ஒல்லாந்தரின் யாழ்ப்பாணக் கோட்டை
Arts
5 நிமிட வாசிப்பு

ஒல்லாந்தரின் யாழ்ப்பாணக் கோட்டை

February 11, 2021 | Ezhuna

யாழ் நகரம் அதன் வரலாற்றுக் காலத்தில், அதன் நிர்வாக எல்லைகளுக்கும் அப்பால் பரந்துள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் பல்வேறு பொருளாதார, அரசியல், நிர்வாக, பண்பாட்டு வகிபாகங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண நகர வரலாறு, அதன் மரபுரிமை சார் அம்சங்கள், ஐரோப்பியர் ஆட்சியில் யாழ். நகரின் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களின் திரட்டுகள் என்பனவற்றை உரிய ஆதாரங்களோடு ‘யாழ்ப்பாண நகரம் 400’ என்ற இத்தொடர் முன்வைக்கின்றது. 400 ஆண்டுகால யாழ்ப்பாணத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்த கட்டுரைகளை இத்தொடர் கொண்டமைந்துள்ளது.

போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆண்டபோது பண்ணைப் பகுதியில் ஒரு கோட்டையைக் கட்டியிருந்தனர். இது நான்கு மூலைகளிலும் கொத்தளங்களைக் கொண்ட நாற்பக்க வடிவம் கொண்டது. இதன் சுவர்களும் பலம் வாய்ந்தவையாக இருந்தன. சுவருக்கு வெளியே கோட்டையைச் சுற்றி நீரில்லாத அகழி இருந்தது. இது, கிழக்கத்திய நாடுகளில் ஒல்லாந்தரின் தலைமையிடமாக விளங்கிய பத்தேவியாவில் (இன்றைய ஜக்கார்த்தா) இருந்த கோட்டையை விடப் பெரியது என பல்டேயஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். எனினும், அக்காலத்தில், நவீனமாக இருந்த போர் உத்திகளுக்கும், ஆயுதங்களுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய வகையில் கோட்டையின் வடிவமைப்பும், அதன் சுற்றாடலும் இருக்கவில்லை. இந்த நிலைமை குறித்து ஒல்லாந்தர் ஆட்சியின் தொடக்க காலக் கட்டளைத் தளபதிகள் தமது அறிக்கைகளில் குறிப்பிட்டிருப்பதுடன், கோட்டையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளனர். குறிப்பாகக், கோட்டை மதில்களுக்கு மிக அண்மையில் இருந்த வீடுகளையும், பிற கட்டிடங்களையும் அகற்றியமை, அகழிக்குள் கடல் நீரை நிரப்புவதற்கு முயற்சி செய்தமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். உள்ளூர் எதிரிகளைப் பொறுத்தவரை இக்கோட்டை போதுமானதாக இருந்தபோதும், இந்து சமுத்திரப் பகுதியில் அதிகாரப் போட்டியில் இறங்கியிருந்த ஐரோப்பிய எதிரிகளின் தாக்குதல்களுக்குக் கோட்டை ஈடுகொடுக்காது என்பதை ஒல்லாந்தர் அறிந்தேயிருந்தனர். இதனால், யாழ்ப்பாணக் கோட்டையை அக்காலப் போர்த் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கத்தக்க ஒரு கோட்டையாக மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

கடல்நீரேரியிலிருந்து யாழ்ப்பாணக் கோட்டையின் தோற்றம்

பல்வேறு காரணங்களால் கோட்டையின் கட்டுமான வேலைகள் மிகவும் மெதுவாகவே இடம்பெற்றன. சில முக்கியமான கட்டிடங்களுடன், அகழிக்கு உட்புறமாக இருக்கும் பகுதி 1680 ஆம் ஆண்டில் நிறைவேறியது. கோட்டையின் உட்புற மதிலின் வாயிலுக்கு மேல் காணப்படும் பொறிப்பு இதற்குச் சான்றாக அமைகின்றது. எனினும், அகழியைப் போதிய அளவு ஆழத்துக்குத் தோண்டுதல், அதற்குள் நீர் நிறைந்திருக்கச் செய்தல் என்பன முற்றுப் பெற்றிருக்கவில்லை. அகழியின் அடியில் இருந்த பாறைகளை உடைத்து அதை ஆழமாக்குவதில் ஒல்லாந்தர் தொழில்நுட்பப் பிரச்சினைகளை எதிர்நோக்கினர்.

ஒல்லாந்தரின் யாழ்ப்பாணக் கோட்டையின் தளப்படம்

யாழ்ப்பாணக் கோட்டை அக்காலத்தில் அறியப்பட்டிருந்த பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கு அமைவாக வடிவமைக்கப்பட்டது. அக்காலத்தில் கனரகப் பீரங்கித் தொழில்நுட்பம் பெருமளவு வளர்ச்சி பெற்றிருந்தது. ஐரோப்பியப் போர்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் கனரகப் பீரங்கிகள் பெரும் பங்காற்றின. இந்தச் சூழலை எதிர்கொள்வதற்காக உருவானதே “கொத்தளக் கோட்டை” என அறியப்படும் வடிவமைப்பு. ஒல்லாந்தரின் யாழ்ப்பாணக் கோட்டையும் ஐங்கோண வடிவில் அமைந்த ஒரு கொத்தளக் கோட்டையே. இந்த ஐங்கோணத்தின் மூலைகளில் ஐந்து கொத்தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கொத்தளங்களுக்கு ஒல்லாந்தர் தமது நாட்டு இடப் பெயர்களைச் சூட்டியிருந்தனர். ஒல்லாந்து, கெல்டர்லாந்து, உத்ரெக்ட், விறீஸ்லாந்து, சீலாந்து என்பன இப்பெயர்கள். கோட்டைக்குள், கட்டளைத் தளபதியின் மாளிகை, பிற படை அதிகாரிகளின் வசிப்பிடங்கள், வைத்தியசாலை, சிறைச்சாலை, ஆயுத/ வெடிமருந்துக் களஞ்சியங்கள் என்பன இருந்தன.

1680 இல் உட்புறக் கோட்டை அரண்கள் கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், உள்ளே பல கட்டிடங்கள் கட்டப்படவில்லை. குறிப்பாக, முன்னிருந்த போர்த்துக்கேயத் தேவாலயம் இடிக்கப்பட்டிருந்தும், அதற்குப் பதிலாகப் புதிய தேவாலயத்தைக் கோட்டைக்குள் கட்டி முடிக்கவில்லை. 1690 களின் தொடக்கத்தில் கட்டாமல் விடப்பட்ட கட்டிடங்களைக் கட்டுவதற்குத் திட்டமிட்டதாகத் தெரிகின்றது. படை வீரர்களுக்கான இருப்பிடங்கள், கிறித்தவத் தேவாலயம் என்பன இவற்றுள் அடங்கும். 1680 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் கோட்டையின் வடக்கு, மேற்கு மதில்களை அண்டி அமைந்திருந்தன. புதிய கட்டிடங்களை வடகிழக்கு மதிலை அண்டி அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. நடுவில் அமைந்த பெரிய வெளியின் நடுவில் தேவாலயம் அமைக்கப்படவிருந்தது. எனினும், தேவாலயம் பின்னர் வடகிழக்கு மதிலோரமாகவே கட்டப்பட்டது. இதைக் கட்டுவதற்கும் நீண்ட காலம் எடுத்தது. படைவீரர்களுக்கான வசிப்பிடங்கள் கட்டப்படவேயில்லை.

யாழ்ப்பாணக் கோட்டையின் அகழிக்குப் புறத்தேயுள்ள பாதுகாப்பு அமைப்புக்கள் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவற்றின் கட்டுமான வேலைகளும் மிக மெதுவாக நீண்ட காலம் இடம்பெற்றன. 138 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தர் தமது கோட்டைக் கட்டுமான வேலைகளை, அதைப் பிரித்தானியர் கைப்பற்றுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவு செய்ததாகத் தெரிகின்றது. எனினும், ஒல்லாந்தர் ஆட்சியின் கடைசிப் பத்தாண்டிலும், கோட்டையின் பாதுகாப்புத் தொடர்பில் சில மேம்பாடுகளைச் செய்வதற்குத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. எனினும் இதை நடைமுறைப்படுத்த அவர்களால் முடியவில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்த ஒல்லாந்து தேவாலயத்தின் தோற்றம்

பல்வேறு காலகட்டங்களில் யாழ்ப்பாணக் கோட்டைக்கு வந்து அதுபற்றி எழுதியோர், ஒல்லாந்தர் கட்டிய தேவாலயத்தைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடத் தவறுவதில்லை. இத தள அமைப்பு சிலுவை வடிவில் அமைந்தது. இது பெருமளவில் அலங்காரங்களைக் கொண்டிராமல் எளிமையான கம்பீரமான தோற்றத்துடன் காணப்பட்டது. இன்று முற்றாகவே அழிந்துபோன இந்தத் தேவாலயத்தின் வாயிலில் காணப்பட்ட ஆண்டுப் பொறிப்பில் இருந்து இது 1706 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது என அறிய முடிகின்றது. இதன் அடிப்படையில், உள்நாட்டுப் போர்க் காலத்தில் அழிந்து போவதற்கு முன்னர் இதுவே இலங்கையில் இருந்த மிகப் பழைய ஒல்லாந்தர் தேவாலயமாகக் கருதப்பட்டது. இதன் தரையில், யாழ்ப்பாணத்திற் காலமான ஒல்லாந்தப் பிரமுகர்கள் பலரின் பெரிய நினைவுக் கற்பலகைகள் பதிக்கப்பட்டிருந்தன. இவற்றுட் சிலவற்றை யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் இன்றும் காணலாம்.

இது எவ்வளவுதான், நவீன வடிவமைப்புடன் கூடிய பலமான கோட்டை என்ற போதிலும், யாழ்ப்பானத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் ஒல்லாந்தருக்கு இக்கோட்டை உதவ முடியாமல் போய்விட்டது. எவ்வித எதிர்ப்பும் இன்றி, ஒல்லாந்தர் பிரித்தானியரிடம் சரணடைந்தனர். இது கோட்டையின் குறைபாடு அல்ல. கோட்டையைக் காப்பாற்றுவதற்குத் தேவையான ஆளணிகளோ, பிற வளங்களோ யாழ்ப்பாணக் கோட்டையில் இருக்கவில்லை. குடியேற்றவாத ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிப் பகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வது கடற்படைப் பலத்திலேயே தங்கியுள்ளது, கோட்டைகளில் அல்ல என ஒல்லாந்தரின் முன்னைய யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி ஒருவர் தனது அறிக்கையொன்றில் சுட்டிக் காட்டியிருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

16263 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்