மரம், கல், உலோக வார்ப்பு வேலைகளை உள்ளடக்கிய பாரம்பரியத் தமிழ் செதுக்குப் பாரம்பரியம் பல நூற்றாண்டு கால வரலாற்றை உடையவொன்றாக இலங்கை உள்ளிட்ட தென்னிந்திய பண்பாட்டு வட்டகையின் பல்வேறுபட்ட பிராந்தியங்களிலும் வழங்கி வருகிறது. பொதுவாக விஸ்வகர்ம குலத்தினர் எனச் சிற்ப சாஸ்திர நூல்களால் இனங்காணப்படுகின்ற சமூகக் குழுவினர் இச் செதுக்குத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூரில் பஞ்சகம்மாளர் என அழைக்கப்படுகின்ற இவர்கள் வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பல்வேறு பட்டறைகளை அல்லது வெளிப்பாட்டுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக காணப்பட்டனர். ஒரு காலகட்டத்தில் இப் பட்டடைகளுக்கிடையே வெளிப்பாடு சார்ந்த திறமைப் போட்டிகளும் இப் பட்டடைகள் சார்ந்த சிறப்புத்தேர்ச்சிகளும் காணப்பட்டன. அச் சிறப்புத் தகுதிகளால் பெரியளவில் அவை அறியப்பட்டும் இருந்தன. இப் பட்டடைகள் உருவாக்கிய கோயில் வாகனங்கள், தேர்கள், கூடுகள், மஞ்சங்கள், விக்கிரங்கள் மற்றுமுள்ள செதுக்குகள் வழியாக ஒரு வலுவான தமிழ்க்காட்சிப் பண்பாட்டை அவை உற்பத்தி செய்தன. அதுமட்டுமின்றி அவை கல்லினதும், மரத்தினதும், உலோகத்தினதும் பௌதீக இயல்புகளைக் கடந்து அவற்றை ஊடறுத்து வாழும் உயிர்களுக்கு நிகரான படைப்புக்களை உருவாக்கின.
சிற்பிகளிற் பலர் தந்தை – தனயன் அல்லது உறவுடைய மூத்தோரின் கீழ் பயிலும் இளையோர் எனும் வகையில் பாரம்பரிய செதுக்குப் பயிற்சிகளை தமது கிராமப் பகுதிகளிலோ அல்லது அயற் கிராமப் பட்டடைகளில் இருந்தோ பெற்றுக்கொண்டனர். அவர்களது சிரத்தையான பயில்வுகளும், பட்டறிவும் தனியாள் திறனும் சார்ந்து அவர்களை மெல்ல தேர்ச்சியுடைய படைப்பாளியாக்கவும் – இறுதியாக தலைமைச் சிற்பியாகவும் உருவாக்குகின்றது. இவ்வாறு உருவான பெரும் படைப்பாளிகள் கூட்டம் ஒன்று எங்களிடையே ஒரு காலத்திற் காணப்பட்டது. இன்று அவர்களிற் பலர் தேகவியோகம் ஆகிவிட்டனர். இன்னுஞ் சிலர் தமது அந்திம காலத்தை அடைந்துள்ளனர். அவர்களினிடத்தை அடைக்கத் தக்க இளம் தலைமுறையொன்று ஒப்பீட்டளவிலாயினும் உருவாகி இருக்க வேண்டும். ஆனால் அப்படியானவொரு இளைய தலைமுறை பெரியளவில் உருவாகவில்லை என்பதுதான் கவலைக்கிடமானது.
இந்த வீழ்ச்சியின் திசைவழி என்ன?
காலனிய காலத்தோடு மரபார்ந்த கலைப்பயில்வுகளுக்கும், மேற்கத்தைய கல்வி முறையோடு அறிமுகப்படுத்தப்படும் கலைக்கல்வி பயில்வுகளுக்குமிடையில் பாரிய ஒரு இடைவெளி உருவாக்கப்படுகிறது. மேற்கத்தைய கலைப் பயில்வுகள், வழி வரும் கலைப்படைப்புகள் யாவும் உயர்தகவுடைய கலை ஆக்கங்களாகவும், பாரம்பரியக் கலைஞர்களால் உருவாக்கப்படுகின்ற வெளிப்பாடுகள், மேற்கத்தைய வழிவரும் படைப்புகளோடு ஒப்பிடுகையில் தரம் தாழ்ந்ததாகவும் கொள்ளப்படும் நிலை உருவாகியது. அத்துடன் அவற்றைச் செய்பவர்கள் கைவினைஞர்கள் (craftsmen) எனவும் பாரபட்சப்படுத்தப்படும் நிலவரமும் உருவாகிறது. மேலும் பட்டடைகள் சார்ந்த உள்ளூர் கலைப்பயிற்சிகளுக்குப் பதிலாக கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கள் சார்ந்த கலைக் கல்வி முன்னிலைப்படுத்தப்படுகிறது. இன்னொரு வகையில் பிறப்பின் அடியாக அல்லது சாதி அடிப்படையில் இருந்த பயிலுகை பொதுமைப்படுத்தப்பட்டு விரும்பும் எவரும் கலைக் கல்வி பெறுதற்கான வாய்ப்பும் உருவாகிறது. அதே நேரம் ஆங்கில கல்வி வழி வரும் மேற்படி கல்வியே சிறந்ததாகவும், வெள்ளைப்பட்டி தொழில்களுக்கான (white color jobs) வாய்ப்புத்தரும் சந்தர்ப்பமாகவும் கொள்ளப்பட்டது. இதனால் பரம்பரை, பரம்பரையாக மேற்படி கலையாக்க செயற்பாடுகளில் ஈடுபட்ட மேற்படி சாதிக்குழுமத்தினர்கள், அச் செயற்பாட்டை விடவும் அந்தஸ்தில் கூடியது எனக் கருதப்பட்ட காலனியகால கல்வி மற்றும் தொழில்களை நோக்கி நகர்கிறார்கள். அதுமட்டுமன்றி தமது பாரம்பரியமான ஆக்கச் செயற்பாடுகள் பற்றிய ஒருவகையான தாழ்வுச்சிக்கல் உளவியலுக்குள்ளும் அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அதேவேளை காலனிய நவீனமாக்கலுடன் வருகின்ற இயந்திரமயமாக்கல் நிலவரங்களும் அவர்கள் தொழிற்பாடுகளுக்கு எதிரிடையான சவாலாகின்றன.
ஆனாலும் கூட சமயம் சார் காண்பியக்கலைப் பயில்வுகள் என்பது பெரும்பாலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் பாரம்பரிய ஆக்க கலைஞர்களின் பட்டடைகள் சார்ந்தே இயங்கின. கடவுள் விக்கிரகங்களை வார்த்தல் தொடக்கம் வாகனங்கள், இரதங்கள் முதலியவற்றை செதுக்குதல் வரைக்கும் இன்றளவும் இந்தப் பாரம்பரிய பட்டடைகளே முக்கியத்துவம் வாய்ந்த களங்களாக உள்ளன.
ஆயினும் கூட சுமார் 50 வருடங்களுக்கு முன்பதாக எங்களால் காணக் கூடியதாகவிருந்த தேர்ச்சி மிகுந்த கலை வெளிப்பாடுகள் பொய்யாய் -பழங்கதையாய்- போய்விட்டன. இந்த வீழ்ச்சியின் காரணம் என்ன? அது வெறுமனே மேற்கத்தைய கல்வி முறையின் வருகையின் முதன்மை மற்றும் மட்டும்தானா? ஆழமாக யோசிக்கும் போது இந்த வீழ்ச்சிக்குப் பின்னால் எண்ணற்ற காரணிகள் தொழிற்படுவதைக் காணமுடிகிறது.
குறிப்பாக இத்தொழில் செய்வோர்களிடங் கூட அது பற்றிய கர்வமும், பெருமையும் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்துள்ளது. அவர்களது முற்பட்ட சந்ததிகளோடு ஒப்பிடும்போது கலையாக்கம் தொடர்பான பரந்துபட்ட பட்டறிவு, காட்சியறிவு மற்றும் சாஸ்திரங்கள் எனப்படும் நூற்பயிற்சி என்பன இன்றைய தலைமுறையினரிடம் அறவேயில்லை எனச் சொல்லுமளவிற்கு குறைந்து போயுள்ளது. இது தாம் இயங்கும் கலைத்தளம் சம்பந்தப்பட்ட பரந்த ஒரு அறிவை அவர்களிடம் தராமல் போவதற்கான பிரதான காரணமாகிறது. அதேநேரம் அவர்களது செய்முறை அறிவென்பதும் மிகக்குறைந்த ஒரு வட்டத்துள் சுழலும் ஒன்றாகக் காணப்படுகிறது.
அதேநேரம் இன்றைய இளந் தலைமுறையினர் தமக்கு முற்பட்ட தலைமுறையினரது அறிவையுளும், அனுபவத்தையும் செரித்துக்கொள்வதில் அதிக ஆர்வம் அற்றவர்களாக உள்ளார்கள். இதனால் அவர்களுக்கு கிடைக்கச் சாத்தியமாயிருக்கும் அறிவைக்கூட அவர்கள் பெற்றுக்கொள்வதில்லை. இதேநேரம் தொடர்ச்சியான பயிற்சிகள் ஊடாக கிடைக்கக்கூடிய செயற்தேர்ச்சிக்காகவும் அவர்கள் முயற்சிப்பதில்லை. கலையாக்கம் என்பதற்குப் பதிலாக அது வெறும் தொழிலாகப் போய்விட்டது. ஒருவகையான ஆழமான சோம்பேறித்தனம் அவர்களிடையே காணப்படுவது என்பது மிகவும் துரதிர்ஷ்டமானது. சிறந்த செதுக்கை செய்யக்கூடிய ஆற்றலை வெளிக்காட்டும் இளைஞர்கள் கூட தம்மை பட்டை தீட்டாது விடுதல் ஊடாக தாம் எட்டக்கூடிய உயரங்களுக்கு பயணஞ் செய்யாமலே தம் திறனை வீணடித்துவிடுகிறார்கள்.
இதேநேரம் அவர்களது போசகர்கள் அல்லது நுகர்வோர்களது மேற்படி துறைசார் அறிவின்மை அல்லது போதிய அனுபவமின்மை காரணமாக திட்டவட்டமான விமர்சனக் கூர்மையும், பார்வையுமற்ற – அதனால் எதனை எப்படிக் கொடுத்தாலும் ஏற்கக் கூடிய ஒரு சாராராக அவர்கள் ஆகிப்போய் இருக்கிறார்கள். ஒரு கலை வெளிப்பாட்டை தீர்மானஞ் செய்வதற்கு கலைஞனின் செயற்திறன் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டுமே ஒழிய கூறுவிலை கோரலில் யார் குறைந்த விலையை சுட்டியிருக்கிறார்கள் என்பதைக்கொண்டு படைப்புக்களை செய்யக்கொடுத்தல் என்பதும் இந்த வீழ்ச்சிக்கு இன்னொரு முக்கிய காரணமாக இருக்கின்றது.
மேலும் பழைய பட்டடைகள் தொழிற்படுவது போல அல்லாது தற்போதைய பட்டடைகள், தமது பட்டடைகள் மற்றும் தம்மையொத்த பாணிகளையுடைய அல்லது தமது பள்ளி சார்ந்த இன்னொரு பட்டடையில் நிலைகளைப பகிர்த்தளிக்காது வெவ்வேறு சாத்தியப்படும் இடங்களில் உள்ள தொழில் முனைவோரிடம் வேலைகளை பகிர்ந்தளிக்கும்போது அவற்றுக்கிடையே சமநிலையும் ஒத்திசைவும் தொடர்ச்சியுமற்று அவை களையிழக்கின்றன.
அதேநேரம் ஆகச் சிறந்த தரம் என்பதுக்குப் பதிலாக மேலோட்டம், கவர்ச்சியான பளபளப்பான வர்ணங்கள் என்ற விடயங்களுக்கு முதன்மை தரல் மூலமாக அவை தரங்கெடுகின்றன. அதன் மோடிமையாக்கம் (stylization) தேய்ந்து வருவதையும், பதிலாக உயிரற்ற யதார்த்த நகர்வு ஒன்றை நோக்கிச் செதுக்கல் செல்லல் அல்லது அடிப்படையற்ற கோரச் சிதைவு அடைதல் என்ற நிலைக்கு அவை போய்க் கொண்டு இருக்கின்றன. அடிப்படையான உடற்கூற்றியலே இல்லாமல் விலங்குருக்கள் வருகின்றன.
ஆனால் பட்டடைகள் பெருகிக் கொண்டு இருக்கின்றன. படைப்புக்கள் தேய்ந்து செல்கின்றன.கொஞ்சம் அறிந்தவுடனேயே- போதிய பயிற்சியின்றி பட்டடைகளைத் திறத்தல் என்பனவெல்லாம் அதற்குக் காரணமாகின்றன. குலத்துக்கு வெளியால் செதுக்கு வேலைகள் செல்லலும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. கேள்வி என்னவென்றால், குலமா? குலத்துக்கு வெளியாலா? என்பதல்ல. பதிலாக ஆற்றலும், தேர்ச்சியும் அடைந்துள்ள பாரம்பரியப் படைப்பாளிகள் வேண்டும் என்பதுதான்.
தொடரும்.