யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை அழித்தல்
Arts
12 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை அழித்தல்

August 15, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

யாழ்ப்பாண நகரபிதாவுக்கு ஒரு குடியானவனின் மடல்

ஓகஸ்ட் 2021 இல் எழுதப்பட்ட இக்கட்டுரை அக்காலப் பகுதியில் வெளியான மாநகர முதல்வரின் நாவலர் மண்டபம், ஆஸ்பத்திரி வீதி தொடர்பான கருத்துக்கள் மீதான உரையாடல் ஆகும்

அன்புடையீர்.

ஆஸ்பத்திரி வீதி மத்திய தரிப்பிடம்

தங்களுடைய அண்மைய பத்திரிகையாளர் சந்திப்பொன்றின் காட்சித் துண்டொன்றை டான் தொலைக்காட்சியில் பார்க்கக் கிடைத்தது. அது ஒருங்கே மகிழ்ச்சியையும், கவலையையும் தந்தது. மகிழ்ச்சியானது, ‘நாவலர் கலாசார மண்டபத்தை மத்திய அரசிடம் கையளிப்பது இல்லை’ என்ற தங்கள் நிலைப்பாடு சம்மந்தப்பட்டு உருவானது. மறுபுறம் எமக்கு வருத்தத்தை ஏற்படுத்திய விடயமானது, ஆஸ்பத்திரி வீதியின் பௌதிகத் தோற்றத்தை மாற்றி அமைப்பது தொடர்பான ‘அபிவிருத்தி நடவடிக்கை’ சம்பந்தப்பட்டு உருவானதாகும். இதன் மூலம், இலங்கையின் வேறெந்த பெருநகரங்களிலும் இல்லாததும், குறிப்பாக யாழ்ப்பாண நகரத்திற்கேயான சிறப்பம்சங்களில் ஒன்றாகக் காணப்படுவதுமான  தெருமத்தி வாகனத் தரிப்பிடத்தை நாம் அழிக்க இருக்கின்றோம்.

பச்சைப்பரப்பு யாழ்ப்பாணநகரம் 2002

அந்த தெருமத்தி வாகனத்தரிப்பிடம், வெறும் வாகனத்தரிப்பிடம் மாத்திரமல்ல ; பதிலாக அது பெருவிருட்ச நிரைகளையுடைய தெருநடு பச்சைக் கோட்டுருவுமாகும் (green line). கூகுள் தரைப்படப் பயனியூடாக யாழ்ப்பாண நகரத் தரையை வெவ்வேறு காலப்பகுதி சார்ந்து உற்று நோக்கும்போது, அது எவ்வளவு தூரத்திற்கு தனது நகர உடலின் பச்சைப்பரப்பினை இழந்துள்ளது என்பதை அவதானிக்கலாம். அந்த இழப்பு நகரத்தின் சூழலமைப்பை (eco system) பாதித்து இருப்பது மட்டுமல்லாமல், அதனை எவ்வித ஒத்திசைவுமற்ற கட்டடங்களின் காடாக்கி விட்டிருக்கின்றதென்பதையும் அவதானிக்கலாம்.

பச்சைப்பரப்பு யாழ்ப்பாணநகரம் 2018

அடிப்படையில் நகரம் என்பது ஒரு இடம் (Place). கட்டடக்கலைப் பரப்பிலும், நகர அபிவிருத்தி வடிவமைப்பிலும் இடம் என்பதும் – இட உருவாக்கம் (Place making) என்பதும் முக்கியான ஒன்றாக இன்று வாதிடப்படுகிறது. குறிப்பாக பேரிழப்புக்களையும் – பண்பாட்டு அடையாள அழிவு, அழிப்பு என்பனவற்றையும் சந்தித்த சமூகங்களில் அதன் மீந்திருக்கும் அழிவுக்கு முற்பட்ட கால அடையாளங்களைக் காப்பாற்றுதல் மூலமாக அதன் சமூக – பண்பாட்டு, வரலாற்று அடையாளத்தைத் தக்கவைக்கவேண்டும் என்ற வாதம் மரபுரிமைவாதிகள், கட்டடக்கலைக் கோட்பாட்டாளர்கள், நகரவடிவமைப்பாளர்கள் மற்றும் பண்பாட்டுப் புவியிலாளர்கள் முதலியோர்களால் அதிகம் முன் வைக்கப்பட்டுவருகிறது. அவ்வகையில் ஒரு இடமானது, எதிர்பாராத இயற்கை அனர்த்தம் காரணமாகவோ அல்லது  யுத்தம் முதலான நிலவரங்களின் கீழாகவோ அழிந்தால் அதனை மீளவும் அதன் பண்டைய நினைவுகள் – செயற்பாடுகளின் தொடர்ச்சியை பேணும் வண்ணம் மீள உருவாக்கப்பட வேண்டும் என இட உருவாக்கக் கோட்பாடு வலியுறுத்துகிறது. என் ஞாபகத்தின்படி 2002இல் என்று நினைக்கிறேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘யாழ்ப்பாணக் கட்டடக்கலை’ பற்றிய கருத்தரங்கில் கட்டடக்கலைஞர் ஷயன் குமாரதாஸ் மேற்படி இடவுருவாக்கக் கோட்பாடு தமிழ் சமூகத்தின் மீள் கட்டுமானத்தில் ஏன் முக்கியமானது என்பது பற்றி உரையாற்றியமை நினைவில் இருக்கிறது. ஆனாலும் இத்தனை ஆண்டுகளுக்கு பின்பும், அது பற்றியோ அல்லது எதனைப் பற்றியோ எந்தவிதமான விவாதங்களோ – பிரதிவாதங்களோ இன்றியே தமிழ் சமூகம் காணப்படுகிறது. இந்த நிலவரங்கள் ஈழத்தமிழ் சமூகம் ஒரு தோற்றுப் போய்விட்ட சமூகம் தானா? என்ற கேள்வியை எழுப்புவதைத் என்னால் தவிர்க்க முடியவில்லை.

இந்தப் பின்னணியில்  ஆஸ்பத்திரி வீதியானது அதன் பல தசாப்தகால தொடர்ச்சி காரணமாக, யாழ்ப்பாண நகரம் என்ற நகர மரபுரிமையின் எஞ்சியிருக்கும்  கூறுகளில் (பல சிதைவுகள் நடந்றேி இருப்பினும்) ஒன்றாகக் காணப்படுகிறது. இருந்தபோதிலும் ஆகக் குறைந்தபட்சம் ஆஸ்பத்திரி வீதியின் எஞ்சிய குறைந்தபட்சப் பண்புகளையாவது காக்க வேண்டும். ஏற்கனவே காங்கேசன்துறை வீதி என்ற காலனியக் கலப்பொட்டுடன் (hybrid) கூடிய தமிழ் நகரங்களின் பொதுப்பண்புடைய தெரு சிதைக்கப்பட்டு விட்டது. இப்போது அது அகன்ற ஒரு வெற்றுத்தெரு மட்டுமே. அதன் கட்டட உடல்களும், தெருவின் அளவும் – இயல்புகளும் பொதிந்து வைத்திருந்த வரலாற்று ஞாபகங்களும் தடையங்களும் குலைத்தெறியப்பட்டுவிட்டன. யாழ்ப்பாண மறுமலர்ச்சியின் ஒரு வரலாற்றுத் தெரு எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமற் பிடுங்கப்பட்டது போன்ற ஒரு நிலவரமே இப்போது ஆஸ்பத்திரி வீதிக்கும் நடைபெற இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வீதி இன்னும் பொத்தி வைத்திருக்கும் சில கூறுகளே, பழைய ஆஸ்பத்திரி வீதியை எம்முள் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அப்படியான ஒரு நகர மரபுரிமையின் மிகச் சிறிய – ஏறத்தாழ அதன் கடைசிக் கூறுகளைத்தான் இப்போது நாம் பலி எடுக்கத் தலைப்பட்டுள்ளோம். இதில் ஆச்சரியமானது என்னவெனில், நகர பிதா அவர்களிடம் இன்று  ஒரு மரபுரிமைக் காப்புப்படையணி ஒன்றுள்ளது. அதனைச் சார்ந்த வளவாளர்கள் ஏன் இந்தத் தெருவின் வரலாற்றுப் பண்பாட்டு முக்கியத்துவத்தை நகரபிதாவின் கனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பது எனக்குப் புரியவேயில்லை.

1970 ஆஸ்பத்திரி வீதி

அதேவேளை, 1980களின் நடுப்பகுதி மற்றும் 1990களது முற்பகுதியில் கோட்டையில் இருந்து ஏவப்படும் எறிகணையின் பிரதான எல்லையாகவும் ஆஸ்பத்திரி வீதியே பிரதானதாக அமைந்திருந்தது. அதனைத் தாண்டி ஆஸ்பத்திரிக்குள் வந்து எறிகணைகள் வீழ்ந்தநாட்களும் உண்டு. என்னைப் போன்றவர்களின் நினைவுகளுக்குள் புதிதாக எழுந்து நிற்கின்ற கார்கில்ஸ், ஜெற்விங் ஹொட்டேல் முதலிய கட்டுமானங்களைத் தாண்டி யாழ்ப்பாணப் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கக் கட்டடம், வீழ்ந்து வெடித்த எறிகணையில் சிதறிப்போன சனங்களது நினைவுகள் எல்லாம் ஒட்டியுள்ளன. அந்த நினைவுகள் ஆஸ்பத்திரி வீதியுள் மறைந்துகிடக்கும் பழைய- இன்னும் தப்பியொட்டிக் கிடக்கும் சிலபல பௌதீக அம்சங்களால்தான் விளைகின்றன. அப்படிப் பார்க்கும்போது அது ஒரு யுத்தகால நினைவு புதைந்து கிடக்கும் தெருவுங் கூட.

ஆங்கிலக் கவர்னரான டைக், யாழ்ப்பாண ஆஸ்பத்திரியை நிறுவியதோடு வளரத்தொடங்கிய இத்தெரு 1950களின் பின்னரே இப்போதுள்ள கடைகளின் முன்னோடிக்கடைகள் பெருமளவுக்குத் தோன்றி உருவாகி விரிந்திருந்தாலுங் கூட, மேலே சுட்டிக்காட்டப்பட்ட வரலாற்று விடயங்களாலும் அதற்கான தடயங்களாலும் உருவாகி ஒரு மௌனமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தெருவாகியும் இருக்கிறது. இன்று  ஒசுசல இருக்கும் மின்சாரசபையின் பழைய கட்டடங்கள் உள்ளிட்ட சில கட்டடங்களை விடுத்துப் பர்த்தால் ஆஸ்பத்திரி வீதியிற் காணப்பட்ட காலனிய கட்டட மரபுரிமைகளை நாம் எல்லோரும் கூட்டிணைந்து விழுங்கி ஏப்பமும் விட்டு அமர்ந்தாகிவிட்டது.

இன்றைய  ஆஸ்பத்திரி வீதி

சரி, இவை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இப்போது இந்த வீதியை அகலிக்க வேண்டிய காரணம் யாது? அப்படி என்ன தலைபோகின்ற பிரச்சினையை இந்த வீதி நகரத்திற்குக் கொடுக்கிறது? ஏற்கனவே பாதசாரிகளுக்கான நடைபாதை இரண்டு புறமும்  உள்ளது. வீதியின் இரு புறமும் ஏறத்தாழ இரண்டிரண்டு வாகனங்களுக்கான பாதைகள் உள்ளன. அது சற்று நெருக்கமாக இருப்பது பிரச்சனையா? அல்லது ‘பெரியகடைக்கு’ கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றி வரும் லொறிகள் உள்ளிட்ட பார ஊர்திகள் நடமாடச் சிரமமாய் உள்ளதா?  எதற்காக இந்த நடவடிக்கையில் முனைப்பாய் உள்ளோம்?

இவைதான் பிரச்சினை என்றால், இவற்றைக் கையாள வேறெந்த மாற்று வழியும் இல்லையா? அல்லது ஒரு சமூகத்தின் பண்பாட்டு அடையாளங்களைக் காத்து அதன் சமூக வரலாற்றுத் தனித்துவங்களை காப்பதற்கான ஒரு பொறிமுறையானது வாகனங்களுக்கு போய்வர இடங்காண முடியாதுள்ளது என்பதை விடவும்  முதன்மையானதா?.

மத்திய வாகனத்தரிப்பிடம் காரணமாக பிரச்சினைகள் வருகின்றது எனின் அதனை ஒழுங்குபடுத்தும் மாற்றுச் சிந்தனைகள் எவையும் எம்மிடம் இல்லையா? எந்தெந்த வாகனங்கள் எங்கு நிறுத்தப்பட வேண்டும், எப்படி அவை தரிக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச வழிகாட்டல்கள் ஏதும் அவ்வீதிக்கு உண்டா?  அல்லது இப்போதுள்ள வாகனத்தரிப்பிடச் சிக்கல்களை தீர்க்க நகர அபிவிருத்தித் திட்டமிடலாளர்களது மூல வரைபடங்களில் அதற்கான திட்டங்கள் ஏதும் இல்லையா? கண்டிப்பாக இருக்கும் என்றே நம்புகிறேன். ஒரு குட்டிப்பட்டினத்தைச் சுற்றி வர எவ்வளவு நிமிடங்கள் எடுக்கும்? பாதிவாகனங்களை நகரத்தின் விளிம்புகளில் அமைக்கப்படும் தரைமைய இல்லது தரைக்கீழ் (underground) தரிப்பிடங்களில் விட்டு வைத்துவிட்டு நடந்து தமது செயற்பாடுகளை மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்க வேண்டாமா? (அது, சலரோகம், இதய நோயுள்ளவர்கள் இந்தச்சாட்டிலாவது நடந்து அவர்கள் உடலிற் தேங்கிக்கிடக்கும் கலோரிகளில் எரிக்க உதவுமே?

கொவிட் -19 க்கு பிற்பட்ட பிரான்ஸ் முதலான நாடுகள் , அதனை முகாந்திரமாக வைத்து நகரத்துள் வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும், கட்டுப்படுத்தும் நிரந்தர செயற்பாடுகளை நோக்கிச் செல்ல, நாமோ தெருக்களை அகலித்தலே வாழ்வின் இலக்காகக் கொண்டு ‘உங்கள் படுக்கை அறை வாசல் மட்டும் உங்கள் வாகனத்திலேயே செல்ல வைக்கிறோம்’ என்கின்ற மாதிரித் தொழிற்படுகின்றோம். அவ்வகையில் பண்பாட்டு அடையாளம், வரலாற்றுத் தடயத்தை காப்பாற்றுதல், நகரத்தின் தனிச்சிறப்படையாளத்தை தக்கவைத்தல் என்பதைவிட இடித்தழித்து பெரிப்பித்தலே ஞானம் என்றவாறு தொழிற்படுவது ஏன்? இவையெல்லாம் இல்லாது சிறுபான்மைச் சமூகங்கள் போகவேண்டும் என்று விரும்பும் பண்பாட்டுப் படுகொலைச் செயல்களுக்கு  இதன் மூலமாக தெரிந்தும் தெரியாமலும் நாங்களும் முகவர்கள் ஆகுகின்றோமா?

‘பண்பாட்டு அடையாளமற்ற அபிவிருத்திகள்  அபிவிருத்திகளேயல்ல’ என்றுதானே இன்றைய அபிவிருத்திப் பொருளியலாளர்கள் கூறுகிறார்கள். அந்தக் கூற்று முட்டாள்தனமானது என்று எங்கள் யாழ்ப்பாணத்து அறிஞர் பெருமக்கள் நினைக்கிறார்கள் போலும்?

  ஆஸ்பத்திரி வீதி மத்திய தரிப்பிடம்

உண்மையில் நகர வீதிகளின் மிகமுக்கியான பிரச்சினைகள் நகரக்கட்டடங்களுக்கான விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்படாமையால் உருவானவையாக இருப்பதைக் காணலாம். அதற்குப் பல்வேறுபட்ட காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதனை எல்லாம் ஒழுங்குபடுத்திக் கையாளுவதன் மூலந்தான் இதனைச் செய்ய முடியும். குறிப்பாக ஆஸ்பத்திரி வீதியில் – குறிப்பாக ஆஸ்பத்திரிக்கு முன்பாக  உள்ள தெருத் துண்டை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், அந்தப் பக்கத்தின் பாதசாரிகளுக்கான நடைபாதைக்கான இடம், அந்தப்பக்க கடைகளால் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ பல இடங்களில் குழப்பப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் அந்த மாதிரியான விடயங்களில் பல்வேறு காரணங்களுக்காக நாம் வாளாதிருக்கிறோம் என்பதை மறுக்க முடியுமா?. அவற்றிற் தலையிட எங்களிடம் சட்டங்கள் இல்லையா அல்லது அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர எங்களிடம் தற்துணிவு இல்லையா? நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு முதுநகரத்தின்  அடையாளங்களை அழிப்பதன் மூலம் எமது வரலாற்று தடயங்களை, பண்பாட்டுக் கூறுகளை அழிப்பதிற் பங்குகொண்டு வரலாற்றுக் கையறுநிலையை விரைந்து உருவாக்க உள்ளோம் என்பதை ஏன் உணர மறுக்கிறோம்.

அண்மையில் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை மாநாட்டுக்காக சமாப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுதியைப் (2019) பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு கட்டுரை எவ்வாறு மாநகர சபை முதலியவற்றின் பாராமுகமான செயற்பாடுகளுக்கு நடுவே ஆஸ்பத்திரி வீதியின் கட்டட முகப்புக்கள் முதலானவை யாழ்ப்பாண நகரத்தின் முகத்தைச் சீரழிக்கின்ற முறை பற்றியும், அது எவ்வாறு அதன் நகரவாக்கத்தை மிகக் குழப்பமான திசையில் எடுத்துச் செல்கிறது என்பது பற்றியும் பேசி இருந்தது. ஆனால் இவ்வகைப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆய்வாளர்களது கருத்துக்களை – ஆற்றல்களை நாம் பயன்படுத்த விரும்புவது இல்லை? – அவை தொடர்பில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் அல்லது ஏற்புடைமை இல்லாது கூட இருக்கலாம். ஆனால் ‘யாரையும் – எக்கருத்தையும் எக்காரணங்கொண்டும் செவிமடுக்க மாட்டோம்’ என்ற எமது  சுய முனைப்பின் அடிப்படை யாது? என்பது எனக்கு எப்போதும் புரிவதே இல்லை.

உதாரணமாக, வேம்படிச்சந்தியிலிருந்து – சத்திரத்துச்சந்திவரை ஆஸ்பத்திரி வீதியைப் பிரதானமாக எடுத்துக் கொண்டால், அதுவொரு குறுந்தூரம். அந்தக்குறுந்தூரத்திற்கு சமாந்தரமாக பல வீதிகள் அல்லது கிட்டிய இடைவெளியில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி இதன் நெருக்கடியைக் கையாள எங்களிடம் நகரத் திட்டமிடலாளர்கள் இல்லையா? அல்லது பார ஊர்திகள் பொருட்களை எடுத்துவருதற்கான நேரக்கட்டுப்பாட்டை கொண்டுவரமுடியாதா? அவை பின்னிரவில்தான் குறித்த வீதியைப் பயன்படுத்தலாம் என்ற விதிமுறைகள் உலகத்தில் எல்லா இடங்களிலும் தானே உள்ளன?

உலகத்தில் பல நகரங்களில் வாகனங்களைக் கொண்டு செல்லவே அனுமதிக்கப்படாத அல்லது நடந்து செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட வீதிகள் உள்ளன. இவ் வீதிகளை அவர்கள் அதன் பண்பாட்டு வரலாற்று முக்கியத்துவம் கருதி அல்லது அதனைத் தமது மரபுரிமைத் தெருவாக நிலைநிறுத்தி பாதுகாப்பதற்காக இத்தகைய செயற்பாடுகளை மேற்கோண்டுள்ளார்கள்.

இதற்கப்பாலும் யாழ்ப்பாணத்திற்கான பெரிய ஆஸ்பத்திரிக்கு முன்பாகத்தான் இதனைச் செய்ய முற்படுகிறோம். தெருக்களை மேலும் பெருப்பித்து ஆஸ்பத்திரிக்குக் கிடைக்க வேண்டிய அமைதியை குழப்புகின்றோம். அது மட்டுமில்லாமல் ஆஸ்பத்திரியும் இவ்விடத்திலேயே வீங்கிச் செல்கிறது. இவற்றையெல்லாம் கவனத்திலெடுத்த தொகுப்பட்ட  ஒரு பார்வைக் கூடான வலிமை மிக்க திட்டமிடலை ஏன் செய்கிறோமில்லை? இது கடைசியாக பசுக்கன்றின் தலையில் மாட்டிய பானையை எடுத்த ‘கன்றுமில்லை, பானையுமில்லை’ என்ற கதையாகத்தான் முடியப்போகிறதா?

நகர பிதா அவர்களே, இந்தக் கடிதம் தங்களைக் குற்றஞ் சாட்டவோ அல்லது உங்கள் தன்முனைப்பைத் தூண்டி சினங்கொள்ள வைக்கவோ அல்ல. ஒரு நகரபிதாவோடு உரையாட அந்தநகரத்தின் ஒரு குடிமகனுக்குள்ள உரிமை சார்ந்தது மட்டுமே. ஆனால், என் வயது அனுபவத்தில் இக்கடிதம் பெரும்பாலும் கிணற்றிற் போடும் ஒரு கல்தான் என என் மனஞ் சொல்கிறது. ஆனாலும் துறைசார் சிந்தகனைகள், கூட்டு உழைப்புக்கள் – உரையாடல்கள் மூலமாக ஆரோக்கியமான நிலைவரங்களை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையோடும், ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுப் படுகொலைகளுக்கு உட்பட்ட சமூகத்தில் நாமும் நம்மை அறியாமலே அதில் பங்குபற்றி விட்டோம் என்ற காலஞ் சென்று வரும் ஞானத்தால் (சுடலை ஞானம்?) நாளை நாம் எல்லாம் அவதிப்படாமல் இருக்கவேண்டியும் இதனை எழுதுகிறேன்.

வணக்கம்

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

17875 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்