வன்செயல் மரபுரிமையும் ஈழத்தமிழர்களும்
Arts
7 நிமிட வாசிப்பு

வன்செயல் மரபுரிமையும் ஈழத்தமிழர்களும்

October 20, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

கடந்த சில பத்தாண்டுகள், மரபுரிமைகளை இனங்காணல், அது தொடர்பான கருத்தாடல்கள், செயற்பாடுகளில் பல முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளன. குறிப்பாக அனைத்து வகைப்பட்ட போர்கள், இனவழிப்புக்கள், சர்வாதிகாரம், காலனியங்கள் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் வெளிப்பாடுகளை மரபுரிமையின் பகுதியாகக் கொள்ளும் போக்கு முக்கியமானதாகும். இவற்றை இன்று ‘வன்செயல் மரபுரிமை’ (violence heritage) என்ற பெயரால் இப்புதிய பார்வைகள் சுட்டுகின்றன. இவை இருண்ட, எதிர்மறையான, வலிமிகுந்த, அதிருப்தி நிறைந்த, கடினமான நிலைமைகளது வாழும் சாட்சியங்களாகப் பொதுவாக வரையறைக்கப்படுகின்றன.

Toppled water tower in downtown Kilinochchi, Jaffna, Sri Lanka.

இதேசமயம் விமர்சன ரீதியான அகழ்வாய்வுச் செயற்பாட்டாளர்கள் (critical archeologist), பண்பாட்டு மற்றும் மரபுரிமை பயிலுனர்கள் எவ்வாறு அமைதியான மரபுரிமைக்களங்கள், மரபுரிமைச்சின்னங்கள், தொட்டுணரமுடியா பண்பாட்டுச் (intangible cultural heritage) செயற்பாடுகள் முதலியன அரசியல் ரீதியான இடையீடுகளால் இறுதியில் வன்செயல் மரபுரிமைக்களமாகின்றன என்பது பற்றியும் கவனஞ் செலுத்துகிறார்கள். இத்தகைய போக்கிற்கு பாபர் மசுதி அழிப்பு தேர்ந்தவொரு உதாரணம் ஆகும். இதன் தொடர்ச்சியாக சமகால இந்தியாவில் இந்து அடிப்படைவாதம், இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் என்பன இத்தகைய நிலவரங்களைத் தோற்றுவித்துக் கொண்டிருப்பதை  எமது பண்பாட்டு வட்டகையில் அவதானிக்கக் கூடியதாயுள்ளது.

வன்செயல்கள் பொருள் (material) ஊடாக அல்லது பொருளாக நடைமுறையில் மாற்றீடு செய்யப்படுகின்றன. பொதுவாக சண்டைக்களங்கள், சித்திரவதைக் கூடங்கள், நினைவுச்சின்னங்கள், சிறைகள், மனிதப்புதைகுழிகள், அழிப்பிடங்கள், சுற்றாடல் – நிலவுரு மற்றும் கட்டடச் சிதைப்புக்கள், அகதிமுகாம்கள்,  இணைச்சேதப் (Collateral damage) பரப்புக்கள் முதலிய  பலவற்றை உள்ளடக்கியதாக வன்செயல் மரபுரிமை காணப்படும். அது வன்செயலின் – அதன் பின்னணியாக இருந்த சித்தாந்த அடித்தளம் முதலியவற்றின் வாழும் தடயமும், சாட்சியமுமாகும். ஹிட்லர் கால ஜேர்மனி, ஈராக், பலஸ்தீனம், பொஸ்னியா, இலங்கை வரை உலகம் பூராவிலும் வன்முறையின் சாட்சியங்கள் பரந்து காணப்படுகின்றன.

A Monument Statute of Fr. Long Founder Jaffna Public Library

2014 இல் ஐரோப்பிய ஒன்றியம் 2020இன் பேசுபொருளாக யுத்தத்தின் பண்பாட்டு மரபுரிமை (cultural heritage of war) எனும் விடயத்தை தொனிப் பொருளாக்கும் ஓரழைப்பை உலகளவில் விடுத்திருந்தது. இதுவே வன்செயல் மரபுரிமை பற்றிய கருத்தாக்கம், செயற்பாடுகளுக்கான கிரியா ஊக்கியாக அமைந்தது. இந்த அழைப்பு பொருள்சார், பொருள்சாரா வன்செயலின் மரபுரிமைகளை (material and immaterial legacies of violence) பற்றிய பரந்த விடயங்களை ஓரிடப்படுத்தியது.

பொதுப்படையாக மரபுரிமை என்ற கருத்தாக்கமானது நவீனத்துவத்தினாலும், முதலாளித்துவத்தாலும் கட்டமைக்கப்பட்ட ஒன்றென மரபுரிமைக் கோட்பாட்டு ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுவார்கள். அவ்வகையில் தேசியவாதத்தின் அடையாளக் கட்டுமானத்தின் பகுதியாக அமைதல், நவீனத்துவத்தின் பகுத்தறிவுச் சட்டகத்தின் அடிப்படையை வழங்குதல் மற்றும் முதலாளித்துவத்தின் சந்தைப்படுத்தல் – நுகர்வுப்  பண்பாட்டை விருத்தியாக்கல் முதலான களங்களை மையமாகக் கொண்டு மரபுரிமைகள் கட்டப்பட்டிருந்தன .

இந்த அடிப்படைப் பகைப் புலத்திலிருந்து பார்க்கும்போது வன்செயல் மரபுரிமையானது, பாரம்பரிய மரபுரிமைக் களங்கள் மற்றும் சிந்தனைக் களங்கள் மீதான விமர்சன ரீதியான இடையீடாகக் காணப்படுகிறது. அதேசமயம் எதையும் சந்தைப் பொருளாக்கி விடுதல் என்ற பல்தேசிய நிறுவனப் பண்பாட்டை எதிர்கொள்வதில் வன்செயல் மரபுரிமையின் இருப்பும் சவால் மிகுந்த ஒன்றாகவேயுள்ளது. அதனால் வன்செயல் மரபுரிமையானது பிந்திய முதலாளித்துவத்தின் தந்திரோபாயங்களோடு தொடர்புபட்ட ஒன்றாகக் காணுவோரும் உண்டு. குறிப்பாக Alfredo González-Ruibal மற்றும் Martín Hall முதலியோர் இவ்விதமான கணிப்பை உடையவர்களாக உள்ளார்கள். இந்தவகையில் வன்செயல் மரபுரிமையின் உடன் நிகழ்வான ‘இருள் சுற்றுலா’ (dark tourism) ஒரேசமயத்தில் வர்த்தக மையத்தையும், கருத்துநிலைப் பரப்புகை என்கிற அரசியல் நடவடிக்கையையும் கொண்டதாகவே அமைகிறது எனப் பொதுவாகப் பார்க்கப்பட்டாலும், நடைமுறையில் அது வழமைப் பிரகாரமான சந்தை வியூகங்களை பயன்படுத்த முடியாது. ஏனெனில், இருள் சுற்றுலாவானது வலி, காயம், துக்கம், கழிவிரக்கம், குற்ற உணர்வு எனும் நிலவரங்களின் உணர்வுகளங்களாக இருத்தல் காரணமாக வன்செயல் மரபுரிமை இடங்கள் உண்டாக்கும் மனநிலை ஏனைய பொதுவான மரபுரிமைக் களங்களில் இருந்து மாறுபட்ட ஒன்றாகவே அமையும் என்பதிற் சந்தேகமில்லை.

அடிப்படையில் வன்செயல் மரபுரிமையின் எதிர்பார்கையானது  ஆழமானது. அது வெறுமனே சாட்சியம் அல்லது வரலாற்றுத் தடயம் அல்லது அடையாள நிர்மாணத்தின் ஊக்கியாக இருத்தல் என்பதற்கும் அப்பாலானது. அது அறம், மனிதாபிமானம், நீதி அல்லது மறுக்கப்பட்ட நீதி முதலான கோரிக்கைகளுக்கான மையமுமாகும். பெருங்கதையாடல்களால் மறுக்கப்பட்ட அல்லது திரிக்கப்பட்டு விளிம்புநிலைப்படுத்தப்பட்ட கதைகளுக்கு பதிலீடான வாழும் எடுத்துரைப்புக்களாக அவை அமைகின்றன. அவை குற்ற உணர்வைத் தூண்டுகின்றன; அநீதிகளுக்கு நீதி கோருகின்றன. இனிமேலும் இவை நடைபெறமாட்டாது என்பதற்கான உறுதியை எதிர்பார்க்கின்றன. அவை யுத்தத்திற்கு –  படுகொலைகளுக்கு எதிரான மனப்பாங்கை உலகில் உருவாக்க முயலுகின்றன.

mprovised armored bulldozer of Liberation Tigers of Tamil Eelam used in the battle. Today, it is one of the Sri Lankan Civil War memorials.

ஈழத்தமிழர்களது அரசியல் வரலாற்று நிலவரப்புலத்தில் வன்செயல் மரபுரிமைகளைக் கோருதல் – நிலைநிறுத்தல் மற்றும் இருள் சுற்றுலாக்களை கட்டமைத்தல் என்பன முக்கியமான ஒன்றாக அமையும். இது மூடி மறைக்கப்படுகின்ற, சாயம் பூசி திரிக்கப்படுகின்ற, அபிவிருத்தி உட்பட்ட உயரிய நோக்கங்களின் கீழ் தந்திரமாக அழிக்கப்படுகின்ற தமிழர்கள் மீதான வன்செயல்களை வரலாற்று நிலைப்படுத்தும் செயற்பாடாகும். இன்றுவரை நீதி மறுக்கப்படுகின்ற அவர்களது பல தசாப்தகால இன்னல்களுக்கான நீதி கோரும் வாழும் தடயங்களைக் காக்கின்ற செயற்பாட்டின் அர்த்தம் மிகுந்த பங்காளராக அமையத்தக்கன. இது வருங்காலச் சந்ததிக்கும், உலகிற்கும் சிறிய அழகிய இலங்கைத் தீவில் ஒரு சிறுபான்மை இனக்குழு இரத்தம் சிந்திய – சிந்திக் கொண்டிருக்கின்ற கதையை எடுத்துச் சொல்லும். அதேவேளை இன்றுவரை அது எவ்விதம் கட்டமைக்கப்பட்ட முறையில் அவர்கள் மீது தொடரப்படுகிறது என்ற வரலாற்றையும் கூறும். அதே சமயம் நீதி என்பதும் ஒரு அரசியற் பண்டம்தான் என்பதையும், உலகம் எவ்விதம் நீதியை ஒரு அரசியல்  உத்தியாக – தந்திரோபாயமாக வைத்து விளையாடுகிறது என்ற குரூர உண்மையையும் அது பிரதிபலிக்கும். 

அதேசமயம் ஒரு சிறுபான்மைச் சமூகம், அதுவும் அரசியல் ரீதியாக வறுமைப்பட்ட, பேரினவாத ஒடுக்குமுறைக்குள் இருக்கும் சமூகத்தில் வன்செயல் மரபுரிமைகளை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா? அல்லது முடியுமா என்ற கேள்விகள் எம் முன்னேயுள்ளன. அதாவது தேச வன்செயல்களை மரபுரிமையாக நடைமுறைப்படுத்து முடியுமா? தேசத்தின் சட்டங்கள் அவற்றை எங்கனம் எதிர்கொள்ளும் என்கிற கேள்விகள் சிறுபான்மைச் சமூகங்கள் முன்னேயுள்ளன. அதேபோலவே இந்த வன்செயல் மரபுரிமையின் தேசங் கடந்த வரலாற்றை உரைக்க எவ்வளவு தூரம் ஏனைய தேசங்கள் அனுமதிக்கும் என்பது அடுத்த கேள்வியாகும். குறிப்பாக அகதிமுகாம் வாழ்க்கை, தடுப்பு முகாம் முதலான விடயங்கள் சார்ந்து பெறப்பட்ட வன்முறை அனுபவங்களை ஒரு சமூகம் நிலைநிறுத்தும் வழிமுறைகள் என்ன என்ற கேள்விகளும் எழுகின்றன.

Palestinians survey the aftermath destruction after a bomb hit Gaza over the weekend.

இவ்வாறு நோக்கும்போது வன்செயல் மரபுரிமையை முடிந்தவரை பெளதீக ரீதியாக பாதுகாக்க முற்படும் அதேவேளை எண்ணிம தொழில்நுட்பத்தை (digital technology) உபயோகித்தல் என்பது இவ்வகைப்பட்ட சிக்கல்வாய்ந்த நிலவரங்களுள் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

ஆனால், இதற்கு மேற்படி வன்முறைக்களங்கள் – சம்பவங்கள் பற்றிய மிகப் பரந்த கள ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அல்லது ஏற்கனவே தனிநபர்கள், நிறுவனங்களிடம் இது தொடர்பான தரவுகள் முழுமையாக்கப்பட்டு ஒரு பெருங்கோப்பு உருவாக்கப்பட வேண்டும். அதனையொட்டி வன்செயல் மரபுரிமை தொடர்பிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இது கிராமங்கள், பிராந்தியங்கள், மாவட்டங்கள், மாகாணங்கள், நாடுகள் என்ற பிரிவினடிப்படையில் எதிர்கொள்ளப்பட வேண்டும். பல தசாப்பதகாலங்களின் ஊடாக பயணஞ் செய்ய வேண்டும்.

The  Vijećnica in Sarajevo    library was destroyed by incendiary shells during the Bosnian War. (Photo Dženat Derković)

அதேவேளை இந்தப் பொருள்சார் தடயங்களுக்குப்பால், பொருள்சாரா – வாய்மொழியாகவுள்ள வன்முறையின் (Orality of violence heritage) பல கதைகள் மக்களிடம் உள்ளன. இவற்றை வாய்மொழி வன்செயல் மரபுரிமை எனப் பெயரிடலாம். இந்த தொட்டுணர முடியாக் கதைகளும் சேர்ந்தே ஒரு சமூகத்தின் வன்செயல் மரபுரிமை கட்டமைக்கப்படவேண்டும். அப்படிப் பார்க்கும்போது வன்செயல் மரபுரிமையின் சார்பான ஆவணக்காப்பகம், ஒலி – ஒளிக் கூடம், அரும்பொருளகம் என இவை விரிதலுற வேண்டும். இது தொடர்பில் ஈழத்தமிழர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

ஒரு வளரிளம் துறையாக ‘வன்செயல் மரபுரிமை’ இவற்றையெல்லாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அதேநேரம் இதன் இன்றைய உள்ளடக்கத்தைவிடவும் பரந்தவொரு உள்ளடக்கத்தை நோக்கி வருங்காலத்தில் வன்செயல் மரபுரிமை’  வளர்ச்சி அடைய வேண்டும் என்பதிற் சந்தேகமில்லை. குறிப்பாக சமூக வன்முறைகளது பல்பரிமாணங்களை அவை உள்ளடக்கும் ஒன்றாக மேலும் வளரவேண்டும் – அதாவது, தான் சார்ந்த சமூகத்திற் காணப்படுகின்ற வன்முறைகள், தான்சார்ந்த சமூகத்தினால் இழைக்கப்பட்ட வன்முறைகள் பற்றிய சுயவிசாரணைகள், மறுமதிப்பீடகளுடன் கூடிய ஒப்புக்கொள்ளல்கள் முதலியனவற்றையும் அவை உள்ளெடுக்க வேண்டும். அதுவே அதன் ஜனநாயகத் தளத்தைச் செழுமைப்படுத்தவும், காத்திடவும் முடியும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10959 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)