தொழிலாளர் எழுச்சி குரல்களின் எதிரொலிகள்
Arts
7 நிமிட வாசிப்பு

தொழிலாளர் எழுச்சி குரல்களின் எதிரொலிகள்

October 19, 2022 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தினதும் துரைமார்களதும் தொழிலாளர் விரோத நடத்தைகள், சட்டங்கள், கொள்கைகள் தொடர்பிலான சேர். பொன். அருணாசலத்தின் கண்டன நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து எரிச்சலையும் சங்கடத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்தன. அதன் காரணமாக பல அரச உயர் அதிகாரிகள் சேர். பொன். அருணாசலம் அரசின் சுமுகமான நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுகின்றார் என்று காலனித்துவ செயலாளருக்கு புகார் கடிதங்கள் வாயிலாக அறிவித்தனர். குறிப்பாக அப்போது சட்டமா அதிபராக கடமையாற்றிய அன்டன் பேர்ட்றம்  (Anton Bertram) என்பவர் அருணாசலம் “சமூக சேவைகள் அமைப்பு” என்ற ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதன் நோக்கங்களுக்கு ஒவ்வாத வகையிலும் அரசியல் மற்றும் சமூகச் சீர்திருத்தம் தொடர்பில் கடுமையாகக் குரல் கொடுத்து மக்களை தூண்டி விடுகிறார் என்றும் புகார் தெரிவித்தார். என்றாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அருணாசலம் தொடர்ந்து செயற்பட்டார்.

சேர். பொன். அருணாசலம்

அவர் பிரிட்டிஷ்  தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தை விமர்சிக்கும் தொழிலாளர் தலைவர்கள் போன்றோரை இலங்கைக்கு அழைத்து தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் கூட்டம் ஏற்பாடு செய்து உரை நிகழ்த்த வைத்தார். அவை பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் பிரசுரித்து பிரசித்தப்படுத்தினார். சில நேரங்களில் குறிப்பாக ஒரு நிகழ்வாக வண பிதா சி. எப். அன்ட்றூவ்ஸ் (Ven. Fr. C. F. Androoves)   அவர்களின் வருகையைக் குறிப்பிடலாம்.  வண. பிதா. அன்றூவ்ஸ் மகாத்மா காந்தியுடன் இணைந்து தென்னாபிரிக்காவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் செயற்பட்டதுடன் பிஜி தீவில் வசித்த இந்தியத் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலை பற்றிய விரிவான ஆய்வு ஒன்றையும் 1919 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்திருந்தார். இவரது வருகையும் உரையும் 1920, செப்ரெம்பர் மாதத்தில் டவர்ஹோல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்காலத்தில் சமூக சேவை லீக் என்ற அமைப்பை அதன் போதாமை கருதி கலைத்து விட்டு,  மேலும் பரவலாக செயற்படும் பொருட்டு ஏனையோருடன் சேர்ந்து இலங்கைத் தொழிலாளர் நலன்புரி  லீக்  (Ceylon Labour Welfare League)  என்ற அமைப்பை அருணாசலம் தோற்றுவித்தார். இந்த அமைப்பின் அழைப்பின் பேரில் வண. பிதா. அன்றூவ்ஸ் இலங்கை வந்து ’தொழிலாளர் இயக்கம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அன்றூவ்ஸ் அவர்களை அறிமுகப்படுத்தி பேசும்போது அருணாசலம் பின்வருமாறு குறிப்பிட்டார் :- “இன்று உலகெங்கும் தொழிலாளர் உரிமைகளுக்காக குரல்கள் பலமாக எழுந்துள்ளன. இருந்தாலும் அவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டங்களை ஏற்படுத்தி அவர்களை ஒடுக்கும் நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. தொழில் சட்டத்திலேயே குற்றவியல் அம்சங்களும் காணப்படுவது காட்டுமிராண்டித்தனமானதாகும். வண. பிதா. அண்ட்றூவ்ஸ் அவர்கள் உலகத் தொழிலாளர் நிலைமை பற்றி நன்கு அறிந்தவர். குறிப்பாக இந்தியா,  தென்னாபிரிக்கா, ஃபிஜி தீவுகள், மலாயா போன்ற நாடுகளில் தொழிலாளர் நிலை தொடர்பில் குரல் கொடுத்தவர். அவரது இலங்கை வருகையும் சொற்பொழிவும் ஆளும் வர்க்கத்தின் காதுகளில் ஒலித்து தொழிலாளர் தொடர்பான அவர்களின் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வரும் என்று நம்புகிறேன்”  என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு மேற்படி அமைப்பு தனது விரிவான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தது. அவ்வமைப்பு இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினதும் உரிமைகளைப் பாதுகாப்பதும்,  அவர்களின் சமூக, கைத்தொழில் அந்தஸ்தினை உயர்த்துவதையும் தனது நோக்கமாகக் கொண்டிருந்தது. அதன் பொருட்டு அதன் பெயர் “சிலோன் தொழிலாளர் கூட்டமைப்பு”  (Ceylon  Workers  Federation)  என்று மாற்றப்பட்டது. அது 1921 ஜனவரியில் பிரிட்டிஷ் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கேணல் ஜொஸியா வெட்ஜ்வுட் அவர்களை இலங்கைக்கு அழைத்து கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வைத்தது. வெட்ஜ்வுட்  அவர்கள் பிரித்தானிய காலனித்துவ நாடுகளில் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பிலும் அவர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுவது பற்றியும் தொடர்ச்சியாக பிரித்தானியப் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அருணாசலம் பின்வருமாறு தெரிவித்தார்:- “இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக நடத்தப்படும் கெடுபிடிகள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. அது தொடர்பில் உயர் மற்றும் அரசு அதிகாரிகள் பாராமுகமாகவே இருந்து வருகின்றனர். அதன் காரணமாக இலங்கையின் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைகளை ஆராய்ந்து அவற்றில் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியாகவே வெட்ஜ்வுட் அவர்களின் இலங்கை வரவு அமைந்துள்ளது” என அவர் கூறினார்.

இக்காலத்தில் பிரித்தானியாவில் அதிக அளவில்  பேசப்பட்ட விடயங்கள் சுய விடுதலை, சுய அபிவிருத்தி,  சுயநிர்ணய உரிமை,  அரசியல் அமைப்பில் ஜனநாயகப் பண்புகளை  அதிகரித்தல், தொழிலாளர்களின் கல்வி அறிவை அதிகரித்தல், அவர்களை ஸ்தாபனப்படுத்துதல் முதலியன போன்றனவே. இவை இலங்கையிலும் அரசியல் தலைவர்களின் மேடைப்பேச்சுகளாக இருந்தன. அருணாசலம் இந்தியத் தொழிலாளரை அதிகம் பாதித்த தொழில் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த குற்றவியல் தண்டனை ஏற்பாடுகள்,  தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மிகக்  குறைந்த கூலி, 12  வயதுக்கும் குறைந்த சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துதல்,  அவர்களையும் கூட கைது செய்து சிறையில் அடைத்தல் போன்றவற்றை தனது ஆர்ப்பாட்டங்கள்,  மேடைப் பேச்சுகளுக்கு கருப்பொருளாக ஆக்கிக் கொண்டார்.

தேயிலை பறித்துவிட்டுத் திரும்பிய தோட்டத் தொழிலாளர்கள்

1922 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அருணாசலத்தை தலைவராகக் கொண்டு இயங்கிய  “இலங்கை தேசிய காங்கிரஸின்” போராட்டத்தின் விளைவாக முதல் முறையாக தேர்தல் முறையில் உருவாக்கப்பட்ட  “சட்டசபை” ஸ்தாபிக்கப்பட்டது. இவரது போராட்டங்களும், பின்னர் 1922 ஆம் ஆண்டு ஏ. ஈ. குணசிங்க தலைமையிலான தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுமே 1865 ஆம் ஆண்டின் தொழிலாளர் கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த குற்றவியல் பிரிவுகளை நீக்க காரணமாக அமைந்தன. சேர்.  பொன். அருணாசலம் தன் இறுதி மூச்சு நிற்கும் வரை தொழிலாளர் வர்க்க நலனுக்காகப் போராடினார். குறிப்பாக இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் துறை சார்ந்த மக்கள் நலனுக்காக குரல் கொடுத்தார். இவர் தனது 75 ஆவது வயதில் 1924 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். இவரது இழப்பு இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு ஒரு பாரிய இழப்பாகவே இருந்தது.

இக்காலத்தில் அருணாசலத்துடன் கூட இருந்து போராட்டங்கள் நடத்தியும் பல்வேறு விதங்களில் காலனித்துவ அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை உண்டாக்கி தொழிலாளர் நலன்களில் பல்வேறு முன்னேற்றகரமான மாற்றங்களை கொண்டுவர முன்னின்று உழைத்தவர்களில் அருணாசலத்தின் தமையனார் சேர். பொன். இராமநாதன், திரு. முத்துக்குமாரசுவாமி,  பிரபல சட்டத்தரணி எச். ஜே. ஸி. பெரேரா ஆகியவர்கள் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டார்கள். இவர்கள் நாட்டின் சகல தொழிலாளர்களினதும்,  அதுவும் குறிப்பாக  நகர்ப்புற மற்றும் பெருந்தோட்டங்கள் உள்ளடங்களாக அடக்குமுறை சட்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதில் மிகவும் திடசங்கற்பத்துடன்  செயற்பட்டனர். அதனால் அரசாங்கத்துக்கும் தோட்டத்துரைமார் சங்கத்துக்கும் இவர்கள் சிம்ம சொப்பனமாக இருந்தனர்.

இந்திய வம்சாவழி தொழிலாளர்களின் இலங்கையை நோக்கிய குடிப்பெயர்வில் 1890 முதல் 1940 ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலம் மிக முக்கியமானதாகும். இக்காலத்திலேயே இவர்கள்  மிக அதிக அளவில் புலம் பெயர்ந்தனர்.  இதே காலத்தில்தான் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய தேசிய எழுச்சிப் போராட்டங்கள் மிக வலுவாகத் தொடுக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடையே பிராமணத்துவ மேலாதிக்கத்துக்கு எதிரான வலுவான இயக்கங்கள் முனைப்புப்  பெற்றிருந்தன.  பல்வேறு சமூக எழுச்சி இயக்கங்களும் காளான்கள் முளைத்தது போல் பரவலாக உருவாகின.  மகாத்மா காந்தியை மையமாகக் கொண்டு உருவாகிய இயக்கங்களான ஒத்துழையாமை இயக்கம் மற்றும் குடியியல் கீழ்ப்படியாமை  (Civil disobedient) இயக்கம் என்பன அவற்றின் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தன.

இத்தகைய பிரித்தானிய அரசுக்கு எதிரான உத்வேக எழுச்சி அலைகள் இந்திய வம்சாவழித் தோட்டத் தொழிலாளர்கள், சிறு பணியாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மத்தியிலும் எதிரொலித்தன. இவற்றுடன் சேர்ந்து தொழிலாளர் விடுதலை எழுச்சி கீதங்களும் பாடப்பட்டன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8658 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)