இலங்கையில் வாழும் இந்திய தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் இன்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலேயே தொழில்செய்தும் வாழ்ந்தும் வருகின்றனர். அவர்கள் “தோட்டத் தமிழர்”, “பெருந்தோட்டத் தமிழர்”, “மலையகத் தமிழர்”, “உயர்நிலப்பிரதேசத் தமிழர்” போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். “உயர்நிலப்பிரதேசத் தமிழர்” (Uda Palatha Tamils) என்ற பெயர் மலையகத் தமிழரை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த இலங்கைத் தமிழரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்கு சிங்கள மக்களால் கையாளப்படுகின்ற ஒரு பெயரும், “மலையகத் தமிழர்” என்ற பெயர் தமிழ்மொழியில் மட்டுமே கையாளப்படும் ஒன்றுமாகும். இவ்வாறு வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படுவது அவர்கள் தமது இனஅடையாளத்தை இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக டேனியல் என்ற அறிஞர் கூறுகிறார்.
1946இல் இந்தநாட்டின் மொத்தசனத்தொகையில் இந்தியத்தமிழர் 11.7 வீதமாக இருந்தனர் (DCS 1946). ஆனால் 1981 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பீட்டில் அவர்களது சனத்தொகைப்பங்கு 5.5 வீதமென மதிப்பிடப்பட்டது (DCS 1981). இவ்விரு சனத்தொகைக் கணிப்பீட்டு ஆண்டுகளுக்குமிடையே அவர்களது சனத்தொகைப்பங்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையை இது காட்டுகின்றது. இவ்வீழ்ச்சிக்குப் பங்களித்த காரணிகளுள் பின்வருவன முக்கியமானவையாகும்:
- இந்தியத்தமிழர்களுள் ஒரு பகுதியினர் சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கையின் கீழ் இந்தியாவிற்குக் குடிப்பெயர்ந்து சென்றமை.
- சனத்தொகைக் கணிப்பீட்டில் இந்தியத்தமிழர்கள் பலர் தம்மை இலங்கைத் தமிழர்களாக பதிவுசெய்து கொள்கின்றமை அல்லது சனத்தொகைக் கணிப்பீட்டாளர்கள் அவர்களது இனஅடையாளத்தை இலங்கைத் தமிழரென பிழையாகப் பதிவுசெய்தல். சுமார் 2 இலட்சம் பேர் இவ்வாறு தம்மை இலங்கைத் தமிழரென பதிவுசெய்து கொண்டதாக 1981ஆம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பீட்டு அறிக்கை குறிப்பிடுகின்றது. இது இக்காலப்பகுதியில் இலங்கையில் இருந்த இந்தியத்தமிழரின் மொத்த சனத்தொகையில் 25.0 வீதமாகும். இதையும் கவனத்தில் எடுப்போமாயின், 1981ஆம் ஆண்டு கணிப்பீட்டின் போது இந்தியத் தமிழரின் எண்ணிக்கை 1,238,800 ஆகவும், அவர்களது சனத்தொகைப்பங்கு 6.6 வீதமாகவும் இருந்திருக்கும். 2001ஆம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பீட்டில் தோட்டப்புறமக்களது எண்ணிக்கை 900,713 ஆகவும், அதில் தமிழரின் பங்கு 88.4 வீதமாகவும் இருந்தது (DCS 2001). இந்தியத் தமிழரின் சனத்தொகையில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்த இக்காலப்பகுதியில் நாட்டினது மொத்த சனத்தொகையில் அவர்களது சார்புப்பங்கு, அவர்களது சமூக வகுப்புச்சேர்க்கை, சமூகநிலைமைகள் என்பவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன.
- எழுபதாம் ஆண்டுகளின் முற்பகுதியில் அவர்களுள் 88.0 வீதமானோர் பெருந்தோட்டங்களிலேயே குடியிருந்தனர். ஆனால் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் அவர்களுள் சுமார் 40.0 சதவீதமானோர் தோட்டங்களை விட்டு வெளியேறி, தோட்டம்சாராத பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நகரங்களையும் கிராமங்களையும் அண்டியபகுதிகளில் தொழில்வாய்ப்புக்கள் உயர்வாக இருப்பதால் அப்பிரதேசங்களில் மேற்படி விகிதாசாரம் இதிலும் பார்க்க சற்று உயர்வாக இருக்குமென எதிர்ப்பார்க்கலாம்.
காலப்போக்கில் இச்சமூகத்தில் ஏற்பட்டு வந்த உள்வாரியான மாற்றங்களும், இச்சமூகத்திற்கு வெளியில் ஏற்பட்ட மாற்றங்களும் தோட்டங்களை விட்டு இம்மக்கள் வெளிநோக்கி நகர்வதற்கு உந்துதல் அளித்தன. இந்த மாற்றங்களுட் சில பின்வருமாறு:
- தோட்டக்காணிகள் சுவீகரிக்கப்பட்டு அக்காணிகளில் விவசாயப்பன்முகப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதால் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் கீழிருந்த காணிகளின் அளவிலும் அங்கு காணப்பட்ட தொழில் வாய்ப்புக்களிலும் ஏற்பட்ட வீழ்ச்சி.
- 1978இல் திறந்த அல்லது சந்தைசார்ந்த பொருளாதாரக்கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டதால் தோட்டங்களுக்கு வெளியே உருவாகிய அதிகரித்த தொழில்வாய்ப்புகள் தோட்டத்தொழிலாளரின் வெளிநோக்கிய நகர்வை ஊக்குவித்தமை
- பெருந்தோட்டத் தமிழ்ச்சமூகத்திற்குள்ளேயே படித்த ஒரு குழுவினர் உருவாகியமை.
- 1977 ஆம், 1981ஆம், 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இனக்கலவரங்கள் காரணமாக யாழ்ப்பாண சமூகத்தைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள் பலர் வடக்கிற்கு இடம்பெயர்ந்து சென்றதால் ஏற்பட்ட வெற்றிடங்கள் படித்த மலையக இளைஞர்களால் நிரப்பப்பட்டமை.
- தோட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்டதால் தோட்டங்களில் தொழில் வாய்ப்புக்களுக்கு உத்தரவாதம் இல்லாதுபோனமை.
- படித்த மலையகத் தமிழ் இளைஞர்கள் தமது பெற்றோர்களைப் போலன்றி தோட்டங்களில் வேலை செய்வதற்கு காட்டும் தயக்கம் அல்லது விருப்பமின்மை.
தோட்ட இளைஞர்கள் இன்று தோட்டப்புறங்களிலுள்ள சிறு நகரங்களிலும், கொழும்பு – கண்டி போன்ற பெருநகரங்களிலும் விவசாயம் உட்பட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். தோட்டப்புறக் கல்வியில் ஏற்பட்டு வந்துள்ள மாற்றங்களும் முன்னேற்றங்களும் இச்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடையே ஒரு மேல்நோக்கிய அசைவினை ஏற்படுத்தியுள்ளன. எனினும், தோட்டங்களுக்கு வெளியே அவர்களுக்குக் கிடைக்கும் தொழில்வாய்ப்புக்கள் பெரிதும் வரையறுக்கப்பட்டனவாக இருப்பதோடு, அத்தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதிலும் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவ்வித தொழில்களில் இணைந்து கொள்வதற்குப் பொருத்தமான கல்வித்தகைமைகளும் வேறு வினைத்திறன்களும் அவர்களிடம் இல்லாதிருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். சுயதொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருமானம் ஈட்டிக்கொள்வதற்குத் தேவையான கடன்வசதிகளும், வேறு மூலதன சாதனங்களும், அவ்வித தொழில் நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்கான இடவசதிகளும் அவர்களிடம் இல்லாததால் சுயதொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்டிக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு இருப்பதில்லை. தலைமைவகிக்கும் பண்புகள், போட்டிமனப்பாங்கு என்பன அவர்களிடையே போதுமான அளவு இல்லாதிருப்பதும் இதற்குப்பங்களிக்கும் இன்னொரு காரணியாகும்.
மேற்படிப் பிரச்சினைகள் பல காணப்படுகின்ற நிலையிலும் அண்மைக்காலங்களில் தோட்டத்தொழில் தவிர்ந்த ஆசிரியத்தொழில், அலுவலகம் சார்ந்த வேலைகள் போன்றன அவர்களிடையே பிரசித்தம் பெற்று வருகின்றன. ஆனால் இவ்வித தொழில்வாய்ப்புக்களை ஒரு சில இளைஞர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. சில இளைஞர்கள் கொழும்பு உட்பட வேறு நகரங்களிலும் கடைச்சிப்பந்திகளாகவும், தற்காலிக வேலையாட்களாகவும் தொழில்புரிகின்றனர். இப்புதிய தொழில்கள் சிலவற்றில் அவர்களது வருமானம் குறைவாக இருந்தபோதும், தோட்டத்தொழிலோடு சார்பளவில் அவற்றில் கூடுதலான சுதந்திரம் காணப்படுவதாலும், உடல்ரீதியான கடினஉழைப்பு குறைவாகவோ, இல்லாதோ இருப்பதாலும், பெருந்தோட்டங்களிலும் பார்க்க வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் கூடுதலாக இருப்பதாலும் இத்தொழில்களை அவர்கள் விரும்பியே ஏற்கின்றனர். வறியகுடும்பங்களைச் சேர்ந்த பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அதிலுங்குறிப்பாக, பெண்பிள்ளைகளை நகர்ப்புறங்களில் வாழும் சற்று வசதிவாய்ந்த குடும்பங்களில் வீட்டுவேலை செய்வதற்காக அனுப்புகின்றனர். 1978 ஆம் ஆண்டின் பின்னர் தோட்டங்களுக்கு அண்மித்த பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள தைத்த ஆடைத்தொழிற்சாலைகளிலும், வெளிநாடுகள் சிலவற்றிலும் பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கக்கூடியதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்ட மக்களுக்கு படிப்படியாக குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டதால் அச்சமூகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு துரிதகதியில் அவர்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டும் வருகின்றனர். மேற்படி மாற்றங்களினால் இச்சமூகத்திற்குள்ளேயே வளர்ச்சியடைந்து வரும் புதிய சமூகக்குழுக்கள் வெகுவிரைவிலேயே இச்சமூகத்தின் அரசியல் பங்கெடுப்பில் மாற்றங்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கலாம். இதுவரைகாலமும் முற்றிலும் சாதி, செல்வம், சொத்துரிமை என்பவற்றையே அடிப்படையாகக் கொண்டிருக்கும் மலையகத் தலைமைத்துவம் புதிதாக உருவாகிவரும் சமூகக்குழுக்களினது எதிர்பார்ப்புக்களையும் விருப்பங்களையும் பிரதிபலிக்குமா என்பது பற்றி ஐயப்பாடு தோன்றியுள்ளது. மேலும், அரசியல்மயமாக்கப்பட்டுள்ள இச்சமூகத்தின் கீழ்மட்டக்குழுக்கள் எண்ணிக்கை அடிப்படையில் வலுப்பெற்று வருவதோடு ஐயத்திற்கிடமின்றி சமூகத்தில் அவற்றினது முக்கியத்துவமும் காலப்போக்கில் அதிகரிக்கும் எனலாம். சமூகத்திற்குள்ளேயே ஏற்பட்டுவரும் இந்த மாற்றங்களை உண்மையாகவே பிரதிபலிக்கக்கூடிய புதிய தலைமைத்துவம் ஒன்று உருவாகுவதற்கான தேவை வெகுவிரைவிலேயே உணரப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.
தொடரும்.