1940 களில் இருந்தே இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சியில் இருந்த நகரங்கள் படிப்படியாக ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டன. 1956 ஆம் ஆண்டில் கொழும்பும் வீழ்ச்சியடைந்த பின்னர், ஒல்லாந்தரின் கவனம் யாழ்ப்பாணத்தின் மீது திரும்பியது. இதற்கிடையில், கொழும்பிலிருந்து வெளியேறிய போர்த்துக்கேயப் படை வீரர்களில் ஒரு பகுதியினர், போர்த்துக்கேயரின் ஆட்சி நிலவிய கடைசி நகரமான யாழ்ப்பாணத்துக்கு வந்துசேர்ந்தனர். இவர்களில் ஒருவர், யோன் ரிபெய்ரோ. இவர் பின்னர் இலங்கை குறித்து, இலங்கைத் தீவின் வரலாற்றுத் துன்பியல் (The Historic Tragedy of the Island of Ceilao) என்னும் ஒரு நூலை எழுதினார். இதில், யாழ்ப்பாணத்தின் மீது ஒல்லாந்தர் நடத்திய தாக்குதல் குறித்த தகவல்கள் உள்ளன.
அதேவேளை, படையெடுத்து வந்த ஒல்லாந்தப் படைகளுடன் அதன் ஆன்மீக வழிகாட்டியாக வந்தவர் பிலிப்பஸ் பல்தேயஸ் பாதிரியார். இவரும் பிற்காலத்தில் ஒரு நூலை எழுதினார். அதன் இலங்கை சம்பந்தமான பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டு “சிறப்பு வாய்ந்ததும், புகழ் பெற்றதுமான இலங்கைத் தீவு பற்றிய ஒரு விளக்கம்” (A Description of the Great and Most Famous Isle of Ceylon) என்னும் நூலாக வெளியானது. அவரும், ஒல்லாந்தரின் யாழ்ப்பாணத் தாக்குதல் குறித்தும், அதன் பின்னர் நிகழ்ந்த விடயங்கள் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். உண்மையில் இவ்விருவரும், போர்த்துக்கேயருக்கும், ஒல்லாந்தருக்கும் இடையில் இடம்பெற்ற இந்தப் போரின் கண்கண்ட சாட்சிகள் ஆவர். ஒருவர், போர்த்துக்கேயத் தரப்பிலிருந்தும், மற்றவர் ஒல்லாந்தர் தரப்பில் இருந்தும் போரில் கலந்துகொண்டனர்.
1658 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கொழும்பிலிருந்து புறப்பட்ட ஒல்லாந்தப் படைகள் தரை வழியாக நீர்கொழும்பு, மன்னார் ஊடாகப் பூநகரிப் பகுதியை அடைந்து அங்கிருந்து நீரேரியைக் கடந்து எவ்வித எதிர்ப்புக்களும் இன்றி யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் நுழைந்தனர். அங்கிருந்து, சாவகச்சேரி, நாவற்குழி ஆகிய ஊர்களினூடாகச் சுண்டிக்குழியை அடைந்தனர். சுண்டிக்குழிப் பகுதியிலேயே போர்த்துக்கேயப் படைகளிடம் இருந்து முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், போர்த்துக்கேயர் பெரும் இழப்புக்களுடன் பின்வாங்கியதாக பல்தேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.
போர்த்துக்கேயரைப் பொறுத்தவரை, ஒல்லாந்தரின் தாக்குதலில் இருந்து யாழ்ப்பாணத்தைக் காத்துக்கொள்வதற்கான ஆளணிகள் போதுமானதாக இருக்கவில்லை. ஆயுதங்களுக்கும், அவற்றுக்கான வெடிமருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவியது. பின்வாங்கிய போர்த்துக்கேயர், கிழக்கு எல்லையில் இருந்த குறுக்குத் தெருவில் நிலையெடுத்து மூன்று நாட்கள் காவல் இருந்தனர். ஒல்லாந்தர் நகரத்தின் கிழக்கு எல்லை அடைந்தபோது மீண்டும் போர்த்துக்கேயர் அவர்களைத் தாக்கினர். ஆனாலும், ஒல்லாந்தரின் வலுவான பீரங்கித் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஒவ்வொரு தெருவாகப் பின்வாங்கி, இறுதியாகக் கோட்டைக்கு அண்மையில் இருந்த கடைசித் தெருவில் நிலைகொண்டனர். நான்கு நாட்களின் பின்னர் அப்பகுதிக்கு வந்த ஒல்லாந்தப் படைகள் குறித்த நிலையைப் பக்கவாட்டில் இருந்து தாக்கின. நிலைகுலைந்த போர்த்துக்கேயப் படைகள் இரவோடிரவாகக் கோட்டைக்குள் புகுந்துகொண்டதாக ரெபெய்ரோ எழுதியுள்ளார். யாழ்ப்பாண நகரத்தில் வாழ்ந்த போர்த்துக்கேயக் குடியேறிகளும் குடும்பங்களுடன் ஏற்கெனெவே கோட்டைக்குள் தஞ்சமடைந்திருந்தனர். கோட்டை மக்களால் நிரம்பி வழிந்தது. கோட்டைக்குள் ஆளுனர் மாளிகை, வைத்தியசாலை, பிரான்சிஸ்க சபையின் துறவிமடம், தேவாலயம் என்பனவே குறிப்பிடத்தக்க கட்டிடங்களாக இருந்தன. மக்கள், தேவாலயத்துக்குள் நெருக்கமாக இருந்தனர்.
இந்தியாவில் இருந்த போர்த்துக்கேயரின் நிலைகளில் இருந்து படையுதவிகள் வருவதைத் தடுப்பதற்காக ஊர்காவற்றுறைக்கு அருகில் இருந்த கடற் கோட்டையையும் ஒல்லாந்தப் படைகள் தாக்கி அங்கிருந்த போர்த்துக்கேயப் படைகளைச் சரணடையச் செய்தன.
யாழ்ப்பாணக் கோட்டை மதில்கள் வலுவானவையாக இருந்ததாலும், ஒல்லாந்தப் படைகளிடம் வெடி மருந்துகள் போதிய அளவு இல்லாததாலும், உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்காகவும் கோட்டை மதில்களை உடைத்து உட்புகுவதில்லை என்னும் முடிவு எடுக்கப்பட்டது. கோட்டையைச் சுற்றி முற்றுகை இடுவதன் மூலம் நெருக்கடி கொடுத்துப் போர்த்துக்கேயப் படையினரைச் சரணடையச் செய்யும் உத்தியை ஒல்லாந்தர் நடைமுறைப்படுத்தினர். கோவாவில் இருந்து படையுதவி கிடைக்கும் எனக் கோட்டைக்குள் அடைபட்டிருந்த போர்த்துக்கேயர் நம்பினர். இதற்கான வாய்ப்புக்கள் எதையும் ஒல்லாந்தர் வழங்கவில்லை. முற்றுகை மிகவும் கடுமையாக மூன்றரை மாதங்கள் நீடித்தது.
ரெபெய்ரோ குறிப்பிட்டுள்ளபடி, வெளியில் இருந்த தாக்குதல் நிலைகளில் இருந்து கடுமையான பீரங்கித் தாக்குதல்களை ஒல்லாந்தர் நடத்தியதால், கோட்டைக்குள் இருந்த பலர் இறந்தனர். கோட்டைக்குள் பழுதான ஓரளவு அரிசியைத் தவிர வேறு உணவுப் பொருட்கள் இருக்கவில்லை. ஒரு துளி உப்புக்கூட இல்லை. அதனால், நோய்களால் தாக்கப்பட்டுப் பலர் உயிரிழந்தனர். இந்த நேரத்தில் ஒல்லாந்தர். போர்த்துக்கேயப் படைகளைச் சில நிபந்தனைகளுடன் சரணடையுமாறு செய்தியனுப்பினர்.
நிலைமையை உணர்ந்துகொண்ட போர்த்துக்கேயப் படையினர் சரணடைவதற்கு முடிவு செய்தனர். 1658 யூன் 21 ஆம் தேதி கோட்டையின் தென்கிழக்குக் கொத்தளத்தின் மேல் வெள்ளைக் கொடியை அவர்கள் பறக்கவிட்டனர். யூன் 24 ஆம் தேதி, சரணடைவு ஒப்பந்தப்படி, போர்த்துக்கேயப் படையினர், தமது ஆயுதங்களோடும், கொடிகளோடும், முரசு ஒலித்தபடி, ஒரு பீரங்கியுடன் கோட்டையை விட்டு வெளியேறினர். படையினரை ஐரோப்பாவுக்கு அனுப்புவது என்றும், படைத் தளபதிகள் மதிப்புடன் நடத்தப்பட்டு அவர்களுடைய ஏதாவதொரு கோட்டைக்கு அனுப்பப்படுவர் என்றும், மதகுருக்களைக் கோரமண்டல் கரைக்கு அனுப்புவதென்றும் ஒல்லாந்தர் இணங்கியிருந்தனர். போர்த்துக்கேயர் தமக்குச் சொந்தமான பொன், வெள்ளி, பெறுமதியான அசையக் கூடிய சொத்துக்கள் போன்றவற்றைத் தம்முடன் எடுத்துச் செல்ல முடியாது என்றும் அவற்றை ஒல்லாந்தரிடமே கையளிக்கவேண்டும் என்றும் நிபந்தனை இருந்தது. போர்த்துக்கேயக் குடியேறிகளும் இந்தியப் பகுதிகளில் தாம் விரும்பும் எந்தப் பகுதிக்கும் செல்லலாம் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
மதிப்புடன் நடத்தப்படுவர் என உறுதி அளிக்கப்பட்டிருந்தும், எல்லோரையும் வரிசையாக வரவைத்து, ஆடைகளைக் களைந்து சோதனையிட்டதுடன், உடைகள், தொப்பி உட்பட எல்லாவற்றையும் ஒல்லாந்தர் கவர்ந்துகொண்டதாகவும் ரெபெய்ரோ குறிப்பிட்டுள்ளார். பெண்களையும் கூட இதுபோன்ற சோதனைகளுக்கு உள்ளாக்கி அவர்களை அவமரியாதை செய்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.
போர்த்துக்கேயர் அனைவரையும் கப்பல்களில் ஏற்றி ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டில் இருந்த பத்தேவியாவுக்கு (இன்றைய ஜக்கார்த்தா) அழைத்துச் சென்று அங்கே போர்க் கைதிகளாக அடைத்து வைத்திருந்தனர் என்றும் ரெபெய்ரோவின் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது.
இப்போரின் முடிவில் யாழ்ப்பாண இராச்சியம் ஒல்லாந்தரின் கைக்கு மாறியது. இவர்கள்1796 வரை 138 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தனர்.
தொடரும்.