எழுநாவின் இயங்குவடிவம்

January 13, 2021 | Ezhuna

எழுநாவின் தற்போதைய இயங்கும் முறைமை முன்னைய வடிவத்தில் இருந்து வேறுபட்டது. எழுநா தற்போது நூலுருவாக்கத்தையும் அதன் பரவலாக்கத்தையும் முதன்மை நோக்கமாக கொண்டு இதர செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தியுள்ளது.

கருப்பொருளை தெரிவு செய்தல், கருப்பொருளை மையமாகக் கொண்டு நோக்கத்தை அடையும் வகையில் கட்டுரைகளை உருவாக்குதல், இணைய வெளியில் மாத்திரமல்லாது – அச்சு ஊடகங்களிலும் கட்டுரைகளை பிரசுரித்தல், எழுத்து செயற்பாட்டிற்கு சமாந்தரமாக இணைய வெளி உரையாடல்களை உருவாக்குதல், உரையாடல்களை மேலும் பரவலாக்கல், எழுத்து – உரையாடல் செயற்பாட்டின் முதிர்ச்சியில் நூலாக பதிவு செய்தல், நூல் விநியோகத்தை பரவலாக்கல், மேலும் உரையாடலை ஊக்குவித்தல் என்ற திசையில் எதிர்கால செயற்பாடுகள் நகருமாறு எழுநா திட்டமிட்டுள்ளது. மேலும், கருத்துருவாக்கத்திற்கு சமாந்திரமாக முன்வெளியீட்டு திட்டம், ஆர்வலர்களின் நல்கை போன்றவற்றின் ஊடாக நூலுருவாக்கத்திற்கான அடித்தளத்தை நிதி சார்ந்த அடித்தளத்தை பலப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்.

ஆய்வுகளை கருத்துருவாக்கமாக சமூக மட்டத்தில் பரவலாக்கல் எழுநாவின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும். எழுநாவின் இயங்கும் முறைமை ஊடாக வினைத்திறனான வகையில் நோக்கத்தை அடைய முடியும் என நம்புகின்றோம்.

தற்போதைய தொழில்நுட்பம் – இணைய வெளி, அறிவு மற்றும் கருத்து செயற்பாட்டிலும் பல புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளது. சமூக வரலாறு பதிவுசெய்யப்பட்டு வந்த மரபார்ந்த நடைமுறையாகிய அச்சு வடிவத்தை – நவீன தொழில்நுட்பம் சாத்தியமாக்கியுள்ள இணைய வெளியையும் இணைத்து செயற்படும் இவ்வடிவம் கருத்துருவாக்க செயற்பாட்டில் பல புதிய சாத்தியங்களையும் சாதனைகளையும் நிகழ்த்தும் என்று நம்புகின்றோம்.

«