ஈழத் தமிழரும் கறுப்புச் சுற்றுலாவும்
Arts
6 நிமிட வாசிப்பு

ஈழத் தமிழரும் கறுப்புச் சுற்றுலாவும்

September 16, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.


அண்மைக் காலத்தில் அதிகம் கவனிப்புப் பெற்ற ஒரு சுற்றுலா முறையாகச் கறுப்புச் சுற்றுலா (Black tourism) காணப்படுகிறது. குறிப்பாக 1990களில் இது முக்கியமான புலமை உரையாடலாக உருவாகியது. சிலவேளைகளில் இருள் சுற்றுலா (Dark tourism) அல்லது துயரச் சுற்றுலா (Grief tourism) எனும் பெயர்களாலும் அழைக்கப்படும். இது ஒரு மக்கள் குழுமத்தின் அல்லது தேசத்தின் துயரடர்ந்த நிகழ்ச்சிகளான இறப்பு, கொலை, அழிவு முதலியன நடைபெற்ற இடங்களை அவற்றின் சான்றாதாரங்களை உள்ளடக்கிய சுற்றுலா முறையாகும். கறுப்புச் சுற்றுலா பற்றிய புலமையாளர்களான ஜோன் லினொன் மற்றும் மக்லம் பொலி ஆகியோர் கறுப்புச் சுற்றுலாவை “மனிதப்பண்பற்ற செயல்களின்  பிரதிநிதித்துவமாயும், காண்போருக்கு அவை எவ்விதம் வியாக்கியானமாகின்றன என்பது பற்றியதுமான” பயணமாக வரையறை செய்கிறார்கள். கெவின் பொக்ஸ் கோத்தம் “துயரம், கொடுமை, வலியினாலான இடங்களை நோக்கி மக்களை எடுத்துச்செல்லும்” பயணமாகக் கறுப்புச் சுற்றுலாவைக் காண்கிறார். அது அடிப்படையில் பொழுதுபோக்கு, மகிழ்வளிப்புச் சார்ந்த ஒன்றாக அல்லாமல் ஒருவகையான  கல்வியூட்டற் சுற்றுலாவாக அமைய வேண்டும் என கறுப்புச் சுற்றுலாப் புலமையாளர்கள் வாதிக்கின்றனர்.

The War Children’s Victim Monument in the Lidice Memorial Park

றாமி கலால் றசீக் இவ்வகை இடங்களைக் காணச்செல்லும் சுற்றுலாப் பயணிகளை “இருள் சுற்றுலாவினர்” என அழைக்கிறார். இவ்வகைப் பயணிகள் கறுப்பிடங்களின்  வரலாற்று முதன்மை, அதன் சான்றாதாரத் தன்மை, நிகழ்ந்து முடிந்த மானிடத் துயரத்திற்கு மதிப்பளித்தல் அதனைக் கூட்டாகப் பகிர்தல் என்பனவற்றை அடிப்படை நோக்கமாகக்  கொண்டு இவ்விடங்களுக்குப் பயணம் செய்கிறார்கள் எனப் பொதுவாகக் கூறப்படும். கறுப்புச் சுற்றுலாவானது, அதன்  பார்வையாளர்களிடம் சமூக நீதிக்கான நாட்டத்தையும், பொறுப்புக் கூறல்  உணர்வுத்தோழமையும் எதிர்பார்ப்பதுடன் எதிர்காலத்தில் இவை மீளவும் நடைபெறக் கூடாது என்ற மனநிலையை வருங்கால சந்ததியிடம் ஏற்படுத்தலையும் நோக்கமாகக் கொண்டது. ஒருவகையில் ஒரு கூட்டுத் துக்கம், கூட்டு மனக்காயத்தை ஆற்றுதல் முதலான விடயங்களுக்கான களங்களாகவும் இவை காணப்படுகின்றன. கல்லறைகள், வரலாற்று அரும்பொருளகங்கள், படுகொலைக் களங்கள், அழிவிடங்கள் முதலியவற்றை உள்ளடக்கிய ஒன்றாக இச்சுற்றுலா அமையும்.

Holocaust museum


ஸ்ரோண் கறுப்புச் சுற்றுலாவின் பிரதானமான அங்கங்களாக ஏழு விடயங்களைக் குறிக்கிறார். இவற்றில் ‘கறுப்பு விளையாட்டுத் தொழிற்சாலை’ என்பது கரிய விடயங்களை நாடகப் பாங்கில் நிகழ்த்திக்காட்டல் முதலியவற்றை உள்ளடக்கிய செயற்பாட்டிடம், ‘கறுப்புக் கண்காட்சிகள்’ – ஹொலகோஸட் சார்ந்த பல காட்சிகள் இதற்கான சிறந்த சான்றுகள் ஆகும். இவற்றைவிடக் கறுப்பு நிலவறைகள், கறுப்பு ஓய்விடங்கள் (பெரும்பாலும் கல்லறைகள்) கறுப்பு ஆலயங்கள், கரிய முரண்பாட்டு இடங்கள், கரிய படுகொலை முகாம்கள், கறுப்பு அழிவிடங்கள் என அவற்றை வகை பிரித்துள்ளார். இந்தப் பிரிவு அதிகபட்சம் மேற்கத்தையவயமானது என்பதுடன் இவை தமது பிராந்தியங்கள், இடங்கள், சந்தர்ப்பங்களைப் பொறுத்து வேறுபடக் கூடியவை என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.


பொதுவாக இச் சுற்றுலாவில் பங்கேற்பவர்களிடமிருந்து குறிப்பிட்டவகையான ஒழுக்கப் பெறுமானங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அவை  மரணத்தையும் – இழப்பையும் கனம் பண்ணல் என்ற அடிப்படையில் இருந்து உருவாகியவை.  ஒளிப்படக் கட்டுப்பாடுகள், மரியாதைக்குரிய உடல்மொழி மற்றும் ஆடைமுறை, சிரித்தல் – சத்தமிடல் முதலியவற்றைக் கட்டுப்படுத்தல்,  மரியாதையற்ற மற்றும் பொருத்தமற்ற வகையான குறிப்புக்கள் – பேச்சுக்களை அவ்விடங்களிற் தவிர்த்தல், அது சார்ந்த அரும்பொருளகப் பொருட்களை கையாளும் முறையில் அதற்கான மரியாதையைத் தருதல் முதலான விடயங்கள் வற்புறுத்தப்படுகின்றன.

Hỏa Lò Prison, Hanoi, Vietnam
Oradour-sur-Glane massacre,France


உலகளாவிய ரீதியில் பல கரிய மையங்கள் இனங் காணப்பட்டுள்ளன. அதில் முதன்மையானவையாக நாசிவதை முகாம்கள், செர்நோபில் அணுநிலையம், ஹீரோசிமா முதலியன உட்பட 9/11 நினைவுச்சின்னம், கம்போடிய கொலைக் களங்கள் காணப்பட்டாலும், எவற்றைத் தெரிவு செய்வது அல்லது மூடிமறைப்பது முதலானவற்றின் பின்னால் உலகளாவிய அரசியல் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையும் இவ்விடத்தில் நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே அவற்றை நிர்ணயித்தல், செயற்படுத்தல் என்பதுவும் ஒரு தொடர் போராட்டம்தான்.


ஈழத்தமிழர்கள் மத்தியில் கறுப்புச் சுற்றுலா பற்றிய சிந்தனைகளும் – அதனை நோக்கிய செயற்பாடுகளும் தேவைப்படுகின்றன. அவர்களது தேசப்படம் இவ்வகைப்பட்ட  பல படுகொலைகள், கல்லறைகள்,  நினைவுச் சின்னங்கள் அழிவுக் களங்கள், உடைப்புக்கள், வதைமுகாம்கள், பயணப் பாதைகள், கைப்பற்றப்பட்ட கிராமங்கள், இழக்கப்பட்ட கட்டுமானங்கள் முதலான பல்வேறு கரிய மையங்களால் ஆகியுள்ளன. அவற்றை அடையாளப்படுத்தி இணைத்தொரு அழிப்பு வரலாற்றைக் கூறும் வரைபடமும் எடுத்துரைப்பும் தொகுப்பட்ட நிலையில் ஈழத்தமிழர்களிடம் பொதுவெளியில் இவை இல்லை. அழிப்பு வரலாற்று அருங்காட்சியகம், ஒளிப்படக் காப்பகம், ஆவணக்காப்பகம், நிலத்துண்டங்கள் சிறைகள், முகாம்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள், கடற்பகுதிகள், கடற் தடுப்புக்கள், காவலரண்கள், முதலியவற்றை உள்ளடக்கி  ஒரு சுற்றுலா வலைப்பின்னல் அமைய வேண்டும்.

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுச் சின்னம்
செம்மணிப் படுகொலைக் களம்


அது வரலாற்று ஆவணமாகவும், எடுத்துரைப்பாகவும் அமையும் அதேவேளை, அது அழிவுகள், இழப்புக்கள் வழியால் உருவாகிய புதிய அடையாள உருவாக்கத்திற்கான அடித்தளமாயும், வேலைத் திட்டமாயும் அமையும். இன்னொரு புறம் தனிமனித மற்றும் கூட்டு மனக்காயங்களை ஆற்றுதற்கான தேற்றற் புலங்களாயும் தொழிற்பட முடியும். இவ்விடங்கள் சார்ந்து உள ஆற்றுப்படுத்தலை நிகழ்த்தத்தக்க ஆற்றுகை, சடங்கியல் அம்சங்களையும் இணைக்க முடியும். ஒப்பாரிப் பாடல்களும், அபரக் கிரியை சார்ந்த அம்சங்களும், இவற்றின்   பகுதியாக இணைக்கப்படலாம். அது அடிப்படையில் நினைவைப் பேணுதலுக்கான ஒரு திட்டமாகவும் மறத்தலை  மறுதலிக்கும் ஒரு அரசியற் செயற்பாடாகவும்  அமையும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

13416 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)