பல்தேயஸ் பாதிரியாரும் யாழ்ப்பாணமும்
Arts
5 நிமிட வாசிப்பு

பல்தேயஸ் பாதிரியாரும் யாழ்ப்பாணமும்

February 11, 2021 | Ezhuna

யாழ் நகரம் அதன் வரலாற்றுக் காலத்தில், அதன் நிர்வாக எல்லைகளுக்கும் அப்பால் பரந்துள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் பல்வேறு பொருளாதார, அரசியல், நிர்வாக, பண்பாட்டு வகிபாகங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண நகர வரலாறு, அதன் மரபுரிமை சார் அம்சங்கள், ஐரோப்பியர் ஆட்சியில் யாழ். நகரின் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களின் திரட்டுகள் என்பனவற்றை உரிய ஆதாரங்களோடு ‘யாழ்ப்பாண நகரம் 400’ என்ற இத்தொடர் முன்வைக்கின்றது. 400 ஆண்டுகால யாழ்ப்பாணத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்த கட்டுரைகளை இத்தொடர் கொண்டமைந்துள்ளது.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் தொடக்க காலம் தொடர்பான யாழ்ப்பாணத்து வரலாறு பற்றியும், அக்காலத்துச் சமூக நிலை பற்றியும் பதிவு செய்த முக்கியமான ஒரு ஆளுமை ஒல்லாந்தப் பாதிரியார் பிலிப்பஸ் பல்தேயஸ் ஆவார். “கிழக்கிந்தியாவின் பெயர் பெற்ற மலபார், கோரமண்டல் கரையோரப் பகுதிகளினதும், இலங்கைத் தீவினதும் உண்மையானதும், துல்லியமானதுமான விபரங்கள்” என்பது ஒல்லாந்த மொழியில் அவர் எழுதிய நூலின் தலைப்பின் தமிழாக்கம். பல்தேயஸ் பாதிரியார் யாழ்ப்பாணத்திலேயே எட்டு ஆண்டு காலம் வாழ்ந்தவர்.

பல்தேயஸ் பாதிரியாரின் நூலின் தலைப்புப் பக்கம்

யாழ்ப்பாண பகுதி முழுவதற்கும் பொறுப்பான மதபோதகர் என்ற செல்வாக்குள்ள பதவி காரணமாக உயர் அதிகாரிகளோடு நேரடித் தொடர்புகளை வைத்துக்கொண்ட ஒருவராக இருந்தார். தமிழ் மொழியைக் கற்றுச் சரளமாக அம்மொழியைப் பேசக் கூடியவராகவும் இருந்ததால், அப்பகுதி மக்களோடும் நெருங்கிப் பழகியவர். அத்துடன், அக்கால வரலாற்று நிகழ்வுகள் பலவற்றோடு அவருக்கு நேரடித் தொடர்புகளும் இருந்தன. எடுத்துக்காட்டாக, பல்வேறு நகரங்கள் மீதான ஒல்லாந்தரின் படை நடவடிக்கைகளின்போது, பல்தேயசும் உடன் சென்றிருந்தார். இதனால், அவரது நூலில் காணப்படும் பல தகவல்கள் அவரது நேரடியான அனுபவங்களினூடாகக் கிடைத்தவை இது யாழ்ப்பாணம் தொடர்பாக அவர் தரும் தகவல்களுக்குக் கூடுதல் பெறுமதியைத் தருகின்றது. எனினும், அவர், குறித்த ஒரு சமயத்தின் மதபோதகர் என்ற வகையில் அவரது கருத்துக்களும், வேறு சில தகவல்களும் பக்கச் சார்பானவையாக இருக்கவும் வாய்ப்புக்கள் உண்டு.

பல்தேயசின் வரலாறு

பல்தேயஸ் 1632 ஆம் ஆண்டில் ஒல்லாந்து நாட்டில் உள்ள “டெல்வ்ட்” (Delft) என்னும் நகரத்தில் பிறந்தார். இவர் நான்கு வயதுக் குழந்தையாக இருக்கும்போதே தனது தாய் தந்தையர்களை இழந்து உறவினரின் பராமரிப்பில் வளர்ந்தார். தத்துவம், இறையியல் ஆகியவற்றைக் கற்றுப் பட்டம் பெற்ற பல்தேயஸ், 1654 ஆம் ஆண்டில் ஒல்லாந்தச் சீர்த்திருத்தத் திருச்சபையில் ஒரு மதகுருவாக நியமனம் பெற்றதுடன், அவ்வாண்டிலேயே திருமணமும் செய்துகொண்டார். அதே ஆண்டில் மதபோதனை செய்வதற்காக பல்தேயசை கிழக்கு நாடுகளுக்கு அனுப்பத் திருச்சபை முடிவு செய்தது. 1654 இல் தனது மனைவியுடன் ஒல்லாந்திலிருந்து புறப்பட்ட பல்தேயஸ் 1655 இல் பத்தேவியாவை அடந்தார். சில மாதங்களில் அவரது மனைவி இறந்துவிட்டார். 1656 இல் பல்தேயஸ் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். 1658 சனவரியில் மன்னார், தூத்துக்குடி, யாழ்ப்பாணம், நாகபட்டினம் ஆகிய நகரங்களைக் கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கைகளின்போது அப்படைகளின் மதகுருவாக பல்தேயஸ் கடமையாற்றினார். இப்படை நடவடிக்கைகள் குறித்து அவர் தனது நூலில் விபரமான தகவல்களைத் தந்துள்ளார். இவற்றின் முடிவில், யாழ்ப்பாணத்துக்கு வந்த பல்தேயஸ் யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான மதபோதகராகப் பணியேற்றார்.

பல்தேயஸ் பாதிரியார்

யாழ்ப்பாண மக்களுக்கு ஒல்லாந்த மொழியைக் கற்பித்து அதனூடாக அவர்களுக்கு மதபோதனை செய்வதிலும் பார்க்க, மத போதகர்கள் உள்ளூர் மொழியைக் கற்று அதனூடாகப் போதனை செய்வது நிச்சயமானதும், செயற்றிறன் மிக்கதுமான வழி என பல்தேயஸ் நம்பினார். இதனால் அவர் தமிழ் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டினார். யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, மாணவர்களின் தேவைக்காகப் பல சமய நூல்களை இவர் ஆக்கியுள்ளார். இந்நூல்கள், போர்த்துக்கேய மொழியிலும், தமிழிலும் பதிப்பிக்கப்பட்டதாகத் தெரிகின்றது.

காலப்போக்கில், அரசாங்க அதிகாரிகளுக்கும், பல்தேயசுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பல்தேயஸ் நாடு திரும்பினார். இதன் பின்னர் ஆறு ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்தார். ஒல்லாந்தில் வாழ்ந்த காலத்திலேயே முன்னர் குறிப்பிட்ட நூலை அவர் எழுதினார். 1672 ஆம் ஆண்டில் இது வெளியானது.

பல்தேயசின் நூல்

பல்தேயஸ் பாதிரியாரின் நூலிலுள்ள யாழ்ப்பாணத்து விவசாயிகளை விபரிக்கும் படம்

இவரது நூல் ஏறத்தாழ 900 பக்கங்களைக் கொண்டது. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்நூலின் 248 பக்கங்களைக் கொண்ட இரண்டாம் பகுதியே இலங்கையைப் பற்றியது. இதில் யாழ்ப்பாணம் தொடர்பான விபரங்கள் ஏறத்தாழ 40 பக்கங்களில் தரப்பட்டுள்ளன. பல நிலப்படங்களும், விளக்கப் படங்களும் இப்பகுதியில் அடங்குகின்றன.

யாழ்ப்பாணக் கோட்டை மீதான முற்றுகை, ஊர்காவற்றுறைக் கடற்கோட்டை கைப்பற்றப்பட்டமை, யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த போர்த்துக்கேயப் படைகள் சரணடைந்தமை, ஒல்லாந்தருக்கு எதிரான சதி, சதியில் ஈடுபட்டோருக்கான தண்டனைகள் போன்றவை நூலில் விபரமாகத் தரப்பட்டுள்ளன. மேற்படி விடயங்கள் பற்றி இத்தொடரின் முந்திய கட்டுரைகளில் கூடுதலான தகவல்களைப் பார்த்தோம். இவை தவிர, ஒல்லாந்தர் காலத்தின் முதற் பத்தாண்டில் மதம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள், ஒல்லாந்தரின் மதத்தைப் பரப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், அதற்கான கட்டமைப்பு, யாழ்ப்பாணப் பகுதியில் இருந்த பல்வேறு தேவாலயங்கள் போன்றவை தொடர்பான விபரங்களும் நூலில் காணப்படுகின்றன. தமது மதம் தவிர்ந்த ஏனைய மதங்களுக்கு எதிராகக் கடும்போக்கை ஒல்லாந்தர் கடைப்பிடித்தபோதும், ஒல்லாந்தரால் இந்தியாவில் இருந்து கொண்டு வந்து குடியேற்றப்பட்ட நெசவாளர்கள் இந்து சமயம் தொடர்பான செயற்பாடுகளில் வெளிப்படையாக ஈடுபடுவதை அரசாங்கம் கண்டும் காணாமல் விட்டது குறித்து பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.

பல்தேயஸ் பாதிரியாரின் நூலிலுள்ள யாழ்ப்பாணத்து ஆண்கள் இருவர் உரையாடுவதை விபரிக்கும் படம்

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட எல்லாத் தேவாலயங்களினதும் விபரங்களும்,  படங்களும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. தேவாலயங்களின் அமைப்பு அங்கிருந்த வசதிகள், தேவாலயத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை, அவற்றோடிணைந்த பாடசாலைகளில் படிக்கும் மாணவர் தொகை போன்ற விபரங்கள் நூலில் உள்ளன. படங்கள் அக்காலத் தேவாலயங்களை நேரடியாகப் பார்த்து வரையப்பட்டவையா அல்லது பல்தேயசின் விபரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு கற்பனையில் வரையப்பட்டனவா என்பது தெரியவில்லை.

இவற்றுடன் யாழ்ப்பாண மக்களின் சாதியமைப்பு, பல்வேறு சாதிகள், கைவினைஞர்கள் பற்றிய விபரங்கள், தொழில்கள், பழக்க வழக்கங்கள், உணவுப் பழக்கம், பிற இயல்புகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான தகவல்களையும் நூல் தருகின்றது. யாழ்ப்பாண மக்களின் சில அன்றாடச் செயற்பாடுகளைக் காட்டும் படங்களையும் நூலில் காண முடிகின்றது. எனினும் இவற்றின் நம்பகத் தன்மை குறித்துத் தெளிவில்லை. சில படங்களில் உள்ள முகங்களில் ஆபிரிக்கச் சாயல் தென்படுகின்றது. பெண்கள் தயிர் கடைவதைக் காட்டும் படத்தில் அவர்கள் உடம்பின் மேற்பகுதியை மூடாமல் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்துவதற்கான வேறு தகவல்கள் இல்லை.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7137 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்