவிருக்கும் எனவும் காலனித்துவ கால நூல்களிலே குறிப்பிடப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே நில அளவைத் திணைக்கள அலுவலர்கள் காடு மேடெங்கும் திரிந்து முகாமிட்டுத் தங்கி இலங்கையின் நிலப்பரப்பை அளவீடு செய்தனர். அவர்கள் தம் முகாம்களை அமைக்கப் பெரிதும் உதவியது இந்தத் தாளிப்பனையோலையே என்று முல்லைத்தீவிலே பாலமோட்டைக் கிராமத்திலே முதியவரொருவர் குறிப்பிட்டிருந்தார்.


தாளிப்பனை இலங்கையினதும் தென்னிந்தியாவினதும் சுதேச தாவரமாகும். பனை வகைத் தாவரங்களுள் அதிக உயரமாக, அதாவது 25 மீற்றர் வரை வளரக் கூடியது. இது தனது ஐம்பதாவது மற்றும் எண்பதாவது வயதுகளுக்கிடையில் ஒரு தடவை மாத்திரம் பூக்கும். அதன் பூக்கள் கூந்தல் போல நீண்ட தண்டிலே பூப்பதால் இதனைக் கூந்தல் பனை என்றும் குறிப்பிடுவர். இதன் காய்கள் முற்றியதும் தெளிவான பெருஞ்சத்தத்துடன் வெடித்துப் பரவும். காய்த்த பின் ஒருவருட காலத்துக்குள் இம்மரம் பட்டுப்போய் விடும். ஒரு மரம் மாத்திரம் ஏறத்தாழ 250 கிலோகிராம் நிறையுள்ள காய்களை உற்பத்தி செய்யும் என்பர். தாளிப்பனையிலிருந்து இலங்கையின் தமிழ் மக்கள் 801 விதமான பயன்களைப் பெற்றுக்கொண்டதாக ‘அலன் வோல்டேர்ஸ்’ என்ற காலனித்துவ எழுத்தாளர் ‘பனையும் முத்துகளும்’ அல்லது ‘இலங்கையின் காட்சிகள்’ என்ற தனது நூலிலே குறிப்பிடுகிறார்.

ஓவியம்


தாளிப்பனையின் பரம்பலானது காலனித்துவ தாவரவியலாளர்களால் மத்திய மலை நாட்டை அண்டிய பகுதிகளிலே அதிகம் அவதானிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் தாவரங்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்து கையேடாக அச்சிலே பதிப்பித்த ஹென்றி ட்ரைமென், தாளிப்பனையை குருநாகலின் வனப்பகுதியிலே அதிகம் அவதானித்ததாகக் குறிப்பிடுகிறார். அது பற்றி அவர் “ இது ஈரவலயப் பிரதேசத்தில் 2000 அடி உயரத்தில் வளர்கிறது. ஆனால் உண்மையான இயற்கைக் காடுகளில் நான் அதனைக் காணவில்லை. தாய் மரங்களின் அடியில் சிறு கன்றுகள் பல முளைத்திருந்தன. ஒரு சில மரங்களே முதிர்வை எட்டியிருந்தன. வடலி ஓலைகள் தொடர்ந்து வெட்டப்பட்டிருக்கின்றன” என்று தன் குறிப்பேட்டிலே பதிந்திருக்கிறார். ஆயினும் அது ஏனைய பகுதிகளிலும் பரம்பிக் காணப்பட்டிருந்தமையை ஆங்காங்கே காணப்படும் ஓரிரு குறிப்புகள் மூலமும் ஓவியங்கள் மூலமுமே அறியமுடிகிறது. கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்திலேயுள்ள அளிகம்பை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட வனக்குறவர்கள் தம் குடிசைகளை தாளிப்பனையோலை கொண்டு வேய்வதாக 2020 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.


தாளிப்பனை மட்டையின் நடுப்பகுதியை உரலிலே இடித்து மாவாக்கி பணியாரம் செய்து உண்ணும் வழக்கம் இலங்கை மக்களிடம் காணப்பட்டதாகவும் அப்பணியாரத்தின் சுவை பாணின் சுவையை ஒத்ததாகவிருந்ததாகவும் தாவரவியல் பேராசிரியராகவிருந்த ஈதல் பேர்ள் ப்லட்டர் என்பவர் ‘பிரித்தானிய இந்தியா, சிலோனின் பனைத் தாவரங்கள்’ என்ற தனது நூலிலே குறிப்பிடுகிறார். இதன் விதைகள் தந்தம் போன்று உறுதியானவையாதலால் மாலைகளை ஆக்கும் மணிகள் தயாரிக்கப் பயன்பட்டதோடு அவற்றைச் சாயமூட்டி பவளம் எனவும் மக்கள் விற்பனை செய்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலே இதன் விதைகளை பொத்தான் செய்வதற்குப் பயன்படுத்தியதால் அவை ஏற்றுமதி செய்யப்பட்டுமிருக்கின்றன.

இலங்கைப் பற்றிய விவரணம்


கப்பலோட்டியான ரொபேர்ட் நொக்ஸ் இலங்கை பற்றிய குறிப்புகளிலே தாளிப்பனையைப் பற்றியும் கூடக் குறிப்பிடுகிறார். “இது மிக நேர்த்தியான, உயரமான, பலவகைப் பயன்களைத் தருகின்ற ஓலைகளை மாத்திரம் கொண்டிருக்கின்ற தாவரமாகும். 15 தொடக்கம் 20 வரையான மனிதர்களை மறைப்பதற்கு இதன் ஓலையொன்று போதுமானதாகும். மழை பெய்யும் வேளைகளில் அவ்வோலையால் அவர்களை நனையாமல் பாதுகாக்க முடியும். காய்ந்த ஓலைகள் மிகவும் உறுதியானவை. மிகவும் அதிசயமான முறையிலே அவற்றின் நரம்புகள் வழியே மடித்து, பயணங்களின் போது மக்கள் மிகவும் இலகுவாக அவற்றைத் தம்முடன் எடுத்துச் செல்வர். பெண்கள் பாவிக்கும் விசிறியைப்போல் இவ்வோலையை மடித்தால் ஆணின் முழத்தை விட அது பெரியதாகவிருக்காது. அதிசயம் யாதெனில், அது தூக்கிச் செல்ல இலகுவானது. பாரமற்றது. இவ்வோலையை விரித்து வைத்தால் முழுவட்டமாகப் பரந்து காணப்படும். தமது வசதிக்காக மக்கள் இதனை முக்கோணமாக வெட்டிப் பயன்படுத்துவர். நடை பயணங்களின் போது வெயிலின் கொடூரத்தைக் குறைக்க இவ்வோலையைத் தலைக்கு மேலே பிடிப்பர். அணிவகுத்துச் செல்லும் போர் வீரர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காகத் தம் பயணங்களின் போது இவ்வோலையை மடித்து எடுத்துச் செல்வர். இரவு வேளைகளில் தாம் தங்குமிடங்களில் இவ்வோலைகளைக் கொண்டு கூடாரங்களை அமைத்து பாதுகாப்பாகத் தங்குவர். இந்த மழை நாட்டிலே வசிக்கும் வறிய மக்களுக்கு இறைவன் கொடுத்த வரமே இந்தத் தாளிப்பனையாகும்” என தாளிப்பனை பற்றிய தன் குறிப்பை முடிக்கிறார் ரொபேர்ட் நொக்ஸ்.


பருவகால மழையிலிருந்து தப்ப மாட்டு வண்டிலின் மேற்குடையாகவும், கூரை வேய்வதற்கும், விசிறிகள் செய்வதற்கும் பாய்கள் இழைப்பதற்கும் கூடைகள் பின்னுவதற்கும் தாளிப் பனையோலைகள் பயன்பட்டதோடு அப்பனை மரத்தின் விதைகள் மீன்களை மயக்குவதற்கும் பயன்பட்டிருக்கின்றன. விதைகள் ஏற்றுமதி செய்யப்பட்டும் இருக்கின்றன.


தென்னிந்தியாவிலே தாளிப்பனை பூக்கிறது என அறிந்ததும் பூவின் காம்பை வெட்டி அதிலிருந்து கள்ளை இறக்கிக் குடிக்கும் வழக்கம் காணப்பட்டதாகவும் கூட அறிய முடிகிறது. இதன் பழங்களை பறவைகளும், வௌவால்களும் முள்ளம்பன்றிகளும் மான்களும் மரைகளும் உணவாக உட்கொண்டன. ஆதலினால் தாளிப்பனையை ஒரு சூழலியல் வளமாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


அன்றொரு நாள் வரமாக, எங்கள் அன்றாட வாழ்வின் பல நூற்றுக்கணக்கான தேவைகளைப் பூர்த்திசெய்த தாளிப்பனைகளை இன்று காண்பதுவே அரிதாகிவிட்டது.அது தன் வாழிடங்களைத் தாவரவியல் பூங்காக்களுக்குள் குறுக்கிவிட்டது. இலங்கையில் மட்டுமன்றி இவற்றின் இயற்கை வாழிடங்கள் அனைத்திலுமே இவ்வகைப்பனைகளைக் காண்பது அரிதாகி விட்டது. இப்பனைகளுடன் சேர்ந்து அவற்றின் பயன்களும் மறைந்து விட்டன என்றே கூற வேண்டும். அதற்கு எமது அலட்சியப்போக்கும் அறிவின்மையும் கூட மிகப் பிரதானமான காரணங்களாகிவிட்டன. காலனித்துவ கால எழுத்தாளர்கள் அடையாளப்படுத்திக் காட்டிய தாளிப்பனையின் எண்ணூற்றொரு பயன்களும் எமை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டன என்றே கூற வேண்டும்.


இனியேனும் விழித்தெழுவோம்!தாளிப்பனையைத் தேடிப் பயணிப்போம்!
அதனை மீள் நடுகை செய்யவும் பேணவும் முயற்சிப்போம்!

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

14053 பார்வைகள்

About the Author

மனோகரன் சாரதாஞ்சலி

மனோகரன் சாரதாஞ்சலி அவர்கள் ஆசிய தொழில் நுட்ப நிறுவகத்தில் இயற்கை வள முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் இளமாணிப்பட்டதாரி என்பதுடன் ஊடகவியலும் கற்றவர். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் சூழலியல் கட்டுரையாளராகப் பணிபுரிந்து பின்னர் கடந்த ஒரு தசாப்தகாலமாக இலங்கை நிர்வாக சேவை அலுவலராகப் பணிபுரிகிறார்.

இவர் முதுமாணிப் பட்டப்படிப்புக்காக உலகவங்கியின் புலமைப்பரிசிலையும் முதன்மை மாணவிக்கான இரு விருதுகளையும் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்