ஈழத் தமிழ் உணவு மரபுரிமை
Arts
7 நிமிட வாசிப்பு

ஈழத் தமிழ் உணவு மரபுரிமை

July 29, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

கொழும்பிலுள்ள பிரபலமான ‘சைவ உணவகங்கள்’ (???) என அழைக்கப்படும்  மரக்கறி உணவுச்சாலையில் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருக்கையில் ஈழத்தமிழர்களின் உணவுப் பாணியிற் சமைக்கப்பட்ட அல்லது பாரம்பரிய ஈழத்தமிழ் உணவுகளை இலங்கையில் எங்கு சாப்பிடலாம் என்ற ஒரு உரையாடல் எழுந்தது. அப்படியொரு இடம் இலங்கையின் தலைநகரத்திலோ – தமிழ் மக்களின் பூர்வீகமாக வாழ்ந்து வருமிடங்களிலோ இல்லை என்பது துரதிர்ஷ்டவசமான ஒரு உண்மை. சில வேளைகளில் அவ்வகைப்பட்ட அதிகாரபூர்வமான உள்ளூர் உணவுச்சாலை என சில உணவுச்சாலைகள் தம்மை விளம்பரம்பரஞ் செய்தாலும் கூட உண்மையில் அவை பெரும்பாலும் வர்த்தக வெற்றிக்கான வெறுங்குறியீடுகள் மட்டுந்தான்.

பனங்காய் பணிகாரம்

உணவுகளும் – உணவுப்பழக்கவழக்கங்களும் ஒரு சமூகத்தின் மாறாத அலகுகள் என்றோ அல்லது ஒரு பண்பாட்டில் என்றும் நிலை கொண்டு இருந்தவை என்றோ எம்மால் வாதிட முடியாது. இன்று எம்மிடமுள்ள உணவுகள் அல்லது  உணவுப் பழக்க வழக்கங்களிற் சிலவோ – பலவோ  காலனிய காலத்தில் எம்மிடம் நிலை பெற்றவைதான். அவற்றை கடந்த சில நூற்றாண்டுகளாக பயில்வதன் மூலமாக தமிழ்ப் பண்பாட்டுவயமாக்கியுள்ளோம். தேனீரும் – கோப்பியும் இன்னும் பலவகை உணவுகளும் இந்த வகைப்பட்டவைதான் என நாங்கள் அறிந்துள்ளோம். இன்று மரபார்ந்த தமிழ் – சிங்களச் சிற்றுண்டியாகக் கொள்ளப்படும்  ‘கொக்கீஸ்’ அதன் மூலத்தில் ஒல்லாந்தப் பின்னணி கொண்டதெனவும், அது தென்கிழக்காசியாவின் பல நாடுகளில் சிற்றளவு பெயர் வேறுபாடுகளுடன் பயிலப்படுவதையும் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டேபோறா  தன்னுடைய ஆய்வொன்றில் எடுத்தக் காட்டியுள்ளார்.

பிளாவில் கூழ்

இவ்வாறு பண்பாடுகள் யாவும் தலைமுறை, தலைமுறையாகப் பின்பற்றி வரும் உணவுகள் – உணவு மரபுகள், பண்பாட்டுத் தொடர்புகள் ஊடாக காலந்தோறும் தகவமைக்கப்பட்ட அல்லது நிலைநிறுத்தப்பட்ட உணவுகள் என்பவற்றாலான உணவுக் கட்டமைப்பைக் கொண்டு காணப்படும். அது மட்டுமின்றி அவை குறிப்பிட்ட பிரதேசத்தின் புவியியல் – காலநிலை ஆகியன சார்பாக உடலுக்குத் தேவைப்படும் மசாலா சரக்குகள் அல்லது வாசனைத் திரவியங்கள் என்பவற்றோடும் பின்னிப்பிணைந்து ‘உணவே மருந்தாகவும்’ தொழிற்படுபவை. இன்னொரு வகையிற் சொன்னால் ஒரு குறிப்பிட்ட பிராந்தியமொன்றின் அந்தந்தக்கால உடலுழைப்பு முறைகளோடும், சீதோஷண முறைகளோடும் அவை தொடர்புபட்டுள்ளன.

கொக்கீஸ்

துரதிர்ஷ்டவசமாக பல்வேறு சமூக வரலாற்றுக் காரணிகள் இந்தக் கட்டமைப்பின் மீது தாக்கம் செலுத்துவதன் மூலமாக அவற்றின் பண்பாட்டுத் தனியடையாளக் கட்டமைப்பைக் குழப்புகின்றன என்பதுடன் பௌதீக சீதோஷ்ண ரீதியாக நட்புடைய உணவுகளின் தொடர்ச்சியான வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகியுள்ளன. அவை ‘உணவே மருந்து’ என்பதற்குப் பதிலாக ‘உணவே நோய்’ என்ற நிலைக்கும் சமூகத்தை இட்டுச் சென்றுள்ளன. பொதியிடப்பட்ட உடனடியுணவுகள் (Instant food) தொடக்கம் உலகளாவிய வர்த்தகச் சங்கிலியமைப்புடைய உணவுச்சாலைகளின் விரைவுணவுகள் (Fast food) வரை இத்தகைய நிலைமைகளை பெருகச் செய்துள்ளன. இதனை மாறிய வாழ்க்கைக்குள் மாற்றப்படாதிருக்கும் பலவித வாழ்க்கைப் பாணி சாந்த விடயங்களும் ஊக்குவிக்கின்றன என்பது அதன் இன்னொரு துரதிர்ஷ்டமான விடயமாகவுள்ளது.


இதேநேரம் போர், இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள் முதலியவற்றால் உருவான சமூகநிலைக் குலைவுகள், பொருளாதார நிலைமாற்றங்கள், நகர மற்றும் பூகோள மயமாக்கத்தின் விளைவுகள், ஊடகப் பண்பாட்டின் அதிகரித்த செல்வாக்குகள் எனும் பலவும் மரபார்ந்த உணவு மரபுரிமையைக் குழப்புகின்றன. மரபார்ந்த  தானியங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக ‘பச்சைப் பெருமாள்’ முதலிய நெற் பயிர்களுக்குப் பதிலாக ‘ஆட்டக்காரி’ முதலான மரபணு மாற்றியமைக்கப்பட்ட (Genetically modified) நெற் பயிர்கள் முன்னணிக்கு விடப்பட்டுள்ளன. அதன் ஊடாக உடலுக்கு – விளைநிலத்துக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிய எந்தவொரு உரையாடல்களையும் நாம் மேற்கொள்வதில்லை. இரசாயன வளமூட்டிகள் – களை மற்றும் பூச்சி கொல்லிகளின் ஊடாக ஏற்படும் உணவு நஞ்சாகும் நிலவரங்களுக்கு எதிராக பாரம்பரிய முறைகளை மீள் கண்டுபிடித்தல் – இயற்கை விவசாயம் பற்றிய உரையாடல்கள் எம்மிடம் பலமாக இல்லாது ஈனசுரத்திலேயே ஒலிக்கின்றது.

இத்தகைய பின்னணியில் மரபார்ந்த உணவுகளை – சமையல் முறைகளை அவற்றின் வேறுபட்ட தனித்துவங்களை முன்னிலைப்படுத்தும் செயற்றிட்டங்கள் தேவைப்படுகின்றன. வீடுகளிலிருந்தும் – பொது இடங்களிலிருந்தும் மெல்ல இல்லாதொழிந்து வரும் அல்லது வேறுபாடுகளின்றி, ஒருவிதமாகி, சுவையில் மிகவும் மேலோட்டமாகிக் கொண்டுவருகின்ற ஈழத்தமிழ் உணவுப் பண்பாட்டை மீட்க இத்தகைய பரந்துபட்ட செயற்பாடுகள் தேவை. பிராந்திய – குறிச்சி வேறுபாடுகள் முதல் வேறுபட்ட சமூகக்குழுக்கள், மத, வர்க்கக் கட்டுமான வேறுபாடுகள் வரையுமுள்ள உணவுப் பண்பாட்டின் தனித்துவங்கள் மீட்கப்படவேண்டும். அவற்றோடு மரக்கறி முதல் கடலுணவு – ஊனுணவு வரையுள்ள பலதரப்பட்ட ஈழத்தமிழ் உணவுகளின் பண்பாட்டை காக்க வேண்டிய ஒரு காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

இயற்கை வழி வேளாண்மை முன்னோடி தஞ்சாவூர் நம்மாழ்வார்

இந்த மீட்பு பல தளத் தேவைகளை நோக்கியவொன்றாக அமைய வேண்டும். அவை ஈழத் தமிழ் உணவுகள் – உணவுச் சம்பிரதாயங்கள், மாறிய சமூகச் சூழலுக்குள் உணவை மருந்தாக்கல்  முதல் உணவுக் கைத்தொழிலை (Food Industries) விருத்தியாக்கல் உல்லாசப் பயணத்துறையின் பல கிளைகளில் உள்ளூர் உணவை நிலைபேறடையச் செய்தல், அவற்றின் பகுதியாக ஈழத்தமிழ் உணவுத் திருவிழாக்களை நடாத்துதல் என பொருளாதார ரீதியான முன்னேற்றத்ததிற் உணவுப் பண்பாட்டையும் முதலிடல் என்ற ரீதியில் இது சிந்திக்கப்படலாம்.

இது விவசாயிகள் பண்டைய தானியங்கள் – விதைகளைக் காப்போர்கள், தலைமைச் சமையற்காரர்கள், உணவுக் கைவினைஞர்கள், உணவுச்சாலைகள் வைத்திருப்போர், சிற்றுண்டி உற்பத்தியாளர், அவை தொடர்பான செயற்பாட்டாளர்கள், கல்வியலாளர்கள், மரபுரிமைசார் ஆர்வலர்கள், மருத்துவ சுகாதாரப் பணியாட்கள் என பல தரப்பட்ட துறையினரது பங்களிப்போடு கட்டப்பட வேண்டும். கருத்து ரீதியாக பொது வைபவங்களில் பாரம்பரிய உணவுகளை பயன்படுத்துதல் முதல் பிரதேசசபைகள் வருடாந்த உணவுத் திருவிழாக் கொண்டாட்டங்களை நடாத்துதல் வரை பரவலாக்கப்படலாம். அது மட்டுமின்றி மனைப்பொருளியல் பாடத்திட்டத்தை அதன் மேற்கு மையத்திலிருந்து விடுவித்து உள்ளூர்மையமாகவும் பொருத்தப்பாடுடைய மேற்கத்தைய கலப்பை உடையதாகவும் உருவாக்கல் மூலமாக கல்வி ரீதியாக உள்ளூர் உணவுப் பண்பாட்டைப் பற்றிய விரியவான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தலாம்.

யாழ்ப்பாண இளைஞனின் இயற்கை விவசாய உற்பத்திகளின் விற்பனை நிலையம்

இவற்றினூடாக பரந்துபட்ட பிரக்ஞையை சமூகத்தில் ஏற்படுத்தல் மூலமாகவே இன்றைய ’மிக்சர் – தேநீர்’ (mixture and tea) கலாசாரத்திலிலுந்து வெளிவரவும், புதிய உணவுகளை உள்ளூர் உணவுகளிலிந்து கண்டுபிடிக்கவும், அதிலும் சிறப்பாக பண்டைய உணவுப் பண்பாட்டை மறுபடி நிலை கொள்ளச் செய்யவும், அவற்றை பலவேறு தேவைகளுக்கான சிறப்பு அடையாளமாகவும் முதலீடு செய்திட உதவ முடியும்.

அவ்வகையில் நாமுண்ணும் உணவுகள், அதனுருவாக்கங்கள் அதனை விருந்திடும் முறைகள், அதன் கதைகள்,   அதன் மூலப் பயிர்கள், அது உருவாகும் நிலம் அதனை உற்பத்தி செய்யும் மக்கள் என அவற்றை கொண்டாடும் சமூக அடையாளமாக முன்னிறுத்தும், அதனை சமூக அபிவிருத்தியின் முதலீடாக்கம் செய்தலை உள்ளடக்கிய உணவு மரபுரிமையை எம்மால் கட்ட முடியும்.

அதேநேரம் வளர்ந்துவரும் மாற்று உணவுப் பாரம்பரியம் அல்லது உள்ளூர் உணவுகளின் மீள் கண்டுபிடிப்பு என்பவற்றை பல்தேசியக் கம்பனிகள் கைப்பற்றிக் கொள்ளும் உத்திகளும் அரங்கேறத் தொடங்கிவிட்டன. எவர்கள் பாரம்பரிய உணவுப் பண்பாட்டை மாற்றி அழித்தார்களோ அவர்களே அதிகரித்து வரும் பாரம்பரிய உணவு வகைகள் மீதான நாட்டத்தை சந்தைப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பது தொடர்பிலும் எச்சரிக்கை எமக்கு இருக்கவேண்டும். அவர்கள் மெதுவாக தமது சந்தை – வர்த்தகத் தேவைகளுக்கு ஏற்ப உள்ளூரை தமது முறையில் பொதி செய்து கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கைகளுக்குள் வந்துவிட்டனர். அவர்களுக்கு பாரம்பரியமோ அல்லது அதனைப் பாதுகாத்தலோ என்பதோ நோக்கம் இல்லை. பதிலாக சந்தையைக் கைப்பற்றல் என்பது மட்டுமே அவர்களது இலக்கு. அவர்கள் பாரம்பரியத்தின் பெயரில் கண்ணுக்கு புலனாகாத அதிகாரத்தையும் – உணவு நியமங்களையும் உருவாக்க முயலுவர். அது தொடர்பிலும் எமக்கு அதீத விழிப்புத் தேவைப்படுகிறது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

13078 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)