தேயும் ஈழத் தமிழ்மொழி
Arts
10 நிமிட வாசிப்பு

தேயும் ஈழத் தமிழ்மொழி

June 9, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

 

சந்தேகம் இல்லாமல் பண்பாட்டின் ஏனைய அலகுகள் யாவையும் போல பேசும் மொழியும் ஒரு மாறும் பொதுமைதான். ஆனால், அண்மைய ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழ் மொழி சென்று கொண்டிருக்கும் மாறு திசையும் – அதன் வேகமும் – அந்த மாற்றத்தின் காரணங்களும் அதன் காவிகளும் – அது தொடர்பில் எம்மிடமுள்ள அசட்டையும் பண்பாட்டு நோக்கில் வேதனை தருமொன்றாக இருக்கிறது. 

காலிமுகத்திடல் போராட்டம்

இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் பலரிடம் ‘ஈழத்தமிழ் மொழி உயர்வானது’ – ‘கலப்பற்றது அல்லது ஒப்பீட்டளவில் கலப்பற்ற நல்ல தமிழை ஈழத்தமிழர்கள் பேசுகிறார்கள்’ என்ற பலமான ஒரு ஜனரஞ்சக நம்பிக்கை உண்டு. மொழியல் ரீதியாக யோசித்தால் மேற்படி நம்பிக்கைகள் அதிகம் அறிவியல் பூர்வமானவை அல்ல. ஆனால் நிச்சயமாக ஆங்கிலத்தை அதிகம் தமிழுக்குள் இட்டுப் பேசுதல் அல்லது ஆங்கிலத்தை தமிழ்த்தனமாகப் தமிழோடு கலந்து பேசுதல் என்ற நிலைவரம் ஈழத்தமிழ் மொழிப்பயல்வுள் ஒப்பீட்டளவிற் குறைவுதான்.

எந்த ஒரு மொழியும் கலப்பற்றது – பேச்சு வழக்காற்று மாற்றங்களும் – கிளைகளும் அற்றவை எனப் பேசுவது மொழியின் வரலாற்றை மறுப்பதும், அதனியல்பைப் புரிந்து கொள்ளாததன் விளைவாகவும் மட்டுமே அமையும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே தொல்காப்பியம் ‘திசைமொழிகள்’ பற்றிப் பேசுகிறது. போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்த மொழிச் சொற்கள் பலவற்றை தமிழ் என்று நினைத்தே பல நூற்றாண்டு காலமாகக் கையாண்டுவருகிறோம்.

அது மட்டுமின்றி ஏதாவது ஒரு மொழி உயர்வானது – மற்றையது தாழ்வானது என்று கருதுவதோ அல்லது சில மொழிகளை தெய்வீக அந்தஸ்து உடையவை என்று கூறுவதோ கூட அடிப்படையில் மொழியதிகாரம் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே அமையும்.  

ஆனால் ஒவ்வொரு மொழிப் பயில்வு வட்டகையும் தனது சொற் தெரிவுகள், உச்சரிப்புக்கள் – தொனி நிலைகள் – குழும வேறுபாடுகள் சார்ந்த தனியடையாளங்கள் உடையவை என்பது மறுக்கப்பட முடியாத யதார்த்தமாகும். அவ்வகையில் குறிப்பிட்ட பிராந்தியத்தின் மொழிப் பயில்வானது அப் பிராந்தியத்தின் மரபுரிமையும் ஆகிறது. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட அந்தந்த மொழியின் இயல்புகளுக்கேற்பவே அம் மொழிகளின் மாற்றங்களும் அமைகின்றன. அதாவது குறிப்பிட்ட மொழி புதிதாக உள்ளெடுக்கும் பிற மொழிச் சொற்களும் அல்லது உருவாகும் புதிய சொற்களுங் கூட மேற்படி பயில்மொழியின், மொழியில் அம்சங்களின் உள்ளார்ந்த தர்க்கத்தின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. 

இவ்வகையான வாதங்களை புரியும் போது – சந்தேகமில்லாமல் ஈழத் தமிழ் மொழியானது,  தமிழ் மொழி பயிலும் உலகின் பல்வேறு களங்களில் இருந்து வேறுபட்டதும் தனக்காக தனியான அடையாளங்களை உடையதுமான கட்டமைப்பு என்பதை நாம் கண்டடைய முடியும். அது ஒரு தனியடையாளம்  என்ற வகையில் ஒரு பண்பாட்டு முதலீடுமாகும். எனவே ஈழத்தமிழ் இனத்துவத்தின் முக்கிய கூறாக அதன் மொழியும் – மொழிசார் வெளிப்பாடுகளும் காணப்படுகின்றன. எமது நாளாந்த பேசு மொழி, ஆற்றுகை நெறிப்பட்ட மொழி வெளிப்பாடுகள் தொடக்கம் எழுத்து மொழி – அதன் புனைவாக்க மொழிதல்கள் உள்ளிட்ட பரந்த பரப்பு அதனோடு கூடியுள்ளது.  நவீன காலத்து மேடைப் பேச்சு என்கிற வடிவமே ஈழத் தமிழிடமிருந்து உருவாகி நிலை பெற்றது என அண்மையிற் காலமான அமெரிக்க யேல் பல்கலைக்கழக மானுடவியற் பேராசிரியரான பேர்னாட் பேற் தனது கலாநிதிப்பட்ட ஆய்வில் எடுத்துக் காட்டியுள்ளார். 

அதேநேரம் ஈழத்தமிழ் மொழி. இலக்கணம், இலக்கியம் – உரை மரபுகள் பற்றிய ஆய்வாளர்கள் பலரும் பலவேறு ஈழத்தமிழுக்கேயான வேறுபட்ட தனியியல்புகள் பலவற்றை சுட்டிக் காட்டியுள்ளனர். அண்மையில் பட்டமேற்படிப்புக்களுக்கான பிரெஞ்சு வரலாற்று மொழிநூலியல் நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி அப்பாசாமி முருகையன் பொதுத் தமிழ் பாவனையில் இருந்து வேறுபடும் ஈழத்தமிழின் மிக முக்கியான சில இயல்புகளைச் சுட்டிக்காட்டி அது பற்றிய ஆய்வுகளின் அவசியத்தையும் – அவசரத்தையும் தெளிவுபடுத்தியிருந்தார்.

இலங்கை வானொலி

இந்த வகைப்பட்ட தனித்துவம் தொடர்பிலான கல்விசார்ந்ததும் – ஆய்வியல் ரீதியுமான (academic and research) கருத்தாடல்கள் ஒரு புறமிருக்க, ஒரு காலத்தில் செய்தி ஊடகங்கள் முதலியவற்றின் தமிழ் பிரயோகம் – மொழி நடைகள் என்பனவற்றுக்காக ஈழத் தமிழ் ஊடகங்கள் பொது மக்கள் மத்தியில் உள்நாட்டில் மட்டுமின்றி  பிற நாடுகளிலும் புகழ் பெற்றுக் காணப்பட்டன. அவை ஈழத் தமிழின் தனியடையாளத்தை பிரதிநிதிப்படுத்தியதோடு அதனை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றும் கைங்கரியத்தையும் செய்தன. எஸ்.பி. மயில்வாகனம் தொடக்கம் இன்றைய வாழும் உதாரணங்களில் ஒன்றான. பி.எச். அப்துல் ஹமீத் வரை பலமான ஈழத்து வானொலித் தமிழின் மையமாக இலங்கை வானொலி இருந்த காலமொன்றுண்டு. 

பத்திரிகைகள் மொழிப்பாவனையில் எடுத்த கவனம் காரணமாக, அவை மொழிக்கல்விக்கான களமாயும் இருந்ததுண்டு. மொழியின் இயங்கு களத்தை இவை வலுப்படுத்தின. உலகறிவோடு அவை ஈழத்தமிழ் மொழியையும் அவை காவிச் சென்றன. 

ஆனால் இன்றைய நிலை என்ன? 

 தமிழ் ஜனரஞ்சகச் சினிமா

இன்றைய இளைய தலைமுறை ஒருவகையான தென்னிந்திய ஜனரஞ்சகத் தமிழை மிகப் பெருமையோடும், நடப்பு வழக்கின் (fashion) சிறப்புத தகமையாக பேசத் தொடங்கியுள்ளது. அது ஈழத் தமிழையோ அல்லது அதன் வேறுபட்ட பிராந்தியங்களிற் (யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு – மலையகம் என்றோ அவற்றின் உட் பிராந்திய கிளை வழக்காறுகளின் எண்ணற்ற பிரிவுகள் சார்ந்தோ) பயிலப்படும் சிறப்பு வேறுபாடுகளையுடைய மொழியையோ பேசாது புறந் தள்ளிவிட்டு இப் புதிய போக்கு வழிப்பட்டு விரைந்து செல்கிறது. அது ‘சுட்டுக் கொண்டு வருதல்’(திருடல்), ‘கேமுக்கு வாறியா?’ (சண்டை போட வருகிறாயா?), ‘செமையா இருக்குது’ (நல்லா இருக்குது) ‘டீல்’, ‘கெத்து’ என பல சொற் பிரயோகங்கள் மற்றும் ‘அவங்க’ – ‘சொல்றாங்க’ எனும் வாக்கிய முடிப்பு முறைகள் என இவை விரைந்து பரப்பப்படுகின்றன.

இவை பேரளவில் பயிலப்படுதலுக்கு முக்கியமாக வெகுஜன ஊடகங்கள்  காரணமாகின்றன. குறிப்பாக ஈழத் தமிழ் இளைய சமூகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகுஜன சினிமாப் பண்பாட்டால் ஆக்கப்பட்டுள்ளது. பாலாபிஷேகங்களும், கட்டவுட் (cutout) பூசைகளும் ஆரம்பமாகி விட்டன. இங்கிருந்துதான் மேற்படி தென்னிந்திய ஜனரஞ்சகத் தமிழ் அதிகம் பொறுக்கப்படுகிறது.

இலங்கை வானொலி

ஆனால் இதை பேரளவில் நடவு செய்யும் முகவர் வேலையை – குறிப்பாக எமது பண்பலை வானொலிகள் (FM radio) செய்கின்றன. பேராசிரியர் சிவத்தம்பி இந்த வானொலிகளை Talkative radios எனக்  கூறுவார். அவை எப்போதும் – பெரும்பாலும் இந்த தென்னிந்திய சினிமா வழிவரும் வெகுஜனப் பேச்சு முறையை – சொற் பிரயோகங்களை நாடு முழுவதும், 24 மணிநேரமும் பேசிக் கொண்டிருக்கின்றன. அவற்றினைக் கேட்பவர்கள் அல்லது அதன் ரசிகர் குழாம் என்பது அதிகம் இளைஞர்களாகவும் இருக்கிறார்கள். இந் நிலைவரங்கள் ஈழத்தழிழ் மொழிக்குப் பதிலாக மேற்படி கொச்சையான இதுவுமல்ல – அதுவுமல்ல என்ற மொழிப் பயில்வொன்றை நடவு செய்து வருகின்றன. ஆனால் இது தொடர்பில் எம்மிடம் எந்தக் கேள்வியும் கிடையாது. 

இதன் அடுத்த பெருங்களம் தொலைக்காட்சி அலை வரிசைகளாகும். இவை வீடு முழுவதும் சதா சர்வகாலமும் புகுந்து நிற்கின்றன. ஒரு வகை சன் ரீவி மயமாக்கத் தமிழ் இன்னொரு பக்கம் மடை திறந்தோடி ஈழத் தமிழ் வீடுகளை நிறைத்து மெல்ல அவரவர் பிராந்தியத் தனித்துவ மொழியை தட்டையாக்கி மேற்படி ஜனரஞ்சகத் தென்னகத் தமிழை எல்லோர் நாவிலும் மெல்ல – அவர்கள் அறியாமலே பதிகின்றது.

தமிழக மொழிமாற்ற கார்ட்டூன்

இதில் மிக முக்கிய இடத்தை சிறு பிள்ளைகளுக்கான கார்ட்டூன்கள் செய்கின்றன. 05 வயதுக்கு முன்பதாகவே ஈழத் தமிழ் குழந்தைகளின் பேசு மொழி, மேற்படி ஜனரஞ்சகத் தென்னகத் தமிழைக் இக் கார்ட்டூன்கள் வழி பெற்றுக் கொள்கிறது. இது மிகப் பெரிய ஈழத் தமிழ் மொழி இழப்புக்குக் காரணமாகப் போகிறது. நாம் இதை விடுத்து இச் சிறுபராயப் பிள்ளைகளுக்காக  வாங்கும் அனைத்து Nursery Rhymes உட்பட்ட குறுமொலித் தட்டுக்கள் கூட இந் நிலைவரத்தை பேரளவில் அதிகரிக்கப் போகின்றன. (எத்தனை ஆயிரம் பக்தி பாடல்கள் ஊர்க் கோயில்கள் தோறும் வெளியிடும் ஈழப் பெருந் தலைவர்கள் தமது குழந்தைகளுக்கான மழலைப் பாடல்களை பதிவு செய்து உருவாக்குவதில் மட்டும் பெரியளவிற் கவனம் எடுப்பதில்லை).

ஈழத்து சிறுவர் இலக்கியங்கள்

இதேநேரம் கல்விச் சாலைகள் மொழிக் கல்வியில் கொண்டுள்ள பாராமுகம் மற்றும் சர்வதேசப் பாடசாலைகள் மற்றும் ஆங்கில மூலக் கல்வி பற்றிய ஆய்வறிவற்ற மோகம் அல்லது தொடரும் மொழி தொடர்பான  காலனியகால தாழ்வுச் சிக்கல்கள் – சமூக அந்தஸ்தை மொழியோடு இணைத்துப் பார்க்கும் நோக்குகள் என்பன பாடசாலைகளிலும் – பல்கலைக்கழகங்களிலும் காணப்பட்ட பலமான ஒரு தாய்மொழிக் கல்விப் பாரம்பரியத்தை வீழ்ச்சியடையச் செய்துவிட்டன. அத்தோடு இவற்றுக்கு  வெளியாற் காணப்பட்ட பலமானவொரு மரபுவழிக் கல்விப் பாரம்பரியமும் கடந்த காலத்துக் கதையாகிப் போய் முடிந்து விட்டது. 

இவை யாவும் ஈழத் தமிழ் மொழியின் எதிர்கால வாழ்வை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளன. ஈழத்தமிழ் மொழியை அதன் பல்பரிமாணங்களை, அதன் பிராந்திய வேறுபாடுகளை, அவற்றின் கிளைகளோடு காத்திட என்னதான் செய்யப் போகிறோம்?

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8203 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)