ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையை 1658 யூன் மாதத்தில் கைப்பற்றிச் சில வாரங்களில், இந்தப் படை நடவடிக்கையில் பங்குகொண்ட பெரும்பாலான ஒல்லாந்தப் படையினர் நாகபட்டினத்தைக் கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டனர். யாழ்ப்பாணக் கோட்டையின் பாதுகாப்புக்குக் குறைந்த அளவு படையினரே இருந்தனர். முன்னைய அரசில் பணிபுரிந்த போர்த்துக்கேயர் சிலரும் ஒல்லாந்தருக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பணியாற்றினர். 1658 ஆம் ஆண்டு செப்டெம்பரில் இவர்களில் ஒரு பகுதியினரும், உள்ளூரைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து ஒல்லாந்தருக்கு எதிராகச் சதித் திட்டம் ஒன்றை வகுத்ததாக பல்தேயஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். தேவாலயத்தில் வழிபாடு நடைபெறும் நேரத்தில், கோட்டையில் இருந்த எல்லா உயர் அதிகாரிகளையும், காவலர்களையும் கொன்றுவிட்டுக் கோட்டையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே மேற்படி குழுவினரின் திட்டமாக இருந்தது என்றும் அவர் கூறுகின்றார்.
எனினும், வழிபாடு நடந்துகொண்டிருக்கும்போது, ஒரு தற்செயல் நிகழ்வாக, படைத் தலைவனும், முதலியாரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவனுமான டொன் மனுவேல் அந்திராடோ என்பவன் தனது 18 உதவியாளர்களுடன் தேவாலயத்தின் வாயிற் பகுதியில் நின்றதால், இந்தத் திட்டம் வெற்றி அளிக்கவில்லையாம். ஆனாலும், அச்சமயத்தில் போர்த்துக்கேயர் சிலர் வாளில் கையை வைத்துக்கொண்டு தேவாலய வாயிற்பகுதியில் நின்றதாகவும், அது அந்திராடோவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்னும் குறிப்பும் பல்தேயசின் நூலில் காணப்படுகின்றது.
சில நாட்களுக்குப் பின்னரே இத்திட்டம் குறித்துக் கட்டளைத் தளபதியான ஜேக்கப் வான் டெர் றீ அறிந்துகொண்டதாகவும், அதன் பின்னர் கோட்டையின் பாதுகாப்பு இரட்டிப்பாகப்பட்டு, கோட்டை வாசற் கதவுகளும் மூடப்பட்டதுடன், சதித் திட்டத்துடன் தொடர்புபட்ட அனைவரும் பிடிக்கப்பட்டதாகவும் தெரிகின்றது. இவ்வாறு பிடிபட்ட 15 பேர்களில், மூவர் சதிக் குழுவின் தலைவர்களாக அடையாளம் காணப்பட்டனர். ஒருவன் மன்னாரைச் சேர்ந்தவன் என்றும், இன்னொருவன் டொன் லூயிஸ் என்றும், மூன்றாமவன் ஒரு போர்த்துக்கேயன் என்றும் பல்தேயசின் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. பிடிபட்டவர்களுள் யேசுசபையைச் சேர்ந்த கத்தோலிக்கக் குருவானவரான கல்தேரா என்பவரும் அடங்கியிருந்தார். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர், கத்தோலிக்கப் பாதிரிமார் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்றபோது, உடல்நலமின்மை காரணமாக இவர் செல்ல முடியவில்லை. இவருக்குச் சதியுடன் நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும் இது குறித்து அவர் முன்னரே அறிந்திருந்தார் என்றும், அதை அறிவிக்கத் தவறினார் என்பதே இவர்மீதான குற்றம் என்றும் தெரியவருகின்றது.
தலைவர்களாகக் கருதப்பட்ட மூவருக்கும் குரூரமான முறையில் தண்டனை வழங்கப்பட்டது. அவர்களை சக்கரத்தில் அல்லது சிலுவையில் பொருத்திக் கழுத்திலும், மார்பிலும் கோடரியால் வெட்டிக் கொன்றனர். பின்னர் இவர்களது தலைகளை ஈட்டியில் குத்தி பொதுச் சந்தையில் பார்வைக்கு வைத்தனர். கத்தோலிக்கப் பாதிரியாரின் தலையை வெட்டி அவரைக் கொன்றனர். ஏனைய பதினொருவரும், தூக்கில் இடப்பட்டனர். இந்தக் கொடுமையான தண்டனையைக் காட்டும் படம் ஒன்றை பல்தேயஸ் பாதிரியார் தனது நூலில் தந்துள்ளார்.
மேற்படி நிகழ்வுகளே யாழ்ப்பாணத்தில் பெரிதும் அறியப்பட்ட பூதத்தம்பி கதையின் அடிப்படையாகும். சதிக் குழுவின் தலைவர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்ட டொன் லூயிஸ் என்பவனே பூதத்தம்பி. இவன், சதித் திட்டத்தை முறியடித்தவனாகச் சொல்லப்படும் அந்திராடேக்கு இணையான பதவி வகித்தவனும், முதலியாரும் ஆவான். ஒருமுறை பூதத்தம்பி, அந்திராடோவைத் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தபோது பூதத்தம்பியின் அழகான மனைவியைக் கண்ட அந்திராடோ அவள்மீது ஆசை கொண்டானாம். இதன் காரணமாக ஏற்பட்ட பகைமையின் விளைவாக, பொய் ஆவணம் ஒன்றைத் தயாரித்த அந்திராடோ, அதன் மூலம் பூதத்தம்பியைச் சதித்திட்டக் குற்றச்சாட்டில் சிக்க வைத்து அவனது மரணத்துக்குக் காரணமானான் என்பதே பூதத்தம்பி கதையின் சுருக்கம்.
பூதத்தம்பி கதை முதன் முதலாக யாழ்ப்பாண வைபவ மாலையில் காணப்படுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலை, மேற்படி நிகழ்வு நடந்து ஏறத்தாழ 130 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டது. எனவே, வைபவமாலை ஆசிரியர் செவிவழிக் கதைகளை ஆதாரமாகக் கொண்டே இக்கதையை எழுதியிருக்கவேண்டும் என யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை போன்ற சிலர் கருதுகின்றனர்.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் பூதத்தம்பி கதை தொடர்பில், சர்ச்சைகள் நிலவியதாகத் தெரிகின்றது. யாழ்ப்பாண வரலாற்றாளர்களும், வரலாற்று ஆர்வலர்களும், இவ்விடயத்தில் இரண்டு குழுக்களாகப் பிரிந்திருந்ததாகத் தெரிகின்றது. யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆசிரியர் க. வேலுப்பிள்ளை, யாழ்ப்பாணம் தொடர்பான குறிப்புக்கள் (Notes on Jaffna) என்னும் நூலைத் தொகுத்த யோன் எச். மார்ட்டின் போன்றவர்கள் பூதத்தம்பி கதை உண்மைக்குப் புறம்பானது என்னும் கருத்தைக் கொண்டிருந்தனர். இது தொடர்பான சர்ச்சைகளில் ஈடுபட்ட பலர், மதம், சாதி, இனம் என்பவை தொடர்பில் தத்தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்ப, பூதத்தம்பியையோ, அல்லது அந்திராடோவையோ நியாயப்படுத்த முயற்சித்தனர் என்பது தெளிவு.
பூதத்தம்பி கதை, நீண்ட காலமாகவே யாழ்ப்பாணத்தில் நாடகமாக நடிக்கப்பட்டு வருகின்றது. கதையாகவும், நாடகமாகவும், இசை நாடகமாகவும் நூல்களாகவும் வெளிவந்துள்ளது. எனவே, சுவாரசியத்துக்காகக் கற்பனைகள் கலந்திருக்கக்கூடும் என்பதோ, அவ்வக்காலச் சமூக, அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப அதில் பல்வேறு விடயங்கள் சேர்க்கப்பட்டிருக்கக்கூடும் என்பதோ உண்மையாக இருக்கலாம். பூதத்தம்பி கதை உண்மையல்ல என வாதிடுவோர் பல்தேயஸ் பாதிரியார் குறித்த நிகழ்வுகள் நடைபெற்ற காலத்தில் அங்கு இருந்தவர் என்பதால் ஆவரது கூற்று உண்மையானது என்னும் நிலைப்பாட்டில் இருந்ததும் தெளிவாகின்றது. ஆனாலும், அந்திராடோவின் சந்தேகத்தைத் தவிர, சதிமுயற்சி தொடர்பான வேறு சான்றுகளையோ, முறையான விசாரணைகள் நடைபெற்றது தொடர்பான தகவல்களையோ பல்தேயஸ் பாதிரியார் தரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
தொடரும்.